Published:Updated:

தொக்கா... குழம்பா... என்னடா இது பிக் பாஸுக்கு வந்த சோதனை?! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
தொக்கா... குழம்பா... என்னடா இது பிக் பாஸுக்கு வந்த சோதனை?! #BiggBossTamil2
தொக்கா... குழம்பா... என்னடா இது பிக் பாஸுக்கு வந்த சோதனை?! #BiggBossTamil2

அதுவரை ரணகளமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டுக்குள் திடீரென்று பிரியமான உறவினர்கள் வந்துவிட்டால், செயற்கையாகவாவது வீட்டின் சூழ்நிலை இதமாக மாறி விடுவதைப் போல ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழுவினர் இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததால் அங்கிருந்த புகைச்சல்கள் தற்காலிகமாக தணிந்தன. என்றாலும் விருந்தினர்களின் வருகைக்கு முன்னரும் பின்னரும் கூட சில பிரச்னைகள் ஓடிக்கொண்டிருந்தன. 

25-ம் நாளின் நிகழ்வுகள் இன்னமும் முடியவில்லை.

போலீஸ்-திருடன்-பொதுமக்கள் விளையாட்டு ஏன் சரியாக நடைபெறவில்லை என்பது தொடர்பாக ‘விஷபாட்டில்’ தலைமையில் நேற்று ஒரு பஞ்சாயத்து நடைபெற்றது. ‘சென்றாயனுக்குப் போதிய வாய்ப்பு தரப்படவில்லை’ என்று அதன் உரையாடல் நகர்ந்தபோது, ‘S.I’-ன்னா என்ன தெரியுமா? விளக்கம் என்ன?” என்பதுபோல் சென்றாயனிடம் கேட்டார் டேனி. 

அதைப் பற்றி ரம்யா – வைஷ்ணவி – நித்யா – ஆகியோர் இப்போது பேசிக்கொண்டிருந்தார்கள் ‘சென்றாயன் அண்ணா.. படிக்காதவரு.. அவர் கிட்ட எஸ்.ஐ-க்கு விளக்கம். .. கேட்டா எப்படி, டேனியைப் பற்றி இப்போதான் நல்லாப் புரியுது.. ஆரம்பத்துல கூட என்னமோ நெனச்சிட்டேன்’ என்றார் ரம்யா. 

‘நான் சொல்லித்தந்த ஆங்கில வார்த்தையை உடனே கத்துக்கிட்டாரு சென்றாயன்… அதனால்தான் வந்தவுடனே.. யாரையும் நான் உடனே ஜட்ஜ் பண்ணலை. ஒரு வருஷம் கழிச்சு.. பாலாஜியை இங்க சந்திச்சப்ப கூட ‘அவர் எப்படி மாறியிருக்காரா.. இல்லையா.. ன்னு அப்சர்வ் பண்ண டைம் எடுத்துகிட்டேன்” என்றார் ‘முன்ஜாக்கிரதை’ முத்தம்மாவான நித்யா. 

சென்றாயனின் பொறுப்பைப் பற்றி கேள்வி எழுப்புவதன் மூலம் அதை மற்றவர்களுக்கும் உணர்த்தி, ‘சென்றாயனை – போலீஸ் டீம் உட்பட - எல்லோரும் காமெடியாகத்தான் பார்த்தார்கள்” என்று நிறுவுவதுதான் டேனியின் நோக்கமாக இருந்தது என்பது அந்த உரையாடலை மறுபடி பார்க்கும்போது புரிகிறது. ‘அவனை யார் மதிச்சீங்க..?” என்றும் கேட்டுக்கொண்டிருந்தார் டேனி. இதன் மூலம் அவர் சென்றாயனை அவமதிக்க முயலவில்லை என்பதை தெளிவாகவே உணர்ந்துகொள்ள முடியும். 

ஆனால், திருடர்கள்’ அணியாக அவர்கள் செய்த அராஜகம் அதிகமாக இருந்ததால், டேனியின் மீது உருவான வெறுப்பு வைஷ்ணவி குழுவைத் தவறாக பார்க்க வைக்கிறதோ, என்னமோ!

இதுபற்றி பிறகு சென்றாயனும் டேனியும் கூட தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். ``மச்சான்..உன்னை எல்லோரும் இங்க ஜோக்கர் ஆக்கறாங்க.. புரியதா.. எண்டர்டெயின் பண்றது வேற.. ஜோக்கர் ஆக்க அனுமதிக்கறது வேற..” என்று விளக்கம் தந்தார் டேனி. ‘அதெல்லாம் புரியுது மச்சான்.. எனக்கு எல்லாம் தெரியுது.. இருந்தாலும்.. நீ  அப்படி சட்டுன்னு கேட்டது எனக்கு ஹர்ட் ஆச்சு. நான் பேசும்போது யாரையுமே அப்படி இழுத்துவிட மாட்டேன்’ என்றார் சென்றாயன். 

(ஆனால் தன் மீதான கிண்டல்கள் அதிகமாவதற்கு சென்றாயனும் ஒருவகையில் காரணமாகவே இருக்கிறார். தன்னைத் தாழ்த்திக் கொண்டு மற்றவர்களைச் சிரிக்க வைப்பது அவருக்குள் தன்னிச்சையானதொரு பழக்கமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. கார்த்தி உள்ளிட்ட படக்குழு வீட்டுக்குள் வந்தபோது அவர் காட்டிய மிகையான பணிவும் உற்சாகமும் அதீதமாக இருந்தது. அதே சமயத்தில், அவருடைய உருவ எளிமை காரணமாகவே மற்றவர்கள் அவரை ‘taken for granted’ பாணியில் கையாள்கிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகிறது).

``டேனி உன் கிட்ட என்ன பேசினாரு.. ‘ஸாரி.. சொன்னாரா?” என்று சென்றாயனை பிறகு விசாரித்துக்கொண்டிருந்தது, நித்யா –வைஷ்ணவி உள்ளிட்ட குழு. அவர் நடந்ததை விளக்க.. ``அது அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள பிரச்னை. அவரு ஸாரி சொல்லி நீங்க  ஏத்துக்கிட்டீங்கள்ல.. அப்ப ப்ராப்ளம்..ஓவர்” என்றார் ரித்விகா.. (இந்தப் புள்ளதாம்ப்பா அப்பப்ப கரெக்ட்டா பேசுது!).

லக்ஸரி டாஸ்க் விளையாட்டில் தாங்கள் சம்பாதித்த தொகைகளை ஒவ்வொரு அணியும் பிக்பாஸிடம் தனித்தனியாக ஒப்படைத்தார்கள். அதன்படி போலீஸ் அணி ரூ.570, பொதுமக்கள் அணி – ரூ.380, திருடர்கள் அணி – ரூ.800.. ஆக திருடர்கள் அணி அதிக நிதியைச் சேமித்து, சம்பாதித்து வெற்றி பெற்றிருக்கிறது (அரசியலுக்குள் வர ஏன் இத்தனை போட்டின்னு இப்பத்தான் தெளிவா புரியுது!).

``நான் தலைவியா இருந்தா போலீஸ்காரங்களை அதிகம் பேச விட்டிருக்க மாட்டேன்” என்று ரம்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஜனனி. (அதான் நீங்க நாட்டாமையா இருந்தபோது பார்த்தோமே!).. சிறைச்சாலையின் உள்ளே ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் மஹத்.. ஒருவேளை தன் வாழ்க்கை வரலாறாக இருக்குமோ? (நாளைக்கு இது ஸ்கூல் புக்லலாம் வரும்.. பசங்க வேற படிக்க வேண்டி இருக்கும்).

கடந்த சீஸனில் பேப்பர், பேனா அனுமதிப்பதெல்லலாம் அரிய நிகழ்ச்சியாக இருந்தது. ஆனால், இந்த சீஸனில் பல விஷயங்களில் கறார்தனம் இல்லை. முதல் சீஸனில் பல நாள்கள் கடந்த பிறகுதான் வெளியில் இருந்து வரும் அந்நியர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த முறை எல்லாம் தலைகீழ். 

**

26-ம் நாள் காலை. ‘ஆலுமா.. டோலுமா..’ என்கிற ‘தல’யின் ரகளையான பாடல் ஒலித்தது. கொடுமையான டாஸ்க்கில் இருந்து தப்பித்த உற்சாகத்தினாலேயோ.. என்னமோ.. மக்கள் ஆர்வத்துடன் வந்து நடனமாடினார்கள். 

ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. ‘மஹத்தின் தண்டனை முடிவடைந்தது’ என்று அறிவித்தார் பிக்பாஸ். ‘நான் போ மாட்டேன். இங்கதான் இருப்பேன்’ என்று அடம்பிடித்தார் மஹத். (‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சியில் வரக்கூடிய அளவுக்கு மகத்தான பர்பாமன்ஸ் பாஸூ).

பாலாஜி வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்க, பாலாஜி –நித்யாவின் காதல் கதையைப் பற்றி கேட்க ‘பொழுது போகாத பொம்முக்கள்’ ஆர்வமாக இருந்தார்கள். ``இவரு எப்பவுமே இப்படித்தானா.. இல்ல.. இப்படித்தான் எப்பவுமே?” என்று ஆரம்பித்தார் ரம்யா. ``இல்ல.. வீட்லலாம் வேற லெவல்.. டெரரா இருப்பாரு” என்றார் நித்யா.

இவர்களின் காதல் கதை கொசுவத்தி பின்னணியில் விரிய ஆரம்பித்தது. பாலாஜி, நித்யா அக்காவின் நண்பராம். தினமும் அலுவலகத்துக்கு கார் அனுப்பி பிக்கப் செய்ய ஆரம்பிக்க காதலும் பிக்கப் ஆகியதாம். சூப் கடையில் தன் காதலைச் சொன்ன பாலாஜி ‘சூப் பாய்’ ஆகாமல் நித்யா முதலில் தயங்கி, யோசித்து பின்பு ஒப்புக்கொண்டாராம். நித்யா வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பாம். தடையை மீறி நடந்த திருமணத்தால் ‘நீ என் பொண்ணே இல்லை’ என்று சொல்லிவிட்டார்களாம்.

``பாலாஜி அண்ணாவுக்குத்தான் கார் ஓட்டத் தெரியாதே?'' என்று குறுக்கு கேள்வி கேட்ட ஜனனிக்கு.. ``கூட டிரைவர் வருவாரு'' என்று பதில் அளித்த நித்யா.. அதற்குப் பிறகு சொன்னதுதான் காமெடி. ``டிரைவரை மட்டும் அவர் அனுப்பியிருக்கலாம்”

தோசைக்கான தொடுஉணவை ‘தொக்கு’ போல் கெட்டியாக செய்வதா அல்லது குழம்பு போல் தண்ணியாக செய்வதா என்றொரு பட்டிமன்றம் நடந்தது. ‘தொக்கு’ அணியில் பொன்னம்பலம் இருந்தார். ‘நல்லா உறைப்பா செஞ்சிருக்கேன். கொஞ்சம் தொட்டாலே போதும்” என்று தன் வாதத்தைப் பலமாக முன்வைத்தார். ``நெறைய கேட்பாங்க.. அதிகம் இருந்தாத்தான் சரியா இருக்கும்” என்று ரித்விகா தன் எதிர்வாதத்தை வைக்க, அதற்கு மற்றவர்களின் ஆதரவும் இருக்க.. ‘எப்படியாச்சும் போங்க’ என்றுதான் செய்து கொண்டிருந்த ‘வஸ்து’வில் தண்ணீர் ஊற்றி விவாதத்தின் சூட்டை அணைத்தார் பொன்னம்பலம். இப்படியாக ‘தொக்கு’ அணி தோற்று ‘குழம்பு’ அணி வெற்றி பெற்றது. 

``என் வீட்டில் பணியாளர்கள் கூட ஆண்கள்தான். பெண்கள் கஷ்டப்பட்டு வேலை செய்வதைப் பார்க்க எனக்குப் பிடிக்காது. அவங்க ஏற்கெனவே நெறய கஷ்டப்படறாங்க.” என்று பெண்களுக்கு துணி மடித்து உதவிக்கொண்டே சொன்னார் மஹத். (பொண்ணுங்களை ‘மடிக்கணும்ன்றது இதுதானா?! கரெக்ட்.. இந்த ரூட்லதான் போகணும் பாஸூ). 

**

‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’ விளையாட்டில் திருடர்கள் அணி வெற்றி பெற்றதால் லக்ஸரி மதிப்பெண்கள் 2,800 அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பொருள்களை அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம். ‘மற்றவர்கள் `ஆ’வென்று இவர்களின் வாயைப் பார்த்தால் கூட  தண்டனையாம். 

திருடர்கள் அணி உற்சாகமாக தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தேர்வு செய்யத் தயாராக ஆயிற்று. ஆனால் – இதிலும் ஒரு சின்ன டிவிஸ்ட் வைத்திருந்தார் பிக்பாஸ். பொருள்களின் பெயர்கள் அடங்கிய அட்டைகள் வீட்டில் ஆங்காங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். பஸ்ஸர் அடித்ததும் இருவர் அட்டைகளைத் தேட வேண்டும். ஒருவர் பலகையில் ‘என்னென்ன பொருள்கள் வேண்டும்’ என்பதைக் கண்டுபிடிக்கப்பட்ட அட்டையில் இருந்து எழுத வேண்டும்.. ஆக.. குறுகிய நேரத்துக்குள் என்னென்ன அட்டைகள் கிடைக்குமோ அந்தப் பொருள்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பம் மட்டுமே கிடைத்தது. 

மட்டன், பிட்ஸா, ஜூஸ் என்று இவர்கள் ஆர்வமாக தேர்வு செய்து கொண்டிருக்க.. ‘ம்.. அற்பனுக்கு வாழ்வு வந்தா..’ என்ற பெருமூச்சுடன் மற்றவர்கள் இவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் இந்தப் பொருள்களைப் பயன்படுத்த முடியாதது குறித்து ‘திருடர்கள்’ அணி பாவனையாக கவலைப்பட்டது. 

``இதே இடத்துல ரெண்டு நாளா பட்டினி கிடந்தோம்.. இன்னிக்கு இதே இடத்துல செம விருந்து சாப்பிடறோம்.. இதுல வாழ்க்கையோட தத்துவம் இருக்கு” என்று புல்லரிக்க வைத்துக்கொண்டிருந்தார் சுவாமிகள் ‘யாஷிகானாந்தா.” 

ரகளையான இசை ஒலிக்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழு வீட்டின் உள்ளே வந்தது. ‘ஐ.. கார்த்தி..  சூரி…. ‘ என்று மக்கள் உற்சாகமானார்கள். பஞ்சு மிட்டாய், ஜவ்வு மிட்டாய், ஜஸ்கிரீம் என்று வெளியே ஒரு ‘மினி’ திருவிழா செட்டப்பே இருந்தது. விருந்தினர்கள் கிளம்பியவுடன் இதன் மீது ஆவேசமாக பாய்ந்தது பிக்பாஸ் வீடு. 

பல்வேறு புகைச்சல்களினால் சோர்ந்து கிடந்த வீட்டை படக்குழு உற்சாகப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக சூரி அடித்த கவுண்ட்டர் வசனங்கள் சிரிக்க வைத்தன. (சினிமால ஏன் இப்படிச் செய்ய மாட்டேங்கறீங்க.. சூரி.. ப்ரோ..) 

“எப்படியிருக்க மாப்ள?” என்று மஹத் சூரியை விசாரிக்க.. ‘நல்லா இருக்கேன் மாப்ள.. நீதான் உள்ளே இருக்கேல்ல’ என்று அதிரடியாகத் தாக்கினார் சூரி. 

ஒரு சுற்றுலாத்தளத்திற்குள் நுழைந்தவுடன் முக்கியமான இடத்தைப் பார்க்க பார்வையாளர்கள் ஆர்வம் காட்டுவதைப் போல ‘மஹத்தின் பெட்டை’ பார்க்க விருந்தினர்கள் ஆர்வம் காட்டினர். மஹத்தின் புகழ் வெளியே அப்படி பரவியிருக்கிறது போல. பெண்கள் படுக்கையறையின் மீதிருந்த துணிகளில் மஹத்தின் சட்டையும் கலந்திருக்க, பாவனையாக வெட்கப்பட்டார் மஹத். 

“அவன் எப்பவாவதுதான் ஆண்கள் பெட்ரூமிற்கு வருவான்” என்று போட்டுக் கொடுத்தார் பாலாஜி. “ஆண்கள் ரூம் அங்க இருக்கு.. எதுக்கு ஆட்டோ பிடிச்சு இங்க வர்ற” என்று கலாய்த்தார் பாண்டிராஜ். மனைவி கயல்விழி அனுப்பித்தந்த விபூதி பிரசாதத்தை பூசாரி போல் சென்றாயனுக்கு பூசி விட்டார் சூரி. ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்திருந்த பழக்கத்தில் கார்த்தியும் ரித்விகாவும் சற்று பேசிக் கொண்டிருந்தார்கள். “அங்க லவ் சீன்லலாம் அப்படி பயங்கரமா பண்ணீங்க.. இங்க சைலண்ட்டா இருக்கீங்க?” என்று வியந்தார் கார்த்தி.

``நீ பண்றதுல்லாம் பார்த்தா சிம்பு மாதிரியே இருக்கு!” என்று மஹத்தைப் பற்றி வந்தவர்கள் சொன்னது, காம்ப்ளிமெண்ட்டா இல்லையா என்பது தெரியவில்லை..

``ஷோ எப்படியிருக்குண்ணே?” என்று கார்த்தியிடம் டேனி விசாரிக்க ``முன்ன அளவுக்கு இல்லைன்றாங்க.. இப்ப இருக்கறவங்க கிட்ட ஒரிஜினாலிட்டி இல்ல.. எல்லோரும் நடிக்கறாங்க’ன்னு மக்கள் பேசிக்கறாங்க” என்று விஷயத்தை உடைத்தார் கார்த்தி. (முந்தைய சீஸனில் இப்படியெல்லாம் வெளிப்படையாக பேச முடியாது). ``ஆமாம்.. கமல் சாரும்.. இதத்தான் சொன்னாரு” என்று ஆமோதித்தார் டேனி. வீடு அசுத்தமாக இருப்பது பற்றி தன் கமெண்ட்டை தெரிவித்தார் கார்த்தி. 

‘வெளில என் இமேஜ்.. எப்படி மச்சான் இருக்கு?” என்று சூரியிடம் ஆர்வமாக விசாரித்தார் மஹத். ``ரொம்ப கேவலமா இருக்கு” என்பதை வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார் சூரி. ‘அதான் ஆண்டவன் புண்ணியத்துல.. உனக்கும் .. யாரந்த பய… ஷாரிக்கா.. அவனுக்கும் வெளிய ஒண்ணு இருக்கில்ல.. அப்புறம் ஏன் இங்க கூத்தடிக்கறீங்க.. ஒரு பெரிய மனுஷன தூங்க விடாம.. நொய்யா.. நொய்யா .. ன்னு பேசிட்டு இருந்திருக்கீங்க.. உன் கூட சுத்தற பொண்ணும்.. ‘ஒரு மார்க்கமாத்தான் இருக்கு” என்று பொதுமக்களின் மனநிலையை எதிரொலித்தார் சூரி. 

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் ‘பட்டப்பெயர்கள்’ பற்றி உரையாடல் நகர்ந்தது. ஒவ்வொருவரின் பெயர்களை ஐஸ்வர்யா மழலைத் தமிழில் சொல்லிக்கொண்டிருந்தார். ஜனனியின் பெயர் ‘விஷபாட்டில்’ என்றதும்.. ‘அய்யோ. அவங்க போட்ட காபியை குடிச்சிட்டனே’ என்று பாவனையாக அலறினார் சூரி. 

‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பப்பட்டது. டூரிங் டாக்கிஸ் எபக்ட்டில் விசிலடித்து தீர்த்தார் சென்றாயன். தன் திரைப்படத்தில் வரும் பாத்திரங்களைப் பற்றி சொல்லத் துவங்கினார் பாண்டிராஜ். கார்த்திக்கு அதில் ஐந்து அக்காள்களாம். அவர்களுக்கும் பட்டப் பெயர்கள் இருக்கின்றன. சதி லீலாவதி, சண்டைக்கோழி, ரத்தக்கண்ணீர், உளவுத்துறை, பாசமலர்…

இந்தப் பட்டப் பெயர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு யாருக்குப் பொருந்தும் என்கிற ஜாலியான உரையாடல் நடந்தது. ‘சதிலீலாவதி’ ரித்விகாவுக்கு கிடைத்தது. ‘சண்டைக்கோழி’ மஹத்துக்கு. ‘உளவுத்துறை’ வைஷ்ணவிக்குக் கிடைத்தது சாலப்பொருத்தம். ‘ரத்தக்கண்ணீருக்கு’ நித்யாவை விட்டால் வேறு பெஸ்ட் சாய்ஸ் இருக்கவே முடியாது. (கடவுள் இருக்கான் குமாரு.. என்று உற்சாமாக கூவினார் பாலாஜி). ‘பாசமலர்’ ரம்யாவுக்கு கிடைத்ததும் நல்ல தேர்வே. 

பட்டப்பெயர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரும், திரைப்படப் பாத்திரங்களின் குணாதிசயங்களை செய்து காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ‘சண்டைக்கோழி’ பாத்திரத்தை ‘பிராய்லர் கோழி’ மாதிரி செயற்கையாக செய்தார் மஹத். 

‘சாமியாடி’ பாத்திரம் ரித்விகாவுக்கு.. எல்லா சாமிகளையும் கும்பிட்டுக்கொண்டு பதற்றத்துடன் தயாரானார். சுமாரான முயற்சி. (பிக்பாஸ் வீட்டு மனிதர்களின் கோப, தாபங்கள், எதிர்வினைகள் போன்றவை இயற்கையாக இருப்பதையும் செயற்கையாக நடிக்க முனைந்தால் வித்தியாசம் தெரிந்து விடுவதையும் இதன் மூலம் உணரலாம். பிக்பாஸ் வீட்டில் ‘முன்கூட்டி திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு’ நடைபெறுகிறது என்று சொல்பவர்கள் இந்த வித்தியாசத்தைக் காண முடியும்).

திரைப்படத்தின் தலைப்புகளை சைகைகளின் மூலம் உணர்த்தி மற்றவர்களைக் கண்டுபிடிக்கச் செய்ய வேண்டும் என்கிற கடந்த நூற்றாண்டிலேயே காலாவதியாகிப் போன விளையாட்டை அடுத்ததாக ஆரம்பித்தார்கள். ‘பாப்கார்ன், ஐஸ்கிரீம்.. என்ற பொருள்களுடன் மக்கள் வேடிக்கை பார்க்க ஆர்வமாக உட்கார்ந்தார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததைப் படிக்கத் தெரியாமல் சூரியும் சென்றாயனும் விழித்தார்கள். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ பெயரை டேனி கண்டுபிடித்தார். இதைப் போலவே ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்கிற சிரமமான யூகத்தையும் கண்டுபிடித்தது டேனியே. 

கார்த்தி தந்த டிப்ஸின் மூலம் ‘சங்கிலி புங்கில கதவத் தொற’ தலைப்பை மற்றவர்கள் அறியச் செய்தார் மஹத். விஜய் நடனமாடும் பாணியைக் காட்டி ‘மெர்சல்’ காட்டினார் கார்த்தி. 

``யப்பா.. சாமிகளா.. உங்க மொக்கை தாங்கலை. கிளம்புங்க’ என்பதை ``ஆகாஷவாணி.. செய்திகள் வாசிப்பவர்’ குரலில் சொன்னார் பிக்பாஸ். திடீரென வந்த இயந்திரக் குரலைக் கேட்டதும் ஸ்கூல் மாணவன் மாதிரி விழித்தார் சூரி. எல்லோரும் விடைபெற்று கிளம்பினார்கள். ‘சுறுசுறுப்பா இருங்க.. ப்ரோ.. ‘என்று ஷாரிக்குக்கு டிப்ஸ் கொடுத்தார் கார்த்தி. (அவன் ‘ஒரு விஷயத்துல’ சுறுசுறுப்பா இருக்கப் போய்த்தானே.. பெரிய பஞ்சாயத்தாச்சு!).

பாலாஜி  -நித்யாவுக்கு ‘திருமண கவுன்சலிங்’ தந்தார் பாண்டிராஜ். ‘உங்க குழந்தைக்காக ஒண்ணு சேருங்க.. இதை முடிச்சிட்டு வாங்க.. பேசுவோம். நான் நெறைய பேரை இப்படி சேர்த்து வெச்சிருக்கேன்” என்றார். (பார்ட் டைமா பண்றார் போலிருக்கு!).

படக்குழு வெளியே கிளம்பும்போது சூரியை மட்டும் அமுக்கிப்பிடித்து வீட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றார்கள். அவர் அலறியடித்து ஓடினார். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘உளவுத்துறை’ என்றும் ‘நாரதர்’ என்றும் தன்னை பட்டப்பெயர் வைத்து அழைப்பது குறித்து வைஷ்ணவி வருத்தமும் ஆட்சேபமும் தெரிவித்தார். அதிலும் வந்திருந்த விருந்தினர்களின் முன்னிலையில் சொன்னது சரியில்லை என்கிற அவரது அபிப்ராயம் நியாயமானதே. ‘ஜாலியா பேசறது வேற.. ஒருத்தர இன்சல்ட் பண்றது வேற’ என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இந்த மனக்குறையை வைஷ்ணவி மற்றவர்களிடம் பேசாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று நேராகச் சொல்லலாம். 

பிக்பாஸ் வீட்டில் ‘கடைசியாக’ நின்று வெல்லப்போகும் ‘சிங்கக்குட்டி’ யாரென்பதை இப்போதே யூகிப்பது ஆகச்சிரமமானது. இன்று ‘நாட்டாமை’ வரும் நாள். ‘மய்யமாக’ என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.. 

இன்று எலிமினேசன் பட்டியலில் இருந்து யாரைக் காப்பாற்ற வேண்டும் கமல்?  உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் பதிவு செய்யவும்

சுரேஷ் கண்ணன்