Published:Updated:

மஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா! - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்

தார்மிக் லீ

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் டேனியலுக்கு நெருக்கமான சிலரே அவருக்குப் புறம்பாகவும் பேசத் தொடங்கிவிட்டனர். நாளடைவில் இது பிரச்னையாகும் என்பது உறுதி. தொடர்ந்து, மிட்நைட் மசாலாவில் நடந்தது என்ன?

மஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா! - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்
மஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா! - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்

* டாஸ்க் முடித்துவிட்ட கலைப்பில் யாஷிகா தூங்கிக்கொண்டிருந்தார். `ஏந்திரி அஞ்சலி... ஏந்திரி' என்ற ரேஞ்சில் மஹத் அவரை எழுப்ப முயற்சி செய்துகொண்டிருந்தார். யாஷிகா, தூங்குவதுபோல் பாவலா காட்டுவது, மறைமுகமாகச் சிரிப்பது அனைத்தும் நமக்கே தெரிகிறது, மஹத்துக்கா தெரியாது. `ரூமை என்ன இவ்ளோ அழுக்கா வெச்சிருக்கீங்க, பாய்ஸ் ரூமைப் பாருங்க எவ்ளோ கிளீனா இருக்கு, பாய்ஸ்கிட்ட இருந்து கத்துக்கோங்க' எனப் பெருமை பீத்திக்கொண்டிருந்தார், மஹத். `அதான் நீ ஒரு கேர்ள் இருக்கல்ல' என டைமிங் கவுன்டர் அடித்தார், யாஷிகா. அதையும் சாமர்த்தியமாக எதிர்கொண்ட மஹத், தலையணையால் அடித்து விளையாடிக்கொண்டிருந்தார். இதை மட்டும் வேறு யாராவது சொல்லியிருந்தால் மஹத்தின் கன்னம் துடித்திருக்கும், கால் அடிச்சிருக்கும், கரன்ட் பாக்ஸ் வெடித்திருக்கும். இது என்ன பிரமாதம்... இதைவிட ஸ்பெஷல் அயிட்டம் ஒண்ணு இருக்கு. `இப்போ நீ எனக்குப் போர்வை போர்த்திவிடலைனா ஜட்டியைக் கிழிச்சிருவேன்' என மஹத்தை நூதனமாக மிரட்டிக்கொண்டிருந்தார். 

* சென்றாயன் மிகுந்த ஈடுபாடோடு வீட்டுப் பாடங்களை செய்துகொண்டிருந்தார். சிறு வயதில் தான் படிக்க முடியாததை எண்ணி வருத்தப்பட்ட சென்றாயன், திருக்குறளை மனப்பாடம் செய்து எழுதிப் பார்த்துக்கொண்டிருந்தார். இருந்தாலும் திருக்குறளை மூன்று வரிகளுக்கு இழுக்காமல், இரண்டு வரிகளிலேயே முடித்திருக்கலாம்!. முன்பைவிட தற்போது புறணிகள் அதிகமாகிவிட்டது. வீட்டின் தலைவராக மஹத் பொறுப்பேற்றதில் யாருக்கும் உடன்பாடில்லை என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. இதனாலேயே இந்த வாரம் சண்டை நிலவலாம். `இவன்லாம் ஒரு தலைவர், பண்ணாட!' என்று பாலாஜி மஹத்தைப் பார்த்து கடிந்துகொண்டிருந்தார். பாலாஜியும், ஐஸ்வர்யாவும் மார்னிங் பாடலுக்கு யார் யார் எப்படி ஆடுவார்கள் என இமிடேட் செய்துகொண்டிருந்தனர். `நான் எப்படி ஆடுவேன்?' என பாலாஜி ஐஸ்வர்யாவிடம் கேட்க, `நீ எங்க ஆடுவ... அவ்ளோ பெரிய தொப்பையை வெச்சுக்கிட்டு சும்மா வேடிக்கைதான் பார்ப்ப!' என்று பாலாஜிக்கு பல்ப் கொடுத்தார், ஐஸ்வர்யா. `சின்னப் புள்ளைங்க சகவாசம் கொலநாசம்' என்பதுபோல அங்கிருந்து நகர்ந்துவிட்டார், பாலாஜி. 

* எல்லோரும் சொல்வதுபோல் வீட்டின் என்டர்டெயின்மென்ட் பாலாஜிதான். அவர் மற்றவர்களைக் கலாய்க்கிறார், அவரை மற்ற அனைவரும் செம கலாய் கலாய்க்கிறார்கள். நித்யா இருந்த சமயத்தில் எல்லோரையும் கலாய்த்து ஜாலியாக இருந்தாலும், சில சமயத்தில் இறுக்கமாக மாறிவிடுவார், பாலாஜி. நித்யா எலிமினேட் ஆனதைத் தொடர்ந்து பாலாஜி செம குஷியாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார். பாரபட்சம் பார்க்காமல் தற்போது எல்லோரையும் சரமாரியாகக் கலாய்த்துக்கொண்டிருக்கிறார். பொன்னம்பலம், மும்தாஜைப் போன்ற சீனியர் ஆர்ட்டிஸ்ட்களை இவர் கலாய்க்கும்போது, சேலசாக முகம் சுழிக்கின்றனர். இதுவே இனி வரும் நாள்களில் பிரச்னையாக மாறலாம். 

* ஐஸ்வர்யாவுக்குக் காலில் அடிபட்டு முட்டியிலிருக்கும் ஜவ்வு கொஞ்சம் கொஞ்சமாகக் கிழிந்து வருவதாகப் பொன்னம்பலம் பயமுறுத்திக்கொண்டிருந்தார். `எனக்கும் பயங்கரமா ஜவ்வு கிழிஞ்சிருக்கு, இப்போ எனக்கு நாலாவது ஸ்டேஜ். ரஜினிகாந்துக்கு ஆபரேஷன் பண்ண டாக்டர்தான் எனக்கும் ஆபரேஷன் பண்ணார்' என்று பெருமையாகக் கூறியதோடு, ஐஸ்வர்யாவையும் எச்சரித்துக்கொண்டிருந்தார். ஐஸ்வர்யாவின் முட்டிக் காலை தொட்டுப் பார்த்து, `இப்போ உனக்கு ரெண்டாவது ஸ்டேஜ்தான். ரொம்ப டான்ஸ் ஆடாத' என்று டாக்டர் பொன்னம்பலமாக மாறி அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார். இருந்தாலும் பச்சப் புள்ளையை இம்புட்டு பயமுறுத்திருக்கக் கூடாது! 

* இதற்கு நடுவே பிக் பாஸ் ஒரு சுவாரஸ்யமான டாஸ்க் கொடுத்திருக்கிறார். `நீண்ட நாள்களாகப் பேசாமல் இருக்கும் ஓர் ஆளுக்கு, கோபம், அன்பு, வருத்தம், நன்றி... என ஏதோ ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்தி கடிதம் எழுதி, பிக் பாஸ் மூலம் தெரிவிக்கவேண்டும்' அனைவரும் பேசிக்கொள்வதைப் பார்க்கும்போது, இன்றிரவு இதுதான் டாஸ்க்காக இருக்க வேண்டும். பாலாஜி, `நான் நித்யாவுக்கு ஒரு கடிதம் எழுதணும். அந்த நாலு உணர்ச்சியில எதைத் தேர்ந்தெடுக்கலாம்னு சொல்லு' என ரித்விகாவிடம் அறிவுரை கேட்டார். ரித்விகா, `நித்யாவுக்கு நன்றி சொல்லுங்க!' எனச் சொன்னதும், வைரமுத்து ரேஞ்சுக்கு வார்த்தைகளால் வாக்கியங்களைத் தீட்டிக்கொண்டிருந்தார், பாலாஜி. அங்கிருக்கும் அனைவரும் ஸ்கூல் டிரெஸ் போட்ட 'அம்பி' விக்ரம் போல் கார்டன் ஏரியாவில் அங்குமிங்கும் நடந்துகொண்டு பயிற்சி செய்துகொண்டிருந்தனர். 

இந்த டாஸ்க்கை சொன்ன கொஞ்ச நேரத்திலேயே அனைவரின் முகமும் காதல், கோபம், அன்பு, வருத்தம் என ஏதோ ஒன்றை சொல்லத் துடிப்பதுபோல இருந்தது. ஒவ்வொருவரின் உணர்ச்சியும் என்னவாக இருக்கும்... பொருத்திருந்து பார்ப்போம்!