Published:Updated:

கமலே கவலைப்படும் அளவுக்கு இருக்கிறதா பிக் பாஸ் கலாசாரம்?! #BiggBossTamil2

கமலே கவலைப்படும் அளவுக்கு இருக்கிறதா பிக் பாஸ் கலாசாரம்?! #BiggBossTamil2
கமலே கவலைப்படும் அளவுக்கு இருக்கிறதா பிக் பாஸ் கலாசாரம்?! #BiggBossTamil2

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் நாம் பார்ப்பதென்பது அதிகபட்சம் ஒரு மணி நேர கன்டென்ட்தான். 24 மணி நேரம் நடக்கும் நிகழ்வுகளில், சுவாரஸ்யமானதையும், ஒளிபரப்பக்கூடிய காட்சிகளையும் மட்டுமே நமக்கு எடிட் செய்து வழங்குகிறார்கள். அதிலும் அவர்கள் காட்டும் கோணங்களின் வழியாக மட்டுமே காண்கிறோம். நாம் பார்த்தறியாத காட்சிகள் பலவும் இருக்கக்கூடும். அவற்றின் இடைவெளிகளை நாம் யூகங்களால் மட்டுமே நிரப்ப வேண்டியிருக்கும்.  அதைப் பார்த்துதான், நாம் சில முடிவுகளுக்கு வருகிறோம். கெட்டவர் யார்... நல்லவர் யார்... எனத் தீர்மானிக்கிறோம். கடந்த சீசனில் ஓவியாவுக்குக் கோயில் கட்டாத குறையாக ஆராதனை செலுத்தியதும், ஜூலியைப் பார்க்கும் இடத்தில் எல்லாம் தொல்லை படுத்தியதும் இதை வைத்துத்தான். பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாள்களாக நடந்த ஏதோ நிகழ்வுகள் அங்கிருக்கும் சீனியரான பொன்னம்பலத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது. முற்போக்காளரான கமலே கவலைப்படும் அளவுக்கு அவை இருப்பதுதான் பெருஞ்சோகம்.

‘கலாசாரக் காவலர்’ என்கிற பிம்பம் அழுத்தமாக விழும்படியான செயற்பாடுகளை வந்த முதல் நாளில் இருந்தே பொன்னம்பலத்திடம் பார்க்க முடிந்தது. இரவு தூங்கப் போகும் நேரத்தில் பெண்களின் படுக்கை அறையில் மஹத் படுத்துக்கொண்டு உரத்த சத்தத்துடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தது குறித்து பொன்னம்பலம் பலத்த ஆட்சேபம் எழுப்பினார். `தூக்கத்துக்கு இடையூறாக இருக்கிறது’ என்கிற பாவனையில் அவர் தன் ஆட்சேபத்தைச் சொல்லியிருந்தாலும், இளைய தலைமுறையின் சில எல்லைமீறல்களால், முந்தைய தலைமுறைக்கு ஏற்படும் எரிச்சல் கலந்த கலாசார ஆட்சேபங்களே அவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆனால், தன்னுடைய ஆட்பேசத்தை `மலினமான, ஆபாசமான சொற்களின் மூலம்’ பொன்னம்பலம் தெரிவித்திருந்தார் என்பதை பின்னர் நாம் அறிந்துகொண்டோம். இது குறித்து பெண்களின் கண்டனங்களையும் ஆட்சேபங்களையும் அவர் பெற்ற பிறகு, ஆத்மார்த்தமாகவோ அல்லது பாவனையாகவோ அவர் ஐஸ்வர்யாவிடம் சென்று மன்னிப்பும் கேட்டார். 

என்றாலும் கூட மஹத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா கூட்டணி செய்யும் சில காரியங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரது தொடர்ச்சியான முணுமுணுப்புகளின் மூலம் உணர முடிந்தது. பார்வையாளர்களே முகஞ்சுளிக்கும் படியான சில செய்கைகளை மஹத் செய்கிறார் என்பதையும் யாஷிகா அதற்கு இணக்கமாக இருக்கிறார் என்பதையும் கூட நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

`சக போட்டியாளரின் வியூகம் என்ன?’ என்ற பகுதியில் `அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை. எதையும் இழக்கத் தயார் என்ற முடிவுல.. இந்தப் போட்டியில் ஜெயித்து விடுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார். குரூப்பா இருக்காங்க’ என்று பெயர் குறிப்பிடாமல் சொன்னார், பொன்னம்பலம். பிறகு அது பற்றி வெளிப்படையாகச் சொல்லும் பகுதியில் ‘ஐஸ்வர்யா’ என்று அவர் அம்பலப்படுத்தியபோது உடனடியாக மறுத்தவர், அனந்த். ‘அவர் அப்படிப்பட்ட பெண்ணல்ல. தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்துதான் வந்திருக்கிறார்’ என்று ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு தந்தார், அனந்த். 

‘நீங்கள் ஒருவேளை வெளியேறினால் என்ன சொல்வீர்கள்?’ என்ற கேள்விக்குப் பொன்னம்பலம் சொன்னது. ``இங்கு எல்லை மீறிய சில விஷயங்கள் நடக்கின்றன. அது தொடரக் கூடாது. நம் தமிழ்ப் பாரம்பர்யமும் பண்பாடும் காக்கப்பட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் பார்க்கிற நிகழ்ச்சி இது. தப்பாயிடக் கூடாது” என்றார். “நான் பேசணும்னு நெனச்சத நீங்க பேசிட்டீங்க” என்று பொன்னம்பலத்துக்கு வெளிப்படையான ஆதரவு தந்தார், கமல். 

அனந்தின் வெளியேற்றம் உறுதியான போது ‘இங்கிருக்கும் யாரையாவது சிறைக்குச் செல்ல வைக்கும் சக்தி உங்களுக்குத் தரப்படுகிறது. யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்று கமல் கேட்ட போது ‘பொன்னம்பலத்தை’ அனந்த் தேர்ந்தெடுத்தார். “விரும்பும்படி வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு. எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது பெண்களுக்குத் தெரியும். ஒவ்வொரு பெண்ணும் தாய்தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி சட்டம் என்பது அழிய வேண்டும். அது பற்றி பொன்னம்பலம் பேசியது சரியல்ல” என்று தான் தண்டனை தந்ததற்கு விளக்கம் தந்தார், அனந்த். இதற்கு பெண்கள் தரப்பிலிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியடைந்து அனந்தை வணங்கினர். டேனி பலமாக விசிலடித்தார்.

பொன்னம்பலத்தை அனந்த் தேர்ந்தெடுத்தற்கு இதுதான் உண்மையான காரணமா அல்லது இருவருக்குள்ளும் ஏற்பட்டிருந்த உரசலும் கூடுதல் காரணமாக இருந்திருக்குமா என்பதை அவர்களே அறிவார்கள். 

ஆனால், பொன்னம்பலத்துக்குச் சிறைத்தண்டனை தரப்பட்டது பற்றி கமலுக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. இதற்காக வெளிப்படையாகவே பொன்னம்பலத்துக்கு ஆதரவு தந்தார். இதற்கு பெண்கள் தரப்பில் சில ஆட்சேபங்கள் இருந்தன. பொன்னம்பலம் முன்னர் தெரிவித்த ஆபாச வார்த்தைகள் குறித்தான தன் கோபத்தை தெரிவித்தார், ரம்யா. மும்தாஜ் ஏதோவொரு விஷயத்தை கவனப்படுத்த முனைந்த போது, கண்டிப்பான குரலில் கமல் தடுத்துவிட்டார். “முந்தா நேத்து நைட் என்ன நடந்தது பார்த்தீங்கன்னா.. அதுவே போதும்’ என்றார், பொன்னம்பலம். 

“பொன்னம்பலம் விவகாரம் முடிந்து சில நாள்களாகியும் அவர் குறிப்பிட்டது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது” என்பது கமலின் குற்றச்சாட்டு. ஆக... கடந்த சீசனின் ‘மருத்துவ முத்தம்’ போல நமக்குக் காட்டப்படாத சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கலாம். அவற்றைத் தாண்டியும் மஹத்-யாஷிகாவின் சில செய்கைகள், சமிக்ஞைகள் பார்வையாளர்கள் முகஞ்சுளிக்க வைப்பதாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. 

ஆனால் – ‘நீங்கள் நீங்களாக இருங்கள்’ என்று கூறிவிட்டு சிலர் தங்களின் ‘விருப்பம்போல் இருக்கும் போது’ அதைக் கமல் கண்டிப்பது இரட்டைநிலை இல்லையா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் தோன்றுகிறது. `நீங்கள் நீங்களாக இருங்கள் " என்பது வேறு ' எப்படி வேண்டுமானாலும் இருங்கள் ' என்பது வேறு. கடந்த சீசனில் `மருத்துவ முத்தம் ' அவ்வளவு பெரிய விஷயம் ஆக்கப்பட்டதில் ஓவியாவின் பங்கு அதிகம். `நான் கொடுத்தத திருப்பிக் கொடு ' எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். அது, ஒரு கட்டத்தில் போட்டியாளர்கள் மத்தியிலும், பார்வையாளர்கள் மத்தியிலும், ஓவியாவுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதை யூகிக்க வைத்தது. அவர் பித்துப் பிடித்தது போல், அந்த வீட்டில் உலவும் போது, வேதனையாக இருந்தது.

ஆனால், இந்த சீசனிலும் சில விஷயங்கள் நடந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. நேற்று நடந்த சில உரையாடல்கள் அதை வழிமொழியவும் செய்தது. பொன்னம்பலம் கமலிடம் நேற்று இரவு நடந்த காட்சிகளை நீங்கள் பார்த்தால் மட்டும் போதும் என்கிறார். பிறகு வியாழன் இரவு காட்சிகளை மட்டுமாவது பாருங்கள் என்கிறார். மீண்டும் இந்த `நீங்கள் நீங்களாக இருங்கள் ' விஷயத்துக்கு வருவோம். 100 நாள்கள், புதிய நபர்களுடன் குழுவாக ஒரு வாழ்க்கை என்பதுதான் பிக்பாஸ். பிக்பிரதர் போன்ற வெளிநாட்டு பிக்பாஸ்களில் ஒளிபரப்பப்படும் சில காட்சிகள் போன்றெல்லாம் இங்கு எப்போதும் நடக்க வாய்ப்பில்லை. அதே சமயம் தமிழ் புரியும் மக்கள் பெரும்பாலோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி, கமல் போன்ற உச்சநட்சத்திரம் ஒருவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, என பிக்பாஸ் தமிழுக்கு இன்றுவரை ஒரு பிம்பம் இருக்கிறது. இரவு வீட்டில் அனைவரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சில எல்லைமீறல்களை காட்டமுடியாது, காட்டவும் மாட்டார்கள் என்றே நம்புகிறோம். கெட்ட வார்த்தை பிரயோகங்களை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஒளிபரப்பினாலும், `குழந்தைகளும் பெண்களும்' பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சிலவற்றை தவிர்க்கவே விரும்புவார்கள்.

‘மக்கள் மனதில் இடம்பிடிப்பதன் மூலம் திரைத்துறையில் புகழ்பெறும் வாய்ப்பையும் பெறுவீர்கள்’ என்பதையும் கமல் சுட்டிக்காட்டினார். இங்கு கிடைக்கும் வரவேற்பிற்காகத்தான், தானே இந்த நிகழ்ச்சியைப் பங்குபெற ஒப்புக்கொண்டேன் என்பதையும் வெளிப்படையாகவே சொன்னார் கமல்.

 பிக்பாஸ் போட்டியில் வெற்றிபெற்ற ஆரவ் சில படங்கள் கமிட் ஆகியிருக்கிறார். 2015, 2016, 2017 மூன்று ஆண்டுகளில் பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் இருந்த ஓவியா, 2018ல் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்துக்கொண்டிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், பிக்பாஸுக்குப் பிறகான அவரின் சினிமா கிராஃப் வேறு. ரைஸா நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஜூலி தனக்குக் கிடைத்த மைலேஜை வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறுவடை செய்துகொண்டிருக்கிறார். வாய்ப்புகளை சமயோஜிதமாகப் பயன்படுத்துபவர்களே இறுதியில் வெல்கிறார்கள். 

 ஆட்சேபமாக நடந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு இது எச்சரிக்கை மணி என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. 

**

பிக் பாஸ் வீட்டிலுள்ள விஷயங்களை போட்டியாளர்கள் எத்தனை தூரத்துக்குக் கவனித்திருக்கிறார்கள் என்பதை சோதிக்கும் போட்டி நடந்தது. இதற்காக எதற்கு ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இரண்டு அணிகளாக அமர வைக்கப்பட்டார்கள் என்பது புரியவில்லை. மதிப்பெண் தருவதற்காக இருக்கலாம். ஏறத்தாழ இரண்டு அணியினருமே சமமாக பதில் சொன்னார்கள். பெண்கள் படுக்கையறையில் இருந்த போர்வையின் விவரங்களைப் பற்றி மஹத் கூடுதலான தகவல்களைத் தந்தபோது ‘விடைல்ல கூட இதெல்லாம் இல்லையே’ என்று கமல் கிண்டலடித்தார். 

அடுத்தது, கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மை/பொய் ஆகிய இரண்டு விடைகளில் ஒன்றை ஒருவர் முன் வந்து கூற வேண்டும். மற்ற போட்டியாளர்களின் கருத்துகள் இதனோடு ஒப்பிடப்படும். 

‘உங்களின் சில நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கிறதா?’ என்ற கேள்விக்கு ‘உண்மை’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார் மஹத். மற்றவர்களின் கருத்தும் இதுவாகவே இருந்தது. (இது தொடர்பான பஞ்சாயத்துதான் கடைசிப்பகுதியில் வெடித்தது போல).

‘இப்போது இருக்கும் பாலாஜி கோபம் அற்றவராக அல்லது முகமூடி அணிந்தவரா?’ என்ற கேள்விக்கு ‘கோபம் இருக்கிற பாலாஜிதான்’ என்று பதில் அளித்தார், பாலாஜி. மற்றவர்களும் இதை ஆமோதிக்கும்போது நித்யா மட்டும் மறுத்தார். “வீட்ல காமிக்கற கோபத்துல ஒரு சதவிகிதம்தான் இங்க காமிக்கறார். பிக் பாஸ் வீட்டிற்காக தன் கோபத்தைக் குறைத்துக்கொண்டது மாதிரி காண்பிக்கிறார்” என்றார் நித்யா. (அவ்ள கோபக்கார ஆசாமியா.. நீங்க பாலாஜி.) ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவர்’ என்று கமலுக்கு பாலாஜி ஐஸ் வைக்க முயலும் போது, “இருங்க.. ‘வீட்டை ஆண்டாள்’ என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்” என்று கமல் சிலேடையாகப் பேசியது சிறப்பு. 

“இந்த வீட்டிலுள்ள வயது வித்தியாசம் உங்களுக்குத் தடையாக இருக்கிறதா?” என்ற கேள்வி ஐஸ்வர்யா முன் வைக்கப்பட்ட போது ‘உண்மை’ என்றார். மற்றவர்களும் ஆமோதித்தனர். ஆனால் மும்தாஜ் மட்டும் “அப்படியில்லை. இங்கு எல்லோரும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள்’ என்றார். 

“மஹத்தின் வார்த்தைகள் உங்களைப் புண்படுத்தியதா?” என்ற கேள்விக்கு சென்றாயன் ‘உண்மை’ என்று ஆமோதித்தார். மற்றவர்களும் ஒப்புக்கொண்டனர். ‘அடிச்சுடுவாரோன்னு கூட பயந்துட்டேன்’ என்று சென்றாயன் சொன்ன போது ‘பொய்’ என்று மஹத் ஆரம்பிக்க மற்றவர்களும் கோரஸ் பாடினர். (சென்றாயன் உண்மையிலேயே அந்தச் சமயத்தில் அப்படி பயந்திருக்கலாம், இதை எப்படி மற்றவர்கள் மறுக்க முடியும்?)

“இந்த வீட்டில் ஒழுக்கம் இல்லை” என்கிற கேள்விக்கு “உண்மை’ என்கிற பதில் பொன்னம்பலத்திடம் வந்தது. (நல்லா செலக்ட் பண்றாங்கய்யா ஆளுங்களை!) மற்றவர்களும் ‘உண்மை’ என்ற அட்டையைக் காட்ட, ‘அப்ப இந்த வீட்ல ஒழுக்கமில்லை-ன்னு எல்லோரும் ஒத்துக்கறீங்களா?” என்று கமல் கேட்க.. “இல்லை சார்.. அவர் பாயின்ட் ஆஃப் வியூல உண்மை. ஆனால் பொய்’ என்று குழப்பினர். (எனில் பொய் என்கிற அட்டையைத்தானே காட்டியிருக்க வேண்டும்?!). 

“முதல்லயே நான் சொல்லி பிரச்னையாயிடுச்சு. எதுக்கு வம்புன்னு விட்டுட்டேன்.. மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க.. நீங்களும் சாட்சியா இருக்கீங்க” என்று பொன்னம்பலம் சொன்னதற்கு பார்வையாளர்களின் கைத்தட்டுகள் கிடைத்தன. 

‘உங்கள் நடவடிக்கைகள் பொன்னம்பலத்துக்கு எரிச்சல் ஊட்டுகிறதா?’ என்று எரிகிற நெருப்பில் எண்ணைய்யை ஊற்றும் கேள்வி யாஷிகாவிடம் கேட்கப்பட.. இதற்குப் பதிலாக ‘எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்’ என்றே வெளிப்படையான கேள்வியைக் கேட்டிருக்கலாம். “உண்மை’ என்றார் யாஷிகா. பொன்னம்பலம் உட்பட மற்றவர்களும் இதை ஆமோதித்தனர். 

“வைஷ்ணவி புறம் பேசுவதை நிறுத்தி விட்டாரா?’ என்கிற கேள்விக்கு கலப்படமான பதில்கள் வந்தன. ‘உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் மும்தாஜ்’ என்கிற கேள்விக்கு ‘பொய்’  என்று நேர்மையாக பதில் அளித்தார் ஷாரிக். ‘ஐஸ்வர்யா’ என்பதுதான் சரியான விடையாம். (மறுபடியும் எட்டுக்கால் பூச்சி!)

‘நீங்கள் போலியானவர்’ என்கிற கேள்விக்கு ‘பொய்’ என்கிற பலகையைக் காட்டினார், டேனி. ஆனால் பாலாஜி, பொன்னம்பலம், நித்யா உள்ளிட்ட சிலர் ‘உண்மை’ என்றனர். ‘மக்கள் கவனம் தன் மேல் விழணும்றதுக்காக. எல்லாத்தையும் கேமரா முன்னாடி செய்யறாரு.. மக்கள் பார்வைல இருந்தே யோசிக்கறாரு’ என்று சில விடைகள் வந்தன. 

“சரி.. எவிக்ஷன் பத்தி அப்புறம் கவலைப்பட்டுக்கலாம். அதற்கு முன்னாடி கொஞ்சம் சந்தோஷமா இருப்போம்” என்ற கமல், சில போட்டியாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைப் போல மற்றவர்கள் நடித்துக் காண்பிக்க வேண்டும் என்கிற ஜாலியான விளையாட்டைத் தொடங்கி வைத்தார். 

இதில் அதிகம் பங்கு பெற்று திறமையைக் காட்டியவர், டேனி. ‘சென்றாயன்’ மாதிரி முதலில் பேசி, நடந்து கைத்தட்டல்களைப் பெற்றார். போலவே ‘அனந்த்’ மாதிரியும் அற்புதமாகப் பேசினார். (பூர்ணம் விஸ்வநாதனையும் கமலையும் கலந்தால் அனந்த் சாயல் வந்துவிடும்). தலைவியாக இருந்த போது வைஷ்ணவி செய்த சேஷ்டைகளை ரித்விகா நடித்துக் காட்டியது அபாரம். 

‘யாஷிகா’வின் ‘வச்சுக்கோ’… நிறையப் பேரை பாதித்திருக்கிறது போல. சென்றாயனும் டேனியும் இதைப் பிரதிபலித்தனர். மஹத் யாஷிகாவிடம் வழிவதை டேனி செய்து காட்டியதுதான் இந்த ரகளையின் உச்சம். கமலாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை. ஐஸ்வர்யா போல ஜனனி செய்து காட்டியது சற்று ரசிக்கும்படி இருந்தது. மும்தாஜை இமிடேட் செய்த ஐஸ்வர்யா, `இல்ல பேட்டா...' என்ற ஆரம்ப டயலாகிற்கே போட்டியாளர்கள் `குபீர் சிரிப்பு' மோடுக்குப் போய்விட்டார்கள். மும்தாஜுக்கே உரிய தொனியில் `முடியாது, நான் பண்ண மாட்டேன்' என்ற டயலாக்கை மட்டும் போட்டிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். 

“மச்சான்.. நீ பண்ணது நல்ல விஷயம்.. நம்ம பண்றது சிரிப்பா போயிடும். நெகட்டிவ்வா இருக்காது” என்று தன்னைப் போல் நடித்துக் காட்டிய டேனியிடம் பிறகு சந்தோஷப்பட்டார் மஹத். (ஆமாம்… உங்க மேட்டர் சிரிப்பாத்தான் சிரிக்குது மஹத்)

“நீங்கள் வெளியேறுவதாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?” என்ற கேள்வி நாமினேஷனில் இருந்தவர்களிடம் கேட்கப்பட்டது. “ஏதோவொரு தகுதி இருப்பதால்தான் இங்கு வர தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேற வாழ்த்தி வெளியேறுவேன்’ என்றார் நித்யா.

“இங்க வந்ததுக்குப் பிறகு கோபம்தான் என் பெரிய பலவீனம் என்பதை புரிஞ்சுக்கிட்டேன். அதனால நித்யா இருந்து நான் போனாலும் சந்தோஷம்தான். கோபமில்லாம இருக்க முயற்சிப்பேன். ‘அநாவசியமா பேசி கெட்ட பேர் வாங்கிக்காத என்று நித்யாவுக்கு உபதேசம் சொல்வேன்” என்றார், பாலாஜி. 

“அவரு என்னை அடிச்சாலும் திட்டினாலும்  கடைசில என் நல்லதுக்குத்தான் எதையும் நினைப்பாருன்னு தெரியும். திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ்ல கிடைக்கற வெற்றி என்னை விடவும் அவருக்குத்தான் தேவை. அதனால் அவர் இருக்கணும்” என்று நித்யாவும் பதிலுக்கு உருகினார். (உங்க ரெண்டு பேர் கேரக்டர்களையும் புரிஞ்சுக்கவே முடியலை சாமிகளா..!)

“உங்களுக்குள் இந்தப் புரிதல் இருக்கிற காரணத்தினால்தானோ.. என்னவோ.. மக்கள் உங்களை உக்காரச் சொல்லிட்டாங்க” என்று சஸ்பென்ஸை உடைத்தார், கமல். பாலாஜியும் நித்யாவும் ஒருவரையொருவர் மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொண்டனர். 

‘உங்களில் இருவரில் எவர் வெளியேறுவார்’ என்கிற கேள்வி பொன்னம்பலம் மற்றும் அனந்திடம் கேட்கப்பட்டது. “என் மனநிலை மக்களுக்குத் தெரிந்திருக்கும். இங்க ஒத்துப் போக முடியல.. அது விளையாட்டு தர்மமும் இல்ல. பொன்னம்பலம் என்னை விடவும் பெரிய ஆசாமி. திரைத்துறையின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவர்தான் இருக்கணும்” என்றார். அனந்த்.

“எனக்கு வெற்றி தோல்வி ரெண்டும் ஒண்ணுதான் சார். நான் ஸ்போர்ட்ஸ்மேன். அதனால நான் போறதுல பிரச்னையில்லை. ஆனா இந்த நிகழ்ச்சியின் தரம் குறித்த பொறுப்பும் கடமையும் மற்ற போட்டியாளர்களுக்கு இருக்கிறது’ என்று தமிழ் கலாசாரம் குறித்த தன் கவலையைத் தெரிவித்தார். இந்தக் கவலையை கமலும் வழிமொழிந்தார். 

யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ‘அனந்த் இருக்கணும்’ என்றதில் பொன்னம்பலத்துக்குச் சில செய்திகள் இருந்தன. ‘வயசானவரு… உடம்பு முடியல.. ‘ என்று அனந்த் வெளியேறுவதற்கான காரணங்களை சில ஆண் போட்டியாளர்கள் சொன்னார்கள். 

ஆக.. அனந்த் வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டது. ‘எந்த வயசுல இருந்தாலும்.. பதவில இருந்தாலும்.. இங்க வர்றது ஒரு நல்ல பயிற்சி.. ரொம்பக் கடுமையான பயணம்’ என்றார் அனந்த். அவருக்குப் பிரியாவிடை தரப்பட்டது. அனந்தின் நெருக்கமான தோழியாக இருந்த மும்தாஜ் அதிகம் கண்கலங்கினார். தன்னுடைய செடியை டேனியிடம் அளித்தார், அனந்த். 

சிறைத்தண்டனைக்காகப் பொன்னம்பலத்தை அனந்த் தேர்ந்தெடுத்தது தொடர்பாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், பாலாஜி. “உடம்பு சரியல்லாத மனுஷன் தனியா .. என்ன செய்வாருன்னு கவலைப்படாமல் சில போட்டியாளர்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்களே.. என்கிற கோபமும் பாலாஜிக்கு இருந்தது. இன்னொரு பக்கம், டேனி, யாஷிகா, ஐஸ்வர்யா போன்றவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். (ஐயோ.. க்ரூப் பார்ம் ஆவுதே?” என்று கவலைப்பட்டார், டேனி).

‘பொன்னம்பலத்துக்கு சிறைத்தண்டனை தரப்பட்டதில் எனக்கும் பங்குண்டு. அவர் விரைவில் வெளியே வர விரும்புகிறேன்’ என்றார், கமல். வெளியே வந்த அனந்தும் கமலும் உரையாடினர். பிக் பாஸ் வீட்டில் அனந்த் இருந்த சம்பவங்களின் தொகுப்பு காண்பிக்கப்பட்டது. 

மற்ற போட்டியாளர்களின் புகைப்படங்களுக்குக் கீழே அவர்களைப் பற்றிய தன்னுடைய அபிப்ராயத்தை ஒற்றை வார்த்தையில் தட்டுத் தடுமாறி தமிழில் எழுதினார், அனந்த். 

யாஷிகா – அழகு, பாலாஜி – சிரிப்பு, ரம்யா –பக்வம், (ஸாரி.. பக்குவம்), ரித்விகா – புதிர், மும்தாஜ் –கவனம், ஜனனி-கண்கள், வைஷ்ணவி – குழப்பம், டேனி –புத்திசாலி, ஐஸ்வர்யா – தாய், ஷாரிக் – குழந்தை, பொன்னம்பலம் – திறமை, சென்றாயன் – வேர், நித்யா – வளர்ச்சி, மஹத் – பித்தன், (முன்னால் பெண் என்று சேர்த்திருக்கலாமோ?!) என்று பட்டியலிட்ட அனந்த், தன் புகைப்படத்துக்குக் கீழே ‘காதல்’ என்று போட்டுக் கொண்டார். (திருப்பதிக்கே லட்டா.. கமல் முன்னாடி இதைப் போடலாமா?) 

‘நீங்கள் தேடும் காதலை விரைவில் அடைய வாழ்த்துகள்’ என்று அனந்தை வழியனுப்பி வைத்தார் கமல். (Same to you என்று அனந்தும் சொல்லியிருக்கலாம்).

‘இந்த நிகழ்ச்சி இங்கேயே முடிஞ்சிருக்கணும். ஆனால், பொன்னம்பலத்துக்குத் தரப்பட்ட சிறைத்தண்டனை தொடர்பாக எனக்குக் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு. கருத்து வேறுபாடு இருக்கு” என்று தொடங்கினார் கமல். “பொன்னம்பலம் – அனந்த் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீட்டின் மீது அக்கறையுள்ளது. பொன்னம்பலம் ‘அப்பா’வாக இருந்து கண்டித்தார். அனந்த் ‘தாத்தா’வாக இருந்து செல்லம் கொடுத்தார். பொன்னம்பலம் விழிப்பாக இருந்து கவனித்த சில விஷயங்களை தூங்கி விட்டதால் அனந்த் கவனிக்கவில்லை’ என்பது கமலின் வாதம்.

“ஆணுக்குச் சமமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. ஆண்களை விடவும் சிறப்பான காரியங்களை செய்து அவர்களை ஜெயித்துக் காட்டணும். நீங்கள் இன்னமும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். இதை அறிவுரை, ஆலோசனை, டிப்ஸ்’ என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சினிமால நான் அப்படித்தான் பயன்படுத்திக்கிட்டேன். ஆரம்பத்துல என்னை யாரும் கவனிக்கவேயில்லை. பாலசந்தர் கண்களில் படும்படியாகச் சில காரியங்களைச் செய்தேன். புகழ்பெற்றேன். நீங்கள் நீங்களாக இருங்கள். தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள்’ என்பது போன்ற அறிவுரையுடன் அமைந்தது கமலின் பேச்சு.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இந்தக் கட்டுரையின் தொடக்கப்பகுதியில் விவரிக்கப்பட்டிருப்பது போல் ‘பொன்னம்பலம்’ பேசிய சர்ச்சையான வார்த்தைகள் குறித்து பெண்களிடமிருந்து இன்னமும் எழும் ஆட்சேபங்களை கமல் கவனிக்க விரும்பவில்லை. அதையும் மீறி ஒழுக்கக்கேடாக நடந்த சில விஷயங்கள் குறித்தே அவரது கண்டிப்பும் கவலையும் இருந்தது. இதற்காகப் பொன்னம்பலத்தை வெளிப்படையாகப் பாதுகாக்கவும் அவர் தயாராக இருந்தார். தன் வாழ்நாள் முழுக்க தன்னை முற்போக்காளராகக் காட்டிக்கொண்ட கமலே கவலைகொள்ளும் அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் சில நிகழ்வுகள் நடக்கிறதோ என எண்ண வைக்கிறது. 

பாரபட்சமின்றி இயங்க வேண்டிய கமல், நாம் அறியாத காரணங்களுக்காக, ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டாரோ என்று தோன்றாமல் இல்லை. அதற்கான காரணங்கள் பின்னர் வரும் நிகழ்ச்சிகளில் இன்னமும் துல்லியமாக அம்பலப்படலாம். சிலபல குறும்படங்கள் வெளியாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம். 

‘பொன்னம்பலம் சிறைக்கு அனுப்பப்படக் கூடாது’ என்பது தொடர்பான போராட்டக்காட்சிகள், வாதப் பிரதிவாதங்கள் ‘நாளை’ என்ற பகுதியில் காட்டப்பட்டன. இந்த விஷயத்தில் சிலர் ஆதரவாகவும் பலர் எதிர்ப்பாகவும் இருக்கிறார்கள் போலிருக்கிறது. என்ன நடக்கவிருக்கிறது என்பதை இன்று பார்க்கலாம். 

பொன்னம்பலத்தின் கோபமும், கமலின் வருத்தமும் சரியானதா? உங்களின் கருத்துகளை கமென்டில் பதிவு செய்யவும்.