Published:Updated:

``ஐஸ்வர்யா ஆட்டம் ஓவர், வெல்கம்பேக் வைஷ்ணவி!" - பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா

தார்மிக் லீ

பிக் பாஸ் மார்னிங் மசாலா, மிட்நைட் மசாலாவில் நடந்தது என்ன?

``ஐஸ்வர்யா ஆட்டம் ஓவர், வெல்கம்பேக் வைஷ்ணவி!" - பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா
``ஐஸ்வர்யா ஆட்டம் ஓவர், வெல்கம்பேக் வைஷ்ணவி!" - பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலா

ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரப் பிடியில் இரண்டுநாள் முன்பு பாலாஜி சிக்கியதைப்போல, நேற்று சென்றாயனும் மஹத்தும் மாட்டிக்கொண்டார்கள். `லூசு, மென்டல்' என ஆரம்பித்த வசவுகள், `போ நாயே' எனத் திட்டும் அளவுக்கு வளர்ந்தது இவர்களின் சண்டை. டாஸ்க் ஆரம்பித்தபோது, `எல்லோரையும் வெச்சு செய்றேன்' என்று ஐஸ்வர்யா சொன்னதைப்போல, `டாஸ்க் முடியட்டும் உன்னை வெச்சு செய்றோம்!' என்று மற்ற போட்டியாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து பிக் பாஸ் மார்னிங் மற்றும் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது? 

மிட்நைட் மசாலா :

* செய்வதையெல்லாம் செய்து முடித்துவிட்டு ஜனனியிடம் பாவமாகப் புலம்பிக்கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. `இது ஒரு டாஸ்க்' என்பதை மறந்துவிட்டு, மற்ற போட்டியாளர்களின் தன்மானத்தை இவர் சுரண்டியது கொஞ்சம் ஓவர்தான். வெளியே அவர்களுக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருப்பது ஒருபக்கம் இருந்தாலும், அவரை நெருங்கியவர்களுக்கு இது எந்த மாதிரியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து ஒவ்வொன்றையும் செய்துகொண்டிருக்கிறார், ஐஸ்வர்யா. இப்படியான சில தர்ம சங்கடங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும், மற்ற போட்டியாளர்கள் ஜாலியாகத்தான் இருக்கிறார்கள். கிச்சன் ஏரியாவில் சமைத்துக்கொண்டிருந்த சென்றாயனிடம், `அவன்கிட்ட சுத்தத்தைப் பத்தி மட்டும் பேசாத... ரொம்பப் கோபப்படுவான்' என்று டேனியல் சர்காஸம் செய்துகொண்டிருந்தார். `அட... இவன் வேற. நீயே ஒரு எண்பது தடவை சொல்லிருப்ப. ஏண்டா என்னைக் கொல்ற?' எனக் கிண்டலாகச் சிரித்துக்கொண்டிருந்தார், சென்றாயன். 

* இந்தக் களேபரங்களுக்கு நடுவே பாலாஜிக்கு உடம்பு முடியாமல் குளுக்கோஸ் ஏற்றியிருப்பார்கள்போல! கையில் அதற்கான ஊசி போடப்பட்டிருந்தது. `தட் சுகர் பேஷன்டுடா நானு மொமன்ட்'. `இந்த வாரம் எல்லோருக்கும் உண்மை எல்லாம் தெரிஞ்சே ஆகணும். அதுக்கு ஒரு குறும்படம் போடணும்' என்று தனது ஆதங்கத்தை மஹத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார், ஜனனி. இவர்கள் எல்லோரும் சகஜமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், `ஐஸ்வர்யா சர்வாதிகாரம்' மன்னிக்கவும், `ராணியம்மா ராணி' டாஸ்க் முடிந்து, ஒரு வழியாக வீடு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. `இதுதான் தவறான விஷயம்' என நினைத்த பிக் பாஸ், ரகசிய அறையில் இருந்த வைஷ்ணவியை வீட்டுக்குள் மீண்டும் லான்ச் செய்துவிட்டார். கார்டன் ஏரியாவிலிருந்த கதவுகள் மூடப்பட்டன, சுற்றியிருந்த அனைத்துத் திரைகளும் அடைக்கப்பட்டன. இதைப் பார்த்துப் பதறிப்போன போட்டியாளர்கள், `என்னது அடுத்த டாஸ்க்கா?' என்று பீதியானார்கள். ஆனால், வந்ததோ வைஷ்ணவி. இவரது என்ட்ரிக்குப் பின் சிலர், `இதுக்கு டாஸ்க்கே பரவாயில்லை' என்றுதான் நினைத்திருப்பார்கள். அந்தளவுக்கு முகத்தில் சோகம் நிரம்பி வழிந்தது. வெல்கம்பேக் வைஷ்ணவி! 

மார்னிங் மசாலா :

* நினைத்ததுபோலவே, `ஐ ஆம் பேக்' என்று பில்லா அஜித்தைப்போல வீட்டுக்குள் களமிறங்கிவிட்டார், வைஷ்ணவி. காலையில் பாடல்களுக்கு ஆடி முடித்துவிட்டு, எல்லோரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். `ராணியம்மா ராணி' டாஸ்க் முடிவடைந்துவிட்டதை கார்டன் ஏரியாவைப் பார்த்த பின் நிரூபணம் ஆகிவிட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யாவின் பொம்மையை அகற்றிவிட்டு, மீண்டும் டிரெட்மில் வந்துவிட்டது. ஸ்ஸ்ஸப்ப்பா..! டாஸ்க் முடிந்துவிட்டாலும், ஐஸ்வர்யா ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் மற்றவர்கள் மீண்டு வரவில்லை. யாரும் அவரிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. `இருக்காதா பின்ன..!'. இனிவரும் நாள்களில் இதை வைத்து ஒரு அழுகை எபிசோடு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.   

* வைஷ்ணவி அவரது அறையில் கண்டு மகிழ்ந்த சில ஜாலி மொமன்ட்ஸை மற்றவர்களிடம் இமிடேட் செய்து காட்டிக்கொண்டிருந்தார். அதிலும், சென்றாயன்தான் முதலில் சிக்கினார். நூதனமாக அவர் சப்பாத்தி மாவைக் கிண்டியதை நடித்துக் காட்டிக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. இரண்டுநாள் முன்பு ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகார உரிமையைக் கொடுத்த பிக் பாஸ், இன்று சிறப்பாய் ஒரு சம்பவத்தைச் செய்திருக்கிறார். `வாயைத் திறந்து பேசக் கூடாது' என்பதுபோல் இவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது குற்ற உணர்ச்சியில் தனக்குத்தானே இந்த தண்டனையைக் கொடுத்திருக்கலாம். எல்லோரிடமும் சைகையால் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். 

* யாஷிகாவும், டேனியலும் கலாய் மாரத்தான் நடத்திக்கொண்டிருந்தார்கள். டேனியல் இவரை `பிளக் பாயின்ட் மூக்கி, அந்த மூக்கி, இந்த மூக்கி' எனக் கலாய்த்துக்கொண்டிருந்தார். யாஷிகாவும் பதிலுக்கு, `போடா போண்டா மூக்கா, பஜ்ஜி மூக்கா, விக்கு தலையா' என்று சரிக்குச் சமமாகக் கலாய்த்துக்கொண்டிருந்தார். இறுதியில், `போடா இந்த கிரிக்கெட் மேட்ச்ல கலர் விக் போட்ருப்பாங்களே, அந்த மண்டையா' என்று யாஷிகா டேனியலைச் சொல்லியதுதான், ஹைலைட். இதற்கு நடுவில் டேனியல், `இன்னிக்கு வெஜ்தான் சமைக்கப்போறேன்' என்று சொல்ல, `டேய் நாலு நாள் முட்டைகூட சாப்பிடலைடா. எனக்கு சிக்கன் வேணும்' என்று பாவமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் வைஷ்ணவி. குறியீடு!

இரண்டு நாள்களாகப் போர்க்களமாக இருந்த பிக் பாஸ் வீட்டில், இன்று ஒரு வழியாக சமாதான கொடி பறந்தது. இது தொடருமா, அல்லது சார்ஜை வேறு யாராவது கையில் எடுப்பார்களா... தொடர்ந்து பார்ப்போம்!