Published:Updated:

'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூடாதா பிக் பாஸ்?! #BiggBossTamil

சுரேஷ் கண்ணன்
'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூடாதா பிக் பாஸ்?! #BiggBossTamil
'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூடாதா பிக் பாஸ்?! #BiggBossTamil

‘இருதயம் பலவீனமானவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள்’ இன்றைய நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டாம்’ என்றொரு எச்சரிக்கை அறிவிப்பை பிக்பாஸ் முதலிலேயே தந்திருக்கலாம். அந்த அளவிற்கு கொடூரமான காட்சிகள் இன்று அரங்கேறின. பிக் பாஸ் போட்டியாளர்கள் பள்ளிச்சீருடை அணிந்து, பை மாட்டிக் கொண்டு ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ பாடலுக்கு ஆடிய காட்சிகள் எல்லாம் பார்வையாளர்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை; மனித உரிமை மீறல்.

அதிலும் இந்த ஸ்கூல் டாஸ்க் அறிவிக்கப்பட்டவுடன் ‘அப்பா சாமிகளா.. பொன்னம்பலம், மும்தாஜ், வைஷ்ணவியையெல்லாம் எல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் பார்க்கும் மனோதிடம் எனக்கில்லை. அவர்கள் ஆசிரியர்களாக வந்தால் நன்றாக இருக்கும்’ என்று மனதிற்குள் அலறிக் கொண்டே இருந்தேன். ஆனால் கடவுள் என் கோரிக்கையை கேட்காமல் இருந்தது இன்னும் கொடூரமானது. 

கவிஞர் சிநேகன், இன்று தமிழ் ஆசிரியராக வந்தது இந்தக் கொடுமையின் இன்னொரு பகுதி. (சரி.. விடுங்கப்பா.. ஒருத்தர் தெரியாம ஒருமுறை தப்பு செஞ்சிட்டா.. அதையே குத்திக்காட்டறதும் தப்புதான்!).

“ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம், போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்” என்று ‘குழந்தைகளுக்கு’ இன்று சொல்லித்தரப்பட்ட ‘உலகநீதி’ யெல்லாம் பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படைக்கே எதிரானதாயிற்றே.. சாத்தான் வேதம் ஓதலாமா?

**

30-ம் நாள் காலை. தோட்டத்தில் உலவும் அணில் ஒன்றை அவ்வப்போது காட்டுகிறார்கள். என்ன குறியீடோ?! பொன்னம்பலத்தின் புதிய ஹேர்ஸ்டைலை பிக்பாஸ் கொண்டாட முடிவெடுத்து விட்டாரோ, என்னமோ, ‘என் உச்சிமண்டைல சுர்ருங்குது” பாடல் ஒலித்தது. அது முடிந்ததும் ‘குட்மார்னிங் போஷிகா’ என்கிற குரல் தன்னிச்சையாக காதில் விழுந்தது ஒரு பிரமைதான். 

பொன்னம்பலத்தின் அருகில் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இந்தியில் பேசி பொன்னம்பலத்தைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். ‘அடிச்சு சுவத்துல தொங்க விடணும் மாதிரி இருக்கு” என்றெல்லாம் அவர்கள் புறணி பேசியது ஓவர்தான். அவர் சில முறை மன்னிப்பு கேட்ட பிறகும் அது சார்ந்த மனக்கசப்பை வைத்திருக்கத் தேவையில்லை. இவர்கள் பிறமொழியில் பேசியதால் சைரன் ஒலித்தது. ‘யார் ஆங்கிலத்தில் பேசியது?’ என்று ஒருவருக்கொருவர் விசாரிக்க, இருவரும் தங்களுக்குள் ரகசியமாக சிரித்துக் கொண்டார்கள். 

‘மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு சாப்பாடு பரிமாறிய விஷயத்தில்’ மஹத்துக்கும் வைஷ்ணவிக்கும் உருவான கசப்பு இன்று இன்னமும் பெரிதாக வளர்ந்தது. ஆனாலும் புதிய தலைவரின் பந்தா சற்று ஓவர்தான். ‘பதவி வரும் போது பணிவு வரவேண்டும்’ என்பதையெல்லாம் மறந்து விடுகிறார். ‘Great power comes with great responsibilities’ என்று வைஷ்ணவி சொன்னது இதைத்தான். 

வைஷ்ணவி படுக்கை விரிப்பை மாற்றிக் கொண்டிருக்கும் போது மஹத் சொன்னதை கேட்கவில்லை போல. ஆசாமிக்கு ‘சுர்’ரென்று கோபம் வந்து ‘நான் சொன்னதை செஞ்சுதான் ஆவணும். இல்ல தண்டனை’ என்று உத்தரவு போட “உன்னால என்ன செய்ய முடியும்? நாமினேஷன்தானே, செஞ்சுக்கோ’ என்று கோபமாக கிளம்பினார் வைஷ்ணவி. ‘ஒரு தலைவரா.. பொறுப்பா பேசணுமா இல்லையா.. என்னமோ ஆர்டர் போடறான்’ என்று பிறகு ரம்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். ‘என்ன இவ…இப்படில்லாம் பேசறா.. பதிலுக்கு நானும் ஏதாவது பேசிட்டா பிரச்னையாயிடும்’ என்று மஹத் இன்னொரு புறம் ஜனனியிடம் எகிறிக் கொண்டிருந்தார். 

‘இந்த வாரமாவது கோபப்படாம தலைவரா லட்சணமா இரு. உன் கோபம்தான் உன்னோட பலவீனம். அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதே” என்று உபதேசம் செய்தார் ஜனனி. ‘நான் மஹத் கிட்ட பேசப்போறேன். நீயும் இரு” என்று ஜனனியிடம் சொல்லிய வைஷ்ணவி பிறகு இதற்காக மஹத்தை அழைக்க.. ‘வர முடியாது’ என்று மஹத் மறுத்தது சிறுபிள்ளைத்தனம். (இது போன்ற ஆசாமிகளை மறுபடியும் பள்ளிக்கு அனுப்புவது ஒருவகையில் பொருத்தம்தான்). 

‘பாலாஜி அண்ணா’ என் கிட்ட rude-ஆ பேசறாரு” என்று இன்னொரு பஞ்சாயத்திற்கான அஸ்திவாரத்தை போட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. 

“என்னதான் நமக்குள்ள சில பிரச்னைகள் இருந்தாலும். பைனல் வரைக்கும் ஒத்துமையா இருக்கணும்; இருந்து காட்டணும். நம்மால முடியும்” என்று ஆவேசமாக மும்தாஜிடம் பேசிக் கொண்டிருந்தார் டேனி. “அது நடக்காது பேட்டா… பிக்பாஸ் அப்படில்லாம் ஒத்துமையா இருக்க விட மாட்டாரு. அதுதான் இந்த ஷோவோட கான்செப்ட். நம்ம என்ன பண்ணலாம்னா… task வர்றப்ப போட்டியா செயல்பட்டுட்டு அது முடிஞ்சுவுடனே எல்லாத்தையும் மறந்து மறுபடியும் ஒண்ணாகணும்.. ஆனா..  இங்க அந்த மெச்சூரிட்டி இல்ல.. Egotrip வேற.. ‘தான்தான் காமிரால தெரியணும்..னு ஒவ்வொருத்தரும் என்னென்னமோ பண்றாங்க.. இந்த ஐஸ்வர்யா பொண்ணு.. அப்பப்ப மூஞ்சை தூக்கி வெச்சிக்குது’’ என்று மும்தாஜ் பேசியது பெரும்பாலும் அறிவுடைமை சார்ந்தது. 

‘இளம் போட்டியாளர்கள் ரொம்பும் ஓவராக நடந்து கொள்கிறார்கள்’ என்பது பொன்னம்பலம், பாலாஜி போன்றவர்களின் ஆதங்கமும் எரிச்சலும்..  ‘இந்த முறை பிக்பாஸ் சரியா முடிவெடுத்தா.. நல்லாயிருக்கும். நான் என்னமோ கெட்டவார்த்தைல பேசினேன்னு சொன்னாங்க.. ‘வைஷ்ணவி’ எப்படி படுத்திட்டு இருந்தாங்க’ன்னு இவங்க எப்படியெல்லாம் பேசினாங்க தெரியுமா.. ரொம்ப அசிங்கம்’ என்று பாலாஜியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் பொன்னம்பலம். 

இந்த வார லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் அறிவிக்கப்பட்டது. ‘கனா காணும் காலங்கள்’ என்பது அதன் பெயர். ரித்விகா தலைமை ஆசிரியராக இருப்பாராம். சிலர் ஆசிரியர்களாக இருக்க, சிலர் மாணவர்களாக இருப்பார்களாம். மாணவர்கள் அந்த வயதுக்குரிய சேட்டைகளைச் செய்ய, ஆசிரியர்கள் அவர்களை பொறுமையாக திருத்த வேண்டுமாம். ‘ஹோ’வென்ற உற்சாகத்துடன் இந்த டாஸ்க்கை இளம் போட்டியாளர்கள் வரவேற்றார்கள். 

சீருடைகள், பைகள் தரப்பட்டன. (இந்த சைஸில் யூனிபார்ம் தைத்த டெய்லர் மிரண்டு போயிருப்பாரு!) மாணவக் கண்மணிகள் ‘Ring a Ring o' Roses’ பாடல் பாடியும், பொன்னம்பலத்தின் தலைமையில் ரயில் விளையாட்டு விளையாடியும் மகிழ்ந்தார்கள். (கடவுளே.. இன்னமும் என்னென்னமோ கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ’ என்று ‘கபாலி’ ரஜினி போல நாம்தான் நொந்து கொள்ள வேண்டியிருந்தது). டேனி வித்தியாசமான சிகையலங்காரத்தில் வந்து எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினார். மாணவ சீருடையில் ஒரவிற்காவது பொருத்தமாக இருந்தது ஐஸ்வர்யாவும் ஷாரிக்கும் மட்டுமே.

இவர்கள் எந்த வகுப்பு மாணவர்கள் என்பதை பிக்பாஸ் தெளிவுப்படுத்தியிருக்கலாம். ப்ரீகேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை விதம்விதமாக வெவ்வேறு சமயங்களில் நடித்து நம்மை இம்சைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். 

‘திருக்குழளில்.. நூத்தே முப்பத்மூணே அதிகாரங்கல் உள்ளதே’ என்று டேனி சொல்லித்தந்ததை ‘கொத்து பரோட்டா’ ஆக்கிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. (‘உள்ளன’ என்று பன்மையில் வரவேண்டும் டேனி!) “ஷாரிக் என்னை கிஸ் பண்ணிட்டான்’ என்று விவகாரமான புகாரை டேனியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் யாஷிகா.. அவர் சொன்ன இன்னொரு கமெணட் ஓவர்தான் போல. ‘கலி முத்திடுத்து.. லோகத்துல என்ன கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு’ என்று மூலையில் அமர்ந்திருந்த வயோதிக மாணவர்களான பாலாஜியும் பொன்னம்பலமும் தலையில் அடித்துக் கொண்டார்கள். “நான் பேசினதுக்கு என்ன பஞ்சாயத்துல்லாம் கூட்டினீங்க. இப்ப பாரு..” என்று அலுத்துக் கொண்டார் பொன்னம்பலம். 

இவர்கள் இப்படி விதம்விதமாக நம்மை இம்சைப்படுத்திக் கொண்டிருந்த போது கூடுதலாக வந்து சேர்ந்தார் சிநேகன். தமிழ் ஆசிரியராம். “பிள்ளைங்களா.. நல்லா படிக்கணும்.. என்ன..! என்கிற உபதேசத்தோடு வகுப்பில் நுழைந்தார். 

கலந்து அமர்ந்திருந்த ஆண்களையும் பெண்களையும் பாலின அடிப்படையில் தனித்தனியாக அமர வைத்தார். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பல்வேறு விதமான வன்முறைகளுக்கும், பாலியல் சீண்டல்களுக்கும் பாலினம் சார்ந்து காட்டப்படும் பாரபட்சங்களும் வளர்க்கப்படும் வித்தியாசங்களும் அடிப்படையாக இருக்கின்றன. பாலின சமத்துவத்தை நோக்கி நகர்வதுதான் இந்த நடைமுறைக் கொடுமைகளை கட்டுப்படுத்தக்கூடியதொரு தீர்வுகளில் ஒன்று. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் கோடுகள் களையப்பட்டு அவர்களுக்கு இடையில் உருவாகும் கண்ணியமான நட்பிலும் பழக்கத்திலும் பல புரிதல்கள் உருவாகும். பாலினம் சார்ந்த குணாதிசயங்களை, பிரத்யேகமான வலிகளை பரஸ்பரம் இரு பிரிவினரும் அறிந்து கொள்ள முடியும். 

பாலினம் சார்ந்து பிரிக்கப்படுவர்களிடையே தேவையற்ற இனக்கவர்ச்சியும், விரோதமுமே இருக்கும். இதைத்தான் இத்தனை காலமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதுதான் மெல்ல மெல்ல இதில் மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பிற்போக்குத்தனமான அசைவுகளை பிக்பாஸ் நிகழ்ச்சி உருவாக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. (கமல் நடித்த ‘நம்மவர்’ திரைப்படத்தில் இதே போன்றதொரு சூழலில் கமலின் உபதேசம் மிக முதிர்ச்சியுடன் அமைந்திருக்கும். இந்தப் பஞ்சாயத்திலும் கமல் அதைச் செய்வாரா என்று பார்ப்போம்). 

‘இப்போது சொல்லித்தரப்படும் பாடலை தினமும் காலையில் சொல்ல வேண்டும்’ என்கிற அறிவுறுத்தலுடன் ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்கிற ‘உலகநீதி’ பாடலை சொல்லித்தந்தார் சிநேகன். 
‘குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்’ என்கிற பழமொழியை மஹத்திற்கு கற்றுத்தந்தார் சிநேகன். (‘பொண்ணுக்கு’ என்று தன்னிச்சையான தவறுடன் எழுதி அங்கேயும் தன் சேட்டையைக் காட்டினார் மஹத்).

ஒவ்வொருவரும் தனித்தனியாக சொல்லித் தரப்பட்ட பாடல்களும், பழமொழிகளும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசயத்திற்கும் தவறுகளுக்கும் மிகப் பொருத்தமாக இருந்தன. (யாருப்பா.. அந்த ஸ்கிரிப்ட் ரைட்டர்?. கலக்கிட்டீங்க). இதை போட்டியாளர்களும் பிறகு உணர்ந்து கொண்டார்கள். ரம்யா இதை சரியாக விளக்கிக் காட்டினார். 

‘அகல முகல.. ‘என்ற திருக்குறள் ஐஸ்வர்யாவிற்கு. (ஒரு சமயத்தில் இது ‘முதலை’யாகி தண்ணீருக்குள் ஓடிப்போனது) ‘முகநக நட்பது’ என்கிற குறள் யாஷிகாவிற்கு. ‘துப்பார்க்குத் துப்பாய’ என்ற குறளை மமதியின் மூலம் ஏற்கெனவே அறிந்திருந்தார் மும்தாஜ். (தமிழ் எப்படில்லாம் வளருது!). “தோசையம்மா தோசை’ என்கிற குழந்தைப்பாடல் பொன்னம்பலத்திற்கு. (காலக் கொடுமை) ‘குவா குவா வாத்தை’ பெருமையுடன் சென்றாயன் சொல்லிக் கொண்டிருக்க, இதர குழந்தைகள் சிரித்து மகிழ்ந்தன. 

‘மகன் தந்தைக்காற்றும்’ என்கிற குறள் ஷாரிக்கிற்கு வந்தது.  இருந்ததிலேயே சிறப்பு இதுதான். 

மாணவக் கண்மணிகள், தங்களுக்குத் தரப்பட்ட பாடங்களை ‘பிராக்டிஸ்’ செய்து கொண்டிருந்தனர். ‘மெல்ல உடலை அசைத்து’ என்கிற வாத்துப் பாடலை ‘மெல்லிய உடலை அசைத்து’ என்று தவறாக சொல்லிக் கொண்டிருந்தார் சென்றாயன். “உன்னை வெச்சு குளிர் காயறாங்க மாப்ள.. எல்லாம் யூஸ் ஆகற வரைக்கும்தான். அப்புறம் கழட்டி விட்டுடுவாங்க” என்று ‘task’ல் இருந்து வெளியே நின்று மஹத்திற்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் பாலாஜி.

மாணவர்கள் தங்களுக்கு கற்றுத் தரப்பட்டதை ஆசிரியரிடம் பிறகு சொல்லிக் காட்டினர்.  ‘கடிச்ச பாக்குக்கு சுண்ணாம்பு தராத தங்கச்சி வழியனுப்ப கண்டனூர் வரைக்கும் வந்தாளாம்’ என்கிற பழமொழியை சரியாகச் சொல்லி விளக்கமும் சொன்னார் ஜனனி. ஐஸ்வர்யா ‘குளல்’ சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கும் போது ‘சரியா சொல்லிடு தங்கம்’ என்பது மாதிரி பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஷாரிக். 

‘கரி விற்ற காசு கருக்குமா, நாய் விற்ற காசு  குரைக்குமா? என்ற பழமொழி வைஷ்ணவிக்கு தரப்பட்டது. ‘ஒருவரின் அடிப்படைக்குணம் மாறாதது’ என்பது போல் இதற்கு விளக்கம் சொன்னார் சிநேகன். (ஆனால் – நல்வழியில் சேரும் செல்வம் நன்மையைத் தருவது போல தீயவழியில் சேர்க்கப்படும் செல்வம் தீமையைத்தான் தரும்’ என்பதுதான் சரியான பொருளாக இருக்கக்கூடும்). ‘யாகாவாராயினும்’ என்கிற குறளும் வைஷ்ணவிக்குத் தரப்பட்டது. இதற்கு அவர் பொருள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, மற்றவர்கள் – குறிப்பாக மஹத் -  நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர். 

“தோசையம்மா.. தோசை’ என்கிற பாடலை சொல்லிக் கொண்டிருந்தது ‘பொன்னம்பலம்’ குழந்தை. ‘கைவீசம்மா பாடலை’ கைவீசிக் கொண்டே சொன்னார் டேனி. தனக்கு சொல்லித்தரப்பட்ட ‘குறளை’ ஏறத்தாழ சரியான உச்சரிப்புடன் சொல்லி அசத்தினார் யாஷிகா. ‘மாம்பழமாம் மாம்பழம்’ பாடல் பாலாஜிக்கு. 

எல்லா வகுப்புகளிலும் கவனஈர்ப்பு செய்ய ஒரு முந்திரிக்கொட்டை மாணவர் இருப்பார். இங்கே அது டேனியாக இருந்தார். இளம் வயதில் மறந்து போன தமிழை நினைவுப்படுத்திய ‘ஆசிரியருக்கு’ நன்றி சொல்லி நெகிழ வைத்தார். 

மாணவர்களுக்கான மதிப்பெண்களை ‘பிக்பாஸிடம்’ தனியாக சொல்வாராம் சிநேகன். ‘தன் வயதை மறந்து மற்றவர்களுடன் இணைந்து குழந்தையாக மாறிய பொன்னம்பலத்தை’ சிறந்த மாணவராக தேர்ந்தெடுத்தார் சிநேகன். ‘தான் சொல்லித்தந்தவற்றில் ஏதேனும் பிழை இருக்கலாம்’ என்கிற பாதுகாப்பான சொற்களுடன் வகுப்பை முடித்தார் சிநேகன்.

“சாப்பிட்ட தட்டை உடனே கொஞ்சம் கழுவிடுங்க. இல்லைன்னா காஞ்சி போயிடும்’ என்று ‘எக்ஸ்ட்ரா’ வகுப்பு எடுத்தார் சிநேகன். தனது வழக்கமான ஆர்வக்கோளாறுடன் அதற்கும் விளக்கம் தந்து இம்சைப்படுத்தினார் வைஷ்ணவி. 

“நீ்ங்க நீங்களா இருங்க.. இங்க அது இல்ல.. ஒருவேளை உணவாவது ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுங்க.. இது அழகான வீடு.. நான் வாழ்ந்த வீடு.. உங்களுக்கு தரப்பட்டிருப்பது அருமையான வாய்ப்பு. நீங்களா இருந்து செயல்படுங்க இதுவொரு நல்ல அனுபவம்”. என்று சொன்ன சிநேகன்.. ‘எனக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டா… இங்க மீண்டும் நூறுநாட்கள் இருக்க தயாராக இருக்கேன்” என்று சொல்லி மிரள வைத்தார். “நாங்க. நாங்களா இல்லையா..” என்று மறுபடி மறுபடி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார் மும்தாஜ். 

‘எனக்கு வந்த குறளை நினைத்து மெர்சல் ஆயிட்டேன்’ என்று பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஷாரிக். மற்ற போட்டியாளர்களைப் பற்றியும் இவர்கள் புறணி பேசிக் கொண்டிருந்தனர். 

“இந்த வீட்ல நான்தான் அதிக முறை தலைவரா இருந்திருக்கேன்’ என்று சிநேகன் பெருமை பேசிக் கொண்டிருந்த போது “சிநேகன் .. நீங்கள் வெளியே வரலாம்’ என்று கேட்டை சாத்தினார் பிக்பாஸ். ‘வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்கிற உபதேசத்துடன் விடைபெற்றார் சிநேகன். 

“ஒத்துமையா இருங்க.. ன்னு சிநேகன் சொல்லிட்டுப் போனார் இல்லையா.. நாம சண்டை போட்டுட்டு அப்புறம் உடனே பிரெண்ட்ஸா இருந்தா அது நடிக்கற மாதிரி ஆயிடாதா?” என்று லாஜிக் கேள்வியை எழுப்பினார் டேனி. ‘அதுவும் நடிப்புதான். அவர் சொல்றதுக்காக நாம மாற வேண்டாம். ‘நாம நாமளா.. இல்லை’ன்னு அவருக்கு எப்படித் தெரியும்.. அவரு யாரு நம்மளுக்கு அட்வைஸ் செய்ய.. அவரு சொல்றத ஃபாலோ பண்றதுதான் நடிப்பு. நாமளா இருப்போம்” என்று இதற்கு விளக்கம் சொன்னார் ரம்யா.

‘லக்ஸரி டாஸ்க்’கின் அடுத்த பகுதி – ‘ஜோடிப் புறா’ (சில பேர் ஏற்கெனவே இங்க அப்படித்தானே சுத்தறாங்க பிக்பாஸூ). ரித்விகா இதன் நடுவர். ‘பிடிப்பவர்’ ஒருவரை நடுவர் தேர்ந்தெடுப்பார். பஸ்ஸர் அடித்தவுடன் வீட்டு உறுப்பினர்கள் ஜோடி ஜோடியாக இருக்க வேண்டும். தனியாக நிற்கும் நபரை ‘பிடிப்பவர்’ தொட்டால் அவர் ‘அவுட்’.  என்ற ஜாலியான விளையாட்டு. 

சப்பாத்தியில் குருமாவை ஊற்றி ஒரு கட்டு கட்டலாம் என்று மஹத் ஆவலுடன் தயாராகிக் கொண்டிருக்கும் போது பஸ்ஸர் அடித்தது. ஆளாளுக்கு பதறி அருகிலிருந்தவரை பிடித்துக் கொண்டனர். தனியாக நிற்கும் மானின் மீது பாயும் சிங்கம் போல, கொலைவெறியுடன் ஓடிய மஹத், வைஷ்ணவியை தொட்டு ‘அவுட்’ ஆக்கினார். (ஏற்கெனவே நம்ம ஊருக்கும் அவிங்களுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு!). ‘நான் அப்பவே சொல்லலை’ என்று வைஷ்ணவி சிணுங்க.. ‘நான் என்ன செய்யறது” என்றார் மஹத்.

அடுத்த ‘கேட்சர்’ டேனி. ஆளுக்கு ஆள் அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்க ‘பாத்ரூம்’ சென்று வெளியே திரும்பிய மும்தாஜை துரத்தினார் டேனி. “மும்தாஜ் உள்ளே போயிடுங்க” என்று மஹத் கத்த, பாத்ரூமிற்குள் திரும்பவும் மறைய முயன்ற மும்தாஜை உள்ளேயே சென்று ‘அவுட்’ ஆக்கினார் டேனி. இப்படியே ஜாலியாக தொடர்ந்த விளையாட்டில் வெற்றி பெற்ற ‘மஹத் மற்றும் ஷாரிக்’கிற்கு ‘சாக்லேட்’ பரிசாக கிடைத்தது. 

விளக்குகள் அணைக்கப்பட்டும் சீரியஸாக ‘ஹோம்ஒர்க்’ செய்து கொண்டிருந்தார் மும்தாஜ். (தெருவிளக்கில் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் அறிஞர்களாகியிருக்கிறார்கள்’ என்று மும்தாஜிற்கு யாரோ சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்). ‘நித்யாவை நெனக்கறீங்களா?” என்று அந்தப்பக்கம் வந்த பாலாஜியை மும்தாஜ் கேட்க.. “ஆமாம். சாப்பிடும் போது புரையேறிச்சு.. என்னைப் பத்தி நினைக்குது போல’ என்று ‘பர்பாமன்ஸ்’ காட்டினார் பாலாஜி. (பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நித்யா தந்த நேர்காணலை வாசிக்கவும்).

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘இந்த டேனியையும் வைஷ்ணவியையும் நம்பவே கூடாது..” என்று நள்ளிரவையும் தாண்டி புறம்பேசிக் கொண்டிருந்தது ஒரு குழு. ‘இந்த ஷாரிக் பய இதுவரைக்கும் யாரையும் நம்பாம தெளிவா இருக்கான்..என்ன மாதிரி இல்ல’ என்று மஹத் அடைந்த பிரமிப்புடன் இன்றைய நாள் நிறைவடைந்தது. 

‘மாணவக் கண்மணிகள்’ நாளைக்கு என்னென்ன கூத்துக்கள் அடிக்கப் போகிறார்களோ’ என்பதை நினைத்தாலே திகிலாக இருக்கிறது.