Published:Updated:

"பிக்பாஸ் வீட்ல எல்லாமே எரர்!" செம டெரர் ஐஸ்வர்யா #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
"பிக்பாஸ் வீட்ல எல்லாமே எரர்!" செம டெரர் ஐஸ்வர்யா #BiggBossTamil2
"பிக்பாஸ் வீட்ல எல்லாமே எரர்!" செம டெரர் ஐஸ்வர்யா #BiggBossTamil2

செய்வதற்கு வேலை, வெட்டி ஏதும் இல்லாவிட்டால் வம்பு பேசும் மனநிலை பெருகிவிடும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது இன்றைய பிக் பாஸ் வீடு. ‘எங்க ஏரியா உள்ள வராத’ என்கிற கடந்த வார டாஸ்க்கின் மூலம் மக்கள் பெற்ற சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் இந்த வாரத்தின் துவக்கத்திலேயே வீழ்ச்சியடையத் துவங்கியிருக்கிறது. ‘Open a Pandora’s box’ மாதிரி பழைய குப்பைகளை, பஞ்சாயத்துக்களை சாவகாசமாக கிளறத் துவங்கியிருக்கிறார்கள். 

புதிய தலைவியான ஐஸ்வர்யாவின் தர்பார் கொடிகட்டிப் பறக்கிறது. ‘நீ அங்க நில்லு.. நீ இங்க நில்லு.. நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடணும் புரியதா?” என்கிற பருத்தி வீரன் கார்த்தி மாதிரி எதிரணி டீமை இம்சைப்படுத்த துவங்கியிருக்கிறார், ஐஸ்வர்யா. ‘இந்த பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்-னு கனவா கண்டேன்” என்று மற்றவர்கள் வாய்விட்டே முணுமுணுக்கும் அளவிற்கு தன் பழிவாங்கும் தன்மையை துவக்கியிருக்கிறார். இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை.

முதியவர்கள் பொறுப்புகளை இளையவர்களிடம் தந்துவிட்டு உறுதுணையாக நிற்பது ஒருபுறம் முக்கியம் என்றால், அவ்வாறு கிடைத்த பொறுப்பை முதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் கையாள்வது இளையவர்களின் கடமை. ‘பலப்பம் சாப்பிட்டதுக்கு அப்ப என் தலைல கொட்டினே இல்ல’ என்று பல வருடங்கள் கழித்து எல்கேஜி வாத்தியாரை தேடிப் போய் திருப்பிக்கொட்டுவது மடமைத்தனம். ஐஸ்வர்யா செய்துகொண்டிருப்பது இதைத்தான். 

“நீ அந்த வேலைக்கு சரிப்பட மாட்டே’ என்பதுபோல் ஐஸ்வர்யாவிற்கு சரியாக கோபப்படவும் தெரியவில்லை. அவர் ‘தத்தக்கா பித்தக்கா’ தமிழில் சொல்லி முடிப்பதற்குள் எதிராளிக்கு கோபம் மறைந்து சிரிப்புதான் வந்துவிடும் போலிருக்கிறது. ‘எல்கேஜி’ குழந்தைக்கு ஹெட்மாஸ்டர் வேடம் போட்ட காமெடி டிராமா போல் இருக்கிறது, ஐஸ்வர்யாவின் செய்கைகள். 

இதற்கிடையில் மஹத்தின் அலப்பறை வேறு. ‘ஆம்பளையா இருந்தா மூஞ்சிக்கு நேரா பேசுங்க... பின்னாடி பேசாதீங்க” என்று ‘யாருக்கோ’ சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். (உன் கோபத்துல தீய வைக்க! உன் பிரச்னைக்காக ஏண்டா என் பொழப்புல மண்ணள்ளிப் போடறே... வெஷம்... வெஷம்’ என்று பிக் பாஸ் கேமராவின் பின்னால் சத்தமாக முணுமுணுத்திருக்கக்கூடும். புறம் பேசினால்தானே ஃபுட்டேஜ் கிடைக்கும்!). ‘பத்து பேர் கூடினா அதுல சில பேர் புறம் பேசத்தான் செய்வான்’ என்று பிறகு பொன்னம்பலம் சொன்னதுதான் யதார்த்தம். “க்ளோஸா பழகிட்டு அடுத்த நிமிஷம் போய் புறம் பேசினா வலிக்குது” என்பது போல் மஹத் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதன் பெயர் நம்பிக்கைத் துரோகம். (இந்த வகையில் சமூக வலைத்தளங்களில் நிகழும் துரோகம்தான் என்னை அதிகம் வருத்தப்பட வைக்கும் விஷயம்). 

நட்பை உண்மையாக பேணும் விஷயத்தில் சென்றாயனை பாராட்ட முடிகிறது. பாலாஜி ‘கெட்ட வார்த்தை’ பேசும் விஷயம் தொடர்பாக பஞ்சாயத்து எழுந்த போது “அவரு என் நண்பர்ங்க.. எங்களுக்குள்ள பிரச்னையில்ல’ என்று பாலாஜியை விட்டுக்கொடுக்காமல் பேசிவிட்டு, பிறகு தனிமையில் “ஏன்யா... பிரச்னை பண்றவங்களை விட்டு விட்டு ஒரு அப்பிராணியை போட்டு அடிக்கற’ என்று பாலாஜியின் குறையை நிதானமாக எடுத்துரைக்கிறார். அப்போது கூட பாலாஜியால் சென்றயானின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. (ஆனால் சென்றாயனும் பாலாஜியைப் பற்றி நேற்று டேனியிடம் மனத்தாங்கலுடன் பேசிக்கொண்டுதான் இருந்தார். இது தவிர்க்க முடியாததும் கூட).

**

43-ம் நாள், காலை 08:00 மணி. கும்கி திரைப்படத்திலிருந்து ‘சொய் சொய்’ என்கிற அட்டகாசமான பாட்டைப் போட்டு மக்களை எழுப்பிவிட்டார் பிக் பாஸ். அந்தப் பாடலில் யானை பிளிறும் சத்தம் வரும் சமயத்தில், சென்றாயன் கொட்டாவி விடும் காட்சியை இணைத்த எடிட்டரின் குறும்பு, சிறப்பு. 

கடந்த வாரத்தில் ‘டீ’க்காக அடம் பிடித்த மும்தாஜை எப்படியாவது கார்னர் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார் ஐஸ்வர்யா. எனவே சமையல் டீமில் பாலாஜிக்குப் பதிலாக ஜனனியை இணைக்க முடிவு செய்தார். ‘நான் போன வாரம்தான் குக்கிங் டீம்ல இருந்தேன்’ என்கிற ஜனனியின் மறுப்பு எடுபடவில்லை. “நான் சொல்றது உங்களுக்கு இப்ப புரியாது... எம்.ஏ. பிலாஸபி... எம்.ஏ. பிலாஸபி. வீட்டுக்கு போனதுக்கு பின்னாலதான் புரியும்’ என்பது மாதிரி பூடகமாக உத்தரவிட்டார் புதிய தலைவி. ‘எங்கிருந்தோ பர்மிஷன் வந்துச்சாம்’

ஐஸ்வர்யாவின் அலப்பறையைப் பார்த்து ரகசிய ரூமில் இருந்த வைஷ்ணவி ரகசியமாக சிரித்துக்கொண்டார். “இவ நிச்சயமா ஏதோவொரு பிளான் வெச்சிருக்கா. மும்தாஜ் குக்கிங் டீம்ல வரக்கூடாது, அவங்க டீயை போடக்கூடாது’ன்னு போன வாரமே சொல்லிட்டு இருந்தா நிச்சயம் இது கேம் பிளான்’ என்று தனிமையில் இருந்தாலும் தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வைஷ்ணவியை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. 

“இந்த ரித்விகா பொண்ணு வந்த சமயத்துல இருந்த மாதிரியே இல்லையே.. எப்படி மாறிடுச்சு பாத்தியா.. நம்ம டீம் எவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்தது. இப்படி மொக்கையாய்ட்டோமே. மும்தாஜ் – பாலாஜியாலதான்’ என்பது போல் யாஷிகாவிடம் அனத்திக்கொண்டிருந்தார் டேனி. ‘அந்த அளவுக்கெல்லாம் மோசம் போகல. திரும்பியும் வர்றோம். இந்த வெஷ பாட்டில் மட்டும் எப்படி மாறப் போறான்னு பாரு’ என்று ஆறுதல் கூறினார், யாஷிகா.

வீட்டின் பணிகளுக்காக நபர்களை பிரிக்கத் துவங்கினார் புதிய தலைவி. முன்பே பேசியபடி ஜனனியை சமையல் டீமில் தள்ளத் துவங்க இதை கடுமையாக ஆட்சேபித்தார், மும்தாஜ். ‘சென்றாயனுக்கும் சமைக்கத் தெரியாது. போலவே ஜனனிக்கும். சமைக்கத் தெரிந்த பாலாஜி அல்லது ரித்விகா போல ஒருத்தர் இருந்தாதான் சரியா இருக்கும்’ என்கிற மும்தாஜின் கோரிக்கையில் நியாயம் இருந்தது. ‘சரி, பொன்னம்பலத்தை எடுத்துக்கங்க’ என்று பெருந்தன்மையாக ஐஸ்வர்யா சொல்ல, ‘அய்யோ. அவர் ஸ்பூன், டம்ளர் எல்லாத்தையும் போட்டு சமைப்பாரே” என்று மனதிற்குள் அலறிய மும்தாஜ், ‘புரிஞ்சுக்கோ ஐஸூ... ஒரு டீமில் எதற்கு ரெண்டு ஷெப்.. ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது’ என்று கதற, ‘எனக்கு உதவியாளர்கள் இருந்தா போதும். வெந்தது, வேகாதது எல்லாத்தையும் சமைச்சுடுவேன்’ என்று பொன்னம்பலம் சொன்னதின் மூலம் அவர் மறைமுகமாக உணர்த்திய செய்தி, ‘தான் உதவியாளராக இருக்க முடியாது’.  ‘சரி.. பாலாஜி இருக்கட்டும்.’ என்று ஒருவழியாக மலையிறங்கினார் தலைவி.

ஆக.. சமையல் அணியில் மும்தாஜ், பாலாஜி, மற்றும் (கமலின் பரிந்துரையினால் தவிர்க்க முடியாத) சென்றயான் இருப்பார்கள். பாத்திரம் கழுவும் அணயில் மஹத், ஜனனி, பொன்னம்பலம் இருப்பார்கள். கழிவறை சுத்தம் செய்யும் அணியில் ஷாரிக், யாஷிகா, ரித்விகா இருப்பார்கள்.  மற்றவர்களுக்கு உடம்பு முடியாத சமயங்களில் டேனி உதவுவார்.

‘ஒரு வேண்டுகோள். மத்தவங்களுக்கு இருக்கான்னு பார்த்துட்டு சாப்பிடுங்க.. இருக்கிறதை வெச்சுதான் சமைக்க முடியம். பல சமயங்கள்ல நான் பட்டினியா இருந்து அந்த சாப்பாட்டை மத்தவங்களுக்கு கொடுத்திருக்கேன்’ என்று பழைய காலத்து பண்டரிபாய் மாதிரி மும்தாஜ் உருக, ‘இந்தக் கதை வேணாம்னுதான் நாங்களும் சொல்றோம். 'பட்டினியா கிடந்து கொடுத்தேன்’–ன்ற டிராமாலாம் இனி வேணாம். ரேஷன் முறைல எல்லோருக்கும் பிரிச்சு வெச்சு சாப்பிடுவோம். ஒருத்தருக்கு அதிகம், இன்னொருத்தருக்கு குறைச்சல்-ன்ற பேச்சு இனி வேண்டாம்” என்று டேனி சொல்ல.. ‘கசகச’வென குழப்பத்துடன் பேசிக்கொண்டார்கள். 

‘கிச்சன் டீம்ல இருக்கறவங்க மட்டும்தான் இந்த ஏரியால இருக்கணும். மத்தவங்க யாராவது வந்து அவங்களுக்கு ஹெல்ப் பண்ணா பிச்சிடுவேன்” என்று அடுத்த அதிரடியை ஆரம்பித்தார் தலைவி. ‘இது என்ன புது பழக்கம். ஒருத்தருக்கு முடியலைன்னா மத்தவங்க உதவி செய்யறது வழக்கம்தானே. என்னம்மா இது, புது லீடர் இந்த ஆட்டம் ஆடுது?’ என்று மற்றவர்கள் சலித்துக்கொண்டார்கள். 

சில நிமிடங்கள் கழித்து சமையல் டீமிற்கு உதவி செய்துகொண்டிருந்த யாஷிகாவை தடுத்தார், ஐஸ்வர்யா. போலவே, ‘கிச்சன் பிராப்பர்டிஸை ‘வெஸல் வாஷிங்’ டீம் கழுவத் தேவையில்லை’ என்று புதிய சட்டத்தையும் அமுல்படுத்தினார் அமுல் பேபி. ‘அப்புறம் எப்படி டைமுக்கு சமைக்க முடியும். நாங்களே கழுவி, நாங்களே சமைக்கணும்னா எப்படி’ என்று எரிந்து விழுந்த பாலாஜி, தன் கோபத்தை சென்றாயனிடம் காட்டினார். மும்தாஜூம் இணைந்து ஆட்சேபிக்க, அடுப்பைப் பற்ற வைக்காமலேயே கிச்சன் ஏரியா ‘சூடாக’ இருந்தது. “உங்களை கோபப்படுத்தி கெட்ட வார்த்தை பேச வைக்கறாங்க, ஐஸ்வர்யா. ஷாரிக், யாஷிகா’ இவங்கள்லாம் நமட்டுச் சிரிப்பு சிரிச்சத பார்த்தேன்’ என்று ரகசிய குரலில் பாலாஜியிடம் புறணி பேசினார் ரித்விகா. 

“காலைல என்னால் பிரேக்பாஸ்ட் பண்ண முடியாது’ என்பது இந்த வீட்டிற்குள் வந்த சமயத்திலிருந்து மும்தாஜ் வைக்கும் நிபந்தனைகளுள் ஒன்று. இதையும் ஐஸ்வர்யா வற்புறுத்த, மும்தாஜ் கறாராக மறுத்துவிட்டார். இது தொடர்பாகவும் பஞ்சாயத்து ஓடியது. 

ஐஸ்வர்யாவின் புதிய அதிரடி நடவடிக்கைகளைப் பற்றி ஆத்திரத்துடன் புறம் பேசிக்கொண்டிருந்தார்கள் பாலாஜியும் மும்தாஜூம். “டேனி, யாஷிகா, ஐஸ்வர்யா இந்த மூணு பேரும் ஏதோ பிளான் பண்ணிட்டிருக்காங்க..” என்று பாலாஜி அனத்த, ‘எதனா பண்ணிட்டு போகட்டும். மக்கள் முன்னாடி அவங்கதான் தப்பா தெரிவாங்க’ என்று மும்தாஜ் ஆறுதல் கூறினார். சிறிது நேரத்தில் புன்னகையுடன் அங்கு வந்த ஐஸ்வர்யா, ‘as a leader, என் கடமையைத்தான் செய்றேன்’ மோடிலேயே பேசிவிட்டு, ‘மோமோ... உங்கமேல எனக்கு நிறைய லவ் இருக்கு...” என்று பாசத்தைப் பொழிய, “சரி உன் கேப்டன்சில பிரச்னை வராம நான் பார்த்துக்கறேன். அதே மாதிரி நீயும் அங்க வந்து நைநை’ன்னு எதையாவது சொல்லிட்டு இருக்காதே’ என்று ஒரு மாதிரியான ஒப்பந்தத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இவர்கள் கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்த்து எரிச்சல் அடைந்த பாலாஜி, விறுட்டென்று கிளம்பிச் சென்றுவிட்டார். 

சில புதிய கட்டுப்பாடுகளைக் கறாராக அமல்படுத்துவதின் மூலம் மும்தாஜ் கும்பலின் கிச்சன் ஆக்ரமிப்பை வரும் வாரங்களில் கட்டுப்படுத்துவதுதான் ஜஸ்வர்யா டீமின் நோக்கம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. குறிப்பாக மும்தாஜின் ‘டீ’ பிரச்னை. 

வீட்டிலுள்ள போட்டியாளர்கள் இரண்டு அணியாகப் பிரிவார்கள். சைவம் மற்றும் அசைவம் சார்ந்த உணவு வகைகளை இவர்கள் தயாரிக்க வேண்டும். அசைவ அணியில் டேனி, யாஷிகா, ஐஸ்வர்யா, ஷாரிக் இருந்தார்கள். சைவத்தில் பொன்னம்பலம், ஜனனி, ரித்விகா, சென்றாயன் இருந்தார்கள். மஹத் மற்றும் பாலாஜி நடுவர்களாம். 

ஜனனி வழக்கம்போல் தியானம் செய்வது போன்ற ‘ஜென்’ மனநிலையுடன் காய்கறிகளை தடவிக்கொண்டிருந்தார். ‘தக்காளியை சின்னதா வெட்டட்டுமா.. பெரிசாவா’ என்று சென்றாயன் கேட்க, சமையல் மாஸ்டரான பொன்னம்பலம் ‘நீ எப்படின்னா வெட்டு நான் பார்த்துக்கறேன்” என்றார் உற்சாகமாக. தட்டில் எது இருக்கிறதோ, அதை அப்படியே அவர் அடுப்பில் கொட்டப்போகிறார். என்ன வருகிறதோ அதுதான் சமையல். எனவே தக்காளி பெரிதாக இருந்தாலும் சரி, அது தக்காளியாகவே இல்லாமல் இருந்தாலும் சரி, அவருக்கொன்றும் பிரச்னையில்லை. 

குடமிளகாயை அழகாக வெட்டிய ஐஸ்வர்யாவை ‘சூப்பர்ரா தங்கம்’ என்று உற்சாகப்படுத்தினார் டேனி. ‘கிச்சன்லே மொட்டை போடு’ என்று ஐஸ்வர்யா சொன்னது எதற்காக என்று புரியவில்லை. அது திருப்பதியில் போட வேண்டிய சமாச்சாரமாச்சே.. பிறகுதான் புரிந்தது. (ஓ.. முட்டையா!) இவர்களின் சமையல் கூத்துக்களை ரகசிய ரூமில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் வைஷ்ணவி. பக்கத்தில் காலித்தட்டு. (வாயைத் துடைங்க..மேடம்! உங்களுக்கு நிச்சயம் தர மாட்டாங்க!.).

‘கோவைக்காய் சுக்கா’ என்றொரு அயிட்டத்தை மல்லிகா பத்ரிநாத் அக்கா ரேஞ்சுக்கு பொன்னம்பலம் செய்து வைத்திருந்தார் போலிருக்கிறது.  நடுவர் மஹத் இதை பிரத்யேகமாக குறிப்பிட்டார். சைவ அணியில் இது சிறப்பாக இருந்ததாம். நான்-வெஜ் அணியில் சிக்கன் ஓவராக சமைக்கப்பட்டது உள்ளிட்ட குறைகள் இருந்தாலும், உணவு வகைகளை சிறப்பாக அடுக்கியது, கூடவே இனிப்பு செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக டேனி டீம் வென்றதாக நடுவர்கள் அறிவித்தார்கள். 

புறம் பேசக்கூடாது என்கிற நீதியைப் பற்றி ஷாரிக்குடன் புறம் பேசிக் கொண்டிருந்தார் மஹத். ‘நாம எதுவும் தப்பா பண்ணிடலையே.. அவங்க கேம் ஆடறாங்க.. பதிலுக்கு நாமும் ஆடணும். உண்மையா இருந்து  இருந்து சலிச்சுப் போச்சு’ என்று ‘நானும் எத்தனை நாள்தான் நல்லவனாவே நடிக்கறது’ என்று மங்காத்தா ஆடிக் கொண்டிருந்தார் மஹத். ‘பஞ்சாயத்தைக் கூட்டுங்க.. நான் பேசியாகணும். இனிமே யாரும் இங்க புறம் பேசக்கூடாது. தில் இருந்தா மூஞ்சி மேல பேசணும்” என்று சவடால் விட்டுக் கொண்டிருந்தார்.  

“ஒரு நாளைக்கு கட்டிப்பிடிச்சு கொஞ்சி ..சிரிச்சுப் பேசறீங்க.. அடுத்த நிமிஷமே போய் புறம் பேசறீங்க.. கமல் சார் வேற குடும்பமா இருங்கன்றாரு. ‘இது குடும்பம் இல்ல.. கேம்ஷோ –ன்னா.. கேம் ஆடிட வேண்டியதுதான். பிடிக்கலைன்னா ஒதுங்கிடணும். அதுதான் என் பாலிஸி’ என்று சாமியாடிக் கொண்டிருந்த மஹத்தின் கூச்சல் ஓயவில்லை. இவருடைய கோபம், டேனி மற்றும்  மும்தாஜ் மீது என்பதாக யூகிக்க முடிகிறது. 

பிறகு ஆரம்பித்தது அந்த நீண்ட…….. பஞ்சாயத்து. எல்லாமே ஏற்கெனவே பேசியவைதான். இருந்தாலும் சில வம்புகளை மீண்டும் மீண்டும் பேசுவதில் மனிதர்களுக்கு ஒரு ருசி இருக்கும். பாலைவனங்களில் இருக்கும் சப்பாத்திக் கள்ளிகளை ஒட்டகம் மென்று தின்னும் போது முட்கள் அதன் வாயைக் கீறி ரத்தம் வருமாம். அந்தச் சுவை சப்பாத்திக் கள்ளியில் இருந்துதான் வருகிறது என்று தவறாக புரிந்து கொள்ளும் ஒட்டகம், இன்னமும் ஆவேசமாக முட்களை மெல்ல. இன்னமும் ரத்தம் வருமாம். மனிதர்களும் தங்களின் பழைய பிரச்னைகளை நோண்டி.. நோண்டி.. பேசுவதும் இப்படித்தான். புண்ணை நோண்டும் சுகம். 

“டேனி எப்போதும் கத்துகிறார் என்று புகார் தெரிவித்த ஜனனி, பிறகு டேனி டீமோடு சேர்ந்த பிறகு அவரும் கத்துகிறாரே’ என்று பாலாஜி சொன்ன பஞ்சாயத்து முதலில் விசாரணைக்கு வந்தது. “டேனி கத்துகிறார் என்று நான் எப்போதுமே சொன்னதில்லை. அவர் ஒருமுறை ஏதோ சொன்னதால ஹர்ட் ஆகியிருக்கேன். அவ்வளவுதான்’ என்று முன்னர் சொன்ன அதே விளக்கத்தையே இப்போதும் ஜனனி சொன்னார். 

“டேனி கத்தறது இரிட்டேட்டிங்கா இருக்குன்னு யாஷிகாவும் சொல்லியிருக்காங்க’ என்று ரித்விகா இந்தப் பஞ்சாயத்தில் பெட்ரோல் ஊற்ற, ‘தான் அந்த நோக்கத்தில் சொல்லவில்லை’ என்று யாஷிகா விளக்கம் அளித்தார். ‘நாங்க லூஸூங்க மாதிரி  கத்திட்டு இருக்கோம் –னு நீங்க அடிக்கடி சொன்னதால இப்ப நாங்க அமைதியாயிட்டோம்.. ஆனா நீங்க உரக்க கத்தும் போது.. பாட்டு பாடும் போது.. உங்களுக்கு தெரியலையா?” என்று திக்கின தமிழில் சொன்னார் யாஷிகா. 

அடுத்ததாக பாலாஜி கெட்ட வார்த்தை பேசும் விவகாரம் பஞ்சாயத்திற்கு வந்தது. “எனக்கும் வைஷ்ணவிக்கும் சண்டை வந்த போது நீங்க என்னெ்னமோ கெட்ட வார்த்தை சொன்னீங்கள்ல.. என்னது அது?” என்று ஐஸ்வர்யா கேட்க, ‘கெட்ட வார்த்தையா.. தக்காளி.. அப்படின்னா என்னன்னே எனக்குத் தெரியாதே, எப்ப பேசினேன்?” என்று மழுப்பலாக ஆரம்பித்த பாலாஜி, சற்று அழுத்திக் கேட்டதும்.. ‘ஆமாம்.. நான் பேசினேன்.. நெறைய பேசியிருக்கேன்” என்று அழிச்சாட்டிய மோடிற்கு மாறினார். “உன்” மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு” என்று பிழையான தமிழில் ஐஸ்வர்யா மரியாதை காட்ட, ‘உன் மரியாதையே எனக்குத் தேவையில்லை’ என்று பாலாஜி பதிலுக்கு எகிறினார். 

“இனிமே இந்த வீட்ல கெட்ட வார்த்தை பேசக்கூடாது” என்று புதிய தலைவி ரூல் போட ‘இது என்ன உங்க வீடா.. பிக்பாஸ் வீடு…’ என்பது போல் ஐஸ்வர்யாவிற்கும் பாலாஜிக்கும் முட்டிக் கொண்டது. ‘எனக்கு கோபம் வந்தா சென்றாயனைத் திட்டுவேன். அதுல உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று இந்தப் பஞ்சாயத்தை தற்காப்பு மோடிற்கு திசை திருப்பினார் பாலாஜி. 

‘உங்களுக்கு இதனால பிரச்னையில்லையா, நீங்க தட்டிக் கேட்கக்கூடாதா?” என்று ஐஸ்வர்யா, சென்றாயனை விசாரிக்க. ‘நாங்க தேவா –சூர்யா மாதிரி பிரெண்ட்ஸ். அவர் என்னை கெட்ட வார்த்தைல பேசறதும்.. நான் அவரைப் பேசறதும்.. எங்களுக்குள்ள ரொம்ப வருஷ பழக்கம்” என்று விட்டுக் கொடுக்காமல் சொல்லி சபையில் பாலாஜியின் மானத்தைக் காப்பாற்றினார் சென்றாயன். ‘இனிமே யாரா இருந்தாலும் இந்த வீட்ல கெட்ட வார்த்தை பேசக்கூடாது:” என்று நியாயமான சட்டத்தை ஆக்ரோஷமாக போட்டார் புதிய தலைவி. “M வார்த்தை.. F வார்த்தை.. P.. வார்தைகள்ல திட்டினீங்களே.. யாரைப் பத்தியது அது?” என்று யாஷிகா விசாரிக்க.. ‘நான் எம் வார்த்தைதான் அதிகம் சொல்லியிருப்பேன். வேறன்னா. ஒருவேளை வைஷ்ணவியைத் திட்டியிருக்கலாம்” என்று அங்கு இல்லாத வைஷ்ணவியை கைகாட்டி தப்பித்தார் பாலாஜி. அதே கட்டிடத்தின் இன்னொரு அறையில் வைஷ்ணவி இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற விஷயம், பாலாஜிக்குத் தெரிய நியாயமில்லை.

‘தில்லு இருந்தா மூஞ்சி மேல பேசு” என்கிற பழைய வசனத்தை மறுபடியும் சொல்ல ஆரம்பித்தார் தில்லுதுரையான மஹத். இதை ஆவேசமாக சொல்லி விட்டு அவர் நகர முயற்சிக்க.. ‘இரு மச்சான்.. இன்னும் கதை முடியலை..” என்று இன்னொரு விஷயத்தை ஆரம்பித்தார் டேனி. 

ஒருமுறை மஹத்தை பின்னால் இருந்து டேனி மூஞ்சி காட்டி விட்டாராம். இந்தப் பஞ்சாயத்து ஏற்கெனவே ஓடியிருந்தது. இப்போது மறுபடியும் அதை துவக்கினார். “யாரு உங்கிட்ட அதைச் சொன்னது. அதைச் சொல்லு” என்று டேனி கேட்க.. ‘அந்த நபர் இந்த வீட்டில் இல்லை” என்பது போல் முதலில் தயங்கிய மஹத், பின்பு ‘ரம்யா’தான் அதைச் சொன்னார் என்று வெளிப்படுத்தினார். 

“இதையெல்லாம் உடனே சொல்லு.. இன்னொன்னு.. இந்த வீட்ல நான் ஓரவஞ்சனை பார்க்கவேயில்லை.. தைரியமா சொல்லுவேன்.. ஒருத்தர் மேல கோபம் –னா அவருக்கு ஒரு கரண்டி சாதம் கம்மியா போடறது’ன்றா மாதிரி நடந்துக்கவேயில்ல.. என்று தன்னை நோக்கி வந்த பந்தை வேறு பக்கம் திசைதிருப்பிய டேனி, “சில விஷயம்லாம் என் பாடி லேங்வேஜ்லயே கிடையாது. நான் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை” என்று விளக்கமளித்தார். 

‘நாலு பேர் கூடினா நானூறு விதமா பேசத்தாம்ப்பா செய்வாங்க. தப்பா இருந்தா காமிரால மாட்டப் போறாங்க” என்று பாரதிராஜா திரைப்படங்களில் இருமிக் கொண்டே வரும் கிழவர் பாத்திரம் போல் பொன்னம்பலம் சொன்னதும் சரியாகத்தான் இருந்தது. “யாரும் எதையும் பேசட்டும்.. நமக்கு அஃபெக்ட் ஆகக்கூடாது. மக்கள் அதை பார்த்துட்டு இருக்காங்க. அவங்க அப்படி பேசறதால நாம் அப்படி ஆகப் போறதில்ல. நம்ம ஒரிஜினாலிட்டி நமக்குத் தெரியும். இங்கு யாரும் சொந்தம் கொண்டாட வரலை” என்று அதுவரை அமைதியாக இருந்த மும்தாஜ் பேசத் துவங்கியதும் மஹத் அதுவரை கத்திக் கொண்டிருந்ததெல்லாம் அபத்தம் என்றாகியது. 

“இல்ல மும்தாஜ். நெருங்கிய நண்பனா இருந்துட்டு முதுகுல குத்தறதுதான் கஷ்டமா இருக்கு” என்று மஹத் சொன்னது சரியானது. “உங்க ஃபிரெண்ட்ஷிப்பை கொண்டாடுங்க. வேண்டாம்னு சொல்லல. சிலதை ரசிக்கறோம். ஆனா மத்தவங்க இருக்கும் போது ஓவரா பண்ணாதீங்க.. தனியா போய் வெச்சுக்கங்க. நான் எந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்டையும் இங்க எதிர்பார்க்கலை. நான் வயசு பார்த்துதான் பேசறேன்’ என்ற மும்தாஜ் பிறகு தன் பஞ்சாயத்து தேரையும் தெருவில் இறக்கி விட்டார்.

“பொன்னம்பலம் சார் கூட என் கிட்ட கோபமா பேசினாரு.. நான் பதில் எதுவும் பேசலை.” என்று பந்தை பொன்னம்பலத்திடம் போட, ‘நான் அதை முகத்துக்கு நேராதான் சொன்னேன்.. என் கிட்ட வந்து யாராவது தொங்கினா பிடிக்காது. பரிதாபம் காட்டினா பிடிக்காது. நாலு பேர் எதிர்க்க என் கிட்ட எதையாவது விசாரிச்சாலும் பிடிக்காது” என்று சொன்ன பொன்னம்பலம்.. ‘பஞ்சாயத்தா இது.. எனக்கு உடம்பு முடியல.. நான் போறேன்’ என்று நடையைக் கட்டினார்..  (பசிக்குதா.. சாப்பாடு வேணுமா?” என்பது போல் முன்னர் அனந்த் விசாரித்த காரணத்தினாலேயே அனந்திற்கும் பொன்னம்பலத்திற்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டது).

“நான் ஒரு முறை சாப்பிடறீங்களான்னு கேட்டேன். பசிக்குமேன்னுதான் விசாரிச்சேன். கோவிச்சுக்கிட்டாரு..” என்று பொன்னம்பலத்தைப் பற்றி துவங்கிய மும்தாஜ், “சரி.. அவர் இப்ப இங்க இல்ல.அதனால அவரைப் பத்தி பேச வேண்டாம். குடும்பத்துல வயசானவர் ஒருத்தர் இருந்தா.. நாம சகிச்சுப்போம் இல்லையா.. அப்படி இருப்போம்’ என்று கடையை மூட ஒருவழியாக பஞ்சாயத்து – தற்காகலிமாக – ஓய்ந்தது. 

ஜனனி தலைவலியால் அவதிப்பட (இந்த நீண்ட நேர பஞ்சாயத்தை பார்த்துக்கிட்டிருந்த நமக்குமே அப்படித்தான் இருந்தது) “அவங்க  ரெஸ்ட் எடுக்க கொஞ்சம் பர்மிஷன் கொடுங்களேன்’ என்று பரிந்துரை செய்தார் மும்தாஜ். ஆனால் ஸ்டிரிக்ட் ஆபிசராக இருந்த ஐஸ்வர்யா, ‘அவங்க கேட்டா மத்தவங்களும் கேப்பாங்க.. ஜனனி தலைவியா இருக்கும் போது யாஷிகாவிற்கு தலைவலி வந்தப்ப தூங்க அனுமதி கொடுக்கலை” என்று விளக்கம் அளிக்க, “அப்ப பழிவாங்கற மோட்ல இருக்கீங்களா? பாலாஜி கோபமாக கேட்க, ‘ஆமாம்” என்று குழந்தைத்தனமாக ஒப்புக் கொண்டார் ஐஸ்வர்யா. 

“புரிஞ்சுக்கோங்க ஐஸூ.. ரெண்டு பேருக்கு தலைவலி. ஒருத்தருக்கு பீரியட் கிராம்ப்.. இருக்கு. பிக்பாஸ் கிட்ட நீங்க பர்மிஷன் கேட்டீங்க. கொடுக்கலை. ஒரு பதினைஞ்சு நிமிஷம் கண்ணை மூடிட்டு இருக்கட்டும். நாய் குலைச்சா எழுந்துப்பாங்க’ என்று தன்மையாக மும்தாஜ்  சொன்னதும் சரி என்று கிளம்பினார் ஐஸ்வர்யா. “முதல் வாரத்துல நடந்த பிரச்னையை இப்பயா இழுப்பாங்க?” என்று மறுபடியும் பிரச்னையை கிளறிய பாலாஜி “உங்களுக்கு ஓக்கேன்னா.. சரி.. இல்லைன்னா இல்லையா?” என்று மும்தாஜிடமும் எரிந்து விழுந்தார். “உங்களுக்கு வேண்டியவங்க தூங்கினா அதைக் கேட்க மாட்டீங்க இல்லையா?” என்று யாஷிகாவிடமும் இவர் பாயத் துவங்க. ‘ஷாரிக் தூங்கினதுக்கும் அவ கோபப்பட்டா.. இதனால ஷாரிக் அவ கிட்ட சண்டை போட்டான். அவ சொன்ன பிரச்னையை என் கிட்ட கொண்டு வராதீங்க’ என்று தற்காப்பு மோடிற்கு சென்றார் யாஷிகா. “முதல் வாரத்துல ரூல்ஸ் சரியா புரியலை” என்பது ஜனனியின் வாதம். 

“புதுசு புதுசா.. ரூல் போடறாங்க.. இவ என்ன பிக்பாஸ் வீட்டு தலைவரா.. தமிழ் நாட்டோட தலைவரா.. நான் இனிமே கிச்சன் பக்கம் வர மாட்டேன். என்ன வேணா. தண்டனை கொடுத்துக்கட்டும்.. நீங்க சொன்ன மாதிரி.. யாரும் யார் வாழ்க்கைலயும் வரப்போறதில்லை. வயது வித்தியாசம்-னு ஒண்ணு கிடையாதா” என்று மும்தாஜிடம் பிறகு பொங்கிக் கொண்டிருந்தார் பாலாஜி. ஐஸ்வர்யா வந்து கொஞ்சியதும் அவர்களுக்கேற்ப மும்தாஜ் இறங்கி விடுகிறார் என்பது பாலாஜியின் மனத்தாங்கல். 

‘சரி. நீங்க வரலைன்னா பரவாயில்ல. ஐஸ்வர்யா செஞ்சது சரின்னு நான் சொன்னேனா.. என் பொண்ணா இருந்தா வாய் மேலயே போட முடியும்.. பெரியவங்க கிட்ட மரியாதையா பேசுன்னு.. ஒரு வெவல் வரைக்கும்தான் சொல்ல முடியும். சில விஷயங்கள்ல அவ சொல்றது சரியா இருந்தது. அதனால சப்போர்ட் பண்ணேன். அவ தப்பு செஞ்சாலும் அதைச் சொல்றதுக்கு எனக்கு தைரியம் இருக்கு. அது உங்க பார்வைல தப்பா தெரிஞ்சா நான் ஒண்ணியும் பண்ண முடியாது. ‘நல்லா வேணும் இவங்களுக்கு’ன்னு சிலர் இருக்கற மாதிரி நான் இருக்க மாட்டேன். இங்க இருந்து வெளியே போக முடியாது.. இங்கதான் இருந்தாகணும். புரிஞ்சுக்கோங்க.. ‘என்று மும்தாஜ் பதிலுக்கு வெடித்தவுடன் அமைதியானார் பாலாஜி. 

பிறகு சென்றாயன் எதற்கோ பாலாஜிக்கு உதவ வர அதை மறுத்தார் பாலாஜி. “ஏன் என் மேல கோபமா இருக்கே.. பிரச்னை பண்ணவங்களை விட்டுட்டு அப்பிராணி மேல கோபப்படுவியா?. என் மேல ஏன் மூஞ்சை தூக்கிட்டு வெச்சிருக்க?” என்று உரிமையுடன் சென்றாயன் கேட்க, ‘உன் மேல கோபப்படறதுக்கு நான் யாரு.. சொந்தமா பந்தமா.. என்னால உனக்கு பத்து பைசா பிரயோஜனம் இருக்கா.. யாரோ குளிர் காயறதுக்கு நாம எதுக்கு சண்டை போடணும்” என்று விரக்தியும் கோபமும் கலந்த தொனியில் சென்றாயனை தவிர்க்க முயன்றார் பாலாஜி. “நான் என்னா தப்பு பண்ணேன்.. அந்தப் பிள்ளை இல்லைல்ல.. (நித்யா).. அதான் இப்படி.. என்று வருத்தத்துடன் கிளம்பிச் சென்றார் பாலாஜி. 

மற்றவர்களை விட்டு விட்டு, எளிய டார்க்கெட் ஆன சென்றாயனை வதைப்பதையே ஒரு கெட்ட வழக்கமாக வைத்திருக்கிறார் பாலாஜி. பொதுச்சபையில் தன்னை விட்டுக் கொடுக்காமல் பேசிய சென்றாயனுக்கு உண்மையில் அவர் நன்றி சொல்லியிருக்க வேண்டும். “கேவலம் நாம மனுஷங்கதானே?!” என்கிற முள்ளும் மலரும் ‘காளி’ சொல்லும் வசனம்தான் நினைவிற்கு வருகிறது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


‘நாளை’ என்று காட்டும் பகுதியில் சில விநோதமான விஷயங்கள் நடந்தன. ‘உன்னி கிட்ட உன்னி கிட்ட எப்படித்தான் குப்பை கொட்டப் போறேனோ’ என்கிற கவித்துவமான பாடலைப் போல பாலாஜியின் மீது எதற்காகவோ ஐஸ்வர்யா குப்பைத் தொட்டியை எடுத்து கவிழ்ப்பதும் மும்தாஜ் அதற்காக பதறி கதறுவதும்.. பாலாஜி அமைதியாக அமர்ந்து கண்ணீர் விடுவதும்… ‘என்னாலதான் ‘என்று மஹத் தலையில் அடித்துக் கொள்வதும்..

ஆக… இன்றைக்கும் டிவி முன்னால் உட்கார்ந்து பட்டறையைப் போட்டு விட வேண்டியதுதான். வேற வழியில்ல.