Published:Updated:

ராகவன், ஆறுச்சாமி, தொரசிங்கம், ரத்னவேல் பாண்டியன்... பிக்பாஸ் வீட்டுக்கு வாங்க! #BiggBossTamil2

ராகவன், ஆறுச்சாமி, தொரசிங்கம், ரத்னவேல் பாண்டியன்... பிக்பாஸ் வீட்டுக்கு வாங்க! #BiggBossTamil2
ராகவன், ஆறுச்சாமி, தொரசிங்கம், ரத்னவேல் பாண்டியன்... பிக்பாஸ் வீட்டுக்கு வாங்க! #BiggBossTamil2

போலீஸ் டீம் செய்யும் சுவாரஸ்யமற்ற விஷயங்களில், நமக்கே சானலை மாற்றிவிடலாம் என்று தோன்றுகிறது. ராகவன், ஆறுசாமி, துரைசிங்கம், ரத்னவேல் பாண்டியன் மாதிரி கெத்தான போலீஸ் ஆஃபீசர்கள் பிக்பாஸுக்குத் தேவை

‘பிக்பாஸ் சந்தை’ என்கிற ஐடியாவை அதன் டீம் யோசித்த நேரம் கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இன்று பிக்பாஸ் வீடும் சந்தைக்கடையை விடவும் அதிக இரைச்சலுடன் இருந்தது. திருடன் – போலீஸ் –பப்ளிக விளையாட்டு பயங்கர தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். நினைத்த போதெல்லாம் வெளியேறுகிற சட்டமன்ற உறுப்பினர்கள் மாதிரி, இதில் விளையாடியவர்கள் பலரும் சட்டென்று முறைத்துக் கொண்டு ‘நான் விளையாட்டுக்கு வரலை’ என்று சிறுபிள்ளைகள் போல் விலகினார்கள். “டேய்.. எங்க அம்மா கூப்பிடறாங்கடா.. போலைன்னா திட்டுவாங்க” “வெயிட்டீஸ்.. எனக்கு சுச்சா வருது.. போயிட்டு வந்துடறேன்” போன்ற எல்கேஜி காரணங்கள் மட்டும்தான் வரவில்லை.  

ஒரு விளையாட்டு போட்டியின் விதிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டு, இவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டு துவங்கி விட்ட பிறகு அது முடியும் வரை ஒவ்வொரு அணியுமே அந்த எல்லைக்குள் மட்டுமே இயங்க வேண்டும். உதாரணத்துக்கு, வழக்கமான நடைமுறையில் பொதுமக்கள் காவல்துறையைப் பார்த்தால் எப்படி அஞ்சி மரியாதை தருவோர்களோ.. அப்படியே ‘பொதுமக்கள்’ நடந்திருக்க வேண்டும். போலவே போலீஸ் அணியும் திருடர்கள் அணியும் அவரவர்களுக்கான குணாதிசயங்களுடன் இயங்கியிருக்க வேண்டும்.  இடையில் ஜாலியான குறும்புகளும் இருந்திருக்கலாம். 

ஆனால் இவர்களின் இந்த task-ல் தனிப்பட்ட உரிமைகளும், கிண்டல்களும், முன்விரோதங்களும், மனக்கசப்புகளும் கலந்திருந்ததால் அவ்வப்போது விளையாட்டிலிருந்து விலகி விலகிச் சென்றார்கள். தங்களின் செளகரியம் போல மீண்டும் வந்து இணைந்தார்கள். அதிலும் சென்றாயனை ஒரு போலீஸாகவே எவரும் மதிக்கவில்லை என்பதெல்லாம் மரண பங்கம். தங்களின் அணியிடம் பணம் அதிகமிருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அணியும் பல முட்டாள்தனங்களைச் செய்தார்கள். (எந்த அணி வெற்றி பெற்றாலும் லக்ஸரி மதிப்பெண்களின் மூலம் கிடைக்கப் போகும் பொருட்கள் அனைவருக்கும்தானே?) 

இவர்களின் சிறுபிள்ளைத்தனங்களால், இந்த விளையாட்டில் போலீஸூம் பொதுமக்களும் தோற்றுப் போக, ‘திருடர்கள் அணி’ சிறப்பாக இயங்கிய பெருமையை பிக்பாஸிடமிருந்து பெற்றது. ஆக… நடைமுறையைப் போலவே பிக்பாஸ் வீட்டிலும் திருடர்கள்தான் ‘ஜாப் எதிக்ஸை’ முறையாக பின்பற்றுகிறார்கள் போலிருக்கிறது. 

பொன்னம்பலம் சிறைத்தண்டனை விவகாரத்திற்குப் பிறகு பிக்பாஸ் வீடு இரண்டாக அல்லது மூன்று பிரிவுகளாக பிரிந்திருப்பதை அறிய முடிகிறது. எனவே இது சார்ந்த புகைச்சல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. 

பாலாஜியும் மஹத்தும் மிக மோசமான வார்த்தைகளுடன் இன்று மோதிக் கொண்டது இதனால்தான் என்று தோன்றுகிறது. நட்பின் உரிமையில் தனக்கும் யாஷிகாவிற்கும் இடையில் புழங்கும் ‘சர்ச்சைக்குரிய வார்த்தைகள்’ விவகாரத்தில் மற்றவர்கள் தலையிட உரிமையில்லை என்று மஹத் நேற்றே கோபமாக இருந்தார். எனவே, “செருப்பால் அடிப்பேன்’றது மட்டும் கெட்ட வார்த்தை இல்லையா?” என்று பாலாஜி அந்தப் புள்ளியை இன்று தொட்டதும் மஹத்தின் கோபம் மேலதிகமாக பற்றிக் கொண்டது. விளைவு.. போடா… காமெடி.. தலையா.. என்ற ஏக வசனங்கள் பறந்தன. பிறகு பாலாஜியிடம் சென்று மனமுருக மன்னிப்பு கேட்ட மஹத்தைப் பார்த்து சிரிப்பதா, வருத்தப்படுவதா என்றே புரியவில்லை. ‘இனிமே என் கோபத்தைக் கன்ட்ரோல் பண்ணிப்பேன்’ என்று கமலிடம் தந்த வாக்குறுதியை மஹத் பின்பற்றவில்லை. பொசுக்கென்று அனைத்திற்கும் கோபப்படுகிறார். போலவே பாலாஜியும். 

**

23-ம் நாளின் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. “உங்களுக்கு சிறைத்தண்டனை-ன்னு அறிவிச்சப்ப… யாரெல்லாம் கைத்தட்டி விசிலடிச்சாங்கன்னு பாருங்க.. நான் மட்டும்தான் அப்படி செய்யலை..அப்புறம் ‘அவரை ரிலீஸ் பண்ணுங்க’ –ன்னு கேமிரா முன்னாடியும் போய் நடிச்சாங்க’ என்பது போல் ரித்விகா பொன்னம்பலத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். “உங்களை துருப்புச் சீட்டா வெச்சு கேம் நடக்குதுண்ணே…’ என்றார் பாலாஜி…. “இந்த வாரம் நான் போகாம இருந்தா.. என்னென்ன நடக்குது பாருங்கள்’ என்றார் பொன்னம்பலம். (அப்ப beep சத்தம், Mute  போன்றவை இனிமே அதிகம் வரும் போல இருக்கே!)

இந்த விளையாட்டில் போலீஸ் அணியும் திருடர்கள் அணியும் ரகசியக் கூட்டுடன் செயல்பட்டார்கள். (லாஜிக்படி இது சரிதான். வெளிலயும் அப்படித்தானே நடக்குது?”) “அவங்க செய்யற சாப்பாடை நீங்க திருடி எடுத்துட்டுப் போயிடுங்க.. ‘எதுவா இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து பேசிக்கங்க’..ன்னு நாங்களும் பின்னாலேயே வர்றோம். அங்க வெச்சு பங்கு போட்டு சாப்பிடலாம்’ என்று சென்றாயன் சொன்ன யோசனையை ஒட்டி காவலர்களுக்கும் திருடர்களுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதன்படி சமையல்கார்களின் கண் எதிரேயே திருடர்கள் சாப்பாட்டை தூக்கிக் கொண்டு ஓட.. எதிரே வந்த பொன்னம்பலம் டேனியின் கையில் இருந்த தயிர் குடுவையை தட்டி விட மொத்த தயிரும் வீணாகப் போனது. 

மற்றவர்களின் மீது ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் பொன்னம்பலம் இவ்வாறு ஏடாகூடமாக செயல்பட்டதில் ஆச்சரியமில்லை. “போலீஸ்காரங்க எதுவும் செய்யலைன்னா நாமதான் தடுத்தாகணும்” என்பது அவருடைய (விதண்டா) வாதம். “நித்யா கொஞ்சூண்டு..சாப்பாட்டை எடுத்து குப்பைல கொட்டினதுக்கு என்னெல்லாம் பேசினீங்க.... இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க? என்று டேனி ஆக்ரோஷமாக பொங்கினார்.  

“போலீ்ஸ்காரங்களுக்கு சாப்பாடு வேணுமின்னா காசு கொடுத்துட்டு வாங்கிட்டு போங்க. அப்படித்தான் ரூல்ஸ் இருக்கு” என்று சமையல் டீம் சொல்லியது. (இந்த அதிசயம் எந்த ஊர்ல நடக்குது?!) ‘திருடங்க சாப்பாட்டை திருடக்கூடாது –ன்னு ரூல்ஸ் இல்லையே?” என்று லாஜிக்காக மடக்கினார் டேனி. என்றாலும் பொன்னம்பலம் வேண்டுமென்றே சாப்பாட்டை தள்ளி விட்ட வருத்தம் எல்லோரிடமும் இருந்தது. “ஏண்ணே.. அப்படி செஞ்சீங்க?” என்று மறுநாள் நித்யாவும் பொன்னலம்பத்திடம் வருத்தப்பட்டார். ‘ரியல் லைப்ல.. கூட திருடங்க திருடிட்டு ஓடினா பப்ளிக் பிடிக்கும்ல.. அப்படித்தான் அவர் பண்ணினார்.. reflect  action’ என்றார் வைஷ்ணவி. (நீங்க லாயருக்கு படிச்சிருக்கலாம் வைஷ்ணவி. எந்த பக்கம் நின்னாலும் நல்லா பேசறீங்க!). 

24-ம் நாள் காலை. ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’ விளையாட்டுக்குப் பொருத்தமாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்திலிருந்து பீலா.. பீலா.. பீலா.. பீலா உடாத’ பாடல் ஒலித்தது. பல் துலக்கி விட்டு வந்து நடனமாடலாம் என்று வந்த பொதுமக்கள் அணிக்கு ஒரே அதிர்ச்சி. பற்பசை, பிரஷ் என்று பல அடிப்படை பொருட்கள் காணாமல் போயிருந்தன. 

‘சல்யூட் அடிக்காமல் இருந்ததற்காகவும் அடிபணியாததற்காகவும் போடப்பட்ட அபராதத்தை நித்யா செலுத்தாதால் தலைவி ரம்யாவிடம் தன் ஆட்சேபத்தை தெரிவித்து காலையிலேயே பஞ்சாயத்தை துவக்கினார் மஹத். 

“என்னை யாருமே போலீஸா மதிக்க மாட்டேங்கறாங்க.. சல்யூட் வெக்க மாட்றாங்க.. அதுக்கு ஃபைன் கேட்டா தர மாட்றாங்க” என்று ‘சிரிப்பு போலீஸாக’ புலம்பிக் கொண்டிருந்தார் சென்றாயன். “மொதல்ல போயி நீ யூனிபார்மை போடு” என்று கறார் ஆபிசராக சொன்ன இன்ஸ்பெக்டர் மஹத். ‘நீ வந்து காரெக்ட்டருக்குள்ள.. ஸ்டிக்ரிட்டா இரு.. அவங்க கூட சேர்ந்து விளையாடிட்டு இருக்காத. நாளைக்கே சினிமால போலீஸ் காரெக்ட்டர் கிடைச்சா.. சின்சியரா பண்ணுவல்ல.. அந்த மாதிரி நெனச்சுக்கோ’ என்று சென்றாயனுக்கு உபதேசம் செய்தார் மஹத். “கிச்சன் பக்கம் போனா.. ‘கறிக்குழம்பு செஞ்சிருக்கோமே.. வெவ்வவ்வே.. ன்னு சொல்லி வெறுப்பேத்தறாங்க.. சார்.. நான் என்ன செய்யறது?” என்று பசியில் அல்லாடினார் சென்றாயன். (என்ன.. ஏட்டய்யா.. இப்படி இருக்கீங்க?.) 

இதையே தனிமையில் காமிராவின் முன்பு சொல்லி புலம்பினார் சென்றாயன். “கோபமா… வருது… ஆனா என்ன பண்றதுன்னு தெரியல…” என்று அவர் அனத்திய போது சிரிப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. இருந்த பசியில், ஒருமுறை ஜனனி காட்டி காட்டி வெறுப்பேற்றி அருந்திக் கொண்டிருந்த காஃபியை பிடுங்கி இவர் குடித்து விட அதற்கு போலீஸ் தண்டம் அழ வேண்டியிருந்தது. “இந்த விளையாட்டில் நாங்கள் இல்லை” என்று பொதுமக்கள் டீம் முறைத்துக் கொண்டவுடன் “அப்பாடா!.. என்று இவர் கிச்சன் பக்கம் சென்று, சாப்பாட்டை அள்ளி வாயில் வைப்பதற்குள்.. ஷாரிக் வந்து ‘டாஸ்க்ல இருக்கீங்கதானே?” என்று கேட்டு இடையூறு செய்ய சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு கோபமாக கிளம்பிச் சென்றார் சென்றயான். 

சமயங்களில் நிஜ கான்ஸ்டபிள்கள் நடைமுறையில் படும் அல்லல்களை போலீஸ் டீம் பிரதிபலித்தது. காசு கொடுத்து சாப்பிட்டால் தங்களின் நிதி இருப்பு குறைந்து விடும் என்பதற்காக ‘போலீஸ் அணி’ பட்டினி கிடந்தார்கள். பசி பொறுக்க முடியாத மஹத் ஒரு முறை ‘கைப்பற்றப்பட்ட’ ஆப்பிளை’ கடித்து விழுங்கி திருடர்களுக்கும் வழங்கினார். ஆனால் பட்டினியை கறாராக பொறுத்துக் கொண்டு கடமையாற்றியதில் டிஎஸ்பி செளத்ரியையும் மிஞ்சி நின்றார் மும்தாஜ்.  

“ஃபைன் கட்ட எங்க கிட்ட காசு இல்ல.. ஜெயில்ல போடுங்க” என்றார் ஜனனி. (காசும் செலவாகாது.. போலீஸ் செலவில் சாப்பாடும் கிடைத்து விடும் – ‘விஷபாட்டில்’ ரொம்ப விவரம்தான்). காவல்துறைக்கு அடிபணியாத நித்யா கைது செய்யப்பட்டார். “நூறு ரூபா ஜாமீன் தந்தா விட்டுடறோம்” என்றது போலீஸ் டீம். ‘எங்க கிட்ட காசு இல்ல.. “ என்று பொதுமக்கள் அணி  மறுபடியும் அழிச்சாட்டியம் செய்ய.. சாப்பிட்டுக் கொண்டிருந்த நித்யா.. அப்படியே அழைத்துச் செல்லப்பட்டார். (ஐயகோ.. சைதை தமிழரசி கைது செய்யப்பட்டார்களா! ஒரு பந்த் இல்லையா.. ஒரு போராட்டம் இல்லையா?!) “எங்க கிட்ட நீங்க மனிதாபிமானம் பார்க்கவேயில்லை. அதனால் நாங்களும் பார்க்க மாட்டோம்” என்று மஹத் உணர்ச்சிவசப்பட்டார். “போலீஸ் வாழ்க” என்று அவர்களின் கடமையை கண்கலங்கிப் பாராட்டியது ‘திருடர்கள்’ அணி. 

தாங்கள் உழைத்து கஷ்டப்பட்டு திருடிய பொருட்களை விற்று தங்கள் அணிக்கு பணம் சேர்க்க முயன்றது திருடர்கள் அணி. ‘வாங்க.. சார்.. வாங்க.. ரொம்ப நியாயமான விலை…” என்று கூவி கூவி.. பொதுமக்களின் பொருட்களை அவர்களிடமே விற்றுக் கொண்டிருந்தார்கள். காவல்துறையினரின் பொருட்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையாம். ‘இந்தப் போலீஸ்காரங்க கிட்ட இருந்து நமக்கு பாதுகாப்பே கிடையாது” என்று அலுத்துக் கொண்ட பொதுமக்கள் அணி, திருடர்களிடம் பேரம் பேச.. ‘நீங்க மட்டும் சோறை நூறு ரூபாய்க்கு விக்கலை.? நாங்க என்ன அத்தனை அநியாயமான விலையா சொல்றோம்? உங்க மேக்கப் பொருட்களை நியாய விலைல.. இருபது ரூபாய்க்கு விக்கறோம். சோறு முக்கியமா,.. மேக்கப் முக்கியமா” என்று கரெக்ட்டாக லாஜிக் பேசினார் டேனி.  

“தட்ல சோறு வெக்கட்டுமா.. கெளரவம் வெக்கட்டுமா.. ன்னு கேட்டா.. ‘கெளரவத்தைப் போடுங்க’ ன்னு சொல்ற குடும்பம்டா நம்மளது” என்கிற கண்கலங்க வைக்கும் ஒரு திரைப்பட வசனத்தைப் போலவே ‘எங்களுக்கு மேக்கப்தான் முக்கியம்” என்று பொருட்களை வாங்கிச் சென்றது பெண்கள் அணி. சீதையை மீட்கச் சென்ற ராமர் போல.. சிறையிலிருந்த நித்யாவை மீட்க போராட்டத்தில் இறங்கினார் பாலாஜி. (ஆனால் துரதிர்ஷ்டவசமாக ‘அனுமார்’ போலீஸ் அணியில் இருந்தார்). 

“என்ன இது.. சவ..சவ.. ன்னு போயிட்டிருக்கு?’ என்று பிக்பாஸிற்கே தோன்றியதோ என்னமோ.. இதில் புதிதாக ஒரு அயிட்டத்தை நுழைக்க முடிவு செய்தார். அதன் படி செய்தியாளரான பாலாஜி, ஒளிப்பதிவாளர் ரம்யாவுடன் இணைந்து ‘வீட்டு நிலவரத்தையும் கலவரத்தையும்” நேரலையில் ஒளிபரப்புவார்’ என்று அறிவிப்பு வந்தது. “இந்த சிரிப்பு போலீஸ்களால் எங்களுக்கு உபயோகமே இல்லை” என்று செய்தியாளர்களிடம் போட்டுக் கொடுத்தது பொதுமக்கள் அணி. 

இதற்கிடையில், பசி மயக்கத்திலோ என்னவோ அயர்ந்து உட்கார்ந்திருந்த சென்றாயனை ‘புலனாய்வு’ பத்திரிகையின் சாகச உணர்வோடு செய்தியாக்க முயன்றார் பாலாஜி. “இவனை எந்த ஆங்கிள்ல இருந்தும் பாருங்க.. போலீஸ்காரன் மாதிரியா இருக்கான்?” என்று ஜாலியாக சேம் சைட் கோல் போட்டார் மஹத். சிறைக்கு முன்னால் செய்தி சேகரிக்க சென்ற பாலாஜியை ‘வெளியே போய்யா’ என்று மஹத் எச்சரிக்க சற்று எரிச்சலானார் பாலாஜி.

பசி பொறுக்க முடியாத போலீஸ் டீம் தனது அதிரடி ஆப்ரேஷனை வேறு வகையில் துவங்கியது. திருடர்கள் வீட்டிற்குள் ஒளித்து வைத்திருந்த ஆப்பிள்களை ‘கைப்பற்றும்’ சாக்கில் ஆட்டையைப் போட்டு விடலாம் என்று தீர்மானித்தது. அதன்படியே செயல்பட “எங்க பொருட்களை கண்டுபிடிச்சப்புறம் எங்க கிட்டதானே தரணும்? என்று பொதுமக்கள் டீம் விவாதம் செய்தது. ‘இந்த கேஸ் விசாரணைல இருக்கு. அதுக்கப்புறம்தான் எதையும் தர முடியும்?” என்று நிஜ போலீஸ் மாதிரியே அலம்பல் செய்தது காவல்துறை. பசி பொறுக்காத மஹத் சந்தடி சாக்கில் ஆப்பிளை எடுத்து கடித்தார். கருணை உணர்வோடு திருடர்களுக்கும் அவர் ஆப்பிளை வழங்க ‘போலீஸ் ஐயா வாழ்க’ என்று வாழ்த்தியது திருடர் அணி. 

“உணவுகளை விற்கும் ஒரே வழியின் மூலம்தான் எங்கள் வருவாயைப் பெருக்க முடியும். அதற்கும் நீங்கள் குறுக்கே நின்றால் எப்படி?” என்று ஆத்திரப்பட்டது பொதுமக்கள் அணி. “நான் இந்த விளையாட்டில் இல்லை” என்று எரிச்சலானார் பாலாஜி. இந்தச் சமயத்தில்தான் பாலாஜிக்கும் மஹத்திற்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது. “நாங்க சொல்ற எந்த ரூல்ஸையும் நீங்க ஃபாலோ செய்ய மாட்டேங்கறீங்க.. ஃபைன் கட்ட மாட்றீங்க.. ஒருத்தர்.. ‘பிச்சையெடுத்து சாப்பிடு’ன்றாரு” என்று மஹத் ஆவேசப்பட, பாலாஜியும் இவரும் ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். மஹத் தனது யூனிபார்மை கழட்டி ‘மஃப்டிக்கு’ மாறினார்.

தம்பியாக நினைத்துக் கொண்டிருந்த மஹத், தன்னைத் திட்டி விட்டதை எண்ணி ஓரமாக அமர்ந்து கண்கலங்கினார் பாலாஜி. (கட்டுக்கடங்காத கோபத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் தனது உறவைத் திட்டினால் அவர் எந்த அளவிற்கு மனஉளைச்சல் அடைவார் என்பதை பிக்பாஸ் விளையாட்டே பாலாஜிக்கு கற்றுத் தந்தது). பிறகு இவரின் அருகில் வந்து மனமுருக மன்னிப்பு கேட்டார் மஹத். ‘சரி.. போ.. என்னை கொஞ்ச நேரம் விடு’ என்ற பாலாஜி.. பிறகு பொன்னம்பலத்திடம்.. ‘என்னை ஜோக்கர்…ன்னு சொல்லிட்டாண்ணே.. மனசு கஷ்டமா இருக்கு. கமல் சார் சொன்னதால கோபத்தைக் குறைச்சுக்கிட்டேன்” என்று அனத்தினார். ‘வில்லன் வேஷத்துல நடிச்சதால.. என்னையும் இங்க வில்லனாகவே பார்க்காறங்க” என்று தன் குறையையும் சேர்ந்து கொட்டினார் பொன்னம்பலம். 

“சாப்பாடு விஷயத்துல விளையாடாதே” என்று ஷாரிக்கிடம் கோபத்துடன் கத்தி விட்டு வந்த சென்றாயனுக்கு ‘திருட்டு’ ஆப்பிள்களை தந்து விருந்தோம்பல் செய்தார் டேனி. இனியும் பசி பொறுக்க முடியாத போலீஸ்காரர்கள் ஓர் உடன்படிக்கைக்கு வந்தார்கள். “நித்யாவை ரிலீஸ் பண்றோம். எங்க ஆறு பேருக்கும் சாப்பாடு கொடுங்க” என்று செலவில்லாமல் டீல் பேசினார்கள். “நீங்களும் சாப்பிடுங்க..” என்று மஹத் திருடர்களிடம் சொல்ல.. :”உங்களை விட்டுட்டு நாங்க என்னிக்கி அய்யா.. சாப்பிட்டிருக்கோம்.. வாங்க சேர்ந்து சாப்பிடலாம்” என்று திருடர்கள் அணி கண்கலங்க.. ‘பாசக்காரப் பயலுவளா இருக்காங்களே’ என்று மஹத்தும்  கலங்க.. நகமும் சதையும் போல இணைந்திருந்தது திருடர் –போலீஸ் கூட்டணி. 

‘யார் இந்த கேமில் இருக்கிறார்கள், யார் இல்லை” என்று குழப்பம் ஏற்படும் படியாக அவரவர்களின் இஷ்டத்திற்கு இந்த விளையாட்டில் இணைந்து விலகிக் கொண்டிருந்தார்கள். ‘உங்க கண்ணு முன்னாடிதோனே டேனி ஆப்பிள்களை தூக்கிட்டு போனான். ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்காம இருக்கீங்க?” என்று பொதுமக்கள் அணி ஆவேசப்பட “டேனி.. வா டேனி.. ஜெயிலுக்கு உள்ள கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துடு.. செல்லம்.. நான் சொன்னா கேப்ப இல்ல.. “ என்று கொஞ்சிக் கொண்டிருந்தார் மஹத். திருடர்கள் அகன்றதால், தங்களின் பொருட்களை மீட்க பொதுமக்கள் அணி ஓடியது. ‘நாங்க இன்னமும் கேம்லதான் இருக்கோம்” என்று அவர்களை வழிமறித்து எடுத்துச் சென்று பொருட்களை பிடுங்கியது திருடர்கள் அணி. 

“இந்த கேம் ரொம்ப சீப்பா.. போயிட்டிருக்கு. இதை விளையாட எங்களுக்கு இஷ்டமில்லை.. நீங்க தந்த பணத்தை உங்க கிட்டயே ஒப்படைச்சிடறோம்’ என்று தலைவி ரம்யா காமிராவின் முன்வந்து கலங்கி நின்றார். 

“நாங்க இந்த கேம்லதான் இன்னமும் இருக்கோம்.. பொதுமக்கள் எங்களை ரொம்பவும் அவமரியாதை டிரீட் பண்றாங்க” என்று பிக்பாஸிடம் புகார் தந்தது போலீஸ் அணி. “நீ நடுவுல யூனிபார்ம் சேஞ்ச் பண்ணது தப்பு” என்று கடமை தவறாத அதிகாரியாக மஹத்திடம் பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ்.

கசகசவென்ற சத்தத்துடன் கன்னாபின்னாவென்று விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை, பெரியவர்கள் அதட்டல் போட்டு நிறுத்துவது போல.. இதில் குறுக்கிட்டார் பிக்பாஸ். 

‘தலைவி ரம்யா.. பொதுமக்களுடன் இணைந்து கொண்டு விதிமுறைகளை மீறியதாலும்.. இந்த விளையாட்டை முறைப்படி  கண்காணிக்காததாலும்.. அவரின் பதவி பறிக்கப்படுகிறது” என்று அறிவித்தார் பிக்பாஸ். மத்திய அரசால் கவிழ்க்கப்பட்ட மாநில அரசு போல கசப்புடன் புன்னகைத்தார் ரம்யா. அவர் அடுத்த வார வெளியேற்றத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் தண்டனையும் வழங்கப்பட்டது. இதைப் போலவே இந்த விளையாட்டின் விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபரும் நேரடியாக வெளியேற்றத்திற்கு தகுதியாவார்கள் என்கிற எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. 

‘இந்த விளையாட்டின் இறுதியில் அதிகமாக பணம் வைத்திருக்கும் அணியே வெற்றி பெறும்’ என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொன்னார் பிக்பாஸ். (எப்படியாவது அடிச்சுக்கங்க.. ஆனா மேட்டர் முக்கியம்’ என்பது இதன் ஆதாரமான செய்தி). 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘இந்த விளையாட்டை முறைப்படி நடத்த முடியும் என்று நினைக்கும் ஒருவர் பொதுமக்கள் அணியிலிருந்து முன் வரலாம்’ என்கிற பிக்பாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து ‘நித்யா’ துணிச்சலுடன் முன்வந்தார். ‘எனக்கு அந்த தகுதி இருக்கு” என்றார் கெத்தாக. (ஒருமுறை ஜெயிலுக்குப் போய் வந்தாலே தகுதி வந்துடும்ல!).

இதுவரையான விளையாட்டில் ‘திருடர்கள் அணி’ சிறப்பாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட “ஹே..’ என்று அவர்கள் உற்சாகமானார்கள். “இதையே தொடர்ந்து செய்யுங்கள்” என்றார் பிக்பாஸ். (‘கலி முத்திடுச்சு’ –ன்றது சரியாத்தான் இருக்கு).

ஆளாளுக்கு ‘விளையாடுவதால்” இந்த விளையாட்டு அத்தனை சுவாரசியமானதாக இல்லை. விதிமுறைகளைப் புரிந்து கொள்ளாமல் தனிப்பட்ட அளவில் எடுத்துக் கொண்டு சிலர் டென்ஷன் ஆவதால் ஜாலியாகவும் இல்லாமல் சீரியஸாகவும் இல்லாமல் கொடுமையாக அமைந்தது இந்த விளையாட்டு. அதிலும் போலீஸ் டீம் செய்யும் சுவாரஸ்யமற்ற விஷயங்களில், நமக்கே சானலை மாற்றிவிடலாம் என்று தோன்றுகிறது. ராகவன், ஆறுசாமி, துரைசிங்கம், ரத்னவேல் பாண்டியன் மாதிரி கெத்தான போலீஸ் ஆஃபீசர்கள் பிக்பாஸுக்குத் தேவை

அடுத்த டாஸ்க்கையாவது சுவாரசியாக யோசித்து எங்களின் மனதை திருட முயற்சி செய்யுங்கள் பிக்பாஸ். 
 

அடுத்த கட்டுரைக்கு