Published:Updated:

வெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி... பிக் பாஸில் இதெல்லாம் யாரு? #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
வெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி... பிக் பாஸில் இதெல்லாம் யாரு? #BiggBossTamil2
வெங்காய வெட்டி, மாவு மஷின், விஷ பாட்டில், சூனியக் கிழவி... பிக் பாஸில் இதெல்லாம் யாரு? #BiggBossTamil2

‘ஃப்ரெண்டு… லவ் மேட்டரு’ என்கிற டேனியின் வசனத்தைப்போல, நேற்றைய நிகழ்ச்சியில் ‘நித்யா… வெங்காயம் மேட்டரு.. ஃபீல் ஆயிட்டாப்பல’ என்கிற விவாதம் சீரியஸாக ஓடிவிட்டதால் இன்று ரிலாக்ஸாக இருந்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியும் அப்படியே இருந்தது. ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் வராத காரணத்தால், இன்னொருவர் வந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினதுபோல இருந்தது இன்றைய நாள். 

இது ஒரு பக்கம் சுவாரஸ்யமாக இருந்தாலும் சற்று சலிப்பும் தட்டியது. பஞ்சாயத்து + ஜாலி என்பதை இரண்டு நாட்களிலும் வருமாறு கலந்து சமநிலையுடன் அமைக்கலாம்.

“இன்று ஞாயிற்றுக்கிழமை. பிரத்யேகமான, உற்சாகமான மனநிலை ஏற்படும். வீட்டுக்குள்ளேயும் அது இருக்கான்னு பார்க்கலாம். அங்க பல உணர்வுகள் கலந்திருக்கு” என்றார், கமல்.

ஏழாம் நாள் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின. ‘வீட்ல வாஸ்து சரியில்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. உணவு தொடர்பான பிரச்னையொன்று மறுபடியும் எழுந்தது. கேரட், வெங்காயம், ரசத்தைத் தொடர்ந்து இந்த முறை சாண்ட்விட்ச். 16 நபர்களுக்காக 16 சாண்ட்விட்ச்கள் தயாரித்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் எவரோ இரண்டு எடுத்து சாப்பிட்டுவிட்டார்கள் போல. மும்தாஜிற்கு கோபம் வந்துவிட்டது. ‘எனக்கு இல்லைன்னாகூட பரவாயில்லை. நானும் வந்த நாள்ல இருந்து சொல்ல வேண்டாம்னு பார்க்கிறேன். இன்னொருத்தருக்கும் பசி இருக்கும்னு ஏன் நெனக்க மாட்டேங்கிறாங்க’. வைஷ்ணவியும் அவருக்கு பலமாக பின்தாளம் போட்டார். ‘ரொம்ப ஹார்ஷா சொல்லாதீங்க. யாராவது ஹர்ட்டாகப் போறாங்க” என்று அனந்த் ஆட்சேபிக்க “ஆகித் தொலையட்டும்” என்று எரிச்சல் பட்டார் வைஷ்ணவி.

கவுண்டமணி – செந்தில், வாழைப்பழ காமெடி போல “16 சாண்ட்விச் இருந்தது. ஒருத்தர் சாப்பிடலை. அந்த ஒண்ணு எங்க?” என்று இது தொடர்பாக நீண்ட விசாரணை நடந்தது. ’16 மட்டும்தான் இருக்குன்னு தெரியாம, யாராவது பசியில ரெண்டா எடுத்து சாப்பிட்டுட்டு இருப்பாங்க. இதை ஏன் பெரிய பிரச்னை ஆக்கணும்’ என்று பெருந்தன்மையாக விஷயத்தை முடிக்க முனைந்தார் மஹத். 

நம்முடைய வீடுகளிலும் இந்த நடைமுறைப் பிரச்னை உண்டு. ‘மற்றவர்களுக்கு இருக்கிறதா என்பதை அறியாமல் தன் பசிக்கு அல்லது ருசிக்கு ஏராளமாக எடுத்து சிலர் சாப்பிட்டுவிடுவார்கள். குறிப்பாக ஆண்கள். கடைசியில் உணவை தயார் செய்த பெண்கள் சாப்பிட போதுமான அளவு இருக்காது. இது குறித்த அடிப்படை நாகரிகம் நம்மிடம் வளர வேண்டும். ‘இதெல்லாம் நமக்கு எப்படி போதும்?’ என்று வெளியே பரிதாபமாக புலம்பிக் கொண்டிருந்தார், பொன்னம்பலம். 

யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் வழக்கம் போல சதியாலோசனைகளில் இருந்தார்கள். அதிலிருந்து காணாமல் போன சாண்ட்விச் தடயம் தெரிந்தது. காலையில் இருந்தே பசியில் இருந்த யாஷிகா ‘மஹத்’தின் பங்கை எடுத்து பகிர்ந்து சாப்பிட்டிருக்கலாம். 

பாலாஜி டென்ஷனாக இருந்தார். ஜாடை மாடையாக திட்டிக் கொண்டிருந்தார். நித்யாவை குறித்துதான் போல. அநாகரிகமான வார்த்தைகளும் இருந்தன. ‘am watching’ என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் ஆண்டவர், விசாரணையில் ஏன் இதைக் கொண்டு வருவதில்லை என தெரியவில்லை. 

அகம் டிவி வழியே வந்தார், கமல். அத்தனை சண்டைகளையும் மூடி மறைத்து விட்டு பள்ளிப்பிள்ளைகள் போல் எழுந்து நின்றது பிக்பாஸ் வீடு. “உங்களோட Frozen Frames’ சிலது பார்த்தேன். சுவாரசியமா இருந்தது’ அதைப் பத்தி பேசலாம்” என்று துவங்கினார். அதற்கு அர்த்தம் புரியாமல் விழித்த சென்றாயனிடம் “உறைபடம், குறும்படம் அல்ல” என்று விளக்கினார். 

‘சில புகைப்படங்களைக் காட்டுகிறேன்’ என்று துவங்கியவர், என்று அனந்த சயனம் மேற்கொண்டிருந்த பொன்னலம்பத்தின் புகைப்படத்தைக் காட்டியவுடன் வீடே சிரிப்பில் அதிர்ந்தது. ‘வெங்காயம்’ அணுகுண்டாக மாறி பெரிய பிரச்னையாக மாறி வெடித்து, வீடே அதகளப்பட்டுக் கொண்டிருக்கும் போது ‘போய்யா வெங்காயம்’ என்பது போல் பொன்னம்பலம் படுத்துக் கொண்டிருந்த காட்சி மறக்க முடியாதது. ‘ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தேன்’ என்று சமாளித்தார் பொன்னம்பலம். ‘சரியான விஷயம் இது. எனக்கு கூட குழப்பம் வந்தா… போய் தூங்கிடுவேன். ஏதாவது தெளிவு கிடைக்கும்” என்றார் கமல். இது உண்மையாக இருக்கக்கூடும். விஸ்வரூபம் பட வெளியீடு பிரச்னை நடந்த சமயத்தில், ஒரு சிக்கலான தருணத்தில் ‘நான் போய் தூங்கிட்டு வர்றேன்’ என்று கிளம்பி விட்டாராம் கமல். எங்கோ வாசித்த நினைவிருக்கிறது. 

உச்சந்தலையில் குடுமி வைத்துக் கொண்டு சென்றாயன் ஏகாந்தமாக சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் அடுத்தது. அவருடைய தலைமுடியை straightening செய்த புகைப்படமும் வந்தது. ‘நானா இது?-ன்னு ஆச்சரியமா இருந்தது சார்” என்றார் சென்றாயன். “கண்ணாடில பார்த்தீங்களா, மத்தவங்க சொல்லி தெரிஞ்சுக்கிட்டீங்களா?” என்று நுட்பமாக கிண்டலடித்தார் கமல். 

‘யுரேகா’…. என்று புது ஜட்டி கிடைத்த சந்தோஷத்தில் டேனி கூவிய புகைப்படம்தான் அடுத்தது. ‘ரெண்டு நாளா மாத்து ஜட்டி இல்லாம கஷ்டப்பட்டேன் சார். பாலைவனப் பறவைக்கு ஒரு பாட்டில் தண்ணி கிடைச்சா மாதிரி புதுசு கிடைச்சவுடனே சந்தோஷமா இருக்கு. இப்ப என் கிட்ட ஆறு ஜட்டி இருக்கு சார்’ என்று ஏதோ ஆறு விருதுகள் வாங்கிய பெருமையுடன் சொன்னார் டேனி.

வாயில் மாஸ்க் அணிந்து யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மஹத்தை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சி. ‘body guards’-ஆ போனோம் என்று சமாளித்தார்கள். 

“வீட்ல எல்லாருக்கும் பட்டப்பெயர்லாம் வெச்சிருக்கீங்களாமே, தெரிஞ்சுக்கலாமா?” என்று கமல் கேட்டவுடன் உற்சாகமாகிவிட்டார் டேனி. மாவுமிஷின் (ஷாரிக்), டல்கோ (பாலாஜி), நைட்டிங்கேல் (மமதி), மண்டகசாயம் (ரித்விகா), ஃபீலிங்க்ஸ் பறவை (நித்யா), இசை எங்கிருந்து வருது? (அனந்த்) விஷபாட்டில் (ஜனனி) தலைவலி மாத்திரை (யாஷிகா), ஆமவடை (ஐஸ்வர்யா), டமால் ஜோக் (வைஷ்ணவி) சூனியக்கிழவி (ரம்யா) வெங்காய வெட்டி (மஹத்) பரோட்டா மாஸ்டர் (டேனி). சென்றாயனுக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. மரியாதை நிமித்தமாக மும்தாஜுக்கும் பெயர் இல்லை. (சோறு முக்கியம் அமைச்சரே). இருப்பதிலேயே ரம்யாவின் பட்டப்பெயர்தான் அதிக சிரிப்பை ஏற்படுத்தியது. சூனியக்கிழவி.

போட்டியாளர்கள் கமலை பாட்டுப்பாடச் சொல்லி கேட்பதும், அவரும் வரவழைத்துக் கொண்ட பெருந்தன்மையுடன், ஆனால் ‘இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு உற்சாகமாக பாடுவதும்.. ‘ஆஹா… ஓஹோ.. அசத்திட்டிங்க’ என்று போட்டியாளர்கள் மிகையாக புகழ்வதும்…. என இந்த சம்பிரதாயம் பிக்பாஸ்  சீஸனில் பெரிதும் நடக்கும். இப்போதும் நடந்தது. ‘மாருகோ’ பாடலை பாடினார் கமல். அனந்த் வைத்தியநாதனின் ‘மைண்ட் வாய்ஸ்’ அப்போது ஒலித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

‘பேபி பேபி..’ பாடலை, பின்புறம் தேய்த்த படி உற்சாகமாக நடித்துக் காட்டியது, டேனி,யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா கூட்டணி. 

‘இசை எங்கிருந்து வருது .. பாத்ரூம்ல இருந்து..’ என்று தனக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயரை  டேனியிடம் சீரியசாக மறுத்துக் கொண்டிருந்தார் அனந்த். ‘இனிமே சொல்லாத. விட்ரு’. இசை என்பது அவருடைய ஆத்மார்த்தமான தொழில் தொடர்பானது. அது மலினப்படுத்தப்பட்டால் அவர் புண்படுவது சரியானதுதான். டேனிக்கு அது புரியாமல் ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார். தம்முடைய கிண்டலால் ஒருவர் புண்படுகிறார் என்றால் அதை விட்டு விடுவதுதான் சரியானது. ‘இதை அழித்து விடுங்கள்’ என்று பிக்பாஸிடம் வேண்டுகோள் வைத்தார்.

சில அடைமொழிகளைக் காட்டி அது யாருக்குப் பொருந்தும் என்று கேட்டார் கமல். ‘நாட்டாமை’ என்பதற்கு ஜனனியையே பலரும் கைகாட்டினார்கள். பொன்னம்பலத்தை சிலர் சுட்டிக் காட்டினார்கள். ‘மும்தாஜ்’ பெயரை சொன்னார் சென்றாயன். பாலாஜி ‘நினைவெல்லாம் நித்யா’ மோடில் இருப்பதால் நித்யாவிற்குத்தான் பொருந்தும் என்று தனிஆவர்த்தனம் செய்தார். இறுதியில் இந்தப் பட்டத்தை ஜனனியே பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார்.

அடுத்தது ‘காதல் மன்னன்’. என்கிற அடைமொழி யாருக்குப் பொருந்தும் என்கிற உரையாடல் வந்தது.

ஒரு மாதிரியாக விழித்த ‘ஷாரிக்’ பிறகு தயக்கத்துடன் தானே அந்த மாலையை சூடிக் கொண்டார். ‘திருடன் கிட்ட சாவி கொடுத்த மாதிரி, அவன் கிட்டயே கேட்டா என்ன பண்ணுவான்?’ என்று நக்கலடித்தார் பாலாஜி. மஹத்தும் அனந்த்தும் ‘வித்தியாசமாக’ பாலாஜியை சுட்டிக் காட்டினார்கள். ‘மத்ததெல்லாம் விளையாட்டு.. இதுதான் உண்மை’ என்பது அனந்த்தின் விளக்கம். ‘காதல் –னா ஏதாவது புது பொண்ணு பின்னாடி சுத்துவாங்க.. உலகத்துலேயே பொண்டாட்டி பின்னாடி சுத்துற ஆள்.. இவர் மட்டும்தான்” என்று டேனியும் பாலாஜியையே சுட்டினார். 

‘என்னங்க.. ஓட்டுல்லாம் உங்க பக்கம் சாயுது. என்ன நெனக்கறீங்க?: என்று கமல் பாலாஜியை விசாரிக்க.. ‘உங்க ஆசிர்வாதத்துல ஏதோ நல்ல படியா முடிஞ்சா சரி’ என்று சந்தோஷம் இன்றி சொன்னார் பாலாஜி. அத்தனை அழுத்தங்களுக்கு இடையிலும் ‘காலம்தான் இதற்கு பதில் சொல்லும்’ என்கிற நிதானமான பதிலை சொன்னார் நித்யா.

மறுபடியும் அதுதான். பாலாஜி – நித்யா இணைப்பு நிகழ வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் அதை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இது இருவரின் தனிப்பட்ட பிரச்னை, முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும்’ என்பது அவர்களுக்குப் புரியவில்லை. கமலும் இதை பின்பு சொன்னார்.

இதற்கிடையில் “நீங்கதான் காதல் மன்னன்’ என்று மமதி முன்மொழிய மற்றவர்களும் வழிமொழிந்தார்கள். ‘அப்படியா.. அது என் கிட்ட இருந்து போயி ரொம்ப நாளாச்சே’ என்ற கமல், மற்றவர்கள் வற்புறுத்த அடக்கத்துடன் அந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்டார். 

‘சென்றாயன்’தான் உண்மையான காதல் மன்னன்.. எப்பவும் பொண்ணுங்க நடுவுலதான் இருப்பார்” என்றார் வைஷ்ணவி… “ஏன் நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு’ என்ற மாதிரி விழித்தார் சென்றாயன். ‘ஏன் நீங்க மனுஷன் இல்லையா?’ என்று சென்றாயனை சரியாக சப்போர்ட் செய்தார் மும்தாஜ். மஹத்திற்கும் சில வாக்குகள் வந்தன. வீட்டிற்கு வெளியேயிருக்கும் ஒரு காதலின் நினைவாக இருக்கும் டேனிக்கு சிறப்பு வாக்கு கிடைத்தது. ‘ப்ரெண்டு லவ் மேட்டரு..’ வசனத்தை சிறப்பாக டேனிக்கே பேசிக் காட்டினார் கமல். செம ஜாலியான காட்சி அது. 

ஆந்தை, கும்பகர்ணன் என்கிற பட்டப்பெயர்களுக்கான காரணங்களும் பொருத்தங்களும் ஜாலியாக அலசப்பட்டன. ‘நாரதர்’ என்கிற அடையாளத்திற்கு அனைவரும் யோசிக்கவேயில்லை.. ‘ஜனனி’ என்று ஏகமனதாக தேர்வு செய்தார்கள். ‘எனக்கு ப்ராங்க் செய்யறதுன்னா பிடிக்கும். ஆனால் நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும்’ என்கிற விளக்கத்துடன் அதை ஏற்றுக் கொண்டார் விஷபாட்டில்.. சே.. ஜனனி. 

‘நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன். அது அப்புறம்.. நீங்க ஒண்ணு வெச்சிருக்கீங்களாமே.. என்னது?’ என்று விசாரித்தார் கமல். அவர் நடித்த திரைப்படங்களில் இருந்து சில காட்சிகளை, பாடல்களை, வீட்டின் உறுப்பினர்கள் நடித்துக் காட்டினார்கள். 

‘கண்மணி.. அன்போடு காதலன்’ என்கிற குணா பாடலை பொன்னம்பலம் இயன்றவரையில் சிறப்பாக செய்தார். ‘நாங்கள் இங்கு செளக்கியமே’ என்று பாடலின் வரியை ரம்யா மாற்றிப் பாடியதை சரியாக கவனித்து பாராட்டினார் கமல். ‘NSK வோட டிஎன்ஏ இருக்கு’ ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் வரும் ஒரு வசனத்தை முயன்றார் சென்றாயன். 

‘சார் அந்தப் படத்துல.. பீம்பாய்… டயலாக்கை நீங்க சொல்லி நாங்க கேட்கணும்’ என்று வைஷ்ணவி வேண்டுகோள் வைக்க, பாலக்காட்டு தமிழ் வாசனையுடன் பேசிய கமல், .. அந்த அவினாசி நாய் முகத்துல.. என்று சொல்லி விட்டு.  அதே ப்ளோவில் .. நாய் –ன்னு சொல்லலாமோல்லியோ.. என்று பிக்பாஸிடம் கேட்டது ரகளையான நகைச்சுவை. 

‘சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும். காசு கொடு’ என்கிற பதினாறு வயதினிலே வசனத்தை டேனி நடித்துக் காட்ட, ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ பாடலை மேஜையின் மீது ஏறி சிறப்பாக நடித்துக் காட்டினார் ஷாரிக். அவருடைய திடகாத்திரமான உடலமைப்பு, பாடலுடன் பொருந்திப் போனது. 

அந்தப் பாடல் உருவான கதையை பகிர்ந்து கொண்டார் கமல்.. வைரமுத்து, ஜாவேத் அக்தர் ஆகிய இருமொழி பாடலாசிரியர்கள் ஒன்றாக அமர்ந்திருக்க, ஷங்கர் –இஷாய் –லான் கூட்டணியில், மெலிதாக ஆரம்பிக்கப்பட்ட மெட்டு எப்படி படிப்படியாக வளர்ச்சி பெற்றது என்பதை ‘பாடியே’ காண்பித்தார் கமல். ‘தெனாலி’ திரைப்படத்தின் ‘பயம்’ வசனத்தை பேசிய மஹத் ‘பயம்’ வரிசையில் பிக்பாஸ் கமலையும் இழுத்துக் கொண்டார்.

‘என் திரைப்படங்களை நினைவு கூர்ந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. பிக்பாஸ் என்னோட Main Profession இல்ல. நடுவுல கிடைச்ச பாக்கியம்’ என்ற கமல்.. ‘சரி.. சந்தோஷமா போயிட்டிருக்கு இல்லையா.. அப்படி விடக்கூடாது’ என்று எவிக்ஷன் விஷயத்தை மறைமுகமாக நினைவுப்படுத்தி, உறுப்பினர்களை அதிர வைத்தார். 

‘ஒரு விளையாட்டு விளையாடப் போறேன். இந்த வாரம் எவிக்ஷன் இல்லைன்னு நமக்குத் தெரியும். அவங்களுக்குத் தெரியாது. கொஞ்ச நேரம் விளையாடுவோம்.. கைத்தட்டி காண்பித்துக் கொடுத்துடாதிங்க.. இப்படி விளையாடறது எனக்குப் பிடிக்கும்” என்று பார்வையாளர்களை நோக்கி பேசினார். (நாரதர் பட்டம் இவருக்கும் பொருந்தும் போல).

அனந்த், நித்யா, மும்தாஜ், ரித்விகா என்று நாமினேஷன் பட்டியலில் இருந்த நால்வரும் எழுந்தார்கள். “ஏன் பட்டியலில் வந்தீர்கள். காரணம் தெரியுமா?” என்று விசாரித்தார் கமல்.

“நான் பொதுவா அதிகம் பேச மாட்டேன். அமைதியா இருப்பேன். அது காரணமா இருக்கலாம். அதுதான் நான் உணர்ந்த காரணம். மற்றவையும் இருக்கலாம். எனக்குத் தெரியல’ என்றார் அனந்த். “எனக்குன்னு அதிக டைம் எடுத்துக்கிட்டேன்.. இனி மத்தவங்க கூட அதிக டைம் செலவழிப்பேன்’ என்றார் நித்யா. அதே பிரச்னைதான் ரித்விகாவிற்கும். ‘ஒதுங்கி அமைதியா இருந்துட்டேன். ஆனா பழக ஆரம்பிச்சிட்டேன்னா விட மாட்டேன்’ என்றார். இதை மும்தாஜூம் வழிமொழிந்தார்.

‘எனக்கு எந்தக் காரணமும் தோணலை சார்’ என்றார் மும்தாஜ். “மக்கள் எது சொன்னாலும் ஏத்துக்கறேன்”.

அனந்த்தும் நித்யாவும் பட்டியலில் இருந்து விலக்கப்பட, ‘ஒரு வாரம் டைம் கொடுத்தா மாறிடுவேன்… இதுதான் என் குணம். செயற்கையாக பழக விரும்பலை’ என்று ரித்விகா சொல்ல, அவரும் அமர வைக்கப்பட்டார். 

ஆக .. மும்தாஜ்தான் வெளியேறுவார் என்பது மாதிரியான சூழல் உருவாக்கப்பட்டது. ஆனால் கிச்சன் தலைவியாக இருந்து சோறு போட்ட தாயை இழக்க பலரும் விரும்பவில்லை. ‘இரவு பகல் னு பார்க்காம.. அவங்க கூட சரியா சாப்பிடாம.. எங்களுக்கு சமைச்சு கொடுத்திருக்காங்க..” என்று உருக்கமாக வேண்டினார்கள்.

‘மும்தாஜ் செய்தது கடமை. அதை தியாகம் மாதிரி சித்தரிக்காதீங்க. இதனால்தான் பல அரசுகளில் ஊழல் மலிகிறது.” என்ற கமலிடம் இருந்து சட்டென்று ‘இந்தியன் தாத்தா’ வெளியே வந்தார்.

“ஏதாவது surprise கொடுங்க.. ‘ என்று கோரஸாக வேண்டியவர்களிடம் ‘இதுதான் அந்த சர்ப்ரைஸ் எதிர்பாராத ஆளு வெளியே போகப் போறாங்க இல்லையா..’ என்று இந்த விளையாட்டை இன்னமும் இழுக்க முயன்றார் கமல்.

மும்தாஜ் நிச்சயம் வெளியேறுவார் என்பது போன்ற சூழலை திறமையாக இழுத்தார், கமல். இதை நம்புவதா, வேண்டாமா என்கிற குழப்பம் உறுப்பினர்களிடையே நீடித்தது. என்றாலும் பதட்டமாகவே இருந்தார்கள். மற்றவர்களிடம் விடைபெற்று கிளம்பிய மும்தாஜிடம் ‘என்னங்க.. உள்ளே அழுதிட்டே இருந்தீங்க.. இப்ப சிரிக்கிறீங்க?” என்று விசாரித்தார் கமல். ‘வெளியவும் எனக்கு நிறைய அன்பு காத்துக்கிட்டு இருக்கு. உள்ளேயும் கிடைச்சது. ஒருத்தரை நான் ஏத்துக்கிட்டா வாழ்நாள் பூரா உறுதியா இருப்பேன்’ என்று மமதியை பிரத்யேகமாக குறிப்பிட்டார். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

ஒருவழியாக இந்த விளையாட்டை முடித்த கமல், பார்வையாளர்களின் கைத்தட்டலை சுட்டிக்காட்டி. ‘அவங்க தீர்ப்பு இதுதான். ஒரு வாரம் டைம் கொடுத்திருக்காங்க..’ என்று அதுவரை நிகழ்த்திய நாடகத்தை நிறைவு செய்ய பிக்பாஸ் வீடு மகிழ்ச்சியில் மிதந்தது. ‘இது ஒரு வாரத்திற்கு முன்பே எடுத்த முடிவு. உங்களுக்கு தெரியாது’ என்று அது தொடர்பான வீடியோவை காட்டி அதற்கு ‘குறும்(பு)படம்’ என்று புதிய பெயரையும் வைத்தார். 

‘வாரா வாரம் இந்த ‘குறும்பு’ இருக்கும்னு எதிர்பார்க்காதீங்க.. மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப மாறும். மத்தவங்களை புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க.. நான் பகுத்தறிவுவாதி. கடவுள்.. என்பதற்கான பொருளே.. கடந்து உள்ளே செல்வதுதான். உங்களுக்குள்தான் எல்லா பலமும் பலவீனமும் இருக்கு. சாதாரண நபர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது. அவங்களுக்கு தினசரி வேலை நிறைய இருக்கு. உங்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. சரியா பயன்படுத்துங்க.. என்று விடைபெற்றுக் கொண்டார்.

அடுத்து பார்வையாளர்களிடமும் ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொன்னார். “விஸ்வரூபம்.. 2 – திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல்  அடுத்த வார பிக்பாஸ் மேடையில் அரங்கேற்றப்படும்.”. பார்வையாளர்களின் சந்தோஷக் கூச்சலில் அரங்கம் அதிர்ந்தது. 

Welcome back… விஸ்வநாத் என்கிற விஸாம் அஹமத் காஷ்மீரி.. உங்களையும் ஓமர் பாய் உள்ளிட்ட அனைவரையும் காண ஆவலாக இருக்கிறோம்.  

எல்லாம் சரி. பிக்பாஸில் கமலுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம். நாரதர், காதல் மன்னன், நாட்டாமை ?? உங்கள் சாய்ஸை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.