Published:Updated:

உங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்! #BiggBossTamil2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்! #BiggBossTamil2
உங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்... கடும் கண்டனங்கள்! #BiggBossTamil2

பிக் பாஸ் 35-ம் நாள் நடந்தது என்ன?!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேற்று, கமல் முன்னால் சண்டையிட்டு போட்டியாளர்கள் அதிர்ச்சியளித்த விஷயத்தைப் போலவே இன்றைய தினத்தின் அதிர்ச்சி ‘ரம்யாவின் வெளியேற்றம்’ மூலமாக பார்வையாளர்களுக்கு கிடைத்தது. ‘எவருமே யூகிக்க முடியாத  திரைக்கதையை எழுதுகிறேன்' என்பது போல் 'பிக் பாஸ் திருவிளையாடல்' எவ்வித தர்க்கமும் இல்லாத அபத்தமான திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் நித்யா வெளியேற்றப்பட்டதை எவருமே எதிர்பார்த்திருக்க முடியாதிருந்ததைப் போலவே இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட்டதும் எவரும் எதிர்பாராத திருப்பமே. 

பிக்பாஸ் வீட்டிலேயே இதற்கான அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக, ‘தாம்தான் வெளியேற்றப்படுவோம்’ என்று எதிர்பார்த்திருந்த பாலாஜியின் முகத்தில் திகைப்பு வெளிப்படையாக தெரிந்தது. மக்கள் அளிக்கும் வாக்குகள் மதிக்கப்படுகிறதா அல்லது பிக்பாஸ் குழு தங்களின் வணிக உத்திகளுக்கேற்ப முன்னமே தீர்மானித்தைத்தான் ‘மக்களின் தீர்ப்பு’ என்கிற பாவனையில் வெளியிடுகிறதா என்கிற வழக்கமான சந்தேகம் இம்முறை அழுத்தமாக உருவாகியது. 

எவிக்ஷன் பட்டியலில் இருந்த இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது எவ்வித சர்ச்சையிலும் ஈடுபடாதவர், ரம்யா. பொறுமையும் பக்குவமும் நிறைந்தவர். தன்னுடைய நெருக்கமான தோழியான வைஷ்ணவி மீது  பிழை என்றால்கூட அதை வெளிப்படையாக சொல்லக்கூடிய நேர்மைக்குணம் உள்ளவர். எந்தவொரு பிரச்னையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பவர். மற்றவர்களின் குறைகளை நட்பு கலந்த குரலில் நிதானமாக எடுத்துரைப்பவர்.

இவர் வீட்டின் தலைவியாக இருந்த சமயத்தில், போலீஸ்-திருடன்-பொதுமக்கள் விளையாட்டை பாதியிலேயே கைவிட்டது பிழையானதுதான். ஆனால், இதை விடவும் அதிக சதவீத பொறுப்பற்ற தன்மையுடன் இயங்கிய மஹத் போன்றவர்கள் எல்லாம் போட்டியில் நீடிக்கும்போது ரம்யா வெளியேற்றப்படுவது அநீதி. ஒருவகையில் அவருடைய நல்லியல்புகளே அவரது வெளியேற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். இவரால் எவ்வித பரப்பரப்பான ஃபுட்டேஜ்களும் கிடைக்காது என்று ஒருவேளை தீர்மானித்த பிக்பாஸ் குழு இந்த வெளியேற்றத்தை வலுக்கட்டாயமாக திணித்திருக்கலாம். ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ என்கிற பழமொழியைப் போல் ஆகி விட்டது, ரம்யாவின் வெளியேற்றம்.

‘பொய்யும், புறம் பேசுதலும், சண்டையும் நிகழும் எதிர்மறையான சூழலில் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது' என்கிற ரம்யாவின் குணாதிசயத்தையொட்டி, இந்த வெளியேற்றம் ஒருவகையில் அவருக்கு விடுதலையே. 

(ரம்யாவிடம் நான் உணர்ந்த ஒரே நெருடல், தனது அழகான சுருள் முடியை, வெள்ளை பெயிண்ட் அடித்து மாற்றிக்கொண்டதுதான். இதைத் தவிர டேனி, அனந்த் வைத்தியநாதனை முன்பு கிண்டலடித்துக்கொண்டிருந்த போது அதில் ரம்யாவும் இணைந்து மகிழ்ச்சியடைந்தார். இதர துறைகளை விடவும் இசை போன்ற கலை சார்ந்த பணிகள் ஆத்மார்த்தமானவை. குரு மரியாதை என்பது அங்கு முக்கியமானது. இது போன்று சில மெல்லிய பிரச்னைகளைத் தவிர ரம்யாவிடம் பெரிதாக வேறு எந்தக் குறையும் இல்லை). 

**

நேற்று, கமல் விடை பெற்று சென்ற பிறகும் வீட்டின் உள்ளே காரசாரமான உரையாடல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. டேனி சத்தமாக பேசும் குணாதியசத்தைப் பற்றி சிலர் ‘சத்தமாக’ விவாதித்துக்கொண்டிருந்தனர். “நம்ம ஃபேமிலி உள்ள சகிச்சிப்போம். ஆனா இங்க நாம என்ன ஃபேமிலி மாதிரியா நடந்துக்கறோம்?” என்று சரியான பாயிண்ட்டை முன்வைத்தார், ரம்யா. இளைய தலைமுறை அடிக்கும் கொட்டங்களைப் பற்றியும் உரையாடல் நகர்ந்தது. “நானும்தான் அவங்களைக் கண்டிக்கறேன். ஆனா நான் சொல்ற முறை வேற. நீங்க சொல்ற முறை வேற. அவங்களைக் கூப்பிட்டு நிதானமா சொல்லியிருக்கலாம்” என்று மும்தாஜ் சொன்னதைக் கேட்டு “எல்லாம் ஏற்கெனவே அப்படி சொல்லியாச்சு” என்று கோபப்பட்டார், பொன்னம்பலம். 

‘ஞாயிறு வணக்கம்’ என்கிற முகமனுடன் கமல் வந்தார். “மாணவர்கள் டாஸ்க்கில் எந்த அடிப்படையில் ரேங்க் தந்தீர்கள், சற்று விளக்க முடியுமா?” என்று ரித்விகாவிடம் கேட்டார். “கொஸ்டின் பேப்பர் மாதிரி எதுவும் தரலை” என்று ரித்விகா சொன்னதும் “பாவம் நமது பிள்ளைகள்” நமது கல்விமுறையின் நடைமுறைப் பிரச்னைகளை ஜாடையாக இடித்துரைத்தார் கமல். 

“ரேங்க் தீர்மானிக்கறது எனக்கு கஷ்டமா இருந்தது. இருந்தாலும் தந்திருந்த ‘கைட்லைன்ஸ்’ படி சென்றாயனுக்கு தர தீர்மானிச்சேன்” என்றார், ரித்விகா. “அப்ப நம்மாளலயும் முடியுங்க.. ‘நீட்’டி முழக்கி சொல்ல விரும்பல. புரியும்’ என்று அவர் சொல்வதின் மூலம் ‘நீட்’ தேர்வை தமிழக மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்று சொல்ல விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. (ஆனால் மத்திய அரசு சில விஷயங்களை மாநிலங்களின் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதின் பின்னுள்ள  அரசியல் வேறு. இது கமலுக்கும் தெரியும்.)

“ஆனா சென்றாயனுக்கு முதல் ரேங்க் தந்ததில் பலருக்கு அதிருப்தி இருந்தது போல் தெரிந்ததே.. என்ன மும்தாஜ்?” என்று கமல் கேட்க... “ஆமாம் சார்... அவருக்கு பாடல் வரிகள்லாம் சொல்லித் தர்ற நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். ஆனா அவருக்குத்தான் முதல் ரேங்க். இது அநியாயம்” என்றார் மும்தாஜ். ‘ஹலோ மேடம்.. இது என் படிப்பு, உள்ளிட்ட இதர தகுதிகளுக்கு கிடைத்தது. பாடல் வரிகளுக்கு இல்ல” என்று சென்றாயன் மெலிதாக கோபப்பட்டார். “இதர போட்டியாளர்களும் சிறப்பாக செயல்பட்டாலும் ஊக்கமளிப்பதற்காக சென்றாயனை தேர்ந்தெடுத்தேன்” என்று ரித்விகா சொன்னதும் இந்தப் பஞ்சாயத்து ஒருவழியாக ஓய்ந்தது. 

‘நாம captaincy பத்தி பேசுவமா?” என்று அடுத்து மஹத்தின் பக்கம் வந்தார் கமல். “தெய்வமே.. என்னை விட்டுடுங்க..” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டார் மஹத். ‘அழுதீங்க.. போல .. நெறைய பேர் வந்து தேத்தினாங்க. அதுக்காகவே விடாம அழுதீங்களா?’ என்று கமல் ஜாலியாக வார, வீடே சிரிப்பில் மிதக்க. மஹத் வெட்கப்பட்டார். ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் பொன்னம்பலத்தின் எதிரேயே அமர்ந்து அவரை இந்தியில் பேசி திட்டியதை மெலிதான கிண்டலுடன் கலந்து கண்டித்தார் கமல். தவறை ஒப்புக்கொண்டதற்காக அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள். (நல்ல வேளை! அவர்கள் பேசியது என்ன என்பது சபையில் தெரிவிக்கப்பட்டிருந்தால் பிறகு பொன்னம்பலம் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார்!). 

‘வெளியேற்றப்படலம்’ விவகாரத்துக்குள் அடுத்து வந்தார் கமல். ‘இதற்கு நீங்கள் தகுதியானவரா?’ என்ற கேள்விக்கு பதிலளிக்க தாமாக முன்வந்தார், ஜனனி. “ஆர்வமின்மை, சோம்பேறித்தனம் போன்ற காரணங்களையொட்டி எவிக்ஷன் பட்டியலில் வந்ததில் எனக்கு ஒப்புதல் இல்லை. நான் இங்க ஆக்டிவ்வாத்தான் இருக்கேன்” என்ற ஜனனியின் கருத்தை பார்வையாளர்களும் வழிமொழிய அவர் காப்பாற்றப்பட்டதை தெரிவித்தார் கமல். “என்னைக் கிரிக்கெட் பால் மாதிரி ஆடுறாங்க. பாத்து எதனா செய்ங்க’ என்று ஜாலியாக தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டார் பொன்னம்பலம். 

“என் பேர் கெட்டுப்போச்சுன்னு.. சண்டை போட்டிங்கள்ல... உங்க பேர் கெட்டுப்போகலைன்னு மக்கள் நெனக்கறாங்க” என்று ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டதையும் நாடகத்தனமாக கமல் சொல்ல, ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள். ‘தமிழக மக்களுக்கு நன்றி.” என்ற ஐஸ்வர்யா.. “I will keep entertain like this” என்பதையும் சொல்லி சற்று குழம்ப வைத்தார். “ஐஸ்வர்யா போகப் போறதில்லைன்றது எனக்கே தெரியாது. ஆனா ஷாரிக்கிற்கு முன்னமே தெரிஞ்சிருக்கு” என்று இந்த சாக்கில் ஷாரிக்கையும் வாரினார், கமல். 

அடுத்து பாலாஜியின் பக்கம் கமல் வர “நான் கோபப்படுவது, புறம் பேசுவது போன்றவை மக்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்” என்றார், பாலாஜி. “பாலாஜி சொன்ன எந்த விஷயத்திற்காகவும் நான் வருத்தப்பட்டதில்லை” என்று தக்க சமயத்தில் சொல்லி நண்பனுக்கு உதவினார், சென்றாயன். இது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. 

“நீங்க நேரடியா எவிக்ஷனுக்கு வந்தீங்க இல்லையா?” என்று ரம்யாவின் பக்கம் வந்தார் கமல். “இங்க நடக்கற எதிர்மறையான விஷயங்கள் எனக்குப் பிடிக்கலை. நான் இங்க இருந்த வெளிய போனா சந்தோஷப்படுவேன்” என்ற ரம்யாவின் வாக்குமூலத்தில் உண்மை இருந்தது. “ரம்யா போனா ரொம்ப வருத்தப்படுவேன்.. பாலாஜி இல்லைன்னா.. பொன்னம்பலம் போனா நல்லது. குறிப்பா பொன்னம்பலம் போனா வருத்தப்பட மாட்டேன்’ என்ற மும்தாஜ் ..  “சார்… யார் போனாலும் கஷ்டப்படுவேன்.. விட்டுடுங்க சார்..” என்று ஜாலியாக காலில் விழுந்தார். 

சிறிது நேரம் இந்த நாடகத்தை இழுத்த ஒரு கணத்தில் சட்டென்று தீர்மானித்து ரம்யாவின் பெயரை அதிரடியாக அறிவித்தார். அனைவரின் முகங்களிலும் அதிர்ச்சி. குறிப்பாக பாலாஜியின் திகைப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. மும்தாஜால் அழுகையை அடக்க முடியவில்லை. ‘யாரும் அழாதீங்க. ப்ளீஸ்.. நான் சந்தோஷமாக வெளியே போகணும்’ என்று அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார் ரம்யா. ரம்யாவின் வெளியேற்றம் வைஷ்ணவிக்கு பெரிய நஷ்டம். அவருக்கு பெரும் ஆறுதலாக இருந்தவர் ரம்யா. தனது செடியை மும்தாஜிற்கு பரிசளித்தார் ரம்யா. (வைஷ்ணவிக்கு தருவார் என்று எதிர்பார்த்தேன்!). பிரியாவிடை சம்பிரதாயங்கள் விமரிசையாக நடைபெற்றன. 

‘பிக்பாஸ் விளையாட்டில் உங்க attitude may not be interesting. ஆனா உங்க வாழ்க்கைக்கு ரொம்ப உதவியா இருக்கும்’ என்று ரம்யா வெளியேற்றப்பட்ட காரணத்தை மறைமுகமாக சொல்லி விட்டார் கமல். (ஆக.. இது பிக்பாஸின் திருவிளையாடல்தான்). 

ரம்யா தொடர்பான வீடியோ ஒளிபரப்பானது. மும்தாஜூம், சென்றாயனும் அவரைப் பற்றி வெவ்வேறு தருணங்களில் சொன்ன எதிர்மறையான விஷயங்களைக் கண்டு சிரித்துக் கொண்டார் ரம்யா. 

புகைப்படங்களுக்கு கீழே எழுதுவதற்கு பதிலாக பொம்மைகள் தரப்பட்டன. தூங்குமூஞ்சி (மஹத்), டமாரம் (டேனி), கூல் (வைஷ்ணவி), ஆங்க்ரி பேர்ட் (பாலாஜி), டாக்டர் (பொன்னம்பலம்), அழகுணர்ச்சி (ஜனனி), அழுமூஞ்சி (மும்தாஜ்),  தலையாட்டி பொம்மை (ஐஸ்வர்யா), லவ் (ரம்யா), குழந்தை (ஷாரிக்) மகிழ்ச்சி (யாஷிகா) கண்ணாடி (ரித்விகா) என்று வரிசைப்படுத்திய ரம்யா ‘முகமூடி’யை சென்றாயனுக்கு பரிசளித்தார். “கோபம் வருதுன்னா வெளிப்படுத்திடுங்கன்னு சொல்லியிருக்கேன். ஆனா மக்கள் என்ன நெனப்பாங்களோன்னு தயங்கறாரு” என்று இதற்கு விளக்கமளித்தார். 

இந்த சடங்கு பொதுவாக வீட்டில் உள்ளவர்களுக்கு காட்டப்படாது. பார்வையாளர்களுக்கு மட்டுமே. ஆனால் இம்முறை அதில் மாற்றம். ரம்யாவின் தேர்வுகள் வீட்டில் உள்ளவர்களுக்கும் காண்பிக்கப்பட, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான எதிர்வினைகளைத் தெரிவித்தனர். “என்ன சார்.. இப்படி மாட்டி விட்டுட்டீங்களே” என்றார் ரம்யா. எல்லாவற்றிற்கும் கமல் விளக்கமளிக்க சிலவற்றை ரம்யா திருத்தினார். ‘கபட நாடக வேஷதாரி’ன்னு உங்களை சொல்லிட்டாங்க” என்று சென்றாயனை கிண்டலடித்தார் கமல். 

ரம்யா விடைபெற்றவுடன் ‘தற்பெருமை’ மற்றும் ‘ஜால்ரா’ ஆகிய பொம்மைகள் எஞ்சியிருந்ததை வீட்டின் உள்ளே இருப்பவர்களுக்கு பரிசளிக்கலாம் என்று வில்லங்கமாக தீர்மானித்தார் கமல். முதலில் ‘ஜால்ரா’ பொம்மையை எடுத்து ‘யாருக்கு தரலாம்’ என்று கேட்க, ‘மும்தாஜ்” என்றார் பொன்னம்பலம். பார்வையாளர்களின் கைத்தட்டல்களும் கேட்க, மும்தாஜின் முகம் மாறியது. தனக்கான வாய்ப்பு வரும் போது ‘வைஷ்ணவி’ என்றார் மும்தாஜ். இதற்கும் மக்கள் கைதட்டினார்கள். (என்னங்கப்பா.. இப்படி குழப்பறீங்க!). 

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிற கோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் மும்தாஜைத் தொடர்ந்து பெரும்பாலோனோர் வைஷ்ணவியைக் குறிப்பிட வைஷ்ணவியின் முகத்தில் அதிருப்தியும் சங்கடமும் வெளிப்படையாகத் தெரிந்தது. (பாவம்!). தனக்கான வாய்ப்பு வரும் போது, ‘ஜால்ரான்னா.. என்னன்னு சொல்லுங்க’ என்று நாடகத்தனமாக கமலிடம் விளக்கம் கேட்டார் வைஷ்ணவி. 

“சிங். ஜக்… சிங் ஜக்’ என்று அதை செய்தே காட்டினார் கமல். எனில் ‘பாலாஜி’ என்று வாய்க்கு வந்த பெயரை வைஷ்ணவி சொல்ல மக்களின் அதிருப்தியான குரல்கள் கேட்டன. இறுதியில் ஏகமனதாக வைஷ்ணவியே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு மேலும் விளையாடி போட்டியாளர்களின் வயிற்றெரிச்சலை கிளப்ப வேண்டாம் என்று கமல் முடிவெடுத்தாரோ என்னமோ, தற்பெருமை பொம்மை விவகாரத்தை கமல் எடுக்கவில்லை. (ஒருவேளை, தனக்காக எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம்!).

‘அனாதை இல்லங்களில்’ இருந்து பிள்ளைகள் வந்தததைப் பற்றி விசாரித்தார் கமல். “இருப்பதை வைத்து சந்தோஷமடைய வேண்டும்’ என்று தாங்கள் உணர்ந்ததை போட்டியாளர்கள் தெரிவித்தனர். “ஆராய்ச்சியெல்லாம் பண்ணலை. யூகமாதான் சொல்றேன். ஏழாம், பத்தாம் நூற்றாண்டுகளில் அநாதைகள்-னு யாரும் இருந்திருக்க மாட்டாங்க-ன்னு நெனக்கறேன். அவங்களுக்குன்னு தனியாக கட்டிடமெல்லாம் இருந்திருக்காது” என்று கமல் சொன்னது உண்மையாகவே இருக்கக்கூடும். கூட்டுக்குடித்தன முறை வலுவாக இருந்த அந்தச் சமயத்தில் ஆதரவற்ற குழந்தைகளை உறவினர்களோ, நட்புகளோ தத்தெடுத்துக் கொள்வது நடைபெற்றிருக்கக்கூடும். வாரிசு இல்லாத செல்வந்தர்களும் தத்தெடுக்கும் முறையை பின்பற்றியது இருந்திருக்கிறது. 

இதைக் கேட்டதும் சென்றாயன் ‘குழந்தை இல்லாத நான் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று சபையில் அறிவித்தது நல்ல விஷயம்தான். ஆனால் தூண்டப்பட்ட உணர்ச்சியின் அடிப்படையில் இப்படி சட்டென்று முடிவெடுக்க வேண்டிய விஷயமல்ல. நிதானமாக யோசித்து பிறகு எடுக்க வேண்டிய விஷயம. மட்டுமல்லாமல், சென்றாயன் தனது மனைவியோடும் ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு இது. 

என்றாலும் சென்றாயனின் முடிவை ஆத்மார்த்தமாக பாராட்டினார் கமல். “யாராவது இவங்களை தத்து எடுக்கட்டும்.. பாக்கலாம்”னு சொன்னீங்களே.. பாலாஜி.. பாருங்க.. என் தம்பி இருக்கான்” என்று சமயோசிதமாக இதை நினைவுப்படுத்தினார். ‘என் அனுமதில்லாம் வேணாம். தத்தெடுத்துக்கங்க.. அப்புறம் பாருங்க..  உங்க மனைவி கர்ப்பமடைவார்கள்” என்று கமல் கூறிய ஆரூடம் உளவியல் தொடர்பானது. பிள்ளையில்லாத மனஉளைச்சல் ஒரு குழந்தை வீட்டுக்கு வந்தவுடன் பெண்களுக்கு பெரும்பாலும் நீங்கி விடும். அதனாலேயே அது சார்ந்த மனத்தடைகள் விலகி கருவுறும் சாத்தியம் பெண்களுக்கு அதிகரிக்கக்கூடும். 

“கிராமப்புறங்களில் இந்தக் காட்சி சாதாரணமானது. ஒரு குழந்தை அழுதா,.. அதற்கு இன்னொரு தாய்.. பாலூட்டுவதில் அவர்களுக்கு எவ்வித தயக்கமும் இருக்காது. அம்மா, அண்ணி என்று இரு தாய்களிடம் பால் குடித்து வளர்ந்த பிள்ளை நான்” என்றார் கமல்.. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ ன்றதுதான் தமிழனோட அடையாளம், கலாசாரம். நல்லவர்களை, நல்ல விஷயங்களை கவனித்துக் கொண்டேயிருந்தால் அது சார்ந்த தூண்டுதல் நம்மிடமும் நிகழும்” என்ற கமலின் இறுதியுரை என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது. 

ஜூலை 26 ராணுவ வீரர்களைப் போற்றும் தினம் என்பதால் அது தொடர்பான உரையை நிகழ்த்தினார் கமல். ‘வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது போரின் சூட்டை தென்னிந்தியா அதிகம் உணர்ந்ததில்லை. அங்கல்லாம் ராணுவ வீரர்களை அப்படி மதிப்பாங்க.. இங்க ராணுவத்தில் தங்களின் பிள்ளைகளை அனுப்ப தாய்மார்கள் தயங்குகிறார்கள்’ என்று ஒரு ராணுவ அதிகாரி சொன்னார். விபத்து போன்ற விஷயங்களில் இறந்து போவதை விட ராணுவத்தில் இறக்கும் சாத்தியம் குறைவு’ என்பதை சுட்டிக் காட்டினார் கமல். “வேற வழியில்ல. சரி.. போவோம்’ என்று பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களே சாவுக்குத் துணிந்து ராணுவத்தில் சேர வர்றாங்க” என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார் ‘உங்களில் நான்’.

என்னதான் வணிக உத்தி, வியூகம் என்றாலும் ஒரு  திரைக்தையில் எழுதப்பட்ட அபத்தமான திருப்பம் என்றுதான் ரம்யாவின் வெளியேற்றத்தைச் சொல்ல வேண்டும். தங்களின் வாக்குகள் மதிக்கப்படவில்லை என்று ஏற்கெனவே பார்வையாளர்களிடம் உள்ள அதிருப்தி இது போன்ற மோசமான திருப்பங்களால் இன்னமும் அதிகரிக்கும். நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மையும் இதனால் கணிசமாக குறைய வாய்ப்புண்டு. பார்வையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டிய அவசியம் பிக்பாஸிற்கு உண்டு. 

வேறு என்னென்ன அபத்தமான திருப்பங்களை இந்த ‘பிக்பாஸ்’ என்னும் திரைக்கதையில் இனி நாம் காணப் போகிறோம் என்று தெரியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு