Published:Updated:

``இந்தத் தலை, அந்த உடலுடன் இணையப்போகிறது!’’ - பிக் பாஸ் மிட்நைட், மார்னிங் மசாலா

தார்மிக் லீ

பிக் பாஸ் மார்னிங், மிட்நைட் மசாலாவில் நடந்தது என்ன?!

``இந்தத் தலை, அந்த உடலுடன் இணையப்போகிறது!’’ - பிக் பாஸ் மிட்நைட், மார்னிங் மசாலா
``இந்தத் தலை, அந்த உடலுடன் இணையப்போகிறது!’’ - பிக் பாஸ் மிட்நைட், மார்னிங் மசாலா

நேற்று `புகார் பெட்டி' டாஸ்க்கின் மூலம் போட்டியாளர்கள் சிலரின் மனதில் இருந்த வன்மம் வெளியே வந்தது. சென்றாயன் - பாலாஜிக்கு இடையே நடந்த வாக்குவாதம். அதைத் தொடர்ந்து மஹத்துக்கும் பாலாஜிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்கள்... எனப் பிக் பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. இதைத் தொடர்ந்து மிட்நைட் மற்றும் இன்று மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது? 

மிட்நைட் மசாலா :

* வீட்டுக்குள்ளே இருந்த போட்டியாளர்கள், நீலம் மற்றும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து இரு அணியாகப் பிரிந்துகொண்டனர். ஒவ்வொருவரும், அவர் அணிந்திருக்கும் டி-ஷர்டில் வெவ்வேறு ஆள்களின் புகைப்படம் இருந்தது. உதாரணத்துக்கு, சென்றாயன் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் பொன்னம்பலத்தின் புகைப்படம். பாலாஜி அணிந்திருந்ததில், டேனியலின் புகைப்படம். பொன்னம்பலம் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் மஹத்தின் புகைப்படம். இப்படி ஒவ்வொருவரும் மற்றவர்களின் புகைப்படங்கள்கொண்ட பனியனை அணிந்திருந்தார்கள். கொடுமை என்னவென்றால், பனியனில் இருக்கும் ஆள்களைப்போலத்தான் அவர்களது மேனரிஸமும் இருந்தது. இதில் உச்சகட்ட நிலைக்குச் சென்றவர், டேனியல்தான். அவரது டி-ஷர்ட்டில் யாஷிகாவின் புகைப்படம் இருந்தது. தத்ரூபமாக இருக்க வேண்டுமென்பதற்காக யாஷிகாவின் ஷார்ட்ஸையே அணிந்ததோடு அல்லாமல், இடுப்பு தெரியும் அளவுக்குப் பனியனை சுருட்டிவிட்டிருந்தார். 

* இதற்கிடையில் பாலாஜியும் (டேனியல் பாத்திரம்) பொன்னம்பலமும் (மஹத் பாத்திரம்) கிச்சன் ஏரியாவில் பேசிக்கொண்டிருந்தார்கள். டேனியல் உருவத்தில் தத்ரூபமாக இருந்த நிலையில், இந்த இருவரும் அவர்கள் பேசும் மாடுலேஷனில் பேசி, சிரித்துக்கொண்டிருந்தார்கள். 'டேய் மச்சான் நான் யார்கூட வேணாலும் சுத்துவேன் மச்சான், இவங்களுக்கு என்ன பிரச்னை' என்று மஹத்தை அச்சுப்பிசுறாமல் இமிடேட் செய்து பேசிக்கொண்டிருந்தார் பொன்னம்பலம். அதற்குப் பாலாஜியும் ஈடுகொடுத்து, 'அதேதான் மாமே. நீ யாரைப் பத்தியும் கவலைப்படாத. ஜாலியா இரு மாமே. யார் உன்னை என்ன கேட்கப்போறா' என்று டேனியலைப் போலவே பதில் கூறிக்கொண்டிருந்தார் பாலாஜி. இது எங்கேபோய் முடியப்போகுதுனு தெரியலையே... ஆண்டவா!

* இப்படி எல்லோரும் அவரவர் பனியனில் இருக்கும் பாத்திரமாகவே மாறி, 'இதுதான் சாக்கு' என்று தன் மனதில் வைத்திருந்தது எல்லாவற்றையும் கேலிகளாகவும் காமெடியாகவும் பேசி ரகளை செய்துகொண்டிருந்தனர்.  இதில், அதிக அக்கப்போர் செய்தது டேனியல்தான். யாஷிகா செய்யும் சுட்டித்தனம், பெண்களுக்கு உரிய நளினத்தில் அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தார். போதாக்குறைக்கு வெட்கம் வேறு!. பாலாஜிக்கு டேனியலின் பாத்திரம் கொடுத்ததை, அவர் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். அவருக்கு இணையாக ஈடுகொடுத்தார், பொன்னம்பலம் (மஹத்). இப்படி மாறி மாறி இருவரும் பெர்ஃபாமன்ஸில் பின்னியெடுத்தனர். ஒரு கட்டத்தில், இருவரும் உக்கிரமாகி சண்டைபோடத் தொடங்கிவிட்டனர். ஆனால், பாலாஜி அவ்வப்போது பாலாஜியாக மாறி, சில மொக்கை ஜோக்குகளை அடித்துதான் சகித்துக்கொள்ள முடியவில்லை. இல்லை அதுவும் டேனியலின் சுபாவமா என்பது சந்தேகமே! இவர்கள் காரசாரமாக சண்டையிட்டுக்கொண்டிருக்க, நடுவில் ஜனனி தன்னை சென்றாயன் என நினைத்துக்கொண்டு, குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தார். இந்த டாஸ்க்கில் வெற்றி பெறப்போவது கண்டிப்பாகச் சிவப்பு நிற அணிதான். ஒவ்வொருவரும் பாத்திரத்தை அவ்வளவு நேர்த்தியாகச் செய்தார்கள். 

மார்னிங் மசாலா : 

* காலை, இயல்பு நிலைக்குத் திரும்பிய அனைவரும், பல் துலக்கிக்கொண்டிருந்தனர். சென்றாயன், பாலாஜி, ஜனனி... மூவரும் டேனியலை விடுவதாக இல்லை. 'நிசப்தம் பிராண சங்கடம்!' என்ற ரேஞ்சில் டேனியலை வைத்து செய்துகொண்டிருந்தனர். இதில், டேனியலுக்கு சிரிப்பு வந்ததுதான் ஹைலைட்டான விஷயம். ஆனால், இந்த டாஸ்க்கும் நன்றாகத்தான் இருக்கிறது. இவ்வளவு நாள் அழுகையும், ஆர்ப்பாட்டமுமாக இருந்த பிக் பாஸ் வீடு, இன்றுதான் ஜாலியாக நகர்கிறது. ஆனால், இந்த டாஸ்கிலும் சண்டை வரும் அபாயம் இருக்கிறது. உள்ளே அனைவரும் சீரியஸான சில விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், ஒருவரைப்போல் மற்றவர் இமிடேட் செய்வதால், பார்ப்பதற்கு செம கூத்தாக இருக்கிறது. ஒட்டுமொத்த கூட்டத்திலும் டேனியல்தான் பாவம். அனைத்து போட்டியாளர்களும் அவரையே டார்கெட் செய்து கலாய்த்துக்கொண்டிருந்தார்கள். இவரும் அதற்கு ஈடுகொடுத்து சமாளித்துக்கொண்டிருந்தார்.

* 'இந்த உடல் அந்தத் தலையுடன் இணையப்போகிறது' என்ற கதையாகத்தான் இருந்தது, இரவு டாஸ்க். அனைவரும் சொல்வதைப்போல, டேனியல் மிகவும் புத்திசாலிதான். பயங்கரமான யுக்திகளையெல்லாம் கையாண்டு, ஃபைனலில் என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். இவரை பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்தபோதே எல்லாவற்றையும் பிளான் போட்டுவிட்டார்போல! தற்போது உள்ளே நடக்கும் சில சூழலுக்கேற்ப, புதிதாக சில ஸ்கெட்ச்களையும் போட்டுக்கொண்டிருந்தார். அதனால்தான் இதுவரை டேனியலின் பெயர் எவிக்‌ஷன் நாமினேஷனில் இடம்பெறவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆல் தி பெஸ்ட் ப்ரோ! 

* மஹத்துக்கு மும்தாஜின் பாத்திரம் கொடுக்கப்பட்டது. அவரைப்போல உடையணிந்தது ஓகே! அதற்காக, சில விஷயங்களை எக்ஸ்ட்ராவாக செய்தது ஓவர் டோஸாக இருந்தது. ஒருவேளை இவர்களுக்கிடையே சண்டை வந்தால், இதுபோன்ற விஷயங்களுக்காகத்தான் இருக்கும். ஒருவரின் மேனரிஸத்தைக் கிண்டல் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. நண்பனாகட்டும், டாஸ்க் ஆகட்டும். ஆனால், எவ்வளவுதான் குளோஸாக இருந்தாலும், டாஸ்க்காக இருந்தாலும், உருவத்தை வைத்து கேலி செய்துவது கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர்தான் பாஸ்! 

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் எதுவும் நடக்காவிட்டாலும், ரகளையான சில மொமன்ட்டுகள் இன்றிரவு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!