Published:Updated:

இன்றைய பிக் பாஸில் கமல் பேசப் போவதும், இந்த வாரத்துக்கான குட்டி ரீவைண்டும்! #BiggBossTamil2

தார்மிக் லீ

இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது? கமல் பேசுவதற்கு எந்தந்தெந்த விஷயங்கள் சர்ச்சையைக் கிளப்பியது... ஒரு சின்ன அலசல்!

இன்றைய பிக் பாஸில் கமல் பேசப் போவதும், இந்த வாரத்துக்கான குட்டி ரீவைண்டும்! #BiggBossTamil2
இன்றைய பிக் பாஸில் கமல் பேசப் போவதும், இந்த வாரத்துக்கான குட்டி ரீவைண்டும்! #BiggBossTamil2

டந்த வாரம் பொன்னம்பலத்திடம் முடிந்தது. இந்த வாரம் அவரிடமிருந்தேதான் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. அனந்த் வைத்தியநாதன் என்ன கடுப்பில் இருந்தார் எனத் தெரியவில்லை, செல்லும்போது 'உன் ஸ்விட்ச்சை நான் ஆஃப் பண்றேன்' என்றபடி பொன்னம்பலத்தைச் சிறையில் அடைத்துவிட்டுச் சென்றார். இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் பொன்னம்பலத்தை விடுதலை செய்யக்கோரி அறவழிப்போராட்டம் நடத்தினார்கள் (நம்புங்க பாஸ், எல்லோருக்கும் பொன்னம்பலம்னா அவ்ளோ பிடிக்கும்). 

இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா, யாஷிகா அண்ட் கோ பொன்னம்பலத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இவ்வளவுக்கும் காரணம், 'முந்தா நேத்து நைட்டு என்ன நடந்தது தெரியுமா' என்று பொன்னம்பலம் கமலிடம் சொல்லியது. பேட்டை ஓங்கிவிட்டு சிங்கிள்ஸ் அடித்ததுபோல், 'ஷாரிக்கும் ஐஸ்வர்யாவும் சும்மா பேசிட்டுதான் இருந்தாங்க' என அந்தப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார், பொன்னம்பலம். இப்படி முடிக்கப்பட்ட பிரச்னை மீண்டும் வெடித்தது. 'நீ எப்படி இருக்கனு நான் உங்க அப்பாகிட்ட பேசிக்கிறேன்' என பொன்னம்பலம் ஷாரிக்கிடம் சொல்லியதும் திருட்டு முழி முழித்தார், ஷாரிக். அப்படி எதுவும் இல்லை அன்று பேசி கொண்டுதான் இருந்தார்கள் என்றால், அதை அழுத்தம் திருத்தமாக ஷாரிக், பொன்னம்பலத்திடம் சொல்லியிருக்க வேண்டும். ஷ்ஷ்ஷ்... முடியல. இதிலிருந்துதான் இன்றைய எபிசோடு தொடங்க வேண்டும். கமலும் இதுக்கு ஒரு தீர்வு... சொல்லியே ஆவணும். 

கடந்த சீஸனை நன்றாக கவனித்துப் பார்த்திருந்தால், கமல் இந்தக் கால இளைஞர்களைத் தலைமேல் தூக்கி வைத்து பாராட்டிக்கொண்டே பேசியிருப்பதை நாம் கவனித்திருக்க முடியும். ஆனால், இந்த சீஸனிலோ அவர்கள்தான் எப்போதும் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார்கள். இந்த வாரமும் இந்தப் பிரச்னை தொடரும். பொறுத்திருந்துப் பார்ப்போம். பிறகு நாமினேஷன் ப்ராசஸ் சற்று வித்தியாசமாக நடந்தது. ஒருவேளை இந்த வாரம் எவிக்ஷன் இருக்காதோ என்னவோ? 'ரெவ்வெண்டு பேரா போய் சோலியை முடிச்சிவிடுங்க' என்ற ரகத்தில் நடந்தது நாமினேஷன் ப்ராசஸ். 

பொன்னம்பலம் வம்பை வாய் கொடுத்து ஒவ்வொரு முறையுமே வாங்கிக்கொள்கிறார். 22-ம் நாள் இரவு, 'ஆள் தூக்கும்' போட்டி நடைபெற்றது. 'ஒரு ஆண் நெனச்சா எந்தப் பொண்ணை வேணாலும் தூக்கிடலாம்' என்று மீசையை முறுக்கிவிட்டு வைஷ்ணவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார், சென்றாயன். 'நான் சொல்றது சரிதானண்ணே' என்று பொன்னம்பலத்திடமும் அறிவுரை கேட்டார். 'டே எஃபெக்ட்ல ஒண்ணும் தெரியாது, நைட் எஃபெக்ட்ல நான்தான் வின் பண்ணுவேன்' என சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார், பொன்னம்பலம். 'இன்னைக்கு நாளை ஓட்ட இது போதுமே' என மனதில் நினைத்துக்கொண்டு, 'நீங்க பேசுறது ரொம்ப தப்புண்ணே, இதுனாலதான் நீங்க வம்புல மாட்றீங்க' என பொன்னம்பலத்திடம் அறிவுரை கூறிக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. 

பொன்னம்பலம் என்னென்னவோ சமாளித்துப் பார்த்தார், ஆனால், பிக் பாஸ் ஒட்டுமொத்த கூத்தையும் சப்டைட்டில் போட்டுக் காட்டியது பாவம் அவருக்குத் தெரியாது போல. கடந்த வாரம் கமலால் சப்போர்ட் செய்யப்பட்ட பொன்னம்பலம், இந்த வாரம் வசவு வாங்கலாம். அதுவும் போக, தன்னை எல்லா முறையும் நியாயமும்படுத்திக்கொள்கிறார். மும்தாஜ் "ஏன் இது மாதிரி பேசுறீங்க?" எனக் கேட்டதற்கு, "எனக்கு கோவம் வந்தா அப்படித்தான், என் பசங்களையே கெட்ட வார்த்தையிலதான் திட்டுவேன்" என பொன்னம்பலம் சொன்னது அபத்தம். பொன்னம்பலம் அன்றிரவு பற்ற வைத்ததை வைஷ்ணவி ஒட்டுமொத்த வீட்டுக்கும் பரப்பி, கொளுந்துவிட்டு எறியச் செய்தார். பொன்னம்பலம் வயதில் மூத்தவர் என்பதால் சிலர் முன் வந்து கேட்க தயங்குவதுபோல் இருந்தது. முதல் நாள், 'ரெண்டுங்கெட்டான்' சம்பவத்தை மறந்த ஆண்டவர், இதையாவது கேட்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து `திட்டம் போட்டு திருடுற கூட்டம்' டாஸ்க் ஆரம்பமானது. ஆரம்பித்தது முதல் ஜாலியாக சென்றாலும், ஜனனி ரூல்ஸ் லிஸ்டில் இருந்ததை வாசித்ததும், திருடின பொருளை நாங்களே வெச்சுப்போம்' என்பதுபோல் கூறினார். இதைக் கேட்டு கோபமான மஹத், 'செருப்பால அடிப்பேன்' என்று சொன்னதும் யாஷிகாவின் முகம் சுறுங்கிப்போனது. பொன்னம்பலம் பிரச்னையைத் தொடர்ந்து மஹத்தின் இந்த வார்த்தை வீட்டுக்குள்ளே சர்ச்சையாக வெடித்தது. இதனால் பாலாஜிக்கும் இவருக்குமே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 'போடா... காமெடி... தலையா...' என்று திட்டியும் தீர்த்தார். கோவத்தில் இவர் சில விஷயங்களைச் செய்யும்போது 'தான் என்ன செய்கிறோம்' என்ற தன்னிலையை இழந்துவிடுகிறார். பிறகு பாதிக்கப்பட்டவர்களிடம் மனமுருக மன்னிப்பும் கேட்கிறார். என்னதான் இவர் படும் கோபத்தில் சில நியாயம் இருந்தாலும், இவரின் கோபத்தின் வெளிப்பாடு சற்று உக்கிரமாகத்தான் இருக்கிறது. 

மஹத் அண்ட் கோவுக்கும் நித்யா அண்ட் கோவுக்கும் எப்போதுமே முட்டிக்கொள்ளும். 'பொன்னம்பலம் சொன்னது தப்புன்னா மஹத் செருப்பால அடிப்பேன்னு சொன்னதும் தப்புதான்' என நித்யா கடிந்துகொண்டிருந்தார். எல்லாக் கோபத்தையும் வெளிக்காட்டிவிட்டு பிறகு வருத்தப்படுவார், மஹத். கமல், இன்றைய எபிசோடில் கண்டிப்பாக மஹத்தின் கோபத்தைப் பற்றி ஏதாவது சொல்லுவார். எந்தப் பட ஷூட்டிங்கைப் பற்றி சொல்லப் போகிறார் என்பதுதான் சஸ்பென்ஸ். 

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு டாஸ்க் மொக்கையாகவே சென்றது. பொன்னம்பலத்தின் சிறை தண்டனைக்குப் பிறகு ரெண்டுபட்ட வீட்டைப் பற்றிதான் இன்று அதிகமாகப் பேச்சு இருக்கும். ஒன்றாக வந்த போட்டியாளர்கள் மூன்று அணிகளாகப் பிரிந்துவிட்டனர். சிலர் அங்கும் இங்குமாக ஜம்ப் ஆடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தவிர சாப்பாட்டுச் சண்டை, பொருள்கள் சண்டை, குப்பைச் சண்டை என எல்.கே.ஜி ரக சண்டைகள்தான் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து கமலின் பேச்சுகளில் காரசாரமும் அரசியலும் இருக்குமோ?இன்றிரவு பார்ப்போம்... துப்புச்சிக்கு துப்புச்சிக்கு பிக் பாஸ்!