Published:Updated:

கெட்ட வார்த்தைக்காக விரட்டி விரட்டி வெளுத்த கமல்... பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமா?! #BiggBossTamil2

கெட்ட வார்த்தைக்காக விரட்டி விரட்டி வெளுத்த கமல்... பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமா?! #BiggBossTamil2
கெட்ட வார்த்தைக்காக விரட்டி விரட்டி வெளுத்த கமல்... பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமா?! #BiggBossTamil2

கெட்ட வார்த்தைக்காக விரட்டி விரட்டி வெளுத்த கமல்... பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமா?! #BiggBossTamil2

‘நீங்க வேடிக்கை பாருங்க, நான் என் வேலையைப் பார்க்கறேன்’ என்று கறாராகவும், கடுமையாகவும்  இன்றைய பிக் பாஸ் தினத்தின் ப்ரமோவில் கமல் கூறுவதன் மூலம் இந்த வாரப் பஞ்சாயத்திற்கான முக்கியத்துவத்தையும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பான அழுத்தத்தையும் முன்பே உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. எதிராளி கோபமாக புகார் தர வரும்போது “எனக்குத் தெரியாதா, நான் பார்த்துக்க மாட்டனா?” என்ற பாவனையில் அவனையும் விட கோபமாக கத்தினால் ‘நம்மள விட இவன் கோவக்காரனா இருக்கானே!” என்று எதிராளி அடங்கி விடுவார். இந்த உத்தியை பார்வையாளர்களிடம் இன்று சிறப்பாக பயன்படுத்தினார் கமல். 

கோபத்துடன் கோர்ட்டை கழற்றி உதறிப் போட்டதை, இந்தி பிக் பாஸில் சல்மான்கான் ஏற்கெனவே செய்துவிட்டதாக சொல்கிறார்கள். ‘நடிகர்’ கமல்ஹாசனோடு ஒப்பிடும்போது சல்மான்கானை நகலெடுக்கும் அவசியம் எல்லாம் கமலுக்கு நேர்ந்திருக்காது. ஆனால் – நிகழ்ச்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர் சட்டையை மடித்து பேட்டை வஸ்தாது போன்ற தோரணையை தந்திருக்க வேண்டாம் என்கிற நெருடல் இருக்கிறது. மற்றவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். கமல் செய்திருக்க வேண்டாம். வெகுஜன மனநிலையின் கோபத்தையும் ஆவேசத்தையும் தணிப்பதற்காக அவர் செய்த பல நாடகங்களின் ஒரு பகுதியே அது என்பதாக புரிந்துகொள்ள முடிகிறது.  

தன்னுடைய ‘செளகரியமான’ மேடையில், பேசுவதை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் புரிந்துகொண்டு கைத்தட்டும் பார்வையாளர்களை வைத்துக்கொண்டு, பிக்பாஸ் போட்டியாளர்கள் என்கிற எளிய டார்க்கெட்டுகளிடம் திறமையாக கம்பு சுற்றுவதெல்லாம் கமல் போன்ற கலைஞனுக்கு ‘யானைப் பசிக்கு சோளப் பொறி’ போல. 

இம்மாதிரியான அசெளகரியங்களைத் தவிர, இன்றைய பஞ்சாயத்தை கமல் திறம்படவும் சமநிலையுடனும் நடத்தினார் என்றே சொல்ல வேண்டும். அவருக்கே உரிய சமயோசிதமும் நகைச்சுவையுணர்வும் பல இடங்களில் ஜொலித்தன. பாலாஜியின் உண்ணாவிரத டிராமாவை, உணவு ‘அகத்திற்குள்’ சென்றதா? என்று கிண்டலடித்தது ஓர் உதாரணம். இதற்காக பாலாஜிக்காக போடப்பட்ட ‘குறும்படம்’ வலிந்து திணிக்கப்பட்ட செயற்கை. பசிக்கு சாப்பிட்டதை பெரிய ‘குற்றமாக’ அம்பலப்படுத்தியிருக்க வேண்டாம். ‘நாமினேஷன்’ செய்ய மறுத்து ‘என்னை கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுங்க’ என்று முன்பு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்த பாலாஜி, அது என்னவென்று கமல் முன்பாகவாவது சொல்லியிருக்கலாம். மிக முக்கியமாக, ‘குப்பை’ விவகாரம் தொடர்பாக அவர் அதிகம் பேசாதது ஏமாற்றம். ஒரு சரியான வாய்ப்பில்கூட மெளனம் சாதிப்பது முறையானதல்ல. 

மஹத் ஏதோ விசேஷமான சேஷ்டை செய்திருக்கிறார் போலிருக்கிறது. ‘என்ன மஹத்..’ என்று கமல் ஆரம்பித்ததுமே ‘தெய்வமே’ என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டார். ‘சரி, பொழச்சுப் போங்க’ என்று கமலும் விட்டுவிட்டார். என்னவென்று தெரியாமல் நம் மண்டை காய்கிறது. 

ஒன்று மட்டும் புரியவில்லை. பிக் பாஸ் ஒரு டாஸ்க் தந்து அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அதைச் சிறப்பாக செய்தால்தான் லக்ஸரி பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்கள் கிடைக்கின்றன. சிறப்பாக செய்பவர்களை பிக் பாஸ் பாராட்டுகிறார். ஆனால் அந்த வாரத்தில் வரும் நாட்டாமை ‘நீங்கள் இப்படிச் செய்திருக்க வேண்டுமே, அல்லது செய்திருக்க கூடாதே’ என்று குழப்புகிறார். ‘நாங்க என்னதான்யா பண்றது’ என்று போட்டியாளர்கள் தவிக்கிறார்கள். உதாரணத்திற்கு பாதுகாவலராகவும் ஆலோசகராகவும் முறையே பாத்திரங்கள் தரப்பட்ட டேனியும் ஜனனியும் ‘தங்களின் பாத்திரங்களுக்கு’ விசுவாசமாகத்தானே இருக்க முடியும்? ‘ஜால்ரா’ என்று கமல் எப்படி கிண்டலடிக்கிறார் என்று புரியவில்லை. சர்வாதிகாரியின் அட்டூழியங்களை உணர்ந்து மக்களுக்கு ஆதரவாகவும் சில சமயங்களில் அவர்கள் செயல்பட்டார்கள். இதை அவர்கள் விளக்க முற்படும் போது கமல் கவனிக்க விரும்பவில்லை. 

இன்னொன்று, ஒருவர் நடிக்கிறார் அல்லது போலித்தனமாக இருக்கிறார் என்பது சம்பந்தப்பட்ட நபரால் மட்டுமே சொல்லக்கூடிய விஷயம். சிநேகனின் கருத்திற்கு ரம்யா கோபப்பட்டதும் இதற்காகத்தான். இதை மற்றவர்களால் சரியாக யூகிக்கவே முடியாது. ஏன், நாம் போலித்தனமாக இருக்கிறோம் என்று சமயங்களில் நமக்கே தெரியாது. சாவகாசமாக யோசிக்கும் போதுதான் ‘ஏன் அப்படி நடந்து கொண்டோம்’ என்று நம்மையே கடிந்து கொள்வோம். ஆக, இது தொடர்பாக பிக்பாஸ் வீட்டில் நிகழும் உரையாடல்கள், குற்றச்சாட்டுகள், விசாரணைகள் போன்றவை, குருடர்கள் யானையைத் தடவி உண்மையை உணர்ந்த கதைதான். 

இதைப் போலவே பார்வையாளர்களும், ‘இவர் வில்லன், இவர் ஹீரோ’ என்கிற சார்புத்தன்மையுடன் மூச்சு விடாமல் மூர்க்கமாக விவாதிப்பது நேர விரயம். அவர்களும் நம்மைப் போலவே நல்லியல்புகளும் தீயகுணங்களும் இணைந்த கலவைதான். 

கமல் குறிப்பிடுவது போல் இந்த நிகழ்ச்சி ஒரு கண்ணாடி. ஒரு சம்பவத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் அறிந்து கொள்ளாமல் மேலோட்டமாக பார்த்து விட்டு போட்டியாளர்களை ‘பங்காளிப் பகையுடன்’ குற்றம் சாட்டுவதை விடவும், இந்தக் கண்ணாடியின் மூலம்  நம்முடைய அகங்களைப் பார்த்துக் கொள்வதே இந்த நிகழ்ச்சியின் வழியாக நமக்கு கிடைக்கும் மனலாபமாக இருக்கும். 

**

கழட்டுவதற்கு வசதியான கோட்டுடன் உள்ளே வந்தார் கமல்ஹாசன். ‘எப்போதும் இல்லாத எதிர்பார்ப்பு. கமல்ஹாசன் என்ன செய்யப் போகிறார்-ன்னு கேட்கறாங்க.. என்ன பண்ணப் போறேன்னு எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாது’ என்கிற பீடிகையுடனும் கறாரான முகத்துடனும் பேசினார் கமல். இந்த வாரத்தின் ‘recap’ ஒளிபரப்பானது. 

இதன் பிறகு 47-ம் நாளின் சம்பவங்கள் காட்டப்பட்டன. ‘கஜினிகாந்த்’ படக்குழு சென்றவுடன், வீட்டின் பணிகளுக்கான நபர்கள் பிரிக்கப்பட்டவுடன் காட்சிகள் தொடர்கின்றன. ஐஸ்வர்யா பயங்கர அப்செட்டிலும் மும்தாஜ் மீது கடுமையான கோபத்திலும் இருப்பதை காண முடிகிறது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ‘குப்பை கொட்டப்பட்ட’ விவகாரத்தைப் பற்றி சதீஷ், டிடி போன்ற விருந்தினர்களிடம் கேட்டு ஏன் மும்தாஜ் கிளற வேண்டும் என்பது. இன்னொன்று, ‘சமையல் பணிக்கு லாயக்கில்லை’ என்று மும்தாஜ் தன்னை நிராகரித்தது. 

“எந்த டாஸ்க்கை அவங்க ஒழுங்கா பண்ணினாங்க.. இனிமே ‘பேட்டா.. பேபி.. ன்னு அவங்க எங்கிட்ட லவ் காட்ட வேண்டாம்.” என்றெல்லாம் கோபமாக புலம்பிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. பல்வேறு மன அழுத்தங்களால் ஏற்கெனவே அவர் உளப்பிரச்னையில் இருந்தார். சர்வாதிகாரி டாஸ்க் வேறு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றிய கதையாகி விட்டது. ‘குப்பை கொட்டிய விவகாரம்’ தொடர்பான குற்றவுணர்ச்சி, பஞ்சாயத்து நாள் பதட்டம், மிக குறிப்பாக வெளியே சென்றவுடன் பொதுசமூகத்தை எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்னை போன்றவை தொடர்பான மனக்குழப்பங்களில் அவர் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘இத்தனை நாள் மெட்ராஸ்ல தனியா இருந்தேன். வெளியே போய் அப்படித்தான் இருந்தாகணும்’ என்று சொன்ன ஒரு வசனம் உதாரணம். 

“நீ இன்னமும் சர்வாதிகாரி டாஸ்க்ல இருந்து வெளியே வரலை. டாஸ்க்ல இருந்து செஞ்சது கூட ஓகே. ஆனா இப்பவும் அதே மாதிரி நடந்தியானா.. மக்கள் பர்ஸனலாத்தான் எடுத்துக்குவாங்க” என்று ஜனனி சரியாக சுட்டிக் காட்டினார். 

‘யாரும் உன் மேல லவ் காமிக்க இங்க வரலை. நீயா கற்பனை பண்ணிக்காத’ என்றார் வைஷ்ணவி. ‘அவ இருக்கற கோபத்தையெல்லாம் வெளியே தள்ளட்டும். அப்பத்தான் சரியாகும்’ என்று டேனி சொன்னதும் சரியே.  ‘எல்லோரும் உன்னை பாராட்டுவாங்கன்னு நெனக்காதே. சில பேரு திட்டத்தான் செய்வாங்க. அதுக்காக ஷோவை விட்டுப் போவியா?” என்று நட்பின் உரிமையில் சரியான உபதேசத்தைத் தந்தார் யாஷிகா. (19 வயசுக்கு அபாரமான பக்குவம்!).

ஐஸ்வர்யா மனஉளைச்சலில் அழுத பல சமயங்களில் அவருக்கு ஆதரவாக நின்றவர் மும்தாஜ். அது பார்வையாளர்களின் மதிப்பை பெறுவதற்கான நடிப்பு என்றாலும் கூட அம்மாதிரி முன்வருவது மும்தாஜின் தாயுள்ளத்தைக் காட்டுகிறது. மிகச் சிறிய காரணங்களுக்காக இப்படி கிடைக்கும் அன்பை உதறி எறிவது ஐஸ்வர்யாவின் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது. 

“விருந்தினர்கள் முன்னால் பிரச்னையை கிளறுவது தவறுதானே?’ என்று ஐஸ்வர்யாவிற்கு சார்பாக மும்தாஜிடம் பாலாஜி கேள்வி கேட்டது ஆச்சரியமும் சிறப்பும். தலைவர் பதவிக்கு வந்தவுடனேயே தலைகால் புரியவில்லை என்று ஷாரிக் மீது மக்கள் பழியைப் போட முயன்றனர். 

**

48-ம் நாள் ‘கத்தாழைக் கண்ணாலே’ பாடலுடன் விடிந்தது. முந்தைய இரவில் எத்தனை பிரச்னைகள் நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மறுநாளில் எப்படி உற்சாகமாக நடனமாடுகிறார்கள் என்பது விளங்காப்புதிர். ‘ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு பேசா மடந்தையாக அமர்ந்திருந்த’ பொன்னம்பலத்தைப் பார்த்து ‘பாவமா இருக்கு’ என்றார் பாலாஜி. ‘அவருக்கு கிடைச்ச தண்டனை கம்மிதான்” என்றார் பாலாஜிக்கு முதுகு மசாஜ் செய்து கொண்டிருந்த வைஷ்ணவி.

“ஏன் ஐஸ்வர்யா கழுத்த நெறிக்கணும்னு அவருக்கு ஆசையா என்ன?” என்று பொன்னம்பலத்திற்கு ஆதரவாக பேசிய பாலாஜியை இடைமறித்து ‘அவரு எத்தனை அனுபவம் வாய்ந்தவர்..  எத்தனை சண்டைக்காட்சிகள்ல நடிச்சிருப்பாரு.. யார் தப்பு செஞ்சாலும் நான் சொல்லிடுவேன். நெற்றிக்கண் திறந்தாலும்’ என்றார் வைஷ்ணவி. சீக்ரெட் ரூமில் கிடைத்த ஞானம். 

பொன்னம்பலத்தின் தண்டனைக் காலம் முடிவடைவதாக பிக்பாஸ் அறிவித்தார். அனைவரும் உற்சாகமாக அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ‘எப்படித்தான் பேசாம  இருந்தீங்களோ.. கிரேட்’ என்றார் சென்றாயன். ‘நாளைக்கு கமல் சார் முன்னாடி மொத்தமா பேசிடலாமா?” என்றார் பொன்னம்பலம். வில்லனுக்குள் ஒரு நகைச்சுவை நடிகர். 

யாஷிகா தனது 19 வது வயதை நிறைவு செய்தார் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வேண்டிய விஷயம். பிக்பாஸ் நிகழ்ச்சியால் அது சாத்தியமாயிற்று. யாஷிகாவின் ‘உறவுகளும் பிரியமும்’ கேக் அனுப்பியிருந்தார்கள். பிறந்த நாள் கேக்கை மக்கள் உற்சாகமாக கொண்டாடித் தீர்த்தார்கள். 

**

சர்வாதிகாரம், கர்வம், பர்ஸனல் பாரபட்சம்.. இதெல்லாம் பார்த்தோம். இதெல்லாம் வீட்டுக்குள்ள இருக்கறது கூட எனக்கு ஆச்சரியம் தரல. ஆனால.. வெளியே நமக்குள்ளயும் இருக்கறது ஆச்சரியமா இருக்கு.. புரிதல் இல்லைன்னு சொல்ல முடியாது. உங்க கோப தாபங்கள் புரியது. ஆனா லேட்டா கோபப்படறீங்க.. வெளியே.. இந்த  வீட்டைப் பத்தி கவலைப் படறவன் உள்ளே இருக்கற வீட்டைப் பத்தி கவலைப்படமாட்டேனா.. அவங்களை கண்டிக்கறது ரொம்ப ஈஸி’ வாங்க உள்ள போகலாம்’ என்கிற முன்னுரையுடன் அகத்திற்குள் சென்றார் கமல்.

தூண்டிலைப் போட்டு அமைதியாக காத்திருந்து எதிராளியை பேச விட்டு  இரை சிக்கியவுடன் சட்டென்று இழுப்பது கமலின் பாணி. இம்முறையும் பல தடவை அதை செய்தார். “வீட்ல ஒண்ணும் பிரச்னையில்லையே.. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு” என்கிற பாவனையுடன் கமல் கேட்க, ‘கலவரமே நடந்துச்சு’ என்று சிரிப்புடன் முதல் புள்ளியை வைத்தார் பொன்னம்பலம். ‘இந்தப் பூனை பால் குடிக்குமான்னு நெனச்சோம். பாயசமே குடிச்சிச்சு சார்” என்கிற வசனத்தைச் சொல்லி கமலின் பாராட்டை எதிர்பார்த்த சென்றாயன், “வேற எதனாச்சும் பழமொழி இருக்கா, கைத்தட்டு வாங்கற மாதிரி” என்று கமல் கடுமையாகச் சொன்னதும், ‘என்னடா… இது, நமக்கு வந்த சோதனை’ என்று முகம் மாறி பின்வாங்கினார்.

‘தலைமை மாறியவுடன் அது பிடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தேன் சார்” என்று பாலாஜி கெத்தாக சொன்னவுடன் ‘அதான் பார்த்தமே’ என்பது போல் ‘உண்டு முடித்தீர்களா?” என்று கமல் கேட்டதைப் புரியாமல் விழித்தார். இன்று பாலாஜி பேசினதே குறைவு. அதையும் தவறாகப் பேசி சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டார். 

“சில விஷயங்கள் பர்ஸனலா போச்சு.. எனக்குப் பிடிக்கலை சார்’ என்றார் மும்தாஜ். “ஏன் தூக்கக் கலக்கத்துல இருக்கீங்க, நைட்டு சரியா தூங்கலையா?” என்று ஷாரிக்கிடம் கமல் பொடி வைத்து கேட்டதற்குப் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கும் போலிருக்கிறது. மஹத் வேறு ஆட்டுத்தனமாக அசடு வழிந்து சிரித்தார். (மறுபடியும் சேட்டையை ஆரம்பிச்சிட்டிங்களா பசங்களா?!).

“அப்ப ஒண்ணும் பிரச்னை இல்லை போல.. சரி. லேடீஸ் பர்ஸ்ட்’ என்று ஐஸ்வர்யாவிடம் வந்தார் கமல். “கிட்டத்தட்ட நூறு மணி நேரங்கள் ஹிட்லர் காரெக்ட்டரில் இருந்தேன். ரொம்ப சிரமமா இருந்தது. நேத்துதான் வெளியே வந்தேன்” என்றார் ஐஸ்வர்யா. “காரெக்ட்டருக்குள் போவது, வருவது என்பது மேற்கத்தியர்களுக்கு வேண்டுமானால் சிரமமாக இருக்கலாம். (எப்படிச் சொல்றீங்க.. கமல்!) ஒரு ஜோக்கிற்கு சிரிக்கற மாதிரிதான். நாள் பூரா சிரிக்க முடியாது. ஒரு கஷ்டத்திற்கு நாள் முழுக்க அழ முடியாது” என்ற கமல், வெளியே வர்றதுக்கு கஷ்டப்பட்டீங்க.. உள்ளே போறது ஈஸியா இருந்துதா?’ என்று கேட்டதும் அதனுள் இருக்கிற வில்லங்கத்தை புரிந்து கொண்ட பார்வையாளர்கள் பலமாக கைத்தட்டினார்கள். 

“இந்த task கொடுக்கும் போதே பிக்பாஸ் சொல்லிட்டாங்க. கருணை காட்டக்கூடாது. பாவம் பார்க்கக்கூடாதுன்னு. என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது” என்றார் ஐஸ். ‘இந்தப் பாத்திரத்தை என்ஜாய் செஞ்சீங்களா? என்ற கேள்விக்கு “இல்லை. சிரமமாக இருந்தது” என்றார் ஐஸ்வர்யா. “இல்லை.. ஆரம்பத்துல அவங்க என்ஜாய் பண்ண மாதிரிதான் இருந்தது’ என்று சில போட்டியாளர்கள் சொல்ல, “எங்களுக்கும் அப்படித்தான் தெரிஞ்சது’ என்றார் கமல். ‘தரப்பட்ட பாத்திரத்தின் எல்லைக்குள் நீங்கள் நின்றீர்களா?” என்பது கமலின் முக்கியமான கேள்வி. இந்த இடத்தில் ஐஸ்வர்யா விழித்திருக்கலாம். துரதிர்ஷ்டமாக அது நடக்கவில்லை. 

‘பாலாஜி உட்பட மற்றவர்களிடமும் அதே போன்றுதான் நடந்தேன்’ என்று அவர் சொன்னதை சம்பந்தப்பட்ட பாலாஜியே ஒப்புக் கொள்வில்லை. “வீட்ல அவ்ளோ குப்பை இருக்கா, என்ன?” என்ற கமலின் கேலி, ஐஸ்வர்யாவிற்குப் புரியவில்லை. ‘ஜெயில்ல.. குப்பைத்தண்ணி இருந்ததுல..’என்று அப்பாவித்தனமாக பக்கத்திலிருந்தவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ‘தனிப்பட்ட பழிவாங்குதல் இதில் நடந்ததா’ என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் கமல்.

“இங்க நெறய கெட்ட வார்த்தை பேசினாங்க சார்” என்றவுடன் இதுதான் சாக்கு என்று பொழிப்புரை தர ஆரம்பித்து விட்டார் கமல். ‘நிறம், சாதி, வர்க்கம், உடற்குறை போன்ற அவமதிப்புகள்தான் என்னைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தை. எந்தச் சாதியைச் சொன்னாலும் சரி.. அது உயர்சாதியா இருந்தாலும் சரி. ஏழையை ஏழை சொல்றதும் கெட்ட வார்த்தை. ஏன்னா அது நிரந்தரம் கிடையாது’ என்றார் கமல்.

“இல்ல சார்.. எங்க அம்மா பத்தி ரொம்ப மோசமான கெட்ட வார்த்தை சொன்னாங்க.. எனக்கு மட்டுமில்ல.. இங்க இருக்கிற எந்தப் பெண்ணுக்கும் அம்மாதிரியான அவமதிப்பு நடந்தால் நான் குரல் தருவேன்’ என்று ஐஸ்வர்யா சொன்னதும், ‘என்னைப் பத்தியும் அப்படி பேசினாங்க” என்ற மும்தாஜை இடைமறித்த ஐஸ்வர்யா, ‘உங்களுக்குப் பிரச்னையில்லனா.. அது உங்க முடிவு. ஆனா எனக்குப் பிரச்னையிருக்கு” என்றார் ஆணித்தரமாக. “ஆம்.. அது பிரச்சினைதான். தாயைப் பற்றி இழிவாக பேசுவது பிரச்னைதான்’ என்று மும்தாஜை நிதானிக்க வைத்தார் கமல். 

“ஆனா அதை நிரூபிக்க வேண்டிய இடத்துல நம்மை வெச்சுக்க கூடாது. ஊருல ஆயிரம் பேரு ஆயிரம் சொல்வாங்க. எனக்கு மிருகங்கள் பிடிக்கும். என்னை அந்த மாதிரி சொல்லி அவமானப்படுத்த முடியாது. ‘நாய்-ன்னு சொன்னா சிலருக்கு கோபம் வந்துடும்.. ஏன்னா.. அவங்க அம்மா நாயாயிடுவாங்க.. இல்லையா?’ என்றெல்லாம் கமல் சொல்ல வந்ததன் சுருக்கம் இதுதான். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’. (புத்தர் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது. கமல் மாதிரியே நீட்டி முழக்க விரும்பாததால் அதைச் சொல்லாமல் தவிர்க்கிறேன்)

“இங்க சந்துரு.. சந்துரு..ன்னு ஒரு மானஸ்தன் இருந்தான். அவனைக் காணோம்னு கவுண்டமணி கிண்டலடிப்பாரு.. (எவ்ள பேமஸான டயலாக். உங்க கேரக்டர் பெயரை மறந்துட்டீங்களே.. கமல்?!) அந்த மாதிரி.. மும்தாஜ் என்கிற வீராங்கனை எங்கே” என்று மும்தாஜை நோக்கி கேட்டார் கமல். “இங்கதான் சார் இருக்கு. ஆனா பிக்பாஸ் என்ன சொல்லியிருக்காங்கன்னு தெரியல. அவ குப்பையை கொட்டுவான்னு லாஸ்ட் வரைக்கும் நான் நம்பலை.. பிரச்னை எனக்கு வரைக்கும்னா ஓகே.. ஆனா என்னால மத்தவங்களும் பாதிக்கப்படக்கூடாது –ன்னு நெனச்சேன்’ என்று விளக்கமளித்தார் மும்தாஜ். 

“ஐஸ்வர்யா அவங்க பாத்திரத்தை சரியா செஞ்சாங்க.. சரி.. ஆனா இங்க எல்லோரும் நல்லா பேசறீங்க.. ஆனா அப்ப பேய் அறைஞ்ச மாதிரி நின்னீங்க… ‘குப்பையை மாத்திரம் கொட்டு.. பார்க்கறேன் ‘ன்னு ஒருத்தர் சொன்னாரு.. அப்புறம் தண்ணிய கொட்டு பார்க்கலாம்’னு சொன்னாரு.. ஒண்ணும் பண்ணலை.. இந்த வீடு மைக்ரோ வெவல்.. நாடு –ன்றது மேக்ரோ லெவல்..” என்ற கமல், அடுத்ததாக சென்றாயனை வம்பிழுக்கத் துவங்கினார்.

“என்ன வீர மண்ணின் மைந்தரே.. நீங்க கூட புரட்சி பண்ணலையே.’என்று தூண்டி விட.. ‘நான் பொங்கினேன் சார்” என்று சென்றாயன் உற்சாகமாக ஆரம்பிக்க.. “அடுப்ப அமத்திட்டாங்கள்ல’ என்று சொன்ன கமலின் அபாரமான நையாண்டி, சென்றாயனுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்கள் பலருக்கும் புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை. 

“டீயைப் பிடுங்கி ஊத்தின’ பிரச்னையை விஸ்தாரமாக சொல்ல ஆரம்பித்த சென்றாயன் ‘என்னை நாயின்னு சொல்லிட்டாங்க சார்… என்றார் பரிதாபமாக. இது தொடர்பாக ஐஸ்வர்யாவிற்கும் இவருக்கும் மோதல் வெடித்தது. ‘கமல் சார்.. முன்னாடி வாயை மூடிட்டு இருக்கேன். நானும் வாயைத் திறக்கலாமா?” என்று ஐஸ்வர்யா சொன்னதும் ‘அய்யய்யோ.. எனக்காக யாரும் வாயை மூடிட்டு இருக்க வேணாம்.. :” என்று மிகையான நாடகத் தோரணையுடன் கோட்டைக் கழற்றி சட்டையை மடித்து விட்டுக் கொண்ட கமல், ‘என்னோட வொக்கபிலேரி.. உங்களை விட பெட்டரா இருக்கும். ஆனா நான் பேச மாட்டேன்”. கமலின் தோரணையைப் பார்த்து பார்வையாளர்கள் பலமாக கைதட்ட, ஐஸ்வர்யாவே சிரித்து விட்டார். “அந்தக் கேரக்ட்டரில் இருந்து வெளியே வந்து ஐஸ்வர்யாவா பேசுங்க’ என்று எச்சரிக்கை தந்தார் கமல். 

மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு சென்றாயன் சொன்ன ஒரு வசையை ஐஸ்வர்யா சொன்னார். ஆனால் அது மியூட் செய்யப்பட்டது. “நீதானே முதல்ல நாய் –ன்னு  சொன்னே..” என்றார் சென்றாயன்.. ‘என்ன பண்ணுவே..என்ன பண்ணுவே..” கிட்ட வந்து சண்டை போட்டாங்க” என்று தொடர்ந்தார். லூஸூ.. மென்ட்டல்’ ஆகிய வசைகளை இருவரும் பரஸ்பரம் பயன்படுத்தியது மீண்டும் வெளியே வந்தது. ‘வயது வித்தியாசம் பார்க்காம என்னை நாயின்னு சொல்லிட்டாங்க சார்” என்றார் சென்றாயன் மறுபடியும். 

“வயசுக்கும் இதுக்கு என்ன.. சரி.. வயசான நாய் –ன்னு வெச்சுப்போம்” என்று இடதுகையால் அந்த வசையை தட்டி விட்டார் கமல். சென்றாயனின் ஊரைப் பற்றி விசாரித்த கமல், ‘ஆத்தா.. ன்னா நம்ம ஊர்ல அம்மா’ன்னுதான் அர்த்தம்… நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணலை’ என்று சொல்வதன் மூலம் அதைத்தான் செய்தார். ‘ஆத்தா’ என்பதற்கும் ‘ஓ.. ‘என்று துவங்கும் சென்னையின் பிரபல வசைச் சொல்லுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது கமல் அறியாததா?

சென்றாயனின் சார்பாக உரையாடல் செல்வதைக் கவனித்த ஐஸ்வர்யா.. அழத் துவங்க.. ‘Don’t cry. Be strong. என்று சமாதானப்படுத்திய கமல்.. “ஐஸ்வர்யாவை குழந்தை-ன்னு சொன்னீங்க.. ஆனா இங்க எல்லோரும் குழந்தைத்தனமாவே இருக்கீங்க.. உங்களை ‘சுருட்டை முடி’ன்னு சொல்லிட்டா.. ‘அய்யோ.. அப்படிச் சொல்லிட்டீங்களேன்னு அழுவீங்களா.. “ என்று கிண்டலடித்த கமல், ‘இதுவொரு ரியாலிட்டி ஷோ’ என்று ஆரம்பித்து ஐஸ்வர்யாவிற்கு தந்த உபதேசத்தின் போது அவருடைய உடல்மொழி அபாரமாக இருந்தது. 

பொன்னம்பலம் எதையோ சொல்லத் துவங்க.. ‘யோகி .. பொன்னம்பலம்’ உங்க கிட்ட அப்புறம் வர்றேன்’ என்று கமல் குறும்பாக சொன்னவுடன் “ஜெய்ஸ்ரீராம்’ என்று புன்னகையுடன் சரணடைந்து விட்டார் பொன்னம்பலம். 

“விட்ட இடத்திலிருந்து பிடிக்கலாமா? என்று மறுபடியும் வந்த கமல், பொன்னம்பலத்திடம் விசாரணையைத் துவங்கினார். ‘அறிவுரை தர்றது சுகம்தான். நானும் அதை செய்யறேன்.. நல்ல விஷயம்தான். ஆனா.. காவல் தெய்வம் உள்ள இருக்கு-னு உங்களுக்கு ஏகப்பட்ட பில்டப் கொடுத்திருந்தேன். இப்படி சும்மா இருந்திட்டியளே..”என்ற புகாரை முன் வைக்க ‘நான் பிக்பாஸ் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே புரட்சிக்கு தயார் ஆயிட்டேன்.. கயிறை எடுத்து ஜட்டிக்குள்ள மறைச்சு வெச்சிருந்தேன்.. (உவ்வேக்!) பழிவாங்கறான்னு தெரிஞ்சு போச்சு.. நான் ஃபோர்ஸா பண்ணலை. அவங்க திமிறினாங்க.. இன்னும் மோசமாயிடுமோன்னு தண்ணில தள்ளி விட்டுட்டேன்” என்றார். ‘சர்வாதிகாரத்தை முடித்து வைத்ததற்கு பாராட்டுக்கள். அது அப்படித்தான் முடியும். அது இயற்கையின் நியதி. ஆனா.. ஐஸ்வர்யா வலிக்குது –ன்னு சொல்றாங்க. கேட்போம்” என்றார் கமல். ‘ரெண்டு நாளா சாப்பிட முடியலை” என்று வருத்தப்பட்டார் ஐஸ்வர்யா. “எல்லை மீறிடிச்சோன்னு பயந்தேன்” என்றார் கமல்.

“நான் இங்க நியாயமா பேசறதுக்கு பார்வையாளர்களுக்காக இல்ல.. எனக்கே அது சந்தோஷமா இருக்கும். நம்மோட மூதாதையர் ஆப்ரிக்க தாய்தான்.. நம்ம எலும்புக்கூடு குரங்கோட சாயல்லதான் இருக்கும். குரங்குன்றது வசையில்ல. அதுல அவமானம் இல்ல. என்னோட கோத்ரம்.. ‘டார்வின்கோத்ரஸ்ய’ என்றார் கமல். 

“உங்க மேல எனக்கும் கோபம்லாம் இல்லை.. ஆனா உங்களைப் பார்க்கும் போது அஞ்சு வயசு பொண்ணோட உருவம் எங்கயோ தெரிஞ்சது. நிராகரிக்கப்பட்ட அன்பை உணர முடிஞ்சது. முழுவதும் ஆராய்ச்சி செய்ய முடியாது. ஆனால இதுக்குப் பின்னாடியுள்ள கதையை உணர முடியுது. உங்களுக்கு போதுமான அன்பு காட்டப்படவில்லையென்று நினைத்தால் நீங்கள் அதை மற்றவர்களுக்கு கொடுங்கள். அப்படி செஞ்சீங்கன்னா உங்க வெற்றி அற்புதமாக இருக்கும். மிதிக்கறத விட சந்தோஷமா இருக்கும். அதுக்கு யோகியால்லாம் இருக்க வேண்டிய அவசியமில்ல. ஷூ லேஸ் வலியை நினைச்சு நீங்க அழலீங்க.. வெவ்வேறு தாக்கங்களுடைய அழுகை அது.” என்று.. அற்புதமான உரையை நிகழ்த்தினார் கமல். “நான் சொல்லலே’’ என்பது மாதிரி ஜனனியை பார்த்தார் டேனி. (சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் இதே விஷயத்தை நான் எழுதியிருந்தது நண்பர்களுக்கு நினைவில் இருக்கலாம்).

‘நீங்க பிக்பாஸ் கிட்ட அழுததை அவங்க பார்க்கலை. நான் பார்த்தேன். இவங்களும் பார்த்திருந்தாங்கன்னா.. இவங்க மனசும் உடைஞ்சிருக்கும், பாலாஜி உட்பட. இந்த விஷயத்துல பார்வையாளர்களுக்கு நீங்க உபயோகமா இருந்திருக்கீங்க.. படிச்ச பெரியவங்களை விட இளைஞர்கள் பளிச்சுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. இது பல ஐஸ்வர்யாக்களுக்கான உரையாடல்” என்று சொன்னவுடன் புரிந்து கொண்ட சமநிலையை அடைந்தார் ஐஸ்வர்யா. (ஐஸ்வர்யாவின் அழுகை போலித்தனமானது என்கிற அழுத்தமான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பார்த்தேன். அது நடிப்பு என்பதை நம்மால் எவ்வாறு உறுதியாக சொல்ல முடிகிறது என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது. சந்தேகத்தின் பலனை தருவதற்கான அருகதை கூட ஒருவருக்கு இருக்காதா?)

ஐஸ்வர்யாவிற்கான உபதேசத்தை முடித்ததும் பாலாஜியிடம் வந்தார். ‘இன்னமும் கூட நீங்க கோபத்தை அடக்கலை போலயே” என்று ஆரம்பித்ததும்.. “இல்ல சார்.. வேற எதுனா பேசினா கூட .. அவங்களைப் பத்தி பேசறதா நெனச்சுக்கறாங்க’ என்று பாலாஜி மழுப்ப முயன்றதும்.. “இல்ல நீங்க பேசியிருக்கீங்க.. நாங்க பார்த்துட்டு இருக்கோம். அவங்களைத்தான் நீங்க பேசியிருக்கீங்க –ன்றது அவங்களுக்கும் தெரியும்: இல்லைன்னா இவ்ள ரியாக்ஷன் வராது. அடிக்கற வரைக்கும் நம்மால் கோபத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. தேவர் மகன்ல கூட இப்படியொரு சீன் வெச்சிருந்தேன். தவறுகளை நியாயப்படுத்தறதை விட குற்றவுணர்வோட அணுகினீர்கள் என்றால் தன்னால் அது போய் விடும். நீங்க ஆசைப்படற குடும்ப விஷயங்கள் நடக்கும்’ என்றவுடன் அதை ஆமோதிப்பது போல் பாலாஜி தலையாட்டினார். (மறுபடியும் ஆரம்பிச்சிட மாட்டீங்களே.. பாலாஜி?!). 

“கோபம் தான். குப்பை’ என்று சரியாக சொன்ன கமல், “நீங்க எல்லை-ல நின்னு தடுமாறிட்டீங்க..” என்று ஐஸ்வர்யாவின் பிசகை சுட்டிக் காட்டினார்  வடக்கு, தெற்கு என்கிற இனவாதத்தை தான் ஆதரிக்கவில்லை என்று பார்வையாளர்களுக்கு தெளிவாக உணர்த்தினார் கமல். “ என் பொண்ணு அது.. என் நாடு.. பெங்காலில் காமராஜ், அண்ணாதுரை’-ன்னு எத்தனை பேரு இருக்காங்க.. ஆனா இங்க சுபாஷ்சந்திர போஸ், ஐவஹர்லால் நேரு – ன்னுஇருக்காங்க.. இந்திய எங்க வாயில வெச்சு திணிக்காதீங்க. ஷூ லேஸ் மாதிரி எங்களுக்கு வலிக்கும்” என்றார். (ஆனா இதுக்கும் நடந்த பிரச்னைக்கும் என்ன சம்பந்தம்.. ஆண்டவரே?!).

கமலின் விரிவுரையைத் தாங்க முடியாத ஐஸ்வர்யா.. ‘சார் எனக்கு எல்லோர் மேலயும் இங்க லவ் இருக்கு.. I love my country. என்றவுடன் ‘எனக்குப் புரியது. இவங்களுக்கும் புரியணும். ஏதோ பெரிய சமூக அநீதி நிகழ்ந்து விட்டதாகவும் ‘கமல் இதைக் கேட்பாரா’ன்னு பொங்கறாங்க.. இது என்ன பெரிய விஷயம்? இதுக்கு என்ன தைரியம் வேணும்?,. யாரா இருந்தாலும் கேட்பேன்.. என்னை சந்தேகப்படறது .. எனக்கு அவமானமா இல்லை.. ஆனால் உங்களைப் பார்த்து பரிதாபமா இருக்கு” என்றார் காமிராவைப் பார்த்து. (புறம் பேசிய பார்வையாளர்கள் வெட்கத்தை அடைய வேண்டிய தருணம்).

“இங்க TRP எகிறிட்டிருக்குது.. இவன் உண்மையைப் பேசிடுவான்னோன்ற பயத்தை விட இவனுக்கு இப்படியொரு மேடை கிடைச்சிடுச்சேன்னு அரசியல்வாதிகள் பொறாமைப்படுவாங்க” என்று ரகளையாக கிண்டலடித்த கமல், சில பொழுதுபோக்குகளின் மூலம் மக்களின் கவனம் திட்டமிட்டு திசை திருப்பப்படும் அரசியலை கிரிக்கெட் உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து பேசினார். 

“இந்த நிகழ்ச்சியை செய்ய நான் ஒப்புக் கொண்டதற்கு காரணம். இதன் மூலம் உங்களையே உங்களுக்கு கண்ணாடி மாதிரி காட்ட முடியும். அது உங்களுக்குப் புரியலைன்றது வருத்தமா இருக்கு. தேவர்மகன்ல எழுதின வசனம் மாதிரி.. இந்த விதை நான் நட்டது” என்ற கமல், ‘ரொம்ப பேசறேன்ல.. ஒரு பிரேக் எடுத்துக்கலாம்’ என்று இடைவெளி  விட்டார்.

“வைஷ்ணவி .. நீங்க சொல்லுங்க. என்னை மாதிரி வெளிய இருந்து பார்த்துட்டு இருந்தீங்க’ என்றார் மறுபடியும் வந்த கமல். “ஐஸ்வர்யா முதல்ல பர்ஸனலா செஞ்சா. அடுத்த நாள்ல இருந்து சர்வாதிகாரி பாத்திரத்தை செஞ்சா’ என்றார் வைஷ்ணவி. ‘ஆலோசனை ரூம்லயே எனக்கு தெரிஞ்சுடுச்சு.. டேனி.. ஜனனி.. நீங்க ரெண்டு பேரும் பயங்கர ஜால்ரா போட்டீங்களே’ என்று கிண்டலடித்தார் கமல். 

“எனக்கு சமூக அக்கறை இருந்தது. புரட்சி பிடிக்கும். டாஸ்க்ல இருந்து செஞ்சாலும் மக்களுக்கு உதவினேன். ஆனா யாருமே முன்வரலை’ என்று ஆதங்கப்பட்டார் டேனி. ‘தான்தான் இந்த புரட்சியை தலைமையேற்று நடத்தினேன்’ என்கிற விஷயத்தை உற்சாகத்துடன் விவரித்தார் பொன்னம்பலம். 

பாலாஜியின் உண்ணாவிரத நாடகத்தை கிண்டலடித்த கமல் அது தொடர்பான குறும்படத்தைப் போட, ஏற்கெனவே அமைதியாக இருந்த பாலாஜி இன்னமும் சுருங்கிப் போனார். ‘இதை முன்னாடியே சாப்பிட்டிருக்கலாம்’ என்றார் கமல். ‘ரெண்டு பக்கமும் நல்லா ஜால்ரா போட்டீங்களே’ என்ற கேள்விக்கு ஜனனி மழுப்பலாக பதில் அளித்தார்.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

அடுத்தது எவிக்ஷன் விவகாரம் உரையாடலில் வந்தது. பெரிய பட்டியல். மும்தாஜ், மஹத், பொன்னம்பலம், ரித்விகா, ஷாரிக் மற்றும் பாலாஜி. தாம் ஏன் எவிக்ஷன் பட்டியலில் வந்தோம் என்கிற காரணங்களைச் சொன்னார்கள். ‘என்னை ஒண்ணுமே விசாரிக்கலையே’ என்று விடைபெற்ற கமலிடம் ஆதங்கப்பட்டார் ஷாரிக் ‘நாளைக்கும் பேச விஷயம் வேணும் இல்லை’ என்பது போல் கிளம்பிச் சென்றார் கமல்.

அப்பிராணியாக உலவும் பலியாடுகளை தேடி பிரியாணி போடுவது பிக்பாஸ் வீட்டின் வழக்கமான சடங்கு.சர்ச்சைக்குரிய போட்டியாளர்கள் நீடித்தால்தான் ஃபுட்டேஜ் நிறைய கிடைக்கும். அந்த வகையில் இந்த வாரம் வெளியேற்றப்படவிருக்கிறவர் ஷாரிக் என்கிற ஏறத்தாழ உறுதியான தகவல் வெளியாகியிருக்கிறது. இது உண்மைதானா என்பதை இன்று காத்திருந்து தெரிந்து கொள்வோம்.

அடுத்த கட்டுரைக்கு