Published:Updated:

பிக்பாஸ் ரோஜாக்கூட்டத்தில் கமலின் ரோஸ் யாருக்கு? #BiggBossTamil2

பிக்பாஸ் ரோஜாக்கூட்டத்தில் கமலின் ரோஸ் யாருக்கு? #BiggBossTamil2
பிக்பாஸ் ரோஜாக்கூட்டத்தில் கமலின் ரோஸ் யாருக்கு? #BiggBossTamil2

பிக்பாஸ் ரோஜாக்கூட்டத்தில் கமலின் ரோஸ் யாருக்கு? #BiggBossTamil2

பிக் பாஸ் நேற்று நிகழ்த்திய ‘சென்ட்டிமென்ட்’ டிராமாவை வைத்தே தன்னுடைய உரையாடலையும் துவக்கினார் கமல். ‘இழந்ததையே நினைத்து கண்கலங்குவதை விட இருப்பதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் தக்க வைத்துக் கொள்வார்களா?’ என்கிற கேள்வியுடன் நிகழ்ச்சி துவங்கியது. 

‘யாருக்கு யாரைப் பிடிக்கும் மற்றும் பிடிக்காது?’, ‘இந்தப் போடடியில் மற்றவர்கள் ஜெயிப்பதற்காக வைத்திருக்கும் திட்டங்கள் என்ன?’ ‘யார் இங்கு சிறந்த மற்றும் மோசமான நிர்வாகி’, இந்த விளையாட்டின் வலுவான மற்றும் பலவீனமான போட்டியாளர் யார்’ என்பது போன்ற கேள்விகளை பொது விசாரணையில் முன்வைத்து போட்டியாளர்களின் மனதில் ஒளிந்திருக்கும் விஷயங்களை வெளிப்படையாகக் கொண்டு வருவது பிக்பாஸ் விளையாட்டின் ஓர் அடிப்படையான உத்தி. இதற்காக பல வியூகங்கள், போட்டிகள் நுட்பமாக அமைக்கப்படும். 

போட்டியாளர்களின் எண்ணங்கள் வெளிப்படையாக பதிவாவதால் அவர்களுக்கிடையேயான இணக்கங்கள் அதிகமாகும் அதே சமயத்தில் மன விலகல்கள் மேலும் அதிகமாகக்கூடிய வாய்ப்பும் உண்டு. இது வரும் வாரங்களில் வெவ்வேறு விதங்களில் வெளிப்படும். தன் மீது வைக்கப்படும் வெளிப்படையான விமர்சனத்தை அந்தச் சமயத்தில் ஒருவர் பாவனையான புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாலும் உள்ளுக்குள் ஆழமாக புண்படுவார். இந்தக் கசப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிறகு வெளிப்படுத்துவார். இது நிகழ்ச்சியின் பரபரப்புக்கு முக்கியமான அடித்தளமாக அமையும். 

நம் மீது ஒருவர் எத்தனை பாராட்டுக்களை தெரிவித்திருந்தாலும் துரதிர்ஷ்டமானதொரு தருணத்தில் அவர் வீசிய கடுமையான வசையையே நாம் நெடுங்காலம் நினைவில் வைத்திருப்போம். அவரைப் பார்க்கும் சமயத்திலும் சரி, அவர் நம் நினைவுக்கு வரும் சமயத்திலும் சரி,  அந்த எதிர்மறை விஷயமே, நீர் மேல் பந்து போல மேலேயே மிதந்து கொண்டிருக்கும். மனித மனம் இயங்கும் விந்தைகளில் இதுவும் ஒன்று. நம்முடைய நடைமுறை வாழ்க்கையிலேயே இதை நிறையப் பார்க்கலாம். 

பிக்பாஸ் போட்டியாளர்களைப் போல நாமும் அது சார்ந்த கசப்புடன் தொடர்ந்து பகைமை பாராட்டக்கூடாது என்பதே இதன் மூலம் நாம் உணர வேண்டிய நீதி. இதுவே இந்த நிகழ்ச்சியின் மீது நாம் செய்யும் நேர முதலீட்டின் வழியாக அடையக்கூடிய நிகர லாபம். வெறுமனே பொழுதுபோக்காக, வம்புகளை வேடிக்கைப் பார்க்கும் மனோபாவத்தோடு நின்று விட்டால் இந்த லாபத்தை இழந்து விடுவோம். 

அதிர்ஷ்டவசமாக போட்டியாளர்களுக்கு காமிராவில் பதிவான காட்சிகள் ஆவணமாக இருக்கின்றன. நமக்கு அவை இல்லாததால் கண்ணாடி போல அதன் பிம்பங்களை உடனே பார்த்துக் கொள்ள முடிவதில்லை. ஆனால் மனக்கண்ணாடியின் மூலம் நிதானமாக பார்த்தால் இந்தக் காட்சிகளை இன்னமும் துல்லியமாக அறிய முடியும். 

இந்த வார சம்பவங்களின் recap முடிந்தவுடன் ‘நிகழ்ச்சி இந்த வாரம் சூடு பிடிச்ச மாதிரி தோணுது. அதற்குக் காரணம் நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள். வாக்குகளை செலுத்துவதின் மூலம். நம் ஓட்டுரிமையை சரியாகப் பயன்படுத்தினால் விளைவுகளும் சிறப்பாக இருக்கும்” என்று வழக்கம் போல் அரசியலையும் தொட்டுச் சென்றார் கமல். 

பார்வையாளர்களிடமிருந்து சில கேள்விகள். ‘நீங்க இந்த வீட்ல நூறு நாள் இருந்தா எப்படியிருக்கும்? குறும்படம்-லாம் வருமா?” என்று குறும்பானதொரு கேள்வியைக் கேட்டார் ஒரு பெண்மணி. ‘நான் எங்க இருந்தாலும் கேள்வி கேட்டுக் கொண்டதான் இருப்பேன். என் வாழ்க்கையே திறந்த புத்தகம்தான். இப்ப அதை உங்க கைல கொடுத்துட்டேன்’ என்று சாமர்த்தியமாக பதில் சொன்னார் கமல். 

‘பொன்னம்பலத்தை வடபழனி பக்கம் எவரோ பார்த்ததாக ஒரு செய்தி இருக்கிறதே?’ என்றொரு அபத்தமான கேள்வி. பார்வையாளர்கள் இல்லாமல் காலியாக இருக்கும் ஓர் அரசியல் கூட்டத்தில் (?!) சாலையின் ஓரம் பொன்னம்பலம் படுத்திருப்பது போன்ற மீம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. அதை வைத்துதான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டதோ, என்னமோ. “அப்படி இல்லை’ என்று உறுதியாக மறுத்த கமல் ‘யாராச்சும் போட்டோ எடுத்துக் காட்டியிருந்தா.. வலுவான சாட்சியமா இருந்திருக்குமே’ என்ற தர்க்கத்தை முன்வைத்தார். (இந்த ஃபோட்டோஷாப் யுகத்தில் அதையும் செய்து விடுவார்கள் கமல் அவர்களே..)

இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையின் நிகழ்வுகள் காட்டப்பட்டன. இளையவர்கள் தொடர்பான சர்ச்சைகளே பெரும்பாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் போது முதன்முறையாக பெரியவர்களின் மெல்லிய சண்டை ஒன்று காட்டப்பட்டது. பொன்னம்பலமும் அனந்த்தும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அனந்த், பொன்னம்பலத்தை பொதுவில் வைத்து ‘பசிக்குதா’ என்று நேற்று கேட்டு விட்டார் போலிருக்கிறது. அதை பொன்னம்பலம் அவமானமாக எடுத்துக் கொண்டார் போல. ‘நான் என்ன சாப்பாட்டுக்கு அலையறவனா?’ என்பது போல் சீரியஸாகி விட்டாரோ.. என்னமோ.. அனந்த் மன்னிப்பு கேட்டும் பொன்னம்பலத்தின் வருத்தம் நீங்கவில்லை. அது தொடர்பான மனவருத்தங்களை இருவரும் பகிர்ந்து கொண்டிருந்தனர். ‘மற்றவர்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, தனக்கு நியாயம் எனப்படுவதை அனந்த் கறாராக தெரிவிக்க தயங்குவதில்லை’. அவருடைய நல்ல குணாதிசயம் இது. 

‘மஸ்காரா போட்டு மயக்கறியே’ என்கிற பாடல் ஒலித்தது. பிரியாணி உண்ட களைப்பில் மக்கள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். பிறகு மெல்ல களைந்து அவர்களில் சிலர் வெளியே வந்து நடனமாடினார்கள். தந்தை தொடர்பான நினைவுகளை உருக்கமாக வைஷ்ணவி பகிர்ந்த போது அதே போன்றதொரு உணர்வில் ‘தானும் நேற்று கலங்கிய காரணத்தை’ பாலாஜி வைஷ்ணவியிடம் தெரிவித்தார். 

‘யாரைப் பிரிந்திருக்கிறோம்’ என்கிற உணர்ச்சிமிகு பகுதியில் நித்யா போலியாக செயல்பட்டதாகவும் பாலாஜி உண்மையாக இருந்தார் என்பதும் அனந்த்தின் உறுதியான  அபிப்ராயம். ‘அது அவங்களுக்குத்தானே தெரியும்’ என்று இதை மறுத்து நியாயமாக பேசியது ‘விஷபாட்டில்’. 

“வெளியே லவ்வரை மிஸ் பண்றேன்னு சொல்றான். ஆனா இங்க ஜாலியா கூத்தடிச்சிக்கிட்டு இருக்கான்.. நாம.. வீட்ல.. கட்டின பொண்டாட்டி கிட்ட பேசறதுக்கே.. அக்கம் பக்கத்தை நினைச்சு பயப்படறோம்.. இவன் என்னடான்னா…’ என்று பொன்னம்பலம் புரணி பேசிக் கொண்டிருந்தது மஹத்தைப் பற்றி என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. “ஆமாம்.. அவங்க டிவில பார்த்துட்டு இருப்பாங்களே…’ என்று ஆமோதித்தார் சென்றாயன். காமிரா முன்பு வந்து நின்று ஜாலியான முக சேஷ்டைகளுடன் தன் குடும்பத்தாருக்கு அன்பைத் தெரிவித்தார் பாலாஜி. 

பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாளில் நிகழ்ந்த பஞ்சாயத்தை இன்றைய நாளோடு ஒப்பிட்டுப் பேசினார் மும்தாஜ். ‘நான் அப்ப சமையல் டீம்ல இருந்தப்ப.. லெமன் ரைஸ்ஸூம் உருளைக்கிழங்கும் செஞ்சேன். அது டிரையா இருக்கு.. ரசம் வேணும்னு.. யார் யார் கிட்டயோ.. கேட்டு பிரச்னை பண்ண.. பாலாஜியண்ணா… இப்ப அவர் சமையல் இன்சார்ஜா இருக்கும் போது.. ‘காலைல பொங்கல்.. மதியம் லெமன் ரைஸ்’-னு அதே போல செய்யறாரு. இப்ப டிரையா இருக்காதா?.. நான் நேரா கேட்கத்தான் போறேன்’ என்று அனத்திக் கொண்டிருந்தார் மும்தாஜ். ‘அவருக்கு செட் ஆன ஆள் கிட்ட ஜாலியா பேசுவாங்க. இல்லாதவங்க கிட்ட பேச மாட்டாங்க. அவர் செஞ்ச தப்பை சுட்டிக்காட்டினா கோபப்படுவாங்க” என்று இதற்கு ஒத்து ஊதினார் ஐஸ்வர்யா. 

பிக்பாஸ் சீஸன் தொடர்பாக நிறைய ஹோம்ஒர்க் செய்து வந்திருக்கிறார் என்பதை அவ்வப்போது ரித்விகா உறுதிப்படுத்துகிறார். ‘இந்த வார எவிக்ஷன் மற்றும் அடுத்த வார நாமினேஷன்’ ஆகியவை பற்றிய ஆரூடங்களை உறுதியான குரலில் நித்யா மற்றும் பொன்னம்பலத்திடம் கூறிக் கொண்டிருந்தார். ‘அடுத்த வார நாமிஷேன்ல நீங்க வர மாட்டீங்க. நான் சொல்றேன் பாருங்க’ என்று நித்யாவைப் பார்த்து அழுத்தமாகக் கூறினார் ரித்விகா. “வைஷ்ணவி கண்டிப்பா வருவா” என்றும் சொன்னார்.

“பிக்பாஸ் தரும் விளையாட்டுக்களைத் தாண்டி.. இந்த வீட்டில் துவக்க நாள் முதலே ஒவ்வொருத்தரும் தனித்தனியா கேம் விளையாடறாங்க.. ஒவ்வொருவரும் அதற்கான திட்டம் வெச்சிருக்காங்க..’ என்று பிறிதான சந்தர்ப்பத்தில் மறுபடியும் ஆருடம் சொன்ன ரித்விகாவின் கருத்தை மும்தாஜ் வலுவாக மறுத்தார். ‘அது உன் பார்வை. நான் ஒரிஜினாலத்தான் இருக்கேன். அப்படி தொடர்ந்து நடிக்க முடியாது. எப்படியாவது வெளிய வந்துடும். அப்ப நம்ம இமேஜ் மொத்தமா காலியாயிடும்” என்று அவர் சொன்னது ஒருவகையில் சரியாக இருக்கலாம். 

அந்த நாளின் நிகழ்வுகள் இத்தோடு முடிந்து மறுபடியும் வந்தார் கமல். பூக்களை வைத்து ஒரு நுட்பமான விளையாட்டைத் துவக்கினார். ஒவ்வொரு போட்டியாளரும் தமக்குப் பிடித்தமான போட்டியாளருக்கு.. சிகப்பு நிற ரோஜாப்பூவை தர வேண்டும். பிடிக்காதவர்களுக்கு கறுப்பு மலர். இந்த விளையாட்டின் மூலம் நாம் ஏற்கெனவே அறிந்திருந்த விஷயங்கள் மீண்டும் உறுதி செய்யப்பட்டன. சில ஆச்சரியங்களும் காத்திருந்தன. தங்களின் புண்பட்ட உணர்வுகளை புன்னகையுடன் மறைத்துக் கொண்ட பரிதாபங்களும் இருந்தன. 

ஷாரிக் சிவப்பு மலரை ஐஸ்வர்யாவிற்கு தந்ததில் ஆச்சரியமில்லை. ‘இவங்க என்னமோ புரிஞ்ச மாதிரி கைத்தட்டறாங்களே’ என்று கமல் ஜாலியாக கிண்டலடித்தார். 

‘இவங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை.. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி பிஹேவ் பண்றாங்க’ என்ற அபிப்ராயத்துடன் கறுப்பு மலரை நி்த்யாவிற்கு அளித்தார் ஐஸ்வர்யா. எதிர்பார்த்தது போலவே வைஷ்ணவிக்கு அதிக கறுப்பு மலர்கள் கிடைத்தன. ‘விஷயத்தை புரிஞ்சுக்காம இருக்கார்” என்கிற காரணத்தையொட்டி சென்றாயனுக்கும் சில கறுப்பு மலர்கள் கிடைத்தன. ‘நிறைய சிரிக்க வைத்தாலும் கோபம்தான் அவருடைய எதிர்மறை விஷயம்’ என்கிற காரணத்தினால் பாலாஜிக்கும் கறுப்பு மலர்கள் வந்தன. 

“நான் கூட்டுக்குடும்பத்துல இருந்ததில்லை சார்.. இங்க எனக்கு அம்மா.. அப்பா.. தாத்தா.. பாட்டி..’லாம் கிடைச்சிருக்காங்க..’ என்று யதேச்சையாக சென்றாயன் சொல்லப் போக, ‘யாரு இங்க பாட்டி?’ என்று நம் மனதில் தோன்றிய அதே கேள்வியை குறும்பாக கேட்டார் கமல். “எல்லோரும் மேக்கப்ல இருக்காங்க.. கலைச்சுட்டா சொல்லிடலாம்.. இல்லடா” என்று டைமிங்காக அடித்த பாலாஜியின் கமென்ட் ரணகளம். சென்றாயனுக்கும் கமலுக்கும் இடையில் நிகழ்ந்த ஆங்கில உரையாடல்களும் சேஷ்டைகளும் சுவாரஸ்யம். அமெரிக்க பாணியில் தோள்களைக் குலுக்கிக் கொண்டு ‘tell me’ என்ற சென்றாயனின் உடல்மொழி சிரிப்பை வரவழைத்தது. 

‘வயசு .. சேட்டை’ காரணமாக ஷாரிக்கிற்கும் சில கறுப்பு மலர்கள் கிடைத்தன. “ஏன்.. னு எனக்குப் புரியல.. ‘என்று விழித்த ஷாரிக்கை ‘வயது அப்படி.. புரியாது’ என்று கிண்டலடித்தார் கமல். ‘வாடா போடா’’ என்று கூப்பிட்டதற்காக சென்றாயனை ஷாரிக் கோபித்துக் கொண்டார் போலிருக்கிறது. ஆனால் பாலாஜி, மஹத் உள்ளிட்டவர்கள் அப்படித்தான் ஏகவசனத்தில் ஷாரிக்கை அழைக்கிறார்கள். அதில் ஷாரிக்கிற்கு பிரச்னையில்லை போல. மறுபடியும் அதேதான். உருவத்தில் எளிமையாக இருப்பவர்கள், வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் தனக்கு கீழே இருக்க வேண்டும் என்று எண்ணுகிற மேட்டிமைத்தனமான உணர்வு இது. ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ கணக்காக சென்றாயன் பிக்பாஸ் வீட்டில் கையாளப்படுகிறாரோ என்று தோன்றுகிறது. 

‘கலை சம்பந்தமா நெறய  தெரிஞ்ச மனுஷன்தான். ஆனா இன்னமும் பக்குவம் வரலை’ என்கிற காரணத்தைக் காட்டி கறுப்பு மலரை அனந்த்திற்கு தந்தார் பொன்னம்பலம். (பசிக்குதா’ன்னு கேட்டது ஒரு குத்தமாய்யா?”). இத்தனை நாட்கள் பழகியும் நித்யா தனக்கு கறுப்பு மலர் தந்தது குறித்து மும்தாஜ் அதிர்ச்சி அடைந்தாலும் ‘கறுப்பு எனக்குப் பிடிச்ச நிறம்’ என்று சமாளித்துக் கொண்டார். 

‘கோபம் உங்களுடைய தனிப்பட்ட குணம். அதற்காக உங்கள் தனித்தன்மையை இழக்காதீர்கள். ஆனால் உங்கள் கோபத்தை சமூகத்திடம் காட்டுங்கள்.. தனிநபர் மீது காட்டாதீர்கள்” என்று பாலாஜிக்கு உபதேசித்தார் கமல். 

‘கறுப்பு ரோஜா என்பது அபூர்வமானது. எளிதில் கிடைக்காதது. என்னைக் கேட்டா.. அதிமுக்கியமானவர்களுக்குத்தான் கறுப்பு மலர்-னு சொல்லியிருப்பேன். எல்லா வண்ணமும் சேர்ந்ததுதான் கறுப்பு’ என்று அதன் எதிர்மறையான கோணத்தை தலைகீழாக திருப்பிக் காட்டி அசத்தினார் கமல். 

‘சிகப்பு மலர் உங்களின் சிறப்புகளை எடுத்துக்காட்டி உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பது உண்மைதான். ஆனால் கறுப்பு மலர் அதைவிடவும் முக்கியமானது. உங்கள் குறைகளை நியாபகப்படுத்த அது உதவியிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்ல.. வாழ்க்கையில் கூட அது உங்களுக்கு உதவும்’ என்று அருமையாகப் பேசினார் கமல்.. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் ஒருவர் எவ்வாறு நேர்மறையாக அணுகவேண்டும் என்பதற்கான சிறந்த விஷயமாக கமலின் பேச்சு இருந்தது. 

தங்களுக்கு வழங்கப்பட்ட மலர்களைப் பற்றிய கருத்துக்களை அவரவர்களே சொல்ல வேண்டும். 

‘ஏன் எனக்கு பிளாக் ரோஸ் கொடுத்தாங்க –ன்னு புரியல’ என்று மறுபடியும் விழித்தார் ஷாரிக். ‘நான் சத்தமா பேசறேன்னு மும்தாஜ் நெனக்கறாங்க. அதை மாத்திப்பேன்’ என்றார் டேனி. தன்னிடம் கறுப்பு மலர்கள் வரவில்லையென்றாலும் கூட ‘கோபம்தான் என்னோட பலவீனம். சரிசெய்து கொள்வேன்’ என்றார் மஹத். 

“துவக்க நாட்களில் சில பிரச்னைகள் இருந்தாலும்.. அதன் பிறகு நிறையப் பேசி பழகியிருக்கிறோம். என்றாலும் நித்யா ஏன் கறுப்பு மலரை தந்தாங்கன்னு புரியல. அவங்களோட மேலும் கனெக்ட் பண்ண முயற்சிப்பேன்’ என்றார் மும்தாஜ். 

‘சிவப்பு இதயத்தை பிரியமானவர்களுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் நான் அழுது சொன்ன விஷயங்கள் தொடர்பா அனந்த் சாருக்கு சிலது பிடிக்கலை. பிறகு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். பாலாஜி கிட்ட இருந்து சிவப்பு வரும்-னு  தெரியும். அவர் என்னை லவ் பண்றார்னும் தெரியும். இந்த வீட்டில் எப்போதும் அவர் என்னை விட்டுக்கொடுத்ததில்லை. (அப்படியா மேடம்?!) எனக்கும் டைம் வேணும்” என்றதும் வெட்கப்பட்டது மாதிரியான கொடூர சிரிப்பை வழங்கினார் நித்யா.

‘நித்யா.. உங்க கிட்டதான் நிறைய சிவப்பு மலர்கள் வெச்சிருக்கீங்க.. இந்த வீட்ல உங்களுக்குத்தான் நிறைய அன்பு கிடைச்சிருக்கு” என்று கமல் சுட்டிக்காட்டியவுடன் அகம் மகிழ்ந்தார் நித்யா.

‘நான் பேசியதை நானே மறந்துட்டேன். ஆனா அவங்க நினைவு வெச்சிருக்காங்கன்னா.. அத்தனை ஆழமா அவங்களை புண்படுத்திட்டேன் போலிருக்கு. ஸாரி.. என்று யாஷிகா தனக்கு வழங்கிய கறுப்பு மலரைப் பற்றி பொன்னம்பலம் சொன்னது ஆத்மார்த்தமான வாக்குமூலம் போலத்தான் தெரிந்தது. (தனக்கு கறுப்பு மலர் வழங்கப்பட்ட காரணத்தைப் பற்றி அனந்த் சொன்னது நிகழ்ச்சியில் வரவில்லை). 

“என் கிட்ட இருந்து வர்ற கோபத்தைப் பற்றி நெறைய பேர் சொன்னாங்க.. சமூகத்தின் மேல் கோபப்படுங்கன்னு நீங்களும் சொன்னீங்க. உங்க கூட சேர்ந்து பணியாற்றும் போது அதைச் செய்வேன்” என்றார் பாலாஜி. (ஆக.. ‘மய்யத்தில்’ பாலாஜியை விரைவில் எதிர்பார்க்கலாம் போல). 

வாக்குமூலங்களின் அடிப்படையில் நிகழ்ந்த இந்த வாதப்பிரதிவாதங்களின் இடையில் குறுக்கிட்ட கமல் “எல்லோருமே அவங்க தப்பை ஈஸியா ஒத்துக்கறீங்க.. விமர்சனங்கள் நியாயமா இருந்தா வீம்பு பிடிக்காம ஏத்துக்கங்க.. அதே சமயத்தில் ‘திருந்துகிறேன்’ என்கிற பெயரில் உங்களுக்கான தனித்தன்மைகளை விட்டுக் கொடுக்காதீர்கள். ‘உங்களுக்கு நியாயம்’னு பட்டுச்சுன்னா தொடருங்க. தனித்தன்மை-ன்றது கைரேகை மாதிரி.. குற்றத்தையும் காட்டிக் கொடுக்கும்.. குணத்தையும் காட்டிக் கொடுக்கும்.’ எனறார். (எப்படி இப்படில்லாம் அசத்தறீங்க.. கமல்.. இதெல்லாம் அப்படியே தானா வர்றதுதான் இல்ல…)

“உங்க கிட்ட எந்த மலரும் இல்லையே.. நீங்க நல்லவரா.. கெட்டவரா” என்று ரித்விகாவிடம் கமல் கேட்க.. ‘தெரியலையே சார்.. ‘ என்று வேலுநாயக்கரை காப்பிடியத்தார் ரித்விகா. “ஆனா நீங்க இம்ப்ரூவ் ஆகியிருக்கீங்க.. என் கிட்ட ரோஸ் இருந்தா கொடுப்பேன்’ என்று கமல் சொன்னதும் மகிழ்ந்து போனார் ரித்விகா. துவக்க நாட்களில் இருக்கிற இடமே தெரியாமல் பிள்ளைப் பூச்சி போல இருந்த ரித்விகா.. இப்போது அடித்து ஆடத்துவங்கியிருப்பதை நாமும் பார்க்கிறோம். இந்த வகையில் கமலின் அவதானிப்பு சரியானது. 

“சொல்கிற விஷயத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது சென்றாயனின் பிரச்னை’ என்று ரித்விகா சொன்ன பிறகு.. சென்றாயன் அதை மறுக்க முற்பட.. ‘பாருங்க இப்ப கூட நான் என்ன சொன்னேன்-றதை அவர் புரிஞ்சுக்கலை’ என்று சமயோசிதமாக சொன்னார். ரித்விகா. 

சென்றாயனின் பலமும் பலவீனமும் அவருடைய வெள்ளந்திதனம்தான் என்று தோன்றகிறது. ‘இந்த வீட்ல ஆங்கிலத்தைத் தாண்டி வேறொரு மொழியிலும் பேசுகிறார்கள். அது எனக்குப் புரியவில்லை” என்றார் சென்றாயன். (‘அந்த மொழியின் பெயர் – ‘அரசியல்’.. மிஸ்டர் சென்றாயன்.)

இந்தப் பகுதி முடிந்ததும் அடுத்ததற்கு நகர்ந்தார் கமல். ‘இந்த வீட்டின் தலைவர்களாக இருந்தவர்களில் மூன்று பேருமே பெண்கள் என்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள்தான் சிறந்த நிர்வாகிகள்’ என்ற கமல், அவர்கள் செயல்பட்ட விதத்தை வைத்து வரிசைப்படுத்தச் சொன்னார். இதில் முதலிடத்தில் வைஷ்ணவிக்கும் ஜனனிக்கும் அதிக வாக்குகள் கிடைத்தன. 

ஆனால் பிக்பாஸ் கருத்தின் படி வைஷ்ணவியே முதலிடத்தைப் பெற்றார். (சிறந்த அடிமைகளையே சிறந்த பணியாளர்களாக முதலாளிகள் கருதுவார்கள். இதைத்தவிர முதல் இரண்டு வாரங்களை விடவும் மூன்றாவது வாரத்தில் பிரச்னைகள் அதிகமாக இருந்தன. இந்தச் சமயத்தில் தலைவராக வந்து மாட்டிக் கொண்ட வைஷ்ணவி எல்லாப் பக்கங்களிலும் ஓடி ஓடி அல்லாட வேண்டியிருந்தது என்பதும் அதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டார் என்பதும் உண்மைதான்.).

தலைவர்கள் கூடி சில நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அதன்படி ‘ஒத்துழைக்காத நபர்’ என்பது மும்தாஜிற்கும், ‘சேம்பேறி’ பட்டம் மஹத்திற்கும், ‘குழப்பம் விளைவிப்பவர்’ என்கிற பெயர் பாலாஜிக்கும் கிடைத்து. ‘சிறந்த அணி வீரர்’ என்கிற பெருமை ரித்விகாவிற்கு கிடைத்தது பொருத்தமான தேர்வு. அவர் எல்லாப் போட்டிகளிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டார். 

‘காந்தி காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு பெருமை கிடைத்தது. இப்போது அல்ல’ என்று மும்தாஜ் பிடிவாதம் பிடித்த விஷயங்களைச் சுட்டிக் காட்டினார் கமல். 

‘இந்தப் போட்டியில் வெற்றி பெற சக போட்டியாளர்கள் எந்தெந்த வியூகங்களை பின்பற்றுகிறார்கள்’ என்பதை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக சொல்ல வேண்டும் என்றொரு விளையாட்டு முன்னர் நிகழ்ந்தது. இப்போது அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டிய சூழலை கமல் உருவாக்கினார். 

முதலில் ஆரம்பித்தவர் அனந்த். ‘இந்த கேமை நல்லா ஸ்டடி பண்ணிட்டு வந்திருக்கார். அதற்காக திட்டமிட்டு துல்லியமா செயல்படறார்’ என்றெல்லாம் காரணங்களை அடுக்கி, பிறகு தான் சொன்னது ‘டேனி’யைப் பற்றியது என்று வெளிப்படையாக சொன்னார். ‘அய்யோ.. சார்.. நான் உளவுத்துறை அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை.. என் நேச்சரே அதுதான்.. அப்படித்தான் நான் இருப்பேன். அப்பப்ப என் கரெக்ட் பண்ணிட்டே இருப்பேன்’ என்று மறுத்தார் டேனி. ‘நான் நம்பலை’ என்று அனந்த் சொன்னாலும் ‘நான் நம்புகிறேன்’ என்று ஆறுதல் அளித்தார் கமல். (மனுஷன்.. எதையாவது போட்டு வாங்கறாரோ..?!)

‘நீங்கள் பாலூட்டி வளர்த்த கிளி’ உங்களையே கொத்திடுச்சே:” என்று ஷாரிக்கைப் பற்றி மும்தாஜிடம் விசாரித்தார் கமல். “ஆமாம்.. சார். சரி.. புள்ள பெரியவனாயிட்டான் போல-ன்னு நெனச்சிக்கிட்டேன்” என்று மும்தாஜ் சிரித்துக் கொண்டே சொன்னாலும் உள்ளே மெல்லிய வேதனை இருந்ததாகத் தோன்றியது. ‘நீங்க பண்ணிதான் ஆகணும்” என்று கடுமையான முகத்தை வைத்துக் கொண்டு ஷாரிக் சொன்ன சமயத்தின் போது பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கக்கூடும். ‘அழுவதன் மூலம் அனுதாபத்தை சம்பாதிக்க முயல்கிறார்’ என்று தான் சொன்னது ‘நித்யாவைப்’ பற்றி என்றார் ரம்யா. இதையே மஹத்தும் வழிமொழிந்தார்.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“நான் எமோஷனல் பெர்சன்தான். ஆனா ‘ பிக்பாஸில் அழ மாட்டேன்’-ன்னு போஷிகா கிட்ட பிராமிஸ் பண்ணிட்டு வந்தேன். அதனால் மறைச்சு மறைச்சு அழறது.. இவங்களுக்கு போலியாத்தான் தெரிஞ்சிருக்கலாம்.’ என்று தன்னை நியாயப்படுத்தினார் நித்யா. “பெரியவர்களுக்கு இடையில் நிகழும் சண்டையை முதலில் புரிந்து கொள்வது குழந்தைகள்தான். அதைத்தான் நீங்கள் சொல்வது பிரதிபலிக்கிறது” என்றார் கமல். 

’16 போட்டியாளர்களில் அப்பாவைத் தேடினீங்களே.. 17வது ஆளை விட்டுட்டீங்களே…’ என்று கமல் சொன்னதும் அதிக நெகிழ்ச்சியை அடைந்தார் டேனி. (கடந்த சீஸனில் ‘உங்க அப்பாவா வீட்டுக்கு ஒருநாள் சாப்பிட வருவேன்னு கமல் சார் சொன்னார்.. ஆனா அவர் வரலை..:” என்று சுஜா ஒரு பேட்டியில் பிறகு சொன்னதும் ஏடாகூடமாக நினைவில் வந்து போகிறது. என்றாலும், செயலில் இல்லையென்றாலும் தக்க சமயத்தில் ஆறுதலாக நிற்கும் கமலின் அன்பைப் போற்றத்தான் வேண்டும்)

‘இவங்க பேசினதில் உங்க குரலும் கேட்டிருக்கும்..அழாத மாதிரி நடிக்கறதுதான் மிக கஷ்டமான விஷயம் என்பதை வாழ்க்கையில் புரிந்து கொண்டேன். அழுவதற்கு வெட்கப்படாதீர்கள்’ தன்னை விடவும் இன்னொருவருக்காக சிந்தும் கண்ணீர் உன்னதமானது’ என்று பார்வையாளர்களிடம் சொன்னார் கமல்.

அடுத்த பகுதி அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாமினேஷன் விஷயத்திற்கு சென்றது. பட்டியலில் இருந்தவர்கள் அனந்த், நித்யா, பொன்னம்பலம், மும்தாஜ் மற்றும் பாலாஜி.  இதற்கான காரணத்தை விசாரணை செய்தார் கமல்.

அனந்த் மற்றும் நித்யா.. விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக  சக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதை காரணமாக கூறினர். ‘நான் அடிக்கடி அழறது கூட மக்களுக்கு பிடிக்காம போகலாம்’னு நெனக்கறேன்’ என்று கூடுதல் காரணத்தை சொன்னார் நித்யா. ‘என்னன்னு தெரியல சார். ‘ என்று வழக்கம் போல் மிக்சர் பாக்கெட்டைப் பிரித்து விட்டார் பொன்னம்பலம். ‘கோபம்தான் சார் என் பலவீனம்.. டக்குன்னு திட்டிடுவேன். அது காரணமாக இருக்கலாம்.’ என்றார் பாலாஜி.

“மூன்றாவது முறையாக தொடர்ந்து நாமிஷேனில் வந்திருக்கிறீர்களே.. இதற்கான காரணம் என்ன?” என்று மும்தாஜிடம் விசாரித்தார் கமல். “தெரியல சார்.. இங்க எல்லார் கிட்டயும் நல்லாத்தான் பேசறேன். வேலையும் செய்யறேன். அதையும் மீறி ஏதோவொண்ணு அவங்களுக்கு பிடிக்கலை.. போல.. எனக்குத் தெரியல’ என்றார் மும்தாஜ். ‘ஆனால் மக்கள் அப்படி நெனக்கல.. அவங்களைப் புரிஞ்க்கறது கஷ்டம். ஆனால் அவங்க முடிவு சரியாத்தான் இருக்கும்-னு நாம் நம்பறேன். அவங்க உங்களை உக்காரச் சொல்றாங்க.. உக்காருங்க’ என்று கமல் சொன்னதன் மூலம் மும்தாஜ் காப்பாற்றப்பட்டதை அறிந்து கொள்ள முடிந்தது. 

ஆக.. பாக்கியிருப்பவர்களில் எவர் வெளியேறுவார் என்கிற விஷயம் இன்றைக்குத் தெரியும். அனந்த் மற்றும் பொன்னம்பலம் ஆகிய இருவரில் ஒருவராக இருக்கக்கூடும். சக்தியில்லையேல் சிவனும் இல்லை. எனவே பாலாஜி காப்பாற்றப்படுவார். நமது தளத்தில் நடந்த சர்வேயில், அதிக % வாக்குகளைப் பெற்று வெளியேறுபவராக வாசகர்கள் தேர்வு செய்தது பாலாஜியைத்தான். மக்களின் மனநிலையை பிக்பாஸ் கருத்தில் கொள்வாரா என்பதை அறிந்துகொள்ள இன்று இரவு வரை காத்திருப்போம். 

இன்று இரவு நிகழ்ச்சி ஒருபுறம் இருக்கட்டும். இன்று இரவு யார் வெளியேற்றப்படுவது சரி என நினைக்கிறீர்கள்? . உங்கள் பதிலை கமென்ட்டில் பதிவு செய்யவும் 

அடுத்த கட்டுரைக்கு