Published:Updated:

``இருக்கு... இன்னிக்கு நைட் வீர தீர சாகசங்கள்லாம் இருக்கு" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ஃபன்

தார்மிக் லீ

பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் நடந்தது என்ன?

``இருக்கு... இன்னிக்கு நைட் வீர தீர சாகசங்கள்லாம் இருக்கு" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ஃபன்
``இருக்கு... இன்னிக்கு நைட் வீர தீர சாகசங்கள்லாம் இருக்கு" - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ஃபன்

பிக் பாஸ் வீட்டுக்குள் பிளவு ஏற்பட்டு தனித்தனியாக அவரவர் கூட்டணியோடு சேர்ந்து புறணி பேசத் தொடங்கிவிட்டார்கள். போதாக்குறைக்கு நேற்று கரும்புள்ளி செம்புள்ளி வைத்து நாமினேஷன் பிராசஸ் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது?  

* கார்டன் ஏரியாவில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது, பிக் பாஸ். ஞாயிற்றுக் கிழமை `கார்கில் காலிங்' என்ற போட்டியைப் பற்றி சொன்னார், கமல். அதன் விளம்பரப் பலகையோடு, எல்லையில் இருப்பதுபோல் முள் கம்பிகள், டயர்கள், ஆங்காங்கே சிவப்பு மார்க், நீல, மஞ்சள் நிறக் கொடிகள்... என ஒட்டுமொத்த கார்டன் ஏரியாவும் குட்டி கார்கிலைப் போல இருந்தது. வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் தடைகளைத் தாண்டி குறைந்த நேரத்தில் வருபவர்தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பது தெரிகிறது. இதுதான் இந்த வாரத்திற்கான லக்ஸரி டாஸ்க்காகவும் இருக்கும். மிலிட்டரி டிசைன் கொண்ட ஒரு பைக்கும் நின்றுகொண்டிருந்தது. ஏற்கெனவே விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கடும் கோபத்தில் இருக்கிறார், பிக் பாஸ். இதுதான் சாக்கு என ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் பின்னிப் பெடலெடுக்கப்போகிறார் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.  

* மஹத் இன்னும் சிறையில்தான் அடைபட்டுக் கிடக்கிறார். சாப்பாடு கிடையாது, எந்த டாஸ்க்கிலும் கலந்துகொள்ளக் கூடாது என்ற நிபந்தனைகளை மஹத்துக்கு வழங்கியது, பிக் பாஸ். அதை தண்டனையாகப் பார்க்காமல் வெளியே நடக்கும் களேபரங்களில் குளிர் காய்ந்துகொண்டிருக்கிறாரா மஹத்?. மற்ற அனைவரும் ராணுவ அதிகாரிகளைப் போல முகத்தில் கறுப்பு மையைத் தடவிக்கொண்டு எதிரி நாட்டு வீரர்களுடன் போர் புரிவதுபோலக் கம்பீரமாக வீர நடைபோட்டு தயாராகிக்கொண்டிருந்தார்கள். எலியும் பூனையுமாக அடித்துக்கொண்டிருந்த டேனியலும், பாலாஜியும் யாரையோ கலாய்த்துக்கொண்டு ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தனர். டேனியல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார். கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட் போல சோர்வாக இருந்த முகம், இந்த வாரம் டி-20 ஆக மாறி மீண்டும் கலாய்த்து துவம்சம் செய்துகொண்டிருந்தது. மஹத்துடனும் பழையபடி சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.  

* உள்ளே போட்டியாளர்கள் மூன்று அணியாகப் பிரிந்திருந்தனர். மிலிட்டரி ஆடை அணிந்து சிலர், நீல நிற ஆடை அணிந்து சிலர், மஞ்சள் நிற ஆடை அணிந்து சிலர்... என இந்த மூன்று அணிகளும் தீவிரமாகக் கலந்துரையாடி திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர். இதில், பொன்னம்பலம் மட்டும் மிலிட்டரி ஆடை அணிந்துகொண்டிருந்தார். அனேகமாக இவர்தான் நடுவராக இருக்க வேண்டும். இதற்கு நடுவில் கேமராவைப் பார்த்த மஹத், 'என்ன ஜனங்களே நாங்க போடுற சண்டையையெல்லாம் பார்த்து ஜாலியா இருக்கீங்க போல!' என்று நக்கலடித்தார். உள்ளுக்குள் இருக்கும் சிலரே நீங்க போடுற சண்டையைப் பார்த்து ஜாலியா டைம்பாஸ் பண்றதெல்லாம் உங்களுக்குத் தெரியலையா மஹத் ப்ரோ?! 

* நேற்றுவரை போர்க்களமாக இருந்த வீடு, தற்போது கலகலவென மாறத் தொடங்கியிருக்கிறது. தமிழில் பேசாமல் இருந்ததால் கடுப்பான பிக் பாஸ், இந்த வாரத்துக்குத் தலைவரே வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா, யாஷிகா உட்பட அனைவரும் தூயத் தமிழிலேயே பேசிக்கொண்டிருக்கிறார்கள். டேனியலுக்கும், ரித்விகாவுக்கும் வாய்க்கால் தகறாரு போல, ஐஸ்வர்யாவிடம் சொல்லி ரித்விகாவுக்கு `டீ வேணுமானு கேட்டுச் சொல்லு' என சைகையில் கேட்டு அறிந்துகொண்டார். (இம்புட்டுப் பாசம் இருக்கிற ஆள் நேராவே கேளு... கேட்டுத்தான் பாரு... நீதான் தைரியமான ஆளாச்சே!) இதற்கு நடுவில் ஜனனியையும், மும்தாஜையும் கன்ஃபஷன் அறைக்கு அழைத்தார், பிக் பாஸ்.

* சென்றாயனை அழைத்து முக்கால் மணி நேரமாக கதைத்துக் கொண்டிருந்தார், வைஷ்ணவி. மனுஷன் பாவம் முதுகை முறிக்கிறார், மூக்கைச் சொரியுறார்... ஆனால், வைஷ்ணவி விடுவதாக இல்லை. தன்னுடைய பதினாறு வயதில் நிகழ்ந்த சம்பவத்தை ஆரம்பித்தவர், காடு, மலை, இடி, புயல் என எங்கெங்கோ கூட்டிச் சென்று சென்றாயனைக் கதிகலங்கச் செய்துவிட்டார். சென்றாயனின் நிலையறிந்த டேனி, `ஐயா, சென்றாயா... இங்க வாங்க' எனக் கூப்பிட, `இதான்டா சாக்கு' என்றபடி தெறித்து ஓடிவிட்டார், சென்றாயன். இதற்கு நடுவில் மஹத் இருந்த ஜெயிலில் கொசு வலை அமைத்துத் தரப்பட்டது. இதுக்கு பெங்களூர் ஜெயிலே பரவாயில்லை போலயே!. 

ஆகமொத்தம், இன்று பிக் பாஸ் வீடு ஒரு குட்டி கார்கிலாகக் காட்சியளிக்கும். சில வீர சாகசங்களும் நமக்காகக் காத்திருக்கின்றன. பொருத்திருந்து பார்ப்போம்!