Published:Updated:

`சர்வாதிகாரி ஐஸ்வர்யா'வின் அடுத்த ஆர்டர்..! - பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா

தார்மிக் லீ

`பிக் பாஸ்' மார்னிங் மசாலா, மிட்நைட் மசாலா... என்ன நடந்தது?

`சர்வாதிகாரி ஐஸ்வர்யா'வின் அடுத்த ஆர்டர்..! - பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா
`சர்வாதிகாரி ஐஸ்வர்யா'வின் அடுத்த ஆர்டர்..! - பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா

பிக் பாஸ் வீட்டில் நேற்று சொன்னதுபோல ஐஸ்வர்யாவின் ஆட்டம் இனிதே ஆரம்பமானது. அவரைப் பற்றி புறம் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், நேற்று அவர் செய்ததெல்லாம் `ஏலியன்' லெவல். பிக் பாஸே அதை எதிர்பார்த்திருக்கமாட்டார். நடப்பதை எல்லாம் பார்க்கும்போது, மதன் எழுதிய `மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்' புத்தகம்தான் நினைவுக்கு வருகிறது. மும்தாஜ் நடப்பதைப் பார்த்து அழுதது, பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது, அங்கிருப்பவர்களது உடைமைகளை நீச்சல் குளத்தில் விட்டெறிந்தது, பீதியில் அனைவரும் உறைந்திருந்தது... என இதுவரை நடக்காத ஒன்று நேற்று நடந்தது. அதைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மசாலாவிலும், மார்னிங் மசாலாவிலும் என்ன நடந்தது? 

மிட்நைட் மசாலா :

* நடப்பதைக் கண்டு ஒட்டுமொத்த வீடுமே உறைந்து கிடந்தது. இதில் பொன்னம்பலம் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன... ஒரு ஓரமாக உட்கார்ந்து நடப்பதை நினைத்து வருந்திக்கொண்டிருந்தார். `ஆத்தாடி இந்தப் பொண்ணுகிட்டயா ஒரண்டை இழுத்தோம்?' என்பதுபோல பயம் கலந்த சோகத்தில் ஐஸ்வர்யாவை வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தார். `சர்வாதிகாரி ஐஸ்வர்யா'வுக்குத் தனியறை கிடைத்தது அவருக்கு வசதியோ இல்லையோ, டேனியலுக்கு வசதியாகிவிட்டது. அங்கிருக்கும் ஆப்பிள், ஆரஞ்சுகளைத் திருட்டுத்தனமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். வாழைப்பழத்தைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, `ஏங்க இந்தத் தோளை எங்கே போடுறது' என்பதுபோல சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருந்தார். 

* இதற்கு நடுவில் வைஷ்ணவி பக்கம் கேமரா திரும்பியது. `என்ன பிக் பாஸ் பார்க்குறீங்க... இன்னும் எனக்குப் பைத்தியம் புடிக்கலை' என்று புலம்பிக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. ஏற்கெனவே ஐஸ்வர்யாவின் அலப்பறைகள் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே இதுதான் சான்ஸ் என அங்கிருப்பவர்கள் அனைவரும் வீட்டைச் சுத்தம் செய்யவிட்டார்போல! அந்த மூன்று பேரைத் தவிர, அனைவரும் வீட்டின் இண்டு இடுக்குகளைக்கூட தேய் தேய்யெனத் தேய்த்து வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். வேலை ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே அனைவரும் விளையாட்டு மோடுக்குத் திரும்பிவிட்டனர். `இவ்ளோ நேரம் அந்தப் பொண்ணு ஸ்ட்ரிக்டா இருந்ததே வேஸ்ட்!. எல்லோரும் விளையாடிகிட்டு இருக்காங்க பாரு..' என சென்றயானிடம் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார், டேனியல். இதுவரைக்கும் உடைச்சதெல்லாம் பத்தாதா? 

* சட்ட திட்டங்களில் சற்று மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக, ஆலோசகர் ஜனனியிடம் கலந்துரையாடிக்கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. தன் நெருங்கிய தோழியான யாஷிகாவையும் ஐஸ்வர்யா விட்டுவைப்பதாய் இல்லை. வீட்டை கிளீன் செய்ய இவர் பிறப்பித்த உத்தரவின்படி, இவரும் சோகம் நிறைந்த முகத்தோடு வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். நாமினேஷனில் யாஷிகாவின் பெயர் வந்தாலே ரூம் போட்டு அழும் ஐஸ்வர்யா, இத்தகைய செயல்களைச் செய்தது ஆச்சர்யம்தான். இந்த சர்வாதிகார சிக்கலில் இவர்களுக்குள்ளே இனிக் கருத்து வேறுபாடுகளும் ஏற்படலாம். 

மார்னிங் மசாலா :

* அனைவரது மைக்கிலும் பேட்டரி மாற்றும் சமயத்தில்தான் ஒட்டுமொத்த வீடும் அமைதியாக இருக்கிறது. மற்ற நேரங்களில் ஏதாவது ஒரு ஏழரையைக் கூட்டி, சந்தைக்கடை போல்தான் காட்சியளிக்கிறது பிக் பாஸ் வீடு. கார்டன் ஏரியாவில் `ராணி ஐஸ்வர்யா'வுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும், ஐஸ்வர்யா... ஸாரி ராணி மகாராணியின் விதிமுறை லிஸ்டில் இருப்பதுபோல் உடற்பயிற்சி செய்வதற்காகவும், அனைவரும் கூடியிருந்தார்கள். மும்தாஜும், பாலாஜியும் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை. மும்தாஜ் அவரது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். மற்ற அனைவரும் சிறுவர்கள் இடுப்பில் வளையம் மாட்டிக்கொண்டு சுற்றுவதுபோல், உடற்பயிற்சி என்ற பெயரில் `ஓ' போட்டுக்கொண்டிருந்தார்கள். 

* இதுவரை பிக் பாஸ் சிறையில் ஒருவர் மட்டும்தான் அடைபட்டுக்கிடந்தார், அதுவும் பிக் பாஸின் உத்தரவின்படி!. ஆனால், இன்று பொன்னம்பலம், யாஷிகா, மஹத், சென்றாயன், ஷாரிக், ரித்விகா என ஆறு பேர் சிறைக்குள் அடைபட்டுக்கிடந்தனர். இதுவும் ஐஸ்வர்யாவின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். உள்ளிருந்த அனைவரும் வாழ்க்கையை வெறுத்ததுபோல அழுகாத குறையாகப் புலம்பிக்கொண்டிருந்தார்கள். நடப்பதையெல்லாம் வேறு அறையில் இருந்து கண்டு கழித்துக்கொண்டிருந்த வைஷ்ணவி, சிரித்து ரசித்துக்கொண்டிருந்தார். `இந்நேரம் நான் மட்டும் அங்கே இருந்திருக்கணும்..!' என்பதுதான் இவரது மைண்டு வாய்ஸாக இருந்திருக்கும். கவலைப்படாதீங்க, உங்களையும் ஜோதியில ஐக்கியம் ஆக்கிடுவாங்க. 

இதுவரை சூடு பிடிக்காத பிக் பாஸ் வீடு, நாள்கள் செல்லச் செல்ல கொழுந்துவிட்டு எரிகிறது. பிக் பாஸோடு சேர்த்து மக்களும் இதைத்தான் எதிர்பார்த்தார்கள். கமல், இந்த வார இறுதியில் பேசுவதற்கும் ஏகபோகமாக டாபிக் கிடைத்துவிட்டது. `பார்த்தீங்களா ஒரு சர்வாதிகாரி கையில ஒரு வீடு கிடைச்சதுக்கே என்ன ஆச்சு?. நாடே கிடைச்சா என்ன ஆகும்?!' என்ற கமல் பொன்மொழிகளோடுதாம் ஷோவை ஆரம்பித்து வைப்பார். தொடர்ந்து பார்போம்!