Published:Updated:

"மாருகோ... பாடல், 'அனந்த சயனம்' அர்த்தம், 'அரசு' பன்ச்..." - பிக் பாஸ் கமல் #BiggBossKamalSpeech

தார்மிக் லீ

இதெல்லாம் போக, ஒரு சிலரின் நடவடிக்கைகளில் செயற்கைத் தனங்களும் தென்படுகின்றன

"மாருகோ... பாடல், 'அனந்த சயனம்' அர்த்தம், 'அரசு' பன்ச்..." - பிக் பாஸ் கமல் #BiggBossKamalSpeech
"மாருகோ... பாடல், 'அனந்த சயனம்' அர்த்தம், 'அரசு' பன்ச்..." - பிக் பாஸ் கமல் #BiggBossKamalSpeech

`திட்டம் போட்ட வியூகங்கள் எல்லாம் மாறிப்போயிரும், வாழ்க்கையும் அப்படித்தானே' என்ற கமல் பொன்மொழியோடு சனிக்கிழமை பிக் பாஸ் எபிசோடு ஆரம்பித்தது. `சரி, ஆண்டவர் ஃபுல் ஸ்விங்ல இருக்கார். வெளுத்து வாங்கப்போறார்' என்ற எதிர்பார்ப்போடு எபிசோடு தொடங்கியது. பின், தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை வழங்கினார். உள்ளே நடந்து, நிகழ்வுகள் சிலவற்றைக் காட்டி உரையாடலைத் தொடங்கினார். 

பிறர் கலையெனக் கருதும் ஆங்கில மொழியை கேமரா முன் நின்று கொலை செய்த சென்றாயனை, `எங்களுக்கும் புரியணும்னா, நீங்க கொஞ்சம் நிஜ இங்கிலீஷ் பேசணும்' எனச் சொல்லி அவர் ஸ்டைலிலேயே கலாய்த்தார். இதைத் தொடர்ந்து மும்தாஸ் - நித்யாவின் பெயரைச் சொல்லி முடித்துவிட்டு லேசாகச் சிரித்த கமல், `பஞ்சாயத்தை அப்புறம் வெச்சுக்கலாம்' என நினைத்து, `ரெண்டுபேரும் ரொம்ப அதிகமா இங்கிலீஷ் பேசுறீங்க, எங்க தமிழ் ரசிகர்களுக்கும் புரியணும்' என டாப்பிக்கை மாற்றி இருவருக்கும் அறிவுரை கூறினார். அவரைத் தொடர்ந்து ஷாரிக் பக்கம் வண்டியைத் திருப்பிய கமல், `நீங்க என்ன ரெஸ்ட் எடுக்க வந்தீங்களா... மடி கிடைச்ச இடத்துல எல்லாம் சாஞ்சு சந்தோஷமா இருக்கீங்க' என வெட்கத்தில் அவரைத் தலை குனிய வைத்தார். 

தொடர்ந்து, அனைவரின் எதிர்பார்ப்புப்படி வந்தது வெங்காயப் பிரச்னை. இப்போ முடியும் அப்போ முடியும் என நினைத்துக்கொண்டிருக்க நெடுநேரமாகத் தீராத வாதமாக நீண்டுகொண்டே இருந்தது. ஒரு வழியாகப் பேசி பைசல் செய்தபிறகு, அடுத்தநாள் சான்விட்ஜ் பஞ்சாயத்து. இதை வைத்துதான் அடுத்த வாரம் ஓடும்போல!. `குருநாதா எப்போ ஃபார்முக்கு வருவீங்க' என நினைத்துக்கொண்டிருக்க, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை, போட்டியாளர்களின் உறையும் படம் என்ற தலைப்பில் ஒவ்வொருவரின் ரகளையான புகைப்படங்களையும் காட்டிக்கொண்டிருந்தார். அதில் ஹைலைட் பொன்னம்பலம் புகைப்படம்தான். டைனிங் டேபிளில் வெங்காயப் போர்க்களம் நடந்துகொண்டிருக்க, மனுஷன் அந்தப் பக்கம் இருந்த சோஃபாவில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். 

அப்போதுதான்  தமிழ்ஃபோர்டு டிக்‌ஷனரியிலிருந்து, `அனந்த சயனம்' என்ற ஒரு வார்த்தையை எடுத்துவிட்டார், கமல். கூகுளை நோக்கி விரல்கள் விரைய, ஆயிரம் தலைகொண்ட நாக வடிவின் மீது விஷ்ணு யோக நித்திரை செய்வதையே அனந்த சயனம் என்று குறிப்பிடுவார்களாம். மனிதர் கடவுளைக்கூட கலாய்க்காமல் விட்டுவைக்கமாட்டார் போல. தொடர்ந்து வைஷ்ணவியின் வேண்டுகோளுக்கிணங்க `மாருகோ...' பாடலைப் பாடியும், `மைக்கேல் மதன காமராஜன்' படத்திலிருந்து `பீம் பாய்' வசனத்தையும் பேசியும் காட்டினார். அவருக்கே உரிய பிரத்யேக டான்ஸ் ஸ்டெப், இந்நாளில் நாம் மிஸ் பண்ணும் கிரேஸி மோகன் - கமல் காம்போவின் காமெடிகள், `காதல் மன்னன்' சமாசாரங்கள்... எனக் கமலின் கடந்த காலம் நினைவுக்கு வந்தது. 

`மாருகோ... மாருகோ' பாடலை கமல் பாடி முடித்தவுடன், அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். அனந்த் வைத்தியநாதனைத் தவிர!. ஒருவேளை அனந்த சயனம் என்று சொன்னதைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு கோபித்துக்கொண்டாரோ என்னவோ. `பாயசம் எங்கடா' என்பதைப் போல, `காட்டமான அரசியல் பேச்சு எங்க தலைவா' என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, `டியூட்டியைச் செய்றதை ஏதோ தியாகம் மாதிரி நினைக்கிறதுனாலதான் பல அரசுகள் கரப்ட் ஆகுது' என டைமிங்கில் போட்ட பன்ச் டயலாக் செம!.

கடந்த பிக் பாஸ் சீஸனில், உள்ளே இருப்பவர்களுக்குள் பிணைப்பு ஏற்பட கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால், இம்முறை அப்படி இல்லாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை ஏதோ ஓர் உறவாக ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டனர். அதைப் பின்பற்றியும் வருகின்றனர். இது அவர்களின் சாதூர்யமா, இல்லை உண்மையிலே அவர்கள் அப்படித்தானா என்ற கேள்விக்கு பதில் போக போகத்தான் தெரியும். கடந்த ஒரு வாரத்திலேயே அழுகை, ஆர்ப்பாட்டம், சண்டை, சர்ச்சை என எல்லாமே நிகழ்ந்துவிட்டது. அதை மறைமுகமாகவும் பலமுறை கமல் கேட்டுப் பார்த்துவிட்டார். ஆனால், ஒருவரும் வாயைத் திறப்பதாய் இல்லை. சில நிகழ்வைத் தவிர!. 

இதெல்லாம் போக, ஒரு சிலரின் நடவடிக்கைகளில் செயற்கைத் தனங்களும் தென்படுகின்றன. வீட்டுக்குள்ளே இருக்கும்போது பாலாஜியிடம் எரிந்து விழுந்த நித்யா, ஞாயிற்றுக்கிழமை ஜாடை மாடையாக பாலாஜியுடன் ஒப்பிட்டுப் பேசும்போது சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். தாயாய் பிள்ளையாய் பழகிவிட்டு, `எவிக்‌ஷன்' என்று சொன்னவுடன் ஷாரிக்கை விட்டுவிட்டு, `மமதிக்காக மட்டும்தான் நான் அழுவேன்' என்று மும்தாஜ் சொன்னது வியப்பூட்டுகிறது. ஒருவேளை கடந்த சீஸனைப் பார்த்து இது இவர்கள் கையாழும் வியூகமா அல்லது தன் மீதிருக்கும் பிம்பம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகச் செய்யும் தற்காப்புச் செயலா? 

ஒருவேளை குறும்படங்கள் வெளிவந்தால் பதில்கள் கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறும் நான்! (இதுவும் கமல் ஸ்டைல்)