Published:Updated:

``மும்தாஜூக்கு எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கணும்!” - சகோதரர் வாய்ஸ்

மு.பார்த்தசாரதி
``மும்தாஜூக்கு எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கணும்!” - சகோதரர் வாய்ஸ்
``மும்தாஜூக்கு எல்லாமே பர்ஃபெக்ட்டா இருக்கணும்!” - சகோதரர் வாய்ஸ்

``ன் தங்கச்சி சின்ன சின்ன விஷயங்களிலும் பர்ஃபெக்ட்டா இருக்கணும்னு நினைப்பாங்க. தமிழ் சினிமாவில் பெரிய புகழைச் சம்பாதிச்சபோதும் பாப்புலாரிட்டியைவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருக்க நினைச்சாங்க. ஒரு கிளாமர் நடிகையா இருந்தபோதும் 20 வருஷங்களில் எந்த ஒரு வதந்தியும் வந்ததில்லை. தமிழ் ரசிகர்களுக்கு என் தங்கச்சி பற்றி ஏதோ ஒரு வகையான கருத்து, எண்ணம் இதுவரை இருந்திருக்கும். `பிக் பாஸ்' மூலம் புதுசா தெரிஞ்சுப்பாங்க'' என்கிறார் அஹமத். நடிகை மும்தாஜின் சகோதரர்.

சகோதரருடன் மும்தாஜ்

``மும்தாஜ் கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர். அவங்க துணிகளை அவங்களே துவைச்சுப்பாங்க. வீட்டை க்ளீன் பண்றது, பொருள்களைப் பத்திரமா வெச்சுக்கிறது எனப் பார்த்து பார்த்து பண்ணுவாங்க. நாம உதவி பண்றோம்னு சொல்லிக்கிட்டு ஏதாவது செஞ்சா, கோபம் வந்துடும். `அவங்க வேலையை அவங்களே பார்க்கணும்'னு சொல்வாங்க. நாம அன்போடு ஏதாவது டிரெஸ் வாங்கிக் கொடுத்தாலும் அது பிடிக்கிறதுக்கான வாய்ப்பு குறைவுதான். ஏன்னா, டிரெஸ்ஸிலும் பர்ஃபெக்ட், கம்ஃபர்ட்டை எதிர்பார்ப்பாங்க. அதுக்காக, வாங்கிட்டு வந்தவங்க மனசைப் புண்படுத்துறது அவங்க நோக்கமா இருக்காது. வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு அது புரிய கொஞ்சம் லேட் ஆகும். ஸ்லீவ்லெஸ் போடுறது, கழுத்துக்கு இறுக்கமா குளோஸ்டு நெக் வெச்ச டிரெஸ் போடுறதை விரும்பமாட்டாங்க.

நேற்றைய எபிசோடுல மும்தாஜ் சமைக்கிறதுக்கு முன்னாடி அனந்த் சார்கிட்ட, `பாத்திரங்களை சுத்தம் பண்ணச் சொல்லுங்க. சரியா வாஷ் பண்ணலைன்னா பால் திரிஞ்சிடும்'னு சொன்னாங்க. சமைச்சுட்டிருக்கும்போதே, `எனக்கு க்ரீன் டீ வேணும், பிளாக் காபி வேணும்'னு ஆளாளுக்குக் கேட்கறாங்க. அது எப்படி ஒரு வீட்டுக்குள்ளே இருக்கும்போது சாத்தியமாகும். அதுவும் எப்பவும் க்ரீன் டீ குடிப்பேன்னு சொன்னாலும் பரவாயில்லை. காலையில் க்ரீன் டீ, சாயந்திரம் பிளாக் டீன்னா எப்படி ரெடி பண்ணிக் கொடுக்கமுடியும்?. அதை அவங்க ஓப்பனா பேசினதுக்கு, இவங்க காயத்ரி மாதிரி இருப்பாங்களோன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. என் தங்கச்சி மனசுல என்ன தோணுதோ அதை வெளிப்படையாச் சொல்லிடுவாங்க” என்கிறார் அஹமத்.

மும்தாஜூடன் சகோதரரின் பிள்ளைகள்

மும்தாஜின் திருமண வாழ்க்கை குறித்து கேட்டபோது, ``இதுவரை நிக்காஹ் பற்றி அவங்க இன்ட்ரஸ்ட் காட்டினதே இல்ல. அவங்களுக்குக் குழந்தைகள்னா ரொம்பப் புடிக்கும். ரோட்டுல ஒரு குழந்தையைப்  பார்த்தாலும் கொஞ்ச நேரம் வாங்கிக் கொஞ்சுவாங்க. என் பையனுடனும் பெண்ணுடனும் ரொம்ப குளோஸா இருக்காங்க. `பிக் பாஸ்' ஷோவுக்குள் மும்தாஜ் என்ட்ரி ஆகும்போது, நானும் அவங்களும்தாம் ரெட் கார்பெட்ல நடந்து வந்தோம். அதையே சிலர் தவறாப் புரிஞ்சுக்கிட்டாங்க. அது ஆங்கிலேயர்களோட மேனர்ஸ். ஒரு பெண் ரெட் கார்பெட்ல நடந்து வரும்போது, பிரதரோ, அப்பாவோ, ஃப்ரெண்டோ சேர்ந்து வருவாங்க. அப்படித்தான் என் தங்கையோடு நடந்துபோனேன். ஹாலிலும் என் பசங்களோடு உட்காந்திருந்தோம்.

`புப்பி டாட்டர் எஸ் எஸ்... டாடி டாட்டர் நோ நோ'னு என் பொண்ணு ஹிந்தியில் சொன்னதும், தமிழ் ஆடியன்ஸுக்குப் புரியணும்னு, `புப்பின்னா அத்தை'னு மும்தாஜ் உடனே சொன்னாங்க. அதுதான் அவங்க ப்ரெசன்ஸ் ஆஃப் மைண்ட். ஒரு பெண் மிகப்பெரிய சக்சஸையும் பார்த்தாச்சு. தோல்வியையும் பாத்தாச்சு. இப்போ ஒரு சேஞ்ச்சுக்காக `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே போயிருக்காங்க. அதுக்குக் காரணம், தமிழ் மக்கள் மீதான அன்புதான். எப்போதும் தமிழ் ரசிகர்களை நினைச்சு மும்தாஜ் ரொம்பப் பெருமைப்படுவாங்க. `நான் செத்தாலும் தமிழ்நாட்டுலதான் சாகணும். மும்பையில் செத்தால் எனக்காக 50 சொந்தக்காரங்கதான் வருவாங்க. ஆனா, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவாங்க'னு ஒரு இன்டர்வியூல சொல்லியிருக்காங்க. தனக்குப் பெயரையும் புகழையும் கொடுத்த ரசிகர்களை அவங்க மறக்க மாட்டாங்க. அந்தக் குணமே, `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே அவங்களை 100 நாள்கள் இருக்கவைக்கும்னு நம்புறேன்” என்கிறார் அஹமத்.

அண்ணன் சொல்வது போல மும்தாஜ் 100 நாள்கள் `பிக் பாஸ்' வீட்டில் வெற்றியாளராக வலம்வர வாழ்த்துகள்!