Published:Updated:

யாஷிகா 'அவுட்'... ஆன்லைன் டிரெண்டை பிரதிபலிக்குமா பிக்பாஸ் ? #BiggBossTamil2

யாஷிகா 'அவுட்'... ஆன்லைன் டிரெண்டை பிரதிபலிக்குமா பிக்பாஸ் ? #BiggBossTamil2
யாஷிகா 'அவுட்'... ஆன்லைன் டிரெண்டை பிரதிபலிக்குமா பிக்பாஸ் ? #BiggBossTamil2

யாஷிகா 'அவுட்'... ஆன்லைன் டிரெண்டை பிரதிபலிக்குமா பிக்பாஸ் ? #BiggBossTamil2

தீவிரமாகவும் பரபரப்பாகவும் பஞ்சாயத்து செய்யுமளவுக்கு பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை. எல்லாம் பிக்பாக்கெட், சீட்டிங் என்று சாதாரண கேஸ்கள். ‘எவிக்ஷன்’ மட்டுமே சற்று எதிர்பார்ப்பை தூண்டக்கூடியது. எனவே எதையாவது செய்து நிகழ்ச்சியை இழுக்க வேண்டிய கட்டாயம். ஆனால் கமல் இதில் சாமர்த்தியசாலியாக இருக்கிறார். திரைஅனுபவம், சுயஅனுபவம், உபதேசம், நகைச்சுவை என்று கலந்து கட்டி எப்படியாவது ‘ஃபுட்டேஜ்களை’ தேற்றி விடுகிறார். 

கமல் எனும் கலைஞனின் வாயிலாக அவரது அனுபவங்களைக் கேட்பது சிறப்பான விஷயம். ஆனால் கிடைத்த கேப்பில் எல்லாம் ஆடு வெட்டும் அவரது சாமர்த்தியமும் சுயபுராணமும் சமயங்களில் சலிப்பூட்டுகிறது. ‘எனக்கு கிடைத்த குருமார்கள் எல்லாம் உன்னதமானவர்கள்’ என்பதெல்லாம் கேட்டு கேட்டு புளித்துப் போன கிளிஷே.

‘போலீஸ் – திருடன் – பொதுமக்கள்’ விளையாட்டு ஏன் நிறுத்தப்பட்டது? என்பதைத்தான் வெவ்வேறு வடிவங்களில் கேட்டு ‘அது சரியல்ல’ என்பதை மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தார் கமல். கூடவே பசியின் கொடுமை, நகைச்சுவையின் அருமை ஆகியவை உப தலைப்புகளாக இருந்தன. இன்றைய நிகழ்ச்சியில் சென்றாயனே அதிக நேரத்தை செலவிட்டது குறித்து மற்றவர்களுக்கு கடுப்பாக இருந்திருக்கலாம். (ஒரு கட்டத்தில் வைஷ்ணவி காட்டிய அதிருப்தியான முகபாவத்தை, ஆஸ்கர் விருது பெற்றவர்களால் கூட இயற்கையாக காட்ட முடியாது).

பசியின் கொடுமை பற்றி ஏறத்தாழ நாம் அனைவருமே ஒரு சமயத்திலாவது உணர்ந்திருப்போம். ஆவலுடன் சாப்பிடத் துவங்கி தடுக்கப்பட்டு அது ஒரு நிரந்தர வலியாக உறைந்த அனுபவம் ஒன்றாவது நம்மிடம் நிச்சயம் இருக்கும். இந்த நோக்கில் ஷாரிக் செய்தது மனிதாபிமானற்ற செயல்தான். ஆனால் உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால், அவர் ‘Task’-க்கிற்குள் நின்றுதான் செய்தார் என்பதால் அவரை ஏதோ வில்லன் போல சித்தரிக்கத் தேவையில்லை. உணவிற்கு காசு நிர்ணயிப்பதும், சாப்பிடுவதற்காக காசு சம்பாதிப்பதும் விளையாட்டின் ஒரு பகுதியே. “நீங்க task-ல இருந்தீங்கன்னா காசு கொடுங்க.. இல்லைன்னா.. யூனிபார்மை கழட்டி வெச்சிட்டு வந்து சாப்பிடுங்க” என்று அவர் சென்றாயனை தடுத்தது சரியான விஷயம்தான். 

தான் ஒருவரால் திட்டப்பட்டதும் மனம் ஆழமாக வருத்தப்பட்டதைப் போல, தன்னால் திட்டப்பட்டவரும் வருத்தப்பட்டிருப்பார் அல்லவா? என்று பாலாஜி அடைந்த சுயபரிசீலனையும் அதை அவர் உணர்ந்து தெரிவித்த விதமும் இன்றைய நிகழ்ச்சியில் வெளிப்பட்ட ஒரு முக்கியமான விஷயம். (இதைப் பற்றி சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தோம்)

**

அட்டகாசமான பாணியில் அமைந்த, நீலநிற உடையில் கமல் வந்தார். “பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்கதான் மைனாரிட்டி. ‘மைனாரிட்டி போடற ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்களும் போட்டாங்கன்னா விளையாட்டு கெட்டுப் போயிடும். ‘இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து ஒதுங்கியிருந்தாலும் விளையாட்டு கெட்டுப் போயிடும்’ என்று உள்ளே நுழைந்தவுடனேயே ‘அரசியல் நையாண்டி’ வாசனையுடன் பேசத் துவங்கினார் கமல்.

“வீட்ல பார்த்தீங்கன்னா குழுவா பிரிஞ்சுக்கிட்டாங்க… ஒருத்தரைப் பார்த்து மத்தவங்க தங்களின் குணாதிசயங்களை மாத்திக்கிட்டாங்க... மெஜாரிட்டி மைனாரிட்டியா மாறிட்டாங்க.. இது போல் முன்பு நிகழ்ந்ததில்லை” என்று கமல் சொன்னதைத் தொடர்ந்து இந்த வார சம்பவங்களின் சுருக்கமான தொகுப்பு ஒளிபரப்பானது. 

அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடந்த சம்பவங்கள். முதல் நாள் அஜித் பாடல் என்றால் அடுத்த நாள் விஜய் பாட்டு போட்டுத்தானே ஆகணும்? எனவே ‘மெர்சல்’ படத்திலிருந்து ஓர் அதிரடி பாட்டு. முந்தைய இரவில் ‘பிட்ஸா’வை தனியாக உட்கார்ந்து ரவுண்டு கட்டிய உற்சாகத்தில் ‘திருடர்கள் அணி’ நடனத்தை வெளுத்துக் கட்டியது. 

இன்றைய பிரச்னை ‘அவல் உப்புமா’வில் இருந்து துவங்கியது. பொன்னம்பலம், சமையல் ‘தாமு’வாக மாறி அதை எப்படி செய்வது என்பதை விவரித்துக் கொண்டிருக்க, யோசனை என்கிற பெயரில் ஆளாளுக்கு அந்த ஐடியாவில் உப்பு போட்டார்கள். பொன்னம்பலம் சமையல் செய்யத் தயாரானவுடன், அவருக்கு உதவி செய்ய.. வைஷ்ணவி, டேனி உள்ளிட்டவர்கள் வந்தார்கள். (இல்லைன்னா ‘தொக்கு’ வெச்சிடுவாரே என்கிற பயமும் இருக்கலாம்) ‘அப்பாடா அடிமைங்க தானா வந்து சிக்கிட்டாங்க’ என்று பொன்னம்பலமும் அவர்களை இயல்பாக அனுமதித்து விட்டார். 

‘சமையல் டீமில் உள்ளவர்கள் மட்டும்தானே சமையல் செய்யணும், மற்றவர்களை எப்படி அனுமதிக்கலாம்’ என்கிற பஞ்சாயத்து எழுந்ததைத் தொடர்ந்து ‘கடும் பசியில்’ இருந்தாலும் இதை சாவகாசமாக விவாதித்தார்கள். “கொஞ்சம் வெங்காயம் வெட்டித் தந்ததுக்கா இத்தனை பிரச்னை… பக்கத்துல இருந்தவங்க ‘யதார்த்தமா’ கேட்டாங்க.. நானும் பதார்த்தமா ஒத்துக்கிட்டேன். இதை ஏன் பிரச்னை பண்றீங்க?,” என்று பொன்னம்பலம் நொந்து போனார். 

‘இல்லைண்ணே.. நித்யா இதை தட்டிக் கேட்கலைன்னா.. அப்புறம் அதை ‘பிரச்னை’ பண்ணுவாங்க’ என்றார் பாலாஜி. “அப்படியா?” என்று பொன்னம்பலம் அப்பாவியாக கேட்க, ‘என்னண்ணே.. நீங்க.. வந்து நாலு வாரம் ஆச்சு.. இன்னமும் வெளக்கெண்ணயாவே இருக்கீங்க’ என்பது போல சலித்துக் கொண்டார் பாலாஜி. 

‘நான் யாரையும் கூப்பிடலையே’ என்று பொன்னம்பலம் சொன்னது ஒருவகையில் பிழை. அவல் உப்புமாவை எப்படி செய்வது என்று துவக்கத்தில் நடந்த உரையாடலில், வைஷ்ணவியுடன் பேசிக் கொண்டிருந்த போது ‘நீங்க இதைப் பண்ணிடறீங்களா’ என்று தானாக கேட்டவர் பொன்னம்பலம்தான். நித்யா இதைச் சரியாக சுட்டிக் காட்டினார். 

பாலாஜி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, நாய் சத்தம் ஒலிக்க ஆரம்பித்தது. கூடவே பல குரல்களும். வீடே ‘நாய்ப் பண்ணையாக’ மாறி முதல் நாயுடன் இணைந்து வீடு அதிர கோரஸ் பாடினார்கள். 

பொன்னம்பலத்தின் ‘சமையல் திறமை’யை பாலாஜி கிண்டல் செய்து கொண்டிருக்க, டேனியும் நித்யாவும் வெடித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். “தொக்கு ரொம்ப காரம்ணே.. கண்ணு கலங்குது’ன்னு அவர் கிட்ட சொன்னா.. ‘அப்ப…கொஞ்சமா தொட்டுக்கிட்டா போதும்’ன்றாரு.. ரித்விகா வந்து ‘இது பத்தாதேன்னு சொன்னவுடனே.. ‘என்னம்மா.. பண்றது கடாய் பெரிசா இல்லைன்றாரு" என்று பொன்னம்பலத்தைப் பற்றி அடக்க முடியாத சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். 

இந்த வார நாமினேஷனில் ‘யாஷிகா’ போய் விடுவாரோ என்று ஐஸ்வர்யா கலங்கிக் கொண்டிருக்க, மும்தாஜ் அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். (எங்களுக்கும் அழுகையாத்தான் வருது .. ஐஸூம்மா.!).

**

அகம் டிவி வழியே உள்ளே வந்தார் கமல். ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா புடவை மாதிரியான உடை அணிந்திருப்பதைப் பாராட்டினார்.. ‘ஆள் பாதி, ஆடை பாதி’-ன்னு இருந்தீங்க..’ என்று அவர் சொன்ன நகைச்சுவை சிறப்புதான் என்றாலும். கமலும் மெல்ல மெல்ல  ‘கலாசார காவலராக’ மாறிக் கொண்டிருக்கிறாரோ அல்லது பொதுமக்களின் மனநிலையை பிரதிபலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாரோ என்கிற எண்ணமும் மெலிதாக  ஏற்பட்டது. வழக்கம் போல் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா நடுவில் உட்கார்ந்திருந்த மஹத்தை, அவருடைய அணியுடன் இணைந்து உட்காரச் சொன்னார். 

‘போலீஸாக’ நடித்த அனுபவத்தைப் பற்றி சென்றாயனிடம் விசாரித்தார் கமல். சைக்கிளில் ஹெல்மேட் போட்டுக் கொண்டு சென்ற அனுபவங்களை சென்றாயன் சொல்ல, ‘பின்னாடி ஒருத்தன் சைக்கிள் இல்லாம வர்றான்” என்கிற சென்ற நூற்றாண்டு நகைச்சுவையை கருணையேயில்லாமல் சொன்னார் கமல். 

‘இது எனக்கு தானா வந்த பதவி சார். சினிமால கூட இதுவரை போலீஸ் வேடம் போட்டதில்லை’ என்று சென்றாயன் சொன்னதற்கு ‘அடேங்கப்பா’ என்றார் கமல். போலீஸ் உடை ‘அன்னகம்பர்ட்டபிள்’ ஆக இருந்தையும் சென்றாயன் சொன்னார். “அது லூஸா.. இல்ல நான் லூஸான்னே..தெரியலை சார்”.

“போலீஸ் வேலை ரொம்ப கஷ்டம்தான் சார்” என்ற மஹத்திடம்.. ‘அப்புறம் ஏம்வே தூங்கிட்டு இருந்தீரு..” என்று நக்கலடித்தார் கமல். ‘சிறுவயதில் பக்கத்து வீட்டுப் பெண்ணிடமிருந்து பொம்மைகளை ‘சுட்ட’ திருட்டு அனுபவங்களை பெருமிதமாக பகிர்ந்து கொண்டார் யாஷிகா. ‘ஐஸ்வர்யா ‘குவாலிட்டி’ திருடி என்று புதுமையான சான்றிதழ் தந்தார் டேனி. 

அடுத்தது பொதுமக்கள் அணி. ‘நல்லவேளை..இது கேமோடு முடிஞ்சது.. நிஜ வாழ்க்கையிலும் நடந்தால் மக்கள் கண்டம்தான்’ என்றார் பொன்னம்பலம். ‘சூப்பரா சொன்னாரு.. கைத்தட்டுங்களேம்ப்பா”.. என்கிற மாதிரி பார்வையாளர்களைப் பார்த்தார் கமல். (ஆனால் நடைமுறை வாழ்க்கையிலும் போலீஸ் –திருடர்கள் கூட்டணி காரணமாக பொதுமக்கள் அவதிப்படுவதும் சகித்துக் கொள்வதும் அதற்கேற்ப தாங்களும் சில விஷயங்களில் மாறுவதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது?!).

“போலீஸ்காரங்களை நம்பி நாங்க ஏமாந்துட்டோம்” என்றார் ரம்யா. சென்றாயனின் ‘எலுமிச்சம்’ பிரச்னையும் விசாரணைக்கு வந்தது. ‘ஒரு பொறுப்புள்ள உயர் அதிகாரி கிட்ட பேசிட்டிருக்கோம்-ன்ற பயமே இல்லாம மும்தாஜ் இருந்தாங்க சார்” என்று அழாத குறையாக சொன்னார் சென்றாயன். “போயி காசு வாங்கிட்டு வாங்க.. ன்னு அவரை நாங்களும் ஏத்திக் கொடுத்தோம்’ என்றது ‘விஷபாட்டில்’. 

மும்தாஜ் சீருடை அணியாமல் இருந்ததற்கான காரணத்தைச் சொல்ல.. “அவருக்கு தலையில அரிப்பு பிரச்னை.. உங்களுக்கு உடம்பில. நிஜத்தில் போலீஸ்காரர்கள் அப்ப எவ்ள அவஸ்தைப்படுவாங்கன்னு புரிஞ்சுக்கணும்” என்றார் கமல். 

இந்த விளையாட்டில், சிறப்பாக செயல்பட்டதற்காக ‘யாஷிகா’விற்கு பரிசு அளிக்கப்பட்டது. ‘இது பிக்பாஸ் முடிவு’ என்றார் கமல். (ஆனால் டேனிதான் சிறப்பாக செயல்பட்டது போலத் தோன்றுகிறது). ‘திருடங்களும் மனுஷங்கதான்’ என்கிற பாடத்தை இந்த விளையாட்டின் மூலம் கற்றுக் கொண்டதாக டேனி சொன்னது முக்கியமான விஷயம். 

மோசமான போட்டியாளரை ‘பொதுமக்கள்’ அணியிலிருந்து அவர்களே கூடிப் பேசி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் கமல். மற்றவர்கள் விளையாட்டிலிருந்து விலகி மறுபடி இணைந்து கொண்டாலும் ‘ரம்யா’ மட்டும் மீண்டும் இணையாமல் இருந்ததால் அவரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். (ஆனால் தன்னுடைய சில ஆட்சேபங்களை பிக்பாஸ் கேட்கத் தயாராக இல்லை என்பது ‘ரம்யா’வின் வருத்தம்) ‘அவருக்குத்தான் ஏற்கெனவே தண்டனை கிடைச்சுடுச்சே.” என்று கமல் சொல்ல அடுத்த நிலையில் இருந்த ஷாரிக் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

‘அவர் எதிர் தரப்புகளுக்கு சாதகமாக சில விஷயங்களைச் செய்ததாக எங்களுக்குப் பட்டது.. அவருக்கு ஏதாவது ரகசிய task தரப்பட்டிருக்குமோன்னு கூட சந்தேகப்பட்டோம்” என்று நித்யா சொன்ன காரணம் சரியில்லை. அது ரகசிய டாஸ்க் ஆக இருந்தால் போட்டி முடிந்தவுடன் அறிவிக்கப்பட்டிருக்குமே!

“ஆக்சுவலி ஷாரிக்தான் இந்த கேமை தொடர்ந்து விளையாடலாம்’ னு சொல்லிட்டே இருந்தாரு.. அவரைத் தேர்ந்தெடுத்திட்டீங்களே..” என்றார் கமல். “நான் இதுவரைக்கும் எதையும் open-ஆ பண்ணலை.. (அதான் எங்களுக்குத் தெரியுமே!). இனிமே என் கேம் பிளான் என்னன்னு பாருங்க’ என்றார் ஷாரிக். 

“பொதுமக்கள் டீம்மோட பிஹேவியர் எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு சமயத்தில் கேமை விட்டு விலகிட்டீங்க. மறுபடியும் வந்தீங்க.. சில பேர் ‘கேரம் போர்டு’ ஆட்டத்தை கலைச்சுடற மாதிரி ..திருடர்கள் அணி திறமையாக விளையாடியதால் பொறாமைப்பட்டு இந்த கேமை கலைச்சுட்டீங்களா?’ என்று கேட்டார் கமல். “இல்லை சார்.. எனக்கு பொய் சொன்னா, ஏமாத்தினா ..பிடிக்காது” என்று ரம்யா சொல்ல. “அதானே கேமே?” என்றார் கமல். 

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதற்கேற்ப சரியாக நடக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இடையில் விலகி விடக்கூடாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் ரம்யாவிற்கு விளக்கிக் கொண்டிருந்தார் கமல் (ஏம்ப்பா… நான் சரியாத்தான் பேசறேனா..?!) கமலின் தொண்டைத் தண்ணீர் தீர்ந்தபிறகுதான் இதை ஒருவழியாக ஒப்புக் கொண்டார் ரம்யா. 

‘பல குழப்பமான அபிப்ராயங்கள் வந்தாலும் யோசித்து தெளிவான முடிவு எடுப்பது தலைமையாளரின் பொறுப்பு. ‘எடுப்பார்’ கைப்பிள்ளையாக இருக்கக்கூடாது’ என்கிற கமலின் கருத்து அதிமுக்கியமானது. ‘As a captain அவங்க அப்படி செஞ்சிருக்கக்கூடாது’ என்பது மற்றவர்களின்  கருத்தாக இருந்தது. இதை அப்போதே சொல்லியிருக்கலாம். கமலின் முன்பாகத்தான் எல்லோருமே புத்திசாலியாகி விடுகிறார்கள். 

முன்னாள் தலைவர்கள் கூடி ‘தகுதியற்ற தலைவர்’ என்கிற பரிசை ரம்யாவிற்கு தந்தார்கள். (அதான் தண்டனை ஏற்கெனவே தந்தாச்சு –ன்னு முன்ன சொன்னீங்களே.. ஆண்டவரே!). “இப்படித்தான்.. தலைவர்கள் தப்பு பண்ணும் போது.. அவங்களுக்கு பளிச்சுன்னு பரிசு தந்துடணும்’ என்று அரசியல் பொடியை நைசாக தூவினார் கமல். 

‘சார்.. இவங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட லீடர்” என்று ஜனனி ரம்யாவிற்கு சாதகமாக சொல்ல முயல.. ‘அந்தக் கண்றாவியைத்தான் நாங்க பார்த்தமே’ என்பது போல் செமயாக பல்பு கொடுத்தார் கமல். “எங்க வேற ஒருத்தர் வந்துடுவாரோ’ன்ற பயத்துல நடந்ததுதானே.. இது’ என்று கமல் சொல்ல பிக்பாஸ் வீடும் கூச்சத்தில் சிரித்தது. 

“துவக்கிய ஒரு விஷயத்தை இடையில் நிறுத்தாத போராட்டக்குணம் வேண்டும்’ என்பது கமலின் அழுத்தமான அபிப்ராயமாக இருந்தது. இது பற்றி ஷாரிக்கிடம் விசாரித்தார் கமல். ‘மத்தவங்க குழப்பமா செயல்பட்டாலும் இதைத் தொடரணும்னு நான் உறுதியா இருந்தேன். அதனாலதான் சென்றாயன் கூட பிரச்னையாச்சு” என்றார் ஷாரிக். “ஆமாம்.. கேமல் இருந்து போயிட்டு போயிட்டு வந்ததால குழப்பமா இருந்தது” என்ற மும்தாஜ், “சாப்பாடு விஷயத்துல ரொம்ப கறாரா இருந்தாங்க. மனிதாபிமானம் இல்லாம இருந்தாங்க” என்றும் புகார் செய்தார். “சல்யூட் வெக்கலை.. ன்னு முதற்கொண்டு அவங்களுக்கு சம்பாதிக்க நெறய வழி இருந்தது. ஆனா எங்களுக்கு சாப்பாடு மூலம்தான் வருமானம்” என்று பொதுமக்கள் அணி சொன்னதை கமல் ஏற்கவில்லை. 

பசியோடு சாப்பிடத் தயாராக இருக்கும் போது தடுக்கப்பட்ட வலி சார்ந்த அனுபவங்களை டேனியும் பகிர்ந்து கொண்டார். அதனால்தான் சென்றாயனின் பசியை உணர்ந்து தன்னிடமிருந்த ஆப்பிள்களை தந்ததாக சொன்னார். “போலீஸூக்கு தனி ரேட்டும்.. திருடங்களுக்கு கம்மி ரேட்டும் வெச்சோம்” என்று தன் தரப்பு நியாயத்தைச் சொன்னது பொதுமக்கள் அணி. 

பசிக்கொடுமை தொடர்பாக உரையாடல் நகர்ந்தது. சென்னைக்கு வரும் போது எங்குமே உணவு கிடைக்காமல் அவதிப்பட்ட வலிகளை சென்றாயன் பகிர்ந்து கொண்டார். கல்யாண மண்டபத்துக்கு போகலாம் –னு ஒருத்தர் சொன்ன யோசனையைக் கேட்டு அங்கயும் போயி அவமானப்பட்டேன்” என்று சென்றாயன் சொன்னதும்.. ‘இளம் நடிகராக இருந்த போது’ அவ்வாறு தான் பட்ட கசப்புகளையும், பிற்பாடு அதைச் சொல்லிக் காட்டாமல் இருந்ததையும் கமல் பகிர்ந்து கொண்டார். 

எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பெரிய நடிகர்கள் துவக்கத்தில் கடுமையான வறுமையையும் பசியையும் இளமையில் அனுபவித்த காரணத்தினாலேயே.. பணம் சம்பாதித்த பிறகு மற்றவர்களை சாப்பிட வைத்து சந்தோஷம் அடைந்த குணத்தைப் பற்றி கமல் சொல்லிக் கொண்டிருந்தார். ‘திருமணத்தை நடந்த்துபவர்கள் ‘இது போல்’ வந்து சாப்பிடுபவர்களை தடுத்து நிறுத்தாதீர்கள். இல்லையென்றால் அவர்கள் சென்றாயனைப் போல் வளர்ந்து தொலைக்காட்சியில் சொல்லும் ஆபத்து இருக்கிறது” என்று அவர் சொன்னதும் முக்கியமான விஷயம். ‘செலவு அதிகமானாலும் பரவாயில்லை’ என்று தன் கல்யாணத்தில் அதிகம் பேரை சாப்பிட வைத்தேன்’ என்று சென்றாயன் சொன்னது நல்ல விஷயம். 

விளையாட்டுக்கு இடையில் சென்றாயனிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட சிலரையும் கமல் பாராட்டத் தவறவில்லை. 

“பசின்றது கொடுமைதான். ஜகத்தை அழிச்சுடுவோம்’-ன்னு பாரதி சொன்னது உண்மைதான். ஆனா நீங்க கேமை அழிச்சீட்டிங்களே” என்றார் கமல். “ரேட்டை கம்மி பண்ணலாம்னு நான் சொன்னேன் சார்.. கேட்கலை’ என்று ஷாரிக் சொல்ல.. “டீம் டிஸ்கஷன் செஞ்சுதான் பண்ணினேன்னு சொன்னீங்க.. அப்ப ஏன் ஷாரிக் சொன்னதை கேட்கலை” என்று ரம்யாவிடம் விசாரித்தார் கமல். “டீம் சொன்னதைத்தான் நான் பிரதிபலிச்சேன். அப்ப நான் தலைவர்ன்ற மறந்துட்டு பொதுமக்களா சிந்திக்க ஆரம்பிச்சிட்டேன்” என்று ரம்யா.. சொன்னதும்.. ‘அய்யோ.. இப்படி ஒவ்வொரு லீடரும் பொதுமக்களா நினைச்சா.. நல்லாயிருக்குமே” என்று டைமிங்காக அரசியல்வாதிகளை வாரினார் கமல். 

என்றாலும்  ‘Captain of the Ship’ என்பதன் பொறுப்பு எத்தனை முக்கியம் என்பதை விளக்கினார் கமல். ‘இனி வரும் தலைவர்களாவது தங்களின் பொறுப்பை உணர வேண்டும் என்பதற்காகத்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்” என்றார் கமல். (அப்ப இது உங்களுக்கும் ‘மய்யமாக’ பொருந்தும்.. தலைவரே!). 

தன்னுடைய கோபத்தை சரியான சமயத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பாலாஜியை பாராட்டினார் கமல். (அப்படியா?!) “ஏன் அழுதீங்க?” என்று விசாரிக்கப்பட்ட போது.. “சண்டை நடுவுல காமெடியன்னு சொல்லிட்டான்.. இவனாவது என்னை காமெடியன்னு ஒத்துக்கிட்டானேன்னு சந்தோஷமா இருந்தது’ என்று தன் மனவேதனையை நுட்பமாக தெரித்தார் பாலாஜி.

‘Comedy is a serious business’ என்று நகைச்சுவை தொடர்பாக சீரியஸான விளக்கத்தை தந்தார். சாப்ளினில் துவங்கி நாகேஷ், மெஹ்மூத் வரை ஒரு ரவுண்டு வந்தார். காமெடிக்கும் டிராஜிடிக்கும் உள்ள வித்தியாசத்தையும் உதாரணம் மூலம் தெரிவித்தார்.  ‘ஸோ.. காமெடின்றது சாமானிய விஷயம் இல்லை.. ஆக.. பாராட்டாவே சொல்லலாம்’ என்று மஹத்திடம் சொன்னார் கமல். “கட்டப்பாவா மாறி அவர் காலை எடுத்து தலைல வெச்சுக்கிட்டீங்களே’ என்று கிண்டலடிக்கவும் தவறவில்லை. 

‘காமெடி சீரியஸான விஷயம்தான்’ என்று பிக்பாஸ் வீட்டினர் அழாத குறையாக ஒப்புக் கொண்டாலும் கமல் விடுவதாக இல்லை. தொடர்ந்து பேசி கதற வைத்தார். ‘பல்ராம் நாயுடு’ பாத்திரம் இயக்குநரால் முதலில் அரைமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டதையும், ஒரு லைட்மேன் தன்னிச்சையாக சிரித்ததைப் பார்த்த பிறகே ரவிக்குமார் ஒப்புக் கொண்டதையும் கமல் விளக்கினார். (சைக்கிள் கேப்ல.. சுயபுராண லாரி ஒட்டுவதைக் கமல் சற்று குறைத்துக் கொள்ளலாமோ?!) பிறகு மஹத்தின் வேண்டுகோளுக்கிணங்க.. ‘பல்ராம் நாயுடு’ மாதிரி பேசிக் காட்டியது அட்டகாசம். 

‘நம்ம ஒருத்தரை திட்டும் போது அவங்க எப்படி மனசு கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு யோசிச்சேன். அதனாலதான் அழுதேன்” என்று விளக்கம் தந்தார் பாலாஜி. (பிக்பாஸ் வீடு என்ன ‘மனம் திருந்தும் மையமா?” இங்க வந்தபிறகுதான் திருந்திட்டேன்’ன்னு நெறைய பேரு சொல்றாங்க.. நடைமுறை வாழ்க்கைலயே நெறைய அனுபவங்கள் கிடைக்குமே?) 

பாலாஜிக்கு நன்றி சொன்ன நித்யாவை தடுத்து நிறுத்தி “எனக்குச் சொல்லுங்க’ என்றார் கமல். ‘கவுண்டமணி அண்ணனுக்கு கூட நாற்பது வயசுக்கு மேலதான் வாய்ப்பு நெறய வந்துச்சு.. எனவே அதை நினைச்சு மனம் கலங்கிட்டீங்கன்னு நெனச்சுட்டேன். கவலைப்படாதீங்க.. திறமை இருக்கறவங்களை மக்கள் மறக்க மாட்டாங்க.. தூக்கி விடுவாங்க” என்றார் கமல். 

‘ஒருத்தரை சிறையில் அடைக்கணும்னு முடிவு செஞ்சப்ப என்ன செஞ்சீங்க?” என்று ஜனனியைக் கேட்டார் கமல். “மும்தாஜ்தான்னு முதலில் முடிவெடுத்தோம்.. ஆனா போலீஸ் சைடில் மஹத் சரியில்லைன்னு சிலர் சொன்னதால.. அவரைத் தேர்ந்தெடுத்தோம்” என்றார் ஜனனி. “நான் இங்க Easy target. அதனாலத்தான் என்னைத்தான் தேர்ந்தெடுக்கறாங்க’ என்று தகுந்த காரணங்களுடன் விளக்கமாக சொன்னார் மும்தாஜ். அவருடைய நோக்கில் அவருடைய ஆதங்கம் சரியாக இருந்தது போல்தான் தென்பட்டது. “எப்படியாவது நான் அவங்க மைண்ட்ல இருக்கேன். அது போதும்” என்று விரக்தியாக சொன்ன மும்தாஜ், ‘மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க.. நான் எதுக்கும் பயப்பட அவசியமில்லை’ என்றார். 

இப்போதுதான் நிகழ்ச்சி முக்கியமான தலைப்பிற்குள் வந்தது. ‘இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள்?’ பொன்னம்பலம், யாஷிகா, நித்யா மற்றும் பாலாஜி ஆகியோர் எவிக்ஷன் பட்டியலில் இருந்தார்கள். 

பொன்னம்பலத்தின் சிறை அனுபவத்தைப் பற்றி விசாரித்தார் கமல். ‘அவர் சொல்லிட்டு போயிட்டார். இருந்தாலும்.. நாலு வருஷம் எதிரியாக இருந்தவங்களை விடவும் நாலு நிமிஷம் குருவா இருந்தவங்க முக்கியம். எனக்கு நாலு நிமிஷம் அவர் குருவா இருந்தார்’ என்று புல்லரிக்க வைத்தார் பொன்னம்பலம்.

‘யார் யார் எவருக்கு ஆதரவு தருகிறீர்கள்? அவருக்கு அருகில் சென்று உட்காருங்கள்’ என்றார் கமல். இதில் குழப்பம் ஏற்பட்டதால் தெளிவுப்படுத்தி குழுவாக அமர வைத்தார். யாஷிகாவிற்கு அதிக நபர்கள் ஆதரவு தந்திருந்தார்கள். ஷாரிக், டேனி, ஐஸ்வர்யா மற்றும்  மகத்.

பாலாஜிக்கு சென்றாயன் மற்றும் ஜனனி. நித்யாவிற்கு வைஷ்ணவி மற்றும் ரம்யா. பொன்னம்பலத்திற்கு மும்தாஜ் மற்றும் ரித்விகா. 

இந்த வரிசையைக் கவனித்தால் நடுத்தர வயது, இளம் வயது, அதற்கும் இளம் வயதுகளில் உள்ளவர்கள் தன்னிச்சையான  குழுவாக இணைந்திருப்பதைக் கவனிக்க முடிகிறது. ரித்விகா மட்டும் விதிவிலக்கு. அவர் முதிர்ச்சியோடு சிந்திப்பதால் ஒருவகையில் பொருந்தும்தான்.

இதற்கான காரணங்களைக் கேட்டார் கமல். “வீட்ல ஒரு பெரியவங்க இருக்கணும். அதுக்கு பொன்னம்பலம் அவசியம்” என்றார் மும்தாஜ். “முதல்ல புண்படுத்தினாலும் பிறகு ஸாரி கேட்டுடுவார்” என்றார் ரித்விகா.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“முதல்ல நித்யாவை நான் நம்பலை… ஆனால இப்ப அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன்’ என்றார் ரம்யா. “யாஷிகாவையும் சப்போர்ட் பண்ணணும்னு நெனச்சேன். ஆனால் அவங்களுக்கு நெறைய சப்போர்ட் இருக்கும்னு தெரியும். நித்யா அவங்க.. அவங்களாக இருக்காங்க’ என்றார் வைஷ்ணவி. 

‘பாலாஜி இல்லையென்றால் வீட்டில் நகைச்சுவையே இருக்காது” என்று ஆதங்கப்பட்டார் சென்றாயன். 

பாலாஜியை மட்டுமல்லாமல் ஜனனி பொன்னம்பலத்தையும் இணைத்து ஆதரித்தார். இந்தக் காரணத்திற்காகவே ‘பொன்னம்பலம்’ எவிக்ஷன் பட்டியலில் இருந்து விலக்கப்படுவதாக கமல் தெரிவித்தார். ‘மக்கள் தீர்ப்பும் இதுவாகத்தான் இருக்கிறது” என்றதும் பொன்னம்பலம் நன்றி தெரிவித்தார். (இந்த வாரம் போகாம இருந்தா.. என்ன பண்றேன்னு பாருங்க’ என்று முன்னர் பொன்னம்பலம் சொன்னது வேறு திகிலுடன் இப்போது நினைவிற்கு வருகிறது). ‘நான் அப்பவே சொல்லலை’ என்று சந்தோஷப்பட்டார் ரித்விகா. 

ஆக.. பாக்கியிருப்பவர்கள் பாலாஜி, நித்யா, யாஷிகா.. மூவருமே பலமான போட்டியாளர்கள். நாம் நடத்திய சர்வேயிலும் சரி, விஜய் டி தன் டிவிட்டர் பக்கத்தில் நடத்திய கருத்துக்கணிப்பிலும், 60% அதிகமான வாக்குகளைப் பெற்றவர் யாஷிகா தான். ஆக, ஆன்லைன் டிரெண்டின் மனநிலையில் பார்க்கும் போது, யாஷிகா தான் வெளியேற்றப்பட வேண்டும். என்ன செய்யதிருக்கிறார் பிக்பாஸ் என்பதைக் காண இன்று இரவு வரை காத்திருப்போம். 

அடுத்த கட்டுரைக்கு