Published:Updated:

கிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
கிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா! #BiggBossTamil2
கிச்சன் கேப்டன் மும்தாஜை வெங்காயத்தில் மிரட்டிய நித்யா! #BiggBossTamil2

யெஸ்…. யெஸ்…. இரண்டு நாள்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த சண்டை இன்று நிகழ்ந்தேவிட்டது. ‘வெங்காயம்’ சைஸூக்கு சின்னச் சண்டைதான் என்றாலும், ஒன்றுமே இல்லாமல் இருந்ததற்கு இது பரவாயில்லை. நன்றி மும்தாஜ் -  நித்யா.  ஆனால் இது எதற்காக நிகழ்ந்தது என்பதை முரட்டுத்தனமான குருட்டுத்தனத்துடன் யோசித்தால்கூட புரியாது. பிக் பாஸ் இப்போதான் ஒரு ஃபார்முக்கு வந்திருக்கிறது!

‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்று ஒலித்த பாடலைக் கேட்டு, பிக்பாஸ் வீட்டின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மெல்ல துயிலெழும்பத் தொடங்கியது. உசுப்பப்பட்டவர்கள் மாதிரி சிலர் அலறியடித்துக்கொண்டு எழுந்திருக்க, வேறு சிலர் எல்கேஜி பிள்ளைகள்போல அமர்ந்தபடி சாமியாடிக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலான உறுப்பினர்கள் இணைந்து முதன்முறையாக கார்டன் ஏரியாவுக்கு வந்து ஆடினார்கள். ஓவியாவின் எனர்ஜியை சற்றாவது நெருங்கியவர் ஐஸ்வர்யாதான். பொன்னம்பலம் தன் உடலை விநோதமாக அசைத்து, ஒரு சண்டைக்கலைஞனுக்குள் இருந்த நடனக்கலைஞனை ஆவேசமாக வெளியே அனுப்பிக்கொண்டிருந்தார். 

ஐஸ்வர்யா தன் கோணங்கித்தனமான மற்றும் க்யூட்டான முகபாவங்களால் பிக்பாஸைத் தொடர்ந்து ‘கரெக்ட்’ செய்ய முயற்சி செய்கிறார். ஃபிளையிங் முத்தங்கள் தாறுமாறாக பறக்கின்றன. உள்ளே இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் ஓவியாவை இமிடேட் செய்வதுபோல் இவர் தனது 'டான்ஸில்' ஓவியாவைப் பிரதிபலிக்க முயற்சி செய்கிறார். ஆல் தி பெஸ்ட் ஐஷ்வர்யா!

சமயங்களில், பிக்பாஸ் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பேசுவதால் என்னவென்று அறிய குழப்பமாக இருக்கிறது.  அமீர்கான் வரும் மொபைல் விளம்பரம் ஒன்றில், நமது தேவைக்கேற்ப ஃபோகஸை மாற்றிக்கொள்வதுபோல், அந்தக் கேமரா இருக்கும். அதைப்போல சம்பந்தப்பட்டவர்களின் உரையாடலை மற்றும் ஃபோகஸ் செய்வது, மற்றவற்றை mute செய்வது போன்ற நுட்பத்தைப் பயன்படுத்தினால் நல்லது. 

இதற்கிடையில் வைஷ்ணவியை அழைத்த பிக்பாஸ், அவர் சொல்லப் போகிற கதை உண்மைதானா என்று விசாரித்து வைத்துக்கொண்டார். இப்படி எல்லோரையும் விசாரித்திருப்பார்கள் போல. இதன் மூலம், யார் யார் சொல்லும் கதை உண்மை அல்லது பொய் என்கிற விஷயம் முன்கூட்டியே நமக்குத் தெரிந்து விடும். 

அனந்த் வைத்தியநாதன், பாலாஜியின் பிரச்னையை விசாரித்துக்கொண்டிருந்தார். இவரை சூப்பர் சிங்கரில் பல காலம் கேட்ட பழக்கத்தில், இவர் என்ன பேசினாலும் ‘இவர் ஒரு நல்ல contestant. ஆனா ஹைபிட்ச்சுல பாடுறச்சே… . Vocal chords வந்து ..' என்கிற மாதிரிதான் காதில் விழுகிறது. 

லக்ஸரி பட்ஜெட்டுக்கான ‘பீலா அல்லது ஃபீலா’ என்கிற டாஸ்க் தொடங்கியது. முதலில் கதை சொல்ல வந்தவர் நித்யா. ‘ஒரு ஊர்ல ஒரு வெள்ளை ரோஜாப்பூ இருந்துச்சும்மா.. அதை ஒரு குருவி காதலிச்சுதாம்…. என்கிற ‘ஒருதலைராகம்’ டி.ராஜேந்தர் மாதிரி உருக்கமாக ஏதோவொரு கதை சொன்னார். அது சொந்தக்கதை + சோகக்கதை. எதிரணி உறுப்பினர்கள் கண்ணீர் விடாத குறையாக, இது ‘உண்மைக்கதைதான்’ என்று ஒப்புக்கொண்டனர். 

\

அடுத்து அழைக்கப்பட்டவர், பாலாஜி. பின்னே.. அதுதானே பிளான். அவரும் நித்யா சொன்ன கதையின் இன்னொரு புறத்தைச் சொன்னார். ‘நாயகனின் அப்பா இருந்திருந்தால், அவனுடைய பிரச்னைகளை சரி செய்திருப்பாராம்’. இத்தனை வயதுக்குப் பிறகும் ஒருவரின் தனி வாழ்க்கையில் அவருடைய பெற்றோர் தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது முதிர்ச்சியில்லாத ‘இந்திய’ தனம். 

இன்றைய நாளின் ‘ஹைலைட்’ ஆன வெங்காயப் பிரச்னையின் துவக்கம். நித்யா கேரட் பொறியல் செய்துகொண்டிருந்தார். அந்தப் பக்கமாக வந்த பாலாஜி, ‘இதுல வெங்காயம் போட்டா பொறியல் நல்லாயிருக்கும் மற்றும் நிறையவும் வரும்’ என்கிற ஆலோசனையை சொல்ல ‘போய்யா வெங்காயம்’ என்கிற மாதிரி அதை காதில் வாங்காமல் இருந்தார், நித்யா. பின்னர் மஹத், மும்தாஜ், ஐஸ்வர்யா என்று எல்லோரும் இணைந்து ‘வெங்காயம் போடணும்... வெங்காயம் போடணும்’ என்கிற போராட்டத்தைத் துவங்கினர். விதவிதமாக கேட்கப்பட்டும் ‘வெங்காயத்தைச் சேர்க்க மாட்டேன்’ என்பதில் வெங்காயமாக… ச்சே… பிடிவாதமாக இருந்தார் நித்யா. 

பாலாஜி பரிந்துரைத்த காரணத்தினால்தான் நித்யா வெங்காயத்தை உபயோகிக்கவில்லை என்பது மாதிரி முதலில் புரிந்தாலும் அவருடைய பிரச்னைகள் வேறு என்பது மெல்ல மெல்ல அவர் தந்த விளக்கங்களின் மூலம் புரிந்தது. ஆனால், அந்த விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததும் பிரச்னை. 'எல்லோரும் ஆர்டர் பண்ற ஒவ்வொண்ணா கேட்டா எப்படி', 'கிச்சன் டீம்ல மூணு பேரு இருந்தும் நான் மட்டும்தான் தனியாக பெரும்பாலான நேரங்களில் சமைக்க வேண்டியிருக்கு', 'பாவம் என்று மஹத்தை அனுப்பிவிட்டால் எவர் உதவுவார்கள்?', 'என்ன மெனுன்றதை முன்னாடியே டிஸ்கஸ் செய்ய மாட்டேங்கறாங்க'.

உண்மையில் இது மும்தாஜிக்கும் நித்யாவுக்கும் இடையிலான பனிப்போர் என்றே யூகிக்கத் தோன்றுகிறது. இந்த கிராஸ் ஃபயரில் பாலாஜி உட்பட மற்றவர்கள் மாட்டிக்கொண்டனர். 'என்ன பிரச்னையிருந்தாலும் பேசிக்கலாம். மத்தவங்க பசியோடு விளையாடக்கூடாது' என்று அனந்த் வைத்தியநாதன் சொன்னது சரியானது. மும்தாஜின் உயர்வுமனப்பான்மையுடன் கூடிய உடல்மொழி, நித்யாவை தொந்தரவு செய்திருக்கலாம்’ என்று தனியாலோசனையில் சொன்னார் வைஷ்ணவி. இருக்கலாம். 

இந்த டிராமாவின் மூலம் ஒட்டுமொத்த அனுதாப மைலேஜை அடைந்தவர், பாலாஜி. ‘சாப்பிட மாட்டேன்’ என்பதை விதவிதமாக மறுத்து மற்றவர்களை கெஞ்சவைத்தார். அவருக்குமே கூட மனவருத்தம் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், தம்பதிக்குள் ஏற்பட்டிருக்கும் விரிசலுக்கும் விவாகரத்துக்கும் முக்கியக் காரணம் ‘நித்யாவாகத்தான்’ இருக்கும் என்று போட்டியாளர்களையும், பார்க்கும் பார்வையாளர்களையும் எண்ண  வைத்துவிட்டது. . இது நித்யாவின் சறுக்கல். இந்தச் சந்தர்ப்பத்தை பாலாஜி கச்சிதமாக உபயோகித்துக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. தனியறைகளில் ஆயிரம் அட்டகாசம் செய்தாலும், பொதுவிடங்களில் தன்னை ஒரு ‘ஜெண்டில்மேனாக’ காட்டிக் கொள்வதில் ஆண்கள் வல்லவர்கள். நித்யா - பாலாஜி தம்பதி குறித்த விஷயங்களை, செய்திகள் வாயிலாக பார்த்த நமக்கு, நித்யாவின் மீதுதான் எல்லா தவறும் இருந்திருக்கக்கூடும் என தோன்ற வைக்கிறது. ஆனால், விருமாண்டி திரைப்படத்தில் வருவதுபோல், இதில் நித்யா கொட்டாளத்தானா இல்லை விருமாண்டியா எனப் போகப்போகத்தான் தெரியும்

அமைச்சராக முடியாத எம்.எல்.ஏ. போல் வீட்டின் தலைவராக முடியாத மும்தாஜ், ‘As a captain of Kitchen department’ என்று அடிக்கடி சொல்வதன் மூலம் தன்னை ஆறுதல் படுத்திக்கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. இந்தப் பிரச்னையை மும்தாஜ் கையாண்டவிதம் பெரும்பாலும் சரி. அவருடைய உடல்மொழி அகங்காரத்தனத்துடன் தோன்றினாலும், அவர் முன்வைக்கும் வாதங்கள், காரணங்கள் சரியாகவே இருந்தன. அனைத்தையும் உடனே வெளியில் கொட்டிவிடும் இவரைப் போன்றவர்களை நிச்சயம் நம்பலாம். மன்னிப்பு, அரவணைப்பு போன்ற எளிய சமாதானங்களின் மூலம் இவர்கள் உடனே அணைந்துவிடுவார்கள். இவர்களைப் போன்றவர்களின் நட்புதான் உத்தரவாதமானது; துரோகிக்காதது. 

இத்தனை பெரிய சண்டையின் சத்தங்களை ‘தாலாட்டு’ போல எடுத்துக்கொண்டு பொன்னம்பலம் தூங்கியது காமெடி. ‘கிச்சன் பொறுப்பு கிடைத்த முதல் நாளே, காலையில் ஏற்படும் மூட்டுவலி காரணமாக breakfast-ஐ தன்னால் செய்ய முடியாது’ என்று மும்தாஜ் துவக்கத்திலேயே சொன்னதை, சரியான நேரத்தில் சாட்சியமாக சொன்ன ஜனனி, நித்யாவுக்கு ஆதரவு தந்த முரண் புரியவில்லை. முட்டை ரேசன் பிரச்னையில், மும்தாஜ் சொல்லியிருந்த குறிப்பையும் தாண்டி, நித்யா ஜனனிக்கு போட்டுத்தந்த ஆம்லேட், இந்த சார்பு நிலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்தச் சண்டையின் காரணங்களுள் இதுவும் ஒன்று வேறொரு சமயத்தில் தெரிந்தது. 

ஏதோ மும்தாஜ் ஜப்பானிய மொழியில் பேசியது போல், ‘அவங்க என்ன சொல்றாங்கன்னா’ என்று மஹத் மொழிபெயர்க்க வந்தது நகைச்சுவை. பெண்களின் ஆதிக்கமே முன்னணியில் இருந்த இந்த யுத்தத்தில் ஆண்கள் டம்மியாக நின்றிருந்தார்கள். 

இன்னொன்று, சமையலுக்கு உதவ வந்த மஹத்தை, பாவம், இளைஞன் என்கிற அனுதாபம் காரணமாக மும்தாஜ் அனுப்பி விட்டார் என்று தெரிகிறது. இது பெண்களிடம் இயற்கையாக எழும் தாய்மைவுணர்வின் வெளிப்பாடு என்பதை யூகிக்க முடிந்தாலும் ஆண் குழந்தைகளை கையாள்வதில் தாய் செய்யும் பெரும்பாலான தவறுகளில் இதுவும் ஒன்று. ‘சமைப்பது பெண்களின் வேலை’ என்கிற சமூகவிதி தீர்மானிக்கப்பட்டதில் ஆண்களின் தந்திரம் இருக்கிறது. இந்த மரபை தாய்மார்கள் உடைக்க வேண்டும். ‘கிச்சனில் உனக்கென்ன வேலை?' என்று மகன்களை துரத்தக்கூடாது. அவர்களுக்கு சமையல் கற்றுத் தந்து, அதைத் தொடர்ந்து செய்ய வலியுறுத்தவும் வேண்டும். 

பாலாஜியின் உண்மையான நண்பன் என்று சென்றாயனைச் சொல்லலாம். அவரைச் சாப்பிட வற்புறுத்தியதில் இருந்து, ‘மன்னிச்சுக்க மாமா.. நீ சாப்பிடலைன்னு தங்கச்சி கிட்ட சொல்லிட்டேன், நீ வேணா பாரு.. இந்த ப்ரோகிராம் மூலமாக நீயும் தங்கச்சியும் சேர்ந்துடுவீங்க’ என்றெல்லாம் ஒரு வெள்ளந்தியான நண்பனை சரியாக பிரதிபலித்துக்கொண்டிருந்தார். 

‘விடுகதையா இந்த வாழ்க்கை…’ என்கிற பாடலை கழிவிரக்கத்துடனும், ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்’ என்கிற பாடலை குத்திக் காட்டும் நோக்கத்துடனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாடிக் கொண்டிருந்தார், பாலாஜி. அனந்த் வைத்தியநாதன் பக்கத்தில் இருந்திருந்தால், இதிலிருக்கும் அபஸ்வரங்களைக் கண்டுபிடித்துச் சொல்லியிருப்பார். ஆங்.. சென்ற சீசனிலும் இதே ' திருந்தாத உள்ளங்கள் ' தான் ஓடியது. காயத்ரி அணி நள்ளிரவில், ஓவியாவைப் பார்த்துப் பாடுவார்கள். ஓவியா கடுப்பாகி ஆண்கள் அறையில் சென்று படுத்துக்கொள்வார். ஒருவேளை இது பிக்பாஸ் டீமின் குடும்பப் பாடலோ

பாலாஜி – நித்யா விவாகரத்து விவகாரத்தை மற்ற வீட்டு உறுப்பினர்கள் கூடி கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ``ஆலோசனை சொல்கிறோம்” ``அவர்களுக்காக கவலைப்படுகிறோம்”, ``சேர்த்து வைக்க முயல்கிறோம்’ என்கிற பாவனைகளில் அவர்கள் இந்த விஷயத்தை சுவாரஸ்யமாக மென்று கொண்டிருந்தார்கள் என்பது கசப்பான உண்மை. இதுதான் மனித இயல்பு. அவர்களின் பிரச்னை இவர்களின் போதைக்கு ஊறுகாய். பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த சண்டையை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நமக்குமே கூட இதில் சில பாடங்கள் இருக்கின்றன. 

ஏதாவது ஒரு விஷயத்துக்காக வீட்டில் ஒரு சண்டை துவங்கும். ஆயிரம் சரவெடி மாதிரி அது மெல்ல மெல்ல வளர்ந்து வெடித்துக்கொண்டே போகும். பல பழைய கசப்புகள் மீண்டும் கிளறப்படும். அது மேலும் புதிய சண்டைகளுக்குக் காரணமாக இருக்கும். பல நாள்களுக்குப் பேசாமல் இருத்தல், உணவு உண்ண மறுத்தல் என்கிற வெளிப்பாடுகளின் மூலம் இன்னமும் மோசமாகும். நிரந்தமான பிரிவுக்குக்கூட அந்த அற்ப சண்டை காரணமாக அமையக்கூடும். 

ஆனால், என்றாவது இதை நிதானமாக அமர்ந்து யோசித்தால், இது நிகழ மூல காரணமாக இருந்தது எது என்பதையும், அது எத்தனை அற்பமானதாக இருந்தது என்பதையும், அந்தச் சமயத்திலேயே அதைக் கடந்திருந்தால் இத்தனை அளவுக்கு நீடித்திருக்காது என்பதையும் உணர முடியும். 

சந்தானம் நடித்திருந்த ஒரு நகைச்சுவைக் காட்சியில், இரு நபர்கள் பல வருட பங்காளிப் பகையுடன் முறைத்துக்கொண்டு இருப்பார்கள். நீண்ட காலம் கழித்து சந்தித்தும்கூட சண்டை போட்டுக்கொள்ளும் அவர்களை சந்தானம் நிறுத்தி விசாரிப்பார். ``ஆமாம்.. எதுக்காக உங்களுக்குள்ள பகை ஏற்பட்டுச்சு?” இரு தரப்புக்குமே அது நினைவில் இருக்காது. ``எதுக்குண்ணே தெரியாம இத்தனை வருஷம் சண்டையா, மவனே…ஓடிப்போயிடுங்க’ என்று விரட்டி விடுவார் சந்தானம். 

குடும்பத்தில் நிகழும் அல்லது நீண்ட காலமாக நீடிக்கும் பல விரோதங்களின் மூலக்காரணம் சிறியது. உறிக்க உறிக்க ஒன்றுமே இல்லாமல் போகும் வெங்காயம் போன்று அந்தச் சண்டைகளுக்கான மூலக்காரணம் என்று ஒன்றுமே இருக்காது. (அப்பாடா.. ஒருவழியா ‘வெங்காய’ லாஜிக்கை கண்டுபிடிச்சாச்சு).

‘வெங்காய’ பிரச்னை தொடர்பான சம்பவங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுவிட்டதால், ‘பீலா, ஃபீலா’ task-க்கிற்காக மற்றவர்கள் சொன்ன கதைகளை அறிய முடியவில்லை. என்றாலும் முடிவு அறிவிக்கப்பட்டு முழு மதிப்பெண்கள் தரப்பட்டது. 

‘இந்த மோதல் இன்றோடு நிற்குமா, நாளையும் தொடருமா?” என்கிற பின்னணிக்குரலுடன் இன்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது. ‘எப்பா.. மகராசா…  பிக்பாஸூ அப்படில்லாம் ஈசியா முடிக்க விட்டுருவீ்ங்களா.. நீங்க கலக்குங்க சித்தப்பு”.