Published:Updated:

அடிதடி, கட்டிப்பிடி, கழுத்தைக் கடி...பிக்பாஸின் ரணகள ஆபரேஷன்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
அடிதடி, கட்டிப்பிடி, கழுத்தைக் கடி...பிக்பாஸின் ரணகள ஆபரேஷன்! #BiggBossTamil2
அடிதடி, கட்டிப்பிடி, கழுத்தைக் கடி...பிக்பாஸின் ரணகள ஆபரேஷன்! #BiggBossTamil2

இன்று பிக் பாஸ் வீட்டில் ஒருவழியாக ‘எங்க ஏரியா உங்க வராத’ டாஸ்க் முடிவடைந்தது. இதன் இறுதிப்பகுதி ரணகளமாக அமைந்திருந்தாலும், கடந்த வாரங்களில் தொய்வடைந்திருந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக்கியது இந்த டாஸ்க்தான். மும்தாஜ் தலைமையில் அமைந்த மஞ்சள் அணியில் பெண்களே அதிகம். ஆண்கள் குறைவு. என்றாலும் பெரும்பாலும் உடல் பலம் சார்ந்த போட்டிகளில் எதிரணியோடு ஈடுகொடுத்ததோடு மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்று விட்டனர். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம். மஞ்சள் அணிக்கு வாழ்த்துகள்.

சவால் முடிந்ததும் மறுபடியும் பழைய நட்பிற்கு பெரும்பாலோனோர் திரும்பியது மகிழ்ச்சி. என்றாலும் ஒளித்து வைத்திருக்கும் கத்திகள் உள்ளே இருக்கிறதுதான். ‘நட்பிற்குள்ளே ஒரு பிரிவொன்று வந்தது, ஏனென்று அது தெரியவில்லை’ என்கிற பாடலைப் போல யாஷிகாவிற்கும் மஹத்திற்கும் ஐஸ்வர்யாவிற்குமான நட்பில் விரிசல் விட்டிருக்கிறது. இது தற்காலிகமாக இருக்கட்டும். என்னதான் நியாயத்தின் பக்கமாக நிற்பதாக நினைத்துக் கொண்டு மஹத் அவ்வப்போது முரண்பட்டது சரியென்றாலும், அணியின் ஒற்றுமைதான் வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் என்பதை அவர் மறந்து விட்டார். 

சென்றாயனின் ‘பாத்ரூம்’ பிரச்னை, அதற்குப் பழிவாங்கும் விதமாக டேனி ‘கேஸை’ ஆஃப் செய்தது, மஹத் தொடர்ந்து முரண்பட்ட விதம், சண்டைக்கோழியாக திரிந்த மும்தாஜின் பிடிவாதம், அவருக்கு உணவளிக்காமல் ஜனனி டீம் செய்த அழிச்சாட்டியங்கள், சோப்பை சிதைத்து சென்றாயன் செய்த மோசடி போன்றவற்றிற்கான பஞ்சாயத்துக் காட்சிகளை இன்று எதிர்பார்க்கலாம். ஆண்டவர் ஓவர்டைம் போட்டு வேலை செய்வதற்கான விஷயங்களை பிக்பாஸ் வீட்டு மக்கள் செய்து வைத்திருக்கிறார்கள். எனவே இந்த வாரம் களை கட்டும் போலிருக்கிறது. 

மிக முக்கியமாக, ஐஸ்வர்யா வீட்டின் தலைவரானது கொண்டாடப்பட வேண்டிய விஷயம். ஸ்வீட் எடு, கொண்டாடு’. பிக்பாஸ் வீட்டில் பெண்களே அதிகமுறை தலைவராக வருவது நல்ல விஷயம். 

**

39-ம் நாளுக்கான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. மஞ்சள் மற்றும் நீல அணி தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றதைத் தொடர்ந்து ‘லிவ்விங் ஏரியாவிற்கான’ போட்டி நடந்தது. அவரவர் அணிகளுக்கான நிறத்தில் தலையணைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு அணியிலும் மூன்று நபர்கள் முன்வந்து எதிரே வைக்கப்பட்டிருக்கும் கூடையில் தலையணைகளைப் போட வேண்டும். எதிரணியில் உள்ள இரண்டு நபர்கள் அவர்களைத் தடுக்க வேண்டும். எந்த அணி அதிகமான தலையணைகளைப் போடுகிறதோ, அதுவே வெற்றி பெற்ற அணி.

முதலில் மஞ்சள் அணி தலையணைகளைப் போட நீல அணி தடுத்து ஆடியது. ‘இதில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும்’ என்கிற ஆவேசம் டேனியிடம் தென்பட்டது. ‘சென்றாயனை’ நோக்கி கத்திக் கொண்டே இருந்தார். சென்றாயனையும் பொன்னம்பலத்தையும் தேர்வு செய்தது மோசமான தேர்வு என்பதை அவர்கள் நிரூபித்தார்கள். உடல்தகுதி காரணமாக பொன்னம்பலத்தால் அதிகம் செயல்பட முடியவில்லை. எதிர் பக்கத்தில் மஹத்தும் யாஷிகாவும் துறுதுறுப்பாக செயல்பட்டு தலையணைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். 

அது முடிந்ததும் நீல அணி தங்களின் திறமையைக் காட்டியது. டேனி, ஐனனி, ஐஸ்வர்யா ஆகியோர் களத்தில் இருந்தனர். அவர்களைத் தடுப்பதற்காக மும்தாஜ் மற்றும் வைஷ்ணவி நின்று கொண்டிருந்தனர். டேனி வழக்கம் போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வேக வேகமாக தலையணைகளைச் சேர்த்தாலும் ஜனனியின் மெத்தனத்தால் நிறைய சந்தர்ப்பங்கள் வீணாகின. அதிக தலையணைகள் வெளியே விழுந்தன. இதுவே நீல அணி தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 

இறுதியில் ஒரேயொரு தலையணை எண்ணிக்கை வித்தியாசத்தில் மஞ்சள்அணி பெற்றி பெற்றது. 

‘நாம அதிகம் ஜெயிச்சதை நீல அணியால் சகித்துக் கொள்ள முடியாது’ என்று யாஷிகா சொல்லிக் கொண்டிருக்க, ‘நாம நியாயமாக நடந்துப்போம், அவங்களை மாதிரி tease பண்ண மாட்டோம்’ என்றார் மும்தாஜ். (பாடேன்!). டாஸ்க்கின் போது அவசரமாக கழிவறையைப் பயன்படுத்தியதால் அதற்கான ‘டாஸ்க்’கை தருமாறு டேனி கேட்க, துணியை மடித்து அயர்ன் செய்யும் எளிய டாஸ்க்கை மஹத் தந்தார். ‘என்னய்யா.. உங்களுக்கெல்லாம் ஈஸியான வேலையா இருக்கு. எனக்கு மட்டும் கஷ்டமா தர்றீங்க.. வீடெல்லாம் பெருக்கினேன்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார் சென்றாயன். “நீ பூதத்திடம் மாட்டிக் கொண்டே” என்று மும்தாஜை குறிப்பிட்டு கிண்டலடித்தார் டேனி.

தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் மஹத் ‘டாஸ்க்’ தருவது குறித்து எரிச்சல் அடைந்த மும்தாஜ், மஹத்திடம் இது குறித்து விசாரிக்க.. இருவருக்கும் முட்டிக் கொண்டது. ‘கத்தாதீங்க. என் கிட்ட மட்டும் டிஸ்கஸ் பண்றீங்களா?’ என்று மஹத் எரிச்சல் பட, ‘நான் சொல்றதை கேட்கலைன்னா.. டீம்ல இருக்க வேண்டாம்’ என்று மும்தாஜூம் பதிலுக்கு கோபத்தைக் காட்டினார். 

“மஹத், எதிர் அணிக்கு சாதகமாக செயல்படுகிறார், கேப்டனின் பேச்சை கேட்பதில்லை’ ஆகிய புகார்களுடன் பிக்பாஸிடம் சென்று மஹத்தை அணியிலிருந்து நீக்குவதான வழிமுறைளைச் சொல்லுமாறு கோரினார் மும்தாஜ். மஹத்தை யாஷிகா சமாதானப்படுத்தினார். 

இப்போது நீல அணிக்காக மஹத் ஒரு டாஸ்க் செய்ய வேண்டியிருந்தது. “மும்தாஜிடம் பிடிக்காத ஐந்து குணங்களை சுருக்கமான வார்த்தைகளில் கூறுக” என்று பத்து மார்க் கேள்வியை வில்லங்கமாக கேட்டார் பொன்னம்பலம். ‘இது தேவைதானா?” என்று ஜனனி ஆட்சேபிக்க, ‘எனக்கும் அது  போல கொடுத்தாங்க’ என்றார் பொன்னம்பலம். மும்தாஜிடம் சண்டை போட்டு திரும்பிய சூட்டில் இருக்கும் மஹத் இந்த வாய்ப்பை தவற விடுவாரா என்ன? ‘திமிர், பிடிவாதம், அதிகாரம், அன்பின்மை, புறம் பேசுதல்.. என்று அடிஷனல் ஷீட் வாங்குமளவிற்கு ஆவேசமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். 

‘நான் கொடுத்த டாஸ்க், சம்பந்தப்பட்ட ஆளைப் பற்றித்தான். ஆனா மஹத் கேப்டன் பத்தியே.. எதிரணி கிட்ட போய் தப்புத்தப்பா பேசறது நியாயமா?” என்று எரிச்சலுடன் புலம்பிக் கொண்டிருந்தார் மும்தாஜ். ‘உலகமே தப்பா பேசினாலும்…..’ என்கிற விவேகம் திரைப்படத்தின் வசனத்தை நினைவுகூர்ந்து பின்பு கலங்கினார். 

சொந்தமாக டாஸ்க் யோசிக்க திராணியில்லாமல், வீட்டின் நபர்களிடமிருந்தே பிக்பாஸ் ஐடியாக்களை எடுக்கிறார் என்பது மறுபடி நிரூபணமாயிற்று. எதிரணி அசந்த நேரம் பார்த்து அவர்களின் கொடியை எடுத்து விட்டு தங்களின் கொடியை நட்டு முன்னர் ஆக்ரமிப்பு செய்த  மும்தாஜின் ஐடியாவை இப்போது பிக்பாஸ் பிரதிபலித்தார். இதுதான் அடுத்த டாஸ்க். தங்களின் ஏரியாவை பாதுகாத்துக் கொள்வதோடு, எதிரணியின் இடங்களையும் கைப்பற்றலாம். 

“நம்ம கிட்ட இருக்கற இடங்களை பாதுகாத்தாலே போதும்.. முடிஞ்சா கிச்சனை கைப்பற்றணும்” என்று யாஷிகாவிடம் முணுமுணுத்துக் கொண்டிருந்தார் மும்தாஜ். (ஆமா.. டீ போடணுமே?!) “ஒண்ணும் கவலைப்படாதீங்க.. நான் பார்த்துக்கறேன்.. எல்லா இடத்தையும் தட்றோம்.. தூக்கறோம்.. ஸ்கெட்ச் போட்டாச்சு’ என்று மஹத் உற்சாகமாக சொல்ல.. “நீ எங்க டீம்ல இருக்கறதுதான் பேட்டா.. என் முக்கியமான கவலையே” என்பது மாதிரி பார்த்தார் மும்தாஜ். அருகிலிருந்த சென்றாயன் “ஆல் தி பெஸ்ட்’ என்று சொல்லி மும்தாஜின் எரிச்சலில் பெட்ரோலை ஊற்றினார். 

காட்டுமிராண்டித்தனமான அந்தப் போட்டி தொடங்கியது. அனைவருமே கொடி காத்த குமரர்களாக மாறி தங்களின் எல்லைகளைப் பாதுகாக்கவும் இதர இடங்களைக் கைப்பற்றவும் கடுமையாக போராடினார்கள். நிறைய தள்ளுமுள்ளுகள், கலாட்டாக்கள் அரங்கேறின. ஒரு கட்டத்தில் இது ஆபாசமான எல்லைக்கும் சென்றது. அந்த அளவிற்கு முரட்டுத்தனமாக மோதிக் கொண்டார்கள். மஹத்திற்கும் டேனிக்கும் விரல்களில் காயம் ஏற்பட்டது. ‘கிட்ட வந்தீங்கன்னா.. கடிச்சு வெச்சிடுவேன்.. போயிடுங்க.. ‘என்று மிரட்டிய பொன்னம்பலத்திடம் எப்படி போராடுவது என்று திகைத்து நின்றார் ரித்விகா. 

நெருக்கமான தோழிகளாக இருந்த யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் குழாயடிச்சண்டையில் நிகழ்வது போல தலைமுடியைப் பிய்த்து சண்டை போட்டார்கள். (‘ஐஸ்வர்யாவிற்கு காயம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாதே’ என்று என் மனம் பதைத்ததை நான் எழுதாமலேயே, பின்னூட்டங்களில் நிச்சயம் எவராவது கண்டுபிடித்திருப்பார்கள்). 

‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் கமலும் தேவயானியும் விழுந்திருக்கும் ‘வில்லங்கமான’ போஸில் போட்டியாளர்கள் பல சமயங்களில் தென்பட்டார்கள். கொடிகள் பிடுங்கப்பட்டன; குளத்தில் எறியப்பட்டன. நாகரிகம் மலர்ந்திராத கற்காலத்தில் மக்கள் எப்படி அடித்துக் கொண்டிருப்பார்கள் என்பதற்கான ஒரு ‘சாம்பிளை’ இப்போது பார்க்க முடிந்தது. வயதின் காரணமாகவோ, என்னமோ மும்தாஜிடமும் பொன்னம்பலத்திடமும் எவரும் அதிகம் நெருங்கவில்லை. அதிலும் ‘எல்லை காத்த வீரனாக’ அசையாமல் நின்ற பொன்னம்பலத்தை நெருங்க எவரும் துணியவில்லை.

ஒருவழியாக போட்டி முடிவடைந்தற்கான பஸ்ஸர் ஒலித்தது. ‘அம்மா மேல சத்தியம்.. கொடியை நான்தான் பிடிச்சிருந்தேன்’ என்று கடைசி நொடிப் போராட்டத்தை ஆவேசமாக விளக்கிக் கொண்டிருந்தார் மஹத். இது சார்ந்த பஞ்சாயத்து சிறிது நேரம் ஓடியது. என்றாலும் போட்டி முடிந்ததும் காயங்களுக்கு மருந்திட ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டது மகிழ்ச்சியான காட்சி. நாம் கற்காலத்திலேயே உறைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ‘மச்சான்.. இந்தாடா ஐஸ்பேக் வை.. பிளட் கிளாட் ஆகும்” என்று மஹத் டேனிக்கு உதவியது அருமை. 

டாஸ்க் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதும், சந்திரமுகி மோடில் இருந்து மெல்ல மாறி வெளிப்படையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மும்தாஜ். போட்டியின் கடுமையை தாங்க முடியாத ரித்விகா அழுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ‘ஹே. கமான்யா.. கேம்தானே’ என்று அவரை சமாதானப்படுத்தினார்கள். “என் கதை என்னான்னு பாருங்கப்பா’ என்று இடையில் குரல் கொடுத்தார் சிறையில் இருந்த பாலாஜி. அவரின் சிறைத்தண்டனை முடிந்தது. ‘கொடி காக்கும் போராட்டத்தின் ரணகளத்தில் தாம் இல்லாமல் போனது குறித்து மிகவும் ஆசுவாசமடைந்திருப்பார் பாலாஜி. 

பிக்பாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அடிதடிப் போராட்டத்தின் முடிவை அறிவித்தார் ஷாரிக். அதிக இடங்களை வைத்திருந்த மஞ்சள் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சிறந்த மற்றும் மோசமான போட்டியாளரை ஒவ்வொரு அணியிலிருந்தும் தேர்ந்தெடுக்கச் சொன்னார் பிக்பாஸ்.

மஞ்சள் அணியில் சிறந்த போட்டியாளராக யாஷிகாவும், மோசமான போட்டியாளராக மும்தாஜூம் தேர்வானார்கள். போலவே நீல அணியில் சிறந்தவராக சென்றாயனும் மோசமான போட்டியாளராக பொன்னம்பலமும் தேர்வு செய்யப்பட்டனர். (நீல அணியின் சிறந்த போட்டியாளராக டேனிதான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்). சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த வார எவிக்ஷனில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். 

மோசமான போட்டியாளர்களான பொன்னம்பலமும் மும்தாஜூம் ஷீக்களை சுத்தம் செய்து பாலிஷ் போட வேண்டும் என்கிற தண்டனை வழங்கப்பட்டது. ‘சாந்த சொரூபியாக’ உருமாறியிருந்த மும்தாஜ், ‘நான் பார்த்துக்கறேன்யா’ என்று பொன்னம்பலத்திடம் கனிவாக சொன்ன மும்தாஜ் வேலைகளை இழுத்துப் போட்டு செய்தார். ‘இந்த மும்தாஜை பார்க்க எம்பூட்டு அளகா இருக்கு” என்று பிற்பாடு மகிழ்ந்து போனார் சென்றாயன்.

‘மோசமான போட்டியாளராக’ வைஷ்ணவியைத்தானே தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். (பாவம்ப்பா.. அந்த புள்ள.. எப்படி போனாலும் கேட்ட சாத்தி அடிக்கறாங்க!). 

‘லாலாக்கு டோல் டப்பிம்மா’ என்கிற கவித்துவமான பாடலுடன் 40-ம் நாள் விடிந்தது. உடல் சார்ந்த போட்டிகளில் நேற்று ஈடுபட்டிருந்ததால் பெரும்பாலோனோர் தயக்கத்துடன் எழுந்தார்கள்.  ‘ஒவ்வொரு போட்டியாளரின் குணாதிசயங்கள், வியூகங்கள் போன்வற்றின் ரிப்போர்ட் கார்டுகளைப் பற்றி தாழ்ந்த குரலில் சென்றாயனிடம் பேசிக் கொண்டிருந்தார் பொன்னம்பலம். ‘இது இலுமினாட்டிகளின் சதி’ என்பது போலவே இருந்தது அவரது ஆராய்ச்சி. வீட்டு நினைவு வந்து ரகசியமாக கண்கலங்கினார் டேனி. (தல போய் அழலாமா!).

லக்ஸரி டாஸ்க்கில் மஞ்சள் அணி வெற்றி பெற்றதால் ‘பொருட்களை’ தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு தரப்பட்டது. மொத்தமுள்ள 2200 மதிப்பெண்களும் அப்படியே வழங்கப்பட்டன. நீல அணி இதில் கலந்து கொள்ளாமல் பெட்ரூமிற்கு சென்று அமர வேண்டும் என்கிற உத்தரவால் நீல அணியினர் மனம் புண்பட்டார்கள். “நாங்களும் எங்க பெஸ்ட்டை தந்தோம். இப்படி எங்களை ஒதுக்கி வெச்சது சரியில்லை’ என்று பிக்பாஸிடம் முறையிட்டார் தலைவி ஜனனி.  ‘நாம பைக் வின் பண்ணோமில்லை. அது போதும்” என்று ஆறுதல் சொன்னார் பொன்னம்பலம். 

மஞ்சள் அணி பொருட்களை தேர்வு செய்தார்கள். ‘நான் சொல்றத செலக்ட் பண்ண மாட்டாங்கன்னு தெரியும். அதனால்தான் சும்மா இருந்தேன். தேவையில்லாம பிட்ஸா.. பர்கர்-னு வாங்கறாங்க’ என்று ஷாரிக்கிடம் பின்னர் அனத்திக் கொண்டிருந்தார் மஹத். ‘கமல் சார் கிட்ட பஞ்சாயத்து வந்தாலும், பாத்ரூம் பிரச்னையில் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்’ என்று சென்றயானுக்கு வாக்களித்தார் ஜனனி. (தலைவிடா!)

‘என் டீ என் உரிமை’ என்கிற மும்தாஜின் போராட்டம் ஒருவழியாக முடிவிற்கு வந்தது. பிடிவாதமாக இருந்து நினைத்ததை சாதித்து விட்டார் மும்தாஜ். டீ மற்றும் தோசையுடன் யாஷிகாவுடன் பேசிக் கொண்டிருந்தார். ‘பேட்டா’ ஷாரிக்கிடம் இருந்த மாற்றங்களை கண்கலங்க சொல்லிக் கொண்டிருந்தார். ‘என்னால எழுந்துக்க முடியலைன்னு கொஞ்சம் தெரிஞ்சா கூட போதும். கை கொடுத்து உதவுவான் ஷாரிக். ஆனா என் உடம்பு கண்டிஷன் தெரிஞ்சும் என்னை ‘சிட்அப்’ செய்யச் சொன்னது எப்படி-ன்னு புரியல. எதிர் டீம் யாரும் இவனை மதிக்கல. அதனால்தான் அவனை விட்டுக் கொடுக்கக்கூடாதுன்னு அவன் சொன்ன தண்டனையை நான் செஞ்சேன்’ என்று தாயுள்ளத்தின் கோணத்தில் உருகிய மும்தாஜைப் பார்க்க நெகிழ்வாகத்தான் இருந்தது. 

இந்தப் போட்டியில் நிகழ்ந்த பிரச்னைகள் காரணமாக யாஷிகா மனவருத்தத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது. அணிஒற்றுமை இல்லாமல் மஹத் செயல்பட்டது அவரை வருத்தப்பட வைத்திருக்கலாம். “ஏன் மூஞ்சை தூக்கி வெச்சிட்டிருக்க?” என்று வந்த மஹத்திடம் அவர் சரியாகப் பேசவில்லை. ‘உங்க ரெண்டு பேருக்கும் நடக்கும் பிரச்னைக்கு நானா காரணம்?” என்று யாஷிகாவிடம் விசாரித்தார் மும்தாஜ். ‘டாஸ்க் பிரச்னைல உங்க மேல இருக்கற கோபத்தை என் கிட்ட காண்பிக்கறாங்க.. உங்க கூட க்ளோஸா இருக்கறதா நெனக்கறாங்க.. நான் எப்படி இருக்கணும்ற முடிவை நான்தான் எடுக்கணும். அவங்க புரிஞ்சக்கலைன்னா நான் என்ன பண்றது?” என்ற யாஷிகாவை சமாதானப்படுத்தினார் மும்தாஜ். 

இதே பிரச்னையை ஐஸ்வர்யாவும் மஹத்திடம் பேசிக் கொண்டிருந்தார். “வந்த நாள்ல இருந்து அவங்களை நெறய கரெக்ட் பண்ணியிருக்கேன். இப்ப என்னால முடியல” என்று வருத்தப்பட்டார். “அவ குணம் தெரிஞ்சதுதானே. ரெண்டு நாள்ல சரியாயிடுவா” என்று ஆறுதல் கூறினார் டேனி. 

இந்த வாரம் முடிய இன்னமும் சில நாட்களே இருக்கும் நிலையில் வீட்டின் தலைவருக்கான போட்டி நடந்தது. பஸ்ஸர் ஒலித்ததும், நாய் கூண்டு மாதிரி போடப்பட்டிருக்கும் செட்டப்பில் குனிந்து நுழைய வேண்டும். கடைசியாக நுழையும் இரண்டு நபர்கள் வெளியேறுவார்கள். இப்படி இருவர் இருவராக விலகிய பிறகு கடைசியாக மிஞ்சுபவர் தலைவர் ஆவார். 

குனிந்து நுழைய முடியாத உடல் பிரச்னை காரணமாக, பொன்னம்பலமும் மும்தாஜூம் முதலிலேயே விலகி விட்டார்கள். அவ்வப்போது அடித்த பஸ்ஸர் காரணமாக, கோயில் சுண்டலுக்கு ஆவலாதியாக பறக்கும் பக்தர்கள் போல அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்து, எஞ்சியிருந்த இருவர் இருவராக விலகியதில் கடைசியாக மிஞ்சியவர்கள் டேனி மற்றும் ஐஸ்வர்யா. 

ஆனால் டேனி விட்டுக் கொடுத்து விடுவார் என்று பலரும் எதிர்பார்த்ததைப் போல் ஆயிற்று. சந்தர்ப்பமும் ஐஸ்வர்யாவிற்கு சாதகமாக இருந்தது. அவர் கூண்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது பஸ்ஸர் ஒலித்ததால் மிக எளிதாக வெற்றி பெற்றார். (பிக்பாஸ் டீமிற்கு உள்ளேயும் ஒரு தீவிரமான ஐஸ் ரசிகர் இருக்கிறார் போல!). ஆக வீட்டின் தலைவி ஐஸ்வர்யா. (ஸ்வீட் எடு, கொண்டாடு!). 

‘தமிழ் பொண்ணுதான் ஃபைனலுக்கு வரணும்’ என்கிற வில்லங்கமான அரசியலை ஜனனியும் ரித்விகாவும் மறுபடியும் பேசிக் கொண்டிருந்தார்கள். பொன்னம்பலம் அளித்திருக்கும் உபதேசம் ஆழமானதுதான் போல. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘நான் ஏற்கெனவே தலைவரா இருந்துட்டேன். நெறைய பேர் ஆசைப்படறாங்க. போகட்டும்’ என்று பெருந்தன்மையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் வைஷ்ணவி. ‘இந்த வீட்டில் தான் பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுவதை பற்றியும் யாஷிகாவுடன் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருந்தார். கிண்டல் செய்வதன் காரணமாக இந்த வீட்டில் அவர் வெறுக்கும் ஒரே நபர் டேனிதானாம். 

நீச்சல் குளத்தின் அருகே தனிமையில் அமர்ந்திருந்த யாஷிகாவிடம் சென்று பேசினார் ஐஸ்வர்யா. “நான் யாரைப் பத்தியும் கவலைப்படவில்லை’ என்று யாஷி்கா விட்டேற்றியாக பேசியதால் மனம் புண்பட்டார் ஐஸ்வர்யா. ‘நான் உனக்கு எவ்ளோ லவ் கொடுத்திருக்கேன்’ என்று வருத்தத்துடன் விலகிச் சென்றார் ஐஸ்வர்யா. பிறகு படுக்கையறையில் கண்கலங்கிய ஐஸ்வர்யாவை ஜனனி சமாதானப்படுத்தினார். ‘அவளே திரும்பி வருவா.. கவலைப்படாதே”.

‘இது வரையில் நட்பாக இருந்தவர்கள் பிரிந்து விட்டனர். பிரிந்திருந்தவர்கள் நட்பாகி விட்டனர். இந்த புதிய உறவு நீடிக்குமா?” என்கிற சகுனியுடன் பின்னணிக்குரலுடன் இன்றைய நாள் நிறைந்தது. 

இனி பஞ்சாயத்து நாளின் கூத்துகள் வரும் இரண்டு நாட்களில் நிகழும். நாட்டாமை game starts now…