Published:Updated:

``என்னமோ நடக்குது... கமல்கூட அதைக் கேட்கவில்லையே!’’ - `பிக் பாஸ்’ கமல் குறியீடுகள்

தார்மிக் லீ
``என்னமோ நடக்குது... கமல்கூட அதைக் கேட்கவில்லையே!’’ - `பிக் பாஸ்’ கமல் குறியீடுகள்
``என்னமோ நடக்குது... கமல்கூட அதைக் கேட்கவில்லையே!’’ - `பிக் பாஸ்’ கமல் குறியீடுகள்

`பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் நேற்றைய கமல் எபிசோட் பற்றிய கட்டுரை.

`இழந்ததை எண்ணிக் கலங்கியது, புலம்பியதையெல்லாம் பார்த்தோம். ஆனால், இழந்ததையே எண்ணி அழுதுகிட்டு இருந்தோம்னா இருக்கிறதும் கை நழுவிப்போக வாய்ப்புண்டு!' - என்ற 'கமல்' பொன்மொழியோடு அன்றைய நாளின் பிக் பாஸ் ஷோ ஆரம்பமானது. கடந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்தப் பரபரப்பும் நிகழவில்லை, ஆண்டவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்போடு நிகழ்ச்சியைப் பார்த்தேன்.  

`உங்களுடைய ஓட்டு உரிமையை நீங்கள் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் உரிமையை உணர்ந்த நீங்கள், அதில் பங்கெடுத்துக்கொள்ளும்போது ஆர்வம் அதிகமாகும். இந்த மாதிரி நிகழ்ச்சியிலேயே உங்கள் ஆர்வம் அதிகமாகிறதென்றால், இந்த நாட்டுக்கு அது என்ன செய்யும் என்பதை யோசித்துப்பாருங்கள். இந்த ஷோ நடத்துறாங்க, நடத்தலைங்கிறதைவிட, நீங்க இதுல பங்கெடுத்துக்கிறீங்க. அதுதான் முக்கியமான விஷயம்' என்று கமல் சொல்லியதைக் கேட்கும்போது, `கடவுள் இல்லைனு சொல்லலை. இருந்தா, நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்' என்ற தொனிதான் தெரிந்தது. `ஷோலாம் முக்கியம் இல்ல, நாடுதான் முக்கியம்’ என்பதுபோல சொல்லும் அர்த்தம், `அடடா... இந்த ஷோவுக்கு நாமதானே தொகுப்பாளர்' என்று ஞாபகமும் வந்து, `பிக் பாஸ்' என்ற வார்த்தைகள் அதிகமாக வருகிறது. ஆண்டவர் ஆன் ஃபயர்!  

`பிக் பாஸ் வீட்டுக்குள்ள நீங்க இருந்தா எப்படி இருப்பீங்க, உங்களுக்குக் குறும் படங்கள் போட்டுக்காட்டினால் எப்படி ஃபீல் பண்ணுவீங்க' என்ற கேள்விக்கு, `என்னை 'எங்கே' (நோட் திஸ் பாயின்ட்) வெச்சாலும் இப்படியேதான் இருப்பேன். எனக்குப் படமும் புதுசு இல்லை. இப்போ இருக்கிறதைவிட இன்னும் என்னை உங்களுக்கு ஆழமாகத் தெரிந்திருக்கும்’ என இவர் யதார்த்தமாகச் சொல்லும் பதில்கூட அரசியல் பேச்சாகத் தெரிகிறது.

இந்தச் சூழலை மையப்படுத்தி கேட்கும் கேள்விகளுக்கு இவர் சொல்லும் பதில், நாட்டின் நிலைக்கும் இவரது அரசியல் சூழலுக்கும் பொருத்திப் பார்க்கலாம். `முதலமைச்சர் சீட்டில் என்னை அமர்த்துங்கள். இப்போ எப்படி இருக்கேனோ, அப்படித்தான் நான் இருப்பேன்’ எனக் குறியீடாகச் சொல்வதுபோல்தான் தெரிகிறது. `நான் ஏற்கெனவே திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறேன். இப்போது அந்தப் புத்தகத்தை உங்களிடமே கொடுத்துவிட்டேன்' - இது ஆன் ஸ்க்ரீன். `என்னைத் தேர்ந்தெடுப்பதும் தேர்ந்தெடுக்காததும் உங்கள் கையில்தான் இருக்கிறது' - இது மைண்ட் வாய்ஸ். 

`கோபமும் ஒரு குணம்தான். அதை மொத்தமா விட்டுக்கொடுக்க வேண்டாம். தனி மனிதனிடம் கோபத்தைக் காட்டாமல், சமூகத்தின் மீது கோபத்தைக் காட்டலாம்' எனக் கமல் சொன்னதில் அவருக்குள் சமூகத்தின் மேல் இருந்த கோபமும் புரிந்தது. சற்றுநேரம் கழித்து கமலிடம் பேசிய பாலாஜி, 'கண்டிப்பா இனிமேல் தனி மனிதன்மேல கோபப்பட மாட்டேன். உங்ககூட சேர்ந்து பணியாற்றும்போது கண்டிப்பா சமூகத்துமேல கோபப்படுவேன்' எனச் சொல்லியது, கமலுக்கு அவ்வளவு சந்தோஷம். அதற்குப் பின் கமல் கறுப்பு நிறப் பிரியர் என்பதும் தெரிந்தது. அடுத்த நாள் அவர் கறுப்பு நிற ஆடையில் வரப்போவதால் இதைச் சொன்னாரா, இல்லை அதை அணியப்போவதால் அந்த டாஸ்க்கை பிக் பாஸ் கொடுத்தாரா... புரியாதா புதிர்தான். 

`பாலாஜி சொன்னது எனக்குக் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாத மாதிரி இருந்துச்சு' என ஷாரிக் சொல்லியதும், 'ஓ! அப்படியா நாங்கதான் வெளியில இருந்து பார்த்துகிட்டு இருக்கோமே' என்பதுபோல ஆடியன்ஸைப் பார்த்து கொடுத்த எக்ஸ்பிரஷன்தான் 'ரியாக்‌ஷன் ஆஃப் தி டே'. நிகழ்ச்சியின் முடிவில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. உள்ளே இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு யூகத்தில் விளையாடுகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏதோ ஒரு வகையில் மனிதனின் உணர்வுகள் வெடிக்கத்தான் செய்யும். டேனியல், 'பிக் பாஸ் வீட்டுக்குள்ள வர்ற 16 பேர்ல யாராவது ஓர் ஆள் எனக்கு அப்பாவா இருக்கமாட்டாரா' என அழுதுகொண்டிருந்தார். அதைக்கேட்ட கமல், 'பதினேழாவதா ஓர் ஆள் இருக்கிறதை மறந்துட்டீங்க பாருங்க!' எனச் சொல்லி, லேசாகக் கண் கலங்கினார். இப்படி தழுவலும் கமலிடம்தான் இருக்கும்.

அடுத்த நாள்...

நிகழ்ச்சி ஆரம்பித்து நீண்டநேரத்துக்கு எந்தவொரு காரசாரமும் இல்லாமல், ஆனால் படு ஜாலியாகச் சென்றது. மறுபக்கம், கமலும் எதுவும் பேசாமல் டாஸ்குகளை மட்டுமே அளித்துக்கொண்டிருந்தார். பொன்னம்பலம், கடந்த எபிசோடில் சில 'இரவு'களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அதன் பிறகு தமிழைப் பற்றியும் கொந்தளித்துப் பேசினார். அதற்கு கமல், 'என்னுடைய ஸ்பீச்சைத் திருடி பேசிட்டீங்க. ஒருவேளை நீங்க பேசலைனா, நான் இதைப் பேசியிருப்பேன்' என அவரிடமே சொன்னார். 

இந்த சீஸனின் பிக் பாஸ் சற்று குழப்பமாகவே போகிறது என்பது நிதர்சன உண்மை. கடந்த சீஸனில் இந்தப் பஞ்சாயத்து 'மருத்துவ முத்தத்தில் மட்டுமே நிகழ்ந்தது. அதை எப்படிச் சொல்ல வேண்டுமோ எந்த இடத்தில் சொல்ல வேண்டுமோ... அதை சரியாகச் செய்திருப்பார் கமல். ஆனால், இந்த சீஸனில் நடக்கும் எல்லா விஷயங்களும் விவகாரமாகத்தான் இருக்கும்போல! ஒரு சில காட்சிகளில் அதைக் காண முடிகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், கமல்கூட இதை வெளிப்படையாகக் கேட்கவில்லை என்பதுதான். ஒருவேளை இனி கேட்பார்போல! 

வெளிப்படையாகக் கேட்கவில்லை என்றாலும், கமலுக்கே உரிய தொனியில் அவ்வப்போது கேட்கிறார். ஒருநாள் நடக்கும் நிகழ்வை நமக்கு ஒன்றரை மணிநேரத் தொகுப்பாகக் கொடுக்கிறது பிக் பாஸ். அப்படிக் காட்டும்போது சில விஷயங்கள் நம்முடைய சிந்தனைகளுக்குப் பிடித்ததாகவும் இருக்கலாம்,எதிராகவும் இருக்கலாம். விடை தெரியாத சில நிகழ்வுகளைக் கமலே எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் பார்வையாளர்களின் வேண்டுகோளாக இருக்கக்கூடும். ஆனால், ஒன்று... மனிதர் பொன்னம்பலத்தை மட்டும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. 'பொன்னம்பலத்துக்கு சிறைத்தண்டனை கொடுத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை' என்றும் அங்கிருக்கும் இளவட்டங்களைப் பொன்னம்பலத்தோடு சேர்த்து இவரும் நக்கலடிப்பதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

ஷோ முடிந்தவிட்டதென நினைத்த போட்டியாளர்களைத் தன் வருகை மூலம் `இதைச் சொல்லியே ஆகணும்' என்ற நோக்கோடு மீண்டும் என்ட்ரி கொடுத்தார் கமல். 'பொன்னம்பலம் அப்பா மாதிரி. அதனால்தான் கொஞ்சம் கண்டிப்பாக இருந்தார். அனந்த் வைத்தியநாதன் தாத்தாவைப் போல அதனால்தான், நிறைய செல்லம் கொடுத்துவிட்டார்!' எனச் சொன்னதும், யாஷிகா முகத்திலும் ஐஸ்வர்யா முகத்திலும் அதிர்ச்சி பரவியது. அனந்த் வைத்தியநாதன் பெண்ணியத்தைப் பற்றி பேசியதாகத் திசை மாறியது. தாயைப் பற்றியும் சில வார்த்தைகள் பேசினார். 

அதற்குப் பின் கமல் பெண்களைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார். `சில பெண்கள் தாயாக இல்லாமல், தங்கையாக இல்லாமல், வேறுவிதமான பெண்ணாகவே வாழ்ந்து யாருக்கும் பிரயோஜனப்படாமல் அல்லது பலருக்கும் பிரயோஜனப்பட்டு இறந்து போய்விடுவார்கள். அவர்களும் இந்தச் சமூகத்துக்குத் தேவைதான்!' எனச் சொல்லி பேச்சை வேறு பக்கம் மாற்றிவிட்டார். 

பேச வேண்டியதை ஒட்டுமொத்தமாகச் சொல்லி முடித்துவிட்டு, `ஓர் ஆண் என்றெல்லாம் நான் மீசையை முறுக்கிவிட்டுப் பேசலை' எனச் சொல்லி, மீசையைத்தான் முறுக்கிவிட்டார். இந்தக் களேபரங்களுக்குப் பின்னால் என்ன நடந்தது என்றுதான் முழுமையாகச் சொல்லவில்லை. 'ஒருவேளை நான் வக்கீலா இருந்திருந்தேன்னா, உங்களை வாதாடி வெளியில எடுத்திருப்பேன்' எனக் கடைசி வரை பொன்னம்பலத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டேதான் இருந்தார். பொன்னம்பலம் சில காட்டமான வார்த்தைகளைச் சொன்ன பிறகும் கமல் தொடர்ந்து அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார்.  

இந்த வாரம் அரசியல் பேச்சுகள் பெரிதாக இல்லாவிட்டாலும் சமூகம் சார்ந்த பேச்சுகள் அதிகம். தொடர்ந்து அடுத்த வாரம் என்னவாகும்... பார்ப்போமே!

அடுத்த கட்டுரைக்கு