Published:Updated:

``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி!'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ராசிட்டிஸ்

தார்மிக் லீ

33-ம் நாள் பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் நடந்தது என்ன?

``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி!'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ராசிட்டிஸ்
``வீக் டேஸில் அந்நியன், வீக்கெண்டில் அம்பி!'' - பிக் பாஸ் மிட்நைட் மசாலா அட்ராசிட்டிஸ்

நினைத்தது போலவே டேனியலை 'ஃபேக்' என்று புறம் பேசிய சிலரே ' நிமிர்ந்து நில்' டாஸ்கை வைத்து முகத்துக்கு நேரே பேசிவிட்டனர். சீட் மாற்றி கலாய்த்த காரணத்தினாலோ என்னவோ பாலாஜியைச் சிறைக்குள் தள்ளிவிட்டார், டேனியல். இதைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

* `என் உயிர் நண்பன் டேனி', `என் மச்சான் டேனி', `என் மாப்ள டேனி' என்று டேனியலைப் போற்றிப் பாடிய மஹத்தே டேனியலை நேருக்கு நேர் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் அப்படியே நகர்ந்துவிடுகிறார். இவரும் மஹத்தைச் சீண்டாமல் மற்ற போட்டியாளர்களிடம் கணிசமாகப் பழக முயற்சி செய்துகொண்டிருந்தார். ஏதோ தின்பண்டத்தை ஷாரிக், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர்களுக்கு ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிக்கொண்டிருந்தார், டேனியல். பெஸ்ட் ஆஃப் லக் ப்ரோ!

* டேனியலைத் தொடர்ந்து அடுத்த பஞ்சாயத்து சென்றாயனின் பக்கம் திரும்பியது. மஹத்தும் பாலாஜியும் சென்றாயனிடம் ஏதோ கடிந்துகொண்டிருந்தார்கள். `நான் என்ன பண்ணேன்' என்று பாவமாகக் கேட்டுக்கொண்டிருந்தார், சென்றாயன். போட்டியாளர்களுக்கு என்ன பிரச்னையென்றால், போடும் சண்டையை ஆரோக்கியமாகவும் போட மாட்டார்கள். `இதுதான் சண்டை, இதுதான் பிரச்னை' என்று முகத்துக்கே நேரே கூறி என்னவென்று கேட்க அங்கிருக்கும் ஒவ்வொருவருமே தயங்குகிறார்கள். அதனால்தான் ஷோ பார்க்கும் பார்வையாளர்களுக்கு, அனைத்துப் போட்டியாளர்களும் நடிக்கிறார்கள், அனைவரும் 'ஃபேக்' என்பது போல் விமர்சனம் வருகிறது. 

* பெட்ரூமிலிருந்து வெளியே வந்த சென்றாயன், பொன்னம்பலத்திடம் `அண்ணே நீயாவது சொல்லுண்ணே நான் என்ன தப்புப் பண்ணேன்' என்று பாவமாகப் புலம்பிக்கொண்டிருந்தார். வடிவேலுவின் `நான் எதுக்குடா சரி பட்டு வர மாட்டேன்' காமெடிதான் நினைவுக்கு வந்தது. பிறகுதான் தெரிந்தது பொன்னம்பலம்தான் சென்றாயனை ஒரண்டை இழுத்திருக்கிறார் என்று. ஒருபக்கம் டேனியலுக்கு 'ஃபேக்' என்று முத்திரை குத்த, இன்னொரு பக்கம் பொன்னம்பலம், சென்றாயனுக்கு 'ஃபேக்' முத்திரை குத்தியிருக்கிறார். `உன்கிட்ட வாங்குனதுக்கு உனக்கு ஒரு குத்து, அவன்கிட்ட வாங்குனதுக்கு அவனுக்கு ஒரு குத்து... ஆகமொத்தம் ரெண்டு குத்து!' மொமன்ட்!.

* போட்டியாளர்கள் உள்ளே வந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டாலும் பொன்னம்பலத்துக்கு டேனியலின் பெயர் தெரியவில்லை. `தாடி வெச்சிட்டு ஒரு பையன் இருப்பானே அவன் பேர் என்ன...' என்று தடுமாறிக்கொண்டிருந்தார். நித்யா வெளியேறிய சமயம், நாமினேஷன் ப்ராஸஸ் கும்பல் கும்பலாக நடந்தது. அப்போது நித்யாவா... டேனியலா என்ற நாமினேஷனில், நித்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை ஞாபகம் வைத்துக்கொண்டு ரித்விகாவிடமும், பொன்னம்பலத்திடமும், `பேசாம டேனியலை நாமினேட் பண்ணியிருந்தா இவன் வெளியில போயிருப்பான்' புலம்பிக்கொண்டிருந்தார், பாலாஜி.

* போட்டியாளர்களால் 'ஃபேக்' என்று சொல்லப்பட்ட டேனியலும் சென்றாயனும் கார்டன் ஏரியாவில் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். டேனியல், அவரது திரைத்துறை அனுபவங்களைப் பற்றி சென்றாயனிடம் பகிர்ந்துகொண்டிருந்தார். ஆனால், பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, சென்றாயன் அமைதியாகவே இருந்தார். மறுபக்கம் பாலாஜி, `கமல் சார் வாட் இஸ் தி ப்ரொசீஜர் டூ கோ ஹோம்' என்று சொன்னவுடன் வைஷ்ணவி குஷியாகிவிட்டார். `நீ ஏன் மா குஷியாகுற' என்று கேட்டதற்கு, `இல்லண்ணே நீங்க போயிட்டா போஷிகாவைப் பார்க்கலாம் நித்யாகூட சேரலாம்' என்று கவுன்டர் சமாளிஃபிகேஷன் செய்துகொண்டிருந்தார். 

* ஜனனி தற்போது விட்டிருக்கும் விஷ பாட்டில் வேலையை, ரித்விகா சீரும் சிறப்புமாகச் செய்து வருகிறார். பாலாஜி, கிச்சனில் வைஷ்ணவிக்கு உதவி செய்துகொண்டிருந்தார். 'அட இருமா நான் பன்னீரைப் போடுறேன், ஏற்கெனவே உன் கை சரியில்லை' என்று உதவியும் செய்து விவகாரமாகவும் பேசினார். 'உங்க மூஞ்சி கூடதான் சரியில்லை நான் ஏதாவது சொன்னேனா’ என்று வைஷ்ணவி பாலாஜியை நக்கலடித்துக்கொண்டிருந்தார். அப்படியே அமைதியாக நகர முயன்ற பாலாஜியை இழுத்து, `என்னண்ணே உங்க மூஞ்சியை சரியில்லைன்னு சொல்லிட்டா அமைதியா இருக்கீங்க' என்று பாலாஜியை கொம்பு சீவிவிட்டார். `அட சும்மா இரும்மா நீ வேற' என்று ஒரு வழியாகச் சமாளித்துவிட்டார். `இப்படியே பேசிகிட்டு இருந்தா எப்படி, எது பெருசுன்னு அடிச்சிக் காட்டு...'

ஆக கேமராவை எந்தப் பக்கம் திருப்பினாலும் சண்டைகளும் சர்ச்சைகளும்தாம் வீடு முழுக்க நிரம்பியிருக்கிறது. ஆனால், என்னதான் சண்டை வந்தாலும் கமலைத் திரையில் பார்த்ததும் பம்மிவிடுகிறார்கள். வாரம் முழுவதும் அந்நியனாக இருக்கும் ஹவுஸ்மேட்ஸ், வார இறுதியில் அம்பியாக மாறுவது ஏன் என்பது புரியாத புதிர். இன்றிரவும் இது நிகழ்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. தொடர்ந்து பார்ப்போம்!

தார்மிக் லீ