Published:Updated:

`உனக்கு அவ்வளவுதான்யா மரியாதை!' பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா கலாட்டா

தார்மிக் லீ
`உனக்கு அவ்வளவுதான்யா மரியாதை!' பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா கலாட்டா
`உனக்கு அவ்வளவுதான்யா மரியாதை!' பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா கலாட்டா

எஜமானர்கள் - உதவியாளர்கள் டாஸ்க் முடிந்து, எஜமானிகள் - உதவியாளர்கள் டாஸ்க் ஆரம்பித்தது. என்னென்ன கலவரங்கள் வெடித்தன என நேற்றைய எபிசோடைப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். அது சரி, இன்றைய பிக் பாஸ் மார்னிங் மற்றும் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது... இன்று இரவு என்ன நடக்கப் போகிறது. பார்ப்போம்! 

மார்னிங் மசாலா :

* வைஷ்ணவி தன்னுடைய உதவியாளரான சென்றாயனை வெறிகொண்டு தேடிக்கொண்டிருந்தார். பின் அவர் குளிர் காய்ச்சலால் உதவியாளர்கள் அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார், என மஹத் சொல்லிக் கேட்டபின் `அச்சோ' என அனுதாபப்பட்டார். இந்த விஷயம் நித்யாவுக்குத் தெரியவர, நலன் விசாரிக்க விறுட்டு விறுட்டென உதவியாளர்கள் அறைக்கு விரைந்தார் நித்யா. `அடடா! இதல்லவா பாசம்!' இதற்கு நடுவில் ரித்விகாவுக்கும் அவரது தொண்டையில் வலி ஏற்பட, `நான் வீட்டுக்குப் போறேன்' என வெகுளித்தனமாகக் கொஞ்சிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த மமதி, ரித்விகாவுக்கு ஆறுதலாக ஒரு `மருத்துவ' முத்தம் கொடுத்தார். இதுவும் பாசம்தான்! `வீடு பகலிலெல்லாம் விக்ரமன் சார் படம் மாதிரிதான் இருக்கு, பொழுது சாஞ்சாதானே டவுசர் கிழியுது. ஹ்ம்ம்...'

* பெண்கள் அறையில், ஷாரிக் எந்த வேலையும் செய்யாமல் அங்கிட்டும் இங்கிட்டுமாக உலாத்திக்கொண்டிருந்தார். `ஏ.சி ரொம்ப அதிகமா இருக்கு ஆஃப்...' என ரித்விக்கா பிக் பாஸிடம் சொல்லி முடிப்பதற்குள் கேமரா முன் பாய்ந்த ஷாரிக், `ஆமா பிக் பாஸ், இங்க எல்லோருக்குமே ரொம்பக் குளிருது, ஆஃப் பண்ண வேண்டாம், அட்லீஸ்ட் கம்மியாவது பண்ணுங்க' என பிக் பாஸிடம் முறையிட்டார். அப்படியே கார்டன் பக்கம் திரும்பிய கேமரா, குளிர் காய்ச்சலிலிருந்து எழுந்து வந்த சென்றாயனைக் காட்டியது. காய்ச்சலுக்கு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவிட்டு காபி குடித்துக்கொண்டிருந்தார். `கெட் வெல் சூன் ப்ரோ! 

*  கார்டன் ஏரியாவில் சென்றாயன், பொன்னம்பலம், நித்யா, ரித்விகா, டேனியல் என அனைவரும் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார்கள். உதவியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் `மெத்தை சரியில்ல, கட்டிலைவிட்டு கால் வெளிய வருது, இரும்பு குத்துது, நரம்பு புடைக்கிது' எனக் குறைகளாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். `கொய்யால நாங்களும் அதுலதானே தூங்குனோம். உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா' என்று மனதில் இருக்கும் ஃபீலிங்கை அப்படியே அமர்த்திவிட்டு, `ஆமா அண்ணா அப்படித்தான் இருக்கும்' என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள், எஜமானிகள். 

* எல்லோரும் கலைந்துபோக, நித்யாவும் ரித்விகாவும் கார்டன் ஏரியாவில் இருக்கும் கேமராவிடம் `பிரியாணி வேணும், மீன் வேணும். வஞ்சரம் மீன்கூட வேண்டாம், ஒரு நெத்திலியாவது அனுப்பிவிடுங்கய்யா' எனப் பாவமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கம் சென்ற ஷாரிக், `மீன் வேணுமா. அதான் உள்ள ஒருத்தி இருக்காளே, அவளை வருத்துப் போட்டிருங்க' என்று ஐஷ்வர்யாவை நக்கலடித்தார். `என்னடா நடக்குது இங்க...' இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பொன்னம்பலம், `ஜெய் ஶ்ரீராம்' எனக் கூறி `அபசாரம்' சொல்லாத குறையாக பில்டப் கொடுத்தார். பின் இவரும் கேமரா முன் நின்று, `எல்லோருக்கும் கவிச்சி வேணுமாம். அவங்களுக்கு மீன் கொடுங்க. எனக்கு கொஞ்சோண்டு மட்டன் மட்டும் கொடுங்க. வர்ற சனிக்கிழமை எனக்கு ஒரு கிலோ மட்டன் வேணும்' என்று தனது தரப்பு வேண்டுகோளை பிக் பாஸிடம் தெரிவித்தார். `கொஞ்சோண்டு சட்னி வேணா தர்றேன்' என்ற ரேஞ்சுக்குதான், பிக் பாஸ் எல்லோரையும் டீல் செய்யும் என்பது அவர்களுக்குப் போக போகதான் தெரியும் போல. 

* நேற்று எபிசோடில் நடந்த பாலாஜி - நித்யா சண்டை, லேசாக நேற்று காலையிலேயே தொடங்கியது. மெயின் எபிசோடைப் போலவே சில தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டிக்கொண்டிருந்தார், பாலாஜி. இப்படி இவர்கள் இந்தியா பாகிஸ்தானைப் போல் சண்டை  போட்டுக்கொண்டிருக்க, நடுவில் `பிக் பாஸ் எனக்குக் கொஞ்சம் மீன் குழம்பு அனுப்பி வைங்க ப்ளீஸ்' என்று ரித்விகா டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். 'ஆஹா... பைத்தியமா இது... ரொம்ப நேரம் நல்லாப் பேசிகிட்டு இருந்துச்சே என்ற ரேஞ்சுக்கு ஒரு லுக்குவிட்டார், பாலாஜி. நித்யா கேட்டும் கேட்காததுபோல் அந்தப் பக்கம் சென்றுவிட்டார். 

காலை உணவு தயாரானதும் பொன்னம்பலம் `பொங்கலோ... பொங்கல்' எனக் கூவிக்கொண்டே எஜமானிகளுக்கு `ப்ரேக்ஃபாஸ்ட்' அலர்ட் கொடுத்தார். எதுக்கு வந்தோம்ங்கிறதையே மறந்துட்டு சுத்திட்டு இருக்காரே! பின் ஆண்கள் ஒரு ஓரஞ்சாரமாகவும், பெண்கள் டைனிங் டேபிளிலும் அமர்ந்த தங்களுடைய காலை உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்படியே மார்னிங் மசாலா நிறைவடைந்தது. 

மிட்நைட் மசாலா : 

* உதவியாளர்களின் (ஆண்கள்) கலை நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர். மும்தாஜும் மமதியும், `தேவா - சூர்யா'வாக மாறி `டார்லிங்', `ஹனி' எனக் கொஞ்சி, குட்டி `தளபதி' படமே கிச்சன் ஏரியாவில் ஓட்டிக்கொண்டிருந்தனர். மறுபக்கம் சென்றாயன், ரித்விகாவிடமும் நித்யாவிடமும் தனது மனைவியையும் குடும்பத்தையும் பற்றிச் சொல்லி நெகிழ்ந்துகொண்டிருந்தார். கூடவே தான் ரொம்பக் கோபக்காரன் என்றும் கூறினார். `ஆமா... ஆமா நான் பாத்திருக்கேன்' என அன்று மஹத்திடம் போட்ட சண்டையைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார், ரித்விகா. `அதாவது பாலாஜி மாமாவுக்கு நான் பெர்மிஷன் கொடுத்துருக்கேன். அவர் மட்டும்தான் என்னைக் கலாய்க்கணும். அவரைப் பார்த்து மஹத், டேனியல், சின்னப் பையன் ஷாரிக்லாம் கலாய்ச்சா நல்லா இருக்காது. நீ ஜெயிக்க வந்தா நானும் ஜெயிக்கதான் வந்தேன்' எனத் தனது ஆங்க்ரி லெவலின் அளவை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார், சென்றாயன். பொறுமை பாஸ்!

* இவர்கள் இப்படியே பேசிக்கொண்டிருக்க, வீட்டுக்குள் சண்டை போடுவதுபோல் சின்னச் சலசலப்பு ஏற்பட்டது. உள்ளே, `எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க சரியா... சும்மா இஷ்டத்துக்குப் பேசிட்டு இருக்காதே' எனக் கடும் கோபத்தோடு டேனியலைத் திட்டிக்கொண்டிருந்தார், மஹத். டேனியலும் மிகுந்த கோபத்தோடு வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். இதற்கு நடுவே வைஷ்ணவி அழுதுகொண்டிருந்தார். `ஒட்டுமொத்தச் சண்டைக்கும் காரணம் சென்றாயன்தான்' என்ற மஹத்தின் பேச்சுகூட அடிபட்டது. டேனியலுடன் சமாதானம் செய்துவைக்க, ஜனனியும் பாலாஜியும் மஹத்தை டேனியலிடம் இழுத்துச் சென்றனர். `எனக்குப் பேச விருப்பம் இல்ல' எனப் பிடிவாதமாக இருந்தார், மஹத். 

* இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் சண்டையிட்டுக்கொண்டிருக்க, `நடுச் சாமத்துல என்ன சண்டை வேண்டிகிடக்கு' என்று தொனியில் அங்கும் இங்குமாகப் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தார், மும்தாஜ். ஒரு வழியாக மஹத்தும், டேனியலும் சண்டை போட்டதற்கான காரணம், ரித்விகா சொல்லித் தெரிய வந்தது. முதல் சீனில் சென்றாயன் அண்டு கோ மஹத்தைக் கைகாட்டிப் பேசியதுதான் காரணமாம். சென்றாயன் எதுவும் தெரியாதது போல் காடர்ன் ஏரியாவுக்குச் சென்றுவிட்டார். உள்ளே நடக்கும் சண்டைகள்தாம் இன்று இரவு கன்டென்ட் என்பதால் அதை டெலிகேஸ்ட் செய்யவில்லை. 

* வாக்கிங் போய்க்கொண்டிருந்த சென்றாயன் ஒரு கட்டத்தில் பொறுமை தாங்க முடியாமல் `இப்போ என்ன மேட்டர் உனக்கு... உனக்கு வேலை என்ன... உனக்கு வேலை என்ன...' என்று சொல்லி பாலாஜியுடன் மல்லுக்கு நின்றார். `ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு' என்று பாலாஜி ஆரம்பித்ததும். அவர்களின் சீனை கட் செய்துவிட்டு கேமரா வேறு பக்கம் திரும்பியது. கொஞ்ச நேரம் கழித்துக் கிறுட்டு கிறுட்டென்று கார்டன் ஏரியாவை நோக்கி வந்த சென்றாயன், தனது வாக்கிங்கை கன்டின்யூ செய்தார். மீண்டும் ஒரு முறை கோபம் தலைக்கேறி, `உனக்கு அவ்வளவு தான்யா மரியாதை' என்று ஆவேசமாக வீட்டுக்குள்ளே நுழைந்ததும், கேமரா கட் ஆகி டாஸ்க் போர்ஷனுக்கு ஜம்ப் ஆகிவிட்டது. ஆனால் என்ன டாஸ்க் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக விவகாரமாகத்தான் இருக்கும்.

* இவர்கள் அரசல் புரசலாகப் பேசுவதைப் பார்த்தால் `அதிக சுயநலவாதிகள் ஆண்களா, பெண்களா' என்பதுபோல் இருக்கும் எனத் தெரிகிறது. இது சம்பந்தமாக டேனியல், பாலாஜியிடம் சில ஹின்டுகளை கேட்டுக்கொண்டிருந்தார். பாலாஜி அவ்வளவு அனுபவசாலியோ?! இதுபோக மாடரேட்டர், வாலன்டீர் என்றெல்லாம்கூட பேசிக்கொண்டிருந்தார்கள். நடக்கப்போகும் ஈவன்டுக்கு மஹத்தான் நடுவர். பிக் பாஸ் என்ன கூத்து செய்ய வைக்கப்போகிறார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும். பாலாஜி, `I am a Leader, Not a follower' என்ற வாசகத்தோடு டி-ஷர்ட் போட்டு சுற்றிக்கொண்டிருந்தார். குறியீடு! புரிஞ்சவங்க முந்திரி. 

அனைவரும் ஒவ்வொரு மூலையிலும் படுபயங்கரமாக டாஸ்க் சம்பந்தமாக டிஸ்கஸ் செய்துகொண்ருந்தனர். அதோடு மிட்நைட் மசாலா நிறைவடைந்தது. மீதி ஃபன் இன்னைக்கு நைட் இருக்கு!