Published:Updated:

பிக்பாஸுக்கு இன்டெர்வல்... ரணகளம் அதகளம் ஆரம்பம் ! #Verified #BiggBossTamil2

பிக்பாஸுக்கு இன்டெர்வல்... ரணகளம் அதகளம் ஆரம்பம் ! #Verified #BiggBossTamil2
பிக்பாஸுக்கு இன்டெர்வல்... ரணகளம் அதகளம் ஆரம்பம் ! #Verified #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்டின் ஐம்பதாவது நாளில் (நாட்கள் எத்தனை வேகமாக ஓடிவிட்டன!) அந்த வீடு இன்று ‘பாசக் காட்சிகள் நிறைந்த குடும்ப சித்திரமாக இருந்தது’. நேற்றிருந்த குடுமிப்பிடி சண்டைகளோ, உபதேச மழைகளோ இல்லை. ‘எனக்கே குமட்டுது’ என்று அறிவுரை சொல்வதைக் கட்டுப்படுத்திக்கொண்டார், கமல். பாலாஜியும் ஐஸ்வர்யாவும் பரஸ்பரம் பாசத்தைப் பொழிந்த காட்சியைப் பார்த்ததும், கமல் குறிப்பிட்ட அதே பாடலான ‘மலர்ந்தும் மலராத’ நம் நெஞ்சங்களிலும் நிழலாடியிருக்கக்கூடும். இந்த இருவரின் சார்பாகவும் எதிராகவும் சமூகவலைதளங்களில் ரத்தம் சிந்தியவர்கள் அனைவரின் முகத்திலும் இருவரும் சேர்ந்து இன்று கரியைப் பூசிவிட்டார்கள். (எல்லாம் மாயை!)

ஷாரிக் வெளியேற்றப்படவிருக்கிற தகவல் நேற்றே கசிந்துவிட்டாலும், உண்மையிலேயே அது இன்று அறிவிக்கப்பட்டபோது பிக் பாஸ் வீட்டைப் போலவே நமக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மற்றவர்களோடு ஒப்பிடும்போது ஷாரிக்கின் இருப்பு நமக்கு அவ்வளவாக இன்னமும் பிடிபடவில்லை. இப்போதுதான் வெளிப்படத் துவங்கியிருக்கிறது. ‘அவன் என்னமோ பிளான் வெச்சிருக்கான். ஒண்ணும் புரியலை. ஃபைனல் வரைக்கும் வருவான்’ என்று சக போட்டியாளர்கள் நம்பிக்கொண்டிருந்த சூழலில், அவர் வெளியேற்றப்பட்டதில் எவ்வித தர்க்கமும் நியாயமும் இல்லை. ஷாரிக் நடுவராக இருந்து செயல்பட்டபோது முதலில் சற்று சுணங்கினாலும் பின்பு மெல்ல சுதாரித்துக்கொண்டார். போலவே, இப்போதுதான் அவர் வீட்டின் தலைவராகியிருக்கும் சூழலில் அவருக்கான வாய்ப்பு சற்று நீட்டிருக்கப்பட்டிருக்கலாம். எவிக்ஷன் பட்டியலில் இருந்த மற்ற போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது ஷாரிக்கின் தவறுகள் குறைவுதான். 

 ஒருவரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு கமலுக்கு தரப்பட்டிருந்தது. அதை பொன்னம்பலத்திற்காக பயன்படுத்திக்கொண்டார், கமல். மாறாக அதை ஷாரிக்கிற்கு வழங்கியிருக்கலாம். 

கடந்த வாரங்களில் வெளியேற்றப்பட்டவர்களின் வரிசையைக் கவனித்தால் அவர்கள் பெரும்பாலும் அப்பிராணிகளாக, பரபரப்பான ஃபுட்டேஜ்களைத் தரக்கூடிய சாமர்த்தியம் அற்றவர்களாக இருப்பதைக் கவனிக்க முடியும். அந்த வரிசையில் இப்போது ஷாரிக். ஐம்பது நாட்களுக்குள் நிகழ்வதெல்லாம் காதலாக இருக்க முடியாது என்றாலும், ஐஸ்வர்யா மற்றும் ஷாரிக் இடையே ஒரு மெல்லிய காதல் கதையின் துயரமும் இன்பமும் இருந்ததை பலரால் உணர்ந்திருக்க முடியும். குறிப்பாக காதல் அனுபவம் இருந்தவர்கள். வெளிவாசலின் படியில் ஐஸ்வர்யா அழுததில் பொய்யில்லை என்றே நம்புகிறேன். (எல்லாவற்றிலும் இலுமினாட்டிகளின் கைங்கர்யமும் உலகசதியும் இருப்பதாக நம்புவர்கள் மறுத்துக் கொள்ளட்டும்). 

தன் குடும்பத்தை அவமதித்தவருடன் இணைந்து சிரித்த ஷாரிக்கின் மீது கோபமும் அவநம்பிக்கையும் இருந்தாலும் ஷாரிக்கின் மீதான நேசத்தை இழக்க முடியாமல் தவிக்கிற ஐஸ்வர்யாவின் அந்த தத்தளிப்பு மனோபாவம் பெண்களுக்கேய உரியது. ஆண்களாக இருந்தால் ‘இதுதான் சாக்கு’ என்று டாஸ்மாக் பக்கம் ஒதுங்கிவிடுவார்கள். 

இன்று வெளியேறும் ஷாரிக்கின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகள். 

**

“வீட்ல பாசம் ரொம்ப அதிகமாயிடுச்சு. நான் உள்ளே போகலைன்னா ரொம்ப நல்லவங்க ஆயிடுவாங்க போல’ என்கிற குறும்புடன் நிகழ்ச்சியைத் துவங்கினார், கமல். 

ஐஸ்வர்யா பாலாஜியிடம் உருக்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார். “நீயும் போஷிகா போலத்தான். தனியா இருந்திருக்க.  என்னை சித்தப்பா, அண்ணன், எப்படி வேணா நினைச்சுக்கோ. உன்னைப் பார்க்க வருவேன். உன் கல்யாணத்துல சாம்பார் பக்கெட் தூக்கறதுக்கு நிச்சயம் வருவேன்” என்று உருகினார், பாலாஜி. (பெங்காலி கல்யாணத்துல சாம்பார் உண்டா என்ன?!) “சரி... ஒண்ணு மட்டும் பிராமிஸ் பண்ணுங்க. என்ன பிரச்னை நடந்தாலும் சாப்பிடாம மட்டும் இருக்காதீங்க. அது கஷ்டமா இருக்கு” என்றார் ஐஸ்வர்யா. (பெண்களின் ஆயுதம் கண்ணீர் என்றால் ஆண்களின் ஆயுதம் வீம்பு). “ஒருவேளை இன்னிக்கு நான் வெளியே போயிட்டன்னா, அப்புறம் மன்னிப்பு கேட்க முடியாதோ, என்னவோ... அதனால்தான் கேட்டேன்’ என்றார் பாலாஜி. 

அவ்வளவுதான். இந்த இருவருக்கும் இடையிலான பிரச்னைகளை சம்பந்தப்பட்ட இருவருமே பரஸ்பரம் பேசி முடித்துக்கொண்டார்கள். இதற்கிடையில் நாம்தான் முன்தீர்மான எண்ணங்களுடன் எத்தனை விதமான தீர்ப்புகளை எழுதி முடித்துவிட்டோம்?! (எல்லாம் மாயை!)

அகம் டிவியின் வழியே உள்ளே வந்தார், கமல். ‘லுக்கிங் சூப்பர்’ என்று சென்றாயன் வழக்கம் போல் முகமன் கூறியதற்கு ‘குக்கிங் சூப்பர்’ என்று பதிலளித்தார், கமல். (இதெல்லாம் அப்படியே வர்றதுதான்ல... catch my point?!) “எனக்கு என்னோட அப்பா திரும்ப கிடைச்சிட்டார்” என்றார் பாலாஜியுடன் கைகோர்த்து அமர்ந்துகொண்டிருந்த, ஐஸ்வர்யா. 

“ஹ்ம்ம்… பார்த்தேன். பாசமலர் பாட்டுல்லாம் ஞாபகம் வந்துச்சு.. நீங்க மாறினதுக்கு நான் காரணம் இல்ல. நீங்கதான்” என்ற கமல் ‘கல்யாணம் எப்ப?” என்று ஐஸ்வர்யாவை விசாரித்தார். (ரசம் பக்கெட்டை இவர் தூக்குவார் போல!).

குஷி மூடில் இருந்த கமல், சென்றாயன் மும்தாஜிற்கு உணவு ஊட்டிவிட்ட விஷயத்திற்கு வந்தார். ‘ஊரார் பிள்ளையை ஊட்டி விட்டால் தன் பிள்ளையை கொடைக்கானல் வளர்க்கும்’ என்று பல வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட ஜோக்கை கமல் சொல்ல ‘என்ன சொன்னாரு புரியல’ என்று தவித்தார், மும்தாஜ். “புரியலைன்னா விட்டுருங்க.. இது ஒண்ணும் அத்தனை பெரிய ஜோக் இல்லை’ என்றார் கமல். (இந்த வசனம் ‘சத்யா’ திரைப்படத்தில் வருகிறது). மும்தாஜ் மீண்டும் கேட்க ‘ஒண்ணுமில்ல. ரொம்ப ‘ஹைஜீனிக்கா’ இருந்தது என்று கிண்டலடித்தார், கமல். 

“நான்கூட ரொம்ப சந்தோஷப்பட்டேன் சார். கூடப்பிறந்த தம்பியா பார்த்தாங்க. அண்ணா, அண்ணான்னு கூப்பிட்டாங்க (என்ன உறவுமுறைடா இது?!) என்று வழக்கம்போல் முன்னுக்கு பின்னாக சென்றாயன் பேசத் துவங்க, சென்றாயனுக்கு என்றே வைத்திருக்கும் ஸ்பெஷலான முகபாவத்தைக் காட்டினார், மும்தாஜ். 

சென்றாயன் சப்பாத்தி மாவு தயார் செய்த விதம் நகைச்சுவையோடு சிறிது நேரம்  பிசையப்பட்டது. “ஆனா ஒண்ணு.. சர்வாதிகாரி ஆட்சில எல்லாம் சரியா நடந்தது. யாரும் பகல்ல தூங்கலை. காலைல சரியா எழுந்திட்டீங்க. பக்கெட் தண்ணி வந்துடும்னு பயப்பட்டிங்க போல” என்று சொன்ன கமல், எமர்ஜென்சி காலத்தில் அரசு இயந்திரம் சரியாக இயங்கியதை நினைவுப்படுத்தினார். 

“மஹத்.. இதைச் சொல்லுங்க. ‘என்னை அட்வான்டேஜ்ஜா எடுத்துக்கறாங்கன்னு சொல்லிட்டே இருக்கீங்க. யாரு, என்ன விஷயம்?” என்று விசாரித்தார் கமல். ஆனால் இதற்கான பதில் நேராக வரவில்லை. “பாலாஜி அண்ணனும் அட்வைஸ் பண்ணிட்டே இருந்தாரு. நான்தான் கேட்கலை” என்றார், மஹத். “ஆமாம் சார். விளையாட்டுத்தனமாகவே இருப்பாரு. இங்க இருக்கறவங்கள்லயே தான் அழகுன்ற எண்ணம் அவருக்கு இருக்கு. அவருக்கு சமமா நான் ஒருத்தன் இங்க இருக்கேன்றதை மறந்துடறாரு” என்று கிண்டலுடன் இணைத்துச் சொன்னார், பாலாஜி. (யாஷிகா மஹத்தை உபயோகப்படுத்திக்கொள்கிறார் என்பதாக இந்த விவகாரம் இருக்கலாம்).

“இந்த வாரம் உங்க பங்களிப்பு விலகியிருந்ததுபோல் இருந்ததே, பாலாஜி, நாமினேஷன்தான் காரணமா?” என்கிற விசாரணைக்கு, “ஐஸ்வர்யா பத்தி சொல்றதுக்காக கன்பெஃஷன் ரூமிற்கு கூப்பிடுங்கன்னு முதன்முறையா கேட்டேன். நடக்கலை.” என்றார், பாலாஜி. “ஏன் செல்ஃப் நாமினேஷன் பண்ணிக்கிட்டீங்க. வேற யாரும் கிடைக்கலையா?” என்றதற்கு “யாரும் என்னை ஹர்ட் பண்ணா மாதிரி  நான் ஃபீல் பண்ணலை” என்று பாலாஜி மழுப்ப, “உங்க தங்கச்சி கூடவா?” என்று கமல் நகைச்சுவையுடன் கேட்க பக்கத்திலிருந்த ஐஸ்வர்யா வெடித்து சிரித்தார். “அவங்க ‘safe’-ல இருந்தாங்க சார்” என்று பாலாஜி சொன்னதும்தான் கமலுக்கே நினைவிற்கு வந்தது. 

“போன முறை மாதிரி இந்த முறை அதிகம் குறும்பட போட மாட்டேன்றீங்களேன்னு சிலர் கேட்கறாங்க பாலாஜி. உங்க மொழி வன்மை பற்றி ஒரு குறும்(பு)படம் பார்க்கலாம்” என்று கமல் சொன்னதும் பாலாஜி சென்றாயனையும் ஒட்டுமொத்த வீட்டை மொத்தமாகவும் வசையும் காட்சிகள் ஒளிபரப்பாகின.

“சில சமயங்கள்ளல போக விட்டுட்டு திட்டறீங்க.. நல்ல விஷயம். சம்பந்தப்பட்டவங்களுக்கு தெரியாது. ‘Mind your language’-ன்னு சொல்வாங்க. வீடியோல எடிட் பண்ணிடலாம். ரியல் லைஃப்ல எடிட் பண்ண முடியுமா?” என்று சொன்ன கமல், “சென்றாயன் பத்தி நீங்க என்னதான் நெனக்கறீங்க” என்று என் மனதிலும் நீண்ட நாளாக இருந்த கேள்வியை கமல் கேட்டார். “நெருக்கம் காரணமாக சில விஷயங்களை உரிமையோடு சொல்வேன். உதாரணமா, விருந்தினர்கள் யாராவது வந்தா ரொம்ப எக்சைட் ஆயிடுவான். (ஆம், உண்மைதான்!) அவங்களும் நம்பளைப்போல நடிகர்கள்தான். நம்மை தாழ்த்திக்கிட்டு பணிவா இருக்க அவசியமில்ல” என்று பாலாஜி சுட்டிக்காட்டியது சரியான விஷயம். (ஆனால் சென்றாயன் போன்ற எளியவர்கள் அப்படி இருந்தால்தானே போனால் போகிறதென்று ‘பெரியவர்கள்’ கருணை காட்டுகிறார்கள்?’ அதுவும் திரைத்துறையில் படத்திற்கு உள்ளே நடிப்பவர்களைவிட வெளியே திறமையாக நடிப்பவர்களுக்குத்தானே மவுசு?!). “உங்க மொழி வன்மை பத்தி பெரிய படமாவே போடலாம். சுருக்கமா முடிச்சுட்டோம். அது என்ன நேர்மையின் வெளிப்பாடுன்னு நெனக்கிறீங்களா?” என்று கமல் கேட்டதுக்கு, ‘என்னன்னு சொல்லத் தெரியலை சார். ஒரு ப்ளோல வந்துடுது” என்றார் பாலாஜி. “இந்த பாங்க் கேஷியர்லாம் எச்சில் தொட்டு பணம் எண்ற மாதிரியா?” என்று சரியான உதாரணத்தை சொன்னார். (எப்படி.. இப்படில்லாம் ஆண்டவரே?!)

பாலாஜியின் இந்த மொழி வன்மையைப் பத்தி சென்றாயனிடம் விசாரித்தார் கமல். “நான் ரொம்ப ஹர்ட் ஆன மாதிரி என் கிட்ட அவர் பேசினதில்ல.. சார்” என்று சபையில் நண்பரைக் காப்பாற்ற சென்றாயன் முயல, ‘வீடியோல பார்த்தீங்கள்ல.. போக விட்டுட்டு திட்றாரு” என்று கமல் போட்டுக் கொடுக்க.. “ஆமாம் சார்.. அப்ப.. நான் போனப்புறம் திட்டிறியா நீயி?” என்று வெள்ளந்தியாக பாலாஜியிடம் கேட்டார் சென்றாயன். “என்னமோ குசலம் விசாரிக்கிற மாதிரிதான் இருக்கு. சரி.. நட்பு இப்படியும் வளரும்னா வளரட்டும். ஆனால் கெட்ட வார்த்தைகளை பெரியவர்களிடமிருந்துதான் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். கவனம்’ என்று கமல் சுட்டிக் காட்டிய எச்சரிக்கை மிக முக்கியமானது. 

**

சிறிது நேர இடைவெளிக்குப் பின் எவிக்ஷன் கார்டை குறும்பாக காட்டியபடியே வந்தார் கமல். ரித்விகா காப்பாற்றப்பட்ட விஷயம் நேற்றே தெரியும் என்பதால் பாக்கியிருப்பவர்கள் ஷாரிக், மஹத், மும்தாஜ், பொன்னம்பலம் மற்றும் பாலாஜி. 

“நீங்கள் நாமினேட் செய்யப்பட்டது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று ஒவ்வொருவரிடமும் கேட்டார் கமல். “டைம் பாஸூக்காக என்னை வெச்சு செய்யறாங்க சார்” என்றார் பொன்னம்பலம். பாவம், ஒவ்வொரு முறையும் கரணம் தப்புவது அவருக்கே சலித்திருக்கும். 

“வேற யாரும் இல்லடா.. அதனால உன்னை பண்றேன்”-ன்னு சொல்லிட்டு ஜனனி என்னை நாமினேட் பண்ணாங்க” என்றார் ஷாரிக் பரிதாபமாக. (இதெல்லாம் ஒரு காரணமா? யார் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்றெண்ணி பாதுகாப்பாக விளையாடுவது சரியா?!) “என் கிட்ட கோபம் அதிகமாக வர்றது காரணமா இருக்கலாம் சார்” என்றார் மஹத். “நீங்க வெளிய போனா மத்தவங்களுக்கு என்ன சொல்வீங்க?” என்ற கேள்விக்கு “அப்படியே இருங்க. சண்டை மட்டும் கம்மியா போடுங்க’ன்னு சொல்வேன் என்றார். 

“நான் எல்லா அறிவுரையையும் சொல்லி முடிச்சிட்டேன் சார்” என்று பொன்னம்பலம் சொன்னதும் தன்னிச்சையாக கமல் சிரித்து விட்டார். (பாம்பின் கால் பாம்பறியும்).  

“இந்த ஐந்து பேரில் ஒருவரைக் காப்பாற்றும் வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறார்கள். (அப்ப மக்கள் வாக்கு!) நீங்களா இருந்தா யாரைக் காப்பாத்துவீங்க?” என்கிற கேள்வியை மற்றவர்களிடம் வீசினார் கமல். பாலாஜி பொன்னம்பலத்தையும், பொன்னம்பலம் ஷாரிக்கையும், மஹத் ஷாரிக்கையும் காப்பாற்றுவோம் என்பதாக சொன்னார்கள். ‘வளர வேண்டிய பையன்’ என்பதான கரிசனம் ஷாரிக்கின் மீது அவர்களுக்கு இருந்தது. “என்னையே காப்பாற்றிக் கொள்வேன்” என்று மும்தாஜூம் ஷாரிக்கும் சொன்னார்கள். நேர்மையான வாக்குமூலம். 

வைஷ்ணவி மஹத்தையும், ஜனனி ஷாரிக்கையும் (குற்றவுணர்வு!) ரித்விகா மும்தாஜையும், ஐஸ்வர்யா ஷாரிக்கையும், டேனி ஷாரிக்கையும் தேர்ந்தெடுத்தனர். “இத்தனை நாள் இருந்தாலும் இப்பத்தான் அவர் கேம்ல எண்டர் ஆகியிருக்காரு. இனிமேதான் அவர் ப்ரூவ் பண்ணனும்” என்ற காரணத்தைச் சொன்னார் டேனி. 

“அப்ப ரொம்ப குழப்பத்துல இருந்தேன் சார். நாமினேட் பண்ணாதான் பிக்பாஸ் பேசுவேன்-னு சொல்லிட்டாரு. அதனால பொன்னம்பலத்தையும் ஷாரிக்கையும் நாமினேட் பண்ணிட்டேன்” என்றார் பாலாஜி. சென்றாயன், பாலாஜியை தேர்ந்தெடுத்தார். (இவர் இல்லைன்னா வீடு சோகமாயிடும், கலகலப்பே இருக்காது). யாஷிகா மும்தாஜை தேர்ந்தெடுத்தார்.

யாஷிகா அப்படிச் சொன்னதும் அதுதான் சாக்கென்று ‘சரி.. அப்ப மும்தாஜை காப்பாத்திடலாம்” என்று சொன்ன கமல், அதை அறிவிக்க மும்தாஜின் ரோஜா கன்னங்களில் மேலும் சிவப்பு ஏறியது. “மக்களுக்கும் கடவுளுக்கும் நன்றி. ஆனா நான் வீட்டுக்குப் போகறதா இருந்தாலும் சந்தோஷமாத்தான் இருப்பேன். வெளியே எனக்காக ஒரு ஃபேமிலி காத்திட்டு இருக்கு” என்றார் மும்தாஜ். (ஆமாம் மேடம்.. உங்களுக்காக வெளிய ஆர்மியெல்லாம் ஃபார்ம் ஆயிருக்கு தெரியுமா?!).

ஆக.. நான்கு பேர்களில் ஒருவர் என்று பூடகமாக ஆரம்பித்த கமல், பொன்னம்பலத்தை தள்ளி உட்காரச் சொல்வதின் மூலம் அவர் காப்பாற்றப்பட்ட செய்தியை மறைமுகமாகச் சொன்னார். (கமலின் சொந்த வாக்கு). 

பாக்கியிருந்தவர்கள் மஹத், ஷாரிக் மற்றும் பாலாஜி. “யார் கோவிச்சுக்க மாட்டாங்களோ.. அவங்களை நாமினேட் பண்ற வேலையெல்லாம் செஞ்சீங்க.. ஆனா மக்கள் வேற மாதிரிதான் நெனப்பாங்க.. யாரு யாரை நாமினேட் பண்ணீங்க.. சொல்லுங்க.. புரிஞ்சுக்கறதுக்காக கேட்கறேன்” என்று கமல் தூண்டியலை வீசியதும் ஒரு குழப்பத்தில் ஷாரிக்கையும் பொன்னம்பலத்தையும் தேர்ந்தெடுத்ததாக பாலாஜி சொன்னார். (நீங்கள் தனி ஆள் இல்லை பாலாஜி.. பல இந்திய வாக்காளர்களும் அந்த தவறைத்தான் பல வருடங்களாக செய்கிறார்கள்).

மும்தாஜ் மற்றும் பொன்னம்பலத்தை தேர்ந்தெடுத்தாக மஹத் சொன்னார். “யாரு ஷாரிக்கை நாமினேட் பண்ணது” என்று பொடி வைத்து கமல் கேட்டதும் பொன்னம்பலமும் ஜனனியும் கைதூக்கினார்கள். ‘இதான் முதல் முறை இல்லையா,. ஷாரிக் பேர் வெளியே வர்றது.. மத்தவங்களுக்கெல்லாம் புலி  வருது.. புலி வருது.. ன்ற கதையா இருந்தது. ஷாரிக் விஷயத்துல அது உடனே உண்மையாயிடுச்சு.. புலி இங்க வருது” என்று ஷாரிக் வெளியேற்றப்படுவதை கதை போல சொன்னார் கமல்.

“ஜனனி.. வித்தியாசமா பண்ணலாம்-னு நாமினேட் பண்ணீங்க இல்லையா.. அதான் ஜனங்களும் அப்படியே யோசிச்சிட்டாங்க” என்றார் கமல். (உலக நடிப்பு ஆண்டவரே!)  

ஷாரிக்கின் வெளியேற்ற அறிவிப்பைக் கண்டு பிக்பாஸ் வீடே அதிர்ச்சியில் உறைந்தது. கரகரப்பு குரலோன் பிக் பாஸ் கூட வீட்டிற்குப் பின்னால் மூக்கு சிந்துவதைப் போன்றதொரு பிரமை. தன்னுடைய பரிந்துரையால் ஷாரிக் வெளியேற்றப்படுவதைக் குறித்து பாலாஜியும் ஜனனியும் அதிக குற்றவுணர்ச்சியும் வருத்தமும் அடைந்தார்கள். குறிப்பாக ஜனனியின் துயரம் அதிகமாக இருந்தது. ‘நான் தெரியாம நாமினேட் பண்ணிட்டேன் சார்.. உங்க ப்ளெஸ்ஸிங்க்ஸ் அவனுக்கு வேணும். நான் வேணா வெளியே போறேன். அவன் வளர்ற பையன்.. இருக்கட்டும்’ என்றார் பாலாஜி உணர்ச்சிகரமாக. ‘ப்ளீஸ் சார்.. ப்ளீஸ் சார்..’ என்று ‘பாய்ஸ்’ படத்தின் பாடலை அனைவரும் பாடினர்.

“ஐஸ்வர்யா என்ன சொல்றாங்க?” என்று காமிராவை அந்தப் பக்கம் திருப்பினார் கமல். “தமிலக மக்கள், பிக்பாஸ், உங்க கிட்ட ரிக்வெஸ்ட் பண்றேன்.. ஷாரிக் இருக்கணும். He is very nice person” என்று உண்மையான வருத்தத்துடன் கலங்கினார் ஐஸ்வர்யா. “யாருக்குத் தெரியும்.. ஷாரிக்கைப் பார்த்து பல தயாரிப்பாளர்கள் இப்பயே தயாரா காத்திருக்கலாம்.. அவரோட வெற்றிய ஏன் இன்னமும் ஐம்பது நாளைக்கு தள்ளிப் போடறீங்க?” என்று கமல் சாமர்த்தியமாக கன்வின்ஸ் செய்தார். (இப்படி உசுப்பேத்தி.. உசுப்பேத்தியே..). அப்படியும் ஐஸ்வர்யா ஒப்புக் கொள்ளவில்லை. ஷாரிக் பொம்மைதான் வேணும் என்று பாப்பா அடம்பிடித்தது. 

“அப்பன்னா.. நீ வெளியே போடா. நானே வந்து உனக்கு கட்அவுட் வெக்கறேன்” என்று உணர்ச்சிகரமாக கட்டித்தழுவினார் பாலாஜி. மற்றவர்களும் மிகையாக கண்கலங்க, ‘இங்க இருக்கறது சிறையும் இல்ல.. வெளிய இருக்கிறது விடுதலையும் இல்ல” என்கிற பெரிய தத்துவத்தை சிறிய வாக்கியங்களில் சொன்னார் கமல். “இதை விடவும் பெரிய போட்டி வெளியே இருக்கு. 60 வருஷமா இந்த துறைல இருக்கேன். இந்த புகழ் இன்னும் கூட எனக்கு சந்தோஷமா இருக்கு. அதைப் பயன்படுத்தற வாய்ப்பு வெளியே இருக்கு” என்றார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலோனோர் ஷாரிக்கிற்கு அளித்த பிரியாவிடையில் இதுவரை இல்லாத உண்மையும் துயரமும் இருந்தது. ‘நான் போகும் போது யாருமே அழுவலியே” என்று வைஷ்ணவி வாய் விட்டு கேட்கும் அளவிற்கான உருக்கம் இருந்தது. அழுகையை அடக்க முடியாமல் நின்றிருந்த மும்தாஜிடம் “ எனக்கு டீ போட்டு தாங்க” என்று ஷாரிக் கேட்டதும் குடுகுடுவென்று சமையல் அறைக்கு ஓடினார் மோமோ. ஐஸ்வர்யா.. மஹத் போன்றவர்களுக்கு தன்னிடமிருந்த பொருட்களை நினைவுப்பொருட்களாக வழங்கினார் ஷாரிக். ஜனனிக்கு பேஸ்ட். இதில்தான் பல் துலக்க வேண்டுமாம்.   ரித்விகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஷாரிக், தன்னுடைய செடியை ஐஸ்வர்யாவிடம் விட்டுச் சென்றார். யாஷிகா ஒருபுறம் அழுதபடி இருக்க, குற்றவுணர்வு தாளாமல் ஜனனி கலங்கியபடியே இருந்தார்.  

ஷாரிக்கை கட்டியணைத்தும் தனியாகவும் வெளிகேட்டின் வாசலிலும்.. என ஒரு இடம் விடாமல் பின்தொடர்ந்து அழுது தீர்த்தார் ஐஸ்வர்யா... விடாமல் கண்கலங்கிய ஐஸ்வர்யாவை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். 

**

வெளியே வந்த ஷாரிக் திடீரென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய, பதறிப் போன கமல் சட்டென்று நகர்ந்து கொண்டார். பார்வையாளர்களின் நடுவில் அமர்ந்திருந்த உமா ரியாஸின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.  (அப்ப விஷயம் முன்னமே தெரியுமா?!) “முன்னாடி இந்தக் கைத்தட்டல் உங்களுக்கு கிடைச்சிருக்குமா.. வெளியே வந்துட்டமேன்னு இல்லாம.. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்குங்க” என்றார் கமல். “ஆமாம். பாலாஜியண்ணன் நெறய அட்வைஸ் பண்ணியிருக்காரு.. நிச்சயமா இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்குவேன். மஹத் மாதிரி ஒரு பிரதர் கிடைச்சிருக்காரு.. யாஷிகா நல்ல சிஸ்டர்.. ஐஸ்வர்யா நல்ல பிரெண்ட். (ஐஸ்வர்யாவின் பெயரைச் சொன்னதும் பார்வையாளர்களின் கூக்குரல்கள். இப்படி உசுப்பேத்தியே..). மோமோ –ன்னு மும்தாஜிற்கு நான்தான் பெயர் வெச்சேன்.. “ என்று தன் ‘தற்காலிக’ குடும்பத்தை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார் ஷாரிக். 

“ஆமாம்.. சிலர் வாசல்லயே உக்காந்து இன்னமும் அழுதிட்டிருக்காங்க.. உள்ளே மட்டுமில்ல. இங்க கூட ஒரு பெண்மணி அழுகிறார்’ என்றதும் உமா ரியாஸை மேடைக்கு அழைத்து வந்தார் ஷாரிக். கூட அவரது நண்பர்களும். “இந்த ஷோவால அவனுக்கு கிடைச்ச புகழ் பிரமிப்பா இருக்கு. ஷாரிக்கோட அம்மாவா நீங்க?”ன்னு கேட்டு ஃபோட்டா எடுத்துக்கறாங்க” என்று பெருமிதப்பட்டார் உமா. 

‘உள்ளே இருக்கறவங்களை ஒருமுறை பார்க்கலாமா?” என்று ஷாரிக் கேட்டதைத் தொடர்ந்து அவரைப் பற்றிய வீடியோ ஒளிபரப்பானது. ஐம்பது நாட்களுக்கு முந்தைய ஷாரிக் மிக இளமையாக இருந்தார். போலவே மற்றவர்களின் தோற்றங்களிலும் கணிசமான மாற்றங்கள் தென்பட்டன. வெறும் ஐம்பது நாட்களில் மனித உருவங்கள் இப்படி மாறுமா என்று ஆச்சரியமாக இருந்தது. நாம் தினம் தினம் பார்த்துக் கொள்வதால் அதிக வித்தியாசம் நமக்கு தெரிவதில்லை போல. 

‘இந்த யாத்திரை எப்படியிருந்தது?” என்று விசாரித்தார் கமல். ‘எனக்கு சந்தோஷமா இருக்கு. இங்க அவன் நெறய விஷயம் கத்துக்கிட்டான். சமையல்லாம் செய்யறான். வீட்ல வந்து சமைச்சுக் கொடுடா…. தம்பி” என்று புன்னகைத்தார் உமா. (அது உமாவின் குரல் மட்டுமல்ல.. சமையல் வேலை செய்து சலித்துப் போயிருக்கும் பல பெண்மணிகளின் குரல்).

“வெளியே போய் ‘ரெடி’ன்னு சொல்றதை விட ‘ரெடியாகணும்னு நெனச்சிக்கங்க. இது வெறும் பிளாட்பார்ம்.. இது மேலதான் ஒத்திகை.. புகழ் எல்லாம் இருக்கு” என்று ஒரு சீனியராக சரியான உபதேசத்தை தந்தார் கமல். ஷாரிக்கிற்கு வெளியே ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது என்பதெல்லாம் மாயை. பிகபாஸின் மூலம் கிடைத்த புகழின் வெளிச்சம் அணைவதற்குள் அதை எப்படி அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதுதான் அவர் முன் நிற்கும் சவால். 

‘ஒரு வேண்டுகோள் சார்.. wild card entry-ல என்னை உள்ளே விடுவீங்களா.. வெச்சு செஞ்சு விடுவேன்” என்று டெடராக கூறினார் உமா. இதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டார் கமல். உமா அதைச் செய்யக்கூடிய ஆள்தான் என்று தெரிந்தது. ‘இந்த வெச்சு செய்வேன்” என்பது யாரைக் குறிக்கும் என்பதை யூகிக்க நமக்கு அதிகம் சிரமம் தேவையிருக்காது. (உமா, நடிகர் தேங்காய் சீனிவாசன் போல் அற்புதமாக மிமிக்ரி செய்வார் என்பது அறியாதவர்களுக்கான ஒரு தகவல்). 

‘அதிர்ஷ்டம் ஓரளவிற்குதான் உதவும். நல்ல குருவை தேடியடைவது முக்கியம்’ என்கிற மகா உண்மையைச் சொன்ன கமல், பிக்பாஸ் போட்டியாளர்களின் புகைப்படங்களுக்கான கமெண்ட்டுகளை சொல்லச் சொன்னார். 

ஜனனியின் புகைப்படத்திற்கு ‘நியூட்ரல்’ என்று மதிப்பிட்ட ஷாரிக், அவங்க ஜீரோ மாதிரி.. பின்னாடி எண்கள் வந்தால் மதிப்பு ஏறும். ‘ஒரு விஷயம் என்னன்னு கேட்டுட்டு அப்புறம் பதில் சொல்லு’ன்னு ஐஸ்வர்யாவிற்கு நெறைய முறை சொல்லியிருக்கேன். மஹத்தும் அப்படித்தான். கோபம் சட்டுன்னு வரும். ஐஸ்வர்யாவோட male version.” என்றார்.

பிறகு அகம் டிவி வழியே போட்டியாளர்களை சந்தித்த ஷாரிக் ‘இந்த வீட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதை யாஷிகாவிற்கு வழங்குகிறேன். வீட்டை நல்ல படியா பார்த்துக்ஙக” என்றார். 

ஷாரிக்கிற்கு மறுபடியும் தங்களின் அன்பையும் பிரியத்தையும் உபதேசத்தையும் பிக்பாஸ் வீட்டு மக்கள் நெகிழ்ச்சியுடன் வழங்கினார்கள். ‘please come back soon’ என்று கண்களில் பிரியம் பொங்க ஐஸ்வர்யா சொன்னதும் காமிரா உமாவைக் காட்டியது. ‘பாத்ரூம்ல நாம பாடின டூயட் ஸாங்லாம் மிஸ் பண்ணுவேன்’ என்று வில்லங்கமாக தோன்றக்கூடிய கமெண்ட்டை தன் பிரியத்தின் அடையாளமாக தெரிவித்தார் யாஷிகா. ‘இவன்தான் சார் மாவு மிஷின்’ என்று மஹத் சொன்னதற்கு, அப்படி ஆனதற்கு காரணமே மஹத்துதான் என்று விளையாட்டாக போட்டுக் கொடுத்தார் ஷாரிக். ‘நீ கமல் சார் மாதிரி வரணும்” என்று சொல்லி கமலுக்கு ஜெர்க் கொடுத்தார் சென்றாயன். ‘வாழ்க்கை அமையப்பெறுவது ஆண்டவன் கையில்.. அமைத்துக் கொள்வது உன்னுடைய கையில். (ஃபார்வேர்ட் மெசேஜா?). என்றார் யோகி பொன்னம்பலம். 

“ஓக்கே.. அவ்வளவுதான். செல்க.. புகழ் அடைக” என்று ஷாரிக்கை வாழ்த்தி அனுப்பினார் கமல். 

பிக்பாஸ் வீட்டில் மக்கள் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் ஒளிபரப்பாகின. ‘இந்தப் போட்டில நான் வின் பண்ணனும்றது ஷாரிக்கோட ஆசை.. அதை நிச்சயம் நான் பண்ணுவேன்” என்று காமிராவின் முன்னால் உறுதிமொழி ஏற்றார் ஐஸ்வர்யா. 

ஷாரிக்கின் பிரிவைப் பற்றி யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பேசிக் கொண்டிருந்தனர். ‘Best performer’ வாங்கியும் வெளியே போய்ட்டான். நல்ல தலைவிதின்னுதான் சொல்லணும். அவன் எதையும் பாஸிட்டிவ்வாதான் பார்ப்பான். நல்லபடியா அமையணும்” என்றார் யாஷிகா. ‘நல்ல ஃபேமிலி.. பிரெண்ட்ஸ் இருக்காங்க.. அவன்தான் வின் பண்ணுவான்னு நெனச்சேன்” என்றார் ஐஸ்வர்யா. 

அதற்குள்ளாகவே அடுத்த வார நாமினேஷனைப் பற்றி மக்கள் புறணி பேசத் துவங்கி விட்டார்கள். ரசம், பொறியல் என்று சங்கேத வார்த்தைகள் வேறு. நான் கூட சமையல் பற்றிதான் பேசுகிறார்கள் என்று தவறாக நினைத்து விட்டேன். “நான்தான் நெறய நாமினேஷன் வாங்குவேன். என்னை கார்னர் பண்றாங்க” என்றார் மஹத். ‘இருக்காது” என்று மறுத்தார் யாஷிகா. ‘நிச்சயம் சென்றாயனை நாமினேட் செய்வேன்’ என்றார் மஹத். ரசம் என்பது ரித்விகாவிற்கும் பொறியல் என்பது பொன்னம்பலத்திற்குமான கோர்ட் வேர்ட் போலிருக்கிறது. ‘ரசம் பண்ணுங்க’ என்று யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் வற்புறுத்தினார்கள். ‘சரி மிளகு ரசமாவே காரமா வெச்சிடறேன்” என்கிற முடிவிற்கு வந்தார் மஹத். “டேனி எத்தனை சாமர்த்தியசாலியா இருக்கான் பார்த்தியா..” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். (யப்பா.. வேர்ல்ட் பாலிட்டிக்ஸ்லாம் தோத்துடும் போலயே!). 

ந்

ரித்விகாவிற்கு பிறந்த நாள் என்பதால் அவருடைய குடும்பத்தார் கேக் அனுப்பியிருந்தார்கள். இந்தக் கொண்டாட்டத்துடன் இன்றைய நாள் முடிவடைந்தது. மக்களின் சதியாலோசனைகளைக் கவனிக்கும் போது அடுத்த வார நாமினேஷன் பட்டியல் வித்தியாசமாக இருக்கும் போலிருக்கிறது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

50 எபிசோடுகள் முடிந்து பிக்பாஸ் இன்டெர்வல் கட்டத்தை நெருங்கியிருக்கிறது. 'வீக்'கான சில போட்டியாளர்கள் நீக்கப்பட்டு, பிக்பாஸ் தன் அசுரபாய்ச்சலுக்கு தயாராக வேண்டிய தருணம். உள்ளிருக்கும் போட்டியாளர்களும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால், இனி ஆச்சர்யங்களை எதிர்ப்பார்க்கலாம். 

பாலாஜி தன்னை வசைவது குறித்து பிரச்னையில்லை என்று கமல் முன்பு சொன்ன சென்றாயன், ‘அவர் தன்னை அடித்து விடுவாரோ என்று கூட தோன்றியிருக்கிறது. அவர் கோபம் அப்படியிருக்கிறது” என்று கன்ஃபெஷன் ரூமில் பேசத் துவங்கியிருக்கிறார். நீல நரிகளின் சாயங்கள் ஒவ்வொன்றாக வெளுக்கத் துவங்கியிருக்கின்றன. நிஜ முகங்கள் இனி ஒவ்வொன்றாக வெளிப்படும்.