வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (21/06/2018)

கடைசி தொடர்பு:15:34 (21/06/2018)

``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்டார் தாடி பாலாஜி..!’’ - டைரக்டர் தாம்ஸன்

பாலாஜியோட தீவிர ரசிகனின் போன் கால்னு ஒரு ப்ராங்க் பண்னினோம். அது ஹிட்டாக முதல் காரணம் பாலாஜிதான்.

``குடும்பப் பிரச்னைகள் எவ்வளவு இருந்தாலும் வேலையில் அதைக் காட்டிக்க மாட்டார் தாடி பாலாஜி..!’’ - டைரக்டர் தாம்ஸன்

பிக் பாஸ் சீசன் 2 வுக்குச் சென்றிருக்கும் தாடி பாலாஜி, பல படங்களில் நடித்திருந்தாலும் `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பலருக்கும் பரிச்சயமானார். `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் 5,6,7 என மூன்று சீசன்களிலும் நடுவராக இருந்த தாடி பாலாஜியைப் பற்றியும் அவருடனான தனது பயணத்தைப் பற்றியும் சொல்கிறார், அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்ஸன். 

``பாலாஜியை ஒரு நடிகரா எனக்கு நல்லா தெரியும். `வாலி’, `சச்சின்’ படங்களில் அவரோட காமெடி நல்லா இருக்கும்; நல்லா காமெடி பண்ணுவார்னு எல்லாருக்கும் தெரிஞ்ச அளவுக்குத்தான் எனக்கும் தெரியும். அவர் `கலக்கப்போவது யாரு’ சீசன் 5 க்கு நடுவரா வந்ததுக்குப் பிறகுதான் நாங்க ஒண்ணா ட்ராவல் பண்ண ஆரம்பிச்சோம். 

`கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ஆரம்பிக்கும் போது இந்த ஷோவுக்கு யாரையெல்லாம் நடுவரா போடலாம்னு யோசிக்கும் போது, `பெரிய பெரிய சினிமா காமெடியன்கள் யாரும் வேணாம். ஏன்னா இந்த ஷோவோட போட்டியாளர்களை நடுவர்கள் கலாய்க்கணும்; அதேமாதிரி போட்டியாளர்களும் நடுவர்களை கலாய்ப்பாங்க. அப்படிக் கலாய்க்கும் போது அதை ஏத்துக்கணும். அதனால இதுக்குச் செட்டாகுற மாதிரியான ஆள்கள்தாம் வேணும்’னு முடிவு பண்ணினோம். 

அந்தச் சமயம்தான் ஈரோடு மகேஷும், பாலாஜியும் சேர்ந்து தொகுத்து வழங்கிய `நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’ ஷோ செம ரீச்ல இருந்துச்சு. ஈரோடு மகேஷ் ஏற்கெனவே `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்குப் பழக்கமானவர்தான். அதுனால இவங்க ரெண்டு பேரையும் நடுவர்களா போட்டுக்கலாம்னு முடிவு பண்ணுனோம். 

தாடி பாலாஜி

`கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ல வலது பக்கம் மகேஷ், பிரியங்கா, இடதுபக்கம் சேது, நந்தினினு பாலாஜியை நடுவுல உக்கார வச்சு வெச்சுருப்போம். முதலில் அவர்கிட்ட, `பாலாஜி நீங்கதான் நடுவுல உக்காரப் போறீங்க’னு சொன்னதும், `பரவாயில்லையே... நான்தான் நடுவுல உக்காருறேனா... அப்போ நான்தான் மெயின் ஜட்ஜ்னு சொல்லுங்க...’னு சொன்னார். அதுக்கு, `அப்படியெல்லாம் இல்லை. கலாய்க்கும் போது எந்திருச்சுப் போயிடக் கூடாதுனுதான் நடுவுல உக்கார வச்சிருக்கோம்’னு சொன்னோம். அப்படி `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி முழுக்க அவரை வச்சு நிறைய காமெடி பண்ணியிருக்கோம்; கலாய்ச்சிருக்கோம். 

பாலாஜியோட தீவிர ரசிகனின் போன் கால்னு ஒரு ப்ராங்க் பண்னினோம். அது ஹிட்டாக முதல் காரணம் பாலாஜிதான். `ஹலோ பாலாஜிசார் வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா’னு போன் பேசுறவர் கேட்டதும், `ஓ... நல்லாயிருக்கேனே’னு அவர் சொன்னதும், `அதான் நீங்க இங்க இருக்கீங்களே... அப்போ அவங்க நல்லாதான் இருப்பாங்க’னு சொல்லுவார். அப்பறம், `பாலாஜிசார் லைன்ல இருக்கீங்களா’னு கேட்டதும், `இருக்கேன்பா’னு அவர் சொன்னதும், `இன்னுமா இருக்கீங்க’னு கேட்பார். இப்படி அந்த தீவிர ரசிகன் எவ்வளவு கலாய்ச்சாலும் அதை பாலாஜி ஏத்துப்பார். அதுனாலதான் அந்த ப்ராங்க் ஹிட்டாச்சு. 

`கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலேயும் பல போட்டியாளர்கள்கூட சேர்ந்து பாலாஜி பெர்ஃபார்ம் பண்ணியிருக்கார்.. அந்த பெர்ஃபார்மென்ஸ் எல்லாத்துலேயும் அண்டர்ப்ளேதான் பண்ணியிருப்பார். சின்னப் பசங்ககிட்ட திட்டு வாங்குறது, இறந்து போனவர் மாதிரி நடிக்கிறதுனு போட்டியாளர்களுக்கு செம சப்போர்ட்டா இருப்பார். எதுக்கும் கவலைப்படாம கலாய் வாங்குவார்; அதான் பாலாஜியோட ஸ்டைல். 

தாடி பாலாஜி

அதேமாதிரி, அவரும் செமையா கலாய்ப்பார். அதை ஆடிஷன்ல இருந்தே ஆரம்பிச்சுட்டார். அவர் அடிச்ச கவுன்ட்டர்ஸ் எல்லாம் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. ஆடிஷன்ல ஒரு பையன் பெர்ஃபார்ம் பண்ணுனான். `இந்த டைம் நீ செலக்ட் இல்ல, அடுத்த முறை நல்லா வொர்க் பண்ணிட்டு வாப்பா’னு நடுவர்கள் சொல்லிட்டாங்க. ஆனால், அவன் அந்த இடத்தை விட்டு போகவே இல்லை. அதுக்கு பாலாஜி, `ஏ, மகேஷ்... இந்தப் பையன் இதுக்கு முன்னாடி பெர்ஃபார்ம் பண்ணுன பையன் மாதிரி இருக்கான் பாரு’னு சொன்னதும், செட்ல இருக்குற எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அப்பறம் ரிஜெக்ட்டான ஒரு பையன் ஆடிஷன் முடிச்சதுக்கு அப்புறம் வந்து, `சார் எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க’னு சொன்னான். அப்போ, `மணி இப்போ 3 ஆகுது; உனக்கு 3 மணி நேரம் டைம் தரேன். 6 மணிக்குள்ள காமெடி பண்ணிடுவியா’னு பாலாஜி கேட்டதும் ஓடிட்டான் அந்தப் பையன். ஆடிஷன்ல சில பேரு காமெடி பண்றேன்னு சொல்லிட்டு கடுமையான காமெடிகள் பண்ணிட்டு இருப்பாங்க. அந்தச் சமயம், `இவன் சிரிக்க வைக்காம போக மாட்டான் போலேயே’னு சொல்லுவார். இப்படி டைமுக்கு ஏற்ற மாதிரி டக்கு டக்குனு கவுன்ட்டர்ஸ் போட்டுட்டே இருப்பார். 

சேதுவை ரொம்ப டீசன்ட்டா கலாய்க்கிற ஒரே ஆள் பாலாஜிதான். ஒரு நாள் ஒரு போட்டியாளர்கிட்ட, `என்னபா வெளியூர் நிகழ்ச்சி எல்லாம் புக் ஆகுதா’னு கேட்டார் பாலாஜி; பக்கத்துல சேதுவும் இருந்தார். அந்தப் பையனும், ` `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி பண்ண ஆரம்பிச்சதும் சில நிகழ்ச்சி வருது சார்’னு சொன்னான். அதுக்குப் பாலாஜி சேதுவைக் காட்டி, `இவரை பாத்துக்கோப்பா. ஏதாவது நிகழ்ச்சிக்குப் போனால் இவரையும் அழைச்சுட்டு போங்கப்பா. ப்ரோகிராமே இல்லாம சும்மாதான் இருக்காப்ள’னு சொல்லுவார்.

தாடி பாலாஜி

போட்டியாளர்கள், மற்ற நடுவர்கள், தொகுப்பாளர்கள்னு எல்லாரையும் கலாய்ச்சவர் ஆடியன்ஸை மட்டும் விட்டு வைப்பாரா? ஒரு டைம் ஆடியன்ஸா வந்த ஒரு பையனையும் கலாய்ச்சு விட்டுட்டார். மகேஷ் ஏதோ சொல்லி பாலாஜியைக் கலாய்ச்சதும், ஆடியன்ஸ்ல குண்டா இருந்த ஒரு பையன் மட்டும் ஓவரா சிரிச்சான். அவனைப் பார்த்து, `யார்டா நீ... மொத்த மாவுல சுட்ட ஒரே போண்டா மாதிரி இருக்க’னு சொல்லி கலாய்ச்சு விட்டுட்டார். 

பாலாஜி நடிப்புல எப்படி அண்டர்ப்ளே பண்றாரோ ஆளும் அதே மாதிரிதான். அவர் ஒரு செலிபிரிட்டிகிறதை எப்போதுமே காட்டிக்க மாட்டார். செட்டுல 20 பேரு இருந்தா பாலாஜி அங்க 20 வது ஆளாதான் இருப்பார். டைமுக்கு வந்துடுவார்; ஷூட் லேட் ஆனாலும் கடுப்பாக மாட்டார். குடும்பப் பிரச்னைகள் அதிகமா இருந்தபோதும், ஷூட்டுக்குச் சரியா வருவார்; வேலையில் அதைக் காட்டிக்க மாட்டார் . குடும்பப் பிரச்னைகளையும் வேலையையும் ஒண்ணாப்போட்டுக் குழப்பிக்க மாட்டார். இப்போ பிக் பாஸ் வீட்டுக்குள்ள போயிருக்கார். அவருக்கு இருக்குற சில பிரச்னைகள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிய வரும் போது சரியாகிடும்னு நினைக்கிறேன்’’ என்றார் தாம்ஸன்.