Published:Updated:

பிக் பாஸ் வீட்டின் அம்மா - சின்னம்மா மும்தாஜ் - மமதி... தலைவி நித்யா..! சூப்பர் ட்விஸ்ட் #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பிக் பாஸ் வீட்டின் அம்மா - சின்னம்மா மும்தாஜ் - மமதி... தலைவி நித்யா..! சூப்பர் ட்விஸ்ட் #BiggBossTamil2
பிக் பாஸ் வீட்டின் அம்மா - சின்னம்மா மும்தாஜ் - மமதி... தலைவி நித்யா..! சூப்பர் ட்விஸ்ட் #BiggBossTamil2

கடந்த சீஸனில் இல்லாத அதிரடி மாற்றங்களை பிக்பாஸ் வீட்டில் இன்று காண முடிந்தது. சில நபர்களின் இரட்டை நிலைகளை நன்றாக அறிந்துகொள்ள முடிந்தது. ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக்பாஸின் தாரக மந்திரத்தை  இன்னுமொரு முறை உணர முடிந்தது. விரிவாகப் பார்ப்போம். 

ஏழாம் நாளின் தொடர்ச்சி ஒளிபரப்பாகியது. கமல் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசியது பற்றி சென்றாயன் வியந்து கொண்டிருந்தார். “நான் பேசறது இங்லீஷ்னு அவர் கண்டுபிடிச்சிட்டார்ல’ என்று அவர் சொன்னது காமெடி.  கூட இருந்த வைஷ்ணவி, கமல் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் மொழிபெயர்த்து சொன்னார். 

பாலாஜியை வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். “எந்தவொரு நபர் இந்த வீட்டில் இல்லாமல் இருந்தால் இந்த வீ்ட்டின் சூழல் நன்றாக இருக்கும்?” என்றொரு அதிரடியான கேள்வியைக் கேட்டார். ‘நித்யா’ என்ற பதில் வரலாம் என்று பலர் எதிர்பார்த்திருக்கக்கூடும். ஆனால் ‘மமதி’ என்றார் பாலாஜி. ‘அவங்க மும்தாஜ் கூட க்ளோசா இருந்து நிறைய விஷயங்களை புறம் பேசறாங்கன்னு தோணுது. செயற்கையா இருக்காங்க” 

இதே கேள்வியுடன் மற்ற உறுப்பினர்களும் தனித்தனியாக வாக்குமூல அறைக்கு அழைக்கப்பட்டனர். எதிர்பார்த்தபடி, மக்களின் வெறுப்பை சம்பாதித்து அதிக வாக்குகளைப் பெற்றவர், நித்யா. மூன்று வாக்குகள் மமதிக்கு கிடைத்தன. மும்தாஜ், அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், சென்றாயன் ஆகியோருக்கு தலா ஒரு வாக்கு. 

மமதியை தேர்ந்தெடுத்த சென்றாயன், ‘எதைச் சொல்றதா இருந்தாலும் மெல்ல பேசி டைம் எடுத்துக்கறாங்க. அதுக்குள்ள நாம சொல்ல வர்றது மறந்துடுது’ என்று வித்தியாசமான காரணத்தைச் சொன்னார். ‘அவங்க பேர் என்ன.. வித்யாவா.. நித்யாவா?” என்று தடுமாறினார் பொன்னம்பலம். (அடப்பாவி மனுஷா.. அத்தனை முறை அங்க சாப்பிட்டுட்டு..  அப்ப இவர் உண்மையிலேயே தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாரா?). இவர்களில் நித்யா சொன்ன காரணம்தான் ப்ரொபஷனலாக இருந்தது. மமதியை சுட்டிக் காட்டிய அவர் ‘இவர் வருங்காலத்தில் எனக்கு கடுமையான போட்டியாளராக இருக்கக்கூடும்’ என்றார்.

பிக்பாஸ் வீட்டின் அறிவிக்கப்படாத, அதிகார மையமாக இருக்கும் மும்தாஜூடன் மமதி இணைந்து ஆலாசனைகள் செய்வது பலருக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது. மமதியின் உடல்மொழி செயற்கையாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது. யாஷிகாவிற்கு ஃபேன்ஸ் பெருகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும். இப்போது மண்டை மேல் பேன்களும் பெருகுகிறது போல. பிக்பாஸ் போர்க்கால அடிப்படையில் இதற்கு தீர்வு கண்டாக வேண்டும். ‘சிம்பு’வை மிஸ் செய்வேன்னு நெனச்சு கூடப் பார்க்கலை’ என்று கண்கலங்கிக் கொண்டிருந்தார் மஹத். (இது நல்ல விஷயம்தானே?)

பாலாஜி, நித்யா, சென்றாயன் ஆகிய மூவரும் இணைந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். பலரால் வெறுக்கப்படும் நித்யாவிற்கு எப்போதும் ஆதரவாக இருப்பவர், சென்றாயன். வெறுப்பைக் காட்டிக் கொண்டிருந்த பாலாஜியும் அவ்வப்போது நித்யாவிற்கு ஆதரவு தருகிறார். இப்போதும் அப்படியொரு தருணம். ‘வேலைக்காரி மாதிரி வேலை வாங்கறாங்க” என்று நித்யாவிடம் பாசமழை பொழிய, நித்யாவிற்கு கண் கலங்கியது. பாக்யராஜின் ‘சின்ன வீடு’ திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். மனைவி குண்டாக இருப்பதால் அவர் மீது பிடிப்பில்லாமல் இருப்பார், பாக்யராஜ். இருவரும் திரையரங்கிற்கு செல்லும்போது, தான் கணவன் என்று மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக இருக்கைகள் தள்ளி உட்கார்வார். மனைவியின் பக்கத்தில் ஓர் இளைஞன் வந்து அமர்ந்ததும் தன்னிச்சையாக வந்து மனைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்து விடுவார். 

பாலாஜியை வெறுப்பேற்றுவதற்காக, இரவில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர்களின் நடுவில் படுத்துக் கொண்டார். மஹத். வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளாத குறையாக இதை ஆட்சேபித்தார். பாலாஜி. என்றாலும் மஹத் நகர்வதாயில்லை. ‘மனுஷன்.. வாழறான்யா’’ என்றுதான் சொல்லத் தோன்றியது. இதை பொன்னம்பலமும் ஆட்சேபித்த போது  ‘ஏண்ணே.. பசங்க விளையாடிட்டு இருக்கோம்.. ஏன் தப்பா நினைக்கறே’ என்றார். மஹத்.

பதினாறு போட்டியாளர்களைத் தவிர வேறு சில போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. சமையல் அறை பக்கம் எலிகள் வருவதால், சப்பாத்தி மாவை நித்யாவின் படுக்கைக்கு பக்கத்தில் வைக்க வந்தார், மமதி. இன்னொரு பஞ்சாயத்து ஆரம்பமாகியது. ‘மும்தாஜ் அங்க வைக்கச் சொன்னாங்க. ஏதாவது பிரச்னையாகப் போகுது’ என்று நித்யா ஆட்சேபிக்க, வாக்குவாதம் துவங்கியது. “நான் எப்பவும் உங்க பக்கத்துல நின்னுருக்கேன். சப்போர்ட் பண்ணியிருக்கேன்’ என்றார், மமதி. (சில மணி நேரங்களுக்கு முன்புதான் கன்ஃபெஷன் அறையில் நித்யாவிற்கு எதிரான வாக்கை மமதி செலுத்தினார்). 

எட்டாம் நாள் காலை. ‘என் வீட்டு குத்துவெளக்கு.. நீ கிடைச்சா என் வாழ்க்கை கெத்து’ என்கிற குத்துப்பாடல் ஒலிபரப்பாகியது. இந்த முறை அனந்த் வைத்தியநாதனும் லயித்து நடனம் ஆடினார். தூங்கியெழுந்த அனைவருக்கும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. பிசைந்து வைத்திருந்த சப்பாத்தி மாவு உட்பட, வீட்டில் இருந்த அனைத்து சமையல் பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. எரிவாயு நிறுத்தப்பட்டது. (கேரட்,வெங்காயம் இருந்தாத்தானே பிரச்னை பண்ணுவீங்க?)

இது தண்டனையா அல்லது ஏதேனும் புதிய சவால் போட்டிக்கான ஆரம்பமா? என்று விவாதித்தார்கள். ‘தண்டனை நிச்சயம் இல்லை. போட்டியாகத்தான் இருக்கும். தைரியமாக இருப்போம்’ என்றார்கள் மும்தாஜூம் பாலாஜியும். 

எதிர்பார்த்தது போல இது புதிய சவால்தான். ‘வீட்டை திறமையாக வழிநடத்தும் நிர்வாகத்திறன் கொண்டவர்கள் ஆண்களா அல்லது பெண்களா’ என்பதை சோதிப்பதற்கான போட்டி இது. இரண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் என்று  தனித்தனியான இரு அணியை, வீட்டின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டு அணிக்கும் தலா ரூ.4000 தொகை வழங்கப்படும். அன்றைய நாளுக்கு மட்டும் தேவையான அடிப்படை மளிகைப் பொருட்களை யார் சிறப்பாகவும் சிக்கனமாகவும் ஷாப்பிங் செய்கிறார்களோ, அவர்களே வெற்றி பெற்ற அணி. 

ஆண்களும் பெண்களும் தனித்தனியாக கூடி ‘என்ன வாங்கலாம்’ என்று ஆலோசித்தார்கள். அனந்த் வைத்தியநாதன் ரகசிய ஐடியா தந்தார். ‘பெண்கள் அணி… சாக்லேட் சீஸ்.. னு புரியாம பேசிக்கறாங்க. நாம அடிப்படை பொருள் மட்டும் வாங்குவோம். 

ஷாப்பிங் செய்ய ஆண்கள் அணியில் டேனியும் சென்றாயனும் தேர்வு செய்யப்பட்டார்கள். (‘சந்தைக்குப் போகணும். ஆத்தா வையும்’ என்று முன்னர் வசனம் பேசிய டேனியல் உண்மையிலேயே சந்தை செல்ல நேர்ந்தது). பெண்கள் அணியில் மமதியும் மும்தாஜூம் (வெளங்கிடும்). 

‘பிக்பாஸ் சந்தை’ என்றொரு அரங்கம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் விலைகள் எல்லாம் அடுத்த நூற்றாண்டிற்கானது. ஒரு பச்சை மிளகாய் ரூ.80-ஆம். சொல்ல முடியாது. விவசாயம் அருகி வரும் நிலையில், விவசாயிகள் புறக்கணிக்கப்படும் சூழலில் நாம் விரைவிலேயே இந்த விலைகளை எதிர்பார்க்கலாம் என்றுதான் தோன்றுகிறது. 

சென்றாயன் – டேனி கூட்டணி முதலில் களத்தில் இறங்கியது. அதிரடியாக பேரம் பேசினார் சென்றாயன். “நான்லாம் ஏரியாவுல பெரிய ஆள்ப்பா.. தெரியுமில்ல’ என்று கறாராக பேசி அதிக விலையைக் கொடுத்தார். “ஏ.. மொக்காச்சோளமாம்டா..’ என்று கிண்டலடித்தார் டேனி. ஒரு நாள் சமையலுக்கு ஒரு பாட்டில் நெய் வாங்குவதெல்லாம் ஓவர் இல்லையா சென்றாயன்?

அடுத்த அணியான மும்தாஜூம் மமதியும் ஷாப்பிங் மாலில் நுழையும் ‘கெத்துடன்’ கிளம்பினார்கள். ‘எலுமிச்சம் பழத்திற்கு காசு தர மாட்டேன்’ என்று தெய்வ திருமகள் விக்ரமாக மாறி, கடைக்காராரிடம் அலப்பறை செய்தார், மும்தாஜ். எலுமிச்சைக்கு காசு தராமல் ஏமாற்றிய உற்சாகத்தோடு இருவரும் வெளியே வந்தார்கள். ‘என்னங்க எடுத்துட்டுப் போன பணத்தையெல்லாம் அப்படியே கொண்டு வர்றீங்க?” என்று வாயைப் பிளந்தார், சென்றாயன். ‘நாங்க பெண்கள். சிக்கனமாகத்தான் இருப்போம்” என்று பெருமையாக சொன்னார், மமதி. சிறிது நேரத்திலேயே முகத்தில் கரி பூசப்படப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. 

இரண்டு அணிகளும் வாங்கிய பொருட்களை வீட்டில் உள்ளவர்கள் பார்வையிட்டார்கள். இரண்டு டிராலிகளில் எது ஆண் அணி தேர்வு செய்தது, பெண் அணி தேர்ந்தெடுத்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. டேனி மற்றும் சென்றாயன் கூட்டணி வாங்கியதில், அடிப்படை மளிகைப் பொருட்கள் இருந்ததோடு பழங்களும் இருந்தன. மும்தாஜ் – மமதி கூட்டணி வாங்கியதில் அரிசி கூடுதலாக இருந்தாலும் சமையலுக்கு மிக அடிப்படைத் தேவையான ‘உப்பு’ இல்லை. போலவே சர்க்கரையும். இந்த முக்கியமான காரணத்தினால் ஆண்கள் கூட்டணி வெற்றி பெற மும்தாஜ் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. பொருட்களை சிறப்பாக தேர்வு செய்த டேனியை அனைவரும் பாராட்டினார்கள். ‘சேனைக்கிழக்கு இருக்கும் போதே கண்டுபிடிச்சிண்டா.. உன் டிராலியாத்தான் இருக்கும்-னு’ என்றார், ஜனனி. 

ஒரு பூட்டப்பட்ட அறையில் இருக்கும் 16 பேர், அவர்களுக்குள் நடக்கும் ஈகோ, கோபம், நட்பு போன்றவை தான் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களின் தாரக மந்திரம். கமல் கூட கடந்த சீசனில் இதை, Commune Living என்றெல்லாம் சொன்னார். சென்ற சீசனின் இறுதியில் தான் விஷ்ணு விஷால் பட ப்ரோமோஷன், கபடி லீக் ப்ரோமோஷன் என வெளியில் இருந்து ஆட்கள் உள்ளே வந்தனர். ஆனால், இந்த சீசனின் ஆரம்பத்திலேயே விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சந்தைக்கடை என சொல்லி சிலரை உள்ளே அனுமதிக்கிறார்கள். நியாயமா ஆண்டவரே!.. சரி சரி, நாம் ஆட்டையைக் கவனிப்போம்

மும்தாஜ் ஷாப்பிங் சென்ற சமயத்தில் வீட்டில் அவருக்கு எதிரான உரையாடல்களும் வம்புப் பேச்சுகளும் நிகழ்ந்தன. ‘தனக்கான உணவை எடுத்து வைத்துக்கொள்ளாமல் எல்லோருக்கும் வாரி வழங்கி விட்டு பிறகு ‘எனக்கு சாப்பாடு இல்லை’ என்று ஏன் சீன் போட வேண்டும்?’ என்று புறணி பேசியவர், பெரும்பாலும் மும்தாஜூக்கு ஆதரவாக முன்பு பேசிய வைஷ்ணவி. ‘அனுதாபத்தை உண்டாக்குவதற்காக இப்படி நாடகமாடுகிறார்’ என்றார் பாலாஜி. மனிதர்களின் இன்னொரு முகத்தை அறிந்துகொள்வதற்கான தருணங்கள் இவை. 

பெண்களாக இருந்துகொண்டு சமையல் ஷாப்பிங்கில் தாங்கள் தோற்றதை மும்தாஜாலும் மமதியாலும் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. அதை விதம் விதமாக நியாயப்படுத்தினார்கள். ‘மார்க்கெட்ல ஒரே சத்தமா இருந்துச்சு’ என்றார்கள். சந்தைக்கடை அப்படித்தானே இருக்கும் அம்மணிகளா?’ 

இதைப் பற்றி டேனியிடம் வெளிப்படையாக வம்பு பேசிக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. “சமையலுக்கு அடிப்படைத் தேவையான உப்பை எடுக்கல. கேட்டா பாய்ஸ் டீம்ல இருந்து எடுத்துக்கலாம்னு நெனச்சோம்ங்கிறாங்க.. அந்த மரமண்டைக்குத்தான் தமிழ் தெரியல. கூடப்போனியே .. உனக்குமா தெரியாது? ரூல்ஸ்லாம் தெளிவாத்தானே சொன்னாங்க.. உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சும் ஏன் இங்க வரணும்.. சரி .. ஒரு காலத்துல நீ பேமஸா இருந்தே. இப்ப மறுபடியும் இங்க வந்திருக்கே. கேமை ஒழுங்கா ஆடிட்டு போ..ஏன் இத்தனை டிராமா?’ என்று சரமாரியாக பொங்கிக் கொண்டிருந்தார். வைஷ்ணவியைப் பார்க்கும்போது, முதல் சீஸனில் அங்கும் இங்குமாக மாற்றிப் பேசிய  ஜூலியின் நினைவு வராமல் இல்லை. 

‘மும்தாஜூக்காக தாஜ்மஹாலைக் கட்டினான்.. தாஜ்மஹாலுக்காக மும்தாஜை கட்ட முடியாது’ என்ற சென்ற நூற்றாண்டு ஜோக்கை சொல்லி தானே சிரித்துக் கொண்டார், பொன்னம்பலம். பழைய ஜோக் தங்கதுரைக்கு சரியான போட்டியாக வருவார் போலிருக்கிறது. ‘வீட்ல பாலிட்டிக்ஸ் ஆரம்பிச்சுடுச்சு’ என்று வழக்கம்போல தனியாக ரகசியம் பேசிக் கொண்டது யாஷிகா – ஐஸ்வர்யா கூட்டணி. 

இன்னொரு பக்கம் மமதியைப் பற்றி எரிச்சலுடன் புறணி பேசிக் கொண்டிருந்தார், பாலாஜி. ‘அவங்க நல்லவங்கதான். கூட இருக்கு பாரு.. இந்த தூய தமிழ்… அது பண்ற வேல. ‘காதல் மன்னன்’ யார்னு கமல் சார் கேட்டப்ப ‘நீங்கதான்’னு சொல்லுது. ‘அந்தப் பரிமாணத்துல…’ என்று மமதியின் தமிழை நக்கலடித்தார் பாலாஜி. 

வீட்டின் தலைவராக ஜனனியின் பொறுப்பு முடிவடைகிறது என்று அறிவித்தார் பிக்பாஸ். அனைவரும் எழுந்து நின்று பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர். 

அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது. இந்த இடத்தில்தான் கதையில் ஒரு பெரிய திருப்பத்தை கொண்டு வந்தார் பிக்பாஸ். கடந்த சீசனில் கூட இல்லாத அதிரடி மாற்றம் இது. ரகசிய வாக்கெடுப்பில் நித்யாவிற்கு எதிராக அதிக எண்ணிக்கை கிடைத்ததால் அவருக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டுமென்று எண்ணிய பிக்பாஸ், போட்டி எதுவுமின்றி நேரடியாக நித்யாவை ‘தலைவி’யாக அறிவித்தார். அடுத்த சிஎம் நாம்தான் என்கிற கனவில் ஒருவேளை இருந்திருக்கக்கூடிய மும்தாஜின் முகத்தில் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அப்பட்டமாகத் தெரிந்தது.

மனைவி தலைவியான குஷியை பாலாஜி அப்பட்டமாக வெளிப்படுத்தினார். நித்யாவிடம் சென்று வலிந்து வலிந்து கைகுலுக்கினார். (ப்பா… டேய். உலக நடிகன்டா). ‘தங்கச்சி.. நீதான் இப்ப தலைவர். இவனை என்ன வேணும்னா சொல்லலாம்” என்று டைமிங்காக கமெண்ட் அடித்தார், சென்றாயன். வைஷ்ணவியின் காதில் ரம்யா ஏதோ சொல்ல.. அரிதான புதிருக்கு விடை கிடைத்தது போல “ஓ…. ஓ…… ‘ என்று மிகையான பாவனையில் குரலை இழுத்தார் வைஷ்ணவி. ப்பா.. இந்தப் பெண்கள்!

‘இசை எங்கிருந்து வருகிறது?.. குறட்டையிலிருந்து’ என்று அனந்த் வைத்தியநாதனை.. மறுபடியும் ஓட்ட ஆரம்பித்தார் டேனி. மனிதர் இந்த முறை டென்ஷன் ஆகிவிட்டார். ‘என் தொழில் சம்பந்தப்பட்டது ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இங்க இருந்து நாளைக்கு வெளியே போனா.. இதையே வெச்சு யாராச்சும் கிண்டல் பண்ணா என்ன ஆவுறது. பிடிக்கலைன்னு சொல்லிட்டேன். விட்ரு’ என்ற அனந்தின் கோபத்தில் நியாயம் இருந்தது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘மச்சான்.. இசை காண்டாயிடுச்சு’ என்று மஹத்திடம் சொல்லிக்கொண்டிருந்த டேனி, தன் தவறை உணர்வதாக இல்லை. ‘அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களாமா.. இரு… தூங்கும் போது மூக்குல குச்சி விட்டுடறேன்’ என்று வயலன்ட் ஆனார், மஹத். ‘சூன்யக்கிழவி’ என்கிற பட்டப்பெயரை மாற்றும்படி டேனியிடம் பயங்கரமாக கெஞ்சிக் கொண்டிருந்தார், ரம்யா. (வெள்ளைப் பெயின்ட்டை மாத்தினாத்தான் அதைப் பத்தி யோசிக்க முடியும்). ‘மண்டகசாயம்’ என்கிற பெயர் ரித்விகாவிற்கு ஓகேதானாம். ‘இதெல்லாம் ரிஜிஸ்டர் ஆயிடுச்சு. மாத்த முடியாது’ என்று ஜனனி சொல்ல.. ‘ஏ .. இவ விஷபாட்டில் இல்லை. விஷ அண்டா’ என்றார்கள்.
சமையலுக்கு காய் நறுக்கிக் கொண்டிருந்த பாலாஜி, நித்யாவிடம் ஆதரவாக பேசிக்கொண்டிருந்தார். ‘மும்தாஜ் காண்டாயிட்டாங்க..’ என்று புதிய தலைவியிடம் ஒட்டிக்கொண்டார். 

தன் பட்டப் பெயர் குறித்து அனந்த் தெரிவித்த ஆட்சேபனையை டேனி மற்றும் பாலாஜியால் ஏற்க முடியவில்லை. ‘இதை கமல் முன்னாடியே சொல்லியிருக்கலாமே, நேக்கு பிடிக்கலைன்னு” என்று அனந்த்தின் மொழியில் பேசிக் காட்டினார் பாலாஜி. 

நாமினேஷன் படலம் ஆரம்பமாகியது. அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்காக 2 பேர்களை ஒவ்வொரு நபரும் முன்மொழிய வேண்டும். ஆச்சரியகரமாக பொன்னலம்பலத்தின் பெயர் அதிகம் அடிபட்டது. ஆட்சேபிக்கத்தக்க மொழியில் அதிகம் பேசுகிறாராம். மமதி மற்றும் மும்தாஜின் பெயர்கள் அதிகம் சொல்லப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. பெரியம்மா+சின்னம்மா கூட்டணி மாதிரி இவர்கள் மக்களின் வெறுப்பை நன்றாகவே சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். 

டேனியலின் பெயரை அனந்த் சொல்லியதன் காரணம் வெளிப்படையாக நமக்குத் தெரியும். ‘பொண்ணுங்க பின்னாடி சுத்தறான்’ என்று சென்றாயனுக்கான காரணத்தை மஹத் சொன்னது அநியாயம். (தப்பு.. தப்பு… நீ சொல்லக்கூடாது அதை!). அனந்த்தின் பெயரை சிலர் முன்மொழிந்ததின் காரணம் ‘தலைமுறை இடைவெளி’ என்று தோன்றுகிறது. குறிப்பாக டேனி கூட்டணிக்கு இவரைப் பிடிக்கவில்லை போல. 

ஆக.. பொன்னம்பலம், மும்தாஜ், அனந்த், மமதி ஆகியோர் நாமினேஷன் பட்டியலிற்குள் வந்தனர். ‘கறை நல்லது’ என்பது போல ‘நாமினேஷன் நல்லது’ என்கிற தத்துவத்தை சொன்னார், அனந்த். ‘உங்களுக்கு நிறைய ரசிகர் வட்டம் இருக்குல்ல’ என்று இவர் பொன்னம்பலத்திடம் கேட்க அவரும் பெருந்தன்மையாக ‘ஆமாம்’ என்று ஒப்புக்கொண்டார். “மும்தாஜூக்கும் நிறைய ரசிகர்கள் இருக்காங்க’ என்றார் அனந்த். இதன் மூலம் பொன்னம்பலமும் மும்தாஜூம் காப்பாற்றப்பட்டுவிடுவார்கள் என்பது அனந்த்தின் யூகம். ‘மேக்ஸிமம் நாலு வாரம்தான் இருப்போம்’ அவர் என்றதை ஆமோதித்தார் பொன்னம்பலம்.

மும்தாஜின் தொழுகையுடனும் இளம் போட்டியாளர்களின் கும்மாளத்துடனும் இன்றைய நாள் முடிந்தது. 

பெரும்பாலோனாரால் வெறுக்கப்பட்ட நித்யா வீட்டின் தலைவியாக்கப்பட்டதுதான் இன்றைய ‘ஆன்ட்டி கிளைமாக்ஸ்’. இதன் மூலம் மேலும் பல யுத்தங்கள் நடக்கும் என்று பிக்பாஸ் எதிர்பார்க்கிறார் போல.  பிக்பாஸ் போட்டியாளர்கள் நினைப்பது இருக்கட்டும், நித்யா தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன் 

சுரேஷ் கண்ணன்