Published:Updated:

லேடீஸ் சேலைதான் கட்டோணும்... வேலைலாம் பாக்கோணும்! - பிக்பாஸ் அழிச்சாட்டியங்கள் #BiggBosstamil2

லேடீஸ் சேலைதான் கட்டோணும்... வேலைலாம் பாக்கோணும்! - பிக்பாஸ் அழிச்சாட்டியங்கள் #BiggBosstamil2
லேடீஸ் சேலைதான் கட்டோணும்... வேலைலாம் பாக்கோணும்! - பிக்பாஸ் அழிச்சாட்டியங்கள் #BiggBosstamil2

பிக் பாஸ் வீட்டின் இன்றைய திருப்பள்ளியெழுச்சிப் பாடலாக ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்’ என்றோ அல்லது ‘எங்க முதலாளி.. தங்க முதலாளி’ என்றோ போட்டிருக்கலாம். ஏனெனில் இன்றைய சவாலின் தன்மை அவ்வாறாக இருந்தது. எஜமானர்கள் vs உதவியாளர்கள்.

'கலகலப்பு' படத்தின் நகைச்சுவைக் காட்சியில் சந்தானம் தன் வீட்டு வேலைக்காரர்களை குழப்பமாக வேலை வாங்குவார். “டேய் திமிங்கலம்.. பண்ண வீட்ல இருக்கற மூட்டையெல்லாம் எடுத்து தோட்டத்துல போட்டுடு… ‘மண்டகசாயம்… நீ என்ன பண்றே…தோட்டத்துல இருக்கிற மூட்டையெல்லாம் எடுத்து பண்ண வீட்ல வைச்சுடு” என்று அலப்பறை செய்வார். “ஏன் இப்படி பண்றீங்க?” என்று கேட்கப்படும் போது ‘இவன்களுக்கு என்ன வேலை கொடுக்கணும்னே தெரியலைடா” என்பார். இன்று பிக்பாஸ் வீட்டு ஆண்களின் அலப்பறைகள் ஏறத்தாழ இப்படித்தான் இருந்தது. விரிவாகப் பார்ப்போம்

காலையில் ‘வாட் எ கருவாட்’ பாடல் ஒலித்தது. ஏறத்தாழ ஐஸ்வர்யா மட்டுமே தினமும் வந்து முழு எனர்ஜியுடன் ஆடி ஓவியாவை நினைவுப்படுத்துகிறார். 

காலை எட்டரை மணிக்கே பிக்பாஸ் வீட்டில் ஏழரை துவங்கியது. தன் பங்கு உணவை மும்தாஜ் மற்றவர்களுக்குத் தந்தாலும் அவர்கள் ‘வேண்டாம்’ என்று மறுக்க வேண்டுமாம். இது மமதி வழியாக வந்த தகவல் என்றும், இதை எல்லா உறுப்பினர்களுக்கும் பரப்ப வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ‘இதை கேப்டன்தானே  சொல்லணும்” என்று சரியான பாயின்ட்டை பிடித்தார் வழக்கறிஞர் ஜனனி. என்ன இருந்தாலும் முன்னாள் தலைவர் அல்லவா?! அக்காவுக்கு அரசியல் ஞானம் கூடியிருக்கிறது. 

சில தரக்குறைவான வார்த்தைகளை பொன்னம்பலம் சொன்னது குறித்து ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் வழக்கம் போல் தனியாலோசனையில் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். மூச்சுக்கு முந்நூறு முறை ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த ஆசாமி, இன்னொரு புறம் உண்மையான வில்லனாக இருப்பார் போலிருக்கிறதே.

அணிகளைப் பிரிக்கும் வரை, வைஷ்ணவி, மமதி, டேனி ஆகியோர் சமையல் வேலையைப் பார்க்கலாம் என்கிற தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. ‘உணவுப் பொருட்களை அவர்களைக் கேட்காமல் எதையும் எடுக்க வேண்டாம்” என்கிற வேண்டுகோள் கட்டளையாக வைக்கப்பட்டது. 

“எனக்கே உன்னை அத்தனை பிடிக்குதே.. என் தங்கச்சிக்கு பிடிக்காமலா போகும்” என்று பாலாஜியைக் கொஞ்சிக் கொண்டிருந்தார் சென்றாயன். “என்னடா ஒரு ஆர்ட்டிஸ்டை மதிக்க மாட்டேன்கிற?” என்ற பாலாஜியை ‘நீ ஆர்டிஸ்ட்லாம் இல்ல. இங்க ஒரு போட்டியாளர்.. அவ்வளவுதான்” என்ற சென்றாயனின் கிண்டலை அருகிலிருந்த நித்யாவும் வரவேற்றார். ‘போய் குளிங்க தம்பி..’ என்ற சென்றாயனின் அதே வார்த்தைகளை நித்யாவும் சொன்னார். (ஒருபுறம் முறைத்து மறுபுறம் சிரிக்கும் பாலாஜி மற்றும் நித்யாவின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. லெப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் கைகாட்டி நேராக சென்று குழப்புவதில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.)

நீச்சல் குளத்தின் அருகே அனைத்துப் போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டியிருப்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். பொன்னம்பலம் பேசிய சர்ச்சையான வார்த்தைகள் குறித்த உரையாடல் மறுபடியும் துவங்கியது. இந்த விஷயத்தில் பெண்களின் கோபம் நியாயமானது என்றாலும் இது குறித்து வைஷ்ணவி சொன்ன கருத்தின் பகுதி பிற்போக்குத்தனமானது. 

‘இந்த பொன்னம்பலம், சென்றாயன் இவங்கள்லாம் கிராமத்துக்காரங்க. அவங்களுக்கு exposure கிடையாது. முதல் தடவைன்றதால விட்டுட்டேன். அடுத்த முறை நேருக்கு நேராக கேட்பேன்’ என்றார். பெண்கள் குறித்த கொச்சையான கிண்டலில் நகரம் என்ன, கிராமம் என்ன.. ஒரு பத்திரிகையாளர் இப்படி பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. ‘எனக்கு கோவம் வருது… உங்க பொண்ணு கிட்ட இப்படித்தான் பேசுவீங்களா –ன்னு கேட்டுடுவேன்” என்று கொதித்தார் ரம்யா. சென்றாயன் வெள்ளந்தியாக இருப்பதால் அவருக்கு மட்டும் மன்னிப்பு தரப்பட்டது. (அப்போதுதான் சரியாக பொன்னம்பலமும் சென்றாயனும் இவர்களைக் கடந்து சென்றனர்). 

“இந்தச் சம்பவம்.. சம்பவம்.. ன்றீங்களே.. இன்னாது அது?” என்று நாம் குழம்பிக் கொண்டிருந்த போது இந்தப் பஞ்சாயத்தை மும்தாஜிடம் கொண்டு சென்றார் வைஷ்ணவி. “நேத்து நாங்க பெட்ல உக்காந்து பாய்ஸ் கிட்ட பேசிட்டிருந்தோம். அப்ப ஐஸ்வர்யா வந்து.. பொன்னம்பலம் கிட்ட.. ‘இந்த பெட்ல வந்து உக்காருங்க..பேசலாம்’ ன்ற மாதிரி சொன்னா. அதுக்கு அவர்.. ‘எனக்கு ஏற்கெனவே நிறைய குழந்தைங்க இருக்கு. அங்க வந்தா இன்னும் குழந்தைங்க வந்துடும்’னு சொல்றாரு” என்றவுடன் மும்தாஜ் அதிர்ச்சியில் வாய் பிளந்தார். “இது பத்தி நான் பேசறேன். எல்லோரும் போனா பிரச்னையாயிடும்’ என்றார். மும்தாஜின் அணுகுமுறை சமயங்களில் முரட்டுத்தனமாக இருந்தாலும் பல சமயங்களில் வெளிப்படை நேர்மையுடன் இருக்கிறது. 

சொன்னது போலவே பொன்னம்பலத்துடன் அமர்ந்து இது குறித்து கேட்டார் மும்தாஜ். ‘நேத்தா.. நானா.. “ என்று தூக்கத்திலிருந்து விழித்தது போல் பாவனையாக பேசிய பொன்னம்பலம் பிறகு சொன்னதன் சுருக்கம் இதுதான். ‘அன்னிக்கு பொண்ணுங்க நடுவுல பசங்க படுத்துக்கிட்டு ஒரே கலாட்டா.. சிரிப்பு.. தூங்கவே முடியல… நமக்கு தூங்க டைம் கிடைக்கறதே கொஞ்சம்தான்.. ஸோ.. ஒரு வாத்தியார் மாதிரி சொன்னேன். எந்த கெட்ட எண்ணமும் கிடையாது. எங்க வீட்டு பசங்களை கெட்ட வார்த்தைல திட்டுவேன். அடங்கிடுவாங்க.. (?!) இவங்களை அப்படி சொல்ல முடியாது. யார் மனசாவது புண்பட்டுதுன்னு தெரிஞ்சா தலை குனிஞ்சுடுவேன்’ என்றவர் பிறகு, ‘படுத்தே விட்டேன்யா’ என்கிற புலிகேசி கதையாக ‘கால்ல விழச்சொன்னா கூட விழுந்துடுவேன்’ என்றார். ‘புரியுது.. மத்தவங்க சுதந்திரத்தையும் பார்க்கணும் இல்லையா.. வார்த்தைகள்ல கவனமா இருக்கணுமே சார்..’ என்று கனிவாக இந்த விஷயத்தைக் கையாண்டார் மும்தாஜ். 

தூக்கம் கலைந்த எரிச்சலில் சொல்லியிருந்தாரோ அல்லது ஆண்கள் பெண்களோடு கும்மாளமடிக்கும் எரிச்சலில் சொல்லியிருந்தாரோ, பொன்னம்பலம் சொன்னது மிகவும் தவறான, சர்ச்சைக்குரிய வார்த்தைகள். அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று கூட மன்னிப்பு கேட்கலாம். இந்த விஷயம் அவருடைய நாமினேஷனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

பிறகு துவங்கியது விவகாரமான லக்ஸரி டாஸ்க். புதிய தலைவி நித்யா குறிப்புகளை வாசிக்கத் துவங்கினார். ஆனால் ஜனனியிடம் இருந்த ஆளுமைத்திறன் கூட இவரிடம் இல்லை. இவர் பாட்டுக்கு வாசித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் குறுக்கிட்டு சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். போட்டியாளர்களின் விரோதத்தை மேலும் சம்பாதித்துக் கொள்ள வேண்டாமே என்கிற நோக்கில் நித்யா பொறுமையைக் கையாள்கிறாரா என்றும் தெரியவில்லை. 

வீட்டின் உறுப்பினர்கள் ‘எஜமானர்கள்’ மற்றும் ‘உதவியாளர்கள்’ என்று இரண்டு அணிகளாகப் பிரிக்கப்படுவார்கள். (வேலைக்காரர்கள் என்கிற சொல்லை பிக்பாஸ் பயன்படுத்தவில்லை. என்னவொரு கவனம்!) எஜமானர்கள் சொல்லும் அனைத்துப் பணிகளையும் உதவியாளர்கள் செய்ய வேண்டும். இதற்கான மதிப்பெண்கள் 1600 என்றதும் அனைவரும் மகிழ்ந்தனர். 

அதற்குப் பிறகுதான் பெண்களுக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. ஷாப்பிங் சவாலில் ஆண்கள் அணி வெற்றி பெற்றதால், வீட்டின் ஆண்கள் ‘எஜமானர்களாக’ இருப்பார்கள். பெண்கள் ‘உதவியாளர்களாக’ இருப்பார்கள். வீட்டின் அனைத்து வேலைகளையும் பெண்கள்தான் செய்ய வேண்டும். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த பல குடும்பத்தலைவிகள், “பிக்பாஸ் வீட்டில் இது ஒரு நாளைக்குத்தான்.. நம்ம வீட்டில் காலம் பூரா இதுதானே.. என்று சொல்லியடி தங்கள் கணவனின் முகத்தில் இடித்திருக்கக்கூடும்).

தங்களுக்குச் சாதகமாக இருந்த இந்த அறிவிப்பைக் கேட்டதும் ஆண்கள் உற்சாகமாக குதிக்க, பெண்கள் அணி உற்சாகம் இழந்தது. குறிப்பாக மும்தாஜூம் மமதியும் ஏமாற்றமடைந்தனர். பெண்கள் அணி தோல்விக்கு இவர்கள்தான் காரணம் என்பதாக இருக்கும். 

அறிவிப்பின் துவக்கத்தில் ‘வீட்டை நிர்வகிக்கும் திறமை இருப்பது ஆண்களுக்கா, பெண்களுக்கா’ என்று சொற்கள் வரும் போது, ‘மறுபடியும் ஒரு சான்ஸ் கிடைச்சுது.. பார்த்தீங்களா..’ என்று மகிழ்ச்சியான தோரணையை வெளிப்படுத்திய மமதி, அறிவிப்பின் முடிவில் எரிச்சலடைந்தார். “என்ன வேலை சொன்னாலும் செய்யணும்… கை கால் அமுக்கி விடணும்” என்று மஹத் ஏழரையை ஆரம்பிக்க, “ஆமாம்.. செய்யத்தான் வேணும்” என்று ஒத்து ஊதினார் வைஷ்ணவி. (இவங்க புத்திசாலியா.. இல்ல புத்திசாலி மாதிரி நடிக்கறாங்களேன்னு தெரியல). 

ஆனால் இதைக் கறாரான தொனியில் முதலிலேயே மறுத்தார் மமதி. ‘நம்ம வீ்ட்டிலும் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். அந்தப் பணிகளுக்கென சில எல்லைகள் இருக்கின்றன. என் கணவர் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளைத் தவிர இதர ஆண்களை தொடுவது போன்வற்றை விளையாட்டுக்காக கூட நான் செய்ய மாட்டேன்” என்று தன் ஆட்சேபத்தை முதலிலேயே தெளிவுப்படுத்தியது சரியான விஷயம்தான். ஆனால் கூடவே இணைத்த விஷயம்தான் சற்று முரண். ‘நான் தமிழப் பெண். தமிழ் பண்பாட்டில் வளர்ந்தவள்’ என்றெல்லாம் நாடகத்தனமாக சொல்லியதை தவிர்த்திருக்கலாம். ‘ஐயோ.. நான் தமிழன்.. ஐயோ.. நான் தமிழங்கோவ்..’ என்று கவுண்டமணி கூவியதுதான் நினைவிற்கு வருகிறது. ‘எல்லோருமே தமிழ் பெண்தான்’ என்று எரிச்சலாக முணுமுணுத்தார் பாலாஜி. தமிழ் பண்பாடு என்றெல்லாம் பேசிய மமதி, அப்போது அணிந்திருந்த உடை அதைப் பிரதிபலிக்கவில்லை என்பது மெல்லிய நகைமுரண்.

‘உதவியாளர்களுக்காக’ பிரத்யேக உடையாக புடவைகள் தரப்பட்டன. ‘ஐயோ… புடவையா..” என்று அலறினார்கள்.. ‘தமிழ்’ பெண்கள்.  ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண் உதவியாளர் என்கிற முறையில் ஒரு பெண் அதிகமாக இருந்தார் போலிருக்கிறது. ‘யாஷிகா மற்றும் ஜனனியை என்னோட உதவியாளர்களா வெச்சிக்கறேன்’ என்றார் மஹத். இரண்டு பெண்களின் நடுவில் இருப்பதை மஹத் ஆரம்பித்திலிருந்தே ஒரு கெட்ட பழக்கமாக வைத்திருக்கிறார். 

‘அழுக்குச்சட்டை போட்டாலும் அழகாய்த் தோன்றும் ஆண்மகன்’ என்கிற அஜித் பாடல் போல உதவியாளர் உடையிலும் தேவதையாக மிளிர்ந்தார் ஐஸ்வர்யா. இவர் கண்ணாடிக் கதவுகளை துடைத்து சிரமப்படும் போது ஆர்மி மெம்பர்களின் கண்களில் ரத்தம் வந்திருக்கும். 

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட சந்தானத்தின் காமெடி மாதிரி ஆண்களின் அலப்பறை ரொம்பவும் ஓவராக இருந்தது. ‘தண்ணி எடுத்துட்டு வா.. கிளாஸை எடுத்துட்டு போய் வை.. வாயைத் துடைச்சு விடு’ என்றெல்லாம் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். இதில் மஹத்தின் பங்கு அதிகம். ‘எங்களுக்கு இந்த டாஸ்க் வரும் போது நாங்க செத்தோம்’னு நெனக்கறேன்” என்று யாஷிகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மஹத். (அந்தப் பயம் இருக்கட்டும்.. மகனே..). ‘எங்களுக்கும் காலம் வரும்’ என்று எச்சரித்தார் துணி துவைத்துக் கொண்டிருந்த யாஷிகா. “ஆனா அதை ரொம்பவும் சந்தோஷமா செய்வேன்” என்று அசடு வழிந்தார் மஹத். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் ஒரு நகைச்சுவைக்காட்சிதான் நினைவிற்கு வருகிறது.  ‘நான் முத்தம் கொடுக்க வந்தா கோச்சுக்கறியே… நீ முத்தம் கொடுத்துப் பாரு. நான் கோச்சுக்கவே மாட்டேன்’ என்று ஒரு பெண்ணிடம் சொல்வார் கலைவாணர். மஹத்தின் லாஜிக்கும் இப்படித்தான் இருக்கிறது. 

சென்றாயனின் அலப்பறைகள் தனித்தன்மையுடன் இருந்தன. டயரை வண்டியாக வைத்து விளையாடும் சிறுவனைப் போல நீச்சல் டியூபை உருட்டிக் கொண்டே அவர் செல்ல, விசிறியால் விசிறிக் கொண்டே பின்னால் ஓடி வந்தார் ரித்விகா. பாவம். படுக்கைகளை சரி செய்வது, துணிகளை துவைத்து, அயர்ன் செய்வது என்று பல்வேறு விதமான வேலைகளைச் சொல்லி ஆண் உறுப்பினர்கள் பெண்களை பெண்டு நிமித்திக் கொண்டிருந்தார்கள். வீட்டில் செல்லமாக வளர்ந்த இளம் பெண்களுக்கு, வேலைக்காரர்களின் சிரமங்கள் இப்போது புரிந்திருக்கலாம். 

‘மகளிர்களே.. எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று காமிராவைப் பார்த்து பாதுகாப்பாக சொன்னார் சென்றாயன். ‘டேய்.. இது கேம்.. இதைப் போய் சீரியஸா எடுத்துக்கிட்டு.. என்று எரிச்சலானார் மஹத். காஃபி கோப்பையை யாஷிகா பிடித்துக் கொண்டிருக்க, மஹத் சொல்லும் போதெல்லாம் வாயருகே எடுத்துச் செல்ல வேண்டுமாம். வாழ்வுதான்!.

சென்றாயனை அழைத்து வந்த ரித்விகாவை நோக்கி, ‘நாயை வாக்கிங் கூட்டிட்டு போய் வர்றாங்க’ என்று கிண்டடிலத்தார் பாலாஜி. ‘செயினை எடுத்து ரெடியா வெச்சுக்கமா. உங்க ஐயாவை வாக்கிங் கூட்டிட்டு போகணும்’ என்றும் பிறகு கிண்டலடித்தார்கள். சென்றாயன்களால் முதலாளி ஆக முடியாது போலிருக்கிறது. 

வழக்கம் போல் நித்யாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தார் பாலாஜி. குனிந்து படுக்கையை சரி செய்து கொண்டிருந்த யாஷிகாவை, மஹத் வில்லங்கமாக பார்க்க.. “என்னடா பண்றே” என்று அதிர்ச்சியானார் பாலாஜி. ‘இடுப்பு.. பார்க்க டெம்ப்டிங்கா.. இருந்தது’ என்று வில்லங்கமாக பதில் சொன்னார் மஹத். 

வீட்டின் பெண் பணியாளர்கள் ‘எல்லாவற்றிற்கும்’ தயாராக இருப்பார்கள் என்பது போல் கிண்டலடித்து பல ஜோக்குகளும் கதைகளும் ஆண்டாண்டு காலமாக வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கதையாடல்கள் பெண் பணியாளர்களின் மீது நடைமுறையிலும் மலினமான பார்வையை உருவாக்கும் என்கிற விமர்சனமும் பல காலமாக இருக்கிறது. இந்தச் சூழலில் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளும் இதை வழிமொழிவது போன்ற taskகளை வைப்பது முறையானதல்ல. (சொன்னால் கேட்கவா போகிறார்கள்!).

‘உதவியாளர்கள்’ தங்குவதற்கான இடத்தை ஜனனியும் ரித்விகாவும் சுற்றிப் பார்த்தார்கள். அந்த அறையில் குப்பைகள் செயற்கையாக இறைத்து வைக்கப்பட்டிருக்க, உறங்குவதற்கு ஒயர் கட்டில்கள் இருந்தன. மும்தாஜிற்காக ஒன்றில் மட்டும் மெத்தை. ‘காஸ்ட்லி’ உதவியாளர் போல. ‘பட்ட காலிலேயே படும்’ என்பது போல யாஷிகாவின் அதே கையில் அடிபட, மஹத், ஷாரிக் அணி பதறிப் போய் உதவி செய்தது. ‘திடீர்’ மூலிகை வைத்தியராக மாறிய பொன்னம்பலம் தன்னிடமிருந்த மருந்து ஒன்றை தந்து ஆறுதல் சொன்னார். 

‘மலே.. மலே… என்று ஒரு காலத்தில் ஆடிய மும்தாஜ், இப்போது மலை மலையாக துணிகளை மாங்கு மாங்கென்று துவைத்துக் கொண்டிருந்தார். ஷாரிக் மற்றும் மஹத்திற்கு உணவு ஊட்டிய மும்தாஜ், தனக்கும் அது போல் சென்றாயன் கேட்க வேண்டா வெறுப்பாக உணவைத் திணித்தார். மும்தாஜிடம் ‘லவ் யூ’ என்றாராம் மஹத். இது குறித்து ஜாலியாக சிணுங்கிக் கொண்டிருந்தார் மும்தாஜ். அவரே நடித்திருந்த ‘இனி..எண்ட மாநிலம் கேரளம்’ என்கிற விவேக்கின் காமெடிதான் நினைவிற்கு வந்தது. இந்த task-ஐ பயன்படுத்திக் கொண்டு ஷாரிக்கின் கைவிரல்களுக்கு இதமாக சொடக்கு எடுத்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. பாலாஜியின் விரல்களுக்கு நித்யா… (நடுவுல இவங்க இம்சை வேற).

சென்றாயனை நீச்சல் குளத்தில் தள்ளிவிட முயன்று தோற்றுப் போனார் மும்தாஜ். ‘டம்பிள்ஸ்’ எடுப்பதைக் கூட ஆள் வைத்துதான் செய்கிறார் சென்றாயன். வித்தியாசமான ‘வொர்க்அவுட்’

ஆண்களின் அலப்பறைகள் சற்று எல்லை மீற, மும்தாஜூக்கு பிரஷர் ஏறியது. ‘இன்னிக்கு ஒருநாள்தான்க்கா…’ என்று அசலான வேலைக்காரியாக மாறிப்போனார் வைஷ்ணவி. மஹத்திற்கு செய்த சில பணிவிடைகளை சென்றாயனுக்கு செய்யத் தயாராக இல்லை ஜனனி. “உங்களைப் பார்த்து மத்தவங்களும் செய்யச் சொல்றாங்க’ என்று புகார்கள் எழுந்தன. ‘செருப்பைத் துடைக்கறது.. எடுத்துட்டு வர்றச் சொல்றது’ இதெல்லாம் வேண்டாமே’ என்று ஆட்சேபித்தார் நித்யா. 

லக்ஸரி மதிப்பெண்களை இழந்து விடக்கூடாது, அதனால் உருவாகும் பாதிப்பு அனைவருக்கும் ஏற்படும் என்கிற கவனம் பெண்களிடம் இருந்தாலும், ஆண்களின் சற்று மிகையான எல்லை மீறல்கள் அவர்களுக்கு ஆட்சேபணைகளைத் தந்தது சரியான விஷயம்தான்.

ஆனால் ஆண்களில் சிலர் இதை ஒப்புக் கொள்ளவில்லை. குறிப்பாக மஹத்தும் பாலாஜியும், “இது டாஸ்க்தானே.. ஏன் எரிச்சல்படணும்’ என்றெல்லாம் குதித்தனர். மும்தாஜிடம் சில பணிகளை சொல்லத் தயங்கும் பாலாஜி, நித்யாவை மட்டும் உரிமையுடன் ‘வெளியே போ…’ என்று அதட்டிக் கொண்டிருந்தார். ‘என்னை ஒரு சக போட்டியாளரா மட்டும்தானே பார்க்கணும்” என்று முன்னர் முழங்கியதும் இதே பாலாஜிதான். 

‘இது task என்றாலும் கூட ஆட்சேபத்துக்குரிய சில பணிகளை என்னால் செய்யவே முடியாது’ என்று மும்தாஜ் பிடிவாதமாக இருந்தது சரியானதே. போட்டி என்பதைத் தாண்டி இது சுயமரியாதை தொடர்பானதும் கூட. ‘துணி துவைப்பது போன்ற கடுமையான வேலைகள் எத்தனை இருந்தாலும் செய்கிறேன். ஆனால் ஆண்களைத் தொடுவது போன்ற வேலைகளைச் செய்ய மாட்டேன்’ என்றார் மும்தாஜ். ‘நான் தமிழ்ப் பொண்ணு..’ மும்பையா இருந்தாலும் இவங்களும் தமிழ்ப்பொண்ணு’’ என்று மறுபடியும் பண்பாட்டுச் சிகரமாக இம்சைப் படுத்திக் கொண்டிருந்தார் மமதி. 

இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் இந்த விஷயத்தை ஜாலியாக எடுத்துக் கொண்டு விட, மும்தாஜ், மமதி போன்றவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. “ஏன் இவங்க புரிஞ்சுக்க மாட்றாங்க’ என்று அலுத்துக் கொண்டார் டேனி. ‘எங்களுக்கு இந்த டாஸ்க் வரும் போது என்ன வேணா செய்யத் தயாராக இருக்கிறோம்’ என்று இப்போதே ஆர்வமாக இருக்கிறார் மஹத். 

இத்தனைக் கலாட்டாக்களுக்கு இடையிலும் “ஏம்ப்பா.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெண் உதவியாளர்னு சொல்றீங்க.. எனக்கு யாருமே இல்லையே’ என்று கவலைப்பட்டார் பொன்னம்பலம். மஹத்திடமிருந்து ஜனனியைப் பிரித்து பொன்னம்பலத்தின் உதவியாளராக அனுப்புவதென்று தீர்மானிக்கப்பட்டது. (அப்ப.. ஒரு ஆள் எக்ஸ்ட்ரா இருக்குன்னு பயபுள்ள முன்ன பொய் சொல்லியிருக்கு போல). யார் யாருடன் இணக்கமாக, பிரச்னையின்றி இருக்க முடியுமோ, அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற சமாதான உடன்படிக்கையும் ஆண்கள் தரப்பிலிருந்து வந்தது. 

ஊர் தீ பற்றி எரிந்தாலும் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார் ஷாரிக். ‘மும்தாஜ் உடனே டென்ஷன் ஆயிடறாங்க” மமதிதான் மும்தாஜை கெடுக்கிறாங்க.” என்றெல்லாம் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசி விட்டு.. ‘என்னை மறக்க மாட்டேல்ல’ என்று ஐஸ்வர்யாவிடம் பேசிக் கொண்டிருந்தார். 

“உங்க வீட்டு வேலைக்காரங்க கிட்ட இப்படித்தான் கேட்பீங்களா.. ஊட்டி விடறது.. வாயைத் துடைத்து விடறது’-ன்னு என்று மும்தாஜ் தரப்பிலிருந்து வருகிற ஆட்சேபம் நியாயமானது.  ‘இது லக்ஸரி டாஸ்க்’-னு ஏன் இவங்களுக்குப் புரிய மாட்டேங்குது’ என்று அலுத்துக் கொண்டார்கள் ஆண்கள். நுண்ணுணர்வு, சுயமரியாதை என்று ஒரு மனிதனின் அனைத்து ஆதாரமான விஷயங்களையும் முதலாளித்துவ சமூகம் அழித்து அவர்களை அடிமைகளாக மாற்றி விட முடிகிறது என்பதே இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் மறுபடியும் உணரும் பாடம். 

கட்டிப்பிடிடா , மல மல போன்ற பாடல்களுக்கு ஆடிய மும்தாஜ், இதில் சில விஷயங்களுக்கு அதீதமாக கோபப்படுவது ஏன் என்றுகூட சிலருக்குத் தோணலாம். ஆனால், மும்தாஜ் அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தார். " சினிமாவில் நான் செய்தது எனக்குத் தரப்பட்டிருந்த கதாப்பாத்திரம். இங்கு நான் மும்தாஜ். இதை செய்ய முடியாது" என்றார் தீர்க்கமாக.

கனன்று கொண்டிருந்த நெருப்பை வேகமாக எரியச் செய்வதற்கான வேலையில் இறங்கினார் பிக்பாஸ். வாக்குமூல அறைக்கு டேனியலை அழைத்து ‘இந்த வீட்டின் உதவியாளர்களில் எவர் தங்களின் பணியைச் சரியாக செய்யவில்லை’ என்பதை மற்ற ஆண்களிடம் ஆலோசித்து காமிரா முன்னால் தெரிவிக்க வேண்டும் என்றார். அதன்படி கலகக்காரர்களாக இருந்த மும்தாஜ் மற்றும் மமதியின் பெயர்கள் சொல்லப்பட்டன. ‘வேலை செய்யற மத்தவங்களையும் இவங்க கெடுக்கறாங்க’ என்கிற புகாரும் தெரிவிக்கப்பட்டது. 

மும்தாஜ் தன்னிடம் ‘மூஞ்சைக் காண்பிக்கிறார்’ என்று வருத்தப்பட்டார் மஹத். வைஷ்ணவி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மும்தாஜ் இந்த விஷயத்தை மிகையாக்குகிறார் என்று இளம் பெண்கள் நினைக்கிறார்கள். 

வீட்டின் உதவியாளர்கள் அனைவரும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து அவரவர்களின் ‘ஐயாக்கள்’ செய்த அலப்பறைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘டான்ஸ் ஆடச் சொல்றாரு… ஊட்டி விடச் சொல்றாரு.. என்கிற புகார்களுக்கு மத்தியில் ‘எங்க ஐயா.. தங்கமானவரு.. ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்றாரு.. அடுத்த மாசம் சம்பளம் போட்டுத்தர்றேன்னு சொல்லியிருக்காரு’ என்கிற ஆதரவான குரல்களும் ஜாலியாக எழுந்தன. 

ஐயாக்களைப் பற்றி பேசும் போது “டேனியை அவன் இவன்’ என்று பேசலாம் இல்லையா… பின்னாடி பேசும் போது அப்படித்தானே பேசுவாங்க’ என்றார் ரம்யா. என்னவொரு சரியான லாஜிக்! அந்தச் சமயத்தில் சரியாக உள்ளே வந்த டேனி.’ எல்லாத்தையும் பெருக்குங்க’ என்றது டைமிங் காமெடி.

உறங்கும் போது அணிவதற்கான உடையை மாற்றாமல், புடவையோடு அப்படியே தூங்க முடியாது என்று மும்தாஜின் அடுத்த ஆட்சேபணை எழுந்தது. ‘மார்க் போயிடும்.. மார்க் போயிடும்’ என்று இதர பெண்கள் மும்தாஜை சமாதானப்படுத்த முயன்றாலும் அவர் தன் நிலையில் உறுதியாக இருந்தார்.  

மும்தாஜ் என்றால் பிக்பாஸிற்கு சற்று நடுக்கம்தான் போல. வெங்காயம் நறுக்கும் சவால், யாஷிகாவிற்கும் டேனிக்கும் முன்பு தரப்பட்ட போது, அவர்கள் அதிகாலை வரைக்கும் வெட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து பரிதாபப்பட்டு ‘என்ன வந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ என்று அதை நிறுத்தச் சொன்னார் மும்தாஜ்.. மற்றவர்களை கறாராக அணுகும் பிக்பாஸ் இதை ஆட்சேபித்தது போல் தெரியவில்லை. ‘ஆண்டவர்’ விசாரணயிலும் இந்த விஷயம் வரவில்லை.

மும்தாஜை சமாதானப்படுத்த வந்தார் ‘தலைவி’ நித்யா. ரொம்பவும் பலவீனமான தலைவி. என்றாலும் சமாதானம் ஆகவில்லை மும்தாஜ். இந்த விஷயத்தை ஆண்கள் தரப்பிடம் எடுத்துச் சென்றார்கள் மற்ற பெண்கள். ‘மும்தாஜ் அட்ஜெட்ஸ்ட் செஞ்சுக்க மாட்றாங்க’ என்று கோரஸாக பாடினர்.

‘கனிவான எஜமானர்கள் சொல்லும் சுலபமான வேலைகளைக் கூட செய்ய மறுக்கும் சில உதவியாளர்கள். இதன் விளைவு என்னவாக இருக்கும்?’ என்ற பின்னணிக் குரலுடன் இன்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது. கனிவான எஜமானர்கள், சுலபமான வேலைகளா? பிக்பாஸ் நீங்க செய்யற வேலையோட பெயர் என்ன தெரியுமா?

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘நாளை’ என்கிற பகுதியில் ஒரு வேலையை செய்யச் சொல்லி ஷாரிக் கறாரான குரலில் கேட்க ‘முடியாது’ என்று அதை விடவும் கறாராக மும்தாஜ் சொல்லும் காட்சி ஒளிபரப்பாகியது. இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் வேறு இருக்கிறதாம் . அதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும் 

அநேகமாக நாளை காலையின் பிக்பாஸ் பாடல் இதுவாக இருக்கலாம். ‘ஊரை தெரிஞச்சுக்கிட்டேன்.. உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி. பச்சைப் புள்ளையின்னு பாலூட்டி வளர்த்தேன்..’ 

மும்தாஜ் 'சில வேலைகள்' செய்ய முடியாது என சொன்னது பற்றி, உங்கள் பார்வை என்ன, கமென்ட்டில்  வெளிப்படுத்துங்களேன்