Published:Updated:

இட்லித் தட்டு, இச்சு தா, குளிக்க உதவி... பிக்பாஸில் புதிய கலாட்டாக்கள்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
இட்லித் தட்டு, இச்சு தா, குளிக்க உதவி... பிக்பாஸில் புதிய கலாட்டாக்கள்! #BiggBossTamil2
இட்லித் தட்டு, இச்சு தா, குளிக்க உதவி... பிக்பாஸில் புதிய கலாட்டாக்கள்! #BiggBossTamil2

ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழ் மொழியை உரையாடுதல், நீர் சிக்கனம் ஆகிய சமூகநலன் சார்ந்த இரண்டு சவால் போட்டிகள் இன்று பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டன. சமூக அக்கறையோடு தங்களின் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை அமைக்கும் பிக்பாஸின் சேவை பாராட்டுக்குரியது…. 

இப்படியெல்லாம் எழுத வேண்டுமென்று ஆசைதான். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. பொதுநலனுக்காகவா.. இத்தனை செலவு செய்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்?

என்றாலும்.. தமிழில் மட்டும் உரையாட முயன்று பலமுறை தோற்ற போட்டியாளர்களைப் பார்க்கும் போது, நம் பேச்சுமொழியில் ஆங்கிலம் பெருமளவு ஆக்கிரமித்திருப்பதையும் ஒரு விளையாட்டுக்காக கூட அதைத் தவிர்த்து இயன்ற அளவிற்கான தமிழில் பேசுவதற்குள் நமக்கு மூச்சு திணறி விடுகிறது என்பதையும் நாம் உணர்வதற்கான ஒரு சந்தர்ப்பம். Yes! We could not converse in tamil exclusively, even for a minute. It is pathetic! தமிழும் சரியாக வராமல், ஆங்கிலத்தையும் தப்பும் தவறுமாக உபயோகித்துக் கொண்டு சில தலைமுறைகளை கடந்து விட்டோம். 

16-ம் நாளின் நிகழ்வுகள்.

யாஷிகா - மஹத் தடவல் முயற்சியில் கூட ஏற்படாத சர்ச்சை, பாலாஜி தன் பின்புறத்தை தானே தடவிக் கொண்ட போது ஏற்பட்டது ஒரு நகைமுரண். ஏற்கெனவே சொன்னபடி வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் இருந்துதான் நிறைய சண்டைகள் உற்பத்தியாகின்றன. இன்றும் அப்படியொரு பஞ்சாயத்து. சமைக்கும் சமயத்தில் பாலாஜி இட்லித்தட்டை எடுத்து பின்புறத்தில் துடைத்தார் போலிருக்கிறது. (அல்லது சொறிந்து கொண்டரோ!)

இதை அருவருப்புடன் தூரத்தில் இருந்து கண்ட அனந்த், சென்றாயனை அனுப்பி  தன் ஆட்சேபத்தை பாலாஜியிடம் நட்புமுறையில் சொல்லச் சொன்னார். பாலாஜி அதை மறுத்ததால் விஷயம் தலைவி வைஷ்ணவியிடம் சென்றது. அவர் பாலாஜியிடம் நேராக சொல்லத் தயங்கி டேனியிடம் சென்று சொல்ல, அவரும் மிக இயல்பாக  பாலாஜியிடம் அந்த விஷயத்தைச் சொல்ல,வருத்தமும் கோபமும் கலந்த குரலில் ‘நான் வேணா பாத்ரூம் க்ளீனிங்’ டீமிற்கு மாறிடறேன்’ என்றார், பாலாஜி. (‘விஜய் டிவில கக்கூஸ் கழுவத்தான் லாயக்கு’ என்று தன்னை பாலாஜி வசைந்ததாக நித்யா ஒருமுறை சொல்லியிருக்கிறார். இப்போது அதே பணியை பாலாஜியே முன் வந்து கேட்பதைப் பார்க்கும்போது வாழ்க்கை எனும் நாடகத்தில் வரும் நகைச்சுவையான திருப்பங்களையும் முரண்களையும் உணர முடிகிறது. இதில் நமக்கும் கூட ஒருவகையான நீதியிருக்கிறது). 

மிக எளிய விஷயம்தான். ஒரு பிரச்னையை சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று நட்புத்தொனியில் நேராக பேசாமல் சுற்றி வளைத்துப் பேசுவதால் அது பெரிதாகத்தான் வளர்கிறது. டேனி இதைக் கையாண்ட விதம் அபாரம். வீட்டில் இருக்கிறார்களா இல்லையா என்று சந்தேகப்படும்படி சந்தடியில்லாமல் இருப்பவர்கள் அனந்த் மற்றும் பொன்னம்பலம். ‘தான் இருக்கிறேன்’ என்பதை அனந்த் இன்று நிரூபித்துவிட்டார். ‘இதுதான் விஷயம். சிறிய விஷயம்தான். இதை அறிந்து பாலாஜி கோபப்படுவார் என்றார் கோபப்படட்டும். இது சார்ந்த பக்குவம் வரவேண்டும்’ என்று அனந்த் சொல்வதும் சரிதான். (என்னவொன்று, இவர் ஹோட்டல்களுக்கு செல்லும் போது தப்பித் தவறி கூட கிச்சன் பக்கம் எட்டிப் பார்க்காமலிருப்பது நல்லது). 

‘இதை நீ பதட்டமில்லாமல் நிதானமாக அணுகியிருக்க வேண்டும்’ என்று வைஷ்ணவிக்கும் உபதேசித்தார் அனந்த். மனிதர் இன்று உதிர்த்த தத்துவ முத்துக்கள் அனைத்தும் சிறப்பானது. ‘சின்ன விஷயத்தை பெரிசு பண்ணா.. இதை இன்னமும் பெரிசாக்க என்னால் முடியும்’ என்று சொன்னவர் ‘நீ உன் வேலையை ரொம்ப நல்லா பண்ண நெனக்காத. சொதப்பிடும். சுமாரா பண்ணு போதும். நல்லா வரும்” என்றெல்லாம் சொன்ன போது நமக்கு கண்ணீர் மல்கி புல்லரித்தது. 

இந்த விஷயத்தால் சென்றாயனுக்கும் பாலாஜிக்கும் மனவருத்தம் ஏற்பட்டது போல. சென்றாயன் புலம்பிக்கொண்டேயிருந்தார். 'குஷி' திரைப்படத்தில் ‘இடுப்பைப் பார்த்தியா.. பாக்கல… என்று ஏற்படும் பிரச்னை மாதிரி.. ‘இட்லித்தட்டு’ பிரச்னையை சென்றாயன் நேரடியாக பார்த்தாரா இல்லையா என்கிற பஞ்சாயத்தும் சில நிமிடங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தது. 

“உன் மேல இங்க நெறய பேரு கொலைவெறில இருக்காங்க..  எதைச் சொல்றதுக்கு முன்னாடியும் நாலைந்து தடவை யோசித்து சொல்லு” என்று வைஷ்ணவியை எச்சரித்தார், சென்றாயன். இரவில் நடக்கவிருக்கும் ஒரு போட்டிக்கு இப்படி யோசித்து முடிவு சொன்னதால் வரவிருந்த பஞ்சாயத்தைப் பற்றி வைஷ்ணவியால் அப்போது யூகித்திருக்கக்கூட முடியாது, பாவம். 

“நான் கீழ விழுந்து அடிபட்டாகூட எங்க பேரண்ட்ஸ் ஹெல்ப் பண்ண வரமாட்டாங்க.. தானா எழுந்திருக்கணும்’னு நெனப்பாங்க.. அப்படி போல்டா வளர்த்திருக்காங்க” என்று ரித்விகாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார், யாஷிகா.

தன் பெற்றோரைப் பற்றி யாஷிகா சொன்னதும் தன் வீட்டு நினைவு வந்து ரித்விகா கண்கலங்க, மும்தாஜ் உள்ளிட்ட சிலர் வந்து அவரை சமாதானப்படுத்த முயன்றார்கள். மஹத்திற்கு தடவும் பிரச்னை என்றால் ஷாரிக்கிற்கு மடியில் படுத்துக்கொள்ளும் பிரச்னையிருக்கிறது. மும்தாஜின் வழிகாட்டலோடு இந்தச் சந்தடியில் சென்று  ரித்விகாவின் மடியில் படுத்துக் கொண்டார். (கமல் சார் கேக்கப் போறாரு..) கூட்டுப் பிரார்த்தனை போல கூட்டு அழுகையை விளையாட்டாக நிகழ்த்தி ரித்விகாவை சிரிக்க வைத்தார்கள். ஒருவகையில் நல்ல காட்சி இது. நீண்ட வருடங்கள் ஹாஸ்டலில் தங்கியிருப்பவர்கள், வீட்டு நினைவில் கலங்கும் போது சுற்றியிருக்கும் நண்பர்கள்தான் தேற்றி விடுவார்கள். 

‘தண்ணில கண்டம்’ என்றொரு சவால் போட்டி. இதன் விதிமுறைகளைப் பற்றி வரவேற்பறையில் நின்றுகொண்டு மற்ற உறுப்பினர்களுக்கு ஜனனி விளக்கினார். வீட்டு உறுப்பினர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்படுவார்கள். தலா 1500 மதிப்பெண்கள். வெளியே இரண்டு தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் நான்கு துளைகள் இருக்கும். தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியே செல்லாமல் போட்டியாளர்கள் கை வைத்து அடைக்க வேண்டும். ஒருவருக்கு களைப்பு ஏற்பட்டால் தன் அணியில் உள்ள மற்றவரை வைத்து மாற்றிக்கொள்ளலாம். தொட்டியிலுள்ள தண்ணீரின் அளவை வைத்து மதிப்பெண் தரப்படும். 

மைக்கை அணியாதிருத்தல், ஆங்கிலத்தில் பேசுதல், பகலில் தூங்குதல் ஆகிய செயல்களைப் போன்று, பிக்பாஸ் வீட்டு விதிமுறைகளை எவராவது மீறினால், எதிர் அணியைச் சார்ந்தவர்கள் கேமராவின் முன் இதைப் பற்றி புகார் சொல்லிவிட்டு, எதிரணியின் தொட்டியில் இருந்து ஐந்து குவளை தண்ணீரை எடுத்து தங்களின் தொட்டியில் ஊற்றிக்கொள்ளலாம். (ஏதொவொரு ‘வில்லேஜ்” விஞ்ஞானிதான் பிக்பாஸ் டீம்ல இருந்து கொண்டு இந்த மாதிரி ஐடியால்லாம் தர்றார்னு நெனக்கறேன்).

முதலில் மாட்டியவர் பொன்னம்பலம். அவர் மைக் அணியாமலிருப்பதைக் கவனித்த ரித்விகா, முன்வரிசை மாணவன் போன்ற உற்சாகத்துடன் கடகடவென்று ஓடி கேமராவின் முன்னால் சொல்லிவிட்டு தனது அணிக்கு ஐந்து குவளை தண்ணீரைப் பெற்றுத் தந்தார். இப்படியே பரஸ்பரம் சில ஜாலியான கலாட்டாக்கள் நடந்தன. ‘தமிழ் உரையாடலின் இடையே ஆங்கிலத்தில் ஒன்றிரண்டு சொற்கள் வந்தால் பரவாயில்லை, முழு வாக்கியமாக அமையக்கூடாது’ என்று இவர்களாக பேசி விதியைத் தளர்த்திக்கொண்டார்கள். 

நீரை அடைப்பதற்காக, நீண்ட நேரமாக வெயிலில் நின்றிருந்த நித்யாவிற்கு பாசத்துடன் லெமன் ஜூஸ் கொண்டு வந்து ஊட்டிவிட்டார், பாலாஜி. பிறகு இதை நெகிழ்வுடன் மும்தாஜிடமும் பகிர்ந்தும் கொண்டார். 'பாவம்.. ரொம்ப நேரம் வெயில்ல உக்காந்திருக்குது..  ஜூஸ் போட்டுக்கொடுத்தேன். அது என்னை பார்த்து சிரிச்சதே... போதும்... பசியே எடுக்கலை…' என்று சொல்லிவிட்டு தட்டிலிருந்த உணவை வேக வேகமாக உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். பாலாஜியின் இந்த கரிசனம், நாமினேஷனுக்காக நடக்கும் நாடகமா அல்லது அவருக்கு உண்மையிலேயே மனமாற்றம் ஏற்படுகிறதா என்று தெரியவில்லை. (போங்கப்பா... இதைப் பேசி பேசி... நமக்குத்தான் டயர்ட் ஆகுது).

தொட்டியிலிருந்த நான்கு துளைகளை இரண்டு போட்டியாளர்கள் பிடித்து நின்றுகொண்டிருந்தார்கள். பிறகு இதில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இரண்டு துளைகளை ஒருவர் அடைக்க வேண்டும். மற்ற இரண்டு துளைகளை, ஒருவராக அல்லாமல் இரண்டு பேர் நின்று அடைக்க வேண்டுமாம். (இதுல ஏதோவொரு நுணுக்கமான சயின்ஸ் மேட்டர் இருக்கும் போல. நமக்குத்தான் புரிய மாட்டேங்குது. எம்.ஏ. பிலாஸபி…)

“பேச்சைக் குறைங்களேன். பாயிண்ட்ஸ் போவாம இருக்கும்” என்றொரு நல்ல யோசனையைத் தந்தார், அனந்த். ஆனால் யார் கேட்கிறார்கள்? சந்தைக்கடை மாதிரி ஒரே சத்தம். (அனந்த்தின் யோசனையைக் கேட்டு பிக் பாஸிற்கேகூட கோபம் வந்திருக்கலாம். ‘யோவ்.. உலக அமைதிக்காகவா, நாலு தொட்டி தண்ணி வெச்சு, இந்த ஐடியால்லாம் யோசிச்சு வெச்சிருக்கோம். நீதான் கம்னு மூலைல உக்காந்து இருக்க. அதே மாதிரி எல்லோரும் உக்காந்தா எங்க பொழப்பு எப்படி ஓடும்?).

முதல் சீஸனில், ‘எவர் எவருடன் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்’ என்று ஒரு பின்னணிக்குரல் அந்தப் புறணிகளைப் பற்றி அறிமுகப்படுத்தும். இந்த சீஸனில் அதைக் காணோம். இன்றைக்குத்தான் முதன்முறையாக அந்தக் குரல் ஒலித்தது என்று நினைக்கிறேன். ‘நேற்று ஐஸ்வர்யாவுடன் நடந்த பிரச்னையைப் பற்றி யாஷிகா மற்றும் ஷாரிக் பேசிக்கொண்டிருக்கின்றனர்’ என்று பின்னணிக்குரல் ஒலித்ததைத் தொடர்ந்து, ‘நீ கேம்ல கவனம் செலுத்து. மத்தவங்களுக்கு ப்ரூவ் பண்ணு. ஐஸ்வர்யா பேசாம இருக்கிறதைப் பத்தி யோசிக்காதே.. அவ அப்படித்தான். நானும் கூட சொல்லிப் பார்த்துட்டு விட்டுட்டேன்” என்று ஷாரிக்கிற்கு உபதேசித்துக்கொண்டிருந்தார், யாஷிகா. “யாராவது அவளுக்கு அட்வைஸ் பண்ணா தப்பா எடுத்துப்பாளா… முன்னாடி ஒருமுறை அவ டிரஸ் சரியா இல்லைன்னு சொன்னதுக்கு என்னைக் கோச்சுக்கிட்டா’ என்று பழைய பஞ்சாயத்தைக் கிளறிக்கொண்டிருந்தார் ஜனனி. பொழுது போக வேண்டுமே!

ஒரு கிராமத்திலிருந்த அணையில் ஏற்பட்ட ஓட்டையை தன் கைவிரலால் அடைத்து, இரவு முழுவதும் தூங்காமல் ஊரைக் காப்பாற்றிய சிறுவனின் கதையை ‘ஒண்ணாப்பு’ பாடத்தில் படித்திருந்தாலும் மறக்காமல் இங்கு சொல்லிக் கொண்டிருந்தார் டேனி. பொருத்தமான சமயத்தில் நினைவுகூரப்பட்ட கதைதான். ஆனால் கதை சொல்லும் உற்சாகத்தில் ‘Moral of the story’ –என்று அவர் இறுதியில் சொல்லி விட ஐந்து குவளை தண்ணீர் பறிபோனது. “யப்பா.. சாமி.. நீ ஆணியே புடுங்க வேண்டாம்” என்று மற்றவர்கள் ஜாலியாக எரிச்சலடைந்தார்கள். 

வெயிலில் அமர்ந்து நீர்த்தொட்டிகளை காவல்காக்கும் இந்த ரணகளமான நேரத்திலும் தன் ரொமான்ஸை விடாமலிருந்த மஹத்தின் அர்ப்பணிப்பு உணர்வை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. “மச்சக் பச்சக்.. ஒரு கிஸ் கொடு” என்று எதிரணி யாஷிகாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார். “நீ கொடுத்தியன்னா.. கைய எடுத்துடறேன்.. தண்ணி போகட்டும்’ என்று அவர் சேம் சைட் கோல் போடவும் தயாராக இருந்தார். “யப்பா.. டேய் .. இவன் செஞ்சாலும் செய்வான்” என்று அலறினார், டேனி. டி-20 மேட்சின் கடைசி ஓவரைப் பார்ப்பதைப்போல் வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார், மஹத். 

அனந்த்தின் தலைகுளியலுக்கு உதவுவதற்காக அவரை அழைத்துச் சென்றார் மும்தாஜ். “மச்சான்.. அனந்த் கொடுத்து வெச்சவர்டா.. மும்தாஜ் குளிப்பாட்டப் போறாங்க’ என்று அதையும் கொச்சையாக நக்கலடித்துக் கொண்டிருந்தார் மஹத். “நீ எப்படியும் அடுத்த வாரம் நாமினேஷன்ல வந்துடுவ” என்று ஜாலியாக எச்சரித்தார், டேனி. தனக்கு உதவிய மும்தாஜிடம் ‘God Bless you’ என்று அனந்த் நன்றி தெரிவிக்க, “ஐயோ ஆங்கிலத்தில் பேசாதீங்க. வெளிய தெரிஞ்சா பாயிண்ட்ஸ் போயிடும்” என்று பதறினார், மும்தாஜ். 

மஹத் செய்த பிழையினால் இரண்டு முறை தண்ணீர் பறிபோனதால், “பேசிக்கிட்டே இருக்காதீங்க” என்று மஹத்தைக் கோபித்துக் கொண்டார் மும்தாஜ். “அது என்ன.. ஸ்கூல் பையன் மாதிரி என்னை மட்டும் பேசாதே-ன்னு சொல்றீங்க.. நான் பேசுவேன்” என்று ஸ்கூல் பையன் மாதிரியே அடம்பிடித்தார் மஹத். இவரின் அலப்பறைகளையும் சேட்டைகளையும் ஏன் ஆண்டவர் தண்டிக் கேட்பதில்லை?. 

நீரை வீணாக்கக்கூடாது என்று இவர்கள் செய்துகொண்டிருந்த நாடகம், இயற்கைக்கே பொறுக்கவில்லையோ என்னமோ.. கடுமையான மழை பெய்தது. பிக்பாஸ் அறிவிப்பு வராததால் அப்படியே உட்கார்ந்திருந்தார்கள். சிறிது நேரம் கழித்து, போட்டியை நிறுத்தச் சொல்லி அனைவரையும் உள்ளே அழைத்தார் பிக்பாஸ். சென்றாயன் காபி கேட்ட விவகாரத்தில் மும்தாஜ் தன்னிடம் “ஓவராக’ நடந்து கொண்டதாக புலம்பினார் ஜனனி. டாமினேட் செய்கிறாராம். 

சமையல் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்த சென்றாயன் மற்றும் டேனியைப் பார்த்து, படுக்கையறையில் அமர்ந்திருந்த பாலாஜி குழு ‘டப்பிங்’ கொடுத்துக்கொண்டிருந்தது. ஜாலியான காட்சிகள். ‘ஏதோ நம்மளை ஓட்டறாய்ங்க’ என்று புரிந்துகொண்டார் சென்றாயன். நீர் சிக்கனம் பற்றி சமூகப் பொறுப்புடன் ஒரு சவால் போட்டியை நடத்திக்கொண்டிருக்கிறாரே.. என்று உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி முடிப்பதற்குள் நம் எண்ணத்தை தலை கீழாக கவிழ்த்தார் பிக்பாஸ். 

அடுத்த போட்டி ‘சிந்தாமல் சிதறாமல்’. ஏற்கெனவே பிரிக்கப்ட்ட இரண்டு அணிகளில் இருந்து மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட இடைவெளிகளில் நின்று கொண்டு, போடப்பட்டிருக்கும் எல்லைக்கோட்டைத் தாண்டாமல் இருக்க வேண்டும். முதல் நபர் நீச்சல் குளத்தில் இருந்து ஒரு குவளை நீரை எடுத்து, சற்று தூரத்தில் நின்றிருக்கும் நபரின் குவளையில் நீரை எறிய வேண்டும். அவர் அடுத்தவரிடம் அதை எறிய, அவர் அந்த நீரை ஒரு தொட்டியில் சேர்க்க வேண்டும். எந்த அணி அதிக நீரைச் சேமிக்கிறதோ அது வெற்றி பெற்ற அணி. அதற்கு 200 மதிப்பெண்கள். 

மும்தாஜ், மஹத், டேனி ஆகியோர் சிவப்பு நிறத் தொட்டி அணி. யாஷிகா, ஷாரிக், நித்யா ஆகியோர் நீல நிறத் தொட்டி அணி. எல்லைக் கோட்டைத் தாண்டாமல் விளையாடுங்கள் என்று எச்சரித்துக்கொண்டேயிருந்தார் நடுவர், வைஷ்ணவி. ஒருவர் மற்றவர் குவளையில் எறிவதால் வழியிலேயே நிறைய நீர் வீணாகி கடைசியில் சிறிது நீர்தான் சேமிக்க முடிந்தது. எனவே வேகம் வேகமாக செயல்படத் துவங்கினார்கள்.  இறுதியில், சிறிது வித்தியாசத்தில் சிவப்பு நிறத்தொட்டி அணி வெற்றி பெற்றது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

மற்றவர்களைவிட யாஷிகாதான் எல்லைக்கோட்டைத் தாண்டாமல் நேர்மையாக விளையாடினார் என்று பாராட்டினார், வைஷ்ணவி. வெற்றி பெற்ற சிவப்பு அணிக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. எதிரணி தொட்டியில் இருந்து இரண்டு பக்கெட் நீரை தாங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த மதிப்பெண்களை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். வெற்றி பெற்ற அணி உற்சாமாக கூவிற்று. விதிமுறைகளை மீறும் அணியினரிடமிருந்து ஐந்து குவளைக்குப் பதிலாக இனி ஒரு பக்கெட் நீரை எடுத்துக் கொள்ளலாமாம். 

‘இங்கொன்றும் அங்கொன்றுமாக மாற்றி மாற்றி பேசுகிறார்’ என்று வைஷ்ணவியைப் பற்றிய அபிப்ராயம் மற்ற போட்டியாளர்களின் மனதில் ஏற்கெனவே வலுவாக உள்ளது. இந்தப் போட்டியின் முடிவிலும் அது எதிரொலித்தது. ‘எங்க டீமை disqualify பண்ணணும்னு மத்தவங்க கிட்ட’ சொன்னீங்களாமே…’ என்று ஷாரிக் வைஷ்ணவியிடம் கோபித்துக்கொண்டார். ‘அது என் மைண்ட் வாய்ஸ். சத்தமா சொல்லலை’ என்பதை வைஷ்ணவி விதவிதமாக விளக்கம் அளித்தும் ஷாரிக் ஏற்கவில்லை. (இந்தப் பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாருங்களேன்.) “மத்த டீமை ஒப்பிடும்போது உங்க டீம்ல இருந்தவங்க.. அடிக்கடி கோட்டைத் தாண்டினாங்க.. இது பத்தி வார்னிங் பண்ணிட்டே இருந்தேன். முதல்ல நெனச்சேன். ஆனா சொல்லலை” என்பது வைஷ்ணவியின் வாதம். 

‘எதை செஞ்சாலும் பிளான் பண்ணி செய்யணும்’ என்று காலையில் சென்றாயன் சொன்னதை வைஷ்ணவி பின்பற்றினாலும் பிரச்னை அவரைத் தேடி வந்தது, பாவம். ‘பாரபட்சத்தோடு செயல்பட்டிருந்தால் உங்கள் அணியின் ‘யாஷிகா’வைப் பாராட்டியிருப்பேனா” என்று அவர் கேட்டு ஷாரிக்கை மடக்கியிருக்கலாம். தோன்றவில்லை போல. 

உணவு நேரம் முடிந்ததும் மறுபடியும் நீர் அடைக்கும் போட்டி தொடர்ந்தது. அங்கிருந்த பற்பசை விளம்பரம் ஒன்றை வாசித்த டேனி, அதற்குத் தொடர்பான ஆங்கிலச் சொற்களையும் தன்னிச்சையாக பேசி விட எதிரணியினர் பிடித்துக் கொண்டனர். ‘அந்தச் சொற்கள் அங்கே இருந்தால் அது பிழையில்லை’ என்கிற லா பாயிண்ட்டுடன் சமாதானத்திற்கு வந்தார் வைஷ்ணவி. என்றாலும் அது ஏற்கப்படவில்லை. இந்தப் பிரச்னைக்குப் பிறகு தூய தமிழில் பேச முயன்றார் டேனி. அது ஆங்கிலம் கலந்து பேசுவதை விடவும் கொடுமையாக இருந்தது. 

மீண்டும் மழை. இந்தப் போட்டியை விடிய விடிய நடத்த வேண்டும் என்பது ஏற்பாடு போல. இதன் மூலம் அதிக சண்டைகள் நடந்து ‘தன் காட்டில் மழை பெய்ய வேண்டும்’ என்பது பிக்பாஸின் நோக்கம் போல. பார்ப்போம். பாலாஜி - அனந்த் பிரச்னை, ஷாரிக் - யாஷிகா வாக்குவாதம் போன்றவற்றை ஒரு தலைவியாக வைஷ்ணவி கையாண்டதைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் பதிவு செய்யவும்