Published:Updated:

பிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்! #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்! #BiggBossTamil2
பிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்! #BiggBossTamil2

‘நியூ லைஃப், நியூ ஹோப்’  மற்றும் ‘குட்லைஃப்’ ஆகிய சாரிட்டி அமைப்புகளில் இருந்து ஆதரவற்ற சிறார்கள் பிக் பாஸ் இல்லத்துக்கு வருகை புரிந்ததுதான் இன்றைய நாளின் ‘ஹைலைட்’. பொதுசமூகம் அறியாத அல்லது கவனிக்க விரும்பாத பல உலகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று ஆதரவற்ற சிறார்களின் உலகம். தற்காலிமாக இதில் எட்டிப் பார்த்து விட்டு ‘ச்ச்ச்ச்… ரொம்ப பாவம்ல’ என்று உச்சுக்கொட்டிவிட்டு தங்களின் செளகரிய வாழ்க்கைக்கு திரும்பிவிடுபவர்களே நம்மில் அதிகம். மாறாக அர்ப்பணிப்பு உணர்வுடன் குறிப்பாக ஆதாய நோக்கமில்லாமல் இந்தச் சேவையில் நீண்ட காலமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவரையும் ‘கடவுள்’ எனலாம். 

ஒவ்வொரு சிறாரும் புன்னகையுடனும், இயல்பாகவும் சிறிது கலங்கியும் கூறிய கதைகள் பிக்பாஸ் வீட்டை மட்டுமல்லாது நம்மையும் கலங்க வைத்தன. அடிப்படையான வசதிகள் இருந்தும், பல்வேறு போதாமைகளுடனும் அது குறித்த அதிருப்திகளுடனும் முணுமுணுத்துக் கொண்டே வாழும் நம்முடைய வாழ்க்கை  எத்தனை ‘செளகரியமானது’ என்பதை அவர்களுடைய துயரமான பின்னணிகள் உணர வைத்தன. 

**

யுவனின் அட்டகாசமான, நாட்டுப்புற இசையில் உருவான ‘ஊரோரம் புளியமரம்’ என்கிற உற்சாகமான பாடலோடு 32-ம் நாளின் பிக்பாஸ் வீடு எழுந்தது. எத்தனை உலக நீதிகளை வாசித்தாலும் நமக்குள் இருக்கும் சில ஆதாரமான கீழ்மைகளை விட்டு நாம் விலகவே மாட்டோம் என்பதை, ‘ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல மாட்டோம்’ என்று பாடிய மறுநிமிஷமே அவர்கள் புறணி பேசுவதில்  இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. 

‘வாஸ்து’ சரியில்லாத கிச்சன் ஏரியாவில் இம்முறை ‘டீ’ பிரச்னை. இதன் விதை நேற்றே விழுந்தது. நேற்று காலையில் எழுந்தவுடனேயே வைஷ்ணவியிடம் ‘டீ’ கேட்டார், சென்றாயன். சிலருக்கு காலையில் எழுந்த மறுநிமிடமே டீ, காஃபி சாப்பிடாவிட்டால் தலைவெடித்து விடும். இந்த நோக்கில் சென்றாயனின் அவசரத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ‘உலகநீதி’ பாடலுக்கான நேரம் அது என்பதால் ‘அஞ்சே நிமிஷத்துல முடிஞ்சுடும். வந்து போட்டுத்தர்றேன்’ என்றார் வைஷ்ணவி. 

இன்றும் அதே போல் சென்றாயன் அவசரப்படுத்த வைஷ்ணவி எரிச்சல்பட்டார். “கொஞ்சம் வெயிட் செஞ்சாதான்.. டீ வரும். ஆர்டர் போடறா மாதிரி கேட்டா எப்படி?” என்று பதிலுக்கு வைஷ்ணவியும் எரிச்சல்பட்டார். 

இது சமையல் உலகத்தை அறியாத ஆண்களின் பொதுவான கெட்ட பழக்கம். ‘மாஸ்டர், ஸ்ட்ராங்கா ஒரு டீ” என்று தேநீர்க்கடைகளில் உத்தரவிடும் வழக்கம் காரணமாகவோ, என்னவோ. வீட்டிலும் கேட்ட மறுநிமிடமே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு தேநீர் தயாரிப்பதற்கு பின்னால் எத்தனை வேலைகள் உள்ளன என்பதை செய்து பார்த்தால்தான் தெரியும். 

“தங்கம்.. நான் இப்ப என்ன கேட்டுட்டுடேன்.. டீ கேட்டது ஒரு குத்தமா?” என்று சென்றாயன் ஆதங்கப்பட, ‘சென்றாயன் சரியான தொனியில் கேட்கவில்லை’ என்பதற்கான சாட்சியத்தை ‘மாமா’ பாலாஜியும் சொன்னார். (சமையல் டீமில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது ‘நல்லது”).

“அடுத்த முறை சென்றாயனை கிச்சன் டீம்ல போடணும்.. அப்பதான் கஷ்டம் தெரியும்!” என்று ரித்விகாவும் இடையில் வர, “எல்லா வேலையும் கஷ்டம்தான். நானும் பாத்ரூம் க்ளீன் பண்றேன்..அதையும் செஞ்சி பார்த்தாதான் தெரியும்” என்று சென்றாயனும் பதிலுக்கு மல்லு கட்டினார். சென்றாயனை இதுவரை பாத்திரம் கழுவும் மற்றும் பாத்ரூம் கழுவும் அணியில் மட்டுமே சேர்க்கும் ‘உளவியல்’ காரணங்களைப் பற்றி முதல் வாரத்திலேயே பார்த்தோம். 

‘சமையல் வேலையை சென்றாயன் சுத்தமாக செய்ய மாட்டார்’ என்கிற முன்தீர்மான கருத்து மற்றும் ‘சமையல் டீமில் இருந்த டேனி சுத்தமாக செய்யவில்லை’ என்று பிறகு சொன்ன மும்தாஜின் புகாரில் இந்தப் பின்னணியிலான ‘பாரபட்ச’ உணர்வுதான் இருந்தது. 

“நான்தான் கேப்டன்.. நான்தான் கேப்டன்’ என்று ‘நாட்டாமைத்தனத்துடன்’ மஹத் இந்தப் பிரச்னைக்குள் வர.. “ஓ.. இவர்தான் தலைவர்ல.. ‘ என்கிற விஷயமே அப்போதுதான் நினைவிற்கு வந்தது. வரும் சனிக்கிழமை  ," ' நான் தான் தலைவர் ; நான் தான் முதல்வர் ' னு சொல்லி மக்களுக்கு நினைவூட்டற நிலைல தான் தலைவர்கள்,  தமிழர்களையும், தமிழகத்தையும் வச்சு இருக்காங்க" என கமல் அரசியல் நையாண்டி செய்ய வாய்ப்புண்டு

**

அடுத்த பிரச்னை ‘ரேஷன்’ வடிவில் வந்தது. பழைய திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளை நிறையப் பார்த்திருத்திருப்போம்... ஒரு குடும்பத்தின் வறுமையை பார்வையாளர்களுக்கு ஆழமாகவும் உருக்கமாகவும் உணர்த்த ஒரு ‘டிராஜிடி’ காட்சியை வைப்பார்கள். ‘பாத்திரத்தில் கரண்டி உரசும் சத்தத்தோடு வீட்டின் தாய் சோற்றை சுரண்டிக் கொண்டிருப்பார். ‘இன்னும் கொஞ்சம் சோறு போடும்மா, பசிக்குதும்மா” என்று அங்குள்ள பிள்ளையொன்று அழும். பொங்கி வரும் கண்ணீரை மறைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தாய் விழிக்க, நிலைமையைப் புரிந்து கொண்டு சிலர் சாப்பிடாமல் எழுந்து செல்வார்கள். பின்னணியில் ஷெனாய் சத்தம் உரக்க அலறி உருக்கத்தைக் கூட்டும். 

பிக் பாஸ் வீட்டிலும் ஏறத்தாழ இதேதான் நிகழ்ந்தது. அரிசியின் இருப்பு குறைவாக இருந்தது. தயாரிக்கப்பட்ட சோறு பற்றாக்குறையுடன் இருக்க, ‘தியாகம்’ செய்ய ‘தாய்க்கிழவி’ ரம்யா முன்வந்தார். “காலையிலேயே “டீ”க்கு பிரச்னை பண்ண ஆளு” என்பதின் காரணமாக சென்றாயனுக்கு தனியாக உணவு எடுத்து வைத்தார்கள். 

“மற்றவர்களுக்கும் உணவு வேண்டும்’ என்கிற அக்கறை இல்லாமல் அதிகமாக சிலர் சாப்பிட்டுவிடுகிறார்கள் என்கிற புகாரை மறுபடியும் விவாதித்தார்கள். இதுவும் ஆண்கள் தரப்பில் உள்ள பொதுவான குறை. பல சமயங்களில் வீட்டுப் பெண்மணிகள் போதாமைகளுடன் தங்களின் உணவை முடித்துக்கொள்வார்கள். சமையலில் ஈடுபடுபவர்களுக்கு கடைசியில் உணவு கிடைக்காது என்பது உலக நடைமுறை. 

“காய்கறி வெட்டும் போது ஜனனிக்கு கைல வெட்டிக்கிச்சு.. அதான் கிச்சனுக்கு போனேன்” என்று பாலாஜி சொல்ல.. ‘கரெகட்டா விரலை வெட்டிக்க வேண்டியதுதானே” என்று கொடூரமான ஜோக் அடித்தார் பொன்னம்பலம். ‘ஆளே விரல் சைசுலதான் இருக்கா” என்கிற மொக்கை ஜோக்கை ஷாரிக் உதிர்த்தார். 

பாலாஜி, மஹத், ஷாரிக் ஆகிய மூவரும் ‘டேனியின்’ மீது ரகசியக் கடுப்பில் இருக்கிறார்கள் என்பது அவர்களின் புறணியிலிருந்து அறிய முடிகிறது. எல்லாவற்றிலும் சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் டேனியின் அணுகுமுறை இவர்களை எரிச்சலூட்டியிருக்கலாம். இதைப் போலவே, ‘வெள்ளந்தியாக நடிக்கும்’ சென்றாயனின் மீதும் இவர்களின் எரிச்சல் பாய்ந்தது. சென்றாயனுக்கு நெருக்கமான தோழரான பாலாஜி “எத்தனை நாளைக்கு பழைய வறுமைக் கதையையே சொல்லி ஓட்டப் போறான்” என்று புறம் பேசினார்.. 

கிச்சன் ஏரியாவில் இன்னொரு சிறு பிரச்னை ரம்யாவிற்கும் ஜனனிக்கும். “சமையல் டீமில் இருப்பவர் கிச்சன் அருகேதான் இருக்க வேண்டும். அப்போதுதான் சட்டென்று அவரை உதவிக்கு அழைக்க முடியும்” என்கிற ரம்யாவின் கருத்து நியாயமானது. இதை ஜனனிக்குப் புரிய வைப்பதற்குள் அவருக்கு தாவு தீர்ந்தது. 

‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கின் இறுதிப்பகுதி (அப்பாடா!). இந்த விளையாட்டில் செயல்பட்டதற்கு ஏற்ப ‘ரிப்போர்ட் கார்ட்’ வழங்கப்பட்டது. நேரந்தவறாமை, ஒழுக்கம், அணுகுமுறை, சுத்தம் போன்றவற்றின் அடிப்படையில் ‘ரேங்க்’ வழங்கப்பட்டது. 

மறுபடியும் ‘முயல் –ஆமை’ கதைதான். இதில் சென்றாயன் முதல் ரேங்க் பெற்றதை பலரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வெளிப்படையாகவே தங்களின் அதிருப்தியை தெரிவித்தார்கள். ‘தோற்றம் மற்றும் பின்னணி’ காரணமாக ஒருவர் உயர்பதவிக்கு வரவே முடியாது மற்றும் வரக்கூடாது என்கிற சமூகத்தின் மேட்டிமைத்தனமான உணர்வு பிக் பாஸ் வீட்டிலும் பிரதிபலிப்பதில் ஆச்சரியமில்லை.

‘சென்றாயனுக்கு’ முதல் பரிசு தரப்பட்டது குறித்தான அதிருப்தியை பிறகு ‘ஷாரிக்கிடம்’ தெரிவித்துக் கொண்டிருந்தார் டேனி. ‘அவரை ஊக்கப்படுத்துவதற்காக தந்திருக்கலாம்” என்று ஷாரிக் சொல்ல ‘அதுக்காக மத்தவங்களை கீழே இறக்கக்கூடாதுல்ல.. ‘பாவம்’ பார்த்தா பரிசு கொடுப்பாங்க.?” என்றார் டேனி. சென்றாயனுக்கு ‘திறமை’ என்கிற ஒன்று இல்லவே இல்லை என்றே அனைவரும் முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. 

“ஏம்ப்பா.. நீங்க பேசும் போது நான் அமைதியா இல்ல. பேச விடுங்கப்பா’ என்று மனத்தாங்கலுடன் ‘பிக் பாஸ்’ஸிற்கு நன்றி சொன்னார் சென்றாயன். தனக்கு வழங்கப்பட்ட மூன்றாவது ரேங்க்கை மும்தாஜால் ஏற்க முடியவில்லை. ‘ஒத்துழைக்கவில்லை’ என்கிற காரணத்திற்காக அவருக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட ‘அதிருப்தி’யை மறைத்துக் கொண்ட எரிச்சலுடன் வெளிப்படுத்தினார். ஆனால் – ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில் பிரச்னையுள்ள சென்றாயன் உடனான கூட்டணியில் மும்தாஜ் சிரமப்பட்டார் என்பதை கடந்த காட்சிகளில் பார்த்தோம். இந்த நோக்கில் மும்தாஜின் அதிருப்தியை புரிந்து கொள்ள முடிகிறது. 

முதல் பரிசிற்காக சென்றாயன் தேர்ந்தெடுக்கப்பட்டதின் காரணத்தை ரித்விகா விளக்கியும் ‘சரிப்பா.. ‘அவங்க’ பார்வைல இருந்து தேர்ந்தெடுத்திருக்காங்கலாம். அப்ப நம்ம மேல தப்பு இல்ல’ என்று சர்காஸ்டிக்காக கிண்டலடித்தார் டேனி. “எதுக்கு அவன் மேல பாவம்.. பாவம்.. னு பரிதாப்படறீங்க.. அதனாலேயே அவன் மேல கோபம் வருது… முதல்ல இதை நிறுத்துங்க” என்று சென்றாயனை வைத்துக் கொண்டே தன் கோபத்தை பாலாஜி வெளிப்படுத்த, முகம் சுருங்கினார் சென்றாயன். பாலாஜி குறிப்பிடுவது ஒருவகையில் சரிதான். அனுதாபத்தை சம்பாதிப்பது ஒருவகையில் இழுக்குதான். ஆனால் இதை வயிற்றெரிச்சலுடன் அல்லாமல் புரியும் வகையில் நிதானமாக பாலாஜி சொல்லியிருக்கலாம். 

‘கனா காணும் காலங்கள்’ எனும் லக்ஸரி டாஸ்க் முடிந்ததற்கான அறிவிப்பு வந்தவுடன் ‘ஹோ’வென்ற சத்தத்துடன் சிறார்கள் உள்ளே வந்தார்கள். அவர்களில் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறார்கள் போலிருக்கிறது. (இது தப்பாச்சே...?). வந்தவுடனேயே பலரையும் அடையாளம் கண்டு கொண்டு துள்ளிக் குதித்தார்கள். பிக்பாஸ் வீடும் அவர்களின் உற்சாகத்தை பிரதிபலித்து ஆளுக்கொரு குழந்தையை தூக்கிக் கொண்டார்கள். 

முதலில் உற்சாகம் காட்டிய பாலாஜி, பிறகு ஏனோ ஒதுங்கியே இருந்தார். ‘டல்’லாக இருப்பதால்தான் அவர் பேர் ‘டல்கோ’ என்கிற காரணத்தைச் சொல்லியது ஒரு வாண்டு. ஆடை தேர்வு என்பது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம்தான் என்றாலும், குழந்தைகளின் முன்னால் யாஷிகாவின் உடை சற்று கண்ணியமாக இருந்திருக்கலாம் என்று தோன்றிற்று. (சிறார்கள் வருவது முன்னமே அறிவிக்கப்படாமல் ‘இன்ப அதிர்ச்சியாக’ அமைந்ததோ, என்னமோ!).

‘கபாலி’ என்கிற ஒரு சிறுவனை தூக்கிக் கொண்ட டேனி.. “வாங்க. ஒளிச்சு வெச்சிருக்கற ஆப்பிள் எடுத்து தர்றேன்’ என்று அழைத்துச் சென்றார். (மனுஷன் இன்னமும் ‘திருடன்’ டாஸ்க்கில் இருந்து வெளியே வரவில்லை போலிருக்கிறது). 

எந்தச் சிறுமியின் பெயரைக் கேட்டாலும் ‘காவியா’ என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்கள். (துயர காவியம்!). வந்திருப்பவர்களிலேயே பெரிய பெண்ணாக இருந்த ‘காயத்ரி’ ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று ஜனனியைப் பாராட்ட, “நீயும்தான் அழகா இருக்கே” என்று பதிலுக்கு சொன்னது ‘தேன்பாட்டில்’. சிறுவர்களை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்ல முற்படும் போது ‘உள்ள ஜட்டி போடலையே, என்ன பண்றது’ என்று தன் மானப் பிரச்னையை சொன்னான் ஷாரிக்கின் மீது தோள் மீது அமர்ந்திருந்த சிறுவன். மஹத்தின் உதவியுடன் நீச்சல் குளத்தில் இரு சிறுவர்கள் உற்சாகமாக ஆடித்தீர்த்தார்கள். இவர்களுக்காக ‘பாயாசம்’ வரவழைத்திருந்தார் பிக்பாஸ். 

சில சிறுவர்கள் உற்சாகம் தரும் ‘கானா’ பாடல்களைப் பாடி அசத்தினார்கள். ‘ஆலுமா டோலுமா பாட்டைப் போடச் சொன்னேன்ல.. ஏன் இன்னமும்  போடலை?” என்று பிக்பாஸை மிரட்டியது ஒரு வாண்டு. ஓவியம் மற்றும் கலைப் பொருட்களுக்கான பொருட்கள் அவர்களுக்கு தரப்பட்ட குழந்தைகளின் கற்பனைத்திறன் அபாரமாக வெளிப்பட்டது. ஓர் அழகான ‘பூ’வை உருவாக்கியிருந்தாள் காவியா. அசோக் வரைந்திருந்த ஓவியம் நன்றாக இருந்தது. ‘காவிய ஸ்ரீ’ கிருஷ்ண சீதை ஓவியத்தை வரைந்திருந்தாள். இளம் வயதில் அவளது அம்மா சசிகலா கற்றுக் கொடுத்ததாம். ‘love you mom’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது நெகிழ்வடைய வைத்தது. இவர்களுக்கு உற்சாகத்துடன் உதவியது பிக்பாஸ் வீடு. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

கார்டன் ஏரியாவில் அனைவரும் வட்டமாக அமர்ந்திருக்க, ஒவ்வொருவரும் தங்களின் பின்னணிகளைப் பற்றி இயல்பாக சொல்லியது கலங்க வைத்தது. 

பாடகர் ஆக விரும்பும் காயத்ரி, இன்ஜினியர் ஆக விரும்பும் சின்னா, (எந்த இன்ஜினியர்? என்று சிறுவனிடம் ஜனனி கேட்டது அபத்தம்) வெளிநாடு செல்வதற்காக ராணுவத்தில் சேரவிரும்பும் முத்து, ஆசிரியையாக விரும்பும் கவிதா என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கிறது. ‘டாக்டர்’ ஆக விரும்பும் அசோக் தன் பின்னணியைப் பற்றி கூறும் போது தன்னிச்சையாக கண்கலங்க அந்த சோகம் நம்மையும் பற்றிக் கொண்டது. கலெக்டர் ஆக விரும்பும் ஆகாஷ், வெள்ளந்தியான சிரிப்புடன் தன் குடும்ப பின்னணியைச் சொன்னான். பிறகு இவன் பாடிய கானா பாடலுக்கு ‘இறங்கி’ குத்தி ஆடினார் பொன்னம்பலம். அருமையான காட்சியாக இருந்தது அது. ‘பால்வாடிக்கு’ செல்லும் தங்கச்சிதான் ‘எம் அம்மாவைப் பார்த்துக்கறா’ என்று சொன்னான் முத்து. 

எதற்காகவோ கலங்கிய காயத்ரியை அனைவரும் சமாதானப்படுத்தினார்கள். ‘ஸ்டோர் ரூம்’ அலார்ம் பெல் அடிக்க சென்று பார்த்ததில் குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்கள் இருந்தன. பென்சில், பேனா என்று அவர்களின் படிப்பிற்கான பொருட்கள் இருந்தன். அவற்றை குழந்தைகள் உற்சாகத்துடன் பெற்றுக் கொண்டார்கள். “எனக்கு சிவப்பு கலர் டப்பா வேணும்’ என்றான் ஒரு சிறுவன். குழந்தைகளின் உலகத்தின் களங்கமின்மைகள். 

“நாங்க நிச்சயமாக வந்து உங்களைப் பார்ப்போம்” என்று பிக்பாஸ் வீடு அவர்களுக்கு உறுதியளித்தது. பிக்பாஸ்ஸிடமிருந்து ‘பிரியா விடைக்கான’ அறிவிப்பு வர, அனைவரும் வருந்தினார்கள். சிறுவன் முன்னர் போட்ட அதட்டலுக்கு தாமதமாக எதிர்வினை புரிந்தார் பிக்பாஸ். ‘ஆலுமா டோலுமா’ பாடல் அதிரடியாக ஒலிக்க சிறார்களின் நடனத்தில் வீடே ரகளையானது. மனமே இல்லாமல் குழந்தைகளை வழியனுப்பி வைத்தார்கள். 

சிறார்களின் சிக்கலான குடும்ப பின்னணியும் அவர்களின் களங்கமில்லாத தன்மையும் ஒவ்வொரு போட்டியாளரையும் கலங்க வைத்ததில் ஆச்சரியமில்லை. ‘சிறிது காலத்திற்கு உறவுகளைப் பிரிந்திருப்பதே நமக்கு இத்தனை கஷ்டமாக இருக்கிறதே.. அவர்களின் வாழ்க்கையே அப்படித்தானே அமைந்திருக்கிறது!’ என்று ஒவ்வொருவரும் உணர்ந்து கலங்கினார்கள். வைஷ்ணவியின் உருக்கம் சற்று மிகையாக இருந்தது போல் பட்டது. ‘பிக்பாஸ்’ போட்டியில் இருந்து விலகிய பிறகு ‘அவர்களை’ சென்று பார்க்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். முத்துவின் தாயாரின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் பேசிக் கொண்டது நல்ல விஷயம். 

ஆனால் இதற்கு இன்னொருபுறமும் இல்லாமல் இல்லை. ‘காமிராவின் முன்னால் நடித்தவர்கள் யார்?” என்பதை பாலாஜி வெளிப்படையாக பேசிக் கொண்டிருந்தார். ‘டேனி காமிரா முன்பு பயங்கரமாக நடிக்கிறார்’ என்பது அவருடைய புகார். ‘ஒரு குழந்தையாவது இவங்க தத்தெடுத்துக்கட்டும்.. பார்க்கறேன்’ என்பதும் அவரது எரிச்சலான அபிப்ராயங்களில் ஒன்றாக இருந்தது. ‘ஒரு பையன் ரொம்ப அழுதிட்டு இருந்தான். என்னன்னு விசாரிச்சா… வைஷ்ணவி.. ‘உஷ்.. உஷ்..’னு என்னை அடக்குது.. “நீ அன்னை தெரசாவாகவே இரும்மா’ ன்னு நெனச்சிக்கிட்டேன்’ என்றெல்லாம் பொங்கித் தீர்த்தார் பாலாஜி. ‘ரேஷன் பிரச்னை காரணமாக இந்த வாரம் பெரிய பஞ்சாயத்து வெடிக்கும்’ என்பது அவருடைய ஆருடம்.

pi

பாலாஜி சொன்னதைப் போல மற்றவர்களுக்காக இரங்குவது போல் போலித்தனமாக நடிக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சக உயிரின் துன்பத்தைக் கண்டு தன்னிச்சையாக இரங்குவதும், உதவி செய்ய முன்வருவதும் மானிட குலத்திற்கு ஆதாரமாக இருக்கிற, இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளுள் ஒன்று. பாசாங்குகளை மீறியும் இவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். 

ஆதரவு அற்ற சமூகத்திற்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்திருந்தால் அதுவே இன்றைய நாள் நிகழ்ச்சியின் வெற்றியாக இருக்கும்.