Published:Updated:

பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்! #BiggBossTamil2

பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்! #BiggBossTamil2
பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்! #BiggBossTamil2

புதிய ‘குலேபகாவலி’ திரைப்படத்திலிருந்து ‘சோகாமா’ என்கிற எனர்ஜியான பாடலுடன் பிக் பாஸ் வீடு விடிந்தது. இதற்கு உற்சாகமாக அல்லாமல் மக்கள் ‘சோகமாக’வே எழுந்தனர். இந்நேரம் ஓவியா இருந்திருந்தால் எத்தனை ரகளையாக நடனமாடியிருப்பார் என்று தோன்றாமல் இல்லை. யாஷிகாவும், வைஷ்ணவியும் சற்று ஆறுதல் அளித்தார். தலைவர் ஆக முடியாததாலோ என்னமோ, மும்தாஜ் காலையில் அப்செட் ஆக இருந்தார். 

நீச்சல் குளத்தில் மிதந்துகொண்டிருந்த பாலாஜி, ஷாரிக், டேனியல் கும்பலைப் பார்த்து, ரம்யாவும் குளிக்க ஆசைப்பட, 'டேய் காலைல ஒண்ணுக்குலாம் போயி முடிச்சிட்டீங்கலா இல்ல.. பாடகிக்கு த்ரோட் இன்பெக்ஷன் வர வெச்சிடாதீங்க’ என்று வில்லங்கமாக கலாய்த்துக் கொண்டிருந்தார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.

காலையில், ஒப்பனையில்லாத முகங்கள் சிலவற்றைப் பார்க்க நமக்கு சற்று கலவரமாகத்தான் இருக்கிறது. இவர்களே இப்படி என்றால் நாமெல்லாம் எத்தனை கேவலமாக இருப்போம் என்றும் தோன்றாமல் இல்லை. விடியாமூஞ்சியுடன் இருந்த யாஷிகாவைப் பார்க்க பிளாஷ் இல்லாத ஃபிரன்ட் கேமரா படம் போல டொங்கலாக இருந்தார். கேமராவைப் பார்த்து கொஞ்சிப் பேசினால் மற்றொரு ஓவியாவாக மாறி விடலாம் என்று யாராவது தப்பான ஐடியா தந்து விட்டார்களோ என்னமோ, ‘என்னை சைட் அடிக்கிறியா?’ என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தவர் ‘சித்தப்ஸ்’ பொன்னம்பலம் வந்தவுடன் அமைதியாகிவிட்டார். இவர் கேமராவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்ததை, தனக்கானது என்று பொன்னம்பலம் நினைத்துவிட்டிருந்தால், ‘முத்து’ திரைப்படத்தின் ‘தோட்டத்துக்கு வரவும்’ காமெடியாகியிருக்கும். 

‘டைமே சரியாயில்லை மாமா’ என்று சென்றாயனிடம் அனத்திக்கொண்டிருந்தார், பாலாஜி. ‘பிக்பாஸ் வீட்டில் டைம் இருக்காதே’ என்று அவருடைய ஸ்டைலிலேயே மொக்கை போட்டால் மனிதர் தாங்குவாரா? தன்னுடைய குடும்பப் பிரச்னையைப் பற்றி மெல்லிய துயரத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார். ‘நீங்க ஒரு ‘செலிப்ரிட்டி’ங்கிறதால ‘சப்ப’ மேட்டர்லாம் பிரபலமாயிடுது’ என்று ஆறுதல் படுத்தினார், சென்றாயன். என்னது செலிபிரிட்டியா? என்னங்கடா.. குண்டூசி விக்கறவனையெல்லாம் தொழிலதிபர்ன்றீங்க?

நிப்பான் பெயின்ட்ஸ் விளம்பரத்தில் வரும் கார்ட்டூன் உருவங்கள் மாதிரி, ‘கீச் கீச்’ என விநோதமாக கத்திக்கொண்டு அந்த வீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும். யாஷிகாவின் கரகரப்பான குரல், நித்யானந்தா சிஷ்யையை வேறு நினைவுபடுத்துகிறது. டேனியல் திடீரென்று டான்ஸ் மாஸ்டராக மாறி இருவரையும் மொக்கையாக ஆட வைத்தார். இரண்டு நிப்பான்களும் மஹத்தின் தோள் மீது கை போட்டு தள்ளிச் சென்றன. மருத்துவ முத்தம் அடங்கிய குறும்பட வீடியோ விரைவிலேயே வந்து விடுமோ என்று பீதியாக இருக்கிறது. 

ஒரு பிரதேசத்தின் மொழி தெரியாமல் அவதிப்படுவர்களின் பிரச்னைகளை யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பிரதிபலித்தார்கள். ‘நாம் அந்நிய மொழியை கற்றுக்கொண்டு எப்படியோ பேசிக்கொண்டிருக்கிறோம். அதை ஊக்கப்படுத்தாமல் மற்றவர்கள் இப்படி கிண்டலடிக்கிறார்களே’ என்பது வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்த அவர்களின் உரையாடலின் சாரம் உண்மைதான். புலம் பெயர்ந்த வேற்று மாநிலத்தவர்கள் நம் மொழியைக் கற்று மழலை மொழியிலாவது பேசுகிறார்களே என்று மகிழாமல், ஏதோ தாய்மொழியில் ‘டாக்டரேட்’ வாங்கிவிட்ட மிதப்புடன் நாம் அவர்களைக் கிண்டலடித்து மகிழ்வது ஒரு மோசமான மனோபாவம்தான். 

அனந்த் வைத்தியநாதன் தந்த பாட்டுப் பயிற்சியை அவ்வப்போது பரிசோதனை செய்துகொண்டிருந்தார், பொன்னம்பலம். நாள்பூராவும் ஹம்மிங்தான். மும்தாஜ் சற்று உயர்வுமனப்பான்மையுடன் இருப்பதால், அவரைச் சார்ந்தால் பாதுகாப்பு என்கிற உணர்வுடன் அவரிடம் சிலர் சாய முயல்கிறார்கள். ‘கட்டிப்பிடிடா’ பாடலுக்கு டான்ஸ் கற்றுத்தரச் சொல்லி யாஷிகாவும் ஐஸ்வர்யாவும், மும்தாஜை வற்புறுத்த, முதலில் முயன்ற அவர் ‘இதெல்லாம் உங்களுக்கு வராது’ என்கிற மாதிரி நகர்ந்துவிட்டார். 

பிக்பாஸ் வீட்டில் இன்னமும் பெரிதாக எந்த ‘சம்பவமும்’ நடக்கவில்லை என்பதால் சலிப்பாகத்தான் இருக்கிறது... வரும்.. சண்டை வரும்.. என்று நம்மை நாமேதான் உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

உணவு, சமையல், ‘பாத்ரூமில் தண்ணி வரலை’ போன்றவற்றைப் பற்றிய உரையாடல்களே அங்கு பெரும்பாலும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. சமூகப் பிரச்னைகளைப் பற்றி, அதிலுள்ள அரசியல் பற்றி, இலக்கியம், இசை பற்றி யாராவது பேசுவார்கள் என்று பார்த்தால் 'ம்ஹூம்'. அவர்கள் பேசுவதில்லையா, அல்லது அவற்றையெல்லாம் பிக்பாஸ் டீம் எடிட் செய்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. ‘செலிபிரிட்டிகள்’ அரசியல் உணர்வு விஷயத்தில் சராசரிகளைவிட மோசமாக இருக்கிறார்கள். 

மும்தாஜூம் மமதியும் சீரியஸாக ‘கிச்சன் பாலிட்டிக்ஸ்’ பேசிக்கொண்டிருந்தார்கள். கடந்த சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் ‘முட்டை’ பிரச்னை பூதாகரமாக உருவெடுத்தது. ‘முட்டையிலிருந்து கோழி வந்ததா’ பிரச்னையைவிட இது தீவிரமாகிவிடும் போலிருக்கிறது. இது சார்ந்த கட்டுப்பாடுகளை வீட்டு உறுப்பினர்களிடம் விளக்கினார், ‘கிச்சன்’ தலைவர் மும்தாஜ். 

‘சாப்பிட்ட தட்டுகளை அப்படியே போட்டுவிடுவது, டீ டம்ளர்களை கழுவாமல் அப்படியே ஆங்காங்கே வைத்துவிடுவது’ போன்ற விஷயங்களை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார், ரித்விகா. இதெல்லாம் மிக மிக அடிப்படையான விஷயங்கள் ஆயிற்றே. இதைக் கூடவா சொல்ல வேண்டும்? அங்கிருப்பவர்களில் பலர் சொகுசாக வளர்ந்தவர்கள் போலிருக்கிறது. 

வீட்டு உறுப்பினர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதைச் சோதிக்க சில கேள்விகளைத் தயார் செய்து Luxury Task கொடுத்தது பிக் பாஸ். இதற்கு 800 மதிப்பெண்கள். ஆனால், இதன் நோக்கம் அவர்களின் அகங்காரத்தை சீண்டி மோதலை வரவழைப்பதுதான் என்பது தெளிவாகவே தெரிந்தது. 

“ஷாரிக்’ யாருடன் dating செல்ல விரும்புவார்” என்பது முதலாவது கேள்வி. ஷாரிக் ஆடு மாதிரி விழிக்க, ‘டக்’குன்னு சொல்லணும் என்று ஏறத்தாழ மிரட்டினார் மமதி. ‘என் பேரை சொல்லப் போறியா, இல்லையா’ என்பது மாதிரியே இருந்தது, அவரது மிரட்டல். ஒருவழியாக அசடு வழிந்து ‘ஐஸ்வர்யா’வை சுட்டிக் காட்டினார் ஷாரிக். இருவரையும் இணைத்து வைத்து பயங்கரமாக ஓட்டி மகிழ்ந்தது பிக்பாஸ் வீடு. இப்படித்தான் முதல் சீஸனில் ‘ஓவியாவையும் ஆரவ்வையும்’ இணைத்து வைத்துப் பேசி, பேசி பின்னர் அது சீரியஸாக ஆனது. பார்த்துக்கங்க மக்களே.. 

‘காதலிக்கிறேன்’ என்று எத்தனை பேரை சொல்ல வைக்க முடியும்? என்பது யாஷிக்காவுக்கான கேள்வி. ‘Nobody’ என்று கெத்தாகப் பதில் அளித்தது டெல்லி சிங்கம். யாஷிகா ஆர்மி, தங்களின் யூனிபார்ம்களை துறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ‘யார் எரிச்சல் படுத்துகிறார்கள்” என்கிற கேள்விக்கு ‘டேனி’ என்று நேரடியாகவே சொன்னார் மும்தாஜ். டேனியின் முகம் சற்று இருண்டாலும் சமாளித்துக்கொண்டார். 

‘இந்த வீட்டில் நீங்கள் விரும்பும் நபர் யார்?” என்ற கேள்வி பாலாஜிக்கு. ‘நித்யா’ என்று நாடகத்தனமாக அவர் பதில் சொல்வார் என்றே பலர் எதிர்பார்த்தார்கள். பிக்பாஸின் நோக்கமும் அதுதான் நோக்கம் போல. நித்யாவின் முகமும் கலவரமாகத்தான் இருந்தது. நீண்ட நேரம் விழித்த பாலாஜி, இறுதியில் ‘சென்றாயனை’ கை காட்டி பாதுகாப்பாக தப்பித்தார். 

‘நீங்கள் வெறுக்கும் நபர் யார்?’ என்கிற கேள்வி நித்யாவுக்கு. மறுபடியும் அதேதான். பாலாஜியைச் சொல்வார் என்று எதிர்பார்த்தார்கள் போல. ஆனால், அவர் கைகாட்டியதோ மஹத்தை. Team Coordination இல்லையாம். “யார் வாக்குவாதம் செய்கிறார்கள்?” என்கிற கேள்விக்கு ‘ஜனனி’யை சுட்டிக்காட்டினார் வைஷ்ணவி. 

`யார் அழகு’ என்கிற கேள்விக்கு தன்னையே சுட்டிக்காட்டிக்கொண்டார் ஜனனி. என்னவொரு தன்னடக்கம்? இதை மிகையான உற்சாகத்துடன் கைத்தட்டி வரவேற்றார் அனந்த் வைத்தியநாதன். என்னங்கடா கதை வேற மாதிரி போகுது!

“ஆண்களில் யார் அழகு’ என்கிற கேள்விக்கு தயக்கத்துடன் ‘ஷாரிக்கை’ சுட்டியது பெங்கால் கிளியான ஐஸ்வர்யா. மற்ற விஷயங்களுக்கு வேறு சில ஆண்களைச் சுட்டினார். 

இப்படியே ஒரு மாதிரி மொக்கையாகச் சென்று கொண்டிருந்தது இந்த session.  ‘உங்களுடைய தனித்துவமாக எதைக் கருதுவீர்கள்?’ என்கிற கேள்விக்கு ‘அமைதி’ என்று அழகாகப் பதிலளித்தார் அனந்த் வைத்தியநாதன். ஆனால், பிக்பாஸ் வீட்டில் இது வேலைக்கு ஆகாதே சார்! ‘அதிகமாக பேசி உயிரெடுப்பவர் யாஷிகாவாம். இது சித்தப்ஸின் வாக்குமூலம்.

தனக்கு வந்த கேள்விக்கு கமலை விடவும் குழப்பமாக பதில் சொன்னார் மமதி. 24 மணி நேரமும் தன்னை நிகழ்ச்சி தொகுப்பாளராக மமதி நினைத்துக்கொள்கிறாரோ என்னமோ தெரியவில்லை, எப்போதுமே மிகையான செயற்கைத்தன்மையுடன் பேசுகிறார். கேள்வியைப் புரிய வைக்க வந்த ஜனனியை மெலிதாக கோபித்துக்கொண்டார். பின்னர் இதுதொடர்பாக இருவரும் தனிமையில் பேசி, கட்டிப்பிடித்து, பாவனையாக சமாதானம் ஆனார்கள். 

``எந்த மூன்று பேரை எளிதாக ஏமாற்ற முடியும்?” என்கிற கேள்விக்கு ‘மும்தாஜை’யும் இணைத்து பதில் சொன்னார் ரித்விகா. ஆனால், மும்தாஜ் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய உடல்மொழியில் சற்று அகங்காரம் வழிந்தது. 

‘தன்னுடைய சிகையலங்காரம்தான் சிறந்தது’ என்று தனக்கே சான்றிதழ் தந்துகொண்டார் NSK ரம்யா. அவருடைய பழைய சுருள்முடிதான் பார்க்க அழகாக இருந்தது என்பதையும், இப்போதைய முடியுடன் பார்த்தால் ‘அயல்கிரகத்து ஆசாமி’ போலவே இருக்கிறது என்பதையும் அவருக்கு யாராவது சொன்னால் தேவலை. ‘Dressing sense’-ல் தான்தான் பெஸ்ட் என்று பெருமிதம் கொண்டார் ஜனனி. பிக்பாஸ் வீட்டில் நார்ஸிஸ்ட்டுகள் நிறைய இருப்பார்கள் போலிருக்கிறது. 

ஐஸ்வர்யா, ஷாரிக் ஆகிய இருவரையும் உட்கார வைத்து ஜனனி பேசிக்கொண்டிருக்க. ‘கியாரே, ‘செட்டிங்’கா’ என்று டைமிங்காக கிண்டலடித்தார் மஹத். 

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கிறுக்குத்தனமாக சிரித்தபடி அடிக்கடி கூடி கிசுகிசுப்பதைக் கவனித்தால் சமகால நவீன இளம்பெண்களின் உலகத்தைப் புரிந்துகொள்ள முடியும் போலிருக்கிறது. அந்த உலகத்தை இருவரும் கச்சிதமாக பிரதிபலிக்கிறார்கள்.

இந்த விளையாட்டில் தன்னுடைய strategy பற்றி ஐஸ்வர்யாவுடன் சீரியஸாக விவாதித்துக்கொண்டிருந்தார் யாஷிகா. ‘நம்மளை பைத்தியம்னு நெனக்கறாங்க.. நெனக்கட்டும். அவங்களை விடவும் நாமதான் இன்டெலிஜென்ட்-ன்னு நமக்குத்தான் தெரியும். இப்படியே நடிச்சு அப்புறம் நம்ம வேலையைக் காண்பிப்போம்’ என்றெல்லாம் ‘நம்பியார்’தனமாக யாஷிகா பேசிக்கொண்டிருந்தைப் பார்க்கும் போதுதான், நாட்டில் பாதி பையன்கள் ஏன் லூஸூகளாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது. தாம் லூஸூகள் போல் நடித்து எதிர் தரப்பை தலையைப் பிய்த்துக்கொள்ள வைப்பதில் திறமைசாலிகளாக இருக்கிறது இளம்பெண்களின் உலகம். 

இன்னொரு பக்கம், நடுத்தர வயது பெண்களின் உரையாடல். அதில் அத்தனை உற்சாகமான விஷயங்கள் ஏதுமில்லை. தொலைக்காட்சி சீரியல் பார்ப்பதுபோல பழிவாங்கல் படலக்காட்சிகள்தான் தெரிந்தன. 

Luxury Task-ல் சிலர் நேர்மையாகப் பதில் சொல்லவில்லையென்றாலும் அவர்களைச் சாமர்த்தியமாக கையாண்ட ஜனனியைப் பாராட்டி முழு மதிப்பெண்களையும் அளித்தார் பிக்பாஸ். மகிழ்ச்சியில் தலைவிக்கு ‘கண்ணெல்லாம்’ பல். 

‘Body Language’ ன்னா என்ன மொழியில இருக்கும், தமிழா, இங்லீஷா?’ என்றார் யாஷிகா. பழைய ஜோக் தங்கதுரையே பரவாயில்லை போலிருக்கிறது. சாப்பாட்டு மேஜையில், நித்யா ‘டேனி’க்கு ஃபேவரிஸம் காட்டினார் என்பது மும்தாஜின் புகார். பாத்ரூம் பக்கத்தில் நின்று, மமதியிடம் இதைச் சொல்லிக் கொண்டிருந்தார். இரண்டாவது நாளிலேயே பெண்கள் எப்படி பகைவர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பது ஒரு புதிர். 

Luxury Budget-ன் இரண்டாவது task. ‘Feel ஆ, பீலா?’ என்பது அதன் நாமகரணம். 

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிக்கப்படுவார்கள். ஒரு அணி மற்ற அணியினரிடம் நம்பும்படியாக கதை சொல்ல வேண்டும். ‘ஒரு கதை சொல்லட்டுமா, சார்?’ என்கிற விக்ரம் வேதா காட்சி நினைவுக்கு வந்தது. ‘ஒரு கூந்தலும் தேவையில்லை’ என்று இந்தக் காட்சியைக் கிண்டலடிக்கிற தமிழ்படம் 2.0 டீஸரும் கூடவே நினைவுக்கு வந்தது. 

இந்த ‘கதை சொல்லும் கதை’ சம்பவமானது நாளை நடைபெறுமாம். அதற்குள் கதைகளைப் பற்றி யோசித்து வைத்துக்கொள்ள வேண்டுமாம். தூங்குவதற்கு முன் நடுஇரவில் பிக்பாஸிடம் கொஞ்சிக் கொஞ்சி propose செய்துகொண்டிருந்தார் ஐஸ்வர்யா. So cute. அந்த இயந்திர மனிதன் சற்று மெல்ட் ஆகியிருக்கக்கூடும். 

விளக்குகள் அணைக்கப்பட்டும் வைஷ்ணவியும் மமதியும் ஷாரிக்கும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பாலாஜி –நித்யா விவகாரம். இருவருக்குள்ளும் நிறைய சர்ச்சைகள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்ட துணிச்சலை வியந்து கொண்டிருந்தார்கள். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் ‘நாளை’ என்று போட்டு சில முன்னோட்டக்காட்சிகளை முதல் சீஸனில் காட்டினார்கள். இந்த சீஸனில் அது இல்லை போல.

ஸோ.. நாளை ‘கதை நேரம்’. நிகழ்ச்சி சற்று சலிப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. பார்ப்போம். இதிலாவது சண்டை வராதா என்ன..? வரும்.. வரும்.. நம்பிக்கைதானே வாழ்க்கை?