Published:Updated:

`சாணி மகாராணி..!' ஐஸ்வர்யா ஒழிக! புரட்சி... ஆம்... புரட்சி #BiggBossTamil2

`சாணி மகாராணி..!' ஐஸ்வர்யா ஒழிக! புரட்சி... ஆம்... புரட்சி #BiggBossTamil2
`சாணி மகாராணி..!' ஐஸ்வர்யா ஒழிக! புரட்சி... ஆம்... புரட்சி #BiggBossTamil2

`சாணி மகாராணி..!' ஐஸ்வர்யா ஒழிக! புரட்சி... ஆம்... புரட்சி #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்டில், கடந்த சில நாள்களாகச் சென்றுகொண்டிருக்கும் ‘ராணி மகாராணி’ என்கிற லக்ஸரி டாஸ்க், ஒரு திரைப்படத்தின் அற்புதமான கிளைமாக்ஸ் போல முடிவுக்கு வந்தது. (ஆனால் இது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை) ‘புரட்சி’ என்கிற அடைமொழியுடன் இங்கு பல பிரபலங்கள் இருந்தாலும், அப்படியொரு வஸ்து தமிழகத்தில் வராததைப் போலவே பிக் பாஸ் வீட்டிலும் புரட்சி வராதோ, மக்கள் இப்படி மொண்ணையாக எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இறுதி நாளில் இதற்கான ஞானோதயம் வந்து ‘மக்கள் புரட்சி’ ஏற்பட்டு கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆக இந்த ‘டிராமா’ சுபத்தில் முடிந்தது. இதற்கான விளக்கங்களை அரசியல் நையாண்டியுடன் கமல் அளிப்பார் என்று எதிர்பார்ப்போம். 

சர்வாதிகாரி பாத்திரத்தை ஐஸ்வர்யா அட்டகாசமாகக் கையாண்டார். இறுதியில் கட்டுக்கடங்காத அவரது அழுகையைப் பார்த்து கல்லுளி மங்கரான பிக்பாஸே மனமிரங்கி  ‘காரெக்ட்டரிலிருந்து வெளியே வாங்க என்று சொன்னதிலிருந்து ஐஸ்வர்யா தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார் என்பதும் இது ஒரு டிராமா என்கிற யூகமும் உறுதியாயிற்று. 

ஐஸ்வர்யாவின் அழுகையினால் தன்னிச்சையாகக் கலங்கிய பிக் பாஸின் ‘டங் ஸ்லிப்’ ஆன விநோதமும் நடந்தது. கடந்த சீஸனிலும் சரி, இந்த சீஸனிலும் இதுவரையும் சரி, எனக்குத் தெரிந்து பிக் பாஸ் ஆங்கில வார்த்தையில் பேசியதில்லை. ஆனால் ‘sit back and breathe’ ‘ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா, want to say something?’ என்று தடுமாறிவிட்டார், பிக் பாஸ். ஐஸ்வர்யாவின் கட்டுங்கடங்காத அழுகை பார்வையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கக்கூடும்.

நடிப்பு வகைகளில் ‘Method Acting’ என்றொரு பாணி உண்டு. குறிப்பிட்ட திரைப்படம் முடியும் வரை, படப்பிடிப்பைத்தாண்டி உண்மையான வாழ்க்கையிலும் அந்தப் பாத்திரத்தின் தன்மையோடு இருப்பது. ‘பிதாமகன்’ திரைப்படத்தில் நடித்த விக்ரம் வீட்டிலும் அதே மனோநிலையோடு இருந்ததாக ஒரு நேர்காணலில் கூறினதை வாசித்த நினைவிருக்கிறது. சர்வாதிகாரியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதன் குறியீடாக அவர் நீரில் தள்ளவிடப்பருக்கும் தகவல் ஐஸ்வர்யாவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அது நிகழ்த்தப்பட்ட முறையில் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். அதை விடவும் அதுவரை அவர் தாங்கிக்கொண்டிருந்த ‘சர்வாதிகாரி’ எனும் பிம்பம் ஒரு நொடியில் உடைந்துபோனது அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ‘டாஸ்க்’தான் என்றாலும் இத்தனை பேர்களை, இத்தனை நாளில் அடாவடியாக நடத்தியது குறித்து அவருக்குள் உறுத்திக்கொண்டிருந்த குற்றவுணர்ச்சியின் அழுத்தங்கள் ஒன்றாக இணைந்து வெளிப்பட்ட தருணம்தான் அந்த அழுகை என்று தோன்றுகிறது. பிக் பாஸ் உறுதிப்படுத்தியதைப் போல, இந்த டாஸ்க்கை அவர் அட்டகாசமாக முடித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்கான நியாயம் ஒரு பக்கம் இருந்தாலும், பாலாஜியின் மீது குப்பை கொட்டிய மிகையான எதிர்வினையைத் தவிர ‘ஒரு சர்வாதிகாரி’யாக ரசிக்க வைக்கும் தோரணையில் அவர் இயங்கியது பாராட்டப்பட வேண்டியது. இது ஒரு டாஸ்க் என்பதை முதலில் புரிந்துகொள்ளாமல் முரண்டு பிடித்த சில போட்டியாளர்கள், பிறகு மெள்ள மெள்ள மாறினார்கள். இறுதி வரைக்கும் புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்துகொண்டும் ஒத்துழைக்காமல் அழிச்சாட்டியம் செய்தவர், பாலாஜி மட்டுமே. 

இந்தக் கூத்துகளையெல்லாம் ரகசிய அறையிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வைஷ்ணவி பிக் பாஸ் வீட்டுக்கு மறுபடி இன்று திரும்புகிறார் போலிருக்கிறது. அவருடைய மதிப்பீடுகளால் பிக் பாஸ் வீடு இன்னமும் களைகட்டும்.

**

45-ம் நாளின் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன. தான் தயாரித்த உணவு தனக்கே கிடைக்காத விநோதமான கொடுமை சென்றாயனுக்குக் கிடைத்தது. ‘மன்னிப்பு கேட்டு விட்டு சாப்பிடலாம்’ என்று ராணியம்மா உத்தரவு போட ‘அதான் ‘குளியல்’ தண்டனை கொடுத்துட்டீங்கள்ல, அப்புறம் என்ன. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று நியாயமான வீறாப்பை அடைந்தார், சென்றாயன். ‘நீ என்னைக் குரங்கு’ன்னு சொன்னல்ல.. லூஸூ-ன்னு சொன்னல்ல’ என்று எல்.கே.ஜி. பிள்ளைகள் போல் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டார்கள். ‘ஒரு கேஸூக்கு எத்தனை தண்டனைய்யா கொடுப்பீங்க. என்னால மன்னிப்பு கேட்க முடியாது. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்கதான் பொறுப்பு’ என்று கோபமாகப் பேசியபடி கிளம்பினார், சென்றாயன். ‘ஸாரி.. கேளுங்களேன்’ என்று மும்தாஜ் சொன்னதையும் அவர் கேட்கவில்லை.

“இது டாஸ்க்ண்ணே.. கொடுங்கோல் ஆட்சி.. உங்களுக்கு இது புரியலையா?” என்று வெயிலில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்த ஷாரிக் சொல்ல, ‘சரி தங்கம்.. கொடுங்கோல் ஆட்சியை மக்கள் எதிர்க்க மாட்டாங்களா?” என்று சரியான லாஜிக்கைப் பிடித்தார், சென்றாயன். (சில அடிப்படையான விஷயங்களில், கல்வியறிவு பெற்ற நடுத்தரவர்க்கத்தின் அடிமைத்தனத்தை விட கல்வியறிவு இல்லாதவர்கள் கூர்மையாகச் சிந்திக்கும் நடைமுறைத்தன்மை இங்கும் பிரதிபலிப்பதைக் காண முடிந்தது). 

ஆலோசனை அறையில் இருந்த மாம்பழத்தை எடுத்து சுவாரஸ்யமாக மொக்கிக்கொண்டிருந்தார், டேனி. அங்கு நுழைந்த ராணி, ‘பெர்மிஷன் இல்லாம எப்படி எடுத்து சாப்பிடுவீங்க..? முட்டிக் கால் போட்டு கையேந்தி சாப்பிடுங்க’ என்ற டாஸ்க்கை ஜாலியாக தர, அந்த பொஷினனிலும் ‘ஆஹா.. மாம்பழத்தின் அற்புத ருசி’ என்று வேடிக்கை காட்டினார், டேனி. பகடியின் மூலம் அதிகாரத்தை எதிர்ப்பதும் ஒரு வழிமுறைதான். 

‘நீங்க ஐஸ்வர்யாகிட்ட மன்னிப்பு கேட்கலை, ராணிகிட்டதான் கேக்கறீங்க.’ என்று ஐஸ்வர்யா விளக்கமளித்தும் சென்றாயன் மன்னிப்பு கேட்கத் தயாராக இல்லை. ‘அடுத்த சில நிமிடங்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால் விதி எண்.5-ஐ பயன்படுத்துவேன்’ என்று அரசாங்கக் குரலில் மிரட்டினார், ஐஸ்வர்யா. சில நிமிடங்களுக்குப் பொதுமக்கள் கூடி ஆலோசனை செய்வது என ஏற்பாடாயிற்று. 

'நம்ம பேசறதையெல்லாம் அவங்க வீடியோல பார்க்காறங்க. இது ஒரு டாஸ்க்’ என்று தன்னுடைய தெளிவான புரிதலை சென்றாயனுக்குக் கடத்த முயன்றார், ரித்விகா. ‘நீ வேணா.. கால்ல விழுந்து விசுவாசத்தைக் காட்டு’ என்று வழக்கம்போல் சென்றாயனிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தார், பாலாஜி. 

‘ஜெயில்ல இருக்கணும்.. அவனுக்கு யாரும் அன்னம் தண்ணி புழங்கக் கூடாது. பசுபதி… இதாம்லே ரூல் நம்பர் அஞ்சு’ என்பது போல் ஆலோசனை அறையில் சொல்லிக்கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. “நீங்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் எங்கள் அனைவருக்கும்கூட பாதிப்பு ஏற்படலாம். பிக் பாஸ்கிட்ட மன்னிப்பு கேட்கறதா நெனச்சுக்கங்க. ராணி மகாராணி மன்னிச்சுடுங்க’னு கேட்டுடுங்க..” என்று இதர போட்டியாளர்கள் விதவிதமாக சென்றாயனை கன்வின்ஸ் செய்ய முயன்றார்கள். ‘இந்த விளையாட்டின் தன்மை அப்படி. ஒரு சமயம் லட்டு வரும், இன்னொரு சமயம் வேற ஒண்ணு வரும். என்று சரியான புரிதலுடன் சொன்னார், பொன்னம்பலம். 

‘இந்த விளையாட்டை சரியாகப் புரிந்துகொண்டவர்கள், பொன்னம்பலம், மும்தாஜ், ஷாரிக், ரித்விகா, யாஷிக், மஹத்’ என்று ஆலோசனை அறையிலிருந்து சான்றிதழ் தரப்பட்டது. பொதுமக்களின் உரையாடலை அங்கிருந்து பார்த்துக்கொண்டிருந்தார், ராணி. ‘எல்லோருக்கும் ஒரு விஷயம் தெளிவாச் சொல்லிடறேன். இப்ப நான் ஐஸ்வர்யா இல்ல. பிக்பாஸ் வீட்டு ராணி. அந்த நிலையில் இருந்துதான் ரூல்ஸ் சொல்றேன். புரிஞ்சுட்டு ஃபாலோ பண்ணுங்க’ என்றார், ஐஸ்வர்யா.

மற்றவர்கள் சமாதானப்படுத்தியதால், குறிப்பாக மும்தாஜின் வழிகாட்டுதலின் காரணமாக அரைமனதாக வந்து ‘ராணி... மன்னிப்பு’ என்று சென்றாயன் முணுமுணுக்க.. ‘என்னாதிது.. என்னமோ என்னை மன்னிக்கற மாதிரி இருக்கு. ஒழுங்கா மன்னிப்பு கேளுங்க..’ என்று ராணி தன் கெத்தைக் காட்டியதும் அரைகுறையாக சென்றாயன் மன்னிப்பு கேட்டதும் ‘சரி போய் சாப்பிடுங்க’ என்று கருணை காட்டினார், ஐஸ்வர்யா. 

அடுத்து இன்னொரு முக்கியமான தெளிவை ராணி அடைய வேண்டியிருந்தது. ‘பாலாஜி இந்த டாஸ்க்கில் இருக்கிறாரா, இல்லையா’ என்பதே அது. அது பற்றிய விசாரணையின்போது தன் வெட்டி வீறாப்பை விடாமலேயே பேசிக்கொண்டிருந்தார், பாலாஜி. “அதான் பாத்திரம் கழுவிட்டேன்ல தலைவி! ச்சே... பிக்பாஸ் சொன்னதால செஞ்சேன்ல’ என்று அவர் சொன்னாலும் நேரடியாக பதில் சொல்லாததால் அவருக்கான தண்டனையைப் பற்றி ஆலோசனை செய்யப்படும் என்றார், ராணி. “என்ன வேணா செஞ்சுக்கங்க’ என்று முறைத்துக்கொண்டு நின்றார், பாலாஜி.

“ஏம்ப்பா.. உனக்கு உதவி செய்ய வந்தா எனக்கே வேலை காண்பிக்கிறியா?” என்று சென்றாயனிடம் கோபித்துக்கொண்டார், டேனி. அவருடைய மறைமுகமான கோபம் பாலாஜியின் மீது.

‘மற்றவர்களுக்குச் சாப்பாடு தர மாட்டோம்’ என்கிற விதியைக் கொண்டு வந்தால் பாலாஜி தன்னாலேயே வழிக்கு வருவார் என்று ஆலோசனை சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

முரண்டு பிடித்த பாலாஜிக்கு ‘பாத்ரூம் சுத்தம் செய்யும் பணி தரலாம்’ என்று முடிவு செய்த ராணியம்மா, பிறகு மனதை மாற்றிக்கொண்டு, ஷாரிக் செய்துகொண்டிருந்த ‘சிலை பராமரிப்பு’ பணியைத் தரலாம் என்று முடிவு செய்தார். 

தனக்குத் தரப்பட்டிருக்கும் தண்டனை தொடர்பாக, “என்ன செய்யலாம்?’ என்று பாலாஜி பொன்னம்பலத்திடம் ஆலோசனை கேட்க, ‘நாம இங்க ஜெயிக்க வந்திருக்கோம். அதுக்குண்டான வேலையைப் பார்க்கணும். இது டாஸ்க். நீ புரட்சி வீரர்னா, முதல்ல குப்பைக் கொட்டும் போதே மறுத்து அடிக்கறதோ, திட்டறதோ, ஏதாவது செஞ்சிருக்கணும். அதை விட்டுட்டு ஆள் அந்தப் பக்கம் போனபிறகு ‘மூஞ்சை உடைச்சுடுவேன்’னு பந்தா காட்ற. பொதுமக்களும் இதைப் பார்க்கறாங்க. யாருக்கு மைலேஜ் போகும்ணு யோசிச்சிக்கோ. நெறைய நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா வேற இருந்திருக்க. உனக்கே தெரியல. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்’ என்று ஒரு விரிவுரையே தந்தார், பொன்னம்பலம். 

ஆறடி உயர பொன்னம்பலம் இப்படிப் பணிந்து போகிறாரே, என்று நாமும்கூட சற்று ஏளனமாக நினைத்துக்கொண்டிருக்கும்போது ரியாலிட்டி ஷோக்களின் தன்மையை இத்தனை துல்லியமாக அவர் புரிந்து வைத்திருப்பது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் – ரியாலிட்டி ஷோக்களில் புழங்குகிற பாலாஜிக்கு இது தெரியாமலிருப்பதுதான் நகைச்சுவை முரண். ‘சென்றாயன்.. என்ன பண்ணலாம்?” என்று முதன்முறையாக அவருக்கு மதிப்பு தந்தார், பாலாஜி. (பிரச்னை வரும்போதுதான் நண்பர்களின் அருமை தெரிகிறது).

“இதுக்குக் கீழ்படிஞ்சா மாதிரி ஆயிடுமேடா?” என்று அப்போதும் தன் கெத்தை விடாமல் ஷாரிக்கிடம் பாலாஜி புலம்ப, பொன்னம்பலம் சொன்னதையே அவரும் வழிமொழிந்தார். பிறகு ஒரு வழியாகத் தண்டனைக்கு ஒப்புக்கொண்ட பாலாஜி, ‘தலை சுத்துது’ என்று  சிலையின் அடியிலேயே படுத்துக்கொண்டார். 

ரித்விகாவின் மீது, யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் வெறுப்புள்ளது என்பதை நிரூபிக்கும் சம்பவம் நடந்தது. ‘நான் safe-ல இல்லைன்னா என்னை நாமினேட் பண்ணியிருப்பீங்க, இல்லையா, அப்படித்தானே பின்னாடி பேசினீங்க. எனக்கு எல்லாம் தெரியும்” என்று ரித்விகாவை வம்புக்கு இழுத்தார் யாஷிகா. ‘எனக்கு அப்ப என்ன தோணுதோ.. அப்படித்தான் முடிவு பண்ண முடியும்” என்று ரித்விகா சமாளித்தாலும் ‘நான் மூணு வாரம் முன்னாடி தூங்கினது மட்டும் ஞாபகம் இருக்கா?” என்று யாஷிகா விடாமல் வம்பிழுக்க அவரை தவிர்க்க முயன்றார் ரித்விகா.

‘லக்ஸரி பட்ஜெட்டின் மூலம் கிடைத்த சிக்கனை, சென்றாயனும் பொன்னம்பலமும் சாப்பிடக் கூடாது’ என்று அடுத்த அலப்பறையை ஆரம்பித்தார் ஐஸ்வர்யா. டேனி சென்றாயனுக்கு ஆதரவாக எதையோ செய்யப் போக, ‘உங்க சகோதரத்துவ பாசத்தையெல்லாம் டாஸ்க் முடிஞ்சப்புறம் வெச்சுக்கங்க’ என்று எச்சரித்தார் ராணி. ‘அவங்க வேணா ஒரு மொட்டை சாப்பிடச் சொல்லுங்கோ’ என்று பிறகு கருணை அடிப்படையில் ஒரு சலுகை தந்தார். ‘முட்டையா?’ என்று சிரித்தார் டேனி. “ஏன் நான் பேசறதுக்குச் சிரிக்கறீங்க? அஞ்சு வாட்டி தோப்புக்கரணம் போடுங்க” என்று டேனியை ஜாலியாக இம்சித்தார் ராணி. ‘நீங்க அரைமணி நேரம் வாயை மூடுங்க’ என்கிற தண்டனை ஜனனிக்குக் கிடைத்தது.

‘பசிக்குது.. சாப்பாடு ரெடியா’ என்று அவசரப்படுத்தின ராணியம்மா.. ‘சிக்கன் குழம்பை எடுத்துட்டு வாங்க’ என்று அடுப்பை அணைத்து ஷாரிக்குக்கு உத்தரவு போட, ‘இதை எப்படி.. நொண்டி நொண்டி எடுத்திட்டு வரவா?” என்று கேட்டு கலாய்த்தார் ஷாரிக். ‘தலை மேல வைங்க. எப்படி வேணா எடுத்திட்டு வாங்க’ என்று பதிலுக்கு ஒழுங்கு காட்டினார் ராணி. 

இதற்கிடையில் ஜாலியான தவறு நடந்து காமெடியாயிற்று. ‘இன்னும் கொஞ்சம் வேகணும்” என்று சென்றாயன் மறுபடி அடுப்பை ஏற்ற.. ‘உனக்குதான் சிக்கன் கிடையாதே.. அப்புறம் என்ன பிரச்னை’ என்று தடுத்தார் ராணி. அங்கிருந்து விலகியிருந்த ஷாரிக் மறுபடியும் வந்து சிக்கன் குழம்பை தூக்க முயல.. ‘கிச்சன் பக்கம் வர்றதுக்கு யாரு உனக்கு பர்மிஷன் கொடுத்தது?” என்று கோபமடைந்தார் ராணி. “நீங்கதானே.. எடுத்துட்டு வரச் சொன்னீங்க’ என்று ஷாரிக் சொல்ல.. கிரேசி மோகனின் நாடகத்தைச் சிறிது நேரம் பார்த்த மாதிரி இருந்தது. 

‘சிக்கன் வெந்து விட்டதா என்பதைப் பார்ப்பதற்காக டேனி குழம்பைக் கிளறி விட ‘உங்களை யாரு ஹெல்ப் பண்ணச் சொன்னது.. யாருக்கும் சிக்கன் கிடையாது. நீங்க ஸ்மார்ட்னா, நான் டபுள் ஸ்மார்ட்” என்று பாத்திரத்தை அப்படியே ஆலோசனை அறைக்குத் தூக்கிச் சென்றார் ராணி. அரைக்கிறுக்கர்களிடம் அதிகாரம் கிடைத்தால் அது எப்படியெல்லாம் அவல நகைச்சுவையாகும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா.

‘சென்றாயன் மும்தாஜுக்குச் சாப்பாடு ஊட்டி விடணும்’ என்பது அடுத்த டாஸ்க். முன்பு, சென்றாயனுக்கு உணவு ஊட்டி விட மும்தாஜ் தயங்கியதாலும் கமல் முன்பு அது பஞ்சாயத்துக்கு வந்ததாலும் அது தொடர்பான பாடத்தை மும்தாஜ் உணர வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம். ‘ஒரு வாய் உணவு வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்கிறேன். முழுச் சாப்பாடு முடியாது. இல்லைன்னா சாப்பாடு வேண்டாம்’ என்றார் ‘ஹைஜீன்’. சில நிமிட இழுபறிக்குப் பின்பு மும்தாஜின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. ‘கையைக் கழுவிட்டு வாங்க’ என்று சென்றாயனிடம் முன்ஜாக்கிரதையுடன் சொன்னார் மும்தாஜ். ‘எதற்காக இந்த டாஸ்க்’ என்பது அவருக்கு விளக்கப்பட்டவுடன் ‘நான்தான் சென்றாயனுக்கு அப்ப சாப்பாடு ஊட்டினேனே’ என்று விளக்கமளித்தார். (ஆனால், அவர் சென்றாயனுக்கு வேண்டாவெறுப்பாகத்தான் ஊட்டினார் என்பது பார்வையாளர்களுக்கு நினைவிருக்கலாம்).

அடுத்த அரைக்கிறுக்கு டாஸ்க் ரித்விகாவுக்கு. வீடெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் அனைத்துக்கும் ரித்விகா முத்தம் தர வேண்டுமாம்.‘அவங்க முத்தம் கொடுக்கலை.. துப்பறாங்க’ என்று ஜாலியாகப் போட்டுக் கொடுத்தார் யாஷிகா. இதைப் பொதுமக்களுடன் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த ஆலோசகருக்கு ‘அரை அணி நேரம் வாயை மூடு’ தண்டனையை வழங்கினார் ராணி. 

பொதுமக்களில் சிலரை மனஉளைச்சலாக்கும் ரகசிய டாஸ்க் தரப்பட்டது. “ஒவ்வொருத்தரின் வீக்னெஸைப் புரிந்துகொண்டு அவர்களை தொடர்ந்து எரிச்சலுக்கு ஆளாக்க வேண்டும்’ என்கிற டாஸ்க் மஹத்துக்குத் தரப்பட்டது. (ஹே.. ஏற்கெனவே அவர் வந்தது முதலே.. அதைத்தானே பண்ணிட்டு இருக்கார்?!). மும்தாஜுக்குத் தொடர்ந்து ஆலோசனை தந்து எரிச்சல் படுத்தும் டாஸ்க் பொன்னம்பலத்துக்குத் தரப்பட்டது. 

சும்மாவே நடனம் ஆடும் மஹத்துக்குக் காலில் சலங்கையை வேறு கட்டி விட்டதால் தன் அலப்பறையைக் கூடுதலாகச் செய்தார். டீ பாத்திரத்தைத் தூக்கிச் செல்வதும், யாஷிகாவின் உடைமைகளை எடுத்துப் போய் நீச்சல் குளத்தில் போடுவதும் என கலாட்டாகளை செய்ய, யாஷிகா பயங்கரமாக டென்ஷன் ஆனார். ஆனால் புத்திசாலியான ரித்விகாவுக்கு இது புரிந்துவிட்டது. ‘மஹத்துக்கு ஏதோ டாஸ்க் தந்திருக்கிறார்கள்’ என்பதை உணர்ந்துகொண்ட அவர், ‘அமைதியா இரு..’ என்று யாஷிகாவை தடுத்துக்கொண்டேயிருந்தார். 

ஷாரிக் நடுவராக இருந்த போது, மும்தாஜை தொடப் போய் அவரின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டதால் அதுவும் இப்போது டாஸ்க் ஆயிற்று. ஷாரிக் தொடர்ந்து மும்தாஜை தொட்டு விளையாட, மும்தாஜ் எரிச்சலுக்கு ஆளானார். 

‘Nothing.. Nothing…’ என்று சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் கமல் வெறியுடன் கத்துவதையும் மிஞ்சிய பர்ஃபாமன்ஸை ‘No physical violence’ என்று கத்துவதின் மூலம் தந்தார் ஐஸ்வர்யா. ‘என்னை டச் பண்ணாதீங்க.. No physical violence’ என்று ஜாலியாக இதைக் கிண்டல் செய்தார் மஹத். “பாருங்க.. உங்களாலதான் இதெல்லாம் ஆச்சு” என்று சம்பந்தமில்லாமல் சொல்லி மும்தாஜை வெறுப்பேற்றினார் பொன்னம்பலம். 

யாராவது திடீரென்று விநோதமாக நடந்தால் அவருக்கு ரகசிய டாஸ்க் ஏதாவது தரப்பட்டிருக்கலாம் என்கிற புரிதலை சிலர் இன்னமும் அடையவில்லை என்று தோன்றுகிறது. 

பெட்ரூம் க்ளீன் செய்யும் பணியை யாஷிகாவுக்கு ராணி தர, ‘வயிறு வலிக்குது’ என்கிற காரணத்தைச் சொல்லி மறுத்தார். உடனே ரூல் நம்பர் ஐந்தை அமல்படுத்தினார் ராணி. அதன்படி யாஷிகா சிறையில் அடைக்கப்பட, 45-ம் நாள் நிறைவடைந்தது. 

**

“ஆடுங்கடா என்னைச் சுத்தி.. ‘ என்ற பாடலுடன் 46-ம் நாள் விடிந்தது. சர்வாதிகாரி என்பதையும் மறந்து ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. காலை டிரில் ஆரம்பித்தது. ‘மன்னிப்பு’ பற்றிய உபதேசம் நடந்தது. (என்ன கொடுமை சரவணன்!) பிறகு தியானப் பயிற்சி. மன்னிப்பு பற்றிய பாடம் முடிந்த கையோடு அதற்கு முரணாக எல்லோரையும் 15 நிமிடம் சிறையில் அடைக்கச் சொன்னார் ராணி. 

‘சுச்சா வருது… கக்கா வருது’ என்ற கூக்குரல்கள் சிறையிலிருந்து எழுந்தன. ராணிக்கு ஆதரவாகப் பேசியதால் முதலில் பொன்னம்பலம் ஐயாவை வெளியே விட்டனர். சுச்சா விஷயத்தில் ‘ரித்விகா. Final edge-ல் இருக்கிறார்’ என்று யாஷிகா முறையிட்டாலும் கருணை காட்ட மறுத்து விட்டார் ஐஸ்வர்யா. அடுத்தது சென்றாயன் செல்ல வாய்ப்பு வர.. ‘டீ சாப்பிட்டாதான் எனக்கு வரும்’ என்றார். சிறையில் இருப்பவர்களின் மீது தண்ணீர் ஊற்றிய பிறகு சென்றாயன் செல்லலாம் என்று முடிவு செய்யப்பட அதன் படி செய்தார் சென்றாயன். இவற்றை வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா ‘என்னை சேவ் பண்ணுங்க பிக்பாஸ்’ என்று மைக்கில் ஜாலியாக முறையிட்டார். (பயப்படறியா.. குமாரு!)

“வெக்கம் இல்லாம டீ குடிக்க வந்துட்டே’ என்று வழக்கம் போல் சென்றாயனைச் சிறுமைப்படுத்தினார் பாலாஜி. “மக்கள் ஒத்துமையா இருந்து போராடினாதானே தீர்வு கிடைக்கும்” என்று அவர் சொல்வது சரிதான் என்றாலும், சாலையில் மயக்கமடைந்திருப்பவரின் அருகில் ‘யாராவது சோடா வாங்கிட்டு வாங்கப்பா’ என்று நகராமல் நின்று கொண்டிருக்கும் ஆசாமி மாதிரியே தள்ளி நின்று பேசினார் பாலாஜி. “பிக்பாஸ் சொல்லட்டும்னு கொலைவெறியோட காத்துக்கிட்டிருக்கோம்.. இல்லைன்னா.. எப்பயோ தூக்கிப் போட்டிருப்போம்’ என்று ரெளத்ரமானார் சென்றாயன்.  

“நேத்திக்குத் தோசைக்கு மன்னிப்பு கேட்டியே” என்று மறுபடியும் பாலாஜி தன் வெறுப்பேற்றலைத் தொடர.. ‘நீ மட்டும் சிலை கிட்ட வந்து நின்னியே.. எதுக்காக? மத்தவங்க பட்டினி கிடக்கக் கூடாதுன்னுதான் நான் மன்னிப்பு கேட்டேன்’ என்று சரியான பதிலடியைத் தந்தார் சென்றாயன். சென்றாயன் மன்னிப்பு கேட்க மறுத்து செய்த காரியத்தையெல்லாம் பாலாஜி பார்த்துக்கொண்டுதான் இருந்தார். பிறகு ஏன் இப்படிக் குத்திக் காட்ட வேண்டும்? பலமுள்ளவர்களிடம் மோத தைரியமில்லாமல் பலவீனமானவர்களை குத்துவது பாலாஜியிடமுள்ள ஒரு கெட்ட பழக்கம். 

அனைவருக்கும் டீ போட்டு எடுத்துச் சென்ற சென்றாயனை ‘யார் கிட்ட பர்மிஷன் வாங்கினீங்க?” என்று தடுத்தார் ஐஸ்வர்யா. ‘அடப் போங்கடா!’ என்று திரும்ப எடுத்துச் சென்ற அனைத்தையும் சென்றாயன் வைக்க, ‘தொறந்து வெச்சா.. _____ யாரும் குடிக்க மாட்டாங்க’ என்று இடைவெளியில் ஓர் ஆபாச வசையை நுழைத்துப் பேசினார் பாலாஜி. இதை வீடியோவில் கேட்ட ராணி ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ பாணியில் கிளம்ப ‘இருங்கம்மா.. என்னன்னு நிதானமா பார்ப்போம்’ என்ற டேனியின் பேச்சை அவர் கேட்கவில்லை.

பாலாஜி கெட்ட வார்த்தை பேசியதால், சிறையில் இருக்கும் யாஷிகாவின் மீது சென்றாயன் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிற தண்டனை தரப்பட்டது. (இதுல லாஜிக்கே .. இல்லையே..?). மற்றவர்களுக்குத் தண்டனை தருவதின் மூலம் பாலாஜி குற்றவுணர்வை அடைவதுதான் தண்டனை என்பதாக இருக்கும் போல.

‘பொதுமக்களுக்கு டேனி ஆதரவாகச் செயல்படுவதால்’ கோபம் கொண்ட ராணி, டேனியை பதவிநீக்கம் செய்தார். ராணி இருக்கும் போதே மற்றவர்களிடம் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார் என்பது கூடுதல் காரணம். தன் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொன்ன டேனி ‘இதை பிக்பாஸ் சொல்லட்டும்’ என்று புரட்சி அணியில் இணைந்தார். ‘ஆபத்தான ஆசாமி இல்லை’ என்று கருதி பொன்னம்பலம் பின்பு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

சிறையில் இருந்த அனைவரின் மீது தண்ணீர் ஊற்றப்பட ‘சாணி ராணி ஒழிக’ என்று ராணியை அனைவரும் கலாய்த்தனர். ‘புரட்சி’ என்று ஒருவர் கத்த, இன்னொருவர் ‘ஒழிக’ என்று தவறாக பதில் கூப்பாடு போட்டு அரசியல் கூட்டங்களில் நிகழும் காமெடியை பிரதிபலித்தார்கள். தங்கள் மீது தண்ணீர் படாமல் போர்வையால் மறைத்துக்கொண்டனர். ‘புரட்சி.. புரட்சி’ என்று அனைவரும் கத்த.. ‘அட வென்றுகளா.. இப்பவாவது உங்களுக்குத் தோணுதான்னுதான் நான் பண்ணிக்கிட்டிருக்கேன்’ என்று ராணியே எடுத்துக்கொடுத்தார். 

எம்.ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் அடிமைகள் புரட்சி செய்வது போன்ற கோஷத்தைப் போட்டார் மஹத். சிறைக்கம்பிகளை அவர்கள் ஆவேசமாகத் தட்ட காமிரா அதிர்ந்தது. ‘பிரியாணி தொண்டர்’ போல ஆப்பிளைத் தின்றுகொண்டே போராட்டம் செய்தார் யாஷிகா. ‘நான் இனிமே உங்களுக்கு முழு விசுவாசமாக இருக்கேன்’ என்று சொன்ன ஜனனி, காமிராவின் முன் கண்களை உருட்டிக் காட்டினார். (ஒருவர் இவ்வாறு சொல்லும் போதுதான் ராணிக்குச் சந்தேகம் வந்திருக்க வேண்டும்).

விதிகளை மீறியதால் மஹத்துக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சிறைக்கதவு திறக்கப்பட, அந்த நேரத்தில் சரியாக வந்த பொன்னம்பலம், ஐஸ்வர்யாவின் கழுத்தை நெறிக்கும் படி கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். பாவனையாக தடுக்க வந்த டேனியை விரட்டினார். சிலையை உடைங்க’ என்ற கூக்குரல்கள் கேட்டன. ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்துக்கு இழுத்துச் சென்ற பொன்னம்பலம், சென்றாயனின் உதவியுடன் நீச்சல் குளத்தில் தள்ளினார். மைக்கை கழற்றாமல் தள்ளி விட்டதால் ‘ரூல்ஸ் மீறிட்டாங்க’ என்று கூப்பாடு போட்ட, ஐஸ்வர்யா.. கொலைவெறியோடு கன்பெஷன் ரூமுக்குச் சென்றார். அங்கு காத்துக் கொண்டிருந்த மஹத்தை மீறி அவர் செல்ல முயற்சி செய்ய, தன்னைத் தடுத்த மஹத்திடம் உச்சபட்ச ஆத்திரத்தைக் காட்டி கத்தினார். ‘பிக்பாஸ், கதவைத்திறங்க’ என்கிற அவரின் கூப்பாடு கொடூரமாக இருந்தது. பிறகு கன்ஃபெஷன் ரூமுக்குள் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, சர்வாதிகாரியின் ‘கெத்து’ அனைத்தும் தளர்ந்த நிலையில் கட்டுக்கடங்காமல் கதறியழத் தொடங்கினார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அதுவரை மிகையாக ஊதப்பட்டுக் கொண்டிருந்த பிம்பம் ஒன்று உடைந்து களங்கமில்லாத ஒரு சிறுமியின் அழுகையைக் காண முடிந்தது. இதுதான் அவரின் உண்மையான முகமோ என்று நினைக்கத் தோன்றியது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘உங்கள் டாஸ்கைச் சிறப்பாகச் செய்தீர்கள். அமைதியாக இருங்கள்’ என்று அவரை ஆற்றுப்படுத்த முயன்றார் பிக்பாஸ். பிறகு மெள்ள  சமநிலைக்கு வந்த ஐஸ்வர்யா,.  ‘இப்ப நான் செய்யணும்.. இது mental மற்றும் physical task இந்த டாஸ்க் முடிந்ததா? என்று கேட்க, ‘இது பற்றி பின்னர் தெரியப்படுத்தப்படும்’ என்றார் விடாக்கண்டரான பிக்பாஸ்.

இந்தப் புரட்சியில் அவரவர்களின் பங்களிப்பு பற்றி வெளியே பொதுமக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘கழுத்தை நெறிச்சிட்டீங்க’ என்று சொல்லப்பட்டதற்கு ‘நான் என்ன பண்றது.. இதுதானே டாஸ்க்’ என்று விளக்கமளித்தார் பொன்னம்பலம். ‘நீங்க எல்லோரும் செஞ்சது தப்பேயில்லை’ என்றார் முன்னாள் ஆலோசகர் ஜனனி. (அடப்பாவி மக்கா!).

ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஈகோவினால் விளையாட்டாக ஆரம்பித்த ‘ராணி மகாராணி’ டாஸ்க் வினையில் முடிந்தது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்கிற பின்னணிக்குரலுடன் இன்றைய நாள் நிறைவடைந்தது. 

இந்த விளையாட்டின் மோசமான போட்டியாளர் என்று பாலாஜியைச் சொல்லலாம். ‘டாஸ்க்’தான் என்றாலும் பாலாஜியின் மீது குப்பை கொட்டிய விவகாரம், கமலின் பஞ்சாயத்து நாளில் தீவிரமாக அலசப்படும் என்று தெரிகிறது. பார்வையாளர்களின் மனநிலை மற்றும் விளையாட்டு விதி என்று இரண்டுக்கும் நடுவில் நின்று சமநிலையுடன் கமல் பேசியாக வேண்டும். மேலும், பல சர்ச்சைகளுக்கான பஞ்சாயத்தையும் அவர் செய்தாக வேண்டும். இதை அவர் முறையாகச் செய்யாமல் ‘விஸ்வரூபம் படத்தின் நான்காவது பாடல்’ என்று ஆரம்பித்தால்.. பார்வையாளர்கள் உண்மையாகவே புரட்சியை ஆரம்பித்து விடுவார்கள். ஸோ…வெயிட்டிங் ஃபார் பஞ்சாயத்து டே. 

இன்று வைஷ்ணவி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து மேலும் குட்டையைக் குழப்புவார் என்று தெரிகிறது. பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு