Published:Updated:

போல்டு விமன் மமதி பிக்பாஸிலிருந்து அவுட்... இனி மும்தாஜ் 'சிங்கிள்'..! #BiggBossTamil2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
போல்டு விமன் மமதி பிக்பாஸிலிருந்து அவுட்... இனி மும்தாஜ் 'சிங்கிள்'..! #BiggBossTamil2
போல்டு விமன் மமதி பிக்பாஸிலிருந்து அவுட்... இனி மும்தாஜ் 'சிங்கிள்'..! #BiggBossTamil2

எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவதுதான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித்தான் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இது தியாகம் எல்லாம் இல்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேற்றைய நாள் காரசாரமான பஞ்சாயத்துகளால் நிறைந்திருந்ததால், அதற்கு மாறாக இன்றைய நாள் ஏறத்தாழ கொண்டாட்டமாக அமைந்திருந்தது. காரணம், 'விஸ்வரூபம்-2' திரைப்படப் பாடல் அரங்கேற்றம். ஜிப்ரான் இருப்பார் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், ஸ்ருதிஹாசன் திடீரென நுழைந்து பாடியது இன்ப அதிர்ச்சி. (“உங்க கூட அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார். இப்ப …ஸ்ருதிகிட்ட பேசணும்” என்று கமலுக்கு ஜெர்க் கொடுத்தார் டேனி). நீங்கள் யாரை வெளியேற்ற விரும்புகிறீர்கள் என நாம் நடத்திய சர்வேயிலும், 48% பேர் மமதி என்றே தேர்வுசெய்திருந்தார்கள். அது, நேற்றைய எலிமினேசனில் பிரதிபலித்தது. 

நடிகை என்று அறியப்பட்ட முகத்தைத் தாண்டி, ஸ்ருதி ஒரு நல்ல இசைக்கலைஞர். நிறைய திரையிசைப்பாடல்களைப் பாடியிருப்பது ஒருபுறமிருக்க, கமல்ஹாசனின் `உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படத்துக்கு அவர்தான் இசையமைத்தார். சிறப்பான படைப்பாக அது இருந்தது. நடிகை என்னும் பிம்பம் இசையமைப்பாளர் எனும் திறமையை விழுங்காமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், பல திரைப்படங்களுக்கு ஸ்ருதிஹாசன் இசையமைக்க வேண்டும் என்று இந்தச் சமயத்தில் நினைக்கத் தோன்றுகிறது. 

இதையேதான், கமலுக்கும் சொல்லத் தோன்றுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்களில் ஒருவர், ‘Don’t quit Cinema’ என்று கமலிடம் வேண்டிக்கொண்டார். 

``நான் சினிமாவை விட்டெல்லாம் போகமாட்டேன். நடிச்சாதான் சினிமாவா? உங்களில் ‘ஒருவனாக’ அமர்ந்து சினிமாவைப் பார்த்துக்கிட்டுதான் இருப்பேன். அதைவிடவும், ஒரு பெரிய பணியில் ஈடுபட விரும்புகிறேன். எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழிவிடுவதுதான் முதிர்ச்சி. என் முன்னோர்கள் அப்படித்தான் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இது தியாகம் எல்லாம் இல்லை. ``என் சீட்ல உக்காருன்னு” 'உத்தமவில்லன்' படத்துல வர்ற காட்சியை பாலசந்தர்தான் எழுதினார். மறுபடியும் மறுபடியும் சினிமாவில் நடிக்கக் கேட்டு என்னை சஞ்சலப்படுத்திவிடாதீர்கள்” என்றார் கமல். 

கமலின் இந்த அறிவிப்பு தொடர்பாகச் சில விஷயங்களைச் சொல்லத் தோன்றுகிறது. 

ஒரு துறையில் புகழுடன் இருக்கும்போதே அதிலிருந்து விலகுவது ஒருவகையான விவேகம். சரியான முடிவு. மக்கள் நினைவுகளில் கம்பீரமாக அமர்ந்திருப்பதற்கான சிறந்த வழியும் அதுவே. அந்த வகையில் கமலின் முடிவு சிறந்ததே. அதைவிடவும் முக்கியமானதொரு பணியில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகளைக் கண்டு பல ஆண்டுகள் மனம்புழுங்கி, ஒரு கட்டத்தில் அவற்றைச் சரிசெய்யத் தானே களத்தில் இறங்கியிருப்பதும் சிறந்த விஷயமே. 

ஆனால், கமல்ஹாசன் பத்தோடு பதினொன்றாக வரிசையில் நிற்கும் நடிகர் அல்ல. கலைத்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவர். திரைத்துறை சார்ந்த இந்தியாவின் பெருமைமிகு அடையாளம். இந்த வாய்ப்பும் பெருமையும் எல்லா நடிகர்களுக்கும் கிடைத்துவிடாது. சினிமா தொடர்பான பல மேற்கத்திய நுட்பங்களை முதலில் இங்கு அறிமுகம்செய்தவர் கமல். `சின்னத்திரைதான் வருங்காலத்தில் கோலோச்சும்’ என்பதை தொலைநோக்குப் பார்வையோடு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரூடம் சொன்னவர். அந்த அளவுக்கு இந்தத் துறையைப் பற்றி அங்குலம் அங்குலமாக அறிந்திருப்பவர். 

கலைத்தாய், அவரை பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்; பல காலமாக அணைத்துக்கொண்டிருக்கிறாள். இப்படியோர் அரிய தேர்வை ஒதுக்கிவைத்துவிட்டு, இன்னொரு துறைக்கு அவர் நகர வேண்டுமா என்பதை அவர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். ஊடகங்களிலேயே மிக வலிமையான ஊடகமான சினிமாமூலம் அவர் இன்னமும் அழுத்தமான அரசியல் கருத்துகளைப் பரப்புரை செய்ய முடியும்; மக்களுக்குப் பணியாற்ற முடியும். அதுவும் ஓர் அரசியல் செயல்பாடே. ஏற்கெனவே அப்படிச் சில விஷயங்களை அவர் செய்திருந்தாலும், அதில் வணிக அம்சங்களும் சர்ச்சைகளும் பெரும்பாலும் நிறைந்திருந்தன. தூய கலை சார்ந்த படைப்புகளை உருவாக்குவதில் இனி அவர் ஈடுபடலாம். பல இளம் கலைஞர்களை உருவாக்கலாம், ஊக்குவிக்கலாம்; வழிகாட்டலாம். ‘ஆஸ்கர் நாயகன்’ என்கிற அடைமொழி இதன்மூலம் உண்மையாகக்கூட ஆகலாம். ‘அறிந்த தொழிலை இன்னமும் சிறப்பாகச் செய்யலாம்’ என்பதைத்தான் புத்திசாலிகளும் சொல்கிறார்கள். 

அவர், சினிமாவை விட்டு விலகக் கூடாது என்கிற மக்களின் வேண்டுகோள் ஒருபுறம் இருந்தாலும், அவருடைய தேர்வும் அதற்கான சுதந்திரமும் மதிக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. 

புடவை மாற்றும் விஷயத்தில் மும்தாஜ் பிடிவாதம் பிடித்ததின் காரணம் மறைமுகமாகத் தெரிய வந்தது. குளியல் அறையில் காமிராக்கள் இருக்குமோ என்கிற சந்தேகம் சில போட்டியாளர்களிடம் உள்ளது போல. உளவியல் ரீதியிலான இந்த அச்சத்தையும் சந்தேகத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. காமிராக்களால் நாம் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது பிரக்ஞையில் இருந்தாலும் தொடர்ந்து அந்தச் சூழலில் இருக்கும்போது பழக்கம் காரணமாக அது மறக்கப்பட்டு விடும். ஆனால், அவ்வப்போது அந்தச் சூழல் திடீர் திடீரென்று ஞாபகம் வரும். நகரும் காமிராக்கள் இதை நினைவுப்படுத்தும். 

மிகக் குறிப்பாகக் குளிக்க முனையும் போது இது சார்ந்த அச்சமும் சந்தேகமும் எழுவது இயற்கையே. பெண் போட்டியாளர்களுக்கு இது சார்ந்த மனஉளைச்சல் அதிகமாக இருக்கும். இந்தச் சந்தேகத்தை அழுத்தம் திருத்தமாகத் துடைப்பது பிக்பாஸ் குழுவின் வேலை. கமல் அதைச் சரியாகவே செய்தார். “அப்படித்தான் TRP ஏத்திக்கணும்னு அவங்களுக்கும் அவசியம் இல்லை. அப்படிப்பட்ட ஆட்களோடு நானும் தொடர்பு வெச்சிக்க மாட்டேன். அதைச் செய்ய நாங்க இங்க வரலை” என்று கறாராகப் பேசி போட்டியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். (எனில் யாஷிகாவின் பின்புறத்தை மஹத் தடவுவது போன்ற காட்சிகளும் எடிட் செய்யப்பட வேண்டும். பாலாஜி-நித்யா தம்பதியினரின் மகள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பார் என்று இங்கு அடிக்கடி சொல்லப்படுகிறது. அதைப் போலவே அந்த வயதில் உள்ள பல போஷிக்காக்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதை பிக்பாஸ் டீம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது).

வெளியேற்றப்படலமும் இன்று நிகழ்ந்தது. சில பல யூகங்களுக்குப் பிறகு, இது சார்ந்த கமலின் விளையாட்டுகளுக்குப் பிறகு மமதி வெளியேற்றப்பட்டதை காண முடிந்தது. 

இந்த விளையாட்டில் மமதி ஒரு கடுமையான போட்டியாளராக இருந்தார் (நித்யாவும் ஒரு முறை நாமினேஷனின் போது இதைக் குறிப்பிட்டார்). தன்னம்பிக்கையும் உறுதியும் கொண்ட ஒரு பெண்ணாக மமதி இருந்தார். வெளியேற்றம் அறிவிக்கப்பட்ட போது கூட அவர் கலங்கவில்லை. மாறாக குலுங்கி குலுங்கி அழுத மும்தாஜை ஆறுதல்படுத்தினார். 

ஆனால், அவரிடம் ஒரு பிரத்யேகமான செயற்கைத்தனம் நிரம்பியிருந்ததாகப் படுகிறது. பல வருடங்களாக அவர் வீஜேவாக இருந்ததால் எப்போதுமே காமிராவுக்கு முன்னால் பேசுவதைப் போலவே தெரிந்தது. எந்தவொரு விஷயத்தையும் இயல்பாகப் பேசாமல் சொற்பொழிவு ஆற்றுவது போல் பேசியதும் செயற்கையாகத் தெரிந்தது. அந்த வகையில் மினி ‘கமல்’ என்று கூட மமதியைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட போட்டியாளருடன் (மும்தாஜ்) அவர் நெருக்கமாக இருந்தது கூட பாரபட்சங்களை அவருக்குள் ஏற்படுத்தலாம்; மற்ற போட்டியாளர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தியிருக்கலாம். 

இந்தக் காரணங்களால் மக்களின் ஆதரவை அவரால் பெற முடியவில்லையோ என்று தோன்றுகிறது. 

**

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பைப் பற்றி பார்ப்போம்.

‘விஸ்வரூபம் பாடலை இங்கு அரங்கேற்றம் செய்வதற்கு வாழ்த்துகள்’ என்கிற பிக்பாஸ் குரலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ‘இந்த நாளுக்குத்தான் காத்திருந்தேன். நீங்களும் ஆவலுடன் காத்திருந்திருந்தீர்கள். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீஸ். இந்தப் பாடலை இசையமைத்த ஜிப்ரானும் உடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களும் இங்கு வந்திருக்கிறார்கள்” என்று தன் உரையாடலைத் தொடங்கினார் கமல். “2013-ல் தொடங்கப்பட்ட இந்த இசைப்பணி இப்போது வெளியே வருகிறது” என்றார் ஜிப்ரான். (ஐந்தாண்டுத்திட்டம் என்றார் கமல்). பிக்பாஸ் மேடையில் அரங்கேற்றுவதன் மூலம் பல கோடி மக்களை சென்றயடைய முடியும் என்கிற காரணத்தால் இதைச் செய்வதாகச் சொன்ன கமல், வீட்டின் உள்ளே இருந்த போட்டியாளர்களையும் இந்த நிகழ்ச்சியைக் காண வைத்தார். (பிக்பாஸ் ரூல்ஸ்களின் படி இது விதிமீறல் இல்லையோ?!)

“‘வந்தே மாதரம்’ பாடல் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும்?’ என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது அது ‘தேஷ்’ ராகத்தில் படைக்கப்பட்டிருப்பதை ஒரு திடீர் கணத்தில் சட்டென்று உணர முடிந்தது. விஸ்வரூபம் பாடலுக்கும் அது பொருத்தமாக இருக்கும் என்று யோசித்து அந்த ராகத்திலேயே இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான்” என்ற கமல், இந்தப் பாடலின் digital release வெளியே வந்து விட்டாலும் இப்போது ஒலிக்கப்படப்போவது சில மாற்றங்களுடன் புதிய வடிவில் இருக்கும் என்றார். சிக்கலானதொரு ஜதி வரிசையை இலகுவாகக் கமல் பாடுவதோடு தொடங்கியது நிகழ்ச்சி. 

`நானாகிய… நதிமூலமே… தாயாகிய ஆதாரமே’ என்று தாயின் பெருமையையும் தியாகத்தையும் சொல்லும் பாடலாக அது இருந்தது. (விஸ்வரூபம் படத்தின் படி, கமலின் இளமைப் பருவம் தொடர்பான காட்சிகள் இந்தப் பாடலின் பின்னணியில் நினைவுகூரப்படும் என்று தெரிகிறது). சிம்பொஃனி ஆர்கெஸ்ட்ரா ஒலிக்க இதன் இடையில் ஸ்ருதிஹாசனும் வந்து இணைந்து கொண்டார். 

`பாடல் எப்படியிருந்தது’ என்று கமல், பிக்பாஸ் போட்டியாளர்களைக் கேட்க அவர்கள் தங்களின் மகிழ்ச்சியை ஆரவாரமாகத் தெரிவித்தார்கள். (‘விசிலடிச்சான் குஞ்சு’ என்கிற பட்டத்தை ஷாரிக்கிற்கு தரலாம். அந்த அளவுக்கு எல்லாவற்றுக்கும் உரத்த விசில்தான்). 

சென்றாயனின் ஆங்கிலத்தைக் கேட்டு ஸ்ருதி விழுந்து விழுந்து சிரித்தார். தாடி பாலாஜி வெறும் பாலாஜியாக இருந்தார். (கேடி பாலாஜியாக இல்லாமலிருந்தால் சரி). விஸ்வரூபம் 2-ன் டிரெய்லரும் காட்டப்பட்டது. (தமிழில் வந்த வசனம் இந்தியில் வேறு மாதிரியாக இருப்பதாக சமூகவலைதளங்களில் இந்த டிரைய்லர் குறித்து ஏற்கெனவே சர்ச்சைகள் தொடங்கி விட்டன. முழுத்திரைப்படத்தையும் பார்த்தபிறகுதான் அதைப் பற்றி சொல்ல முடியும்.)

இந்தத் திரைப்படத்திலிருந்து இன்னொரு பாடல் இசைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. இது நாயகனின் புகழைச் சொல்லும் பாடல் என்பதால் ஸ்ருதியே பாடட்டும் என்று தன்னடக்கத்துடன் ஒதுங்கிக்கொண்டார் கமல். ``பொதுவாக நாயகனின் தற்பெருமையைச் சித்திரிக்கும் பாடல்களை பாட நான் ஒப்புக்கொள்வதில்லை. ‘நான்தான் சகலகலா வல்லவன்’ என்ற வரிகளை அப்போது பாடுவதற்கு மிகவும் தயங்கினேன். வாலிதான் வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைத்தார். ‘நான் ஆணையிட்டால்’-ன்னு எம்.ஜி,ஆர் பாடலையா?” என்றெல்லாம் பேசி என்னை அப்போது சம்மதிக்க வைத்தார்” என்று இந்தப் பாடலை மேடையில் பாடாமலிருப்பதற்கான காரணங்களை அடுக்கினார் கமல். (‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ‘நான் வெற்றி பெற்றவன்’ முதற்கொண்டு வேறு உதாரணங்களும் இருக்கக்கூடும்).

“நீங்க போயி ஓரமா உக்காருங்கப்பா” என்று ஸ்ருதி மறைமுகமாகச் சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் ‘உங்களில் நான்’ என்கிற பெருமையுடன் பார்வையாளர்களின் மத்தியில் அமர்ந்துகொண்டார் கமல். ‘யாரென்று தெரிகிறதா, இவன் தீயென்று புரிகிறதா?’ என்று முதல் பாகத்தில் வந்த அதே பாடல்களின் வரிகளை வைத்து முற்றிலும் வேறு வடிவத்தை, வண்ணத்தை உருவாக்கி விட்டார் ஜிப்ரான். அபாரமான முயற்சி. ‘இதனால் முதல் பாடலின் வடிவம் இப்போது உங்களுக்கு மறந்து போயிருக்கும்’ என்று கமல் சொன்னது உண்மையே. அந்த அளவுக்கான மாயத்தை ஜிப்ரான் செய்து விட்டார். ஸ்ருதிஹாசனும் மிக அருமையாகப் பாடினார். 

முதலில் ஒலித்த பாடல் கமல் எழுதியதாம். ‘நான் எழுதிய முதல் அருமையான கவிதை’ என்று ஸ்ருதியைக் சுட்டிக் காட்டினார். சுயமரியாதையைப் பற்றி தொடர்ந்து பேசும் கமலால், தன் காலில் விழுந்து வணங்கும் மற்றவர்களை தடுக்க முடிந்தாலும் பாசம் காரணமாக ஸ்ருதியைத் தடுக்க முடியவில்லை. 

‘ஜிப்ரானுடன் தொடர்ந்து பணியாற்றும் ரகசியம் என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. ‘வாகை சூட வா’ பாடலை ஒருமுறை காரில் கேட்டேன். அதனால் கவரப்பட்டு இவரைத் தேடியடைந்து பிறகு இவரை ‘சூடிக்கொண்டேன்’ என்ற கமல், “முதல் பாகத்தில் ஒலித்த வடிவத்தை மறக்கச்செய்து வேறு வண்ணத்தை தந்து விட்டார்’ என்று ஜிப்ரானை பாராட்டினார். ‘என் அரசியல் வருகைக்கு இந்தப் பாடல் ஒரு முக்கியமான அடையாளமாக அமைந்தது” என்றவர், வைரமுத்துவையும் நினைவுகூர்ந்திருக்கலாம். 

‘இத்திரைப்படத்துக்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்ட விஷயம் எது?” என்றொரு கேள்வி பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்டது. “யாரும் இடைஞ்சல் பண்ணலைன்னா எதுவுமே கஷ்டம் இல்லை” என்று முதல் பாகம் வெளிவந்த சமயத்தில் ஏற்பட்ட இடையூறுகளை மறைமுகமாக நினைவுப்படுத்தினார் கமல். “முன்னமே சொன்ன மாதிரி விரும்பிச் செஞ்சா.. எந்த வேலையும் கஷ்டம் இல்ல”.

ஒருமுறை ஜிப்ரான் இசைப்பணியில் மூழ்கி நேரம் போவதே தெரியாமல் இருந்தபோது அவரைக் குறுக்கிட்ட கமல், ‘உங்க பிரேயருக்கு டைம் ஆச்சு” என்று நினைவுப்படுத்தி வெளியில் சென்ற நிகழ்வை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் ஜிப்ரான். ‘என்னுடைய நம்பிக்கை மற்றவர்களின் நம்பிக்கைளில் இடையூறு செய்வதை நான் அனுமதிப்பதில்லை’ என்றார் கமல். இப்படியான சகிப்புத்தன்மையை அனைவரும் பின்பற்றுவது சமகாலச் சூழலில் மிகவும் முக்கியமானது. 

“பிக்பாஸ் வீட்டில் நேற்று நாம் நிகழ்த்திய விவாதங்கள் வேறு புதிய விவாதங்களை, மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பதாகத் தோன்றுகிறது அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்” என்றார் கமல். 

பாலாஜி –நித்யா இணைப்பு முயற்சியில் விடாப்பிடியாகச் செயல்படும் சென்றாயன், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் நித்யாவுடன் பேசிக்கொண்டிருந்தார். ‘கமல் சார் சொன்ன போது பாலாஜி முகம் மாறிட்டாப்புல.. அவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடு தங்கச்சி.. பேசாம இருக்காத’ என்பது போல் உபதேசம் வழங்க.. ‘நான் எப்ப அவர் கூட பேசமாட்டேங்கறேன்.. ஒரு சக போட்டியாளரா பேசிக்கிட்டுதான் இருக்கேன்… ‘எட்டு மாசமா குழந்தையைப் பார்க்க விடலை’ன்னு சொன்னாரு.. இத்தனை மாசமாக அவர் வந்து பார்க்கவேயில்லையே.. ஒரு டிரஸ்ஸோ.. சாக்லெட்டோ. குழந்தைக்கு அனுப்பவேயில்லையே.. நீதிமன்ற நடவடிக்கைகளில் மட்டும் ஒழுங்காக வந்து ஆஜரான அவரால் குழந்தையைப் பார்க்க நேரம் இல்லாமப் போச்சே.. காமிரா முன்னாடி ஒண்ணு சொல்றது.. பின்னாடி வேற முகம் இருக்கு“ என்று  நித்யா சரமாரியாகக் குற்றம் சாட்ட சென்றாயனால் எதுவும் சொல்ல இயலவில்லை. ‘காலம்தான் எல்லாத்துக்கும் பதில்’ என்று முடித்துக்கொண்டார் நித்யா. 

‘நித்யா ஏதோவொரு மனக்குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார்’ என்ற தன் அபிப்ராயத்தை பாலாஜி மற்றும் டேனியிடம் சொன்னார் அனந்த். “அவங்க ரொம்ப நல்லவங்க.. உங்களை நாமினேட் பண்றதுக்கு ஒரு சந்தர்ப்பம் வந்த போது கூட அவங்க அதுக்கு ஒப்புக்கலை. நீங்க மாறுங்க” என்று பாலாஜிக்கு உபதேசம் செய்தார் மும்தாஜ். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பாலாஜியிடம் அந்த அமைதி நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

கமல் வெளியேற்றப்படலத்தைத் தொடங்கி வைத்தார். பட்டியலில் இருக்கும் மூன்று நபர்களில் ‘யார் வெளியேற விரும்புவது’ என்ற கேள்வி வந்த போது ‘இளைய தலைமுறைக்கு வாய்ப்பு அதிகம் தரப்பட வேண்டும். மீத நாள்களை முழுமையாக வாழ விரும்புகிறேன். மற்றும் உடல்நிலையும் ஒத்துழைக்கவில்லை’ என்கிற காரணத்தைக் காட்டி தான் வெளியேற விரும்புவதை வெளிப்படுத்தினார் அனந்த். 

“எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. என்னால முடிஞ்சத செஞ்சிருக்கேன். மக்கள் தீர்ப்பை ஏற்று வெளியேறத் தயாராக இருக்கிறேன்” என்றார் மும்தாஜ். “நானும் என்னோட பெஸ்ட்டை தந்தேன். சமையல் விஷயத்தில் யாரும் பசியாக இருக்கக் கூடாது என்பதற்காகப் பல விஷயங்களைச் செய்தேன். மனசார வேலை செஞ்சிருக்கேன். அப்படியும் சில குறைகள் தெரியது –ன்றது.. மனசு வலிக்கத்தான் செய்கிறது’ என்றார் மமதி. 

அனந்தின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி ‘அவர் வெளியேறுவது சரியாக இருக்கும்’ என்று மற்ற போட்டியாளர்களும் சொன்னார்கள். ஆனால், மக்கள் கருத்து வேறு மாதிரியாக இருந்தது. எனவே ‘அனந்த்’ வெளியேற்றும் படலத்திலிருந்து நீக்கப்பட்டார். மிகவும் நெகிழ்ச்சியாகக் காணப்பட்ட அனந்த்தை மற்றவர்கள் சமாதானம் செய்தார்கள். 

“நான் டைரக்டர் ஆகணும் –னு முதல்ல இருந்தே விரும்பினேன். நாற்பது வருஷம் கழிச்சுதான் மக்கள் அதை ஏத்துக்கிட்டாங்க.. அதுவரைக்கும் காத்திருக்கணும். மனம் தளராதீர்கள். தோல்வியை எளிதில் ஏற்றுக்கொள்ளாதீர்கள்’ என்று அனந்துக்கு உபதேசித்தார் கமல். 

ஆக பாக்கி இருப்பவர்கள் மமதி மற்றும் மும்தாஜ். ‘ரெண்டு பேருமே ஒண்ணா வெளியே போறோம்” என்றார்கள். ‘இதன் முடிவு மக்கள் கையில் இருக்கு. அவர்களின் முடிவு என் கையில் இருக்கு” என்றார் கமல். (கவித.. கவித..) அம்மாவும் சின்னம்மாவும் ஒன்றாக வெளியேறிவிட்டால், சுவாரஸ்யத்துக்கு எங்கே செல்வது என பிக்பாஸ் யோசித்திருக்கக்கூடும்

சில பல விளையாட்டான பாவனைகளுக்குப் பிறகு மும்தாஜ் காப்பாற்றப்பட மமதி வெளியேறுவது உறுதியானது. மும்தாஜ் அழுது கலங்கித் தீர்த்தார். ஆனால், மமதி உறுதியாகக் காணப்பட்டார். 

வெளியே வந்த மமதியுடன் கமல் உரையாடினார். இரண்டு கமல்களை மேடையில் பார்ப்பது போலவே இருந்தது. “ஓர் ஊடகவியலாளராக மக்களுடன் நீண்ட கால தொடர்பில் இருந்தவர் நீங்கள். எனில் எங்கே சறுக்கினீர்கள்?” என்பது போன்ற கேள்வியை முன்வைத்தார் கமல். “இங்க இருந்து வெளியே போகும் போது என்ன பாடத்தைக் கத்துக்கிட்டீங்க”

அதற்கு மமதி அளித்த பதில் நெகிழ்வுபூர்வமானதாகவும் உண்மையாகவும் இருந்ததாகத் தோன்றியது. “சில காரணங்களுக்காக நான் பல வருடம் மெளன விரதத்தில் இருந்தேன். யாரையும் நெருங்க விட மாட்டேன். போலவே நானும் யாரையும் நெருங்கிச் செல்ல மாட்டேன். என்னுடைய சிறு உலகத்திலிருந்து பழகி விட்டேன். ஆனால், இங்கு வந்த பிறகு சிலர் வேதனையிலும் குழப்பத்திலும் இருந்த போது, அவர்களிடம் அன்பாகவும் அனுசரணையுடனும் நடந்துகொண்டேன். என்னுள் இருந்த விஷயத்தை எனக்கே அடையாளம் காட்டியது இந்த நிகழ்வுகள். இதுதான் எனக்கு சந்தோஷத்தை தருது –ன்றதை புரிஞ்சுக்கிட்டேன். இனி அதைத் தொடர்வேன்” என்றார் மமதி. 

‘எந்தவொரு பயிற்சியையும் திறமையையும் நாம் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டே இருக்க வேண்டும். புதுப்பித்துக்கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால் துருப்பிடித்து விடும்’ என்ற கமல் நீண்ட காலத்துக்குப் பிறகு தேவர் மகன் திரைப்படத்தில் நடிக்க வந்த போது சிவாஜி சொன்ன சம்பவத்தை நினைவுகூர்ந்து மமதியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். 

‘வீட்டின் உறுப்பினர்கள் குறைய குறைய சுவாரஸ்யங்கள் அதிகமாகும். சண்டையும் கூடும். அது பிக்பாஸ் வீட்டின் குணாதிசயம். பார்ப்போம்’ என்று விடைபெற்றார் கமல். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘நாளை’ என்கிற பகுதியில், ‘மணியடித்தவுடன் முதலில் கன்ஃபெஷன் அறைக்கு ஓடிவருபவர்களே வீட்டின் தலைவர்’ என்கிற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது. கோயில் சுண்டலுக்கு அடித்துப்பிடித்து ஓடி வருவது போல பிக்பாஸ் மக்கள் ஓடிவந்தனர். மமதி எலிமினேட் செய்யப்பட்டது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதியுங்களேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு