Published:Updated:

மிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அலர்ட்! #BiggBossTamil2

மிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அலர்ட்! #BiggBossTamil2
மிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அலர்ட்! #BiggBossTamil2

இதுவரை பிக்பாஸ் வீட்டின் தலைவர்களாக இருந்தவர்களில் மோசமான தலைவர் என்கிற பெருமையை மஹத்துக்குத் தரலாம். ‘அவர்தான் தலைவர்’ என்பதை நாம்தான் அடிக்கடி நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு நினைவில்லை. அந்த அளவுக்குப் பொறுப்பற்று இயங்கினார். 

இன்று பகலில் தூங்கி ‘லக்ஸரி மதிப்பெண்ணை இழக்கச் செய்து மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியது, பிரச்னைகளை விசாரித்து தீர்க்கும் பொறுப்பில் உள்ளவரே மற்றவர்களுடன் இணைந்து புறம் பேசி பிரச்னைகளை வளர்த்துக்கொண்டிருந்தது, ‘எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது” ‘முணுக்கென்றால் கோபப்படுவது’, வெட்டி அதிகாரம் செய்வது.. என்று… அவரது சாதனைகளை, சினிமா தொடங்குவதற்கு முன் போடப்படும் பத்து நிமிட நியூஸ் ரீல் வீடியோ அளவுக்குப் `பெரும்படமாக’ பதிவு செய்யலாம். ஆனால், அது முழுநீள சினிமா அளவுக்கு நீண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

இந்த வாரத்தின் இன்னொரு மோசமான போட்டியாளர் பாலாஜி. ‘கோபப்பட மாட்டேன், கெட்ட வார்த்தை பேச மாட்டேன்” என்று திருந்திய பாலாஜியாக அவர் பாவனை செய்தாலும், இது குறித்து நித்யாவுக்கு வாக்களித்திருந்தாலும் கூட தனது துர்குணங்களிலிருந்து அவரால் வெளியே வரவே முடியவில்லை. “இப்ப.. பாரேன்… ஜீவா பல்லைக் கடிப்பான்.. இப்ப பாரேன்.. அவனை அடிக்கப் போவான்” என்கிற ‘பசங்க’ பகோடாவாக மாறி மஹத்தைத் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தார். டேனியின் மீது அதிகமாகவும் அதற்கு அடுத்த நிலையில் வைஷ்ணவியின் மீதும் இவருக்குக் கடுப்பு அதிகமாக இருக்கிறது. “த்தூ.. ‘ என்று துப்பி..எரிச்சலுடன் புறம்பேசுமளவுக்கு அவர்களின் மீது ஆத்திரத்தில் இருக்கிறார். பழிவாங்கி விட்டாரோ என்று தோன்றினாலும், டேனி இவரை சிறைக்கு அனுப்ப முடிவெடுத்தது ஒருவகையில் நல்ல தேர்வு. 

‘நிமிர்ந்து நில்.. துணிந்து செல்” என்கிற பகுதியின் மூலம் 360 டிகிரியில் கேட்கப்பட்ட கேள்விகளின் வாயிலாக, போட்டியாளர்களின் மனதின் உள்ளே புகைந்து கொண்டிருந்த வருத்தங்கள், மனத்தாங்கல்கள் இன்று வெளியே வந்தன. அபூர்வமாக புத்திசாலித்தனத்துடன் பேசும் மஹத், ‘வீடு ரெண்டு பிரிவா இருக்கிறது இன்னிக்கு கன்பர்ஃம் ஆயிடுச்சு’ என்று சொன்னது இதைத்தான். ஆனால் இரண்டு பிரிவுகள் அல்ல. உடைந்த அரசியல் கட்சி மாதிரி பல பிரிவுகள், குழப்பங்கள்… இருக்கின்றன. இதற்கு இடையில் இங்கும் அங்குமாக சடுகுடு ஆடும் சாமர்த்தியக்காரர்களும் இருந்தார்கள். (உதா: ஜனனி).

**

32-ம் நாளின் சம்பவங்கள் இன்னமும் முடியவில்லை. 


மஹத்துடன் புறணி பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. “குழந்தைங்க மிச்சம் வெச்ச பாயாசத்த.. மனசாரச் சாப்பிட்டது.. நீ.. நான்.. ரித்விகா.. சென்றாயன்.. ஷாரிக்.. மட்டும்தான்’ என்று பூடகமாக ஏதோ ஒன்றை உணர்த்த முயன்றார் பாலாஜி. மரமண்டை மஹத் முதலில் இதைப் புரிந்துகொள்ளாமல் பிறகு புரிந்துகொண்டு ‘தெய்வமே.. நீங்க எங்கேயோ போயிட்டீங்க…’ என்று மிகையாக உணர்ச்சிவசப்பட்டார். குழந்தைகளிடம் ‘பாசம்’ காட்டிய விஷயத்தில் மற்றவர்கள் போலியாக இருக்கிறார்களாம். இவர்கள் மட்டும்தான் உண்மையான ‘பாயசமாக’ இருக்கிறார்களாம். இதுதான் பாலாஜி சுட்டிக்காட்ட விரும்பியது போல.

வீட்டின் உணவுப்பற்றாக்குறை பற்றி பாவனையாக கவலைப்பட்டுக்கொண்டிருந்தார் மஹத். ‘என் ஆட்சியில் மக்கள் எவரும் பட்டினியால் வாடக் கூடாது. தகவல்களை உடனுக்குடன் அனுப்புங்கள்’ என்று ஒரு நாட்டின் மன்னரைப் போல் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் – ‘மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்பதைக் கேட்டு விசாரித்துத் தெரிந்துகொள்ளும் மன்னர்களின் அதே பொறுப்பற்ற தனம் இவரிடமும் இருக்கிறது. இவரை யாரும் மதிப்பதில்லையாம். இந்தப் பிரச்னையை ‘டேனி’யிடம் கொண்டு செல்கிறார்களாம். ‘இப்பத்தான் மாப்ள கரெக்டா பாயின்டை பிடிச்சே” என்று மஹத்தை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் பாலாஜி. 

ஏதோ ஒரு சமயத்தில் டேனி மஹத்தை பின்னால் இருந்து அலட்சியமாக ‘ஒழுங்கு’ காட்டி விட்டாராம். அந்தக் காட்சியை நடித்துக் காட்டி மற்றவர்களிடம் புலம்பிக் கொண்டேயிருந்தார் மஹத். இதைப் பற்றி அவர் பாலாஜி கும்பலுடன் புறணி பேசிக் கொண்டிருந்த போது, எச்சரிக்கை ஒலி போல விசிலடித்துக் கொண்டே அங்கு வந்தார் டேனி. 

“எதுவா இருந்தாலும் நேரா பேசணும்” என்று மஹத் எதையோ முணுமுணுக்க.. “என்ன மச்சான்.. என்னைப் பத்தி மேட்டரா.. நான் எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் சொல்லிடுவண்டா.. பின்னாடிலாம் பேச மாட்டேன்” என்று டேனி மஹத்தை இடது கையால் அலட்சியமாகக் கையாண்டார். மீண்டும் அந்தப் பிரச்னையை மென்று விழுங்க்ச் சொல்ல முயன்ற மஹத்..  பிறகு “சரி..விடு” என்று அப்படியே பம்மி பின்வாங்கினார். 

“பாலாஜி வைரஸ் மாதிரி. நல்ல வைரஸ் இல்ல. இதை க்ளீன் செஞ்சே ஆகணும்” என்ற இதைப் பற்றி மும்தாஜிடம் பிறகு புறணி பேசிக் கொண்டிருந்தார் டேனி. தூண்டுதலின் காரணமாக ஒரு நட்பில் விரிசல் உருவாகிறது என்பதற்கான சிறந்த உதாரணம், டேனி மற்றும் மஹத். 

33-ம் நாள் காலை 08:00 மணி. ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் தீம் மியூசிக் ஒலித்தது. உணர்ச்சியை ஆழமாகத் தட்டியெழுப்பும் ராஜாவின் அற்புதமான இசை இது. தவிலும் நாதஸ்வரமும் இணைந்து ரகளையாக ஒலிக்கும் இந்த இசையைக் கேட்கும் போது ஆவேசம், நடுக்கம், துணிச்சல், அச்சம்.. என்று எதிரெதிர் முரண்களில் கலவையாக பல உணர்ச்சிகள் உள்ளே பொங்கி வரும். ‘கரகாட்டம்’ போல் இந்தப் பாடலுக்கு ஆடி மகிழ்ந்தார் பொன்னம்பலம். 

‘சித்திரம் பேசுதடி’ என்றொரு விளையாட்டு. தரப்படும் காமிரா மூலம் போட்டியாளர்கள் ஐந்து புகைப்படங்களை தங்களின் நண்பர்களோடு எடுக்க வேண்டும். அதில் நெருக்கமான நண்பர் யார் என்பதை ‘போகஸ் செய்து புகைப்படம் எடுத்து அதற்கான காரணங்களை பிறகு சொல்ல வேண்டும். 
 ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். (ஒரு நல்ல செல்ஃபியை எடுப்பது எப்படி என்பதை கற்றுத் தருவதற்கான பயிற்சிக்கூடங்கள் ‘நியாயமான கட்டணத்துடன்” இனி வரலாம்.. அந்த அளவுக்கு மக்களிடம் செல்ஃபி மோகம் இருக்கிறது.).

வீட்டின் தலைவராக ‘பொறுப்புடன்’ தூங்கிக் கொண்டிருந்தார் மஹத். கூட உறங்கிக் கொண்டிருந்த ஷாரிக்கையும், யாஷிகாவையும் அவர் கட்டுப்படுத்தவில்லை. (இதற்காக பின்னர் 600 மதிப்பெண் லக்ஸரி பட்ஜெட்டை இழந்தார்கள்). தயிர் சாதத்தைக் கையால் பிசைந்து உருவாக்கியது ஐஸ்வர்யாவுக்குப் பிரச்னையாம்.. (உங்களையெல்லாம்… !)

எடுக்கப்பட்ட புகைப்படங்களில் தனக்குப் பிடித்தமான, நெருக்கமான நண்பரைப் பற்றி விளக்கும் பகுதி வந்தது. முதலில் வந்தவர் மஹத். வந்த விஷயத்தைப் பற்றிப் பேசாமல்.. “நாம. இங்க மனிதாபிமானத்தை மறந்துடறோம்.. பொறாமை, Ego, attitude-லாம் அதிகமாயிடுச்சு. நேர்மையா விளையாடி ஜெயிக்கப்பார்க்கணும். மத்தவன் முதுகுல சவாரி செஞ்சு ஜெயிக்கப் பார்க்கக் கூடாது’ என்று மனதின் புகைச்சலுடன் சம்பந்தமில்லாமல் அனத்திய பிறகு விஷயத்துக்கு வந்தார். 

அவருடைய நெருக்கமான நண்பர் `ஜனனி’யாம். இவருக்குப் பிரச்னை என்றால் ஜனனி அழுவாராம். (அப்ப ரெண்டு பேருக்கும் பிரச்னைன்னா யார் அழுவா?!). அவர் எங்கேயும் புறம் பேசி, மத்தவங்கள கேவலமாப் பேசி இவர் பார்த்ததில்லையாம். 

வைஷ்ணவி, ரம்யாவைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யமில்லை. ‘எனக்கு அம்மா மாதிரி.. அவ்ளோ கேர் எடுத்துக்கறா” என்று நெகிழ்ந்தார். ஐஸ்வர்யா மீதான ஈர்ப்பு ஷாரிக்குக்குக் குறைந்து விட்டதோ, என்னமோ.. அவர் தன் நெருங்கிய நண்பராக தேர்ந்தெடுத்தது மஹத்தை. ‘சகோதரன் மட்டுமல்ல. நல்ல நண்பன் கூட.. வெளியில போனாலும் பிரிய மாட்டோம்” என்றார். (வெளங்கிடும்!).

ஐஸ்வர்யா, யாஷிகாவையும் யாஷிகா, ஐஸ்வர்யாவையும் பரஸ்பரம் தேர்ந்தெடுத்துக் கொண்டதில் ஆச்சர்யமில்லை. ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன’ என்பது போல் இவர்கள் இருவரும் இணைந்துதான் வீட்டில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மும்தாஜ், ‘பேட்டா’ ஷாரிக்கைத் தேர்ந்தெடுத்ததிலும் ஆச்சர்யம் இல்லை. (பாலூட்டி வளர்த்த கிளி அவ்வப்போது கொத்தினாலும் மும்தாஜ் பாசத்தை விடுவதாக இல்லை). 

பொன்னம்பலம் தேர்ந்தெடுத்தது ஜனனியை. ‘வீட்ல pet வளர்ப்போம்ல அது மாதிரி என்றார். (இது பாசமா, வசையா?!) “என் பொண்ணு மாதிரி.. என்ன வேணா கிண்டல் பண்ணுவேன். எவ்ளோ அடிச்சாலும் தாங்குவா” என்று ஜனனி குறித்து உருகினார் சித்தப்ஸ்.

சென்றாயன், பாலாஜியைத் தேர்ந்தெடுப்பார் என்று பலர் யூகித்திருக்கலாம். சென்றாயன் என்னதான் பாலாஜியோடு பாசத்தோடு பழகினாலும் பாலாஜி சென்றாயனை நுட்பமாகவும், நேரடியாகவும் அவமதிப்பதில் கில்லாடியாக இருக்கிறார். இது தொடர்பான மனவருத்தம் சென்றாயனுக்கு ஏற்பட்டிருக்கலாம். எனவே, அவர் தேர்ந்தெடுத்தது டேனியை. 

டேனியும் சென்றாயனைத்தான் தேர்ந்தெடுத்தார். ‘நாங்க பசியோட.. சினிமா வாய்ப்புக்காக எங்கெங்கயோ சுத்தியிருக்கோம். ஆனா ஒருத்தரோட ஒருத்தர் குறுக்கிட்டதில்லை. குறுக்கிடவும் மாட்டோம்” என்று பாசம் காட்டினார் டேனி. 

ஜனனி தேர்ந்தெடுத்தது பொன்னம்பலத்தை. விக்ரமன் திரைப்படக் காட்சிகள் போல இருவரும் பாசத்தைப் பரஸ்பரம் பிழிந்து கொள்கிறார்கள். எங்க போயி முடியப் போகுதோ! 

ரித்விகாவும் பொன்னம்பலத்தைத் தேர்ந்தெடுத்து ஜனனிக்கு டஃப் பைட் கொடுத்தார். ‘கஷ்டமா இருந்தது’-ன்னு ஒருமுறையும் பொன்னம்பலம் ஐயா சொன்னதில்லையாம். ‘வளவள –ன்னு பேசறதுதான் குறை” என்றார் ரித்விகா. தங்கள் தந்தையின் பிம்பங்களை பொன்னம்பலத்தின் வழியாக இவர்கள் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது. இவர்களின் பாராட்டு மழையில் வாயெல்லாம் பல்லாக அமர்ந்திருந்தார் பொன்னம்பலம். 

பாலாஜி, அங்கு இல்லாத நித்யாவைத் தேர்ந்தெடுத்தார். “நீ இல்லைன்னாலும். இருக்கற மாதிரியே இருக்குது. என்னைப் புரிஞ்சிக்கிட்டவ அவ மட்டும்தான்” என்று உருகினார். (யப்பா.. சாமி.. ரீல் அந்து போச்சி!). ரம்யா, ஜனனியைத் தேர்ந்தெடுத்தார். ரெண்டு பெரும் ஒரே மாதிரி யோசிப்பாங்களாம். 

**

லக்ஸரி டாஸ்க் மதிப்பெண் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 2600 மதிப்பெண். Task-ன் போது சிலர் கதாபாத்திரங்களை மறந்து நடந்ததால் 200 மதிப்பெண்ணும், மஹத், யாஷிகா, ஷாரிக் ஆகியோர் எச்சரிக்கப்பட்ட பிறகும் பகலில் தூங்கியதால் 600 மதிப்பெண்ணும்  குறைக்கப்பட்டன. எனவே.. மீதமுள்ள 1800 மதிப்பெண்ணுக்கு லக்ஸரி பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம். 

வழக்கம் போல் அவரவர்களுக்குத் தேவையான பொருள்களை பட்டியலில் இணைத்து விட சிலர் துடித்தார்கள். இது சார்ந்த அதிருப்திகளும் முணுமுணுப்புகளும் வெளியே வந்தன. தன்னால் மதிப்பெண் போனதற்கு பாவனையாக மன்னிப்பு கேட்டார் மஹத். 

பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் உள்ள அதிருப்தி, இது தொடர்பாக மும்தாஜ் மற்றும் டேனியின் மீது ஏற்பட்ட எரிச்சல் ஆகியவற்றை வெளிப்படையாக சென்றாயன் மற்றும் பொன்னம்பலத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. எரிச்சலின் உச்சத்தில், விஜய்காந்த் ஒருமுறை ஊடகங்களை விமர்சித்து செய்த சர்ச்சைக்குரிய செயலை செய்யவும் அவர் தயங்கவில்லை. (த்தூ….).

அடுத்த பகுதி சுவாரஸ்யமானது. ‘நிமிர்ந்து நில், துணிந்து செல்’. இந்த வார நாமினேஷனில் உள்ளவர்களிடம், பிக்பாஸ் கேட்டிருக்கும் ஐந்து கேள்விகளை டேனியல் கேட்பார். இதைப் போலவே நாமினேட் ஆகாத இதர போட்டியாளர்களும் மூன்று கேள்விகளைக் கேட்பார்கள். இதில் துணிச்சலாகவும் நேர்மையாகவும் பதில் சொல்பவருக்கு ‘சூப்பர் பவர்’ ஒன்று அளிக்கப்படும். நேர்மையற்ற முறையில் பதில் சொல்பவர், உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார். இந்த முடிவை டேனி எடுப்பார். 

தங்களுக்கு தரப்பட்டிருக்கும் வாய்ப்பான ‘மூன்று கேள்விகள்’ தொடர்பாக என்ன கேட்கலாம் என்பதற்காக பயங்கரமான முன்தயாரிப்புகளை யாஷிகாவும் ஷாரிக்கும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். இதற்காக மும்தாஜையும் கூட்டுச் சேர்த்தனர். (அவர்தான் புத்திசாலித்தனமான கேள்விகளை கேட்பாராம்!).

இதற்கென வடிவமைக்கப்பட்டிருந்த அரங்கில் நிகழ்ச்சி துவங்கியது. முதலில் அழைக்கப்பட்டவர் ரம்யா. (கடந்த வாரத்தில் தலைவர் பதவியை சரியாக கையாளாததால் நேரடியாக எவிக்ஷன் பட்டியலில் வந்திருக்கிறார்).

“தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டாலும் இன்னமும் வெளியேற்றப்படாமல் இருக்கிறாரே.. என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்? அதற்கான காரணங்கள் என்ன?” என்ற கேள்வியை முன்வைத்தார் டேனி. “பொன்னம்பலம் ஐயாதான்.. அவர் சில ‘தப்பான’ விஷயங்களுக்காக குரல் கொடுத்திருக்கார். எனவே மக்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தர்றாங்க போல” என்று பதிலளித்தார் ரம்யா. 

“நாமினேஷன் ஆகாதவர்களில்.. யார் உங்கள் இடத்தில் இருந்தால் சரியாக இருக்கும்?” என்கிற கேள்விக்கு ‘வைஷ்ணவி’ என்று பாதுகாப்பாக பதில் சொன்னார் ரம்யா. 

இதைத் தொடர்ந்து நாமினேஷன் பட்டியலில் இல்லாதவர்கள் மூன்று கேள்விகளைக் கேட்கலாம் என்கிற வகையில் மஹத் துவங்கினார். “இந்த வீட்டில் யாராவது எதையாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கருதினால் யாரைச் சொல்வீர்கள்?” என்ற கேள்விக்கு, “மும்தாஜ். சில விஷயங்களுக்கு ரொம்ப அடம் பிடிக்கறாங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ரம்யா. மும்தாஜூம் இதற்கு வேறு வழியில்லாமல், அடம் பிடிக்காமல் சிரித்தார். 

.

“நீங்கள் ஒருவேளை ‘save’ ஆனால், அதற்குப் பிறகு என்ன மாற்றம் உங்களிடம் இருக்கும்?” என்ற கேள்வி ஷாரிக்கிடமிருந்து வந்தது. "தலைவர் பதவியை நான் சரியாக கையாளவில்லை. அது சார்ந்த குற்றவுணர்ச்சி இருக்கிறது. இனி உணர்ச்சிவயப்படாமல் முடிவெடுப்பேன்” என்றார் ரம்யா. 

இதைத் தொடர்ந்து வந்தார் ‘மக்களின் ஹீரோ’ பொன்னம்பலம்.. "எதனால் உங்களை நாமினேட் செஞ்சிருப்பாங்கன்னு நெனக்கறீங்க” என்கிற பிக்பாஸின் கேள்வியைக் கேட்டார் டேனி. "உடல் பலத்துல வீக்கா இருக்கேன். ஒரு காலத்துல ‘சம்மர் சால்ட்’ அடிச்சவன் இப்ப இங்க மேடைல ஏர்றதுக்கே கஷ்டப்படறேன். என்னால முடிஞ்ச அளவுக்கு டாஸ்க்குகளை பண்ணுவேன். இருந்தாலும் என் உடல்நிலை காரணமாக மற்றவர்கள் நாமினேட் செய்திருக்கலாம்” என்று தன் யூகத்தைச் சொன்னார். 

“யார் யார் எல்லாம் உங்களை நாமினேட் செய்திருப்பார்கள்.. யூகித்து காரணங்களுடன் சொல்ல முடியுமா?” என்பது அடுத்த கேள்வி. “யாரு வேணா பண்ணியிருக்கலாம்.. நான் யாருக்கும் எதிரி இல்லை" என்கிற மந்தமான பதிலைச் சொன்னார் பொன்ஸ். “இதர நாமிஷேன்தாரர்களில் யார் வெளியேறினால் நல்லது?” என்கிற அடுத்த கேள்விக்கு "ஒரு குடும்பஸ்தர் என்கிற முறையில் யோசித்து சொன்னால் பாலாஜியை சொல்வேன். இதனால் அவருடைய குடும்பத்திடம் அவர் சென்று சேர முடியும்” என்று சொன்னதும், மகிழ்ச்சியா, சங்கடமா என்று இனங்காண முடியாத பாவம் பாலாஜியின் முகத்தில் பொங்கியது. 

"வாரா வாரம் நாமினேட் ஆனாலும் உங்க ஃபேன்ஸ் (?!) உங்களைக் காப்பாத்திடறாங்க.. உங்களுக்கு வெளில போகணும்னு இருக்கா.. இல்ல.. இருக்கணும்னு இருக்கா?” என்ற கேள்வியை வைஷ்ணவி கேட்டார். “எல்லாம் மாயை.. எனக்கு இரண்டும் ஒன்றுதான்” என்று தத்துவார்த்தமாக பதில் சொன்னார் பொன்னம்பலம் சுவாமிகள். 

அடுத்து வந்தவர் பாலாஜி. முதல்வன் படத்தின் அர்ஜூன் – ரகுவரன் நேர்காணல் காட்சி போல டேனியும் பாலாஜியும் ஒருவரையொருவர் நுட்பமாக வாரிக் கொண்டார்கள். ``எதனால உங்களை நாமினேட் செஞ்சிருப்பாங்க?” என்ற கேள்விக்கு ``ஒண்ணு, அடிக்கடி கோபப்படுவேன். ரெண்டாவது..பின்னாடி ஏதாவது சொல்லிடாறாரான்னு மத்தவங்க நெனக்கலாம்” என்றார். “ஆனா அது நகைச்சுவையாத்தான் இருக்குமே தவிர, மத்தவங்களை புண்படுத்தாமல்தான் இருக்கும்” என்றார். (அப்படியா! சென்றாயனிடம் விசாரித்தால் தெரிந்து விடும்).

“தொடர்ந்து நாமினேட் ஆனாலும் இன்னமும் எவிக்ட் ஆகாமல் இருக்கும் நபரை காரணங்களுடன் சொல்ல வேண்டும்” என்பது அடுத்த கேள்வி. “மும்தாஜ்தான். சில விஷயங்களை அவங்களால செய்ய முடியல.. அவரை அவர் கும்பிடற அல்லாவும் பிரேயரும்தான் காப்பாத்துதுன்னு நெனக்கறேன்.. (யா.. அல்லா…!) அவங்க கிட்ட பேசறதுக்கு மத்தவங்க தயங்கறாங்க” என்றார் பாலாஜி. 

“நாமினேட் ஆகாமல் இருக்கும் மற்றவர்களில், எவர் உங்கள் இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு “நீங்க இங்க வந்து உட்காருங்களேன்” என்று நாடகத்தனமாக இருக்கை மாறி அமர்ந்தார் பாலாஜி. (சிம்பாலிக்கா சொல்றாராமாம்!). “உங்க நகைச்சுவை புண்படுத்தும் விதத்தில் இருக்கிறது. டேனி நம்ம கூட இருந்தா சேஃப்-ன்னு சிலர் நெனக்கலாம்.” என்று டேனி மீதிருந்த புகைச்சலை வெளிப்படையாக பதிவு செய்யும் வாய்ப்பை பாலாஜி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். 

“யாரு இங்க fake-ஆ இருக்கா?” என்ற கேள்வியை ரித்விகா கேட்க, அதற்கும் டேனியை கைகாட்டினார் பாலாஜி. அடுத்தது வைஷ்ணவி. ‘ஆளுக்கு ஏற்ற மாதிரி சட்டென்று மாறி பேச ஆரம்பித்து விடுகிறாராம்’. 

“இதுவரைக்கும் நாமினேட் ஆகாதவங்கள்ல.. அடுத்த வாரம் எந்த ரெண்டு பேரை நாமினேட் செய்வீங்க?” என்று மஹத் கேட்டதற்கும் டேனியை சுட்டிக் காட்டினார் பாலாஜி. ரொம்ப நாள் ஆசையாம். இன்னொரு நபர் ‘ரித்விகா’ அவருக்கு வீட்டு ஞாபகம் வந்து விட்டதாம். தன்னுடைய வாய்ப்பாக பாலாஜியிடம் ஒரு கேள்வி கேட்டார் டேனி. “பின்னாடி பேசறத நிறுத்திட்டீங்களா?” என்றதற்கு முதலில் மழுப்பிய பாலாஜி.. “ம்.. பேசிக்கிட்டுதான் இருக்கேன்” என்றார் கெத்தாக. 

அடுத்து மேடைக்கு வந்தவர் ஜனனி. அதே கேள்விதான். ‘யார் நாமினேட் செய்திருப்பீர்கள், காரணம் என்ன?’ “என்னை lazy-ன்னு சிலர் சொல்லலாம். ஆனா நான் அப்படியில்ல. பகல்ல தூங்க மாட்டேன். திருடன் –போலீஸ் டாஸ்க்ல கூட ஒருமணிநேரம்தான் விலகியிருந்தேன். Emotional stake. எனக்கு ஐந்து ஓட்டுக்கள் வரும்-னு நெனச்சேன். நாலுதான் வந்தது” என்ற ஜனனி.. ஐஸ்வர்யா, யாஷிகா, ஷாரிக், மும்தாஜ் என்று சம்பந்தப்பட்ட நபர்களை யூகம் செய்து விட்டு ‘நீங்களும் இருக்கலாம்” என்று டேனியையும் கைகாட்டினார். (டேனி நீங்கலாக, ஜனனியின் யூகம் மிகச்சரியானது.). 

“உங்க இடத்துல யார் இருந்திருக்கணும்?” என்ற கேள்விக்கு டேனியையே சுட்டிக் காட்டினார் ஜனனி. “உங்க கூட அதிகம் கனெக்ட் ஆகலை. நீங்க ஃபேக் ஆக இருக்கீங்கன்னு தோணுது. ‘யார் பைனலுக்கு வருவா’ன்னு மதிப்பிட நீங்கள் யார், அதுக்கு உங்க தகுதி என்ன?” என்று நேரடியாக குற்றம் சாட்டினார் ஜனனி. 

“பிக்பாஸ் வீட்டை விட்டு போனா.. யாரைக் கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டீங்க?” என்று வில்லங்கமான கேள்வியைக் கேட்டார் வைஷ்ணவி (டிராகுலாவால் கடிக்கப்பட்டவர்கள், தானும் டிராகுலாவாக மாறுவது போல. ஒவ்வொருவருமே பிக்பாஸ் போல குயுக்தியானவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது). இதற்கு யாஷிகா கூட்டணியை ஜனனி குறிப்பிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. “அவங்க கூட இன்னமும் கனெக்ட் ஆகலை”

கடைசியாக மேடையேறியவர் ஐஸ்வர்யா.. “ஜனனி, பாலாஜியண்ணா., ரித்விகா, வைஷ்ணவி, பொன்னம்பலம் ஆகியோர் தன்னை நாமினேட் செய்திருக்கலாம் என்று கூறிய ஐஸ்வர்யா, (இவரின் யூகமும் ஏறத்தாழ சரியானது) “நான் அவங்க கூட க்ளோஸ் இல்ல.. நான் lazy-ன்னு அவங்க நெனச்சிருக்கலாம்’ என்று தனது பிரத்யேகமான உச்சரிப்புடன் சொன்னார். ``யார் வெளியேற்றப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு “பொன்னம்பலம் சார். அவங்க லைஃப் செட்டில் ஆயிடுச்சு.. அவங்களுக்கு ஃபேன்ஸ் இருக்கும். மத்தவங்களுக்கு சான்ஸ் கிடைக்கணும்” என்று பெருந்தன்மையாக சொன்ன ஐஸ்வர்யாவின் பதிலைக் கேட்டு பொன்னம்பலத்தின் மனதில் என்ன ஓடியிருக்கும் என்று தெரியவில்லை. 

“நாமினேட் ஆனாலும் இன்னமும் வெளியேறாமல் இருக்கும் நபர்” என்பதற்கு ‘சென்றாயனை’ சுட்டிக் காட்டினார் ஐஸ்வர்யா. “அவங்க எனக்குப் புரியலை.. ஏதோவொரு ஸ்டைல்ல வாக் பண்றாங்க. பேசறாங்க.. ரியல் லைஃப்ல இந்த ஸ்டைல் வரக்கூடாது” (ஸ்டைலு ஸ்டைலுதான்’ என்று சென்றாயன் இதற்குப் பெருமைப்படலாமா, வேண்டாமா!).

“யாஷிகா அல்லது ஷாரிக்.. இருவரில் ஒருவரை உங்களோடு அழைத்துப் போகலாம் என்று பிக்பாஸ் கூறினால், யாரை அழைத்துச் செல்வீர்கள்?’ என்ற வில்லங்கமான கேள்வியை முன்வைத்தார் சென்றாயன். (இவருக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு.. பாருங்களேன்!) “யாஷிகா’ என்று தயங்காமல் கூறினார் ஐஸ்வர்யா. “யாஷிகாவுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க.. அதனால் அவங்களை கூட்டிட்டு போயிடுவேன். ஷாரிக்கிற்கு இன்னமும் ஃபேன்ஸ் வேணும்” என்ற ஐஸூவின் உள்ளே இருந்த பாசமும் காதலும் தன்னிச்சையாக வெளியே வழிந்து ஓடியது. 

“இங்க யார் fake-ஆ இருக்காங்க.. இரண்டு பேரைச் சொல்லணும்” என்கிற கேள்விக்கு முதலில், தலைமை ஆசிரியை’ ‘ரித்விகா’ வை சுட்டிக் காட்டினார் ஐஸ்வர்யா.. ‘ஃபேக்-குன்னு சொல்ல மாட்டேன்.. ஆனா அவங்க கேம் பிளான் என்னன்னே புரியலை.. மெளடீகமா இருக்காங்க’ என்பது போல் சொன்ன ஐஸ்வர்யா, அடுத்து கை காட்டியது.. ஜனனியை. ‘பின்னாடி பேச மாட்டாங்க.. இருந்தாலும் அவங்க வெளில வந்து பேசணும்.. என்ற ஐஸ்வர்யாவின் அவதானிப்பு மிகக்கூர்மையானது. ‘எல்லோருக்கும் நல்லவர்’ என்கிற மிக பாதுகாப்பான விளையாட்டை ஜனனி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதை கவனமாக பார்த்தவர்கள் உணர முடியும். (கடந்த சீஸன் கணேஷ் வெங்கட்ராமன் போல).

“யார் உங்கள் மனதைப் புண்படுத்தியவர்?” என்கிற கேள்விக்கு ‘ஷாரிக்’ என்று தயங்காமல் சொன்னார் ஐஸ். “முதல் ரெண்டு வாரங்கள்.. ஸ்வீட்டா இருந்தாங்க.. அதுக்கப்பறம் மாற்றங்கள் தெரிஞ்சது.. எப்பவுமே நடிக்க முடியாதில்லையா?” என்று பாசம் ஒருபுறம் உள்ளுக்குள் இருந்தாலும் ஷாரிக் மீதான விமர்சனத்தையும் வெளிப்படையாக சொல்ல ஐஸ்வர்யா தயங்கவில்லை. 

“இவர்களில் யார் உண்மையாக பேசியதாக நினைக்கிறீர்கள்?’ என்று மற்றவர்களின் அபிப்பராயங்களையும் இறுதியாக அறிய முயன்றார் டேனி. ‘எல்லோருமே உண்மையாத்தான் பேசினாங்க” என்று வெண்டைக்காய்த்தனமாக பதில் வந்தாலும் முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள டேனி “உண்மையாகவும் துணிச்சலாகவும் பதிலளித்த நபராக” ஐஸ்வர்யாவை தேர்ந்தெடுத்தார். இது சரியான தேர்வு என்றுதான் தோன்றுகிறது. ஐஸ்வர்யாவின் தோரணையும் பதில் அளித்த விதமும் அவர் உள்ளத்திலிருந்து பதில் அளித்த நேர்மையை வெளிப்படுத்தியது. ஆக.. அவருக்கு சூப்பர் பவர் அளிக்கப்படும். அது என்ன என்பது சஸ்பென்ஸ்.

‘நேர்மையற்ற வகையில் பதில் சொன்ன நபராக” சிறை செல்லும் தண்டனைக்காக பாலாஜியை தேர்ந்தெடுத்தார் டேனி. ‘புறம் பேசுவதை இன்னமும் தொடர்கிறேன் என்று அவர் சொல்லியதுதான் காரணம்” என்று டேனி சுட்டினாலும் ‘அவர் உண்மையைத்தானே சொன்னார்” என்று அந்த தீர்ப்பில் இருந்த தர்க்கப்பிழையை மற்றவர்கள் சுட்டிக் காட்டினார்கள். ‘தவறாகத் தெரிந்தாலும் தொடர்கிறேன்’ என்று அவர் சொன்னதுதான் பிரச்னை என்று டேனி தெளிவுப்படுத்தினாலும் சிலர் சமாதானம் ஆகவில்லை. 

இந்த நீளமான பஞ்சாயத்து குறித்த விமர்சனங்களை ஆங்காங்கே பிறகு பேசிக் கொண்டிருந்தார்கள். வைஷ்ணவியின் மிகையான எதிர்வினை குறித்து பாலாஜி எரிச்சல்பட்டார். டேனியின் தீர்ப்பு ஒருவேளை நியாயமாக இருந்திருந்தாலும் கூட தனிப்பட்ட காரணங்களால் அவர் சொல்லியிருப்பார் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடும்” என்று ஜாலியாக சொல்லிக் கொண்டிருந்தார் மஹத். ஜனனியும் டேனியும் பரஸ்பரம் தங்களின் அபிப்ராயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். ‘இது ஒரு கேம். அவ்வளவுதான்” என்றார் டேனி. ‘நான் உண்மைன்னு நெனச்சதான் பேசினேன்” என்றார் ஜனனி. 

பொன்னம்பலத்துக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட போது ஒட்டுமொத்தமாக அழுது புலம்பிய பிக்பாஸ் வீடு, பாலாஜியின் சிறைத்தண்டனைக்கு உற்சாகமாக இருந்தது. ‘புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்” என்று ஜாலியாக அவசரப்படுத்தியது. ஒரு வசைச் சொல்லால் தன் எரிச்சலை நகைச்சுவை பாவனையில் வெளிப்படுத்தினார் பாலாஜி. “அர்ஜென்ட்க்கு மஹத் உதவுவான்ன்னு சொல்றாங்க..… அவன் என்ன அவன் பெட்லயா இருக்கப் போறான். நான் வேற இப்ப அங்க இல்ல” என்று ஜாலியாக மஹத்தை வாரினார் பாலாஜி.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

பரிசாக கிடைத்த சாக்லேட்டை தனியாக மொக்கிக் கொண்டிருந்த மஹத்தை ‘இது தப்பாச்சே” என்று எச்சரித்தார் வைஷ்ணவி. 

இன்று நாட்டாமை வரும் நாள். மஹத்தின் பொறுப்பற்றத்தனம், பாலாஜியின் ‘விடாது கறுப்பு’ கோபம்’, போன்றவற்றை அரசியல் நையாண்டிகளோடு இணைத்து கமல் சுட்டிக்காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த வாரம் பொன்னம்பலம் அநேகமாக வெளியேற்றப்படலாம் என்று யூகம். அவரால் நிகழ்ச்சிக்கு அதிகம் உபயோகமில்லை. மக்கள் தீர்ப்பையும் தாண்டி பிக்பாஸின் திருவிளையாடல்கள்தானே அனைத்தையும் முடிவு செய்கின்றன? பொறுத்திருந்து பார்ப்போம்.