Published:Updated:

``ஐஸ்வர்யாதான் கரெக்ட்!’’ பாலாஜியின் சர்ட்டிஃபிகேட் - பிக் பாஸ் மிட்நைட் மசாலா

தார்மிக் லீ

பாலாஜி நார்மலானது அவர் கொடுத்த கவுன்டர்களிலிருந்தே தெரிந்தது. பாவம் பொன்னம்பலம் இன்னும் வீட்டுக்குள் சேர்க்கப்படவில்லை. 'உன்னை இந்த ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிறேன்' என்றபடி பொன்னம்பலத்தைக் கார்டன் ஏரியாவுக்கு குடிபோகச் சொல்லிவிட்டார் பிக் பாஸ்.

``ஐஸ்வர்யாதான் கரெக்ட்!’’ பாலாஜியின் சர்ட்டிஃபிகேட் - பிக் பாஸ் மிட்நைட் மசாலா
``ஐஸ்வர்யாதான் கரெக்ட்!’’ பாலாஜியின் சர்ட்டிஃபிகேட் - பிக் பாஸ் மிட்நைட் மசாலா

ரு வழியாகப் பிக் பாஸ் வீடு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. பாலாஜியும் தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார். 'சர்வாதிகாரி ஐஸ்வர்யா'வும் சாமானியன் ஐஸ்வர்யாவாக வாழத் தொடங்கிவிட்டார். ரகசிய அறையில் இருந்த வைஷ்ணவி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறங்கிவிட்டார். இதற்கிடையே டேனியல், பாலாஜியை மிகவும் சாமர்த்தியமாக கையாண்டு, அவரைச் சாப்பிட வைத்துவிட்டார். அதன் பின்னர், பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது?

* பிக் பாஸ் வீட்டுக்கு விடுதலை கிடைத்ததின் குறியீடாக, 'கப்பலேறிப் போயாச்சு, சுத்தமான ஊராச்சு... கண்ணம்மா' என்ற கமல் பாடலை ஹம்மிங் செய்துகொண்டிருந்தார் பொன்னம்பலம். சில நாள்களாக அலங்கோலமாக இருந்த வீட்டில் ஒரு வழியாக இன்று அமைதி நிலவியது. சந்தோஷத்தைப் பிஸ்கட் சாப்பிட்டு மகிழ்ந்துகொண்டிருந்தார் பொன்னம்பலம். இவர் மட்டும்தான் கொண்டாடுகிறார் என்று பார்த்தால், வீட்டில் இருக்கும் மொத்த போட்டியாளர்களும் ஜூஸ், பிஸ்கட், சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இது விடுதலையின் வெளிப்பாடா இல்லை யாருக்கேனும் பிறந்தநாளா என்பது தெரியவில்லை. இதற்கு நடுவில் பாலாஜி, 'ஐஸ்வர்யாதான் கரெக்டான பொண்ணு. அவதான் எல்லாத்தையும் கரெக்டா பண்றா' எனச் சர்டிபிகேட் கொடுத்ததுதான் ஆச்சர்யம். அநேகமாக, வீட்டுக்குள் ஒரு குட்டி விக்ரமன் படம் ஓடியிருக்க வேண்டும். குப்பை கொட்டும்போது பொறுமையின் சிகரத்தில் கொடிகட்டிப் பறந்தார் பாலாஜி. இதைத் தொடர்ந்து இப்படிச் சொல்லும்போது 'ஐஸு, பீஸு பீஸா கிழிக்கும்போதும் ஏசுபோல பொறுமை பாரு...' என்ற 'பாட்ஷா' பாடல்தான் நினைவுக்கு வருகிறது. 

* மும்தாஜ் மூன்று வயது குழந்தையாக மாறி, 'அங்கே பாருங்க அந்த அணிலைப் பார்க்க பாவமா இருக்கு. நான் போய் கேரட் எடுத்துட்டு வர்றேன்' என்று உள்ளே சென்றார். அவரை வழி மறித்த பாலாஜி, 'ஏங்க என்னைப் பார்த்தா பாவமா இல்லையா. நான் என்ன தக்காளி தொக்கா' என்ற தொனியில் மும்தாஜை ஒரண்டை இழுத்துக்கொண்டிருந்தார். உள்ளே நடக்கும் கூத்துகளைப் பார்க்க மக்கள்தான் கேரட், பீட்ரூட் எல்லாம் சாப்பிட்டு புஷ்டியா இருக்கணும்னு இப்போ இவங்களுக்குப் புரியாது, பின்னாடி புரியும்! மும்தாஜ், கேரட் போட்டு வளர்த்த அணிலைப் பிடித்து வீட்டுக்கு வெளியே விடலாம் என்று பிளான் போட்ட டேனியலும் வைஷ்ணவியும் அதைப் பிடிக்கும் முயற்சியில் அணிலை நீச்சல் குளத்துக்குள் தள்ளிவிட்டனர். 'அணிலை விட்டிருந்தா அது பேசாம கேரட்டைத் தின்னுட்டு ஜாலியா சுத்திக்கிட்டு இருந்திருக்கும். ஆனா, அதை நாங்க விடமாட்டோம்!' என்றபடி இருந்தது இவர்களின் செய்கை. ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளுக்கும் கதைதான், பிக் பாஸ் வீட்டிலும் நடந்துகொண்டிருக்கிறது.  

* 'டேனியல் வெட் க்ரைண்டர்' வழக்கம்போல் ஆப்பிள், ஆரஞ்சுகளை அரைத்துக்கொண்டிருந்தது. மனிதன்... சாப்பிடும் உணவில் ஆரம்பித்து, ஸ்நாக்ஸ் வரை ஹெல்த்தியான உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறார். வார நாள்கள் முழுக்க பாலா பட கதாநாயகிகள்போல் வீட்டுக்குள் உலாவும் பெண் போட்டியாளர்கள், வாரத்தின் இறுதி நாளில் சுந்தர்.சி படத்தில் வரும் கதாநாயகிகள்போல் செலப்ரேஷன் மோடுக்கு வந்துவிடுகிறார்கள். ஆண்டவரைப் பார்க்க அவ்வளவு ஆனந்தமா! இதுவரை கேள்விப்படாத ட்ரெஸ் வகைகளின் பெயரைச் சொல்லி, அதற்குத் தகுந்த ஆபரணங்களையும் அணிவித்துப் பார்த்து படு குஷியாக ரெடியானார்கள். இந்தப் பக்கம் ஆண் போட்டியாளர்கள் வழக்கம்போல் முக்கால் பேன்ட், லுங்கியை அணிந்துகொண்டு 'மாமே போட்டுக்க மாமே' என்று கிண்டல் கேலியடித்துக்கொண்டு வீட்டுக்குள் உலாவிக்கொண்டிருந்தனர். 

* பாலாஜி நார்மலானது அவர் கொடுத்த கவுன்டர்களிலிருந்தே தெரிந்தது. பாவம் பொன்னம்பலம் இன்னும் வீட்டுக்குள் சேர்க்கப்படவில்லை. 'உன்னை இந்த ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிறேன்' என்றபடி பொன்னம்பலத்தைக் கார்டன் ஏரியாவுக்கு குடிபோகச் சொல்லிவிட்டார் பிக் பாஸ். சென்றாயன் டேனியலிடம் தனது உடைமைகளுக்காக அவர்பட்ட துயரங்களைச் சொல்லி வருந்திக்கொண்டிருந்தார். 'ஒரு கடைக்கு வெளில பேன்ட் சட்டை, ஜட்டிலாம் செகன்ட்ஸ்ல விற்பாங்க. அங்க அடிச்சி பேரம் பேசி 1,000 ரூபாய் பொருளை 150-க்கு வாங்கினேன்' என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து, 'ஒரு ஷூட்டுக்காக எனக்கு ஷூ தேவைப்பட்டது. என்கிட்ட ஏற்கெனவே ஒரு ஷூ இருந்தது. ஆனா ஷூக்கு மேல கிழிஞ்சிருக்கும். அதனால அதே கடையில இன்னொரு ஷூ வாங்கப்போனேன். ஒரு ஷூ எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஆனா அதுல பாட்டம் கிழிஞ்சிருந்தது. இதுல இருக்கிறதை அதுல போட்டு, அதுல இருக்கிறதை இதுல போட்டேன்' எனச் சொல்லி பெருமையாகச் சிரித்தார். இவர் கதை, இப்போது சிரிப்பாக இருந்தாலும் அவர் அனுபவிக்கும்போது எப்பேர்பட்ட வலியைக் கொடுத்திருக்கும் என்று உணர முடிந்தது. 

பிக் பாஸ் வீட்டில் வேடிக்கையான சில விஷயங்களும் நடக்கிறது. இன்று நடந்ததுபோல் வியந்து பார்க்கும் சில விஷயங்களும் நிகழ்கின்றது. ஆக, அனைத்துப் போட்டியாளர்களும் ஆண்டவரின் தரிசனத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நடந்த களேபரங்களுக்கும் மனக்கசப்புகளுக்கும் ஆண்டவர் என்ன ரியாக்‌ஷன் கொடுப்பார். தொடர்ந்து பார்ப்போம்!