Published:Updated:

பொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல? #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
பொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல? #BiggBossTamil2
பொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல? #BiggBossTamil2

‘வீட்டின் தலைவருக்கான போட்டி’, ‘நாமினேஷன் வைபவம்’, ‘பொன்னம்பலத்தின் கொடூரமான ஹேர்கட்டிங்’ ஆகியவற்றைத் தவிர்த்து இன்று பிக் பாஸ் வீட்டில் வேறு எவ்வித சுவாரஸ்யமும் இல்லை. ஒரே ‘சவசவ’. 

‘நாலு நிமிட’ குருவின் உபயத்தில், ‘சந்தனக்காற்றே.. செந்தமிழ் ஊற்றே’ என்று பொன்னம்பலம் பாடிய பாட்டை ஐந்து நிமிடங்கள் நமக்கு காட்டுமளவிற்கு ‘ஃபுட்டேஜ்’ பற்றாக்குறை நிலவுகிறது. (‘சூப்பர் சிங்கர் பைனல் முடிந்து விட்டது’ என்னும் தகவலை பொன்னம்பலம் ஐயாவிடம் யாராவது சொல்லிவிடுங்கள்!) இதற்குப் பிறகு ‘பெண் பார்க்க வந்த விளையாட்டு வேறு’. சுருக்கமாகச் சொன்னால் ‘நோ கமென்ட்ஸ், சிம்ப்ளி வேஸ்ட்'.

‘லாலா கடை சாந்தி’ என்கிற கருத்துள்ள பாடலுடன் பிக் பாஸ் வீடு விடிந்தது. இளசுகள் உற்சாகமாக ஆட, மற்றவர்கள் நடனம் என்கிற பெயரில் உடம்பை அசைத்தனர். டேனி உட்கார்ந்தபடி தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு வித்தியாசமான நடனத்தை அறிமுகப்படுத்தினார். 

மும்தாஜிற்கு பேய்களை கண்டுபிடிக்கும் திறன் இருக்கிறதாம். வந்த மூன்றாவது நாளிலேயே பெண்கள் ரூமில் பேய் இருப்பதை கண்டுபிடித்துவிட்டாராம். (பின்னே.. பெண்கள் ரூமில் அதுதானே இருக்கும்?!) ‘என்னை யாராவது இன்னிக்கு நாமினேஷன் பண்ணுவீங்களா?” என்று காலையில் மிரட்டலாக கேட்டாராம். இதையெல்லாம் பாலாஜி, டேனியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். (முதல் சீஸனில் ‘பேய் இருக்கிறது’ என்றொரு டாஸ்க் ‘பிந்து மாதவி’யை வைத்து விளையாடப்பட்ட கொடுமை வேறு இப்போது நினைவிற்கு வந்து தொலைக்கிறது). 

நாமினேஷன் தினம் என்பதால் அது குறித்த உரையாடலும் கவலைகளும் தன்னிச்சையாக வீட்டிற்குள் வந்துவிடுகிறது. “இந்த வாரம் நீங்க நாமினேஷன்ல வரமாட்டீங்க” என்று பொன்னம்பலத்திற்கு ஆருடம் சொன்னார், ஜனனி. ஆனால், அது பிறகு பொய்த்துப் போனது. ‘நான் வருவேன்’னு நெனக்கறேன்..” என்று அவர் சொன்னதுதான் உண்மையானது. 

கமலின் ஆதரவு, பொதுமக்களின் கைத்தட்டல்… என்று ‘கலக்கற சந்துரு’ மோடில்  இருக்கும் பொன்னம்பலம் இன்று புதிய சிகையலங்காரத்துடன் உற்சாகமாக வலம் வந்தார். பாட்டுதான்.. விளையாட்டுதான்.. மனிதர் குஷி மூடில் இருக்கிறார். “அவதார் படத்துல வர்ற வில்லன் மாதிரியே இருக்கீங்க” என்று இவரைக் கலாய்த்த டேனி, பிறகு ‘கப்ளிங் கபாலி’ என்று மறைமுகமாக கிண்டலடித்தார். ‘முன்னாடி.. சாமி கும்பிடப் போறவர் மாதிரி இருந்தாரு.. இப்ப சாமி உண்டியலைத் திருடறவர் மாதிரி இருக்கார்” என்று பிறகு பாலாஜியும் கிண்டலடித்தார். என்னடா இது, ஜெய்ஸ்ரீராமிற்கு வந்த சோதனை!.

“ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.. ‘மக்களே..’ –ன்னு நான் சொன்னவுடனே கைத்தட்டல்.. இன்னமும் அவங்க என்னை மறக்கலை. ‘கபாலி’யை நல்லா ஞாபகம் வெச்சிருக்காங்க.. “ என்று புளகாங்கிதம் அடைந்தார் பொன்னம்பலம். (இவரோட குஷியைப் பார்த்தால் அரசியலுக்கு வந்துவிடுவார் போலிருக்கிறதே.. சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ… மாதிரி.. இன்னொரு ‘அமாவாசை’யை நாடு தாங்காது மக்கழே!).

ஷாரிக்கும் மஹத்தும் தனியாக அமர்ந்து சதியாலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். ‘தட்றோம்.. தூக்கறோம்’ மாதிரி இவர்கள் எப்படியாவது ஃபைனலுக்கு வந்து விடுவார்களாம்.. வருகிற பரிசுப்பணத்தில் பாதியை டொனேஷன் தந்துவிடுவார்களாம். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றவுடன் ‘சூப்பர் ஸ்டார்’ ஆகி விடுவார்களாம். (“தயிர்க்காரி பானையை உதைத்த கதை”தான் நினைவுக்கு வருகிறது).

“நாங்க நேத்து நைட்டு பேய் விளையாட்டு விளையாடிட்டு இருந்தோம்:” என்று ஜனனி சொன்னவுடன் “பேய்ங்களே.. பேய் விளையாட்டு விளையாடுமா?” என்று கொடூரமாக ஜோக் அடித்தார் பொன்னம்பலம். (இப்படி எதையாச்சும் சொல்றது.. அப்புறம் கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி முகத்தை ‘அப்பாவியாக’ வைத்துக் கொண்டு ‘ஸாரி’ சொல்றது). 

‘சந்தனக்காற்றே’ எனும் பாடலை இவர் பாட, ஜனனியும் ரித்விகாவும் பின்னணியில் பாடிக் கொண்டிருந்தார்கள். குழாயில் இருந்து வரும் நீர் மெல்ல குறைவது போல.. பாடல் வரிகள் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போனது. ‘என்னடா.. இது இளையராஜாவிற்கு வந்த சோதனை’ என்கிற மாதிரி சென்றாயன் நொந்து போய் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்.. 

பாடலைத் தொடர்ந்து இன்னொரு கொடுமையும் நடந்தது. வைஷ்ணவி, ஜனனி, ரித்விகா ஆகிய மூவரின் அப்பா பாலாஜியாம். சென்றாயனுக்கு அப்பாவான பொன்னம்பலம், நடுப்பெண்ணான ஜனனியை பெண் பார்க்க வந்திருக்கிறாராம். Task செய்து பழகி, பழகி.. பிக்பாஸ் தராவிட்டாலும் இவர்களாகவே எதையாவது செய்து கொண்டிருக்கிறார்கள். 

வீட்டின் தலைவரை தேர்ந்தெடுப்பது பற்றிய அறிவிப்பு வந்தது. வீட்டின் உள்ளே மூன்று மாலைகள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். அதை முதலில் தேடி கண்டெடுப்பவர், ‘யாரை தலைவராக்க விரும்புகிறாரோ’ அவரின் கழுத்தில் போடலாம். ஒரு நபருக்கு ஒரு மாலையை மட்டும் போட வேண்டும். தனக்கு தானே மாலையை போட்டுக் கொள்ளக்கூடாது… என்ற விதிகள்.

கதவு திறந்ததும் கோயில் சுண்டல் மாதிரி மக்கள் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர். மாலையைக் கண்டுபிடிக்க அத்தனை சிரமம் எல்லாம் தேவை இல்லை. அஞ்சலி செலுத்துவது மாதிரி ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.  தான் கண்டுபிடித்த மாலையை, மஹத்திற்கு அணிவித்தார் டேனி. ரித்விகா பாலாஜியை தேர்ந்தெடுத்தார். அறிவிப்பை சரியாக கவனிக்காத யாஷிகா, தன்னிடமிருந்த மாலையை மஹத்திற்கே அணிவிக்க, ‘ஒருவருக்கு இரண்டு மாலைகள் அணிவிக்கக்கூடாது” என்பதை மற்றவர்கள் சுட்டிக் காட்டினார்கள். எனவே பக்கத்திலிருந்த ‘ஷாரிக்’கிற்கு எதையும் யோசிக்காமல் போட்டார் யாஷிகா. குழு மனப்பான்மையோடு பிக்பாஸ் வீடு இயங்குவதை இந்த நிகழ்ச்சி காட்டியது.

‘திருவிழா’விற்கு பிரியாணியாகப் போகும் ஆடுகள் மாதிரி, தலைவர் போட்டியின் வேட்பாளர்களான பாலாஜி, மஹத் மற்றும் ஷாரிக் ஆகியோர் தனியாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர். ‘பெண்களிடம் வம்பு செய்தால்தானே பஞ்சாயத்து வருகிறது’ என்று நினைத்து விட்டாரோ என்னமோ, பாலாஜியை ஆங்காங்கே தொட்டு டார்ச்சர் செய்து கொண்டிருந்தார் மஹத். “கண்ட இடத்துல தொடாதடா” என்று பாலாஜி ஆட்சேபிக்க “அப்ப.. நீங்க மட்டும் முன்ன தொடலையா?” என்று மல்லுக்கு நின்றார் மஹத். ம்யூட் செய்யப்பட்ட வார்த்தைகள் வேறு. (என்னங்கடா நடக்குது. அங்க?!). 

கேரட்டை தின்று கொண்டிருந்த பொன்னம்பலத்தை ‘வாவ்.. எவ்ளோ பெரிய முயல்’ என்று கிண்டலடித்தார் பாலாஜி. “அது முயல் இல்லை ஆப்ரிக்கன் மங்க்க்கி’ என்றும் வில்லங்கமாக கிண்டலடித்தார்கள். கேரட்டை ஆவேசமாக மென்று தின்று கொண்டிருந்த பொன்னம்பலத்தின் குளோசப்பிற்கு காமிரா வில்லங்கமாக சென்றது. 

தலைவர் போட்டியின் அடுத்தக் கட்டம். வேட்பாளராக இருப்பவர் தனக்கு உதவியாக ‘திறமையான ஆதரவாளர்’ ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாலாஜி ஜனனியை தேர்ந்தெடுத்தார். மஹத், டேனியையும் ஷாரிக் யாஷிகாவையும் தேர்ந்தெடுத்தனர்.

வேட்பாளரின் கால்கள் மற்றும் கைகள் இரண்டு பூட்டுக்கள் கொண்ட சங்கிலியால் பூட்டப்பட்டு அதன் சாவிகள் நீச்சல் குளத்தில் போடப்படும். அவரவர்களின் ஆதரவாளர்கள் நீச்சல் குளத்தில் மூழ்கித் தேடி சாவியைக் கண்டுபிடித்து பூட்டுக்களைத் திறக்க வேண்டும். எவருடைய பூட்டுக்கள் முதலில் திறக்கப்படுகிறதோ, அவரே தலைவர். நீரில் மூழ்க முடியாத படி டேனிக்கு காது பிரச்னை இருந்ததால் மஹத்திற்கு உதவ சென்றாயன் மாற்று ஆதரவாளராக முன்வந்தார். 

பஸ்ஸர் அடித்ததும் முந்திரிக்கொட்டையாக யாஷிகா இறங்கினார். பிறகு ஆரம்பித்தது அந்தப் போட்டி. 

யாஷிகாவும் ஜனனியும் ஆர்வமாக நீச்சல் குளத்தில் குதித்து ஆவேசமாக தேடிக் கொண்டிருக்க சென்றாயன் தயங்கிய படி நண்டுபிடித்துக் கொண்டிருந்தார். ஜனனி முதல் சாவியைக் கண்டுபிடித்து அது பொருந்தியும் விட கூட்டம் ஆர்ப்பரித்தது. தவறான சாவியைக் கண்டுபிடித்திருந்தால் மறுபடியும் நீச்சல் குளத்தில் போட வேண்டும். எனவே மீண்டும் அதுவே கூட தேடுபவரின் கையில் கிடைக்கலாம் என்கிற சிக்கல் வேறு. அடுத்த சாவியை யாஷிகா கண்டுபிடித்து விட ஆட்டம் சூடு பிடித்தது. 

ஆனால் சென்றாயன் இன்னமும் நண்டுபிடித்துக் கொண்டிருக்க, “டேய் தலைகீழா குதிச்சு தேடுடா” என்று மஹத் கதறிக் கொண்டிருந்தார். ஜனனி அல்லது யாஷிகா ஆகிய இருவரில் ஒருவர்தான் விளையாட்டை வெற்றிகரமாக முடிப்பார்கள் என்று கருதிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த ஆட்டத்தின் முடிவில் நிகழ்ந்தது ஓர் அபாரமான திருப்பம். ஆம்! சென்றாயன், இரண்டு சாவிகளையும் வெற்றிகரமாக கண்டுபிடித்து மஹத்தை தலைவராக்கினார். ‘முயல் – ஆமை’ கதைதான் நினைவிற்கு வந்தது. 

“யாஷிகாதான் ஜெயிப்பாங்கன்னு நெனச்சேன்” என்று பிறகு பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த சென்றாயன் ஒரு சாவி கூட எடுக்க மாட்டான்’னு நெனச்சேன்.. எந்த task-லயும் அவனைச் சரியா சேர்க்க மாட்டேங்கறாங்க .. இல்லையா.. அதனாலதான் அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்” என்றார் மஹத். (அம்பூட்டு நல்லவனாய்யா.. நீயி..) சென்றாயனால்தான் மஹத் தலைவராகியிருக்கிறார். ஜெயிக்க வைத்த தொண்டர்களை தலைவர்கள் உடனே மறந்து விடுவது உலக நடைமுறைதானே?!

வீட்டின் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வந்தது. தட்டுத்தடுமாறிய  குரலில் மஹத் இந்த அறிவிப்பை வாசித்தார். பிறகு அணிகள் பிரிக்கப்பட்டன.

வைஷ்ணவி, ரம்யா மற்றும் ஜனனி – சமையல் அணி. ஷாரிக், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா – பாத்திரங்கள் சுத்தம் செய்யும் அணி. ரித்விகா, சென்றாயன், டேனி – பாத்ரூம் சுத்தம் செய்யும் அணி. ‘இந்த க்ளீனீங் டீம்.. போர்வையை சுத்தம் செய்யும் வேலையையும் செய்யணும்” என்று புதிய தலைவர் கெத்தாக சொல்ல.. ‘அதெல்லாம் வேணாம்” என்றார் மும்தாஜ். (துரை.. தான் படுத்த போர்வையைக் கூட தட்டி மடிச்சு வெக்க மாட்டாராமாம்…’ என்று பிற்பாடு விமர்சித்தார் பாலாஜி). 

அடுத்ததாக நாமினேஷன் படலம். இதில் கூடுதலாக ஒரு விஷயத்தைக் கொண்டு வந்தார் பிக்பாஸ். (முதல் சீஸனின் விதிமுறைகளை அப்படியே கொண்டு வந்தால் பார்வையாளர்களுக்கு சலிப்பு உண்டாகலாம் என்பதால் சிறிய சிறிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன போலிருக்கிறது). 

பொதுவான காரணங்களுடன் இரண்டு நபர்களை நாமினேட் செய்யலாம் என்கிற வழக்கமான விதிமுறை சற்று மாற்றப்பட்டு, ‘ஆர்வமில்லாமலும் மெத்தனமாகவும் இருக்கும் இரண்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து, தகுந்த காரணங்களையும் சொல்ல வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டது. 

‘யாஷிகா மத்தவங்களை ஹர்ட் பண்ணியாவது டாஸ்க்ல ஜெயிக்கணும்னு நெனக்கறாங்க’ என்கிற காரணத்தை சென்றாயன் சொன்ன போது பிக்பாஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘வேற என்ன சொல்றது?” என்று தலையைச் சொறிந்து கொண்டார் சென்றாயன். (பொடுகு இன்னமும் போகலையா?!). 

ஒவ்வொருவரும் விதம் விதமான, விசித்திரமான காரணங்களைச் சொன்னார்கள். பிரியங்களும், கசப்புகளும், முன்விரோதங்களும் இதில் கலந்திருந்தன. “நாமினேஷன்ல வர்ற வாரத்துல மட்டும் வைஷ்ணவி தானா வந்து பேசறாங்க.. இல்லைன்னா.. கண்டுக்க மாட்றாங்க” என்றார் மும்தாஜ். ‘வேலையை அரைகுறையா செய்யறதே ஐஸ்வர்யாவோட வேலை” என்று பழைய பஞ்சாயத்தைக் கிளறினார் பாலாஜி. 

ஆக.. பாலாஜி (5 ஓட்டுக்கள்), ஐஸ்வர்யா (5 ஓட்டுக்கள்) பொன்னம்பலம் (4 ஓட்டுக்கள்), ஜனனி (4 ஓட்டுக்கள்) பெற்று எவிக்ஷனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தனக்கு தரப்பட்ட தலைவி பதவியை சரியாக கையாளாத காரணத்தினால், ரம்யா ஏற்கெனவே இதில் நேரடியாக தகுதி பெற்றதால் அவரும் இந்த வரிசையில் இணைந்தார். 

“இப்ப அந்த குரூப் ஸ்ட்ராங்க் ஆயிடுச்சு மாமா..  இத்தனை காமிரா.. கமல் சாரைத் தாண்டி வேற ஒரு விஷயம் வீட்டுக்குள்ள இருக்கு” என்று சென்றாயன் எதைப் பற்றியோ சொல்லிக் கொண்டிருந்தார். ‘இந்த மஹத்தால எதையாவது கண்ட்ரோல் பண்ண முடியுதா… பார்த்தியா… டேனி ஆப்பிள் குடுத்ததுக்கு நீ மகிழ்ச்சியடைற.. செருப்பால அடிச்சுட்டு சோறு போடறது மாதிரி” என்று குசுகுசுவென்ற குரலில் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. 

அடுத்த விளையாட்டு பற்றிய அறிவிப்பு பிக்பாஸிடமிருந்து வந்தது. ‘இந்த விளையாட்டின் இறுதியில் மூன்று நபர்கள்தான் இருக்கப் போகிறீர்கள். நீங்கள்தான் இறுதியில் இருக்கும் நபர் என்கிற பட்சத்தில் ‘உங்களுடன் இருக்கப் போகும் இரண்டு சக போட்டியாளர்களாக, எந்த இரண்டு நபர்களை கருதுவீர்கள், அதற்கான காரணம் என்ன?’ என்பதாக அந்த அறிவிப்பு இருந்தது. 

‘ஜனனி மேக்கப் இல்லாம நேச்சுரலா இருக்காங்க’ என்கிற விசித்திரமான காரணத்துடன் பொன்னம்பலம் துவங்க. ‘அய்யோடா!’ என்று வெட்கத்துடன் தலையில் அடித்துக் கொண்டார் ஜனனி. “எதைப் பண்ணாலும் கரெக்ட்டா செய்யறாங்க” என்கிற காரணத்துடன் அவர் அடுத்து குறிப்பிட்டது ரித்விகாவை. தீவிரமான முகபாவத்துடன் அனைவரது அபிப்ராயங்களையும் கேட்டுக் கொண்டிருந்தார் ரித்விகா. 

ஆனால் பலரும் பாராட்டியது யாஷிகாவை. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்கிற மாதிரி, டாஸ்க்ன்னு வந்துட்டா யாஷிகா உயிரைக் கொடுத்து ஜெயிக்க முயல்வாங்க’ என்பது பலரின் அபிப்ராயமாக இருந்தது. “‘ஸ்கெட்ச்’ போட்டு வேலை செய்யறாரு” என்று யாஷிகா குறிப்பிட்டது டேனியை. ‘என்னமோ பண்ணப் போறான்.. பாருங்க’ என்று சிலர் ‘சைலண்ட் மோடில்’ இருந்த ஷாரிக்கை குறிப்பிட்டது ஆச்சரியம். “என் கூட தக்கையான ஆள் இருந்தா நல்லது’ என்கிற நகைச்சுவையான குறிப்புடன் சென்றாயனை சொன்னார் பாலாஜி. (சாவி எடுக்கற போட்டில ஆச்சரியமா ஜெயிச்ச மாதிரி .. சென்றாயன் உண்மையாகவே கூட ஃபைனல்ல வரலாம். யாரையும் தப்பா எடை போடதீங்க.. பாலாஜி!). “எங்க மாமா பாலாஜியும்.. எதையும் சிறப்பா செய்யற டேனியும்’ வருவாங்கன்ற நம்பிக்கை இருக்கு” என்று பணிவாகச் சொல்லி கைத்தட்டல்களைப் பெற்றார் சென்றாயன். 

இந்தக் களேபரத்தில் எவருமே மும்தாஜ் பெயரைச் சொல்லவில்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவரின் மீது மறைமுகமான வெறுப்பும் அச்சமும் அனைவரிடத்திலும் இருந்தது. வெளிப்படையாக எதையும் சொல்லி விடுகிறார் என்கிற காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் இறுதியில் வரக்கூடும் என்கிற எண்ணமும் மற்றவர்களுக்கு இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக எதையும் ஒப்புக் கொள்ள மற்றவர்கள் விரும்பவில்லை. “எனக்குத் தெரியும்.. என் பெயரை  யாரும் சொல்ல மாட்டாங்கன்னு” என்று பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ். 

“நீதாண்டா செல்லம் ஃபைனல்ல வருவ.” என்று ஜனனியைக் கொஞ்சிக் கொண்டிருந்தார் ரம்யா. “மொதல்ல ஒருத்தரைப் பத்தி நெகட்டிவ்வா விஷயம் பதிஞ்சு.. பின்ன பாசிட்டிவ்வா மாறிச்சின்னா… அவர்தான் மக்கள் மனசுக்குள்ளே அழுத்தமா படிவார்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் மஹத். (பயபுள்ள.. தன்னைப் பத்தியே சொல்லுது போல!). 

“இங்க பர்சனல் ஈகோ’ அதிகமாயிடுச்சு” என்று பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரித்விகா. “மத்தவங்க போகும் போது அழறதுக்கும் நித்யா போகும் போது அழறதுக்கும் வித்தியாசம் இருந்தது. ‘அப்பாடா.. போயிட்டா’ன்ற மாதிரி இருந்தது” என்றார் பாலாஜி. வில்லனாக நடித்த பழக்கத்தினாலோ என்னவோ, படுக்கையின் மீது வந்து பாய்ந்து வந்து விழுந்தார் பொன்னம்பலம். 

‘சாப்பாடு போடும் போது மூஞ்சி காட்ட வேணாம்னு சொல்லு” என்று வைஷ்ணவியைப் பற்றி கோபத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் புது தலைவர் மஹத். “நான் அப்படில்லாம் பண்ணலையே. அவனா கற்பனை பண்ணிக்கிட்டா நான் என்ன பண்றது. “சாப்பாடு ரெடியாயிடுச்சா’ன்னு பந்தா பண்ணா எப்படி, என் கிட்ட வந்து நேரா சொல்ல வேண்டியதுதானே” என்று தன் வழக்கமான பாவனையுடன் சொன்னார் வைஷ்ணவி.

“நல்லவேளை .. வைஷ்ணவி நாமினேட் ஆகலை.. இல்லைன்னா நமக்கு எண்டர்டெயிண்மென்ட் இருக்காது” என்று தன் கோபத்தை கிண்டலாக மாற்றி வெளிப்படுத்தினார் மஹத். ‘நான் வேற நாமினேட் பண்ணி தொலைச்சேன்” என்று கிசுகிசுப்பான குரலில் கூறினார். இது போன்ற விஷயங்களை பொதுவில் சொல்வது பிக்பாஸ் வீட்டின் விதிமுறைக்கு எதிரானது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

மும்தாஜூம் அவரது ‘பேட்டாவும்’ தனியாலோசனையில் இருந்தார்கள். ரம்யா சிலருடைய செல்வாக்கில் இயங்குகிறார். சுயமாக செயல்படவில்லை என்று புகார் சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ். ‘இந்த ரித்விகாவும் சாமான்யப்பட்ட ஆள் இல்லை”

பிக்பாஸ் வீட்டில் பேய் இருக்கிறது என்பது சிலரின் அபிப்ராயம். வீட்டில் நடக்கும் விஷயங்களை அப்படியே காப்பியடித்து தனது டாஸ்க் ஆக மாற்றும் பழக்கமுள்ள பிக்பாஸ் இதையும் நகலெடுக்கலாம். எனில் வரும் வாரங்களில் ‘பேய்’ டாஸ்க் இருக்கும் ஆபத்தும் இருக்கிறது. எதற்கும் தாயத்து, தகடுகளுடன் ஜாக்கிரதையாக இருப்போம்.

சுரேஷ் கண்ணன்