Published:Updated:

பிக்பாஸின் அண்டர் வாட்டர் ஆபரேஷன்... அண்டர் கவர் ஆபீஸர் மும்தாஜ்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பிக்பாஸின் அண்டர் வாட்டர் ஆபரேஷன்... அண்டர் கவர் ஆபீஸர் மும்தாஜ்! #BiggBossTamil2
பிக்பாஸின் அண்டர் வாட்டர் ஆபரேஷன்... அண்டர் கவர் ஆபீஸர் மும்தாஜ்! #BiggBossTamil2

மும்தாஜுக்கு நேற்றிரவு ஒரு ரகசிய சவால் தரப்பட்டது. அதை அவர் நீண்ட யோசனைக்குப்பின் ஒப்புக்கொண்டார். ஒருபக்கம், இந்த ரகசிய சவாலுக்கு அவர் ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது என்று தோன்றினாலும், இரண்டு நாட்களாக இழுத்துக்கொண்டு இருக்கும் இந்த டாஸ்க்கை எப்படியாவது முடித்துத் தொலைங்க மோடுக்கு போட்டியாளர்களும், பார்வையாளர்களும் வந்துவிட்டனர். இந்த அணியில் ஒருவர் ஆங்கிலம் பேச, அதை எதிரணியினர் கண்டுபிடிக்க என்னும் இந்த விளையாட்டு மாறி மாறி நடந்துகொண்டே இருந்ததால், 'முடிவுரை இல்லா சோதனையாக' டாஸ்க் இழுத்துகொண்டே இருந்தது.
 

‘அந்த ரகசிய டாஸ்க்கை மும்தாஜ் வெற்றிகரமாக முடித்தால், ஒட்டு மொத்த அணிக்கும், லக்சரி பாயின்ட் வழங்கப்படும். ஆனால், மற்ற போட்டியாளர்கள் நம்மை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்கிற கேள்வியும் உண்டு. சென்ற சீசனில் ' ட்ரிக்கர்' சக்திக்கு இதே போல், ஒரு சீக்ரெட் டாஸ்க் தரப்பட்டது. அந்த டாஸ்க்கில் சக்தி வெற்றிபெற்றாலும், ஒட்டு மொத்த அணிக்கும் துரோகம் இழைத்ததற்கு கண் கலங்கினார் சக்தி. அதே போன்றதொரு நிலை, மும்தாஜுக்கு வருமா என்பது இன்று தெரியும்

அந்த வகையில் மட்டுமே மனம் இதை ஏற்றுக்கொள்கிறது. போட்டியாகவே இருந்தாலும், இதை மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பதற்குக் காரணமும் இருக்கிறது. ‘வெற்றி மட்டுமே முக்கியம். அதன் வழிகளை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்’ என்கிற செய்தியை முதலாளித்துவ சமூகம் நம் ஆழ்மனதில் பல்வேறு விதமாக ஆழமாக படிய வைத்துக்கொண்டிருக்கிறது. தன்னுடைய அல்லது தன்னுடைய குழுவின் வெற்றிக்காக எவரையும் எப்படியும் மிதித்துக்கொண்டு முன்னேறலாம் என்கிற எண்ணம் நமக்குள் இயல்பானதாக மாறி இருக்கிறது. ஆனால் மனச்சாட்சியின் குரலை நசுக்கிக்கொண்டு முன்னகரும் எந்தவொரு செயலும் முறையற்றதே. அவ்வாறு கிடைக்கும் வெற்றியும் ஆதாயமும் அர்த்தம் இல்லாதது.  ஆதாரமாக நம்முள் இயங்கிக்கொண்டிருக்கும் அறவுணர்வின் குரலை காது கொடுத்துக் கேட்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். 

மும்தாஜ் செய்த ரகசிய சவாலின் மூலம் அனைவருக்கும் வெற்றி கிடைக்கப்போகிறது. லக்ஸரி பொருட்களுக்கான மதிப்பெண்களும் சிறப்புச் சலுகையும் கிடைக்கும் என்பது சரிதான். ஆனால் இதை அறிய வந்தவுடன் தங்களின் உழைப்பைக் கொன்று கிடைத்த வெற்றி சரிதானா என்று அவர்களில் நுண்ணுணர்வுள்ள சிலருக்குத் தோன்றலாம். இதற்காக சண்டைகளும் நடக்கலாம். அல்லது ‘எப்படியோ..வெற்றிதான் கிடைத்துவிட்டதே’ என்று மகிழ்ச்சியும் அடையலாம். 

இப்படி ஒருவரை ‘டபுள் ஏஜெண்ட்’ ஆக்குவதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே ஒருவரையொருவர் எப்போதும் சந்தேகப்படும்படியான சூழலை பிக்பாஸ் உருவாக்குகிறார். இனி, ஒருவரின் அசைவில் விநோதமாக ஏதாவது தெரிந்தாலும்கூட அது ‘ரகசிய சவாலோ’ என்று மற்றவருக்குத் தோன்றும். ‘பாம்பா.. விழுதா’ என்கிற எண்ணம் ஓடிக்கொண்டேயிருக்கும்.

இது மட்டுமல்லாமல் பிறகு நடக்கப் போகும் டாஸ்க்களில் ‘இதை எந்த ரகசிய ஆசாமியாவது வீணாக்குவாரோ’ என்று ஒருவேளை உருவாகும் மனத்தடை போட்டியாளர்களுக்கு சோர்வை உருவாக்கக்கூடும். 

மும்தாஜின் ரகசிய சவால் தொடர்பான விஷயம் அறியப்பட்டதும் மற்ற போட்டியாளர்கள் இதற்கு எப்படி எதிர்வினை செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

16-ம் நாளின் நிகழ்வுகள் இன்னமும் முடியவில்லை. மழை பெய்ததால் ‘தண்ணியில கண்டம்’ சவாலை தற்காலிகமாக நிறுத்தச் சொல்லி பிக் பாஸ் உத்தரவிட்டார். அந்த நள்ளிரவு நேரத்திலும் மும்தாஜுக்கும் ஜனனிக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது. ‘பேசுகிற விதம் சரியில்லை’ என்று பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டார்கள். 

முதல் சீஸனில், இதே போன்று நள்ளிரவில் காயத்ரிக்கும் ஒவியாவிற்கும் நிகழ்ந்ததொரு உரசலை இந்தச் சம்பவம் நினைவுப்படுத்தியது. ‘மஹத் ஓகே.. ஆனா இந்த ஜனனி dirty game விளையாடறா. மஹத்தை எனக்கு எதிராகப் பேச தூண்டி விடறா. நல்ல வேளை..மஹத் respond பண்ணலை..  மஹத் அப்படி பேசியிருந்தா.. வேற மும்தாஸை பார்த்திருப்பா...' என்று ரம்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார், மும்தாஜ். தலைமுறை இடைவெளி பிரச்னைதான் இதற்கு அடிப்படையாக இருக்கக்கூடும். 

17-ம் நாள் காலை. ‘வடக்கே கேட்டுப்பாரு.. என்னைப் பத்தி சொல்லுவான்’ என்கிற எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் அனைவரையும் எழுப்பியது. இது டெல்லியிலிருந்து வந்திருக்கும் ‘யாஷிகா’வின் பெருமையை குறிக்கும் பாடலாக இருக்குமோ என்று தோன்றியது. வெளியே குத்தாட்டம் போட்டவர்களில் யாஷிகாவின் உடை ‘ஒரு மார்க்கமாகத்தான்’ இருந்தது. 

‘மும்தாஜ் உன்கிட்டே ஒழுங்கா பேசறாங்களா.... என்கிட்ட டாமினேட்டிங்கா பேசறாங்க.. இனிமே நானும் அப்படியே திருப்பிப் பேசிடுவேன்’ என்று மஹத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார், ஜனனி. இவர்களுக்கு இடையேயான பஞ்சாயத்து சில நாட்களுக்கு ஓடும் போலிருக்கிறது. 

தண்ணீர்தொட்டி சவாலை மறுபடி துவங்குவதற்கான ஒலி வந்தது. மஹத்திற்கு தண்ணீர் புகட்டினார், மும்தாஜ். அப்போது ‘கமான்.. ப்ரோ’ என்று ஆங்கிலத்தில் பேசிவிட்டார். எனவே காலையிலேயே துவங்கியது ஒரு பஞ்சாயத்து. “நேத்திக்கு... கமான்கய்ஸ்’ –ன்னு நாங்க சொன்னதுக்கு ஒரு பக்கெட் தண்ணி எடுத்தீங்கள்லே.. இப்ப நாங்க எடுப்போம்’ என்றார்கள். அந்த சோகத்தில் மஹத் தத்துவப் பாடலைப் பாடினார். இதைக் கேட்டு எரிச்சலான எதிரணி யாஷிகாவிடம் ‘ I want to sing’ என்று மஹத் சொல்ல.. இன்னொரு பக்கெட்டை தியாகம் செய்வதற்கான பரிதாபம் வந்தது. 

மஹத்தை தொடர்ந்து பேச வைத்து அதன் மூலம் மேலும் தண்ணீரைப் பிடுங்க முடியுமா என யாஷிகா அணி முயற்சி செய்தது. “நீ பொண்ணுங்களைப்  பார்த்தாலே உளறுவே. நான் சொல்றத மட்டும் பதிலா சொல்லு” என்பது மாதிரி அருகில் ரித்விகா ஜாக்கிரதையாக இருந்தார். தண்ணீரை அடைத்துக்கொண்டிருந்த அனந்த்திடம் ‘how are you’ என்று தன்னிச்சையாக மும்தாஜ் விசாரித்துவிட இன்னொரு பக்கெட் போனது. ‘மும்தாஜ் இங்க வந்தாலே ஏதாவது உளறிடறாங்க அவங்க வாயைக் கிளறினா நமக்கு லாபம்…’ என்று ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்தார், ஜனனி.

அடுத்த பஞ்சாயத்து ஐஸ்வர்யாவின் மூலமாக வந்தது. ‘அவர் சமையல் அணியில் சரியாக உதவி செய்யவில்லையாம். சொல்லப்பட்ட வேலையை பாதியில் வைத்துவிட்டு போய் விடுகிறாராம்’ டேனியும் பாலாஜியும் இது குறித்த ஆட்சேபத்தை நாட்டாமை வைஷ்ணவியிடம் சொல்ல.. ‘பசுபதி.. பூட்றா வண்டிய” என்று ஆவேசமாக கிளம்பினார் வைஷூ. இப்படி நாள் முழுவதும் இரண்டு அணிகளுக்கிடையேயும் மாட்டி பஞ்சாயத்து செய்தே சோர்ந்து போனார் அவர். “எனக்கே கிச்சன்லே முக்யமானே வேலே கொடுக்க மாட்றாங்கோ’ என்று எல்கேஜி தமிழில் ஐஸ்வர்யா வருத்தப்படுகிறாராம். 

பேசாமல் ரித்விகாவை சமையல் அணிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ‘இப்படியே அவங்கங்க இஷ்டத்திற்கு டீம் மாத்திட்டு இருந்தா எப்படி.. இதுக்கு முடிவுதான் என்ன?’ என்று டேனி ஆதங்கப்பட்டதில் நியாயம் இருந்தது. பிறகு சமாதானத்திற்கு வந்த ஐஸ்வர்யா, “அது முக்கியமான task இல்லையா.. அதனாலதான் சமையலை விட அதுக்கு முக்கியம் தந்தேன்’ என்பது போல விளக்கம் தந்தார். என்னே ஒரு கடமையுணர்ச்சி! ‘சோறா முக்கியம்.. வேலைதான் முக்கியம்’.

தங்கள் தொட்டியின் தண்ணீர் அளவை உயர்த்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அடுத்த சவாலின் மூலம் போட்டியாளர்களுக்கு தரப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணியில் இருந்தும் இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நீச்சல் குளத்தில் இரண்டு நிறங்களில் ஆங்கில எழுத்துள்ள நாணயங்கள் போடப்பட்டிருக்கும். ஒரு நபர் நீச்சல் குளத்தில் மூழ்கி நாணயங்களைத் தேடி மற்றவரிடம் தர வேண்டும். அவர் அருகிலுள்ள பலகையில் அதனை ஒட்டுவார். ‘SAVE WATER’ என்கிற வாக்கியத்தை எந்த அணி முதலில் உருவாக்குகிறதோ.. அந்த அணி வெற்றி பெறும். (பிக்பாஸ் மெசேஸ் சொல்றாராமாம், கண்ணாடியை திருப்பினா எப்படி பாஸ் ஆட்டோ ஓடும்?!).

இது ஹை-பட்ஜெட் சீஸன் போலிருக்கிறது. நீருக்கு அடியில்கூட காமிராவை வைத்து ஆச்சரியப்படுத்தினார்கள். மஹத்தும் ஷாரிக்கும் அவரவர்களின் அணிக்காக மூச்சு வாங்க வேகமாக செயல்பட்டார்கள். ஷாரிக் முந்திக்கொள்ள அவர் அணி வெற்றி பெற்றது. ‘ரெண்டு பெரும் சிறப்பா செயல்பட்டீங்க.. ஒரு செகண்ட் வித்தியாசத்துல.. அந்த டீம் ஜெயிச்சிடுச்சு’ என்று துல்லியமான (?!) காரணத்துடன் தீர்ப்பு சொன்னார், நாட்டாமை வைஷ்ணவி. (பின்னே.. எதையாவது சொல்லிட்டே இருந்தாத்தானே.. அவர் நாட்டாமையா இருக்க முடியும்!).

வெற்றி பெற்ற அணி, மற்ற அணியின் தொட்டியிலிருந்து மூன்று பக்கெட் தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். 

‘இந்த மஹத்தும் மும்தாஜூம் உளறுவாயங்களா இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் ஆணியே புடுங்க வேண்டாம்’ என்று அவர்களின் அணியில் உள்ளவர்கள் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள். ‘இது ஒரு கேம்.. எதுக்கு வாழ்க்கையே போறா மாதிரி டென்ஷன் ஆகணும்” என்பது மஹத்தின் பாலிசி. (அதானே.. தலைவா.. நாம வந்த வேலையை கண்ணுங் கருத்துமா பார்ப்போம்..)

“நீங்க எனக்கு சாப்பாடு ஊட்டிவிடும்போது எனக்கு அப்பா ஞாபகம் வருது” என்று யாஷிகா கண்கலங்கி சொல்ல, ‘கர்மம்.. என்னைப் பார்த்து அப்பான்னா தோணணும்” என்று வருத்தப்பட்டு தலையில் அடித்துக்கொண்டார், பாலாஜி. இந்த உணர்ச்சிப் பெருக்கின் இடையே ஆங்கிலத்தில் சில சொற்களை யாஷிகா சொல்ல அதற்கு மறுபடியும் ஒரு பஞ்சாயத்து. “மும்தாஜ்கூட இப்படிப் பேசிட்டு.. பிறகு இல்லைன்னு சாதிக்கறாங்க” என்று இந்த அணி ஒப்பாரி வைத்தது. (இவர்களின் தகராறில் நமக்குத் தெரிந்த கொஞ்சம் நஞ்சம் ஆங்கிலமும் மறந்து விடும் போல)

யாஷிகா பேசியது முழு வாக்கியமா.. இல்லையா.. என்று சந்தேகம் கேட்க வைஷ்ணவியிடம் ரித்விகா வர, பாலாஜியுடன் உரசல் நிகழ்ந்தது. ‘’நான்தான் விசாரிச்சு நியாயமா பேசிட்டு இருக்கேன்ல’ என்று தானே சொல்லிக்கொண்டார், வைஷ்ணவி. 

பொழுது போகாத வைஷ்ணவி, இரண்டு அணியில் இருப்பவர்களின் கைகளுக்கும் மசாஜ் செய்ய,. ‘தலைவி.. ன்னா ஓரமா உக்கார வேண்டியதுதானே.. எதுக்கு அவங்க கிட்ட ஏதாவது பேசி.. வாயைப் பிடுங்கி.. அவங்க தப்பா ஏதாச்சும் பேசி.. பாயின்ட் போறதுக்கா” என்று கோபப்பட்டார், பாலாஜி.  ‘நல்லதுதானே பண்ண வந்தேன்..” என்று வைஷ்ணவி சலித்துக்கொண்டாலும் பாலாஜி சுட்டிக்காட்டுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது. 

தண்ணீர் அளவை உயர்த்திக்கொள்ள மறுபடியும் ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தது. ஒவ்வொரு அணியிலிருந்தும் ஆறு நபர்கள் முன்வர வேண்டும். இரண்டிரண்டு நபராக சேர்ந்து, பக்கெட்டில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானத்தை ஸ்டிராவின் மூலம் உறிஞ்சியெடுத்து சற்று தூரத்தில் இருக்கும் காலி பக்கெட்டில் துப்ப வேண்டும். முதல் இரண்டு பேர் சென்றவுடன் அடுத்த இரண்டு பேர் அவர்களைத் தொடர வேண்டும். எந்த அணி அதிக பானத்தை சேர்க்கிறதோ, அதுவே வெற்றி பெற்ற அணி. இதற்கு மூன்று பக்கெட் தண்ணீர் பரிசு.

வெவ்வேறு வண்ணங்களில் நிரப்பப்பட்டிருந்த குளிர்பானங்களை உறிஞ்சி அந்தந்த அணியினர் காலி பாக்கெட்டில் சென்று ‘ப்ளீச்.. ப்ளீச்..’ என்று துப்பிச் சென்றார்கள். (வீட்டில் உணவருந்திக் கொண்டிருக்கும் போதுதானா.. இந்தக் காட்சி வர வேண்டும்). வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சி ஒன்றுதான் நினைவிற்கு வந்தது. தான் ஆர்டர் செய்திருந்த குளிர்பானத்தை, புதிதாக வந்த ஒருவர் எடுத்து அருந்தி விட்டதாக தவறாக கருதிவிடும் வடிவேலு.. ‘இதுக்கு சிறுநீரைக் குடிச்சிருக்கலாமே’ என்று திட்டி விட, “டேய்.. இனிமேல் கூல்டிரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் நீ சொன்னதுதான்டா நினைவுக்கு வரும்” என்று முரட்டுக்குத்தாக அவர் வடிவேலுவை ஒரு வழி செய்துவிட்டு செல்வார். 

பிக் பாஸ் போட்டியாளர்கள் இப்படி துப்பிச் துப்பிச் சேகரிக்கும் குளிர்பானத்தை பார்க்கும் போது... ‘யப்பா.. சாமி .. இனிமே எந்த கடையிலும் கூல்டிரிங்ஸ் வாங்கி சாப்பிடக்கூடாது’ என்று தோன்றி விட்டது. ஒருவேளை துப்பிச்சிக்கு துப்பிசிக்கு பிக் பாஸ் இது தானோ. ஒவ்வொரு ஜோடியும் மூச்சு வாங்க உறிஞ்சி துப்பி மறுபடியும் ஓடியது. இதிலும் பாலாஜி மற்றும் நித்யா இணைபிரியாத ஜோடியாக இருந்ததைப் பார்க்கும் போது நம்மால் கண்கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. இறுதியில் சிவப்பு அணி சிறந்த ‘துப்பறிவாளனாக’ அறிவிக்கப்பட்டது. 

மறுபடியும் தண்ணிதொட்டி டாஸ்க் துவங்கிய போது, ஐஸ்வர்யா ஆங்கிலத்தில் ஏதோ பேசி விட, ‘I heard what she said’ என்ற உற்சாகத்துடன் அந்த தவறை ஜனனி புத்திசாலித்தனமாக கண்டுபிடிக்க.. ‘ஹேய்.. நீயும்தானே.. அப்ப இங்லீஷ்ல பேசின.. ‘ என்று சற்று தாமதமாக பதிலுக்கு கண்டுபிடித்தார் ரம்யா. இதற்கு நிகழ்ந்த பஞ்சாயத்தின் இடையே மஹத்தும் ஆங்கில வார்த்தை.. பேச.. பஞ்சாயத்து இன்னமும் ரணகளமாகியது. .. இந்தப் போட்டியில் ஒருவேளை மேஜர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டிருந்தால் மிகவும் சிரமப்பட்டிருப்பார். Yes!. He would have been suffered like anything! ‘சும்மா ஆளாளுக்கு கத்தாதீங்க. ஒரு டீம்ல இருந்து ஒருத்தர் மட்டும் பேசுங்க’ என்றார் டேனி. (இவன்தான்யா சரியா பேசறான். பேசும் போது காது ஆடுது கவனிங்க.. நம்ம பயலாத்தான் இருப்பான்). 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இந்தச் சமயத்தில் பிக்பாஸால் அழைக்கப்பட்டிருந்த மும்தாஜுக்கு ஒரு ரகசிய சவால் தரப்பட்டது. அதன்படி அவர் தன்னுடைய சொந்த அணிக்கு துரோகம் செய்ய வேண்டும். அவருடைய அணியின் தொட்டி நீரை 1200 யூனிட்டாக குறைக்க வேண்டும். இப்படிச் செய்தால் மொத்த வீடும் பயன்பெறுவதோடு, சிறப்புச் சலுகையும் வழங்கப்படுமாம். இதைப் பற்றி மற்றவர்களிடம் பேசினாலோ, அல்லது மாட்டிக் கொள்வது போல் செய்தாலோ, இந்தச் சவால் ரத்தாகி விடும். 

இந்தச் சவாலுக்காக பல உபாயங்களை கையாண்டார் மும்தாஜ். தவறாக பேசியது போல் நடித்து ஆங்கிலத்தில் பேசினார். மைக்கை அணிய மறந்து விட்டது போல் நடித்தார். தவறாக கையை எடுத்தது போல நீரை விரயம் செய்தார். நீரை அடைத்துக் கொண்டிருப்பது போல் நின்று கொண்டு யாருக்கும் தெரியாமல் மெல்ல கசிய விட்டதுதான் இருப்பதிலேயே அதிக வில்லத்தனம். பாவம், இவரது விஷமம் புரியாமல் மற்றவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அடித்துக் கொண்டார்கள். 

ஒருவழியாக இரவு 03:00 மணிக்கு தன் சவாலை வெற்றிகரமாக முடித்தார் மும்தாஜ். கட்டைவிரலை ரகசியமாக காமிராவிற்கு காட்டினார். இதற்கிடையில் கீழே விழுந்த ஐஸ்வர்யாவுக்கு காலில் அடிபட்ட தேசியத் துயரமும் நிகழ்ந்தது. “மும்தாஜ் மறுபடியும் மறுபடியும் தப்பு பண்றாங்க.” என்று மும்தாஜின் நடவடிக்கைகளைப் பற்றி சந்தேகம் கலந்த குரலில் மஹத்திடம் புகார் சொன்னார் ரித்விகா.. 

தன்னுடைய பணியை முடித்த விஷயத்தை மும்தாஜ் தெரிவித்ததும் போட்டியை நிறுத்தினார் பிக்பாஸ். மும்தாஜ் செய்த ரகசிய சவால் பற்றிய விஷயம் நாளைக்குத்தான் போட்டியாளர்களுக்கு தெரியவரும். அப்போது அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மும்தாஜ் செய்தது சரியா தவறா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் , கமென்ட்டில் உரையாடுங்களேன்!