Published:Updated:

குப்பை கொட்டிய ஐஷ்வர்யா... புறம் பேசிய பாலாஜி... எது மிகப்பெரிய தவறு ? #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
குப்பை கொட்டிய ஐஷ்வர்யா... புறம் பேசிய பாலாஜி... எது மிகப்பெரிய தவறு ? #BiggBossTamil2
குப்பை கொட்டிய ஐஷ்வர்யா... புறம் பேசிய பாலாஜி... எது மிகப்பெரிய தவறு ? #BiggBossTamil2

‘மக்கள் புரட்சி’யின் மூலம்தான் கொடுங்கோல் ஆட்சியை அகற்ற முடியும்’ என்கிற செய்தியை இவ்வுலகிற்கு உணர்த்த யாம் ஆடிய நாடகம் இது’ என்கிற ‘திருவிளையாடல்’ வியாக்கியானத்துடன் ‘ராணி மகாராணி’ டாஸ்க்கை முடித்து வைத்தார், பிக் பாஸ். இதற்கு இத்தனை கலாட்டா! இணையத்தில் இத்தனை குடுமிப்பிடி சண்டைகள்! (ஷாரிக் பையன் பாவம் இல்லே… பாவம் நாம்தான்!).

46-ம் நாளின் ‘சம்பவங்கள்’ தொடர்கின்றன.

அவிழ்ந்த கூந்தலுடன் கன்ஃபெஷன் ரூமில் ஆவேசமாக அமர்ந்திருந்த ஐஸ்வர்யாவை ஆசுவாசப்படுத்திய பிக்பாஸ், ‘இந்த டாஸ்க் முடிந்தது. உடைகளை மாற்றிக்கொள்ளுங்கள். இதைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம்’ என்று அனுப்பிவைத்தார். 

உள்ளே சென்றிருக்கும் ‘மாரியாத்தா’ எப்போது வருவாரோ என்கிற பதைபதைப்பு உள்ளே இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு வெளியே மக்கள் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். ‘மெயின் வில்லனை வெளியே விட்டுட்டீங்களேப்பா’ என்று சென்றாயன் சொன்னதுக்கு வெடித்து சிரித்தார், பொன்னம்பலம். “நல்ல வேளை, டேனி என் கிட்ட போராடலை” என்று பொன்னம்பலம் சொன்னதுக்கு ‘அதுக்காக மைக்கோட பிடிச்சு தண்ணில தள்ளுவாங்களா? மைக்கோட விலை எண்பதாயிரம்” என்றார் நிதி ஆலோசகராக மாறியிருந்த, ஜனனி. (அம்மாடியோவ்!). ‘பழம்.. வெத்தலை பாக்கு வெச்சுல்லாம கூப்பிட முடியும்... வயசானாலும் என் ஸ்டைல்ல செஞ்சேன்’ என்றார் ‘படையப்பா’ பொன்னம்பலம். “மைக் விலையை விட என் பெர்ஃப்யூம் விலை அதிகம். தண்ணில போச்சு’ என்று அதிர வைத்தார், யாஷிகா. (மறுபடியும் ஒரு அம்மாடியோவ்!).

‘Great power comes with great responsibility’-ன்னு சொல்லுவாங்க. முதல் நாள்ல இருந்தே அவ அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆயிட்டா’ என்றார், மும்தாஜ். ‘சர்வாதிகாரத்தனம்னா என்னன்னு தெரியணும். அப்போதான் மக்கள் புரட்சி பண்ணுவாங்கன்னு அவ அப்படி பண்ணா” என்றார், ஜனனி. இன்னமும் ராணியோட ஆலோசகர் மோடியிலேயே இருக்கிறார் போலிருக்கிறது. 

கன்ஃபெஷன் ரூமில் இருந்து ஐஸ்வர்யா வெளியே வர எல்லோரும் அவரை திகிலுடன் பார்த்தனர். உடை மாற்றச் சென்ற ‘ஐஸ்வர்யா’வை ‘பேபி’ என்று அழைத்துக்கொண்டே பின்சென்றார், மும்தாஜ். உள்ளே இருந்து அழுகை சத்தம் கேட்டது. 

உடை மாற்றி வந்து அமர்ந்தவரைப் பார்க்க ‘புது’ ஐஸ்வர்யா போல இருந்தது. இந்த நான்கு நாட்களுக்குள் என்னவெல்லாம் செய்துவிட்டது, இந்தப் பெண்? மறக்க முடியாத பெர்ஃபாமன்ஸ். ஆனால் இன்னுமும் ‘கலங்கிய’ மனோநிலையிலேயே இருந்தார் ஐஸ்வர்யா. 

‘தனது கதாபாத்திரத்தை’ சிறப்பாக செய்த ஐஸ்வர்யாவை பாராட்டினார், பிக்பாஸ். போலவே ஆலோசகர், பாதுகாவலர், பொதுமக்கள் என்று அனைவரையும் பாராட்டினார். (அப்ப.. ‘டல்கோ?!).

மக்கள் அணியில் சிறப்பாக செயல்பட்ட இருவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவிற்கு தரப்பட, தயக்கம் ஏதும் இல்லாமல் ‘ஷாரிக்’ என்று முதல் பெயரைச் சொன்ன ஐஸ்வர்யா, சில நிமிட தயக்கத்திற்குப் பிறகு ‘ரித்விகா’ என்றார். (நொண்டி நொண்டியே முதல் இடத்திற்கு வந்துட்டாரோ, ஷாரிக்!). ரித்விகா என்கிற தேர்வு மிக நியாயமானது. இது ‘டாஸ்க்’ என்பதைப் புரிந்துகொண்டு துவக்கம் முதலே பொறுமை காத்தவர், ரித்விகாதான். இந்த இருவரும் இந்த வார தலைவர் பதவிக்கு நேரடியாக தகுதியாவார்கள். 

முன்னர் வாக்களித்திருந்தபடி, ஐஸ்வர்யாவிற்கு ‘இம்னியூட்டி பவர்’ தரப்பட்டது. அதன்படி, அடுத்த வாரத்திற்கும் அவரை எவரும் நாமினேட் செய்ய முடியாது. (சாதா.. காட்டேரிக்கு ரத்தக்காட்டேரியாக பிரமோஷன்!).

‘லக்ஸரி டாஸ்க் முழுசா கிடைக்கணும்தான் இதைச் செஞ்சேன். தனிப்பட்ட பழிவாங்கும் குணம் எதுவும் கிடையாது. யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிச்சுக்கங்க” என்றார், ஐஸ்வர்யா. (ரெண்டு துண்டு எக்ஸ்ட்ரா சிக்கனுக்காக ‘ஹிட்லர்’ ரேஞ்சுக்கு போயிட்டீங்களே!). ‘பாலாஜி மீது குப்பை கொட்டினது, பிக்பாஸ் சொல்லி செஞ்சதா?” என்று முக்கியமான விஷயத்தைப் பற்றி கேட்டார், மும்தாஜ். “இது சாதாரண டாஸ்க் இல்ல. இதுக்காக எந்தவொரு எல்லைக்கும் போகலாம்’னு முதல்லயே சொல்லிட்டாங்க” என்று விளக்கம் அளித்தார், ஐஸ்வர்யா. (ஆனால் குப்பை கொட்டும் தண்டனை தனிப்பட்ட காரணங்களால்தான் நிகழ்ந்தது என்பது வெளிப்படை).

‘இந்த வீட்டிலேயே குறைவாக செயல்படும் போட்டியாளர்’ என்று கமல் சார் கேட்கும்போது கடந்த வாரம் சொன்னேன். ஆனால் இந்த வாரம் நீ ப்ரூவ் பண்ணிட்டே. முதல் நாள்கூட நான் என்னமோன்னு நெனச்சேன். ஆனா அதுக்கப்புறம் நாங்க டாஸ்க் உள்ளே வந்துட்டோம். நீ கில்ட்டியா ஃபீல் பண்ணாத, ‘டாஸ்க்’தான் பண்ணே..” என்று ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தினார், ரித்விகா. பெருந்தன்மையின் உருவம்! 

‘பாலாஜி மீது குப்பை கொட்டும் விஷயம் மாத்திரம் நடக்கலைன்னா, மத்ததுல்லாம் சூப்பர். நல்லாத்தான் பண்ணே. ஆனா, இது அவருக்கு ஆயுள் முழுக்க ஒரு அவமானமா இருக்கும்ல’ என்று வருத்தப்பட்டார், ஜனனி. “அவருக்கு லைஃப் லாங் இன்ஸல்ட் சரி... ஆனா  எனக்கும்தானே அது? இந்த மாதிரி ஆளுங்களை என்னால மன்னிக்க முடியாது. திரும்பவும் இப்படியொரு டாஸ்க் வந்தால் இதுக்கு மேலயும் பண்ணுவேன்” என்றார், ஐஸ்வர்யா அதிரடியாக.

‘நாமினேஷன் நடக்குற அன்னிக்கு பாலாஜி வைஷ்ணவியையும் இவளையும் ரொம்ப மோசமான கெட்டவார்த்தைல்லாம் சொல்லித் திட்டினார்.  அப்போ இருந்தே  இவ அப்செட்டா இருந்தா. சண்டேல இருந்து அழுதுட்டு இருந்தா. என் அம்மா பத்தியும் அவன்  அப்படி பேசியிருக்கான். எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவாரு. அவர் சொன்னா நம்ம அப்படி ஆயிடுவமா” என்றார், மும்தாஜ். “பிக்பாஸ் 7 பார்த்தீங்களா. அதுல இதைவிடவும் மோசமான தண்டனைல்லாம் இருந்தது. குப்பை இருக்கிற பெட்டில அடைச்சு வெச்சு, சாப்பாடு தண்ணில்லாம் கிடையாது. நாளைக்கு இதே மாதிரி டாஸ்க் நானும் பண்ணுவேன். நாளைக்கு உங்களுக்கு இதே மாதிரி பிரச்சினைன்னா நான் நிப்பேன்” என்று ஜனனியிடம் சொல்லிக்கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. ‘ஆமாம் சரிதான்” என்றார், ஜனனி.

“அந்த ஃபுட்டேஜ் நீங்க பார்க்கலை. ஃபேமிலிக்கு செட் ஆகாத பொண்ணுன்னு’ பாலாஜி சொல்றார் கரெக்ட் அண்ணான்னு ஷாரிக்கும் சொல்றான். உனக்கு என் நிலைமை தெரியும்ல். கூட சேர்ந்து சிரிக்கலாமா? அந்தப் பையன் மேல எனக்கு ஒரு பெர்சென்ட்கூட நம்பிக்கை இல்ல. மாத்தி மாத்தி பேசுறான். அவங்க ஃபேமிலிதான் பெரிசா. வாங்க எங்க ஃபேமிலியையும் காட்டறேன்” என்று ஐஸ்வர்யா நீளமாக புலம்பியதில் நியாயமுள்ளதா, இல்லையா என்பதை பார்வையாளர்களின் மனச்சாட்சிக்கு விட்டுவிடலாம். 

“ஏற்கெனவே இந்தப் பஞ்சாயத்து நடந்தது. கமல் சார் முன்னாடி ஷாரிக் ஃபேமிலி பெரிசுன்னு சொன்னப்போ, இவ அழுதுட்டு இருந்தா. ஞாபமிருக்கா?’ என்று ஐஸ்வர்யாவின் வாதத்திற்கு உதவி செய்தார், டேனி. “பாலாஜி சாப்பிடலைங்றது எனக்கும் கஷ்டமா இருக்கு. ஆனா சென்றாயனையும் விளையாட விடாம அவர் தடுக்கிறார்” என்றார், மும்தாஜ். 

‘மறுபடியும் உள்ளே போக தயாராக இருக்கீங்களா?” என்று ரகசிய அறையில் இருந்த வைஷ்ணவியிடம் கேட்டார், பிக்பாஸ். அவர் ஒப்புதல் தந்ததும் கண்ணைக் கட்டி கன்ஃபெஷன் ரூமில் அமர வைத்தனர். (பெரிய தீவிரவாத கும்பலா இருக்கும் போலயே!) ‘இந்த வீட்டில் இதுவரை நடந்த நிகழ்வுகளை பார்த்திருப்பீர்கள். வெளியில் இருந்து பார்க்கும்போது வித்தியாசம் தெரிந்திருக்கும். அதன் அடிப்படையில் இந்த வீட்டில் யார் அதிகபட்ச நேர்மையுடன் செயல்பட்டார்கள் என்பதை ரேங்க் அடிப்படையில் மதிப்பிட வேண்டியிருக்கும். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு இது. சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றார், பிக் பாஸ். 

போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் நிற்க வைக்கப்பட்டனர். வீட்டின் உள்ளே இருந்து சர்ப்ரைஸ் வருகை தந்த வைஷ்ணவியைப் பார்த்ததும் ஆரவாரக் கூச்சல்கள் எழுந்தன.  சிலரின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சி தெரிந்தது. சிலர் மகிழ்ச்சி போல பாவனை செய்தனர். சிலரின் அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. “யாரும் கிட்ட வராதீங்க. உள்ள பாம் வெச்சிருக்கேன்’ என்பது போன்ற தோரணையில் அனைவரையும் அப்புறப்படுத்திய வைஷ்ணவி, தனது ரேங்க் பட்டியலை வெளியிட்டார். (wwwடாட்biggbossvaisnavi.honesty. காம் என்கிற இணையதளத்தில் இருந்து இந்தப் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்).

‘கடந்த வாரத்தில் யார் அதிகபட்ச நேர்மையுடன் நடந்துகொண்டார்கள் என்கிற பட்டியலின்படி, முதல் இடம் டேனிக்கு கிடைத்தது. வைஷ்ணவிக்கும் டேனிக்கும் இருக்கிற ஏழாம் பொருத்தம் பிரசித்தமானது. டேனியால் இதை நம்பவே முடியவில்லை. ‘நன்றி வைஷூ’ என்றபடி முதலிடத்தில் நின்றுகொண்டார். (ஒரு விஷயத்தை வேறு கோணத்தில் இருந்து பார்க்கும்போது மாறுதலான விஷயங்களை அறிய முடிகிறது என்பதற்கு வைஷ்ணவியின் பட்டியல் உதாரணம். சில பிசிறுகள் இருந்தாலும் இந்தப் போட்டியின் இறுதி வரைக்கும் தாக்குப் பிடிக்கக்கூடிய போட்டியாளர்களில் டேனி பிரதானமானவர். சமயோசிதமும் சாமர்த்தியமும் நிறைந்த நபர்).

இந்த கேம் பிளானில் நேர்மையாக நடந்துகொண்டார் என்பதற்காக டேனிக்கு முதல் ரேங்க் வழங்கப்பட்டதாம். இரண்டாவது ரேங்க் பொன்னம்பலத்திற்கு. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிடுகிறாராம். மறதி இவரிடம் இருக்கும் பிரச்னை. மூன்றாம் இடம் ரித்விகாவிற்கு. உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருந்தாலும் சரியான நேரத்தில், சரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால் இந்த ரேங்க். நான்காம் இடம் மும்தாஜிற்கு. ‘அவங்களுக்கு அவங்களே உண்மையா இருக்காங்கலாம்’. 

ஐந்தாவது இடம் ஜனனிக்கு. அதிகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இல்லையென்றாலும் பொதுவாக நேர்மையாக இருக்கிறாராம். ஆறாவது இடம் மஹத்திற்கு. உணர்ச்சிவசப்படும் குறை இருக்கிறது என்றாலும் பெரும்பாலும் நேர்மையாக இருக்கிறாராம். ஏழாவது இடம் பாலாஜிக்கு. ‘படபடவென்று பேசி விடுகிறார். சில இடங்களில் அது வித்தியாசமாக அமைந்துவிடுகிறது. வார்த்தை தேர்வில் கவனம் தேவை’ என்றார், வைஷ்ணவி. எட்டாம் இடத்தில் ஐஸ்வர்யா இருக்கிறார். (கட்டம் சரியா இருக்கா?!).  இந்த வாரம் அடக்கி வெச்சிருந்த எமோஷன்லாம் வெளிய வந்ததாம். அப்போ இத்தனை நாள் இருந்தது முகமூடிதானே. கொடுத்த வாய்ப்பை இந்த வாரம் ஐஸ்வர்யா சிறப்பா பயன்படுத்திக்கொண்டாராம். 

ஒன்பதாம் இடம் சென்றாயனுக்கு. ‘இவர் சொல்லும் பொய்களால் பிரச்னை ஏதும் ஏற்படுவது இல்லை என்றாலும்கூட சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பொய் சொல்லிவிடுகிறாராம். (இதற்காக, வாயில் நுழையாத வியாதியின் பெயரைப் போல ‘Inconsequential lies’ என்றெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி சென்றாயனை பயமுறுத்தினார்). பத்தாம் இடம் யாஷிகாவிற்கு. இதுவரை அவரது உணர்ச்சிகளை முழுமையா வெளிப்படுத்தலையாம். இதனால் அவரைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறதாம். நண்பர்களை சமயத்திற்கு ஏற்ப உபயோகித்துக்கொள்கிறாராம். ஷாரிக் பதினோராவது இடம். ‘நம்பலாமா, வேண்டாமான்னு தெரியலையாம். எமோஷன்ஸ் அதிகம் காண்பிக்க மாட்டேங்கிறராம்’. 

‘இதற்குப் பொருள் யாரும் dishonesty-ன்னு இல்ல. வெளியே இருந்து பார்க்கும்போது இப்படித் தோன்றுகிறது’ என்று பாதுகாப்பாக சொன்னார் வைஷ்ணவி. (பின்னே.. வீட்டுக்குள்ள இருக்கணுமே?!). 

போதி மரத்தை தொட்டு விட்டு வந்த ஞானோதய கெத்துடன் மற்றவர்களுக்கு உபதேசம் சொல்லிக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. ‘வெளியில் இருந்து பார்த்தா எல்லோருமே இங்க fake- ஆ தெரியறீங்க. நாம நெனச்சிட்டு இருக்கோம், நாம ஃபேக் இல்லைன்னு. ஆனா... யாரு அதிகம் நடிக்கிறாங்கனு நல்லா தெரியுது. மும்தாஜ், டேனி, யாஷிகா, ஷாரிக், மஹத், ஜனனி, சென்றாயன். எல்லோருமே வார்த்தைகளை ரொம்ப கவனமா பயன்படுத்துறாங்க. எனக்கே ஆச்சரியமாத்தான் இருந்தது. நானும் உங்ககூட இருந்திருக்கேன். ஆனா வெளிய இருந்து பாத்தா வேற மாதிரி தெரியுது. ‘நான் போனப்புறம் ஒருவேளை ஸ்கிரிப்ட் எதாவது எழுதிக் கொடுத்திட்டாங்களோன்னு தோணுச்சு.” என்று தன் பிரத்யேக பாணியில் ‘லொடலொட’வென்று சொன்னார், வைஷ்ணவி. 

“எங்களுக்கே இப்படித் தோணியிருக்குன்னா, உன்னையெல்லாம் மக்கள் என்ன சொல்லுவாங்க?” என்று நம் மனதில் இருந்த கேள்வியை அப்படியே கேட்டார், சென்றாயன். ‘அடிச்ச கைப்புள்ளைக்கே இவ்ளோ காயம்னா அடி வாங்குனவன் உயிரோடயா இருப்பான்’ மோமொன்ட் அது. சென்றாயனின் கேள்வியால் வீடே சிரிப்பலையில் மிதந்தது. ‘நான் நார்மலா இருக்குறது அவங்களுக்கு கண்டிப்பா ஃபேக்கா தெரிஞ்சிருக்கும்” என்றார், வைஷ்ணவி. (அப்போ மத்தவங்களை நார்மலா இருந்ததும் வைஷ்ணவிக்கு ஃபேக்கா தெரிஞ்சிருக்கலாம் இல்லையா? ரம்யா சொன்னது மாதிரி. இது அவங்க அவங்க மனச்சாட்சிக்குத்தான் தெரியும். வெளிய இருந்து கண்டுபிடிக்கறது கஷ்டம்!).

“இங்க யார் புறம் பேசினாலும் வெளிய இருந்து பார்க்கும்போது ரொம்ப கேவலமா தெரியுது. நானும் பேசியிருக்கேன். இல்லைன்னு சொல்லலை. ஆனா, இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள், நண்பர்கள்னு பல பேர் பார்க்கறாங்க. புறம் பேசாதீங்க. நானும் இனி பேசப் போறதில்லை’ என்று மஹத்தை முன்னிட்டு அனைவருக்கும் சொன்ன வைஷ்ணவி, “நீங்க ரெண்டு பேரும் செய்யிற கண்றாவியை நிறுத்தித் தொலைங்க” என்று யாஷிகாவையும் மஹத்தையும் சிரிப்புடன் கண்டித்தார். வைஷ்ணவி சொல்வதெல்லாம் சரிதான் என்றாலும் அவருடைய மிகையான உடல்மொழி சமயங்களில் ஒவ்வாமையைத் தருகிறது. ‘டாஸ்க் மட்டும் கேம் இல்ல. வீட்ல நடக்குற ஒவ்வொண்ணுமே கேம்தான்’ என்கிற மகா புரிதலுக்கு வந்து சேர்ந்திருக்கிறார், வைஷ்ணவி. 

**

வீட்டின் விதிமுறைகளை மீறியதற்காக சில போட்டியாளர்களுக்கு தண்டனையும் கண்டனமும் தந்தார், பிக்பாஸ். ‘கேமராவில் தண்ணீர் படும்படியாக நடந்து கொண்ட ஐஸ்வர்யா, வீட்டில் உள்ள அனைத்து காமிராக்களின் முன்பும் சென்று ‘மன்னித்து விடு கேமரா’ என்று சொல்ல வேண்டுமாம். (லூஸூதனமான தண்டனை!). இதைக் கேட்டு மிகையாக சிரித்தார், வைஷ்ணவி. இதைப் போலவே ஐஸ்வர்யாவை மைக்குடன் தண்ணீரில் தள்ளிவிட்ட பொன்னம்பலத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்தார், பிக்பாஸ். (பின்னே.. என்பதாயிரம் போச்சுல்ல!). அவருக்கு யாரும் அன்னம், தண்ணி புழங்கக்கூடாதாம். பசுபதி நீங்க கிளம்புங்க.. என்று நாட்டாமை படத்தில் நடித்தவருக்கே நாட்டாமைத்தனமான தீர்ப்பு கிடைத்தது. ‘விடுகதையா.. இந்த வாழ்க்கை’ என்கிற ஃபீலோடு வெளியில் கிளம்பினார் பொன்ஸ். (ஆம்பளைன்னா ஒரு மாதிரி தண்டனை. பொம்பளைன்னா. ஒரு மாதிரி. என்னய்யா நியாயம் இது! ஆனா கேமராவிற்கு பொன்னம்பலம் முத்தம் தரும் காட்சியைப் பார்க்க பெரிய மனதைரியம் வேண்டும். அந்த வகையில் நன்றி பிக்பாஸ்!).

இந்தப் பஞ்சாயத்து முடிந்ததும் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. பாலாஜியிடம் சென்று மன்னிப்பு கேட்டார், ஐஸ்வர்யா. ‘இது ஒரு டாஸ்க். நான் ரொம்ப ஹர்ட் ஆயிட்டேன். தயவு செஞ்சு சாப்பிடுங்க. என்கிட்ட பேசலைன்னாலும் பரவாயில்ல.” என்று ஐஸ்வர்யா சொல்ல, அவர் ஏதோ ஜப்பானிய மொழியில் பேசியது போல் ‘அவங்க என்ன சொல்றாங்கன்னா’ என்று அதை மொழிப்பெயர்த்து உதவினார் துபாஷி, ஜனனி. “மன்னிக்கிற அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை.  நான் மன்னிப்பும் கேட்கச் சொல்லலை. “ என்று தொடர்பில்லாமல் சொன்னார், பாலாஜி. “நீங்க சிரிக்கிறதைத்தான் நெறைய பார்த்திருக்கோம். இப்படிப் பார்க்க கஷ்டமா இருக்கு” என்றார், ஐஸ்வர்யா. 

பொதுவாகவே நகைச்சுவையுணர்வு உள்ளவர்கள், இன்னொரு புறத்தில் உடனடி கோபம் கொள்பவர்களாகவும் வீம்பு பிடிக்கும் ஆசாமிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் வேறு தோற்றத்தில் தென்படுகிற காரணத்தினாலேயே அவை அதிக பாதிப்பை மற்றவர்களுக்கு ஏற்படுத்தும். நகைச்சுவை நடிகர்கள் ‘டிராஜிடி’ பாத்திரத்தில் நம்மை உடனே கவர்வதும் இதனால்தான். 

கலங்கி அமர்ந்திருந்த பாலாஜியை “ஏண்ணே அழுவுற’ என்று பத்து முறை கேட்டு வெறுப்பேற்றினார், மஹத். ரித்விகா வந்து சமாதானப்படுத்தியும் பாலாஜி சமநிலைக்கு வரவில்லை. ‘எல்லாம் உன்னாலதான்’ என்று மஹத்தை ரித்விகா விளையாட்டாக சொல்ல, ‘அது கண்டிப்பா’ என்று வெட்கமில்லாமல் ஒப்புக்கொண்டார், மஹத். 

47-ம் நாள் காலை. ‘அப்படிப் போடு.. போடு’ என்கிற பாடலுடன் கில்லியாக விடிந்தது. லக்ஸரி பட்ஜெட்டிற்கான அறிவிப்பு வந்தது. மொத்தம் 2400 புள்ளிகள். பாலாஜி டாஸ்க்கில் முழுமையாக பங்கேற்காததால் 200 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு 2200 மதிப்பெண்கள் வந்தன. ‘சிக்கன போடு.. காஃபி பவுடர் எழுது… பிக்கிள்…’ என்கிற கூக்குரல்களால் களேபரமானது பிக்பாஸ் வீடு.

‘பாலாஜி சாப்பிட்டால்தான் மற்றவர்களும் சாப்பிட வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லிவிட்டார். அவர் மாட்டேன்னு சொன்னா கேஸ் ஆஃப் பண்ணிடுங்க’ என்றார், டேனி. (ஆனால் பாலாஜியை சாப்பிட வைப்பதற்காக மற்றவர்களுடன் இணைந்து டேனி ஆடிய நாடகம் என்பது பின்னர் தெரிய வந்தது. சூப்பர் டேனி!).

ஐஸ்வர்யாவின் தலைவர் பதவி முடிவடைந்தது. அடுத்த வார தலைவருக்கான போட்டியில் ஷாரிக்கும் ரித்விகாவும் கலந்து கொண்டார்கள். ‘யார் அதிக பூக்களை நடுகிறார்களோ, அவர்களே அடுத்த தலைவர். ஷாரிக்கிற்கு சிவப்பு  நிறமும், ரித்விகாவிற்கு மஞ்சள் நிறமும். இருவருமே வேக வேகமாகச் செயல்பட, மற்றவர்கள் இவர்களை உற்சாகப்படுத்தினர். துள்ளித் துள்ளி விவசாயம் செய்தார் ஷாரிக். ஆனால் மலரிழையில் தோற்றுப்போனார் ரித்விகா. ஷாரிக் 242 பூக்களை நட, ரித்விகா மிக அருகாமையில் 240 பூக்களை நட்டிருந்தார். ஐஸ்வர்யா இதன் நடுவர். 

‘இரண்டாவது ஆண் தலைவர் ஷாரிக் வாழ்க’ என்று கூவினார், மஹத். அணிகள் பிரிப்பதற்கான சமயம். ‘என்னை குக்கிங் டீம்ல போட்டுடாதீங்க’ என்று காலில் விழாத குறையாக அலறினார், சென்றாயன். ‘கமல் சார் சொல்லியிருக்காரே’ என்று ஷாரிக் தயங்க, ‘அதான் இந்த வாரம் முழுக்க இருந்திட்டேனே’ என்று மறுத்தார், சென்றாயன். ‘ஐஸ்வர்யா, சென்றாயன்னு ரெண்டு சோம்பேறிகளை வெச்சுக்கிட்டு நான் எப்படி சமைக்க முடியும்?” என்று மும்தாஜ் புலம்ப, அவருடன் ஜாலியாக சண்டைக்குப் போனார், ஐஸ்வர்யா. 

சில பல இழுபறிகளுக்குப் பின்னர் இவ்வாறாக முடிவு செய்யப்பட்டது. சமையல் அணியில் மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா. (வெளங்கினாப்பலதான்!). பாத்திரங்கள் கழுவும் அணியில் டேனி, வைஷ்ணவி, பாலாஜி. கழிவறைச் சேவையில் ரித்விகா, ஜனனி, சென்றாயன். (காசிக்குப் போனாலும் கருமம் தீராது, சென்றாயனுக்கு).

**

‘கஜினிகாந்த்’ திரைப்படத்தின் குழு வீட்டுக்குள் வந்து ஆச்சரியப்படுத்தியது. (ஆச்சரியம் என்ன... விளம்பரம்தான்!) ஆர்யா, சதீஷ், தேவதர்ஷிணி ஆகியோரோடு படத்தின் இயக்குநரான சந்தோஷும் வந்தார். வழக்கம் போல் மிகையான தோரணையோடு விருந்தினர்களை வரவேற்றார், சென்றாயன். கைகுலுக்கல்களும், கட்டிப்பிடித்தல்களும் அமர்க்களப்பட்டன.

‘டி.டிதான் வைல்ட் கார்ட் எண்ட்ரி’ என்று ஆர்யா கலாய்க்க, ‘இல்லை’ என்று ஜாலியாக அலறினார் டிடி. ‘நான் நாளைக்கு எபிஸொடையும் பார்த்துட்டேன்’ என்று மொக்கை போட்டார், சதீஷ். ‘உள்ளே போகலாமா?” என்று கேமராவிடம் பரிதாபமாக அனுமதி கேட்டார், பொன்னம்பலம். ‘நாட்டாமை தீர்ப்பை மாத்த முடியாதுல்ல’ என்று அவர் சொன்னது அருமையான டைமிங். ஆனால் இவருக்காக பிறகு வெளியே வந்து ஆச்சரியப்படுத்திய ஆர்யாவின் குணாதிசயம் சிறப்பு.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘மஹத்தின் கேர்ள் பிரெண்ட் இண்டர்வ்யூ கொடுத்திருக்காங்க. ‘யாரு மஹத்துன்னு கேட்டிருக்காங்க’ நாம எதுக்கு அதெல்லாம் சொல்லணும்” என்று கிச்சனில் வேலையாக இருந்த மஹத்தின் வயிற்றில் நெருப்பைப் போட்டார், சதீஷ். மஹத்தை அதிகம் கலாய்த்துக்கொண்டிருந்ததே சதீஷின் வேலையாக இருந்தது. 

மழை பெய்வதற்கான அறிகுறிகள் தெரிந்தன. டிடி சென்றயானை அழைக்க ‘மழைன்னா பூச்சி வரத்தான் செய்யும்’ என்ற கிண்டலுடன் ஒருவழியாக பழைய மோடிற்கு திரும்பினார், பாலாஜி. பிறகு அனைவரும் அமர்ந்து ‘கஜினிகாந்த்’ படத்தைப் பற்றி பேசினார்கள். பிரமோக்களில் பொதுவாக நிகழும் மிகையான நாடகங்கள் நடைபெற்றன. ‘என்னை ஹீரோவாகவே சதீஷ் மதிக்கலை’ என்றார், ஆர்யா ஜாலியாக. “ஹீரோவாச்சே.. எப்படி பழகுவாருன்னு முதல்ல பயந்தேன். ஆனா என்னை முதல் நாள்லயே கேரவனுக்கு கூட்டிட்டு போயிட்டாரு’ என்று பழைய நினைவுகளில் நெகிழ்ந்தார், சென்றாயன். ஆர்யாவின் down to earth குணாதிசயத்தைப் பற்றி இயக்குநரும் புகழ்ந்தார். ஆர்யா இதற்குத் தகுதியானவர்தான் என்று தோன்றியது. ஒரு ஹீரோவிற்கான பந்தாவை அவர் எப்போதுமே காட்டியதில்லை.

“படத்தைப் பாருங்க. உங்க கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்.. இது வழியாக மக்கள் கிட்ட சொல்றோம்’ என்று கடித்தார் சதீஷ். ‘நீங்க பாலாஜி மேல குப்பை கொட்டினதைப் பார்க்கும் போது எனக்கு கோபம் வந்துடுச்சு.. பெரியவர் –ல அப்படி செஞ்சிருக்க கூடாது” என்று சதீஷ், ஐஸ்வர்யாவிடம் சொல்ல, ‘அவர் ரொம்ப வல்கரா பேசினார்’ என்று விளக்கம் தந்தார் ஐஸ்வர்யா. அனைவரையும் கிளம்பிச் சொல்லி பிக்பாஸ் குரல் தர.  ‘போதும் கிளம்பு –ன்னு சொல்றாங்க’ என்றார் சதீஷ். டிடியின் பெயரைச் சொல்ல பிக்பாஸ் விட்டு விட, அவர் wild card entry-ல் இருப்பார் என்று கலாட்டா செய்த படி விடைபெற்றது படக்குழு.

“புயலுக்குப் பின் அமைதி என்கிற நிலைமை வீட்டில் நிலவினாலும் எல்லோர் மனதிலும் நாளைய தீர்ப்பை எதிர்நோக்கி ஒரு சூறாவளி சுழன்று கொண்டே இருக்கிறது’ என்கிற பின்னணிக்குரலுடன் இன்றைய நாள் முடிந்தது. 

கடந்த வார பஞ்சாயத்து நாட்களை விடவும் இந்த வாரத்தின் பஞ்சாயத்து நாள் முக்கியமானதாகவும் பார்வையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகவும்  இருக்கும் என்று தோன்றுகிறது. சர்வாதிகாரி டாஸ்க்கில் ‘பாலாஜி தலையில் குப்பை கொட்டப்பட்ட விவகாரம், எச்சரிக்கையையும் மீறி பாலாஜி தொடர்ந்து ஆபாச வார்த்தைகளை விடுவது, ஐஸ்வர்யா –சென்றாயன் மோதல், ஐஸ்வர்யா தண்ணீரில் தள்ளிவிடப்பட்டது போன்ற விவகாரங்களைப் பற்றி கறாராக கமல் அலசுவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. 

ஆனால் - ஆண்டவர் என்ன செய்யப் போகிறாரோ.. ‘சர்வாதிகாரம்-ன்றது.. என்று ஆரம்பித்து அரைமணி நேரத்திற்கு பொழிப்புரை தந்தால் மக்கள் டென்ஷன் ஆகி விடுவார்கள்.

ஒரு பக்கம் ஐஷ்வர்யா பாலாஜி போன்ற ஒரு சீன்யர் நடிகர் மேல் குப்பை கொட்டியது தவறு என்பது இருக்கட்டும். அதே சமயம், தொடர்ந்து ஐஷ்வர்யாவைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் மலிவான சொற்கள் பேசும் பாலாஜி போன்றவர்கள் பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இதில் எதை பொறுத்துக்கொள்ளவே முடியாது என நினைக்கிறீர்கள். 

என்ன காரணத்திற்காக வாக்களித்தீர்கள் என கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்