Published:Updated:

உப்புக்குச் சப்பாணி... குரங்கு மூஞ்சி... ஹிட்லர்..! பிக்பாஸ் பஞ்சாயத்துப் பரிதாபங்கள் #BiggBossTamil2

உப்புக்குச் சப்பாணி... குரங்கு மூஞ்சி... ஹிட்லர்..! பிக்பாஸ் பஞ்சாயத்துப் பரிதாபங்கள் #BiggBossTamil2
உப்புக்குச் சப்பாணி... குரங்கு மூஞ்சி... ஹிட்லர்..! பிக்பாஸ் பஞ்சாயத்துப் பரிதாபங்கள் #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்டை போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. ஆட்கள் குறையக் குறைய அவர்களின் சாயங்கள் அதிகமாக அம்பலமாகும். பகைமையும் குழுத்தன்மையும் அதிகரிக்கும். இரண்டு குழுவிலும் சாமர்த்தியமாக இயங்க முடியாமல், தாம் எந்தக் குழுவில் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தியாக வேண்டிய நெருக்கடிக்குள்ளாவார்கள். அதுதான் பிக் பாஸ் வீட்டில் தற்போது நிகழ்கிறது. தேர்தல் கால அரசியல் கூட்டணிகளைவிடவும் குழப்பமான சூழல் நிலவுகிறது. 

இரண்டு குழுக்களிலும் ஊடாடிக்கொண்டிருந்த ஜனனி, பாலாஜி குழுவில் தன்னைத் துல்லியமாக அடையாளப்படுத்திக்கொண்டுவிட்டார். ‘தமிழ்ப் பெண் ஜெயிக்க வேண்டும்’ என்கிற வகையில் ரித்விகாவுடனும் கூட்டணி. ‘யாஷிகா’ அணியைத் தவறாக வழிநடத்தி டேனி குளிர் காய்கிறார் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கொண்டிருந்த பொன்னம்பலத்திடம் பாலாஜியும் இணைந்திருக்கிறார். ஜனனியைப் போலவே இங்கும் அங்கும் அல்லாடிக்கொண்டிருக்கும் மஹத், யாஷிகா அணியின் பக்கம் சாய்வதற்கான சாத்தியம் அதிகம். இதற்கான காரணம், வெளிப்படை. 

தன்னைத் தொடர்ந்து அவமதித்து வருவதால் பாலாஜியிடமிருந்து சென்றாயன் விலகிவருகிறார். இது குறித்தான கோபங்கள் அவரிடம் வெளிப்படுகின்றன. இரண்டு குழுக்களிலும் சேர முடியாமல் மும்தாஜ் தவிக்கிறார். அவ்வப்போது சற்று முட்டிக்கொண்டாலும் பிரிக்க முடியாத கூட்டணியாக யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் சமாளித்து சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டும் சாமர்த்தியசாலி, டேனி. வைஷ்ணவி புறம் பேசும் தனி உலகில் இருக்கிறார்.

வயது, இனம், நிறம், வர்க்கம், குணாதிசயம் ஆகிய காரணங்களின் மீதாக குறுக்கும் நெடுக்குமாகப் பல கோணங்களில் இந்தக் கூட்டணிகள் உடைவதும் பிரிவதுமாக இருப்பதைக் காண முடிகிறது. இந்தச் சூழலில் மேலும் சுவாரஸ்யத்தை உண்டாக்குவது புதிய போட்டியாளர்களின் வருகையால்தான் நிகழ முடியும். 

**

பிக் பாஸ் ஒருவேளை விஜய் ஃபேனா இருப்பார் போல! வேக் சாங்காகத் தொடர்ந்து விஜய் பாடல்களாகப் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்த லிஸ்டில் 50-வது நாளான இன்று ‘சில்லாக்ஸ்... சில்லாக்ஸ்' பாடலைப் போட்டு மக்களை எழுப்பிவிட்டார். மனித மரங்கள் இதற்காக நடனமாடி கும்மாளம் போட்டன. ‘குட்மார்னிங் ஷாரிக்’ என்று ஐஸ்வர்யா சொன்னது மெல்லிய நெகிழ்வை உண்டாக்கியது. 

வீட்டின் பணிகளுக்காக அணி பிரிக்கும் வேலையை தலைவி யாஷிகா மேற்கொண்டார். கமல் சொன்னாலும் சொல்லிவிட்டார், சென்றாயனை சமையல் டீமில் போட்டேயாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். உதவியாளர் என்னும் நிலையிலிருந்து பிரமோஷன் தந்து முழுச் சமையற்காரராகச் சென்றாயனை அமர்த்தியிருக்கிறார், யாஷிகா. பாத்திரம் சுத்தம் செய்யும் அணியில் பாலாஜி, டேனி மற்றும் வைஷ்ணவி இருப்பார்கள். பாத்ரூம் சுத்தம் செய்வதற்கென்றே நேர்ந்து விடப்பட்ட சென்றாயன், சமையல் அணியில் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டு ‘நீயா... நானா...’ என்று குழப்பமாகப் பேசிக்கொண்டார்கள். 

காலை உணவு முடிந்தவுடனே நாமினேஷன் வைபவம் உடனே சுடச்சுட துவங்கியது. பழைய பாணியில் கன்ஃபெஷன் ரூமுக்குத் தனியாகச் சென்று 2 நபர்களை தகுந்த காரணங்களுடன் நாமினேட் செய்யவேண்டும். ‘தடுப்பூசி’ போடப்பட்டிருப்பதால் ஐஸ்வர்யாவைக் குறிப்பிட முடியாது. போலவே வீட்டின் தலைவி யாஷிகாவையும் குறிப்பிட முடியாது. 

முதலில் அழைக்கப்பட்டவர், மும்தாஜ். முட்டி வலியில் அமர்ந்திருந்தவர் ‘அய்யோ, நானா... யா... அல்லா’ என்று முனகியபடி கிளம்பிச் சென்றார். `சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. முரட்டுத்தனமாக இருக்கிறார்’ என்கிற காரணத்தைச் சொல்லி இவர் தேர்ந்தெடுத்தவர், சென்றாயன்.  ‘டாஸ்க் செய்வதில் மேனர்ஸ் இல்லை. கத்திப் பேசுகிறார்’ என்ற காரணத்தினால் மஹத். 

`பொதுவாகவே அவருக்குக் கோபம் அதிகம் வருகிறது என்றாலும் சமீபமாக என் மீது நிறைய கோபம் வருவதாகத் தோன்றுகிறது. ‘அடித்து விடுவாரோ’ என்று கூட சமயங்களில் பயம் வந்திருக்கிறது’ என்ற சென்றாயன், இதற்காக மஹத்தைத் தேர்ந்தெடுத்தார். `சீக்ரெட் ரூம் போய் வந்தும் திருந்தலை. மறுபடியும் அதே மாதிரி புறம் பேசிக்கொண்டிருக்கிறார்’ என்ற காரணம் வைஷ்ணவிக்கு. (காந்தி, புத்தர், இயேசு ரேஞ்சுக்கு அன்னிக்கு வைஷ்ணவி பேசிட்டு இருந்தாங்களே!).

‘டாஸ்க்கின் விதிகள் புரியாமல் சிரமப்படுகிறார்’ என்கிற காரணத்தினால் சென்றாயன் மீது அதிக நாமினேஷன்கள் வந்து விழுந்தன. இதே காரணத்தோடு ஜனனி ஆரம்பித்தார். ‘கெட்ட வார்த்தையும் புறமும் பேசுகிறார்’ என்கிற காரணத்தினால் பாலாஜியையும் நாமினேஷன் செய்தார். 

பாலாஜிக்கு டேனியின் மீது நீண்ட நாள்களாகவே புகைச்சல். எனவே ‘சேஃப் கேம் ஆடுகிறார்’ என்று டேனியைத் தேர்வு செய்தார்.  இன்னொரு தேர்வாக, சென்றாயனை பாலாஜி தேர்ந்தெடுத்ததில் ஒருபக்கம் நேர்மையும் இன்னொரு பக்கம் துரோகமும் கலந்து தென்பட்டன. அறிவுரையை மீறியும் தனது வெகுளித்தனமான முகமூடியை சென்றாயன் தொடர்ந்து அணிந்திருக்கிறாராம். 

‘டாஸ்க் புரிஞ்சுக்க மாட்டேன்றார்’ என்கிற அதே காரணத்தைச் சொல்லி சென்றாயனை நாமினேட் செய்தார், ரித்விகா. என்னதான் இருந்தாலும் ஐஸ்வா்யாவை அடிக்க கை ஓங்கினது தவறுதானாம். இதே காரணம்தான் பொன்னம்பலத்துக்கும். ஐஸ்வர்யாவை முரட்டுத்தனமாக கையாண்டது. உடல்நிலை காரணமாக இவரால் டாஸ்க்குகளை சிறப்பாகச் செய்ய முடியவில்லையாம். 

ரித்விகா சொன்ன அதே காரணத்தைச் சொல்லி சென்றாயனைத் தேர்வு செய்தார், மஹத். பொன்னம்பலத்துக்காகச் சொன்ன காரணமும் அதே. ‘டாஸ்க்குகளை தவறாக விளையாடுகிறாராம். சென்றாயனுக்கும் தப்புத்தப்பாக ஐடியா தருகிறாராம். (முன்னமே பேசி வெச்சிக்கிட்டிங்களோ?!). 

பொன்னம்பலம் குறிப்பிட்ட காரணம் வித்தியாசமாக இருந்தது. பாலாஜி சாப்பிடவில்லை என்கிற வருத்தத்தில் மற்றவர்கள் இருக்க, டேனியும் சென்றாயனும் ரகசியமாக உணவு எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவில்லை என்றார். (மிக மொக்கையான காரணம்).

‘விளையாட்டுகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்கிற காரணத்தைச் சென்றாயனுக்கும் ‘Foul game, physical violence’ ஆகிய காரணங்களை பொன்னம்பலத்துக்கும் சொல்லி நாமினேட் செய்தார், வைஷ்ணவி. 

‘இரண்டு பக்கமும் இருக்கிறார். மைண்ட் கேம் விளையாடுகிறார்’ என்கிற காரணத்தைச் சொல்லி ஜனனியை நாமினேட் செய்த ஐஸ்வர்யா, “இவரோட உத்தி என்னன்னு புரியலை. இன்னமும் கூட முழுதாக வெளிவரவில்லை’ என்கிற காரணத்தினால் ரித்விகாவைத் தேர்வு செய்தார். 

“இன்னொரு வாய்ப்பு பரிசாக கிடைத்தும், வைஷ்ணவி அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை’ என்கிற காரணத்தைச் சொன்னார் டேனி.  ‘task involvement இல்ல, ரெண்டு பக்கமும் பேசறாங்க.. உண்மை இல்ல. பொய்யான உறவுகள் இருக்கு’ போன்ற காரணங்களைச் சொல்லி ஜனனியைத் தேர்வு செய்தார். 

நாமினேஷன் முடிவுகள் வந்தன. சென்றாயன் மற்றும் ரெகுலர் கஷ்டமர் ஆன பொன்னம்பலம் என்கிற சுருக்கமான பட்டியல். 

எவரேனும் ஒருவரை நேரடியாக எவிக்ஷன் பட்டியலுக்கு அனுப்பும் அதிகாரம், வீட்டின் தலைவியான யாஷிகாவுக்கு வழங்கப்பட்டது. அவர் தேர்ந்தெடுத்தது ஜனனியை. “சோம்பேறித்தனமாக இருக்கிறாராம். விளையாட்டுகளில் உற்சாகமாகப் பங்கெடுப்பதில்லையாம்”. கோயிலுக்குச் சென்று விட்டு வந்த தெய்விக களையுடன் அமர்ந்திருந்த ஜனனி தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். ஆக பொன்னம்பலம், சென்றாயன் மற்றும் ஜனனி ஆகியோர் இந்த வார எவிக்ஷன் பட்டியலில் உள்ளார்கள். 

**

தனித்தனியாக குழுவாக அமர்ந்து மறுபடியும் புறம் பேசத் துவங்கினார்கள். (வேற என்னதான் பண்ண முடியும்?!) “அவங்க பிளான் என்னான்னு புரியுதா?” என்று ஆரம்பித்தார் ரித்விகா. “ஆமாம்.. எனக்கு ‘வெஜ் பிரைட் ரைஸ்’னு கோடு வேர்டு வெச்சிருக்காங்க. புத்திசாலிங்கன்னு நெனச்சிட்டு இருக்காங்க. எல்லாமே மக்கள் கையில்தானே இருக்கு. நம்ம ரெண்டு பேரையும்தான் டார்கெட் பண்ணியிருக்காங்க. இந்த வாரம் நான். அடுத்த வாரம் நீயா இருக்கும். ஆனா .. பாவம்.. சித்தப்ஸை ஏன் வாரா வாரம் நாமினேட் செஞ்சு இம்சைப்படுத்தறாங்கன்னே தெரியலை” என்று ஆதங்கப்பட்டார் ஜனனி. 

அடுத்த டாஸ்க் ‘புகார் பெட்டி’. ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சக போட்டியாளர்களால் நிகழ்ந்த பிரச்னைகளைப் பற்றி சம்பந்தப்பட்டவரின் பெயர் குறிப்பிட்டு ஒவ்வொருவரும் குறிப்புகள் எழுத வேண்டும். தங்களின் பெயரை அடியில் குறிப்பிடக் கூடாது. இதற்கான பெட்டியில் புகாரைப் போட்டு விட்டு அங்கிருக்கும் மணியை அடிக்க வேண்டும். (பெரிய.. மனுநீதி சோழன் பரம்பரை..). இதற்கு நடுவராக யாஷிகா இருப்பார். எனவே, நடுவரைப் பற்றி புகார் எழுதக் கூடாது. (இது மட்டும் நியாயமற்ற விதி).

“முதல் பிரச்னை மும்தாஜ், இரண்டாம் பிரச்னை டேனி, மூன்றாம் பிரச்னை பாலாஜி” என்று தனக்குத் தமிழ் எழுத வராது என்பதால் மஹத்திடம் சொல்லி எழுத வைத்துக்கொண்டிருந்தார் யாஷிகா. 

“அவங்க நாலு பேருதான் பைனல்ல வரணும்ன்ற குறிக்கோளோட இருக்காங்க.. எனக்கு கோடு வேர்டு வெச்சிருக்காங்க.. இந்த டேனி நாமினேஷன்ல வர மாட்டேன்றாரே..” என்று பாலாஜி, ஜனனி, ரித்விகா உள்ளிட்ட குழு பேசிக் கொண்டிருந்தது. ‘கமல் சார் பேசி இதை சால்வ் பண்ணி விட்டார் என்றாலும் (அப்படியா, இந்தச் சம்பவம் எப்போது நடந்தது?”) ஐஸ்வர்யாவின் வசையால் நான் புண்பட்டதைப் பற்றிப் புகார் எழுதப் போகிறேன்” என்றார் ரித்விகா. “எழுது’ என்று மற்றவர்கள் ஆதரவு தந்தார்கள். 

‘அவங்க கேம் பிளான் போடறாங்க. ஆனா முடிவு மக்கள் கையில்தான் இருக்கு” என்று மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார் ஜனனி. “நம்மள கழிச்சிக் கட்டினா போட்டி குறையும்னு நெனக்கறாங்க” என்பதும் அவருடைய புகார் “இந்த டேனிக்கு ஆடியன்ஸ் சப்போர்ட் இருக்கு. ஆனா அது பாசிட்டிவ்வா.. நெகட்டிவ்வான்னு தெரியலை.” என்று இதுவரை டேனி எவிக்ஷன் பட்டியலில் வராததைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். 

“இந்த மஹத் பய ரெண்டு பக்கமும் இருக்கான். அவனுக்குப் புரியவே மாட்டேங்குது. ‘என் முதுகில் சவாரி பண்றாங்க’ன்னு சொல்றான். ஆனா மறுபடியும் அங்கதான் போறான். சென்றாயனுக்குக் கொஞ்சம் சுயநலம் இருக்கு. பாராட்டினா ஏத்துக்கிறார். ஆனா கொஞ்சம் விமர்சனம் செய்தா கூட பயங்கரமா கோபம் வந்துடுது” என்பது போல் அவர்களுடைய உரையாடல் நீண்டது. 

சிலரின் கடிதங்கள் குளோசப்பில் காட்டப்பட்டதில் பலருக்குத் தமிழ் ஒழுங்காக எழுத வரவில்லை என்பது தெரிந்தது. பாலாஜியின் கையெழுத்து சற்றுச் சுமாராக இருந்தது. 

மும்தாஜின் உடல்நிலை காரணமாக அவர் சாப்பிடாமல் வைத்திருந்த உணவை பொன்னம்பலத்துக்கு வழங்கினார் டேனி. இதற்கு பொன்னம்பலம் மிகையாகப் பதறிப் போனார். ‘வேணாம்ப்பா..அவங்க அப்புறம் சொல்லிக் காட்டுவாங்க.. பாவத்தின் சம்பளம் இது’ என்று மறுக்க முயன்றார்.

‘Get Set Go’ என்கிற அடுத்த பகுதி சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. ஆனால் இதன் விதிமுறைகள்தாம் விநோதமாக இருந்தன. வீட்டில் உள்ளவர்கள் ஐந்து நபர்களைக் கொண்ட இரு அணிகளாகப் பிரிக்கப்படுவார்கள். ஒருவர் பகடைக்காயை உருட்டுவார். ஸ்பின் வீல் முள் நிற்கும் தலைவிதியின் படி, பகடைக்காயில் வந்த எண்ணிக்கையின் அடிப்படையில் ஒருவர் முன்னே நகர்வார் அல்லது பின்னே செல்வார்.

இதை முடித்ததும் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு சூட்கேஸ்களில் தங்களின் பொருள்களை நிரப்பி, இன்னோர் அறையில் இருக்கும் கார்களை நோக்கி ஓட வேண்டும். அங்கிருக்கும் கடிதத்தைச் சத்தமாகப் படித்து விட்டு காருக்குள் தங்களை அடைத்துக் கொள்ள வேண்டும். (எந்தவொரு சம்பந்தமும் இல்லாத குழப்பமான விளையாட்டு. ‘நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப் போகப் போறேன்’ மாதிரியே இருந்தது). 

பகடைக்காய் விளையாட்டில் டேனியின் அணியின் முதலில் ஜெயித்து விட அவர்கள் ஆவேசமாக ஸ்டோர் ரூமுக்கு ஓடி பொருள்களை நிரப்பி இன்னமும் ஆவேசமாக கத்திக் கொண்டு கார்களை நோக்கி ஓடினார்கள். இந்தப் பதற்றத்தில் அவர்கள் செய்த முக்கியமான தவறு, கடிதத்தை அனைவரும் இணைந்து படிக்க வேண்டும் என்கிற விதியை மறந்தது. இதற்குள் எதிரணியும் வந்து விட, இவர்கள் ஒவ்வொருவராக காரில் இறங்கி சேர்ந்து கடிதத்தை அரையும் குறையுமாக வாசித்து விட்டு மறுபடியும் காருக்குச் சென்றார்கள். அதற்குள் எதிரணி முடித்து விட்ட காரணத்தினாலேயே எதிரணி வென்றது. திறமையாக விளையாடியும் டேனி அணி தோற்றது. ‘பாலாஜி சீக்கிரம் வாங்க’ என்று எவரோ அவசரப்படுத்திய போது.. ‘வேஷ்டி அவுந்து போச்சி’ என்று சொல்லிக்கொண்டே பாலாஜி ஓடியது நகைச்சுவை. 

**

‘புகார் பெட்டி’ டாஸ்க்கின் அடுத்த பகுதி இது. சக போட்டியாளர்கள் தந்த பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கப்படும். இதற்கு நடுவராக யாஷிகா இருப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளிக் கூண்டில் ஏறி, தன் தரப்பு நியாயங்களை விளக்கி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அல்லது ஆதரவாக மற்றவர்கள் வந்து சாட்சியம் சொல்லலாம். கடிதம் எழுதப்பட்ட விதத்திலிருந்து அதை யார் எழுதியிருப்பார் என்று யூகிக்க வேண்டும். 

குற்றம் சாட்டப்பட்டவர் சொல்லும் விஷயங்களில் ‘உண்மைத்தன்மை’ இல்லை என்று நடுவர் கருதினால் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கலாம். எவ்விதமான தண்டனை என்பதை நடுவர் முடிவு செய்யலாம். 

போட்டியாளர்களுக்குள் மோதலையும் பகைமையையும் தூண்டி விடும் பிக்பாஸின் வழக்கமான உத்தி இது. ஏற்கெனவே அவர்களை மோத விட்டு விட்டு, எரியும் நெருப்பில் எண்ணைய் ஊற்றும் விதமாக, பிரச்னைகள் தொடர்பாக விவாதங்களை உருவாக்குவதின் மூலம் மேலதிகமாக மோதல்களை ஏற்படுத்தும் உத்தி இது. 

இதைப் புரிந்து கொள்ளும் போட்டியாளர்கள் சாமர்த்தியமாக இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால், உணர்ச்சிக்குப் பலியாகும் நபர்கள் அதிக சேதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்னொரு வகையில், தங்களை உறுத்திக்கொண்டிருந்த பிரச்னைகளை பொதுவில் பேசுவதின் மூலம் அவர்களுக்கு ஆசுவாசம் கிடைக்கும் நேர்மறைத்தன்மையும் இதில் உண்டு. 

`இதைப்பற்றி எப்படி எழுதுவது’ என்கிற குழப்பத்தை எனக்கு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பகுதியில் போட்டியாளர்களுக்குள் பல ஆவேசமான உரையாடல்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தன. சந்தைக் கடை போல் பேசிக்கொண்டார்கள். நடுவர் இவர்களை திறமையாகக் கையாண்டு அமைதிப்படுத்தவில்லை. பல சமயங்களில் மொண்ணையான தீர்ப்புகளை வழங்கினார். குறிப்பாக ரித்விகா முன்வைத்த புகாரில் யாஷிகாவின் தீர்ப்பு வெளிப்படையான பாரபட்சத்துடன் ஐஸ்வர்யாவுக்குச் சாதகமாக அமைந்திருந்தது. 

முதல் கடிதம் ‘பொன்னம்பலம் ஐயா’ என்று துவங்கியிருந்த போதே அது யாரால் எழுதப்பட்டிருக்கும் என்பதை எளிதாக உணர முடிந்தது. இதற்குப் பதிலாக ‘இப்படிக்கு மும்தாஜ்’ என்றே வெளிப்படையாகப் போட்டிருக்கலாம். ‘நீங்க என்னை ஹர்ட் பண்ணியிருக்கீங்க. எல்லாவற்றையும் தவறாகவே புரிந்துகொள்கிறீர்கள். முரட்டுத்தனமாக பதில் சொல்கிறீர்கள்’ என்பது போன்ற புகார்கள் கடிதத்தில் இருந்தன. 

குற்றவாளிக் கூண்டுக்குள் வந்த பொன்னம்பலம், இந்தக் கடிதத்தை எழுதியவர் மும்தாஜ் என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விட்டார். ‘உணவு தரும் போது நாலு பேர் எதிரில் சொல்லிக்காட்டுவது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று பழைய பல்லவியை இன்னமும் பாடினார். “நான் சமைச்சா பொன்னம்பலம் ஐயா குறைவாகச் சாப்பிடுகிறார் என்பது எனக்கு வேதனையளிக்கிறது. சமையல் அறை பக்கம் போகவே பயமாக இருக்கிறது. என்னால் ஒருவர் பசியாக இருக்கிறார் என்பதை என்னால் தாங்க முடியவில்லை. நான் சொல்றதையும் அவர் தப்பாவே புரிஞ்சுக்கிறார்” என்பது மும்தாஜின் ஆதங்கமாக இருந்தது. ‘இனிமே அவரைக் கட்டாயப்படுத்தாதீங்க..” என்று யாஷிகா நடுவர் சம்பந்தமில்லாமல் அபிப்பிராயம் சொல்ல, ‘அவர் பெரியவர். எனக்கு மரியாதை இருக்கு. இனிமே எதையும் பேசப் போறதில்லை’ என்ற முடிவுக்கு வந்தார் மும்தாஜ். 

அடுத்ததாக, எட்டுப்பட்டி கிராமத்தையும் கூண்டுக்குள் கொண்டு வந்தார் மும்தாஜ். கூண்டுக்குள் நிற்க இடமில்லாமல் புட்போர்ட் அடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ‘கார்கில் வார்’ டாஸ்க்கின் போது நான் சாப்பிடலை. அது என் பிரச்னை. ஆனா ‘பிடிவாதம், ஈகோ.. அது இது.. ன்னு ரொம்ப ரூடா டைட்டில் கொடுத்தீங்க.. என்னை கார்னர் பண்ணீங்க. நான் ஸ்ட்ராங்கா இருந்து ஹாண்டில் பண்ணேன். ஐஸ்வர்யா சர்வாதிகாரி டாஸ்க் முடிச்சுட்டு வந்து அழுத போது அவங்களுக்கு ஆதரவா நின்னீங்க. நல்லது.. ஆனா எனக்கு அப்படி இல்லை. எனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?” என்பது அவர் தங்லீஷில் எழுதிய கடிதத்தின் சாரம். 

‘நான் அந்தப் பொருளில் சொல்லவில்லை. உண்மையில் உங்களுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொண்டோம். கமல் சார் கேட்டதால் சில விஷயங்கள் சொல்லப்பட்டது’ என்பது போல் பேசி ஜனனி, ரித்விகா ஆகியோர் தற்காத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். “நீங்கள் கார்னர் ஆயிட்டிங்கன்னு ஃபீல் பண்ணா நான் ஸாரி சொல்ல மாட்டேன். ஏன்னா அந்தச் சமயத்தில் சூழல் அப்படி இருந்தது. நீங்க அப்படி நடந்ததால நானும் அப்படி நடந்ததேன்.’ என்பதை அழுத்தமாகத் தெரிவித்தார் மஹத். 

“போன வாரம் எனக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டீங்க.. அழகா இருந்தீங்க.. ஆனால் முன்வாரங்களில் என்னை நிறைய காயப்படுத்தியிருக்கீங்க. எப்பவுமே அழகா நடந்திருந்தா உங்க பின்னாடி நின்னிருப்போம்’ என்றார் சென்றாயன். ‘கார்னர் பண்றாங்க’ன்ற பேர்ல ஒருத்தர் தனியா நின்னா அவங்க ஃபேமஸ் ஆக முடியாது’ என்பது போல் மஹத் சம்பந்தமில்லாமல் பேச, ‘out of context’ என்று ஒரே வரியில் அவரை ஆஃப் செய்தார் மும்தாஜ். ‘டீம் கேப்டனா.. நீங்க விட்டுக் கொடுத்து போயிருந்தா நல்லாயிருந்திருக்கும்’ என்று பாலாஜி சொன்னது சரியானது. 

‘ஒரு புறாவுக்கு அக்கப் போரா?,” என்பது போல் ஒரு டீக்காக மும்தாஜ் அப்போது செய்த அழிச்சாட்டியம் ஓவர். அப்போது நடந்தது டீ தொடர்பான பிரச்னை என்பதை விட ஜனனிக்கும் மும்தாஜுக்கும் நடந்த ஈகோ பிரச்னை எனலாம். 

“மும்தாஜ் சாப்பிடாமல் இருப்பது அவருடைய பிரச்னை. இதனால் அவருடைய ஆரோக்கியம்தான் பாதிக்கப்படப் போகிறது. ஆனால் அவருடைய இந்த ஈகோ விஷயம், அணியையும் பாதிக்கும் அபாயம் இருந்தது. இந்தப் பிடிவாதத்தை அவர் கைவிட்டிருக்கலாம். நீங்களும் இறங்கி வந்திருக்கலாம்” என்று மய்யமாக தீர்ப்பு சொன்னார் யாஷிகா.

இப்போது எதிரணியிலிருந்து விலகி மும்தாஜுக்கு ஆதரவாக வந்து நின்றார் பாலாஜி.  ‘இங்க நாம நூறு நாள் இருக்கப் போறதில்லை. ஐஸ்வர்யாவும் முழுக்க ஹிட்லரா இருக்கப் போறதில்லை. (பார்றா!) நானும் ரித்விகாவும் வந்து உங்க கிட்ட கேட்டோம். டீ பிரச்னைல நீங்க இறங்கி வந்திருக்கலாமே?” என்று ஜனனியை நோக்கி அவர் கேட்க, “ஆம். இறங்கி வந்திருக்கலாம்தான்’ என்றார் ஜனனி.

இப்போது டேனியும் மும்தாஜுக்கு ஆதரவாகப் பேச வந்தார். “மஹத்துக்கும் ஷாரிக்குக்கும் உணவு ஊட்டிய மும்தாஜ், சென்றாயனுக்கு உணவு ஊட்டி விட முன்பு தயங்கினார். (comfort இல்ல என்றார் மும்தாஜ்). எனவே அவரை சோதிப்பதற்காகவே, சென்றாயனுக்கு உணவு ஊட்டி விடும் டாஸ்க்கைப் பிறகு சேர்த்தோம். அதற்கு மும்தாஜ் ஒப்புக் கொண்டார். எனவே அவரை ‘பிடிவாதம்’ என்கிற கேட்டகிரியில் முழுவதுமாகச் சேர்க்க முடியாது’ என்று சொல்ல அனைவரும் கைத்தட்டினார்கள். “நீங்களும் மும்தாஜுக்கு விட்டுத்தந்திருக்கலாம். சரி.. இனிமே யாரையும் முத்திரை குத்தாதீங்க’ என்று தீர்ப்பெழுதினார் யாஷிகா. 

“போன டாஸ்க்ல என்னை ஐஸ்வர்யா நாய் –ன்னு சொல்லிட்டாங்க’ என்கிற கடிதத்தை வாசித்தவுடனே ‘எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக்கால்’ என்பது மாதிரி அது சென்றாயனால் எழுதப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ‘அந்த டாஸ்க்ல நான் ஹிட்லர் காரெக்ட்டருக்குள்ளயே போயிட்டேன். அதனால் அப்படி ஆச்சு. இப்ப நான் ஐஸ்வர்யா. அப்படி உங்களை சொல்ல மாட்டேன். இருந்தாலும் இப்ப ஸாரி..’ என்று நகைக்கடை பொம்மை மாதிரி ஐஸ்வர்யா கும்பிட்டதும்.. ‘என்னென்னமோ பேசலாம்னு வந்தேன். இந்தப் புள்ள இப்படி பண்ணிடுச்சே.. போ புள்ள.. நானும் உன்னைத் திட்டிட்டேன்.. மாப்பு’ என்று வெட்கத்துடன் விலகினார் சென்றாயன். ‘அவ்ளதான் கேஸ் முடிஞ்சது’ வந்துடு” என்பது போல் பொன்னம்பலம் கைகாட்டினார். பெண்ணென்றால் பேயே இரங்கும் என்கிறார்கள். சென்றாயன் எந்த மூலைக்கு?

‘மஹத் என் மனசு வலிக்கற மாதிரி நடந்துக்கறாரு” என்பது சென்றாயனின் அடுத்த புகார். ‘என்ன மச்சான் பிரச்னை” என்று ஜாலியாகக் கூண்குக்குள் வந்தார் மஹத். “மத்தவங்க கிட்டல்லாம் ஃபிரெண்டா நடந்துக்கற. என் கிட்டயும் அப்படித்தான் இருக்கற. ஆனா சமயங்கள்ல வித்தியாசமா நடந்துக்கற. மனசு காயப்படுது.” என்றார் சென்றாயன். 

“அப்படின்னா மன்னிச்சுடு மாப்ள.. ஆனா ஃப்ரெண்ட்ஸூக்குள்ள நான் அப்படித்தான் பேசுவேன். நான் ஃப்ரெண்டா இருக்கணுமா.. தள்ளி நிக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ:” என்றார் மஹத். ‘ ஃப்ரெண்டாதான் இருக்கணும்” என்று சென்றாயன் சொன்னதும்.. ‘அப்ப.. வெளியே வாடா பக்கி..”என்று மஹத் சொல்ல.. “நீயும் வாடா லூஸூ” என்று சென்றாயன் சொல்ல கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆண் நண்பர்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை எத்தனை எளிதாக தீர்த்துக்கொள்கிறார்கள்!. ஆனால்.. பெண்களின் பிரச்னைகளை அவர்களுக்குள் தீர்த்துக் கொள்வதற்குள் பல தொலைக்காட்சி தொடர்கள் முடிவடைந்து விடுகின்றன. என்றாலும் அவர்களின் பிரச்னைகள் முடிவதில்லை. 

‘டேனி குழு ஏற்படுத்தி குளிர் காய்கிறார். நல்லவர் போல் நடிக்கிறார்’ என்றொரு கடிதம் வந்தது. டேனிக்கு எதிராக ஜனனி பேச வந்தார். “இதுக்கு முன்னாடி டேனியைப் பத்தி நான் கூட என்னமோன்னு நெனச்சேன். ஆனா இன்னிக்கு மத்தியானம் ஒரு விஷயம் நடந்தது. யாரை எலிமினேட் பண்ணலாம்னு பேசிட்டு இருந்தீங்க.. என்னை ‘வெஜ் பிரைட் ரைஸ்’னு code word-ல சொன்னீங்க.. நாமதான் ஃபைனல் வரணும்னு பேசிட்டு இருந்தீங்க” என்கிற புகாருக்கு “நான் எப்பவுமே அப்படிப் பண்ணுவேன். எனக்கு செளகரியமா இருக்கறவங்க கிட்டதான் நான் பழக முடியும். பாலாஜி, பொன்னம்பலம்.. லாம் என் கிட்ட இருந்த பிரச்னைகளை சொன்னாங்க. மாத்திக்கிட்டேன்.” என்று விளக்கமளித்தார் டேனி.

கடிதத்தை எழுதிய பாலாஜியும் டேனிக்கு எதிராக நின்று பேசினார். “பல்வேறு காரணங்களால் இங்கு குழு ஏற்படுகிறது. அதுக்கு நீங்க காரணமா இருக்கீங்கன்னு தோணுது. அப்ப மத்தவங்க சொந்தமாப் பேசறாங்களா.. இல்லைன்னா.. யாராவது சொல்லிக் கொடுத்து பேசறாங்களான்னு சந்தேகம் வருது” என்றார். 

ஜனனியும் இதே போன்றதொரு தொனியிலான கடிதத்தை எழுதியிருந்தார். “நான் இங்க ஏதாவது கேங் ஏற்படுத்தியிருக்கனா.. சொல்லுங்க” என்று கேட்டார் டேனி. பொன்னம்பலம் முன் வந்து டேனியின் மீதுள்ள நீண்ட கால புகாரைச் சொல்லிக் கொண்டிருந்தார். “ஐஸ்வர்யா கொஞ்ச நாள் முன்னாடி வந்து.. நீங்க எங்க கேங்ல சேர்ந்துட்டீங்க’ன்னு சொன்னாங்க.. அப்ப என்னா அர்த்தம்?” என்றார். அதற்கு விளக்கமளிக்க வந்த ஐஸ்வர்யா ‘கேங்’ என்ற வார்த்தையைச் சொல்லி விட “மாட்டினீங்களா?” என்ற மாதிரி சிரித்தார் பொன்னம்பலம். ‘அதுல என் பேரு எங்க வந்தது?” என்றார் டேனி. “நான் இந்த வீட்ல தனிமைப்படுத்தப்பட்ட போது ரெண்டு பேர் வந்து எனக்கு மென்ட்டல் சப்போர்ட் கொடுத்தாங்க. ஒண்ணு ஐஸ்வர்யா. இன்னொண்ணு யாஷிகா. அதுக்காக அவங்களுக்கு எப்பவும் நன்றியுடையவனா இருப்பேன். மத்தபடி கேங் சேர்க்கறேன்னு யாராவது சொன்னா சொல்லிட்டுப் போகட்டும். எனக்குக் கவலை கிடையாது” என்று ஆணித்தரமாகச் சொல்லி விட்டுச் சென்றார் டேனி. புகார்களை எதிர்கொள்வதில் டேனிக்குள்ள சாமர்த்தியமும் நிதானமும் மற்றவர்களிடம் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். 

அடுத்தது முக்கியமான, அதிகம் சர்ச்சைக்குள்ளான பிரச்னை. தன்னைக் குறித்து ஐஸ்வர்யா சொன்ன சில வார்த்தைகள் தன்னை விடவும் தன் பெற்றோர்களை அதிகம் வருத்தியிருக்கலாம் என்கிற நியாயமான பிரச்னையை முன்வைத்தார் ரித்விகா. “உங்க பெற்றோர்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்” என்று தன் விளக்கத்தைத் துவங்கிய ஐஸ்வர்யா.. “என் சிலையை உடைப்பேன் என்று என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்களுடன் இணைந்து நீங்கள் சிரித்துக்கொண்டிருந்தீர்கள்” என்று ஐஸ்வர்யா நியாயப்படுத்த முயன்றது மழுப்பலானது. 
“ஐஸ்வர்யா சொன்னது தப்புதான். ஆனா அவங்களுக்குச் சில வார்த்தைகளோட அர்த்தம் தெரியாது.” என்பது போல் சொல்லி தன் தோழியைக் காப்பாற்ற முயன்றார் நீதி தவறிய நடுவர் யாஷிகா. “நீங்க வேற வார்த்தையைச் சொல்லியிருக்கலாம்’ என்று சென்றாயனும் ரித்விகாவுக்கு ஆதரவாக வந்தார். 

‘நண்பர்களுக்குள் ‘குரங்கு மூஞ்சி’ன்னு சொல்றது இயல்பா இருக்கலாம். ஆனா அதையே பிடிக்காதவங்க கிட்ட சொன்னா பிரச்னைதான். ஆனா அவ டாஸ்க்குகுள்ள நின்னு சொன்னா” என்று இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் குழப்பமாக ஒரு கருத்தைச் சொல்லி விட்டுச் சென்றார் மஹத். 

இத்தனை முயன்று நியாயப்படுத்துவற்குப் பதிலாக, ஐஸ்வர்யா ரித்விகாவிடம் நேரடியாக மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்னை இலகுவாக முடிந்திருக்கும். பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கத் தயாராக இருந்த ஐஸ்வர்யா, அதே விஷயத்தை ரித்விகாவுக்கும் செய்திருக்கலாம். 

‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறீர்கள். இனிமேல் நேரடியாக எதையும் சொல்ல வேண்டும்’ என்கிற புகாரை டேனியின் மீது வைத்தார் ரித்விகா. டேனியும் அதை ஒப்புக் கொண்டார்.

சென்றாயன் மீதான தன் புகாரை முன்வைத்தார் வைஷ்ணவி. ‘இவர் வெகுளி என்று நான் முதலில் நம்பிக்கொண்டிருந்தேன். பிறகுதான் முகமூடி அணிந்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. சமீபமாக நிறைய கோபப்படுகிறார். ஒரு விஷயத்தைப் பொறுமையாகக் காதில் வாங்கிக் கொள்வதில்லை’ என்பதற்கு ‘சொல்கிற விதத்தில் நல்ல வார்த்தைகளாகச் சொன்னால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். நானும் மனுஷன்தான்” என்று பதிலளித்தார் சென்றாயன்.

பாலாஜியைப் பற்றிய பிராது அடுத்து வந்தது. “தொடர்ந்து கெட்ட வார்த்தைகள் பேசுகிறார். புறம் பேசுகிறார். பெண்களை இழிவாகப் பேசுகிறார்” என்பதற்கு ‘சென்றாயனுக்குச் சில விஷயங்களை அவருக்குப் புரிவது போல் சொன்னால்தான் புரியும். டீ ஊற்றிய விஷயத்தில் அதுதான் நடந்தது.” என்று சென்றாயனை மட்டும் சுட்டிக்காட்டி நழுவ முயன்றார் பாலாஜி. 

இதைக் கேட்டதும் ஆவேசமாக எழுந்து வந்த சென்றாயன்..”என்னய்யா இது எப்பப்பார்த்தாலும் எனக்குப் புரியலை புரியலைன்னே சொல்றீங்க.. நான் என்ன முட்டாளா? எனக்கு ஒரு தகுதியில்லாமயா பிக்பாஸ்ல கூப்பிட்டிருப்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான தகுதி இருக்கு. என்னை முட்டாள்னு யாரும் சொல்லாதீங்க. தனியா கூட நீங்க சொல்லியிருக்கலாம் எனக்கு பாலாஜியும் வேணும் டேனியும் வேணும்” என்ற சென்றாயனின் கோபத்தில் நியாயம் இருந்தது. இதை பாலாஜிக்கு எதிராகவே துணிச்சலாக சொன்னது நன்று.

‘இனிமேல் யாரையும் கெட்ட வார்த்தைகளில் பேசாதீங்க’ என்று நடுவர் தீர்ப்பு அளித்தார். ‘ஃப்ளோல பேசும் போது கெட்ட வார்த்தை வரத்தான் செய்யும். கமல் சாரும் சொல்லியிருக்காரு. கட்டுப்படுத்த முயற்சிதான் செய்ய முடியும்’ என்று தன் கெத்தை விட்டுக்கொடுக்காமலேயே பேசினார் பாலாஜி.

“மும்தாஜ் என் மீது பிரியமாகத்தான் இருந்தார். ஆனால் ‘சர்வாதிகாரி’ டாஸ்க்கில் என்னிடமிருந்து விலகி இருந்தார். சமயங்கள்ல வருத்தம் ஏற்படுற மாதிரி நடந்துக்கிட்டாங்க” என்பது ஐஸ்வர்யாவின் புகார். ‘குப்பை கொட்டப்பட்ட விவகாரம் எவ்வாறு வெளியிலிருப்பவர்களின் கோணத்தில் தெரிந்தது என்பதை அறிந்து கொள்ளவே விருந்தினர்களிடம் விசாரித்தேன்’ என்று தன் தரப்பை விளக்கினார் மும்தாஜ்.

“நான் ஏற்கெனவே கில்ட்டியில இருந்தேன். நீங்க அதைக் கிளறுவது போல கெஸ்டுகளிடம் பேசுவது சரியா?” என்றார் ஐஸ்வர்யா. “உன் நல்லதுக்குத்தான் அவங்க சொல்லியிருக்காங்க’ என்று யாஷிகா சரியாகவே தீர்ப்பு சொன்னாலும் ஐஸ்வர்யா அதை ஒப்புக் கொள்ளவில்லை. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun


‘விருந்தினர்களிடம் அதை விசாரித்தது தவறுதான். ‘என்னைப் பத்தி வெளில என்ன நினைக்கிறாங்கன்னு வர்றவங்க கிட்ட எல்லாம் விசாரிக்கறது முட்டாள்தனம். நம்ம மேல தப்பு –ன்னு தெரிஞ்சா சரிபண்ணிக்கறதுதான் சரியான விஷயம்” என்று அடுத்த பாலாஜி சொன்ன புகார் மஹத்தை நோக்கி சரியாகப் பாய்ந்ததால் மஹத் ஆவேசமாக எழுந்து வந்தார். “என்னை எப்படி முட்டாள்னு சொல்வீங்க.. என் ஃப்ரெண்டு கிட்ட நான் கேட்பேன். அது எப்படி நீங்க என்னைக் கேள்வி கேட்பீங்க?” என்று மஹத் உரத்த குரலில் பேசிக்கொண்டே பாலாஜியை நோக்கி வர, ‘காமெடி நடிகன் –னு என்ன வேணா சொல்லிக்கோ.. இப்ப என்னை அடிக்கப் போறியா?” என்று பாலாஜியும் பதிலுக்கு எகிறினார். முன்னர் இருவருக்கும் நடந்த அதே மாதிரியான ஆபாச சண்டை மறுபடியும் நடந்தது. 

நடுவர் உள்ளிட்ட மற்றவர்கள் தடுத்தும் மஹத்தால் தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தார். சந்தைக்கடை மாதிரியான இரைச்சல். பிறகு சற்றுத் தணிந்த மனோபாவத்துடன் பாலாஜியிடம் சென்று அவர் மறுபடியும் பேசியதிலிருந்து மஹத்தின் மனோபாவத்தில் மாற்றமே ஏற்படவில்லை என்று தோன்றுகிறது. “கேங் சேர்க்கறேன்னு திரும்பத் திரும்பச் சொல்லாதீங்க” என்று இந்த எரியும் பிரச்னைக்கு இடையே டேனியும் வந்து இணைய, தீ கொழுந்து விட்டு எரிந்தது. நடுவர் எதையோ சொல்லி இந்தப் பகுதியை முடித்து வைத்தார்.


புதிய போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தால்தான் இந்த விளையாட்டு சுவாரஸ்யம் அடையும் என்கிற கட்டத்தை அடைந்திருக்கிறது. திரும்பத் திரும்ப ஒரே முகங்களை, ஒரே மாதிரியான பிரச்னைகளை பார்ப்பது சலிப்பூட்டுகிறது. ஐம்பது நாள்களை கடந்திருக்கும் சூழலில் புதியவர்களின் வருகை அவசியமானதும் கூட. இந்த விஷயம் விரைவில் நிகழுமா?