Published:Updated:

`ப்ரீத் இன்... ப்ரீத் அவுட்...' யாஷிகாவின் ரிலாக்ஸ் ரகசியம்!

தார்மிக் லீ

பொன்னம்பலம் சொற்பொழிவு, யாஷிகா டான்ஸ்... வாட்டர் டேங்க் பஞ்சாயத்து... மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது?!

`ப்ரீத் இன்... ப்ரீத் அவுட்...' யாஷிகாவின் ரிலாக்ஸ் ரகசியம்!
`ப்ரீத் இன்... ப்ரீத் அவுட்...' யாஷிகாவின் ரிலாக்ஸ் ரகசியம்!

நேற்று நடந்த பிரச்னைகளுக்கு எடுத்த தீர்வில் பாதியாவது தமிழ்நாட்டுக்காக எடுத்திருந்தால் இந்நேரம் தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்திருக்கும். சிந்திய தண்ணியை அடைக்கப் போறேன் டா என்றபடி ஒவ்வொருவரும் சிறப்பாகவே நேற்றைய டாஸ்க்கை முடித்தார்கள். மும்தாஜ் இன்னும் கூடுதல் சிறப்பு. டாஸ்க்கை முடித்த பின்னர் நள்ளிரவு, அதவாது பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? சுருள் நினைவுகள்! 

* நீண்ட நேரமாக டேனியலுக்கு உபதேசம் சொல்லிக்கொண்டிருந்தார், பொன்னம்பலம். `நீங்க இன்னும் ட்ரெயினிங் ஆகணும். நான்லாம் ஒரு காலத்துல என ஆரம்பித்து... என் ஆபீஸ்ல கறி கஞ்சிலாம் போடுவேன்' ரம்பமாய் அறுத்துவிட்டார் மனிதர். `நாலு பேர் இல்லாட்டா ஏன் இந்தக் கலாட்டா' என்று பன்ச் எல்லாம்கூட அடித்தார், பொன்னம்பலம். டேனியலும் பொன்னம்பலத்துக்கும் ஈடு கொடுத்து சமாளித்துக்கொண்டிருந்தார். தலையைச் சொரிந்துகொண்டே கேட்டுக்கொண்டிருந்த லீடர் வைஷ்ணவி ஏதோ சொல்லி ஒரு வழியாக கான்வர்சேஷனுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தார். `ஒண்ணு தூங்குற இல்ல தூறு வாருற' என்றபடி எழுந்து போய்விட்டார், அனந்த் வைத்தியநாதன்.

* இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா எல்லோருடைய உண்மை முகமும் தெரியுது என்று ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் கிச்சனில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் இணைந்தால் அதிகபட்சமாக என்ன பேசப் போகிறார்கள். நீங்களே இந்நேரம் யூகித்திருப்பீர்கள். ஷாரிக்கைப் பற்றி ஏதோ முணுமுணுவென பேசிக்கொண்டு, பிங்கி பிராமிஸ் செய்துகொண்டார்கள். அப்படியே அங்கிருந்து நைஸாக நழுவி வந்த ஐஸ்வர்யா, சோஃபாவில் அரைத் தூக்கத்தில் இருந்த ஷாரிக்கிடமும் `நீ முன்ன மாதிரி இல்ல ரொம்ப மாறிட்ட' என்று புலம்பிக்கொண்டிருந்தார், `ரெண்டு நாளா ரொம்ப டயர்டா இருக்கு முதுகு வலிக்குது' எனச் சொல்லி இவரும் எஸ் ஆகிவிட்டார். 

* அந்தப் பக்கம் டேனியலிடமும், வைஷ்ணவியிடமும் வம்பிழுத்துக்கொண்டிருந்த பொன்னம்பலம், அப்படியே யூ-டர்ன் அடித்து ரித்விகாவிடமும், ரம்யாவிடமும் ஒரண்டை இழுத்துக்கொண்டிருந்தார். அனந்த் அன்று கற்றுக்கொடுத்த மொத்த வித்தையையும் இவர்களிடம் இறக்கிக்கொண்டிருந்தார். இவர்கள் பழைய பாடல்களாகப் பாடிக்கொண்டிருக்க, இவர்தான் பாட்டைக் கேட்டாலே குஷியாகிவிடுவாரே. அவர்களோடு சேர்ந்து இவரும் பாட ஆரம்பித்துவிட்டார். என்ன ஒன்று அவர்களோடு சேர்ந்து பாடும்போது சிங்க்தான் ஆகவில்லை. கால் மணி நேரத்துக்கு முன்னாடி அடித்த காலிங் பெல்லைப் போல் படு லேட்டாகப் பாடிக்கொண்டிருந்தார். போற போக்கைப் பார்த்தால் அனந்த் ஃபைட் மாஸ்டராகவும், பொன்னம்பலம் பாடகராகவும்தான் வெளியே வருவார்கள் போல. 

* கிச்சன் ஏரியாவில் அனந்த் வைத்தியநாதன், டேனியல், பாலாஜி மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். டேனியல் சமையல் டீம் என்பதால் அனந்திடம் இது வைக்கப் போறேன், உங்களுக்கு என்ன சமைக்கத் தெரியும் என பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார். நடுவில் அனந்த், இப்போ நீங்க சாப்பாடு வெச்சீங்கன்னா காகானு சொல்லி எல்லோரும் வந்துருவாங்க பாருங்க என மற்றவர்களைக் கலாய்த்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு, `இந்த இடம் என்ன கத்துத் தருதுன்னா... நம்ம யாரை வேணாலும் பிரிஞ்சு இருந்துறலாம். இங்க யாரையும் விலக முடியாது. இவங்ககூட இருந்தேதான் ஆகணும்' என்று சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார். `தனி மனிதனுக்கு எவ்வளவு சோதனை' என்று நினைத்துக்கொண்டு டேனியல் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார். 

* அந்த வீட்டில் ஒட்டுமொத்த என்டர்டெயின்மென்டும் டேனியலும், பாலாஜியும்தான். கிச்சனில் சமைத்துக்கொண்டே இருவரும் எல்லோரையும் இமிடேட் செய்து நக்கலடித்துக்கொண்டிருந்தனர். `பேட்டா இதுல பச்ச மிளகாய் போடணும், உப்பு போடணும்' என்று மும்தாஜை இமிடேட் செய்துகொண்டிருந்தார், டேனியல். மும்தாஜ் மாடுலேஷனில் 'முடியாது' என்று பாலாஜி சொல்லியதும் குபீர் என்று சிரித்துக்கொண்டிருந்தார், டேனியல். 

* `தூள்' படத்தில் இடம்பெற்ற `ஆசை ஆசை இப்பொழுது' பாடலை யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் ஏதோ குத்துப் பாட்டென்று நினைத்துவிட்டார்கள்போல. கண்ணாடி முன் நின்று அவர்கள்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் செய்யும் கூத்துக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் கலந்துகட்டி ஏதோ ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார், பாலாஜி. `இதெல்லாம் பாவம் மை சன்'. இதைப் பார்த்த யாஷிகா, `நீங்க ரொம்பக் கோபத்துல இருக்கீங்க கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுங்க... ப்ரீத் இன் ப்ரீத் அவுட்' என்று இன்னும் கடுப்பாக்கிக்கொண்டிருந்தார். பாலாஜியின் மைண்டு வாய்ஸ் அப்படியே அவர் முகத்தில் தெரிந்தது. 

* மஹத் அண்டு கோவின் டேங்கில், நேற்றுவரை 1200-ல் இருந்த தண்ணீரின் அளவு, யாரோ செய்த சேட்டையால் 1000-ஆக குறைந்துவிட்டது. இல்லை மும்தாஜ்தான் மீண்டும் இதைச் செய்தாரா எனத் தெரியவில்லை. ஷாரிக் அண்டு கோவின் டேங்குக்கு இன்னும் இரண்டு பக்கெட் தண்ணீர் கிடைத்தால் ஓவர் ஃப்லோ ஆகிவிடும். ஆனால், மும்தாஜுக்குக் கொடுத்திருந்த டாஸ்க்படி டேங்கில் 1200 இருக்க வேண்டும். கடைசியில் எல்லா கோட்டையும் அழிங்க, நம்ம மொதல்ல இருந்து விளையாடுவோம் என்று பிக் பாஸ் புது ட்விஸ்ட் வைக்கப்போகிறார். மும்தாஜ் தனக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கைச் சரியாக முடிப்பாரா... பார்ப்போம்!