Published:Updated:

``பாத்ரூம் போகணும்... ஆத்திரமா வருது மக்களே!" பிக்பாஸில் சென்றாயனின் 'சொட்டு' நீர் போராட்டம் #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்

பிக் பாஸ் வீட்டில் 39-ம் நாள் என்ன நடந்தது?

``பாத்ரூம் போகணும்... ஆத்திரமா வருது மக்களே!" பிக்பாஸில் சென்றாயனின் 'சொட்டு' நீர் போராட்டம் #BiggBossTamil2
``பாத்ரூம் போகணும்... ஆத்திரமா வருது மக்களே!" பிக்பாஸில் சென்றாயனின் 'சொட்டு' நீர் போராட்டம் #BiggBossTamil2

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலான பார்வையாளர்களின் கோபத்தை மும்தாஜ் சம்பாதித்துக்கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு சென்றாயனை ‘விநோதமாக’ டார்ச்சர் செய்துகொண்டிருந்தார். ‘ஆத்திரத்தை அடக்கினாலும் _த்திரத்தை அடக்க முடியாது’ என்கிற பழமொழி மும்தாஜுக்கு ஒருவேளை தெரிய வாய்ப்பில்லை என்றாலும், நடைமுறை அனுபவத்தில் நிச்சயம் அது போன்ற சிக்கலை அனுபவித்திருப்பார். இந்த விஷயத்தில் ஆண்களைவிடவும் பெண்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சங்கடங்கள் அதிகம் எனில், ஏன் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ நயன்தாரா மாதிரி ‘பாடேன்’ ‘பாடேன்’ என்று சென்றாயனைத் தொடர்ந்து தொந்தரவு செய்ய வேண்டும்?

“இந்தப் பாட்டை பாடித்தானே முதல் ரேங்க் வாங்கினீங்க, அப்ப பாடுங்க” என்று மும்தாஜ் சொல்வதன் மூலம் தானே அம்பலப்பட்டுக் கொண்டார். ‘இவனுக்கெல்லாம் போய் முதல் ரேங்க்கா’ என்று அவருக்குள் இருந்த எரிச்சலை ‘சிறுநீர் பாசன விவகாரத்தில்’ தீர்த்துக் கொண்டது பயங்கர வன்மம். “பாட்டுக்காக அல்ல, இன்ன பிற விஷயங்களுக்காகத்தான் எனக்கு முதல் ரேங்க்’ கிடைத்தது என்று சென்றாயன் விளக்கம் அளித்தாலும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘அவரை மோட்டிவேட்’ செய்வதற்காகத்தான் அப்படிச் செய்தேன்’ என்று பிற்பாடு அவர் சொன்னது அராஜகத்தின் உச்சம். ‘உச்சா’ வரும் சமயத்திலா உத்வேக உரையை ஆற்றுவது? மூத்திரம் முட்டிக் கொண்டு வரும் நேரத்தில் ‘கல்யாணி’ ராகத்தில் ஸ்ருதி விலகாமல் ஒரு பாட்டு பாடு என்பது எத்தனை விநோதமான சித்திரவதை? 

ஒருவேளை சென்றாயன் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப கழிவறைக்கு வருகிறார் என்ற கோணம் இருந்தாலும்கூட ‘சந்தேகத்தின் பலனை’ அவருக்கு அளித்துதானே ஆக வேண்டும். ‘விஷயம்’ அப்படிப்பட்டதல்லவா. கழிப்பறைக்கு வரும் மற்றவர்களுக்கு எளிய டாஸ்க்குகளைத் தந்துவிட்டு ‘எனக்குப் பாடத் தெரியாதய்யா’ என்று ஒப்புக்கொள்ளும் சென்றாயனை ‘பாட்டு வகுப்பில் வலுக்கட்டாயமாக மும்தாஜ் அமர்த்துவது’ நிச்சயம் பாரபட்சமானது. 

‘சென்றாயன் பாடிய பாடலில் எவ்வளவு பிழையிருக்கிறதோ அந்த அளவுக்கான சிறுநீர் சதவிகிதத்தை வேண்டுமானால் போக வேண்டாம்’ என்று விதியையாவது சற்று தளர்த்தியிருக்கலாம் மும்தாஜ். அந்த கருணையும் அவருக்கில்லை. 

இது ஒரு வகையில் ஆக்ரமிப்பு போர்தான். போரில் நியாய தர்மம் எல்லாம் பார்க்கத் தேவையில்லைதான். ஆனால், அடிப்படையான மனிதாபிமானத்தை எப்போதும் இழக்கக் கூடாது என்பதும் போர் தர்மத்தின் ஒரு பகுதிதான். இந்த விஷயத்தில் பரஸ்பரம் இரு அணிகளுமே சமயங்களில் அற்பமாக நடந்துகொள்கிறார்கள். 

மும்தாஜின் பிடிவாதத்துக்கும் வீம்புக்கும் வானம்தான் எல்லை. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே சென்றாயனை மேட்டிமைத்தனமான உணர்வுடன் சிறுமைப்படுத்துவர்களின் பட்டியலில் மும்தாஜும் இருக்கிறார்.   

இனி சென்றாயன் தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பாடலாக இருக்கப்போவது ‘டெரா டெரா டெராபைட்டா காதல் இருக்கு’. பாடல் பெற்ற ஸ்தலமாகப் பிக்பாஸ் வீடு அமையப்போகிறது என்பதை இதை எழுதிய மதன் கார்க்கி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். 

**

38-ம் நாளின் நிகழ்வுகள் இன்னமும் ஓயவில்லை. ‘எங்க ஏரியா’ டாஸ்க்கில் பிக்பாஸிற்கு நிறைய ஃபுட்டேஜ்கள் கிடைப்பதால் ‘ஒரு நாள் கூத்து’ என்பதாக அல்லாமல் இப்போதெல்லாம் கலந்து கட்டி சந்தோஷமாக விளையாடுகிறார். 

‘கடுக் முடுக்’கென்ற கர்ணகடூரமான சத்தத்தோடு, சமையல் அறையிலிருந்து லவட்டி வந்த ஓர் ஆப்பிளை பாலாஜி சாப்பிடுவதோடு இன்றைய நாளின் நிகழ்ச்சி துவங்கியது. உலகத்தைச் சுற்றாமல் அம்மையப்பனை சுற்றி எளிதாக ‘ஞானப்பழம்’ பெற்ற பிள்ளையாரைப் போல், ‘டாஸ்க்’ செய்யாமல் தனக்குத் தேவையாக இருந்த டவலை ‘மஹத்திடமிருந்து’ வாங்கிக் கொண்டார் ஜனனி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ‘ஸ்ட்ரிக்ட்’ ஆபிசரான ரித்விகா, ‘இப்ப ‘டாஸ்க்’ல இருக்கல்ல.. ஏன் டவலை கொடுத்தே? போய் வாங்கிட்டு வா’ என்று சொன்னவுடன் ‘நான் இந்த டீம்முன்னே’ மறந்துட்டேன்’ என்று அலட்சியமாகச் சொன்னார் மஹத். பொறுப்பின்மையின் இன்னொரு பெயர் மஹத். 

‘நண்பா.. நம் நட்பு அவ்வளவுதானா?’ என்கிற சிலபல அலப்பறைகளுக்குப் பிறகு டவலை திரும்பத் தந்தார் ஜனனி. ‘சேர மன்னா.. இந்த ரித்விகாவிற்கு தண்டனையைத் தூக்குதலாக கொடுங்கள்’ என்று ஏற்கெனவே இம்சை அரசனாக இருக்கும் பொன்னம்பலத்திடம் தூபம் போட்டார் ஜனனி. (இஞ்சியையும் பச்சை மிளகாயையும் கலந்து தின்று கொண்டே ‘‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லிக் கொண்டு கார்டனை மூன்று முறை வலம் வர வேண்டும்’ என்று பொன்னம்பலம் இப்போதே டெரராக யோசித்துக் கொண்டிருக்கக்கூடும்) 

ஒரே அணிக்குள்ளேயே., ஒரு சமயத்தில் ‘பஞ்ச பாண்டவர்கள்’ என்கிறார்கள். இன்னொரு சமயத்தில் ‘சேர மன்னா’ என்று அழைத்துக் கொள்கிறார்கள். ஏதாவது ஒன்றை முடிவு செய்யுங்கள் மன்னர்களே. வரலாறு முக்கியம். 

“எங்க ஏரியா’ டாஸ்க் முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஆம். ‘பாத்ரூமை கைப்பற்றுவதற்கான போட்டி. கார்டன் ஏரியாவில் இரண்டு ஷவர்கள் இருக்கும். ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்படுவார். தரப்பட்டிருக்கும் நேரத்திற்குள் குளித்து எவர் அதிகம் சோப்பை முதலில் கரைக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர். (வீட்ல குழந்தைங்க அநாயசமா பண்ற விஷயத்தையெல்லாம்.. ‘டாஸ்க்கா வெக்கறாங்க.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு!).

மஞ்சள் அணியில் இருந்து இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ‘மஹத்’ அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. பொது இடத்தில் குளிப்பது மாதிரியான போட்டியில் பெண்கள் கலந்து கொள்ள முடியாது. எனவே அணியில் இருந்த ஒரே ஆண் பிள்ளையான மஹத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ‘இந்த லூசுப் பய என்னத்தை பண்ணப் போறானோ’ என்று ஆசிர்வாதம் செய்து அனுப்பினார் தலைவி மும்தாஜ். 

கழிவறை மிக அத்தியாவசியமான இடம் என்பதால் அதற்கான வியூகங்களும் சதித்திட்டங்களும் உக்கிரமாக இருந்தன. “சோப்பை நகத்தை வெச்சு சுரண்டி எடுத்துடு” என்று வில்லங்கமாக ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார் நீல அணியைச் சேர்ந்த டேனி. (இதுதான் பிற்பாடு அவர்களுக்கே பெரிய ஆப்பாக திரும்பப் போகிறது என்று தெரியாமல்). இவர்கள் அணியில் ‘குளியலாளராக’ தேர்ந்தெடுக்கப்பட்டவர் சென்றாயன்.

‘உப்பை கொஞ்சம் பாக்கெட்ல வெச்சுக்கிட்டு தேச்சா.. சோப்பு சீக்கிரம் கரைஞ்சுடும்’ என்று ‘தெர்மகோல்’ அளவிற்கு விஞ்ஞான ஐடியாவை தந்து கொண்டிருந்தார் ‘இம்சை’ பொன்னம்பலம். ‘எப்படி தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும்’ என்பதை ஆவேசமாக டெமோ செய்து காட்டினார் ஐஸ்வர்யா.  “இதெல்லாம் தப்பு. வேண்டாம் மாட்டிக்குவோம்’ என்று எச்சரிக்கையுடன் சொன்னது ஜனனி மட்டுமே. 

இதெல்லாம் கூட சரி. ஆனால் ‘ஜீன்ஸ்’பேண்ட் போட்டுக் கொண்டு குளித்தால் சோப் சீக்கிரம் கரையும் என்கிற ஐடியாவை யோசித்த விஞ்ஞானி எவர் என்று தெரியவில்லை. 

தனக்கான உடையை எடுப்பதற்காக ‘நடுவர்’ அனுமதியுடன் சென்றாயன் பெட்ரூமிற்குள் செல்ல, எதிரணியினர் கடுமையாக ஆட்சேபித்தனர். ‘வென்று.. நீதானே அனுமதி தந்தே’ என்று நீல அணி நடுவரைக் கேட்க.. இது தொடர்பான பஞ்சாயத்து  சிறிது நேரம் ஓடியது. 

கார்டன் ஏரியாவில் சென்றாயனும் மஹத்தும் அரை நிர்வாணமாக நிற்க அந்த மகத்தான போட்டி துவங்கியது. சென்றாயன் முதலில் இருந்தே சோப்பை எடுத்து தலையில் வைத்து ஆவேசமாக தேய்த்துக் கொண்டிருக்க ‘செண்டு.. அப்படித்தான்’ என்று உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தார் டேனி. சென்றாயனின் ஆவேசத்தைப் பார்க்கும் போது அவர்தான் ஜெயிப்பார் என்று தோன்றிற்று. இன்னொரு பக்கம் மந்தமாக குளித்துக் கொண்டிருந்தார் மஹத். 

பஸ்ஸர் ஒலித்ததும், உபயோகிக்கப்பட்ட சோப்புகளை விஞ்ஞானபூர்வமாக நீண்ட நேரம் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார் ‘நடுவர்’ ஷாரிக். (ரொம்ப கவனமாக இருக்கிறாராராமாம்). ஆராய்ச்சியின் முடிவில் சென்றாயன் ‘நேர்மையின்றி’ சோப்பை நகத்தால் கிள்ளி எடுத்திருப்பதை கண்டுபிடித்து ‘மஞ்சள் அணிக்கு’ வெற்றி வாய்ப்பை வழங்கினார். (ஆக கலர் காம்பினேஷன் ‘ஆருடம்’ எப்படியோ ஒர்க்அவுட் ஆகி விட்டது!). இதுவரை கிரிக்கெட் பந்துகளில்தான் ‘tampering’ என்கிற மோசடியை கேள்விப்பட்டிருக்கிறோம். சோப்பில் கூட அதைச் செய்ய முடியும் என்கிற சாதனையைப் படைத்தது பிக்பாஸ் வீடு. 

சென்றாயன் தனக்கான ‘டீ ஷர்ட்டை’ எடுக்க பெட்ரூமிற்கு செல்ல வேண்டியிருந்ததது.  மட்டுமல்லாமல் கழிவறைக்கும் செல்ல வேண்டியிருந்ததால் அதற்கான ‘டாஸ்க்கை’ மஹத்திடம் கேட்க, ‘கொஞ்சம் மிளகாய் பொடியை வாய்ல போட்டுக்க’ என்று ‘மினி’ பொன்னம்பலமாக மாறினார். ‘டீஷர்ட்’ எடுக்க பெட்ரூம் போன சென்றாயன், நைசாக போர்வை உள்ளிட்டவைகளையும் எடுத்துக் கொண்டு வந்து விட அது பஞ்சாயத்தாகியது. ‘மஹத்’ இதற்கு அனுமதி தந்து விட்டார் என்று சாதித்தது நீல அணி. ஸ்மோக்கிங் ரூமில் இருந்த மஹத்தை வலுக்கட்டாயமாக சாட்சி சொல்ல வெளியே அழைத்து வந்தார்கள். ‘நான் டீ ஷர்ட்’ எடுக்க மட்டும்தானே ‘டாஸ்க்’ கொடுத்தேன்’ என்று அவர் சொன்னதும் நீல அணியின் மோசடி அம்பலப்பட்டது. (இந்த அவமானம் தேவையா?!)

‘மும்தாஜூம் ஷாரிக்கும் கூட்டணி அமைத்து விட்டார்கள். இந்த டாஸ்க் முடிந்ததும் இருவரும் இணைந்து பாசப் பாட்டு பாடப் போகிறார்கள்’ என்கிற தன் யூகத்தையும் ஆரூடத்தையும் கலந்து சொன்னார் சென்றாயன். 

மும்தாஜின் பட்டினிப் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. ‘என் டீ என் உரிமை’ என்கிற கோஷத்தை அவர் கைவிடுவதாக இல்லை. “ஆனாலும்.. நீங்க பண்றது ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கு’ என்று சத்தமாக சுட்டிக் காட்டினார் மஹத். பல சமயங்களில் மஹத் பொறுப்பற்றவராகவும் விளையாட்டுப் பிள்ளையாகவும் இருந்தாலும் சில சமயங்களில் தன் சொந்த அணியின் தவறுகளை துணிச்சலுடன் சுட்டிக் காட்டும் நியாயவானாக இருப்பது சிறப்பு. “மும்தாஜ் செய்யறது அவங்க டீமிற்கே பிடிக்கலை’ என்று நடுவர் பதவியிலிருந்து வெளியே வந்து நீல அணியிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார் ஷாரிக். 

மும்தாஜின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை துவங்கியது. “நாங்க சாப்பாடு கொடுக்க ரெடியாத்தான் இருக்கோம். ‘ஆனா நான் சமைப்பேன்’ –ன்னு அவங்க சொல்றது எங்களுக்கு அவமானமில்லையா? டாஸ்க் முடியற வரைக்கும் கூட அவங்க மத்தவங்க செய்யறதை சாப்பிடலாம் இல்லையா? தன்னோட ‘கம்பஃர்ட் ஜோன்’ல இருந்து இறங்கியே வரமாட்டேன்’னு சொன்னா எப்படி? என்று ஜனனி கேட்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 

இதைப் பற்றி நீல அணியிடம் மஹத் பேச ‘காப்டன்தானே பேசணும். இவனை பிரெயின் வாஷ் பண்ணி அனுப்பப் போறாங்க’ என்று அதற்கும் முட்டுக் கட்டை போட்டார் மும்தாஜ். இதற்கான வட்ட மேஜை மாநாடு துவங்கியது. மும்தாஜ், ஜனனி என இரண்டு பேட்டை ரவுடிகளும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டார்கள். ‘நான் பழிவாங்கறேன்னு மும்தாஜ் நெனக்கறாங்க. என் மனசுல அப்படில்லாம் கிடையாது’ என்றார் ஜனனி. ‘டேய்.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்.. என்னைப் பத்தி உனக்குத் தெரியும். நாம யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்’ என்கிற கவுண்டமணியாக, ஜனனியின் பேச்சை இடது கையினால் தள்ளி விட்டார் மும்தாஜ். ஆக.. பேச்சுவார்த்தை தோல்விக்கு வந்து கலைந்து சென்றார்கள். 

“இப்ப பாத்ரூம் போகணும். என்ன டாஸ்க் தரப் போறாங்கன்னு பாருங்க’ என்று கிளம்பினார் சென்றாயன். ‘ரெண்டாவது பாத்ரூமையும் கழுவிடுங்க’ என்றார் வைஷ்ணவி. பாத்ரூம் கழுவியே சென்றாயனின் நூறு நாட்களும் முடிந்து விடும் போலிருக்கிறது. கழிவறைக்குள் நுழைந்த சென்றாயனை, அலட்சியமான தோரணையில் மும்தாஜ் தடுத்தார் போலிருக்கிறது. ‘நீங்களும் ஆர்டிஸ்டு.. நானும் ஆர்ட்டிஸ்ட்’ என்று கோபப்பட்டார் சென்றாயன். (இதையேதான் முன்பு பாலாஜியிடமும் ஒரு முறை சொன்னார்). ‘உங்களுக்கு டாஸ்க் கொடுத்தாச்சு –ன்னு எங்களுக்குத் தெரியாது. சிம்பிளா ஏதாவது தரலாம்-னுதான் பேசிட்டு இருந்தோம்’ என்றார் ரித்விகா. மும்தாஜிற்கும் சென்றாயனுக்கு நிகழ்ந்த மோதலை சமாதானப்படுத்தி வைத்தது ரித்விகாதான். ஆனால், ‘ரித்விகா இப்பல்லாம் பாரபட்சம் பார்க்கிறா’ என்று பாலாஜியிடம் பிறகு புறணி பேசிக் கொண்டிருந்தார் மும்தாஜ்.

சரியாக நள்ளிரவு  12:45-க்கு ஆரம்பித்தது, காமெடியும் டிராஜிடியும் கலந்த அந்த டிராமா. கழிவறையை உபயோகப்படுத்தலாம் என்று வந்த சென்றாயனை ‘பாட்டுப் பாடுங்க’ என்று இம்சைப்படுத்த துவங்கினார் மும்தாஜ். டேனியும் ஜனனியும் வந்து உதவியும் கூட அவரால் பாடல் வரிகளை சரியாகப் பாட முடியவில்லை. அவர் நடிக்கவில்லை என்பது வெளிப்படை. நவீன ஆங்கில வார்த்தைகள் கலந்த பாடலை ஒரு கிராமத்து ஆசாமியால் சரியாக உச்சரிக்க முடியாது என்பது புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் இது மும்தாஜிற்குப் புரியவில்லை. 

‘மறுபடி முதல்ல இருந்து’ என்று தொடர்ந்து ஏழரையைக் கூட்டிக் கொண்டிருந்தார். “பாருங்க.. எனக்கு ரொம்ப அர்ஜெண்ட்டா வருது.. போய்ட்டு வந்து பாடறேன்’ என்றாலும் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் கோபமடைந்த சென்றாயன் ‘மச்சான்.. இங்கேயே எங்காவது போயிடுவேன்.. பார்த்துக்க’ என்று டேனியிடம் சொன்னதும் முகம் சுளித்தார் மும்தாஜ். ‘நீங்க பிராக்டிஸ் பண்ண பாட்டுதானே.. இதுக்குத்தானே முதல் ரேங்க் வாங்கினீங்க?” என்று தன் வன்மத்தை வெளிப்படுத்தினார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் இந்த டிராமா நீடித்தது. பிறகு ஒருவழியாக அனுமதி கிடைத்தது. ‘சீக்கிரம் போயிட்டு வந்துட்றா’ என்றார் டேனி. (இவ்வளவு சிரமப்பட்டு கிடைச்ச அனுமதியை சீக்கிரமா முடிப்பது? ஆற அமர நிதானமாகவே அனுபவிக்கலாம்!). “கதவ ஒடைப்பேன்றாரு.. இங்கயே போய்டுவேன்றாரு.. பண்ணச் சொல்லுங்களேன் பார்க்கலாம். என்ன மாதிரி சீப் பிஹேவியர்..” என்று பிறகு எரிந்து விழுந்த மும்தாஜ், கட்டணக் கழிப்பிடங்களில் வெளியே காசு வாங்கும் ஆயா மாதிரி ‘பாத்ரூம்’ வாசலிலேயே காவலுக்காக படுத்துக் கொண்டார். (இதுதான் அசல் cheap  behaviour!)

பிறகு ஊதுவத்தி கொளுத்துவதற்காக கிச்சன் வந்த மும்தாஜை பழிக்குப் பழி வாங்கினார் டேனி. எரிவாயுவை அணைத்து விட்டு ‘வேலை செய்யவில்லை’ என்று ஜாலியாக நாடகமாடினார். “டேங்கப்பா.. உலக நடிப்புடா சாமி’ என்று பிரமித்தார் ஜனனி.  ‘அவங்க பொம்பளை வேஷத்துல இருக்கற ஆம்பளை’ என்று சென்றாயன் சொன்னது ஓவர்தான்.

39-ம் நாளின் காலை ‘யாரடி.. நீ மோகினி’ என்ற பாடலுடன் விடிந்தது. (டெராபைட் பாடலைப் போட்டிருந்தாலாவது சென்றயானுக்கு உபயோகமாக இருந்திருக்கும்). சென்றாயனை பாட வைத்து பாடு படுத்திய பிரச்னையும், டேனி எரிவாயுவை அணைத்த பிரச்னையும் மறுநாள் காலையில் வெடித்தது. ‘நாங்கள் எரிவாயுவை அணைக்கவில்லை’ என்று சாதித்தார் டேனி. நள்ளிரவிற்குப் பிறகு சென்றாயனுக்கு மறுபடியும் ‘பாத்ரூம் டாஸ்க்’ நடந்திருக்கிறது போல. “கார்டன் ஏரியாவை சுத்தி வரச் சொன்னாங்க. அப்புறம் பாதில வரச் சொல்லிட்டாங்க” வருத்தத்துடன் அதைப் பகிர்ந்து கொண்டார். 

‘கிச்சன் டீம்தான் எரிவாயுவை அணைத்திருக்கிறது என்பதை கண்டுபிடித்து விட்டார் சிஐடி சங்கர் ஷாரிக். ‘யாரை ‘யோவ்’ன்றீங்க?” என்று பிறகு டேனியிடம் ‘கெத்து’ காட்டினார் ஷாரிக். (இருடி மாப்ளே.. டாஸ்க் முடியட்டும்!) ஆனால் சென்றாயனை மட்டும் ‘வந்தான்’ என்று ஏகவசனத்தில் குறிப்பிட்டார் ஷாரிக். 

‘இடுப்பைப் பார்த்தேன்.. பார்க்கலை’ என்கிற ‘குஷி’யான பிரச்னையைப் போல இந்தப் பஞ்சாயத்தும் நீண்ட நேரம் கடந்தது. ‘இது எங்க நாடு.. நாங்க இங்க என்ன வேண்டுமானாலும் செஞ்சிப்போம். கேஸை ஆஃப் பண்ணுவோம்..” என்று அங்கு வந்த பொன்னம்பலம் இந்தப் பஞ்சாயத்திற்கு திறமையான லாஜிக் மூலம் விடையைக் கண்டுபிடித்தார். (அதானே!) ‘நாடு.. கோட்டை’ என்று உண்மையான மன்னர் காரெக்ட்டரில் பொன்னம்பலம் ஐக்கியமாகி விட்டார் போல. தலையில் கிரீடம் இல்லாததுதான் குறை. 

“சென்றாயன் பர்ஸ்ட் ரேங்க்’ வாங்கிட்டதுதான் இவங்க பிரச்னையா?, ‘what a cheap behaviour’-ன்னு டிகிரேட் பண்றாங்க.. நான் எஸ்ஐ –க்கு விளக்கம் கேட்ட போது மட்டும் ஒட்டுமொத்த வீடே கோபமா கிளம்பி வந்தீங்கள்ல.. இப்பவும் வாங்களேன். அதை விட்டுட்டு கேஸை ஆஃப்  பண்ணதை ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கீங்க..” என்று ஆவேசமாக வெடித்து தீர்த்தார் டேனி. (செம பர்பாமன்ஸ் ப்ரோ!).

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

தன் அணியைச் சார்ந்தவர்கள் என்றாலும் நியாயத்தின் பக்கம் நிற்கிறார் மஹத். ஆனால் நெருக்கமான நண்பனின் பிரச்னை என்றாலும் கூட தான் சார்ந்திருக்கிற அணிக்கு விசுவாசமாக இருக்கிறார் பாலாஜி. என்னவொரு சுவாரசியமான முரண்?! “ஏண்டா உன்னால நாலு வரியை ஒழுங்கா பாட முடியாதா?” என்று சென்றாயனைக் கேட்டு மும்தாஜிற்கு விசுவாசத்தைக் காட்டினார் பாலாஜி. எளிய டார்க்கெட்டுகளை போட்டு நவுத்துவதே இவரின் வேலையாகப் போய் விட்டது. 

“சரி.. இரண்டு அணிகளும் செய்த தவறுகளுக்காக தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று ஷாரிக் சொன்னதை ஏற்றுக் கொள்ள மறுத்தார் மும்தாஜ். எனவே இதை பிக்பாஸிடம் ஷாரிக் எடுத்துச் சென்றார் போலிருக்கிறது. ‘சண்டை பத்தாது. இன்னமும் தீவிரம் வேண்டும்’ என்று அவர் சொல்லி விட்டார் போலிருக்கிறது. ‘போர் கடுமையாக இருக்கலாம்’ என்று ஷாரிக் சொல்ல… ‘போர்.. ஆம்.. போர்’’ என்று ஒவ்வொருவரும் இம்சை அரசர்களாக மாற ஆரம்பித்தார்கள். 

பாத்ரூம் பக்கம் போக வேண்டிய அவசியம் சென்றாயனுக்கு மறுபடியும் ஏற்பட்டது. வயிற்றைப் பிடித்துக் கொண்ட ஜனனியை ‘பிறகு டாஸ்க் செய்யலாம்’ என்று அனுமதித்தார்கள். ஐஸ்வர்யாவிற்கு தரையில் நீச்சல் செய்ய வேண்டும்’ என்கிற எளிய டாஸ்க். மற்றவர்களுக்கு எல்லாம் கழிவறை என்பது பெரிய பிரச்னையாக இல்லாத போது சென்றாயனுக்கு அது இமாலயப் பிரச்னையாக மாறி விட்டது. 

“சரி.. என்ன டாஸ்க் சொல்லுங்க.. செய்யறேன்’ என்றார் சென்றாயன். ‘அஞ்சு முறை பாட்டுப் பாடுங்க’ என்று ஏழரையை மறுபடியும் ஆரம்பித்தார் மும்தாஜ்.

அடப்போங்கடா.. டேய்.. முடியலை.