Published:Updated:

"சர்வதேச அரசியலை இரண்டே நொடியில் விளக்கிய கமல்!" - 'பிக் பாஸ்' 50

தார்மிக் லீ

`பிக் பாஸ்' கமல் ஸ்பெஷல்.

"சர்வதேச அரசியலை இரண்டே நொடியில் விளக்கிய கமல்!" - 'பிக் பாஸ்' 50
"சர்வதேச அரசியலை இரண்டே நொடியில் விளக்கிய கமல்!" - 'பிக் பாஸ்' 50

`என்ன செய்யப்போகிறார், கமல்ஹாசன்... எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாது!' என்ற காரசார வார்த்தைகளோடு என்ட்ரி கொடுத்தார், கமல். ஐஸ்வர்யா, பாலாஜிக்குக் குடைச்சல் கொடுத்தது, சென்றாயனின் டீயை வாஷ்பேஷனில் ஊற்றியது, பொன்னம்பலம் ஐஸ்வர்யாவின் கழுத்தைப் பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டது... என அந்த வாரம் முழுக்கப் பிரளயமே வெடிக்கும் அளவுக்குக் காட்சியளித்தது, பிக் பாஸ் வீடு. இவற்றை மையமாக வைத்து நமது `மய்ய' நாயகன் பேசியது என்ன?! ஒரு சின்ன அலசல்.

`எனக்கு பிக் பாஸ் வீட்டுக்குள்ள நடந்த பிரச்னைகள் எல்லாம் வியப்பைத் தரலை. இது உங்களுக்கு இவ்வளவு லேட்டா புரியுதே... எனக்கு அதுதான் வியப்பா இருக்கு' என மக்களைக் கேலி செய்துவிட்டு அகம் டிவி வழியே வீட்டுக்குள் சென்றார், ஆண்டவர். வார இறுதியில், கமலிடம் பேசுவதற்காகவும், மக்களிடம் கைத்தட்டல் பெறுவதற்காகவும் பல போட்டியாளர்களும் பயிற்சி எடுத்து முயற்சி செய்வார்கள். சில போட்டியாளர்கள், ஆடியன்ஸின் பல்ஸ் பார்த்துப் பேசுவது பின்வரும் நாள்களில் அப்பட்டமாகவே தெரிந்தது. இதை முதலில் ஆரம்பித்து வைத்தவர், பொன்னம்பலம். கடந்த வாரம் கமலிடம் டோஸ் வாங்கிய பிறகு, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். இந்த வாரம் அந்த லிஸ்டில் சிக்கியவர், சென்றாயன். `சொல்லுங்க... இந்த வாரம் என்ன நடந்தது?' என்று கமல் கேட்டதற்கு, `இந்தப் பூனையும் பால் குடிக்குமானு நெனைச்சோம். ஆனா, அந்தப் புள்ள பாயசமே குடிச்சிருச்சு' என்ற பழமொழியைக் கவுன்டர் என நினைத்துக் கொடுத்தார். ஆண்டவரிடம் இதெல்லாம் செல்லுபடியாகுமா? `இன்னும் வேற எதாவது பழமொழி இருக்கா, ஆடியன்ஸ்கிட்ட அப்லாஸ் வாங்குற மாதிரி?!' எனப் பொட்டில் அடித்ததுபோல சென்றாயனிடம் கேட்டார். 

பாலாஜி தனது `உண்ணாவிரத'ப் போராட்டத்தைப் பற்றிச் சொல்ல, `உண்டு முடித்தீர்களா..?' என்று நக்கல் தொனியில் கேட்டு, மக்களைப் பார்த்தார். இதற்கான விளக்கம் பின்னால் காட்டிய குறும்புப் படத்தில்தான் புரிந்தது. பின்னர், யாஷிகாவின் பிறந்தநாள் கொண்டாத்தைப் பற்றிய டாப்பிக் வந்தது. `அப்போ வெளிய சொல்றமாதிரி எதுவும் தப்பாலாம் நடக்கலை. எல்லாம் கரெக்டாதான் நடக்குது' என மீண்டும் நையாண்டி அடித்தார், கமல். அப்படியே யூ-டர்ன் அடித்து ஐஸ்வர்யாவின் பக்கம் திரும்பிய கமல், 'அந்தக் கதாபாத்திரத்துல இருந்து வெளியில வர கஷ்டப்பட்டேன்னு சொன்னீங்க. உள்ளே போனதுக்கும் அவ்ளோ கஷ்டப்பட்டீங்களா?' என நக்கல் மேல் நக்கலாக அடித்து துவம்சம் செய்துகொண்டிருந்தார். இவரிடம் இருக்கும் ஸ்பெஷாலிட்டியே இதுதான். அதாவது, யாரும் உலகத்தில் சரி கிடையாது. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோருக்குள்ளும் இருக்கும் மிருகம் வெளியே வந்துதான் தீரும். இதற்காகத் தன்னை நல்லவர்போல் சித்திரிக்க வேண்டும் என்பதுதான், ஆண்டவரின் 'மய்யமான' கருத்து. 

அதன் பின்னர் நாட்டில் நடக்கும் சர்வதேச அரசியலை இரண்டே நொடியில் விளக்கிவிட்டார், கமல். `ஒரு வெள்ளைக்காரன் என்னுடைய தோளைக் கிண்டல் பண்ணா, அது எனக்குக் கெட்டவார்த்தை. இது நிறவெறி (ரேஸிசம்). என்னைவிட உயரமானவன் என்னைப் பார்த்து `டேய் குள்ளா'னு கூப்பிட்டா, அது எனக்குக் கெட்டவார்த்தை. சாதியைச் சொல்லி என்னை எதாவது சொன்னால், எனக்கு அது கெட்டவார்த்தை. என்னை மாதிரி ஆளுக்கு எந்தமாதிரி சாதியைச் சொன்னாலும், கெட்டவாத்தை' என்று கடுங்கோபத்தோடு கூறி, மக்கள் பக்கம் திரும்பினார். எதிர்பார்த்ததுபோல அப்லாஸ் அள்ளியது. இந்த விஷயத்துக்குப் பார்வையாளர்ளோடு சேர்த்து போட்டியாளர்களும் கைதட்டினார்கள். தட்ஸ் கமல்ஹாசன்! இதன் பின்புதான் த்ரில்லிங்கான செக்மென்ட் ஒன்று நடந்தது. `கமல் சாருக்காகத்தான் நான் அமைதியா இருக்கேன்!' என்று ஐஸும் சென்டும் மாற்றி மாற்றி கம்பு சுத்த, `எனக்காக எல்லாம் நீங்க அமைதியா இருக்கவேண்டாம். நீங்க பண்றதைப் பண்ணுங்க' என்றபடி கோர்ட்டை கழட்டி, சட்டை மடித்துவிட்டார். தட் விரு விருமாண்டி... விருமாண்டி மொமன்ட்!

குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் பிணைப்பை எடுத்துரைத்த கமல், `என்னுடைய கோத்திரம், டார்வின் ருத்ரஸ்ய' என்று நம்மை நோக்கிக் கண் அடித்தார். இதுதான் அன்றைய `எக்ஸ்ப்ரெஷன் ஆஃப் தி டே'. `நான் ஒண்ணு சொல்றேன், தப்பா நினைக்காதீங்க. காமராஜர், அண்ணாதுரைனு உங்களுக்கு எத்தனைபேரைத் தெரியும். ஆனா, நான் உங்களுக்குக் காட்டுறேன், சுபாஷ் சந்திர போஸை. இதுதான் தமிழ்நாடு!' என்று ஐஸ்வர்யாவிடம் தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச்சொன்னார். இவ்வளவு சுருக்கமாக தமிழ்நாட்டின் பெருமையை கமல்ஹாசனைத் தவிர எவராலும் எடுத்துச்சொல்ல முடியாது. தமிழ்நாட்டில்தான் எந்தவித பாரபட்சமும் இல்லை. அதேபோல், எல்லோருடைய நட்பு வட்டத்திலும் ஒரு சுபாஷ் சந்திர போஸ் இருப்பார், ஒரு காந்தி இருப்பார். 

இதில், திடுக்கிடும் சம்பவம் போட்டியிலிருந்து ஷாரிக்கை எலிமினேட் செய்தது. `இது நம்ம லிஸ்ட்டுலே இல்லையே' என்பதுபோல் நடந்தது, கடந்த வாரத்தின் எவிக்‌ஷன் ப்ராசஸ். கன்டென்ட் கிடைக்கவில்லை என ஷாரிக்கை எலிமினேட் செய்துவிட்டனரோ என்னவோ!. ஆனால், இனி வரும் எவிக்‌ஷனில் கண்டிப்பாகச் சிக்கல் இருக்கும். காரணம், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது. தவிர, கமலின் பேச்சிலும் கூடுதல் காட்டம் இருக்கலாம். தொடர்ந்து பார்ப்போம்!