ஆவ்வ்வ்வ்வ்..... வெச்சு செய்றீங்களே பிக்பாஸ்?! #BiggBossTamil2

ஆவ்வ்வ்வ்வ்..... வெச்சு செய்றீங்களே பிக்பாஸ்?! #BiggBossTamil2

‘கடந்த 2 நாள்களாக நடைபெற்ற பிக் பாஸ் லக்ஸரி டாஸ்க்கின் இறுதிப்பகுதி இது’ என்று நித்யா வாசித்த அறிவிப்பைக் கேட்டவுடன் ‘அப்பாடா, இது முடியப்போகிறதா!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. அந்தளவுக்கு இந்தச் சவால் ரொம்பவும் மொக்கையாக இருந்தது. ‘நின்னா.. காசு.. உக்காந்தா.. காசு.. டம்ளர் கழுவினா காசு. கழுவாட்டா காசு...’ என்று படுத்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள். இதே பழக்கம் இனி அவர்கள் வீடு மட்டுமல்லாமல் நம்முடைய வீடுகளிலும் பரவிவிடுமோ என்று திகிலாக இருக்கிறது. (“ஏம்மா.. ஒரு கிளாஸ் தண்ணி கொடேன். தாகமா இருக்கு”. - “கிளாஸை எடுக்க 5, தண்ணி ஊத்த 5, எடுத்துட்டு வர 5.. ஆக ரூ.15 கொடுங்க என்று மனைவிமார்கள் ஆரம்பித்து விட்டால் எங்கே செல்வது?)

நித்யா - பிக் பாஸ்

இன்றைய பகுதி சற்றாவது சுவாரஸ்யமாக அமைய டேனி டீம் அடித்த கூத்துகள்தாம் காரணம். ‘அய்யா.. வயித்துப் பொழப்புக்காகப் பண்றோம்” என்று.. போலீஸ் ஸ்டேஷனிலிருந்து உலகப்பந்து, அறிவிப்புப் பலகை போன்றவற்றையெல்லாம் லவட்டிக்கொண்டு வந்தார். பிறகு வெள்ளை பேப்பரையும் சுட்டுக் கொண்டு வந்து. ‘பிக்பாஸ் வீட்டினர் தங்களின் உறவுகளுக்கு இதன் மூலம் செய்தி சொல்லலாம். வெறும் பத்து ரூபாதான். ஆறு கோடி ஜனங்க இதைப் பார்ப்பாங்க.. காலத்தால் அழியாத காவியம்’ என்றெல்லாம் பில்டப் கொடுத்து, அறிவிப்புப் பலகையை ‘பிசினஸ்’ ஆக்க முயன்றது நல்ல ஐடியா.. (பிக் பாஸ்ல வர்ற விளம்பரத்துக்குப் பத்து ரூபாயா? அப்பாவியா இருக்கீங்களே. ‘உண்மையான மார்க்கெட் நிலவரம் என்னன்னு தெரியுமா டேனி?).

சாப்பிட்டுக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் மஹத் அலறியடித்துக்கொண்டு ஓடி.. மறந்து வைத்திருந்த தன் தொப்பியை எடுத்துக்கொண்டு வந்து புலம்பும் அளவுக்கு திருடர்களின் அராஜகம் அமைந்திருந்தது. 

அறிவிப்புப் பலகையில் தங்களின் சொந்தச் செய்திகளை எழுதி வைத்து ‘சாம்பிள்’ காட்டினார்கள் திருடர்கள். டேனியும் யாஷிகாவும் தங்களின் உறவுகளுக்கு அன்புத் தகவல் எழுதி வைக்க.. ஐஸ்வர்யா.. இதனோடு ‘am a big fan of STR’ என்று எழுதி வைத்திருந்தார். (வெளங்கிடும்.. ஏற்கெனவே உள்ளே ஒரு மினி STR வேற இருக்காரு..).

ஆனால், இன்றும் சில உரசல்கள், புறணிகள், விவாதங்கள் இருந்தன. ‘மும்தாஜ் கமிஷனர் ரேஞ்சுக்கு ஓவரா பண்றாங்க’ என்று பொதுமக்களின் அபிப்ராயம். இந்த டாஸ்க்கைத் தவிர, பொதுவாகவே அவர் மிகையாக நடந்துகொள்கிறார் என்பதும் அவர்களின் கருத்து. ‘செலிபிரிட்டி அந்தஸ்தை மெயின்டெயின் பண்றாங்க’ என்றது ‘பாலூட்டி வளர்த்த கிளியான’ ஷாரிக். ‘நீங்க இப்ப டாஸ்க்ல இருக்கீங்களா, இல்லையா?” என்று ஒவ்வொருவரையும் சோதனை செய்வதையே பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் ஷாரிக். 

மும்தாஜ்

“எனக்கு இந்தத் தோசை வேணாம்.. ஒத்துக்காது. வேற மாவுல போட்டுக் கொடுங்க’ என்று மும்தாஜ் கேட்க.. “அப்படில்லாம் உங்களுக்குன்னு தனியாச் செய்ய முடியாது மேம்’ என்றார் நித்யா. “சரி.. அப்ப வேணாம்.. சந்தோஷமா இருங்க’ என்று மும்தாஜ் கோபித்துக்கொண்டு கிளம்ப..  “சரிங்க மேம். பண்ணித் தரோம். ஆனா மாவு எடுக்க 5, கலக்க 5, தோசைக்கல் எடுக்க 5, ஊத்த 5, கரண்டில எடுக்க.. 5’ என்று நித்யா பட்டியலாக இட.. ‘நீங்க ஆணியே புடுங்க வேணாம்’ என்று மும்தாஜ் மறுபடியும் கோபித்துக்கொள்ள, ஒருவழியாகச் சமாதானம் ஆனார்கள். ‘எல்லாத்துக்கும் சுத்தம் பாக்கறாங்க.. நாங்க பண்ணா பிடிக்கறதில்ல.. அப்ப நாங்க மட்டும்.. இதுவா..” என்று பாலாஜி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் அவ்வப்போது புறணி பேசுகிறார்கள். 

ஆனால், மும்தாஜை விடவும் ‘டேனி’ அதிக எரிச்சலையூட்டுகிறார் என்பது வைஷ்ணவி மற்றும் ரம்யாவின் கருத்து. “மும்தாஜாவது சமயத்துல நேர்மையாப் பேசறாங்க.. ஆனா இந்த டேனி.. பய ரொம்ப நாடகம் ஆடறான்’ என்கிற அவர்களின் புறணியை நித்யாவும் வழிமொழிந்தார். 

**

24-ம் நாளின் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன.`நான் விளையாட வரலை’ என்று முரண்டு பிடிக்கும் ‘டர்ன்’ இப்போதுதான் ஜனனியுடையது. ‘போலீஸ் அணி ரொம்பப் பண்றாங்க’ என்பது அவருடைய வருத்தம். “இது ஒரு Task. நம்ம சகிப்புத்தன்மையை சோதிக்கறாங்க.. புரிஞ்சுக்க" என்று புதிய பொறுப்பாளர் ‘நித்யா’, ஜனனியை கன்வின்ஸ் செய்ய தலைகீழாக நின்றுகொண்டிருந்தார். தன் புதிய பொறுப்பை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பல அல்லல்களை இன்று சந்தித்துக்கொண்டிருந்தார். (இந்த ரணகளத்துக்கு இடையிலும் ரம்யாவுக்கு வைஷ்ணவி உணவு ஊட்டிக்கொண்டிருந்த காட்சி கொடூரமானது). “இதுதான் captaincy” என்று நித்யாவுக்குச் சான்றிதழ் தந்தார் மஹத். (நீங்க உங்க வேலையை ஒழுங்காப் பாருங்க பாஸூ.. வந்துட்டாரு..). 

டேனியல்

25-ம் நாள் காலை.. ‘டசக்கு டசக்கு டசக்கு டும்டும்’ என்கிற ரகளையான குத்துப்பாடல் ஒலிக்க, நடனமாடுவதற்கு எவருக்கும் ஆர்வமில்லை. ‘அஞ்சு ரூவா.. பத்து ரூவா.. என்று நாள் பூராவும் பேரம் பேசிய கொடுமையினாலோ என்னவோ. ஆளாளுக்குச் சோர்வாகப் படுத்துக்கொண்டிருந்தார்கள். 

“காலைலயும் மதியமும் சாப்பிடாம பட்டினி இருந்தா இவ்ளோ சேமிக்கலாம்” என்று தனியாக உட்கார்ந்து ‘பிளான்’ போட்டுக் கொண்டிருந்தார் டேனி. (பாவம்!) கேரட், வெங்காயம், முட்டையைத் தொடர்ந்து இன்றைக்கு சர்ச்சைக்கு வித்திட்ட காய்கறி.. ‘எலுமிச்சம் பழம்’. ‘சந்தைக்குப் போகணும்.. ஆத்தா வையும்’ என்கிற சப்பாணி மாதிரி.. “தலைல பொடுகு .. அரிக்குது.. எலுமிச்சம்பழம் வாங்கணும்.. பத்து ரூபா கொடுங்க..” என்று மும்தாஜிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார் சென்றாயன். ``இன்னிக்கு task முடிஞ்சிடும். வெயிட் பண்ணுங்க" என்று முதலில் சமாதானமாகச் சொன்ன மும்தாஜ், பிறகு சென்றாயனின் அலப்பறை அதிகமானவுடன் `தர முடியாது' என்று வீம்பு பிடித்தார். பணம் சேமித்து தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வோர் அணியும் மகா அல்பத்தனமாக நடந்து கொண்டிருந்தார்கள். 

மஹத் சொல்லித்தந்தபடி “நீங்க மட்டும் உங்க பர்சனல் உபயோகத்துக்கு எடுத்துக்கலையா?. என் பங்கைக் கொடுங்க.. எனக்கு ஏன் தர  மாட்றீங்க?’ நான் எஸ்.ஐ.. நீங்க ஏட்டம்மா..’ என்று மேலும் கடுப்பானார் சென்றாயன். (நான் எட்டாங்கிளாஸ் பாஸ்.. நீங்க பத்தாம் கிளாஸ் ஃபெயில்.. பாஸ் பெரிசா.. ஃபெயில் பெரிசா!). நித்யாவும் சென்றாயனுக்கு சப்போர்ட் செய்ய.. விஷயம் மஹத்தின் பஞ்சாயத்துக்கு வந்தது. ‘கொடுத்துடுங்க” என்று துரை உத்தரவு போட்டவுடன் ‘எப்படியாவது ஒழிஞ்சு போங்க’ என்று காசு தர முடிவுக்கு வந்தார் மும்தாஜ். (இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்குத்தான் தலையில் தேய்த்துக்கொள்ள ‘எலுமிச்சம் பழம்’ தேவைப்படும் போலிருக்கிறது).

ரித்விகா

முதல் பெஞ்ச் மாணவன் மாதிரி.. ரித்விகா எப்போதுமே உஷாரான முந்திரிக்கொட்டையாக இருக்கிறார். “ரெண்டு போலிஸூம் மைக் மாட்டலை.. இங்கிலீஷ்ல பேசிக்கறாங்க’ என்று பிக்பாஸிடம் போட்டுக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல்.. ‘டைனிங் டேபிள்.. ல குப்பையைப் போட்டு வெச்சுடலாம்.. அவங்க சாப்பிட வரும் போது.. ‘க்ளீன் செய்ய பத்து ரூபா வாங்கிடலாம்’ என்று டெரரான ஐடியாவெல்லாம் தந்தார். (நீங்க நல்லா வருவீங்க மேடம்!). 

“சேர்ல உக்காந்து சாப்பிட்டா.. காசா.. அப்ப நான் கீழ உக்காந்துக்கறேன்” என்று ரித்விகாவுக்கு பல்பு கொடுத்தார் சென்றாயன். ஆனால் துரைமாரான மஹத் சேரில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு ‘காசு கொடுத்துடு சென்றாயன்.. கொடுக்கக் கொடுக்கத்தான் வரும்’ என்று ‘பந்தா’ செய்து கொண்டிருந்தார். பிறகு தாமதமாக விழித்துக்கொண்டு.. “நீங்க வேணுமின்னே.. குப்பை போட்டு காசு சம்பாதிக்கப் பார்க்கறீங்க.. ஐம்பது ரூபா ஃபைன்” என்றார். (இதைக் கண்டுபிடிக்க இவ்ள நேரம்… ஆச்சா.. என்னய்யா போலீஸூ நீங்க?!). 

திருடர்களிடமிருந்து தனது கண்ணாடியை மீட்க பாலாஜி செய்த சேட்டை சற்று சிரிக்க வைத்தது. “வயசானவரு… பாவம் ஹெல்ப் பண்ணுங்க” என்று இவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தார் நித்யா. ‘கண்ணாடி வேணுமின்னா.. பத்து ரூபா.. நேத்துலாம் இருபது சொல்லிட்டு இருந்தோம். இன்னிக்கு டிஸ்கவுன்ட்.. பொழச்சுப் போங்க.” என்று கருணை காட்டியது ‘திருடர்கள்’ அணி. அவர்கள் பத்து ரூபா என்றதை புகார்தாரர்களிடம் வந்து ‘இருபது ரூபா கேட்கறாங்க” என்று மஹத் சொல்லியது அசல் ‘போலீஸ் தனம்’. (இப்பத்தான் கேரக்டாவே மாறத் தொடங்கியிருக்கீங்க). 

“ஒண்ணும் தேவையில்லை” என்று கிளம்பிய நித்யா இதற்காக காமிராவின் முன்பு முறையீடு செய்யும் போது ‘காசி’ விக்ரம் மாதிரி முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார் பாலாஜி.

நித்யா - பாலாஜி

பாத்ரூம் அறையில் அமர்ந்திருந்த திருடர்கள் அணி அங்கும் தங்களின் அலப்பறையைத் தொடர்ந்துகொண்டிருந்தது. கழிப்பறை உபயோகிப்பதற்காக வைஷ்ணவி வர, அவர் அறைக்குள் இருக்கும் போது.. ‘இதை எடுத்துக்க.. சைலன்ட்டா எடு.. ஆ.. இப்ப கிளம்பு’ என்று ஏதோவொரு பொருளை திருடுவது போலவே இவர்கள் நாடகம் ஆட.. வந்த காரியத்தை ‘பாதியிலேயே’ விட்டு விட்டு வைஷ்ணவி அலறியடித்துக்கொண்டு வெளியே வர.. திருடர்கள் அணி வெடித்துச் சிரித்தது. வைஷ்ணவி இதை இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய.. ‘அவங்க திருடங்க… அப்படித்தான் இருப்பாங்க” என்று திருடர்களுக்குச் சாதமாகப் பேசியது போலீஸ். பிறகு இதை திருடர்களிடமும் சென்று ஜாலியாகச் சொல்லிக்கொண்டிருந்தார் மஹத். (தங்களின் இந்த அரிய சேவைக்காக தேசிய விருதே தரலாம்.). 

ரித்விகாவிடம் ‘நீங்க அழகாக இருக்கீங்க” என்றது.. ஜனனியின் கையைப் பிடித்து இழுத்தது.. என்பது போன்று பல விவகாரமான புகார்கள் சென்றாயன் மீது வந்தது.. ‘புடிச்சு ஜெயில்ல போடுங்க.. சார்… ‘என்று சந்தானமாக மாறினார் ஷாரிக். “இவன் வெளில இருந்தா எனக்கும் பிரச்னை’ என்ற மஹத், சென்றாயனைக் கைது செய்து சிறையில் அடைக்க, அவரோ கம்பி மீது ஏறி நின்று போராட்டம் செய்தார். “அழகா இருக்கீங்க –ன்னு சொன்னது தப்பா?” என்று நியாயம் வேறு. (ஆமாம்.. ரித்விகா தொடர்பாக இத்தனை அபாண்டமான பொய்யைச் சொன்னது தப்புதான் மிஸ்டர் சென்றாயன்).

“மும்தாஜ் எல்லோரையும் பகைச்சுக்கறாங்க.. அப்புறம் எப்படி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணத் தோணும்?” என்று வைஷ்ணவி, பாலாஜி உள்ளிட்ட குழு புறம் பேசிக்கொண்டிருந்தது. 

இன்னொரு பக்கம், டேனியும் சென்றாயனும் தனிமையில் அமர்ந்து தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தனர். ‘பொன்னம்பலத்தின் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாகத்தான் அனந்த் சிறைத்தண்டனை அளித்தார்” என்பது சென்றாயனின் கருத்து. ‘பொன்னம்பலம்.. சுகர் பேஷன்ட் வேற” என்பது அவருடைய அனுதாபம். “சில பெரிசுங்க தன் வயசைக் காட்டியே சில அழிச்சாட்டியங்களை பண்ணுவாங்க.. அதை ஒத்துக்க முடியுமா?” என்று ஆவேசமானார் டேனி. “முகமூடி வேற.. சுபாவம் வேற.. பிஸிக்கலா ஹர்ட் பண்ணாதான நான் கோபம் ஆவேன்.. எத்தனையோ குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கறாங்க. சபை நாகரிகம்-ன்றது முக்கியமானது. பொன்னம்பலம் பேசுனது தப்பு, ரைட்டுன்னு நான் சொல்ல வரலே.. ஆனால் ‘வயதால் மூத்தவன்’ –ன்னு அவர் சொல்றதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்’ என்பது டேனியின் கருத்து. (நீ பெரிய மனுஷனா நடந்துக்கலையேடா!...) “நீ கரெக்ட்டா.. பண்ற மச்சான்… மத்தவங்க பிரச்னையை மண்டலை ஏத்திக்காத’ என்று உபதேசம் செய்தார் சென்றாயன். 

டேனியல் - சென்றாயன்

தன்னுடைய நிதி சேமிப்பைப் பற்றி மும்தாஜிடம் சொல்லிக்கொண்டிருந்தார் டேனி. அவர் சொன்ன தொகை சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. 420. (420 என்பது சீட்டிங் கேஸூக்கான இபிகோ எண்.. டேனி.. இப்படியெல்லாமா கேரக்டருக்குள்ளயே வாழ்வீங்க! கண்ணெல்லாம் கலங்குது!) 

“திருடங்க கிட்ட இருந்து பொருள்களை வாங்கித்தர்றேன்.. எனக்கு என்ன செய்வீங்க?” என்று பொதுமக்களிடம் டீல் பேசிக் கொண்டிருந்தார் மஹத். “சரி.. இப்ப சாப்பிட்டதுக்குக் காசு கொடுங்க’ என்று கேட்கப்பட்டவுடன் “சென்றாயனை வெச்சுக்கங்க’ என்று சக அதிகாரியை அடகு வைக்கவும் தயாராக இருந்தார். இப்படியாகச் சற்று வெறுப்பேற்றி விட்டு “நீங்களும் இப்படித்தானே பண்றீங்க” என்று பிறகு காசு தந்தார் மஹத். “சாப்பாடு நல்லா இருந்தா பத்து ரூபா சேர்த்துத் தாங்க.. நல்லா இல்லைன்னா குறைச்சுக்கங்க” என்று பொன்னம்பலம் ஆர்வக் கோளாறாக கேட்க. “ஹலோ.. நீங்களே ஏன் ஐடியா தர்றீங்க?” என்று மற்றவர்கள் தலையில் அடித்துக் கொண்டார்கள். (பொன்னம்பலம் சார். நீங்க வாயைத் திறந்தாலே அது பஞ்சாயத்தாவுதே.. ஏன்?”).

‘தன்னை லத்தியால் அடித்து விட்டார்” என்று ரித்விகா ஜாலியான புகார் ஒன்றைச் சென்றாயனின் மீது தர, அவரை குழந்தை மாதிரி தூக்கிச் சென்றார் மஹத். (‘மருதமலை’ திரைப்படத்தின் அர்ஜூன், வடிவேலு மாதிரியே இருவரும் இருக்கிறார்கள்.) ‘ஜனனியாவது விஷபாட்டில்.. நீ விஷ பாக்டரி” என்று ரித்விகாவைச் சபித்தார் சென்றாயன். 

 

 

மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது.. குரு வணக்கம் வைத்து விட்டு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள். (இந்த ‘பேபி.. பேபி.. பாட்டை மாத்துங்களேன். போரடிக்குது!).

இந்த லக்ஸரி டாஸ்க் விளையாட்டில் நிகழ்ந்த பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பிக்பாஸ் இது தொடர்பான அறிவிப்பை அறிவித்தார். ஜனனிதான் ‘நாட்டாமை’யாம். துண்டு அணிவித்து சொம்பெல்லாம் தந்தாலும் கூட ‘நாட்டாமை’ கெட்டப் ஜனனிக்கு வரவில்லை. ஓரமாக நின்று சாட்சி சொல்ல வந்த உதிரி கதாபாத்திரம் மாதிரிதான் இருந்தார். 

டேனியல் - ஐஸ்வர்யா - யாஷிகா

“ஐயா.. அடிக்கடி காணாமல் போயிடறாரு” என்று மஹத்தின் மீது முதல் புகாரை வைத்தார் டேனி… (என்னய்யா. டபுள் கேம்.. இது.. இவ்ள நேரம் கூட்டணியாத்தானே இருந்தீங்க?!). தன் மீது சொல்லப்பட்ட அத்தனை புகார்களையும் நேர்மையாக ஒப்புக்கொண்டார் கடமை மீறிய அதிகாரியான மஹத். “பொதுமக்கள் எங்களை மதிக்கறது இல்லை. அந்தக் கோபத்துல கிளம்பிட்டேன். தப்புதான்” என்றார். 

‘சென்றாயனுக்கு ஏன் மரியாதை தரப்படவில்லை?’ என்று அடுத்த கேள்வி எழுந்தது. “எனக்கு எந்தப் பொறுப்பும் தரப்படவில்லை” என்று ‘எலுமிச்சம்பழம்’ பிரச்னைக்குப் பழி தீர்த்தார் சென்றாயன். “அவன் ரொம்ப காமெடியா நடந்துக்கிட்டான். அவனால் நெறைய பணமும் செலவாச்சு..” என்று மஹத் விளக்கமளித்தாலும் ‘சென்றாயனை’ எல்லோருமே கேலியாகத்தான் நடத்துகிறார்கள் என்பது வெளிப்படை. 

“திடீர்னு கேம்ல இருக்கறன்றாங்க.. திடீர்னு இல்லைன்றாங்க.. திருடங்க பொருள்களை தூக்கி ஓடிட்டு ‘நாங்க இப்ப கேம்ல இருக்கன்றாங்க” என்று ரம்யா புகார் சொல்ல, ‘இதை ஆரம்பிச்சதே நீங்கதான்’ என்று டேனி விவாதம் புரிந்தார். 

பொதுமக்களில் பெரும்பாலானோர் மஹத்துக்கு ஆதரவு தெரிவிக்க.. தன்னைத்தான் கார்னர் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட மும்தாஜ் ‘சரி.. என் பேரைத்தானே சொல்லப் போறீங்க.. சாப்பாட்ல கூட இவங்க பிரச்னை பண்ணாங்களே’ என்று ஆதங்கப்பட்டார். 

ஜனனி

‘சரி. வாக்கு எடுத்துடலாம்.. திருடங்க அணி முதல்ல சொல்லுங்க’ என்று ஜனனி சொம்புத் தண்ணீரை குடித்து விட்டு கேட்க.. ‘நாங்க எப்படிச் சொல்றது.. சொல்ல மாட்டோம்’ என்று திருடர்கள் பிடிவாதம் பிடித்தார்கள்.

“பார்க்க எல்கேஜி புள்ள மாதிரி இருந்தாலும் உன்னை நம்பி.. எவ்ள பெரிய பொறுப்பைத் தந்தோம்.. ஒரு பொறுப்புள்ள அதிகாரி மாதிரியா நடந்துக்கற” என்று ஜனனியை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து பிக்பாஸ் திட்டினார் போலிருக்கிறது. ‘நான் சொல்ற மாதிரி செஞ்சித் தொலை” என்றும் சொல்லியிருக்கலாம். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘தன்னுடைய பணியில் கவனக்குறைவாகவும் பாரபட்சமாகவும் இருந்த மஹத்தை சிறையில் அடைக்கிறோம்’ என்கிற தண்டனை தரப்பட்டது. ‘அப்பா. சாமிங்களா.. ஆளை விடுங்க’ என்று ஜாலியாக சிறைக்குச் செல்லத் தயாரானார் மகத். “உங்க கூட குப்பை கொட்டறதுக்கு..அங்க போயி.. நிம்மதியா படுத்திருக்கலாம்’ என்பது அவரது நினைப்பாக இருக்கும்.. “என்னை ரெண்டு நாள் வெச்சு கூட அடிங்க.. ஆனா சனிக்கிழமை விட்டுடுங்க.. கமல் சார் வர்றாரு..” என்றதொரு கோரிக்கையை வைத்தார் மஹத்.

இதற்கிடையில் இன்னொரு காமெடியும் நடந்தது. ‘மஹத் நேர்மையாக தன் தவறுகளை ஒப்புக்கொண்டதால் பெண்கள் அணியில் சிலர் சென்று மஹத்தைப் பாராட்டினார்கள். ‘தன் கடமையிலிருந்து மீறாத கண்ணியமான அதிகாரியாக.. அவருக்கு ஏதோ தேசிய விருது கிடைத்தது போல’ ‘am proud of you’ என்று வைஷ்ணவி சொல்லியதெல்லாம் ஓவர். ‘ஜனங்க பார்க்கறாங்கள்ல’ என்று மஹத் சொல்லிய காரணம் இவர்களின் காதுகளில் விழாதது இன்னொரு காமெடி. 

மஹத்

எப்படியோ, இந்த போலீஸ் – திருடன் – பொதுமக்கள் விளையாட்டு முடியப் போகிறது என்பதை அறியவே மகிழ்ச்சியாக இருக்கிறது. கொலைத்தண்டனையிலிருந்து தப்பித்த நிம்மதி நமக்கு. ஆனால் - இனி வேறு என்ன தண்டனைகள் எல்லாம் என்பதை நினைத்தால்தான் பீதியாக இருக்கிறது.. பார்ப்போம்.

 

`ஓரளவுக்குத்தான் பொறுமை' எனத் தரையில் அடித்து சபதம் எடுத்திருப்பதால் அமைதியாக இருக்கிறோம் பிக்பாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!