Published:Updated:

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part - 1 #BiggBossTamil2

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part - 1 #BiggBossTamil2
`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part - 1 #BiggBossTamil2

`சர்வாதிகாரி’ ஐஸ்வர்யா செய்வது டூ மச்... இதோடு நிறுத்திக்கங்க பிக்பாஸ்! Part - 1 #BiggBossTamil2

“பார்… முழுசா சந்திரமுகியா மாறியிருக்க ஐஸூவைப் பார்.. என்ன கொடுமை பிக் பாஸ்?’ என்கிற வசனம்தான் நேற்று ஐஸ்வர்யா நிகழ்த்திய ருத்ரதாண்டவத்தைப் பார்த்தபோது பலமுறை தோன்றியது. பார்வையாளர்களின் அதிகபட்சமான கோபத்தை ஐஸ்வர்யா சம்பாதித்துக்கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான நியாயங்களும் இருந்தன. அராஜகம், வன்மம், அகங்காரம் போன்ற பல எதிர்மறை குணாதிசயங்களின் மொத்த உருவத்தையும் ஐஸ்வர்யா காண்பித்துக்கொண்டிருந்தார். 

அவருக்கு ஏதேனும் உளப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்கிற சந்தேகத்தைக் கடந்த சில நாள்கள் முன்பே தெரிவித்திருந்தேன். வேற்றுக் கலாசாரத்தில் புழங்க வேண்டிய சிக்கல், மொழிப் பிரச்னை, அதன் காரணமாக இங்கு எதிர்கொள்ளும் கிண்டல்கள், விமர்சனங்கள், நட்புகளின் இடையே நிகழும் உரசல்கள், பெரியவளாக மதிக்காமல் குழந்தையாகவே மற்றவர்கள் பார்ப்பது தொடர்பான உளைச்சல், ‘பொண்ணுன்னா இப்படி இருக்கணும்’ என்கிற கலாசார உபதேசங்கள், தனிப்பட்ட வகையில் உருவாகிய காதல் உணர்வு, அதில் கிடைத்த துரோகம், பெண்களின் மீது வீசப்படும் பிரத்யேக வசைகள், அதனால் எழும் கோபம் போன்ற பல மன அழுத்தங்கள் பல அடுக்குகளாக அவருக்குள் பதிந்திருந்து ஒரு வெடிகுண்டின் திரி மீது நெருப்பு பட்டதும் பயங்கரச் சத்தத்துடன் வெடிப்பது போன்று நேற்றைய சம்பவம் நிகழ்ந்து விட்டதோ என்று தோன்றுகிறது. 

நம் உணர்ச்சிகளை எவ்வாறு புத்திசாலித்தனமாக கையாள்வது என்பது குறித்தான (Emotional intelligence) கல்வியை ஆறாம் வகுப்பிலிருந்தே துவங்கி விடுவது அவசியம் என்பதையே இது போன்று நடைமுறையில் நிகழும் பல சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எல்கேஜி குழந்தை கூட ‘டென்சன்’ என்கிற வார்த்தையை சகஜமாகப் பயன்படுத்தும் அளவுக்கு நம் வாழ்க்கை தினமும் கொதிநிலையில் இருக்கிறது. பல்வேறு அழுத்தங்கள் உள்ளே சேர்ந்து ஏதோவொரு புள்ளியில் வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரேயொரு விசை மட்டுமே போதும்.

முன்னே நிற்கும் வாகனம் நகர ஒரு நொடி தாமதம்; ஆனாலும் கூட நமக்குள் பொங்கும் விரோதத்தையும் வன்மத்தையும் சற்று கவனித்துப் பாருங்கள். அந்த ஆசாமியை ஒரு விநாடி மனதிற்குள் கொன்று விடுமளவுக்கு ஆத்திரம் உள்ளே பாய்கிறது. 

சுஜாதாவின் ‘நில்லுங்கள் ராஜாவே’ நாவலில் ஒரு குறிப்பிட்ட இசையைக் கேட்டவுடன் எதிரேயுள்ள ஆசாமியைக் கொல்லுமளவுக்கான விதை ஒருவனின் ஆழ்மனதில் திறமையாகப் புதைக்கப்படும். பல்வேறு காரணங்களால் நாம் கொலையாளியாகிவிடாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறோம். அடக்கி வைக்கப்பட்ட இந்தக் கோபங்கள் எளிய டார்க்கெட்டுகளின் மீது பாய்கின்றன. அதிகாரி என்றால் பணியாள் மீது, கணவன் என்றால் மனைவி, பிள்ளைகள் மீது..

ஒரு சமூகமே மனநோய்விடுதியாக இருக்கும் ஆபத்தை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. சமூக வலைதளங்களின் இயக்கத்தைச் சற்று உற்றுப் பார்த்தாலே போதும், பனிக்கட்டியின் முனை தெரியும்.

பல்வேறு ஆசுவாசங்களுக்கான சாத்தியங்கள் உள்ள சமூகத்திலேயே இத்தனை மனஅழுத்தங்கள் இருக்கும் போது, இவை உருவாவதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டுச் சூழலில் மனிதர்கள் அடைக்கப்படும் போது அதன் எதிர்வினைகள் இன்னமும் கடுமையாக இருக்கும். 43 நாள்கள் கடந்திருக்கும் நிலையில் சமூகத்தையும் உறவுகளையும் பிரிந்திருக்கும் அந்த நபர்களின் உணர்ச்சி மோதல்கள் நம் கற்பனைக்கும் எட்டாதபடி அமையக்கூடும். மற்றவர்களிடத்திலும் அவ்வப்போது கசிந்த இந்த விஷயம் ஐஸ்வர்யாவிடம் அதன் உச்சத்தை இன்று எட்டிவிட்டது. 

‘பைத்தியம் பிடித்த குரங்குக்குக் கள்ளையும் ஊற்றி விட்டாற் போல’ என்ற பழமொழி போல் பல்வேறு காரணங்களால் மன உளைச்சலில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு சூப்பர் பவர், வீட்டின் தலைவி போன்ற பதவிகளை அளித்த பிக்பாஸ், இன்று சர்வாதிகாரி என்கிற அதிகாரத்தையும் அளித்து இவரைப் பற்றி புறம் பேசுகிறவர்களின் காட்சிகளையும் காண்பித்து போட்டுக் கொடுக்க, அகங்காரத்தின் எல்லைக்குச் சென்று விட்டார் ஐஸ்வர்யா. போட்டியாளர்களின் துணிகளை நீச்சல் குளத்தில் எறிவது போன்றவை கடந்த சீஸனிலும் இருந்தது. ஆனால், பாலாஜியின் மீது குப்பையைக் கொட்டியது இதன் உச்சம். 

கெட்ட வார்த்தை விவகாரம் தொடர்பாக பாலாஜியிடம் ஏற்கெனவே விவாதம் புரிந்திருந்தார் ஐஸ்வர்யா. இது தொடர்பான அவரது வருத்தமும் கோபமும் அப்போது வெளிப்பட்டது. இன்றைய நிகழ்ச்சியில் ‘தன் தாயைப் பற்றி சொல்லப்பட்ட கெட்ட வார்த்தைகள்’ குறித்து ஆழமாக மனம் புண்பட்டதைப் பற்றி மும்தாஜிடம் ஐஸ்வர்யா. அழுது புலம்பும் காட்சியைப் பார்த்தோம். “அவங்க சொன்னா அது உண்மையாயிடுமா?.. என்னையும் கூட அப்படிச் சொல்லியிருக்காங்க” என்று கலங்கிய ஐஸ்வர்யாவை ஆறுதல்படுத்துகிறார் மும்தாஜ். இதற்குப் பிறகு இயல்பு நிலைக்கு வந்தார் ஐஸ்வர்யா. தலைவி என்ற முறையில், நாமினேஷன் செய்யாமல் இருந்த பாலாஜியிடம் சென்றும் பேசினார். அப்போதும் அவரது இயல்புத்தன்மை பாதிக்கப்படாமல் இருந்தது. ‘ராணி மகாராணி’ டாஸ்க் துவங்கும் போதும் கூட புன்னகையுடன் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். 

ஆனால், பாலாஜி, ஷாரிக், ரித்விகா, பொன்னம்பலம் போன்றோர் தன்னை இழிவாகப் பேசிக்கொண்டிருந்த காட்சியைப் பார்த்ததும் அவருக்குள் இருந்த அத்தனை கோபமும் முகத்தில் வெடித்தது. ‘பாரேன்.. ஜீவா இப்ப பல்லைக் கடிக்கப் போறான்.. பாரேன்.. இப்ப போய் பாலாஜியை அடிக்கப் போறான்’ என்று ‘பகோடா’ சிறுவனாக ஐஸ்வர்யாவை நன்கு ஏற்றி விட்டார் பிக்பாஸ். எனவே, வாடிவாசல் திறக்கப்பட்டதும் மூர்க்கமாகப் பாய்கிற காளை போல தன்னை இழிவுபடுத்தியவர்களின் மீது கண்மூடித்தனமாகப் பாய்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா. ஒருவகையில் பிக்பாஸின் கருவியாகச் செயல்பட்டார் என்று கூட சொல்லலாம்.  

இந்தக் காட்சியின் மூலம் கிடைத்த வருத்தங்களையும் அதிர்ச்சிகளையும் மீறியும் இதுவொரு டிராமாவாக இருக்கலாமோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. குப்பை கொட்டப்படுவதற்கு முன் ஏன் பாலாஜி சட்டையை மாற்றிக் கொண்டு வந்து அமர்ந்தார்? ‘முடிஞ்சா கொட்டிப் பாரு” என்று துவக்கத்தில் சவால் விட்ட பாலாஜி பின்பு ஏன் எதையும் தடுக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தார்? தன்னைச் சமாதானப்படுத்தவும் குப்பையைச் சுத்தம் செய்யவும் வந்த நபர்களை கோபத்துடன் தடுத்து விட்டு, ஐஸ்வர்யா வந்து சொன்னவுடன் சுத்தம் செய்த சென்றாயனை ஏன் தடுக்கவில்லை? போன்ற கேள்விகள் தன்னிச்சையாக எழுந்தன. ‘Candid camera’ நிகழ்ச்சி போல ஒரு கட்டத்தில் ‘பூச்சி….” என்று குழந்தையிடம் கத்தி விளையாடுவது போல நமக்குக் காட்டுவார்களோ என்றும் தோன்றாமல் இல்லை. அப்படி இது விளையாட்டு எனில் அதற்காக இந்த எல்லை வரைக்குமா செல்வார்கள் என்றும் தோன்றாமல் இல்லை. இதர மொழிகளில் நிகழும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இதைவிடவும் அதிக ராவடிகள் நடந்திருப்பதாகவும் அவற்றோடு ஒப்பிடும் போது இதுவெல்லாம் ஒன்றுமில்லை என்றும் சொல்கிறார்கள். 

எப்படியோ, மனித உணர்ச்சியின் பலவீனங்களை சுரண்டி பயன்படுத்திக்கொண்டு அதை வணிகமாக்கும் இந்த நிகழ்ச்சியை இனியும் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்றச் செய்தது இந்த நாள். 

இன்னொன்று, பொது நிகழ்ச்சி என்றும் பாராமல் நித்யாவைப் பல்வேறு வசைகளால் அவமானப்படுத்திக்கொண்டிருந்தார் பாலாஜி. போலவே சென்றாயனையும். இப்போது ‘பூமராங்’ போல அந்த அவமதிப்புகள் இந்த நிகழ்ச்சியிலேயே அவருக்குத் திரும்பி வந்து விட்டன. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’. **

43-ம் நாளின் சம்பவங்கள் இன்னமும் முடியவில்லை. பொதுவாக திங்கள் அன்றே நாமினேஷன் சடங்கு முடிந்து பட்டியல் வெளியாகி விடும். ஆனால் இந்த வார திங்கள் நிகழ்ச்சியில் நாமினேஷன் தொடர்பான காட்சிகள் வெளியாகாத நிலையில், இணையத்தில் வாக்கெடுப்பு அறிவிப்பு வெளியாகி பின்னர் நீக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். மாலை 05:45 மணிக்கு நாமினேஷன் சம்பிரதாயம் பற்றிய அறிவிப்பு தொடங்கியது. 

தனித்தனியாக நாமினேஷன் செய்தது போய், குழுவாக மாறி., பின்னர் பொதுவில் நாமினேஷன் செய்யும் முறையையும் கடந்து அதிலும் இன்று முன்னேற்றம் இருந்தது. பிக்பாஸ் யாரை அழைக்கிறாரோ அந்தச் சமயத்தில் அவர் கார்டன் ஏரியாவுக்கு வந்து வைக்கப்பட்டிருக்கும் போட்டியாளர்களின் புகைப்படங்களில் இரண்டை தேர்வு செய்து தகுந்த காரணங்களைச் சொல்லி பின்பு அந்தப் புகைப்படங்களை கருவியைக் கொண்டு தூள் தூளாக்குவதின் மூலம் நாமினேஷனை செய்ய வேண்டும். (ஒரு நபரின் முன்னாலேயே அவரது புகைப்படத்தை அழிப்பது ஓவர்தான்!). அடுத்த நபர் பற்றிய அறிவிப்பு வரை மற்ற பணிகளில் வழக்கம் போல் ஈடுபடலாம். 

முதல் வாய்ப்பு மஹத்துக்கு வந்தது. மும்தாஜ் மற்றும் பொன்னம்பலத்தை அவர் தேர்ந்தெடுத்தார். “பிடிவாதம் பிடிக்கறாங்க. Task ஒழுங்கா செய்ய மாட்டேங்றாங்க, சண்டை போடாறாங்க” என்ற காரணங்களை மும்தாஜிற்கும், Foul play விளையாடினார் என்கிற காரணத்தைப் பொன்னம்பலத்துக்கும் அளித்து நாமினேஷன் செய்தார். (யாஷிகா மீது சாய்ந்த விவகாரம்). 

அடுத்த வாய்ப்பு மும்தாஜ். இவர் தேர்ந்தெடுத்தது ஜனனி மற்றும் மஹத். ‘மரியாதை குறைவு, டாஸ்க்குகளில் இவர் தவறு செய்து விட்டு எல்லாப் பழியையும் என் தலை மீது போடுகிறார், மெமரி லாஸ்” போன்ற காரணங்களை மஹத் மீது சொன்னார். மஹத்தின் புகைப்படத்தை இயந்திரத்தில் வைத்து அரைக்கும் போது “ஏன் வலிக்குது?” என்பது போல் மும்தாஜ் கேட்க, கோபமடைந்த மஹத் ‘ஹே..காமெடி பீஸூ. ஜனங்களுக்கே தெரியும். யாரு காமெடி பீஸூன்னு” என்று மும்தாஜை நோக்கி எரிச்சலுடன் கூற மும்தாஜ் எவ்வித எதிர்வினையையும் ஆற்றவில்லை. 

‘ரொம்ப ஸ்மார்ட்டா.. ரொம்ப டிப்ளமேட்டிக்கா விளையாடிட்டு இருக்கும் போது கூட அவர் செஞ்ச விஷயங்கள் எனக்குப் பிடிக்கலை’ என்கிற காரணத்தை ஜனனிக்காகச் சொன்னார் மும்தாஜ். இந்த நாமினேஷன் வைபவங்களையும் கலாட்டாகளையும் பல்வேறு முகபாவங்களுடன் ரகசிய அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் வைஷ்ணவி. (ப்பா.. தப்பிச்சோம்டா.. சாமி!). 

“ஏண்டா அப்படியெல்லாம் கமென்ட் அடிக்கிறே.. அவங்களை நீ நாமினேட் செய்யும் போது ஏதாவது சொன்னாங்களா?” என்று மஹத்தைக் கண்டித்தார் பாலாஜி. “பின்ன.. என்ன.. வலிக்குது போல..’ன்னு ஏன் சொல்றாங்க?” என்று தன் கோபத்துக்கான காரணத்தைச் சொன்னார் மஹத். 

“பிக்பாஸ் என்னை கன்ஃபெஷன் ரூமுக்குக் கூப்பிடுங்க.. இதுவரைக்கும் நான் கேட்டதில்லை” என்று வேண்டுகோள் வைத்துக் கொண்டிருந்தார் பாலாஜி. முன்பு நடந்த பொது பஞ்சாயத்தில் அனைவரையும் இணைத்து மஹத் காரசாரமான விமர்சனங்களை வைத்த காரணத்தினால் பாலாஜி மனவருத்தம் கொண்டிருக்கிறார் என்பதைப் பின்னர் புரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக ‘பச்சோந்தி’ எனும் வார்த்தை. இதற்காக மஹத் பலமுறை மன்னிப்பு கேட்டும், ‘என்னால்தான’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாலும் பாலாஜி முழு சமாதானம் ஆகவில்லை. “காரணம் நீயில்லை” என்று அவர் மஹத்திடம் தெரிவித்தாலும் மஹத்தும் ஒரு காரணம் என்று தெரிகிறது. அதிலும் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா அந்த சமயத்தில் தந்த கிண்டலான முகபாவங்கள் பாலாஜியை அதிகம் புண்படச் செய்து விட்டன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆனால் இதையும் தாண்டிய தனிப்பட்ட காரணங்கள் இருப்பதாகவும் அதை பிக்பாஸிடம் மட்டுமே சொல்ல முடியும் என்றும் அதுவரை நாமினேஷன் செய்யப் போவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருந்தார் பாலாஜி.

“கோபம், கெட்டவார்த்தை’ ஆகிய காரணங்களைச் சொல்லி பாலாஜியை நாமினேட் செய்தார் யாஷிகா. ‘இவங்க இருக்காங்களா.. இல்லியான்னே தெரியல.. இவங்க கேம் பிளானும் புரிய மாட்டேங்குது” என்கிற காரணத்தை ரித்விகாவுக்காகச் சொன்னார். 

பிக்பாஸ் அழைக்கும் போது அரை நிர்வாணத்தில் இருந்த ஷாரிக் வேறு வழியின்றி அப்படியே வந்தார். மும்தாஜை இவர் தேர்ந்தெடுத்தது சற்று அதிர்ச்சிதான். முன்கூட்டியே பேசி வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. பாலூட்டி, பழம் கொடுத்து வளர்க்கப்பட்ட கிளி எத்தனை முறைதான் கொத்துமோ என்று தெரியவில்லை. ‘adament, arrogance, attitude என்று ‘ஏ’வில் துவங்கும் வார்த்தைகளாகச் சொன்னவர், பிறகு ‘Ego’ என்பதையும் சொல்லி மும்தாஜை நாமினேட் செய்தார். ‘திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒருமாதிரியாகவும் கமல் முன்பு வேறு மாதிரியாக மாறி விடுகிறார்’ என்று பொன்னம்பலத்தை நாமினேட் செய்தார் ஷாரிக்.  

“மும்தாஸை அசிங்க அசிங்கமா திட்டிட்டு இருந்தார். ஆனா அடுத்த வாரமே போய் பேசிட்டு இருந்தார். என்னையும் ‘தம்பி’ன்னு கூப்பிடுவார். அப்புறம் பின்னாடி ஒழுங்கு காட்டுவார்..  இதான் எனக்குப் பிடிக்கறதில்லை” என்று பாலாஜியைப் பற்றி தன் மனத்தாங்கலை ஷாரிக்கிடம் சொல்லிக்கொண்டிருந்தார் மஹத். 

மணிரத்னம் பட வசனம் போல் ‘மும்தாஜ், ஷாரிக்’ என்று நாமினேட் செய்தார் ஜனனி. காரணங்கள் சொல்லப்படும் காட்சி காண்பிக்கப்படவில்லை. ரித்விகா மற்றும் பொன்னம்பலத்தைத் தேர்ந்தெடுத்தார் டேனி. ‘வந்த புதுசல இருந்தா மாதிரி இல்ல. மத்த விஷயங்கள்ல எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க மாதிரி தோணுது” என்கிற காரணத்தை ரித்விகாவுக்குச் சொன்னார். பொன்னம்பலம் பற்றிய காரணம் ‘கட்’.

பாலாஜியைத் தேர்ந்தெடுத்து ஆச்சர்யப்படுத்தினார் ரித்விகா. ‘அவரை கோபப்படுத்தறாங்க. அவரும் கோபமாகி கெட்ட வார்த்தைகள் பேசறார். அதனால் ஹர்ட் ஆகுது” என்ற ரித்விகா, இதே காரணங்களை மஹத்துக்கும் சொல்லி கூடுதலாக ஒரு காரணத்தைச் சொன்னார். “அவர் பண்ற சில விஷயங்கள் இந்த வீட்டில் சங்கோஜத்தை ஏற்படுத்துது’ என்று மஹத்தை நாமினேட் செய்தார் ரித்விகா.

“துணிந்து தப்பு செய்யறார். சீரியஸ் காமெடி செய்யறார்’ என்கிற காரணங்களைச் சொல்லி மஹத்தை நாமினேட் செய்தார் பொன்னம்பலம். ‘பிடிவாதத்துக்காக’ மும்தாஜ்ஜாம்.

அதே பிடிவாதம் என்னும் காரணத்தை மும்தாஜின் மீது சுமத்தினார் சென்றாயன். “யார் சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க”. பொன்னம்பலத்துக்காகச் சொன்ன காரணம் “நெறைய விஷயம் மறந்துடறாரு.. ஒருமுறை இதனால் நான் ஹர்ட் ஆகிட்டேன்’ என்றார் சென்றாயன்.

அடுத்து நாமினேட் செய்ய பாலாஜியை அழைத்தார் பிக்பாஸ். ஆனால், ‘கன்ஃபெஷன் ரூமுக்குக் கூப்பிடுங்க. அதற்குப் பிறகு நாமினேட் செய்யறேன்’ என்கிற நிபந்தனையை வைத்தார் பாலாஜி. கடப்பாறையை முழுங்கி விட்டு அதற்கு மேல் புல்டோஸரையும் விழுங்கும் பழக்கமுள்ள பிக்பாஸ், இதற்குப் பதில் சொல்லாமல் வீட்டின் கதவைப் பூட்டி விட்டார். வீட்டின் தலைவியாக ஐஸ்வர்யா வந்து கேட்டும் நாமினேட் செய்ய மறுத்துவிட்டார் பாலாஜி. “போய் கூப்பிடு.. ஆனா பாலாஜியை வோட் பண்ணாத’ என்று உபதேசம் செய்து ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்தார் யாஷிகா.

“நீ டேனியைத் திட்டற மாதிரி என்னையும் திட்டினே… அது மட்டுமல்லாம எனக்கு வெளில போகணும்னு தோணிடுச்சி” என்று மஹத்திடம் வருத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார் பாலாஜி. “மும்தாஜை திட்டறே.. திருப்பியும் அவங்க கிட்ட போய் பேசறியேன்’னுதானே சொன்னேன்’ என்றார் மஹத். பிறகு மற்றவர்கள் வந்து சமாதானப்படுத்த முயன்றும் பாலாஜி கேட்கவில்லை. 

யாஷிகா, ஐஸ்வர்யா, மும்தாஜ் ஆகியோர் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ‘இந்தப் பிரச்னைக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா.. டேனிதான். ‘யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் நம்பாதே’ன்னு மஹத் கிட்ட சொல்லிட்டு நம்ம கிட்ட வந்து ‘தங்கம் வைரம்’னு கொஞ்சறார்’ என்று யாஷிகா சொன்னதை ‘என் கால்’ என்று ஆங்கிலத்தில் சொல்லி உணர்ச்சிகரமாக ஆமோதித்தார் ஐஸ்வர்யா. (அரசியல் கூட்டணிகளை விடவும் பிக்பாஸ் வீட்டுக் கூட்டணியைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறது).

`நாம எல்லாம் எதுக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம்.. யோசி.. உன் ஒருத்தனால இத்தனை பேரு பாதிக்கப்படணுமா?” என்று ஒரு சரியான நண்பனாக சரியான நேரத்தில் உபதேசித்தார் சென்றாயன். ஆனால் பாலாஜி இவரை சட்டை செய்யவேயில்லை. மஹத் தொடர்ந்து மன்னிப்பு கேட்க.. “பின்னாடி ஆறடி பள்ளம் தோண்டறவனை விட உன்னை மாதிரி முன்னாடி திட்டறவன் பரவாயில்ல.. அவங்க பேசலைன்னு ரெண்டு நாள் மென்ட்டல் மாதிரி திரிஞ்சே.. இப்ப அவங்க செளக்கியமா இருக்காங்க” என்று மஹத்திடம் பாலாஜி குறிப்பிட்டது யாஷிகாவைப் பற்றி என்பது புரிந்தது. 

“என்னை வேணா நாமினேட் பண்ணுங்க” என்று மஹத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு இம்சைப்படுத்த.. “பண்ண முடியாது போடா.. சோத்துல விஷம் வெச்சிடுவியா?” என்று சம்பந்தமில்லாமல் கோபப்பட்டார் பாலாஜி. ‘வாடா.. போடான்னுல்லாம் பேசாதீங்க” என்று மஹத் வருத்தப்பட, ‘இப்போதான் உன்னை அப்படிக் கூப்பிடறேனா?” என்று கேட்ட பாலாஜியின் கேள்வியில் நியாயம் இருந்தது. ஆனால், அவரின் கோபம் யார் மீது என்பது துல்லியமாகத் தெளிவாகவில்லை. “உன் மீது கோபமில்லை’ என்று மஹத்திடம் சொல்லி விட்டு ‘என்னைப் பச்சோந்தின்னு அந்த ரெண்டு பொண்ணுங்க முன்னாடி சொல்லிட்டாம்மா” என்று ரித்விகாவிடம் வருத்தப்பட்டார்.

இந்தச் சூழலில் பெண்களின் பிரத்யேக வலி காரணமாக யாஷிகா அவதிப்பட மற்றவர்கள் ‘கதவைத் திறந்து விடுங்கள்’ என்று பிக்பாஸிடம் பதற்றத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். கல்லுப் பிள்ளையார் போல் இருந்த பிக்பாஸ், சிறிது நேரத்துக்குப் பிறகு மனமிரங்கி ‘யாஷிகாவை உள்ளே அழைத்து வாருங்கள்’ என்று கரகரப்பான குரலில் கருணை காட்டினார். 

‘சந்தைக்குப் போகணும்.. காசு கொடு’ என்கிற மாதிரி ‘கன்பெஷன் ரூமுக்குக் கூப்பிடுங்க’ என்று பாலாஜி அனத்திக்கொண்டிருக்க, ‘மொதல்ல நாமினேஷனை முடிங்க.. அப்புறம் பார்க்கலாம்’ என்று கருமமே கண்ணாக இருந்தார் பிக்பாஸ். “எனக்குக் காரணம் சொல்லத் தெரியலையே.. self nomination-ம் பண்ணக் கூடாதுன்னு சொல்றீங்க.. தண்டனையாவது கொடுங்க’ என்று பாலாஜி உணர்ச்சிவசப்பட, அதற்கும் அசைந்து கொடுக்காத பிக்பாஸ் தன் இயந்திரக்குரலால் மறுபடியும் அதையே கூற, ‘மனுஷனாய்யா.. நீயி.. சரி செஞ்சு தொலைக்கறேன்” என்று இறங்கி வந்த பாலாஜி, ஷாரிக் மற்றும் பொன்னம்பலத்தைத் தேர்ந்தெடுத்தார்.  “இந்தப் பையனை ஆரம்பத்துல இருந்தே வார்ன் பண்றேன். திருந்த மாட்டேன்றான்” என்ற காரணத்தை ஷாரிக்கிற்கும்.. “மறந்துடறாரு.. எனக்கு ஹர்ட் ஆகுது” என்று சென்றாயன் சொன்ன காரணத்தை அப்படியே காப்பிடியத்து பொன்னம்பலத்துக்கும் சொல்லி நாமினேட் சடங்கை ஒருவழியாகச் செய்து முடித்தார் பாலாஜி.

பிறகு கண்கலங்கி அமர்ந்திருந்த பாலாஜியிடம் “என்னாலதான் இதெல்லாம்’ என்று தலையில் அடித்துக்கொண்டு மஹத் அழ.. நாம் பார்த்துக்கொண்டிருப்பது பிக்பாஸா அல்லது தவறுதலாக சானல் மாற்றி ஏதாவது சீரியலில் வைத்து விட்டோமா என்று சந்தேகம் வந்து விட்டது. இப்போது மஹத் தொடர்ந்து அழுதுகொண்டிருக்க ரித்விகா, ஜனனி, ஷாரிக் வந்து சமாதானப்படுத்தினார்கள். யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இவரை நெருங்கவில்லை. 

‘ஜெனரேஷன் கேப் இருக்கு. டிரஸ் பத்தி சொல்லிட்டே இருக்காங்க’ என்கிற காரணத்தைச் சொல்லி பொன்னம்பலத்தை நாமினேட்  செய்தார் ஐஸ்வர்யா மேடம். (பின்னே.. இன்னிக்கு ஆடின ஆட்டம் அப்படி  ஆச்சே..!) “மத்தவங்களால ஈஸியா influence ஆயிடறாங்க.. இவங்க என்ன மாதிரி கேம் விளையாடறங்கன்னே தெரிய மாட்டேங்குது” என்று ரித்விகாவை நாமினேட் செய்தார் மேடம்.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இருக்கிற பிரச்னைகள் போதாதென்று, ‘மும்தாஜ் சமைச்சா சாப்பிட மாட்டேன்’ என்பது போல் எதையோ சொல்லி எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றிக்கொண்டிருந்தார் பொன்னம்பலம். சமாதானம் சொல்ல வந்த மும்தாஜிடம் எதையோ சொல்லி மழுப்பினார். பிறகு அவர் சென்றதும் “இவங்க கிட்ட வாங்கி சாப்பிடறது.. பிச்சையெடுத்துச் சாப்பிடறது மாதிரி இருக்கு” என்று டேனியிடம் வருத்தப்பட்டார் பொன்னம்பலம். (ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலீங்னா. சித்தப்ஸ்ஸோட பீலிங் தனி ரகமா இருக்கு!).

நாமினேஷன் சடங்கு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பொன்னம்பலம், மும்தாஜ், மஹத், ரித்விகா, பாலாஜி, ஷாரிக் என்று இந்தப் பட்டியல் பெரிதாக இருந்தது. விட்டால் பிக்பாஸையும் இதில் இணைத்திருப்பார்கள் போல. 

தொடரும்... 

அடுத்த கட்டுரைக்கு