Published:Updated:

``நீங்க `நைஜீரியனா' இருக்கீங்க..!" - மும்தாஜை வெறுப்பேற்றிய சென்றாயன் #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
``நீங்க `நைஜீரியனா' இருக்கீங்க..!" - மும்தாஜை வெறுப்பேற்றிய சென்றாயன் #BiggBossTamil2
``நீங்க `நைஜீரியனா' இருக்கீங்க..!" - மும்தாஜை வெறுப்பேற்றிய சென்றாயன் #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்டில் உள்ள இரு பிரிவுகளுக்குள் (உண்மையில் இதன் எண்ணிக்கை அதிகம்) இதுவரை இருந்த பனிப்போர் காலம் முடிந்து உரசல்களும் பகைமைகளும் வெளிப்படையாகவே நிகழத் தொடங்கியிருக்கின்றன. `சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா?” என்று ஒவ்வொருவரும் வண்டியை உறுமலுடன் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் புறப்பட்ட சிலர் உண்மையான `கைப்புள்ள’யாக மாறி பிறகு மொக்கை வாங்குகிறார்கள். 

பொன்னம்பலத்தை, ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் இணைந்து இந்தியில் பேசி கிண்டலடித்த விவகாரம் தொடர்பான பஞ்சாயத்துதான் இன்றைய ஹைலைட். தாங்கள் பொன்னம்பலம் பற்றி பேசியதை கமல் முன்பு அவர்கள் ஒப்புக் கொண்டதால் குறும்படம் போடப்படாமல் தப்பித்தார்கள். ஆனால், அவர்கள் `என்ன பேசினார்கள்’ என்பது குறித்து கமல் உள்ளே போகவில்லை. `ஒப்புக் கொண்ட உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். இனிமேல் புறம் பேசாதீர்கள். நேராகவே சொல்லி விடுங்கள்’ என்று சொல்லி கடந்து சென்றார். 

ஆனால், கமல் மேலோட்டமாகக் கடந்து சென்றதை இன்று பிக்பாஸ் தெளிவாகப் போட்டுக் கொடுத்து விட்டார். பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒழுங்கீனங்களை வரிசைப்படுத்தும் வீடியோவில், யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பிற மொழியில் பேசும் இந்தக் காட்சியும் ஒளிபரப்பாகியது. ``அவங்க ஹிந்தில என்ன பேசினாங்க?” என்று ரித்விகா கேட்க, மொழிபெயர்ப்பாளர் வேலையை வைஷ்ணவி ஏற்றுக் கொண்டு பெரிய அளவு ஏழரையை இழுத்து விட்டார். 

அதற்கு முன் – யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் குறிப்பிட்ட நாளில் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்த்து விடுவோம். நாள் 30. காலை 10:30
யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவருந்துகிறார்கள். அருகில் மஹத். சற்று தூரத்தில் பொன்னம்பலமும் அமர்ந்து வேறு திசையில் பார்த்த படி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் இந்தியில் பேசியது தமிழ் சப்டைட்டில் மூலம் காண்பிக்கப்பட்டது. 

``உன் வாழ்க்கைல ஒரு வயசான ஆளு கிடைச்சிருக்காரு” என்று ஐஸ்வர்யா ஆரம்பிக்க, ``அவங்க நம்மள எப்போ அடிக்கப் போறாங்கன்னு தெரியல” என்று சிரித்துக் கொண்டே யாஷிகா பதில் சொல்கிறார். ``எனக்கு அவனை அடிச்சு சுவத்துல தொங்க விடணும் போல இருக்கு” என்று ஐஸ்வர்யா பதிலுக்குச் சொல்ல, அவருடைய காதில் ஏதோ ரகசியம் சொல்கிறார் யாஷிகா. பிறகு இருவரும் ரகசியச் சிரிப்பு சிரித்துக் கொள்கிறார்கள். 

பழைய திரைப்படங்களின் பாணியில் சொன்னால்.. ஃப்ளாஷ்பேக் முடிந்து.. `இதுதான் அன்று நடந்தது”. (எனக்கும் இந்தி தெரியாது என்பதால் பிக்பாஸ் தந்த தமிழ் சப்டைட்டிலை அப்படியே குறிப்பிட்டிருக்கிறேன்). 

இதை ரித்விகாவிடமும், பாலாஜியிடமும் மொழிபெயர்த்து சொன்ன வைஷ்ணவி, `எப்போ அடி அடின்னு அடிக்கப் போறேன்னு தெரியலை’ என்று யாஷிகா சொன்னதாக தவறாக டிரான்ஸ்லேட் செய்து சொல்கிறார். இதர விஷயங்கள் சரியாக இருந்தது போல்தான் தெரிகிறது. 

`ஏற்கெனவே நம்ம பேரு கெட்டுக் கிடக்கு. இந்த விஷயத்தை அங்கேயும் அந்த விஷயத்தை இங்கேயும் சொல்றவ’ன்னு ஒரு கெட்ட இமேஜ் இருக்கு... சமீபத்துல ஜால்ரா –ன்னு பட்டமும் கிடைச்சிருக்கு.. எதுக்கு வம்பு’ என்று வைஷ்ணவி இந்த விஷயத்தைக் கடந்து சென்றிருக்கலாம். ``இனிமே என் ஆட்டத்தைக் காண்பிக்கிறேன்” என்று காலையில் ஆவேசப்பட்டதாலோயோ, அல்லது தன் வழக்கமான இயல்பு படியோ, மொழிபெயர்ப்பு சேவையின் மூலம் பஞ்சாயத்தில் சிக்கிக் கொண்டார். அவர் இந்தி வசனத்தை தமிழில் சொன்னது கூட தவறில்லை. வீடியோவில் வந்ததைத்தான் கூறினார். ஆனால், ஓரிடத்தில் தவறான கருத்து வரும்படியாகச் சொன்னது ஓர் இடறல்.

இது குறித்து யாஷிகா அதிகம் அலட்டிக் கொள்ளாத போது ஐஸ்வர்யா அதிகம் பொங்கி விட்டார். ``திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ” பாணியில் இவருக்கும் வைஷ்ணவிக்கும் விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது. 

`டிரான்ஸ்லேட் பண்ணதுதான் என் வேலை. அதுல என்ன தப்பு?” என்பது வைஷ்ணவியின் தரப்பு. `தப்பா டிரான்ஸ்லேட் பண்ணிட்டீங்க” என்பது ஐஸ்வர்யா தரப்பு. ``என்னை நானே அடிச்சுக்குவேன்னுதான் சொன்னேன்” என்று ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் அப்படியே பிளேட்டை திருப்பி விட்டார். அவர் நினைவுப் பிசகினால் சொன்னாரோ அல்லது திட்டமிட்டு பொய் சொன்னாரோ.. இந்த விஷயத்தில் ஐஸ்வர்யாவின் வீம்பும் பிடிவாதமும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. செய்த பிழையை நேர்மையாக ஒப்புக் கொண்டால் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டிருக்க வேண்டியிருக்காது. 

பொன்னம்பலம் முன்பு சொன்னது ஆபாசமான கமென்ட்தான் என்றாலும் அந்த விவகாரம் விசாரணைக்கு வந்து முடிந்த நிலையில் இவர்கள் இந்தக் கிண்டலைச் செய்திருக்க வேண்டியதில்லை. மேலும் இது குறித்தான குற்றவுணர்ச்சியும் வருத்தமும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம் இருப்பது போல் தெரியவில்லை. கமல் முன்னாலும் சிரித்து தயங்கிய படி கடந்து விட்டார்கள். இங்கும் ஆத்திரத்தின் மூலம் கையாள்கிறார்கள். குறிப்பாக ஐஸ்வர்யா. 

``நாமினேஷன் ஆரம்பிக்கிற சமயத்தில் இந்த விஷயத்தை ஏன் ஆரம்பிச்சே.. இதன் மூலம் அவங்களை கன்வின்ஸ் செஞ்சு நல்ல பேர் வாங்கி நாமினேஷன்ல இருந்து நீ தப்பிக்க டிரை பண்றே’ன்னு நெனக்க ஒரு சாத்தியம் இருக்கில்லையா?” என்று ஜனனி சுட்டிக் காட்டியது வைஷ்ணவிக்குப் புரியவில்லை. ``நடந்ததைத்தானே சொன்னேன்’ என்றே தொடர்ந்து புலம்பிக்கொண்டிருந்தார். ``எப்படியாவது போகட்டும்” என்று நல்லவேளையாகப் பொன்னம்பலம் இதை விட்டு விட்டார். இல்லையென்றால் வீடு இன்னமும் ரணகளமாகியிருக்கும். 

இந்த வாரப் பஞ்சாயத்தில் இந்த விவகாரம் மீண்டும் கிளறப்படலாம்.

**

கமல் பஞ்சாயத்து முடிந்து ரம்யா விடை பெற்ற 35-ம் நாளின் நிகழ்வுகள் இன்னமும் முடியவில்லை. `இந்த வாரம் நான் போயிடுவேன். யாரும் அழக்கூடாது’ –ன்னு ரம்யா சொல்லிட்டே இருந்தா” என்று நினைவு கூர்ந்தார் ஜனனி. வழக்கம் போல் பெண்கள் படுக்கையில் படுத்திருந்த மஹத், ரம்யா. ரம்யா’ என்று ரைம்ஸ் பாடிக் கொண்டிருந்தார். 

`ஜால்ரா’ என்ற பட்டம் தரப்பட்டது மும்தாஜையும் வைஷ்ணவியையும் அதிகம் பாதித்து விட்டது போல. ``பொன்னம்பலம் ஐயா. என்னைச் சொல்ற அளவுக்கு நான் எப்போ ஜால்ரா அடிச்சிருக்கேன்?” என்று டேனியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் மும்தாஜ். ``எனக்குத் தெரிஞ்சு அப்படியில்லை:” என்றார் டேனி. (நாம் பார்த்த வகையில் நமக்கும் கூட அப்படித் தோன்றவில்லை).

இன்னொரு புறம் இதே விஷயத்திற்காக வைஷ்ணவியும் பொங்கிக் கொண்டிருந்தார். `ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே’.. என்ற பாடல் பின்னணியில் ஒலிக்காததுதான் குறை. ``நான் ஜால்ரா இல்லைன்னு எனக்கு நல்லாத் தெரியும். இனிமே என் ஆட்டத்தைக் காண்பிக்கிறேன். எவன்னா வரட்டும் பிடிச்சு உலுக்கிடறேன்”  என்று சந்திரமுகியாக மாறிக் கொண்டிருந்தார் வைஷ்ணவி.

36-ம் நாள் காலை. பிக்பாஸ் வீட்டின் அணிலும் குழப்பத்தில் சுற்றிக் கொண்டிருந்தது போலவே ஒரு பிரமை. போட்டியாளர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்ததால் அதற்கு தீர்வு காணும் வகையில் ஒரு பாடலைப் போட்டார் பிக்பாஸ். `சிங்காரி சரக்கு .. நல்ல சரக்கு”. 

நாமினேஷன் தினம் என்பதால் குழு குழுவாகப் பிரிந்து அதன் வியூகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். `யார் யாரை நாமினேட் செய்யலாம்’ என்பது தொடர்பாகச் சதித்திட்டங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. டேனியைப் பற்றிய புறணிகள் அதிகமாக இருந்தன. 

இவர்களின் உரையாடல், வட இந்தியா x தென்னிந்தியா அரசியலாகவும் திசை மாறியது. “இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். இதே மாதிரி நாம பாம்பேல போய் பேசிட முடியுமா.. நான் நிறையப் பார்த்திருக்கேன்” என்றார் பொன்னம்பலம். “இந்த முறை ஃபைனல்ல ஒரு பொண்ணு ஜெயிக்கணும். அது தமிழ்ப் பொண்ணா இருக்கணும்” என்று ஜனனியும் ரித்விகாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். தனிப்பட்ட கசப்புகள் இனவாத அரசியலாக உருமாறுவது ஆபத்தானது. 

‘காத்திருந்து.. காத்திருந்து காலங்கள் போனதடி’ கணக்காக, சமையல் வாய்ப்புக்காகக் காத்திருந்த சென்றாயன், இந்த முறை வாய் விட்டே கேட்டு விட்டார். ஆனால் ‘சமைக்கத் தெரியுமா?” என்று மும்தாஜ் கேட்டதற்கு ‘ஹெல்ப் பண்றேன்’ என்றார். “இந்த இடம் ரத்த பூமி” என்று அவரை எச்சரித்தனர். ‘குக்கிங் டீம்ல இருந்தாத்தான் சென்றாயனுக்குச் சில விஷயங்கள் புரியும்:” என்று முன்பு சொன்னவர்களும் இவர்களேதாம்.

டேனி, பாலாஜி என்று இரு அணியிலும் புழங்குகிற நபர்களில் ஒருவராக இருக்கிற ஜனனி, மஹத்திற்காக ஒரு ரகசியச் செய்தியைக் கொண்டு வந்தார். பாலாஜி டீம் இந்த வார நாமினேஷனுக்கு மஹத்தை டார்கெட் செய்திருக்கிறார்களாம். ‘நான் கடவுளைத்தான் நம்பறேன்” என்றார் மஹத். (என்னடா இது, கடவுளுக்கு வந்த சோதனை!). 

வீட்டின் உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்பறைக்கு அழைத்த பிக்பாஸ் “ஒரு கதை சொல்லட்டுமா.. சார்’ என்று சினிமா காட்ட ஆரம்பித்தார். ‘ஏதோ தமாஷ் நாடகம் போல’ என்று சிரித்துச் சிரித்துப் பார்த்துக்கொண்டிருந்த போட்டியாளர்கள் பிறகு மெள்ள சீரியஸ் மோடுக்கு மாறினர். இது வரை அவர்கள் செய்த ஒழுங்கீனங்கள் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகின.

நாய் குரைத்து எச்சரித்தும் சிலர் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிற காட்சிகள்….10:25-க்கு வந்த ஒரு டாஸ்க் லெட்டர். 10:50 வரை படிக்கப்படாமல் இருந்தது, இதற்காக அனைவரையும் ஒருங்கிணைக்க ரம்யா பட்ட சிரமம், அனைவரும் இஷ்டம் போல் ஒவ்வொரு நேரத்துக்கு வந்து அமர்ந்தது, ரித்விகா அழைக்கப்பட்ட போது பின்னாலேயே சென்று சிறுபிள்ளைத்தனமாக கன்பெஷன் ரூமில் நுழைந்த மஹத், யாஷிகாவும் ஐஸ்வர்யாவில் இந்தியில் பேசிய வில்லங்கமான வசனங்கள், மஹத்தும் மும்தாஜூம் விதிகளை மீறி காமிராக்களை தொடுவது (ஆனால் பிறகு மும்தாஜ் இதை மறுத்தார்). போன்ற காட்சிகள் ஒளிபரப்பாக மக்களின் முகங்கள் வெளிறத் தொடங்கின. 

அந்த நிமிடத்திலிருந்து மஹத்தின் தலைவர் பதவி முடிவடைவதாக பிக்பாஸ் அறிவித்தார். “நீங்க என்ன.. இங்க சாப்ட்டு சாப்ட்டு தூங்க வந்திருக்கீங்களா? ஒழுங்கா இருக்க மாட்டீங்களா..? இப்படியே போச்சுன்னா நான் இன்னமும் டெரர் ஆயிடுவேன்..” என்பதை பிக்பாஸ் தூய தமிழ் வார்த்தைகளின் மூலம் எச்சரித்தார். ‘பல முறை அறிவுறுத்தியும் எச்சரித்தும் இந்த வீட்டின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. விதிமீறல்கள் அடிக்கடி நடந்தன. தலைவர்களும் சரியாகச் செயல்படவில்லை. 

இதுவொரு கடினமான போட்டி என்பதை அறிந்துகொண்டுதான் வந்திருக்கிறீர்கள். ஆனால், அது தொடர்பான எவ்வித சிரத்தையும் உழைப்பும் உங்களிடம் இல்லை. அப்படி முயலும் சிலரின் தனித்துவங்களும் வீணாகப் போகின்றன. இனி ஒவ்வொரு விதிமீறலுக்கும் தக்க தண்டனை தரப்படும்” என்று எச்சரித்த பிக்பாஸ், ‘இதன் காரணமாக இந்த வாரம் வீட்டின் தலைவர் என்று எவரும் இருக்க முடியாது” என்றும் அறிவித்தார். (‘அப்ப.. பிக்பாஸ் வீட்லயும் முறையான தலைவர்-னு யாரும் இல்லை போலிருக்கு” என்று கமல் சொல்லப்போகும் நையாண்டி இப்போதே காதில் ஒலிக்கிறது).

‘இந்த விதிமீறல்களை அதிகமாகச் செய்த நபரை நீங்களே தேர்ந்தேடுக்க வேண்டும்” என்று பிக்பாஸ் அறிவித்தார். இதில் எவருக்கும் சந்தேகமேயில்லை. அதிகமான வழக்குகள் மஹத்தின் மீதுதான் இருந்தன. மஹத்திடம் உள்ள ஒரு நல்ல பழக்கம், தன் மீதுள்ள தவற்றை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக ஒப்புக் கொள்வது. எனவே, ‘எந்த கேஸூ வேணுமின்னா போடுங்க எஜமான். ஒத்துக்கறேன்” என்று தயாராக நின்றார். அவர் சிறையில் அடைக்கப்படுகிற தண்டனையோடு, இந்த வார எவிக்ஷனுக்கு நேரடியாகத் தகுதியானார். அது மட்டுமல்லாமல், அன்றைய தினத்தில் நடக்கவிருக்கும் நாமினேஷனிலும் அவர் கலந்துகொள்ள முடியாது. அவர் வீட்டின் எந்த உணவையும் சாப்பிட முடியாது. தனியாக உணவு வருமாம். 

‘எல்லாம் அவன் செயல்’ என்கிற தத்துவத்தோடு சிறைக்குள் சென்று ஜாலியாக அமர்ந்து கொண்டார் மஹத். (நல்ல வேளை, யாஷிகாவையும் சேர்த்து சிறையில் அடைக்கவில்லை!). “ஐ லவ் யூ பிக்பாஸ்” என்று பிக்பாஸிடமும் தன் சேட்டையைக் காண்பித்தார் மஹத். 

“இங்க யாரையும் திருத்த நாம வரலை. அவங்க அவங்களா திருந்தினாத்தான் உண்டு” என்றொரு மகா தத்துவத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. (“மத்தவங்களை திருத்த நான் வரலை. மொதல்ல நான் திருந்தணும்டா” என்று இதே விஷயத்தை மஹான் கவுண்டமணி ஏற்கெனவே சொல்லி விட்டார்). 

வைஷ்ணவி செய்த மொழிபெயர்ப்பு சேவை தொடர்பாக ஐஸ்வர்யாவுக்கும் வைஷ்ணவிக்கும் மோதல் துவங்கி தீ போல் பரவத் தொடங்கியது. இதற்கிடையில் ஷாரிக் தொடர்பாகவும் ஏதோ சர்ச்சையான உரையாடல் நிகழ்ந்திருக்கிறது போல. இந்த உரையாடலுக்கும் அதற்கும் வேறு குழப்பம் நிகழ்ந்தது. 

வீட்டின் தலைவர் என்று எவரும் இல்லாததால் பணிகளை உத்தேசமாகப் பிரித்துக்கொள்வதைப் பற்றி மும்தாஜ் தலைமை ஏற்று பேசிக் கொண்டிருந்தார். மூன்று குழுக்கள் அமைந்தாலும் அனைத்துப் பணிகளிலும் அனைவரும் உதவ வேண்டும் என்பதாக ஏற்பாடு ஆகியது. 

முதலில் தனியாகவும் பிறகு குழுவாகவும் அமைந்த நாமினேஷன் முறை இம்முறை பொதுத் தேர்தலாக மாறியது. கார்டன் ஏரியாவில் அனைவரின் முன்பும் நாமினேஷன் நடைபெறும் என்று பிக்பாஸ் அறிவித்தார்.

தாங்கள் நாமினேஷன் செய்யப்போகும் இரு நபர்களை அழைத்து வந்து அதற்கான காரணங்களைச் சொல்லி கறுப்பு மற்றும் சிவப்பு மையால் அவர்களின் முகத்தில் முத்திரையிட வேண்டும். (கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையின் மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் தண்டனை கிராமத்துப் பஞ்சாயத்துகளில் இருக்கிறது. கழுதையை உள்ளே கொண்டு வருவது சிரமம் என்பதால் பிக்பாஸ் அதைத் தவிர்த்து விட்டார் போல).

ஐஸ்வர்யாவிடம் தொடர்ந்து மல்லுக் கட்டிக்கொண்டிருந்த வைஷ்ணவியிடம் “அவ ஒருத்தரைப் பற்றி தப்பா முடிவு பண்ணிட்டான்னா.. இறங்கி வர்றதுக்கு நேரம் ஆகும்” என்று யாஷிகா சொன்னதை வைஷ்ணவி கவனிக்க விரும்பாமல் விவாதம் செய்யும் ருசியை அனுபவித்துக்கொண்டிருந்தார். (“சத்தம் போடாதீங்க ஏட்டய்யா.. என்று அந்த நிலையிலும் காமெடி செய்த மஹத்துக்கு உப்பில்லாத கஞ்சியைத் தருவது நல்லது!).

யார் யாரை நாமினேட் செய்வது என்பது தொடர்பான சதியாலோசனைகள் ஆங்காங்கே நடைபெற்றன. ‘இவ்ளோ பிரச்னை போயிட்டிருக்கு.. உங்க பிரெண்டு.. டேனி என்ன ..  _டுங்கறான்” என்று ஆத்திரப்பட்டார் பாலாஜி. 

வைஷ்ணவியை பிக்பாஸ் முதலில் அழைத்ததோடு நாமினேஷன் தொடங்கியது. மும்தாஜ் மற்றும் டேனியைத் தேர்ந்தெடுத்தார் வைஷ்ணவி. (நான் சொல்லல.. என்று கிண்டலடித்துக் கொண்டு வந்த டேனி.. ‘ஷார்ட்டா முடிச்சிடும்மா” என்று நக்கலடித்தார்). “டேனி தொடர்ந்து கிண்டல் செய்வதன் மூலம் என்னை நெறைய ஹர்ட் செஞ்சிருக்கார்..  மும்தாஜ் கிட்ட கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கு.. அவங்க பேசற விதம் சரியில்லை” என்கிற காரணங்களைச் சொன்னார் வைஷ்ணவி.

“சரி.. கிச்சனுக்குப் போகலாமா?” என்ற மும்தாஜை.. “இருங்க யாராவது திரும்பவும் கூப்பிடுவாங்க” என்று ஜாலியாகச் சொன்னார் டேனி. “வைஷ்ணவிக்கு முதல் நாள்ல இருந்தே என்னைப் பிடிக்காது.. அவங்க கண்ல இது நல்லா தெரிஞ்சது” என்று சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ்.  

அடுத்து, பொன்னம்பலம் தேர்ந்தெடுத்தது, யாஷிகா மற்றும் டேனியை. “ஒரே சைட்ல பேச்சைக் கேட்டு போயிட்டிருக்காங்க.. மத்தவங்களுக்குச் சங்கடமா இருக்கு.. எனக்கும் சங்கடமா இருக்கு” என்று யாஷிகாவுக்கான காரணத்தைச் சொன்ன பொன்னம்பலம், “தான் கெட்டது இல்லாத மத்தவங்களையும் கெடுக்கறாரு.. இன்னமும் வெறுப்பேத்தற கிண்டல் குறையவில்லை” என்கிற வழக்கமான காரணத்தை டேனியிடம் சொன்னார். “என்ன வெறுப்பேத்தினேன். சொல்லுங்க திருத்திக்கறேன்” என்று டேனி கேட்ட போது ‘அதையெல்லாம் கமல் முன்னாடி சொல்லிக்கறேன்” என்று மெல்லிய விரோதத்துடன் கிளம்பிச் சென்றார் பொன்னம்பலம். “முன்ன பேசினேன் சரி.. இப்ப.. அவரு பேச்சுக்குப் போனேனா..இனிமே வெச்சு செய்யறேன்” என்று பின்னர் சொல்லிக் கொண்டிருந்தார் டேனி.

வைஷ்ணவி மற்றும் பொன்னம்பலத்தைத் தேர்வு செய்தார் ஷாரிக். ‘ஒரு விஷயம் என்னன்னே புரியாம..மத்தவங்க கிட்ட வைஷ்ணவி எடுத்துட்டுப் போறாங்களாம். வார்த்தையை விடறது.. அப்புறம் மறந்துட்டேன்னு சொல்றது.. போன்ற பொன்னம்பலத்தின் காரியங்கள் இவரை ஹர்ட் செய்யுதாம்’ இவை ஷாரிக் முன் வைத்த காரணங்கள்.

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை ரித்விகா தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யமில்லை. (தமிழ்ப் பொண்ணுதான் ஜெயிக்கணும்!). யாஷிகாவுக்கு task செய்யும் போது இருக்கிற ஆர்வம் மற்ற சமயங்களில் இல்லை. ஐஸ்வர்யா அவங்க பெயரைச் சொன்னாலே புரிஞ்சுக்காமக் கோபப்படறாங்க” என்பது ரித்விகாவின் விளக்கம். 

மும்தாஜ் தேர்ந்தெடுத்தது, சென்றாயன் மற்றும் வைஷ்ணவியை. “சென்றாயன் கிட்ட பேசறதுக்குக் கூச்சமா (?!) இருக்கு. அன்பா ஒரு விஷயம் சொன்னா கூட புரிஞ்சுக்காமக் கத்தறாங்க.. வைஷ்ணவி கூட முதல் நாள்ல இருந்தே பஞ்சாயத்துதான்’ என்ற மும்தாஜ், வைஷ்ணவிக்குப் பொட்டு வைக்கும் போது ‘திருஷ்டி படக்கூடாதில்லையா’ என்று மறைமுகமாகக் கிண்டலடித்தார். 

டேனி பொன்னம்பலத்தைத் தேர்வு செய்தது எதிர்பார்க்கக் கூடியதே. கூடவே வைஷ்ணவியையும் அவர் தேர்வு செய்தார். “வைஷ்ணவி கூட ஒரு ஸ்டேஜ் வரைக்கும் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. அதுக்கப்புறம் அவங்க ஃபேக்கா தோணுது” என்ற டேனி, “மத்தவங்களையெல்லாம் குறை சொல்றார். ஆனா இவரு வயசுக்கேத்த மாதிரி நடந்துக்கலை. கமல் சார் வர்ற அன்னிக்கு மட்டும் ஒழுங்கா நடந்துக்கற மாதிரி இருக்கார்” என்று பொன்னம்பலத்தின் மீது புகார் வைத்தார். 

வைஷ்ணவி மற்றும் மும்தாஜைத் தேர்ந்தெடுத்தார் சென்றாயன். வழக்கம் போல் காரணங்களைச் சொல்வதில் சொதப்பினார். ‘ஹைஜீனிக்’ என்கிற வார்த்தைக்கு ‘நைஜீரியன்’ என்றும்.. ‘ஹர்ட்’ என்பதை ‘ஹாட்’ என்றும் இவர் மாற்றிச் சொல்ல சிரிப்பலைகள் மிதந்தன. ‘மும்தாஜ்.. நல்லவங்கதான்’ என்று இவர் துவங்க.. “அப்ப ஏன் நாமினேட் பண்றீங்க?” என்று பாயின்ட்டைச் சரியாகப் பிடித்தார் மும்தாஜ். ‘இவங்க மருந்து மாத்திரைங்கலாம் எடுத்துக்கறாங்க” என்று சென்றாயன் மறுபடியும் சொதப்ப, “இதெல்லாம் காரணம் கிடையாது’ என்று மும்தாஜ் மறுத்தார். ‘டாஸ்க் செய்ய சிரமப்படறாங்க” என்று ஒருவழியாகக் காரணத்தைத் தேடிப்பிடித்தார் சென்றாயன். “யாஷிகா குழந்தை மாதிரியாம்.. பக்குவம் போதாதாம்” (இருட்டுஅறையில் முரட்டுக்குத்து படம் இன்னமும் பார்க்கலையா.. செண்டு!). 

“ஒரு காரணத்தைச் சரியாச் சொல்லி ஆரம்பிக்க வேண்டியதுதானே.. ‘நீங்க நல்லவங்க’ன்னா ஆரம்பிப்பாங்க..” என்று பிறகு சென்றாயனை அழுத்தமாகக் கோபித்துக் கொண்டார் பாலாஜி.

யாஷிகா, பொன்னம்பலத்தையும் வைஷ்ணவியையும் தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யமில்லை. “நெறய பொய் சொல்றாரு.. சொன்னதை ஏத்துக்க மாட்றாரு..” என்பது பொன்னம்பலத்துக்கான காரணங்கள். “அவங்களா ஒண்ணை யூகம் பண்ணிக்கிட்டுப் பேசறாங்க.. ஹர்ட் ஆகுது” என்பது வைஷ்ணவிக்காகச் சொல்லப்பட்ட காரணம். 

“யாஷிகா கூட இன்னமும் எனக்கு கனெக்ட் ஆகலை” என்கிற காரணத்தைச் சொன்னார் ஜனனி. (நல்ல எலெக்ட்ரிஷியனைப் பாருங்க!). “தப்பாப் புரிஞ்சுக்கிட்டு கோபப்படறாங்க” என்பது ஐஸ்வர்யாவுக்கான காரணம். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

“ஒருதலைப்பட்சமாக நடந்துக்கறாங்க.. அவங்களுக்கு வேண்டிய ஆளுன்னா ஒருமாதிரி இருக்காங்க” என்பது மும்தாஜ் குறித்து பாலாஜி சொன்னது. ‘மெச்சூரிட்டியே இல்ல. இன்னமும் குழந்தை மாதிரிதான் பிஹேவ் பண்றாங்க’ என்பது ஐஸ்வர்யாவுக்கான காரணம். 

கரும்புள்ளி, செம்புள்ளியுடன் ஒருவழியாக இந்த நாமினேஷன் சடங்கு முடிந்தது. சிறையில் உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் ஜாலியாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார் மஹத். 

ஆக… எவிக்ஷன் பட்டியலில் வந்தவர்கள் வைஷ்ணவி, மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் பொன்னம்பலம். (தொடர்ந்து ஆறாவது வாரம் வந்து சாதனை படைக்கிறார் சித்தப்ஸ்!) நேரடியாகத் தகுதியாகும் பெருமை மஹத்துக்கு. 

‘நிமர்ந்து நில், துணிந்து செல்’ பகுதியில் சிறப்பாகச் செயல்பட்டமைக்காக ‘சூப்பர் பவர்’ தரப்பட்ட ஐஸ்வர்யா, இந்த எவிக்ஷன் பட்டியலிலிருந்து தன்னையே காப்பாற்றிக் கொண்டார். வேற எவரையாவது காப்பாற்றலாம் என்கிற வாய்ப்பை அவர் பயன்படுத்தவில்லை. 

“இந்த முறை பொன்னம்பலம் நிச்சயம் வெளியேற்றப்படுவார்’ என்று ஐஸ்வர்யா, மஹத்திடம் ஆவலாகச் சொல்லிக் கொண்டிருந்த காட்சியோடு இன்றைய நாள் முடிவடைந்தது.  

இந்த விளையாட்டை ஒட்டுமொத்த நோக்கில் கவனித்து, அதற்கான ஆக்கப்பூர்வமான அசைவுகளை நிகழ்த்தாமல், தனிப்பட்ட நட்பு மற்றும் விரோதங்களின் அடிப்படையிலும் அற்பக் காரணங்களின் மீதாகவும் பெரும்பாலான போட்டியாளர்கள் இயங்குவது அவர்களின் மனோபாவத்தில் இன்னமும் பெரிதான மாற்றம் ஏற்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது. 

சுவாரஸ்யமான புதிய போட்டியாளர்கள் எவராவது உள்ளே நுழைந்தால்தான் இந்த ஆட்டம் சூடு பிடிக்கும் என்று தோன்றுகிறது.