Published:Updated:

மும்தாஜும் டேனியும் `கட்டிப்பிடி கட்டிப்பிடிடா’... ஆனா, அது அவங்க இல்லை! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்

07.08.2018 - DAY – 51 - பிக்பாஸ் வீட்டில் `இன்று' நடந்தது என்ன?

மும்தாஜும் டேனியும் `கட்டிப்பிடி கட்டிப்பிடிடா’... ஆனா, அது அவங்க இல்லை! #BiggBossTamil2
மும்தாஜும் டேனியும் `கட்டிப்பிடி கட்டிப்பிடிடா’... ஆனா, அது அவங்க இல்லை! #BiggBossTamil2

ழந்த சுவாரஸ்யத்தை மீண்டும் பெற்றது பிக்பாஸ் வீடு. சக போட்டியாளரின் நடை, உடை, பாவனையை நகல் செய்யும் ‘உன்னைப் போல் ஒருவன்’ என்கிற டாஸ்க் மிகவும் கலகலப்பாக இருந்தது. விழுந்து விழுந்து சிரிக்க முடிந்தது. ஒவ்வொருவருமே இதைச் சிறப்பாக விளையாடினார்கள் என்றாலும் அக்கறையுடனும் ஆர்வத்துடன் விளையாடியவர்களில் முதன்மையானவராக டேனியைச் சொல்லலாம். இந்த விளையாட்டுக் கூத்துகளைப் பற்றி பிறகு சற்று விரிவாகப் பார்ப்போம். 

அதற்கு முன்- பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களின் ஆதாரமான சில விஷயங்களைப் பார்த்து விடலாம். அப்போதுதான் இவற்றின் அடிப்படையைப் புரிந்துகொண்டு நிகழ்ச்சியை அதிகம் உணர்ச்சிவசப்படாமல் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. இது குறித்து அதிகம் போரடிக்காமல் சுருக்கமாகச் சொல்லி விட முயல்கிறேன். பொருத்தருள்க.

எதற்காக இந்த வியாக்கியானம் என்றால், சில போட்டியாளர்களின் சிறப்புகளை அல்லது குறைகளைச் சொன்னால் அவற்றுக்கு எதிர் அபிப்ராயங்கள் இருக்கும் நண்பர்கள் பின்னூட்டங்களில் கோபித்துக் கொள்வதைக் காண்கிறேன். சில விளையாட்டான தருணங்களைத் தவிர, திட்டமிட்டு எந்தவொரு போட்டியாளருக்கும் சாதகமாக நான் எழுதுவதில்லை என்பதே என்னளவிலான உண்மை. சமநிலையுடன் வாசிப்பவர்கள் இதை உணர முடியும். அந்தந்தச் சூழ்நிலையில் சிறப்பாக அல்லது மோசமாகச் செயல்படுபவர்களை அந்தந்த நேரங்களில் முறையே பாராட்டவோ அல்லது விமர்சிக்கவோ நான் தவறியதில்லை. 

இந்த விளையாட்டின் அடிப்படைத் தன்மையைச் சற்று நினைவுகூர்ந்தால் நாம் இத்தனை உணர்ச்சிப்பட அவசியமிருக்காது. நம்முடைய பாரம்பர்ய விளையாட்டுகள் என்றல்ல, உலகிலுள்ள அனைத்து மரபுசார் விளையாட்டுகளுமே ஆதாரமானதோர் ஒரு விஷயத்தை வலியுறுத்தும். அது ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பது. தனிப்பட்ட விரோதங்களை மறந்து உங்கள் அணியுடன் ஒற்றுமையாக நின்று குழுவுணர்வுடன் இயங்கினால் வெற்றி நிச்சயம் என்கிற செய்தி இந்த விளையாட்டுகளின் அடிநாதமாக இருக்கும். 

ஆனால் – நவீனத்தைத் தாண்டிய பின்நவீனத்துவக் காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். குழு ஒற்றுமையை உடைத்து தனிநபர்களின் தனித்தன்மைகளை காணாமல் செய்து கொண்டிருக்கும் சமகாலச் சூழலை எங்கும் காண்கிறோம். அதையேதான் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் பிரதிபலிக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தின் உள்ளே நடக்கும் அரசியல், பிக்பாஸ் வீட்டுக்கும் கச்சிதமாகப் பொருந்துவதைக் காண முடியும். அதன் தாரக மந்திரம் இதுதான். ‘தலைமைக்குக் கட்டுப்படு, எந்த வழியிலேனும் செல், வெற்றி உனதே’. 

ஏதோ ஒரு பிரதேசத்தில் உள்ள தலைமைக்குக் கட்டுப்பட்டு இங்குள்ள கார்ப்பரேட் அலுவலகங்களின் மனிதர்கள் இயங்குவதைப் போல முகம் தெரியாத இயந்திரக்குரலுக்கு பயபக்தியுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் செவி சாய்ப்பதைக் காணலாம். இது நாய், நாயைத் தின்னும் விளையாட்டு. ‘வலிமையானதே எஞ்சும்’ என்னும் டார்வினின் சித்தாந்தம் செயல்படும் ரத்தபூமி. 

கவனமாகவும் சிக்கலாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் வளைவுகளில் ஒரு பந்தை மேலே விட்டால் மட்டும் போதும். அது பல்வேறு பாதைகளின் வழியாக அதுவாகப் பயணித்து இறுதியில் மிகப் பெரிய விஷயங்களைச் செய்வதைப் போலத்தான் இதிலுள்ள போட்டியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களைச் செலுத்துவது இயந்திரக் குரலின் கட்டளைகள்தாம். இந்த விளையாட்டின் வடிவமைப்புதான். அவர்கள் பிக்பாஸின் கருவிகள் மட்டுமே என்பதை உணர்ந்தால் அவர்கள் மீது நமக்கு அதிக கோப தாபங்கள் தோன்றாது. 

பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் சில ஆதாரமான மனித உணர்வுகளின் மீது மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சி தொடர்களில் வரும் மனிதர்களும் சம்பவங்களும் புனைவு என்பது நம் ஆழ்மனதுக்குத் தெரியும். ஆனால், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் வரும் மனிதர்கள் நிஜமானவர்கள். அவர்களின் உணர்வுகளும் அவற்றின் மோதல்களும் உண்மையானவை. புனைவும் யதார்த்தமும் விளக்க முடியாத சதவிகிதத்தில் கலந்தவை. அதனால்தான் தொலைக்காட்சி தொடர்களை விடவும் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் நம் நுண்ணுணர்வை அதிகம் பாதிக்கின்றன. கவனத்தை ஈர்க்கின்றன. உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. சீரியல்களில் விழாதவர்கள் கூட இதில் விழுவது இதனால்தான். 

போட்டியாளர்களின் சகிப்புத்தன்மையைச் சோதிக்கும் பல சவால்கள் இங்கு முன்நிறுத்தப்படுகின்றன. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்குச் சில ஆதாரமான விதிகள் நிரந்தரமாகஇருப்பது போல இங்கு கிடையாது. எந்த விதியும் பிக்பாஸ் வீட்டில் நிரந்தரம் கிடையாது. ஒருவகையில் இந்த விளையாட்டு செல்லும் பாதையே அதன் திசையைத் தானாக வடிவமைத்துக்கொள்ளும் வகையில் இருக்கிறது. 

பிக்பாஸ் போன்ற போட்டிகள் நம்முடைய  கலாசாரத்துக்கு அந்நியமானவை. அயல் பிரதேசத்து பிக்பாஸ் போட்டிகளில் நிகழும் கொடுமைகளில் சில சதவிகிதம் மட்டுமே தமிழில் நிகழ்கிறது என்பதை இதர நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்கள் அறிவார்கள். எனவே இந்த விளையாட்டைப் பொறுத்தவரை, ‘ஒரு போட்டியாளர் பொய் சொல்லுகிறார், நயவஞ்சகமாக இருக்கிறார், புறம் பேசுகிறார், வசைகிறார் என்று பார்வையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் ஒருவகையில் அபத்தமானவை. இந்த விளையாட்டின் தன்மை அப்படி இருக்கிறது. ஒரு மனிதனை கீழே தள்ளி விட எந்த முறையையும் பயன்படுத்தலாம் என்பதே இதன் ஆதாரமான விதி. 

எனில், இவ்வாறான கோளாறான நிகழ்ச்சிகளினால் நமக்கு என்னதான் நேர்மறைப் பயன் என்கிற கேள்வி எழலாம். ஆம், அவ்வாறாகவும் நாம் அணுக முடியும். நம்முடைய கீழ்மைகளை ஒரு கண்ணாடி போல இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. கீழ்மைகளின் மீது நமக்கு எப்போதுமே தன்னிச்சையான வசீகரம் உண்டு. அதற்கு எளிதில் பலியாகி விடுவோம். அது குறித்தான எச்சரிக்கையையும் சுயபரிசீலனை அடைய வேண்டிய தேவையையும் இந்த நிகழ்ச்சி ஒருவகையில் நமக்குத் தருகிறது. அந்தக் கோணத்தில் நாம் பார்க்க முடியும். 

போட்டியாளர்கள் கோபப்படுவது, ஆபாச வார்த்தைகளைப் பேசுவது, புறம் பேசுவது போன்றவற்றை நாமும் நம்முடைய அன்றாட நடைமுறையில் செய்கிறோம். அந்தந்த நேரத்து உணர்ச்சிகளின் படி இந்தத் தவறுகளை செய்து விட்டு கடந்து விடுகிறோமே தவிர, அவற்றைப் பற்றி பின்பு நிதானமாக யோசித்து வருத்தப்படுகிறவர்கள் மிகச்சிலரே. அந்தக் காட்சிகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டு நமக்கே போட்டுக் காண்பிக்கப்பட்டால் ‘ச்சே.. நானா.. இத்தனை மோசமாக நடந்துகொண்டேன்’ என்கிற அவமானவுணர்வையும் குற்றவுணர்வையும் பலர் அடைவார்கள். இந்த இடத்தில்தான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை உபயோகித்துக்கொள்ள முடியம். போட்டியாளர்களின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் வகையில், இந்த நிகழ்ச்சியின் மீதான நேர முதலீட்டை பயனுள்ளதாகவும் ஆக்கிக்கொள்ள முடியும். போட்டியாளர்களின் மீது குற்றம் காண்பது நேர விரயமே.

**

சரி, 50வது நாளின் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களைப் பற்றிப் பார்ப்போம். 

நீதிமன்றத்தில் நிகழ்ந்த சூடான பிரதிவாதங்களுக்குப் பிறகு மக்கள் ஆங்காங்கே குழுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்க்கும் போது, ‘கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான், தான் விளையாட, அவை இரண்டும் சேர்ந்து பொம்மைகள் செய்தன தாம் விளையாட என்கிற பாட்டுதான் நினைவுக்கு வருகிறது. பிரச்னைகளை உருவாக்கிய பிக்பாஸ் பின்பு அவற்றை இவர்களை வைத்து விவாதிக்க வைத்தார், அல்லவா? இப்போது அந்த விவாதங்களைப் பற்றி இவர்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். 

யாஷிகா, ஐஸ்வர்யா கூட்டணியிலிருந்து டேனியைப் பிரிக்க வேண்டும் என்று தலைகீழாக நிற்கும் பாலாஜி, டேனியைத் தனியாக அழைத்து இதற்காக ஆலோசிக்கிறார். ‘நான் உன்னைத் தவறாக நினைப்பதற்கு காரணமே அவர்கள்தாம்’ என்கிறார். “நான் சொன்னா கேட்கற மாதிரியா அவங்க இருக்காங்க? உங்களுக்கு –ன்னு சில உறவுகள் இருக்க மாதிரி அவங்க எங்களுக்கு. எவ்வளவு பிரச்னை வந்தாலும் பார்த்துக்கறேன்” என்று அவரிடமிருந்து சாமர்த்தியமாகக் கழன்று வந்தார் டேனி.

இந்த சீஸனின் இன்னொரு திறமையான போட்டியாளர் ரித்விகா. ‘இவர் ஓப்பனாக நடந்துகொள்ளவில்லை, இவருடைய உத்தி என்னவென்று தெரியவில்லை’ என்பதுபோல் தன்மீது எப்போதும் வைக்கப்படும் புகார்களைப் பற்றி மும்தாஜிடமும் வைஷ்ணவியிடமும் புலம்பிக்கொண்டிருந்தார் ரித்விகா. ‘நான் இங்கு நண்பர்களை உருவாக்க வரவில்லை. என்னுடைய கவனம் முழுக்க பிக்பாஸ் விளையாட்டில்தான் இருக்கிறது. நான் பிரச்னைகளில் தலையிடுவதில்லை. வெளியிலிருந்து கவனிக்கிறேன். அவசியமான நேரங்களில் மட்டும் ஒரு விஷயத்துக்குள் செல்கிறேன்’ என்று இவர் கூறுவது சரியானது. ஆனால் பரபரப்பு ஃபுட்டேஜ்கள் தரும் போட்டியாளர்கள்தாம்  பிக்பாஸுக்கும் பார்வையாளர்களுக்கும் தேவை என்பதையும் இவர் கவனிக்க வேண்டும். இவர் மீது ஐஸ்வர்யா வீசிய சர்ச்சையான வசைகளை, மஹத் போன்ற ஓர் ஆசாமியாக இருந்தால் ருத்ரதாண்டவம் ஆடி கவனத்தை ஈர்த்திருப்பார். ரித்விகாவின் நல்லியல்பும் பொறுமையும் அவ்வாறு செய்ய விடாமல் தடுக்கிறது.

கத்தியுடன் வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்த சென்றாயனிடம் ‘முட்டாள்தனம் என்றால் என்ன?’ என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் பொன்னம்பலம். இதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குத்தான் திகிலாக இருந்தது. ‘போய்யா வெங்காயம்’ என்று சென்றாயன் எந்தக் கணத்திலும் பாயலாம் என்று நினைத்தேன். ‘முட்டாள்’ என்கிற வார்த்தை சென்றாயனுக்குப் பிடிக்காது என்பதை சமீபத்தில்தான் அழுத்தமாக உணர்ந்தோம். ஆனால், என்ன காரணமோ அவர் பொறுமையாக இருந்தார். ‘உன் முகமூடியைக் கடைசி வாரங்களில் கழற்றியிருந்தால் பாராட்டியிருப்பேன். அவசரப்பட்டு விட்டாய்’ என்பது மாதிரியான உபதேசத்தைச் சொல்லி நகர்ந்தார் யோகி பொன்னம்பலம். 

‘உனக்குப் புரியவில்லை என்கிற வார்த்தையை இனி சென்றாயனிடம் பயன்படுத்தாதீர்கள். டாஸ்க்குகளில் அவருக்கு ஏதேனும் புரியவில்லை என்றால் இனி பாடம் எடுக்காதீர்கள். புரியாமலா இந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்திருப்பார்?” என்று பாலாஜி மற்றும் வைஷ்ணவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் ரித்விகா. இனி டாஸ்க்குகளில் சென்றாயன் அதிகம் சொதப்புவார் என்று தோன்றுகிறது. ‘இது புரியலையே..” என்று அவர் கேட்டால், ‘நீதான் முட்டாள் இல்லையே.. புத்திசாலியாச்சே’ என்று அவரவர்கள் நகர்ந்து சென்று பழிவாங்குவார்கள்.

‘பாலாஜிக்கும் டேனிக்கும் இடையில் நடக்கும் பனிப்போரில் நாம் மாட்டிக்கொள்கிறோம்’ என்கிற புரிதலை வந்தடைந்திருக்கிறார் மஹத். இது புரிய இவருக்கு இத்தனை நாள்கள் ஆகின என்றால் மஹத்தின் புத்திக்கூர்மையைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. 

விடிய விடிய இவர்களின் உரையாடல்  நடந்துகொண்டிருந்தது. டேனியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஜனனி. தன்னை வெஜ் பிரைட் ரைஸ் என்கிற சங்கேத மொழியில் டேனி பேசி விட்டார் என்கிற ஆதங்கமும் கோபமும் ஜனனிக்குத் திங்கட்கிழமை முதலே இருக்கிறது. இது குறித்துப் பலரிடமும் புலம்பி வந்தார். ‘இத்தனை பழகியும் இப்படிச் செய்து விட்டாரே’ என்பதும் இவருடைய ஆதங்கம். இதற்காகவே டேனியை இந்த வாரம் இவர் நாமினேட்டும் செய்தார். ஆனால் டேனியுடனான விளக்கத்துக்குப் பிறகுதான் அந்த சங்கேத வார்த்தை அவர் குறித்தானது அல்ல என்பதை அறிந்துகொண்டார். 

ஒருவர் பேசுவதை அரையும் குறையுமாகக் கேட்டு விட்டு கோபப்படுவது முறையானதல்ல என்பதே இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய நீதி. ‘இங்கிருப்பதை அங்கேயும் அங்கிருப்பதை இங்கேயும் சொல்லி விரிசலை அதிகப்படுத்துவது என் வழக்கம் அல்ல’ என்று ஜனனி சொன்ன விளக்கம் உண்மையாக இருந்தால் அது பாராட்டப்பட வேண்டியது. 

விளக்குகள் அணைக்கப்பட்டு, விடியற்காலை மூன்று மணிவரையிலும் உரையாடல் சென்றுகொண்டிருந்தது. ‘ஒவ்வொருவர் பெயரிலும் உள்ள முதல் ஆங்கில எழுத்தை வைத்து சங்கேத மொழிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வெஜ் பிரைட் ரைஸ் என்றால் வைஷ்ணவியாம். நான் இல்லையாம்” என்று பாலாஜி குழுவில் அமர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார் ஜனனி. ‘அப்ப எனக்கு என்ன பெயர் வெச்சிருக்காங்க?” என்று ஆர்வமாகக் கேட்டார் சென்றாயன். 

**

‘சல்மார்’ என்கிற ரகளையான பாடலுடன் 51-ம் நாள் விடிந்தது. ‘நீதிமன்ற டாஸ்க் கொடுத்ததே.. ஒவ்வொருத்தவர் மனசுல இருக்கற பாரத்தை எழுத்தின் மூலமாக இறக்கி வைப்பதற்காகத்தான். அதையும் ஏன் இப்படி விவாதித்துக்கொண்டே இருக்க வேண்டும்?” என்று தன் சரியான பார்வையை, டிரெட் மில்லில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த டேனியிடம் சொல்லிக்கொண்டிருந்தார் பொன்னம்பலம். அனுபவம் தரும் வெளிச்சத்தில் இவர் சொல்வது சமயங்களில் மிகச்சரியானதாக இருக்கிறது. 

இந்த வார லக்ஸரி பட்ஜெட்டிற்காக ‘என்னைப் போல் ஒருவன்’ என்கிற சுவாரஸ்யமான விளையாட்டை அறிவித்தார் பிக்பாஸ். 

அதன்படி, போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிவார்கள். இன்னொரு போட்டியாளரின் புகைப்படம் அடங்கிய டீஷர்ட்டை அணிந்து கொண்டு அவரின் நடை, உடை, பாவனைகளைப் பின்பற்ற வேண்டும். அவரின் பழக்கங்களை கிண்டலடிக்கலாம். இதற்கான நடுவர் ரித்விகா. 

சிறந்த மற்றும் மோசமான போட்டியாளர் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். யார் யார், யாரைப் போல் நடிக்க வேண்டும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டு டி சர்ட்கள் வந்தன. 

முதல் அதிர்ஷ்டசாலி டேனி. இவருக்கு வந்த சீட்டு யாஷிகா. இதன் படியான பட்டியல். வைஷ்ணவி (பாலாஜி), ஐஸ்வர்யா (ஜனனி), சென்றாயன் (பொன்னம்பலம்), மஹத் (மும்தாஜ்), யாஷிகா (வைஷ்ணவி), பொன்னம்பலம் (மஹத்), பாலாஜி (டேனி), ஜனனி (சென்றாயன்). 

இது சார்ந்த விளையாட்டுகளும் கூத்துகளும் ஆரம்பம் ஆகின. ‘அவர் ஒரிஜினலாக இல்லை. இந்த நிகழ்ச்சிக்காக நடிக்கிறார்’ என்கிற புகார் ஏற்கெனவே ஒவ்வொருவரின் மீதும் இருக்கும் போது ‘இன்னொருவரைப் போல நடிக்க வேண்டும்’ என்பது கூடுதல் சுவாரஸ்யம். சம்பந்தப்பட்டவரை ஜாலியாகப் பழிவாங்கும் சந்தர்ப்பமாகவும் இதை உபயோகித்துக்கொள்ளலாம். 

இந்த விளையாட்டின் மூலம் சில அனுகூலங்களும் உண்டு. இன்னொரு பாத்திரத்தில் கூடுபாய்வது என்பது ஒரு நடிகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி. இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் நடிகர்கள் என்பதால் அவர்களின் திறமைக்கு ஒரு சவால். பாலாஜி போன்ற நகைச்சுவை நடிகர்கள் இந்த வாய்ப்பை ரகளையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு, தாடியைத் தடவிக்கொண்டு, உடம்பை அவ்வப்போது குலுக்கிக்கொண்டு டேனி மாதிரியாக பாவனை செய்து அவர் ரசிக்க வைத்தார். 

இன்னொன்று, நம்மிடம் தன்னிச்சையாக உள்ள பழக்கங்களில் உள்ள குறைகள் நமக்கே தெரியாது. இன்னொருவர் அதை நகலெடுத்துக் காண்பிக்கும் போதுதான் அதிகம் உறைக்கும். அவற்றைத் திருத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இவர்கள் அடித்த கூத்துகளில் என்னை அதிகம் சிரிக்க வைத்தது, ‘தொப்புளைத் தொட்டுட்டான்’ என்று டேனி அடித்த கூத்துதான். சம்பந்தப்பட்ட யாஷிகாவைப் போலவே நானும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியிருந்தது. 

யாஷிகாவைப் போல் தொப்புள் தெரிய உடை அணிந்துகொண்டு மிகையான லிப்ஸ்டிக்கும் தொப்பையுமாக டேனி நடந்து செல்வது பார்க்க ஒருபக்கம் கண்றாவியாக இருந்தது என்றாலும் இன்னொரு பக்கம் நகைச்சுவையாகவே இருந்தது. ‘பார்த்துட்டான்..பார்த்துட்டான்’ என்று கவுண்டமணி பெண் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் அலறுவதை டேனியின் காமெடி நினைவூட்டியது. இதன் மூலம் பொன்னம்பலத்தின் கலாசாரப் பாவனையைக் கிண்டலடித்துத் தீர்த்தார்கள். 

பாலாஜியைப் போலவே குழறலான தொனியில், இழுவையுடன் பேசிக்கொண்டிருந்தார் வைஷ்ணவி. பின்பு பாலாஜியின் தொப்பையைப் போன்று வைத்துக்கொண்டு தன் பாத்திரத்தின் மீது கூடுதல் அக்கறை காட்டினார். 

சமயங்களில் இவர்கள் தங்களின் அசல் கேரக்டர்களுக்கும் திரும்பிக்கொண்டிருந்தார்கள். ‘யார் இது புது கேரக்டரா இருக்குது” என்று யாஷிகா பாத்திரத்தில் இருந்த டேனி சொன்ன கிண்டலினால் மனம் புண்பட்டார் வைஷ்ணவி. (அதாவது பாலாஜி). இதை பாலாஜி பேசும் தொனியிலேயே ஒரு புகாராக நடுவர் ரித்விகாவிடம் சொல்ல, அவரும் டேனியிடம் சென்று விசாரித்தார். யாஷிகாவின் பாத்திரத்திலிருந்து டேனி வெளியே வர அவரை எச்சரித்தார் மும்தாஜ். (அதாவது ஐஸ்வர்யா). “என்னைக் கிண்டல் செய்யும் போது மட்டும் இனிக்குதோ” என்றார் யாஷிகா. (அதாவது டேனி). 

யார் யார் எந்தப் பாத்திரத்தில் இருக்கிறார்கள் என்பதைச் சமயங்களில் அவர்களின் பனியன்களைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் குழம்ப வேண்டியிருக்கிறது. “வகுறு கலக்குது புள்ள’ என்று சென்றாயனைப் போல நகலெடுக்க முயன்றுகொண்டிருந்தார் ஜனனி. ஜனனியைப் போலவே காமிரா முன்னால் தன் கண்ணைக் காட்டி உருட்டி கொஞ்சிப் பேசிய ஐஸ்வர்யாவின் நடிப்பு ரசிக்கத்தக்கதாக இருந்தது. 

பொன்னம்பலமும் டேனியும் முறையே மஹத் மற்றும் யாஷிகா வேடத்தில் படுக்கையில் உருண்டு பேசிக்கொண்டிருந்த காட்சி கண்றாவியாக இருந்தாலும் நகைச்சுவையாக இருந்தது. மஹத்தாக நடிக்கிறேன் பேர்வழி என்று அவ்வப்போது இருக்கிற பொருள்களை எல்லாம் தூக்கிப் போட்டு ஓவர்ஆக்ட் செய்துகொண்டிருந்தார் பொன்னம்பலம். மும்தாஜூம் டேனியும் (அதாவது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா) இணைந்து ‘கட்டிப்பிடி கட்டிப்பிடிடா’ பாட்டுக்கு ஆடிய இம்சையைக் கண்டு ரித்விகாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ‘மும்தாஜை இமிடேட் செய்கிறேன்’ என்று படுத்தி எடுத்துக்கொண்டிருந்தார் மஹத். ஐஸ்வர்யாவாக நடிக்கிறேன் என்று தெய்வ திருமகள் ‘விக்ரம்’ மாதிரி படுத்தி எடுத்தார் மும்தாஜ். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் டேனி கூட்டணியின் புகழ் பெற்ற பாடலான ‘பேபி.. பேபி’யும் இடம்பெற்றது. டேனியின் உடல்மொழியை நன்றாகப் பிரதிபலித்தார் பாலாஜி. சென்றாயனைப் போல ஆடுகிறேன் என்று மினி பிரபுதேவாவாக மாறிக்கொண்டிருந்த ஜனனியை எரிச்சல் கலந்த பிரமிப்புடன் பார்த்தார் பொன்னம்பலம். (மஹத்). 

பேசிக்கொண்டிருக்கும் இரண்டு பேரின் நடுவில் படுத்துக்கொண்டு வைஷ்ணவி போலவே பார்த்துக்கொண்டிருந்தார் யாஷிகா. 

“டேனியல் பொண்ணு வந்து.. “ என்று தொப்புள் விவகாரம் குறித்தான பஞ்சாயத்தில் தன் பிராதை ஆரம்பித்த சென்றாயன் (பொன்னம்பலம்) ‘எதுவா இருந்தாலும் நான் கமல் சார் கிட்ட பேசிக்கறேன்’ என்று முடித்தார். ‘ஒரு பெண் கவர்ச்சியாக உடை அணிகிறார் என்பது உங்களின் பார்வையாக இருந்தாலும் அவரின் அனுமதியில்லாமல் தொடுவது தவறானது’ என்னும் முக்கியமான விஷயத்தைச் சொன்னார் வைஷ்ணவியின் பாத்திரத்தில் இருந்த யாஷிகா. 

பாலாஜியும் பொன்னம்பலமும் தங்களின் அசலான கேரக்கடர்களுக்குத் திரும்பி புறம் பேச ஆரம்பிக்க அவர்களை எச்சரித்தார் ரித்விகா. தன் வேடத்தில் இருக்கும் சென்றாயன் ‘தொப்புள்’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதை உண்மையான பொன்னம்பலம் சீரியஸாக எடுத்துக் கொண்டார். ‘ஒருவேளை இப்படித்தான் உண்மையாக நடந்ததோ’ என்று மக்கள் சந்தேகப்படக்கூடும்’ என்பது அவரது ஆட்சேபத்திற்கான காரணம். ‘சென்றாயனுக்கு விதிகள் புரியவில்லை. எல்லையை மீறி விடுகிறார்’ என்கிற குற்றத்தை வைத்தார்கள். 

‘சம்பந்தப்பட்ட கேரக்டர்களை கிண்டலடிக்கலாம்’ என்பது விதியாக அறிவிக்கப்பட்ட போது சென்றாயன் மன்னிப்பு கேட்டது விளையாட்டாகத்தான் தெரிந்தது. பொன்னம்பலத்தின் இந்த ஆட்சேபனை கற்பனையானது என்றுதான் தோன்றுகிறது. 

இப்படியாக.. ஏற்கெனவே இவர்கள் மனநல விடுதி ஆசாமிகள் போல் காமெடி செய்துகொண்டிருந்த போது அதில் மேலும் குட்டையைக் குழப்பினார் பிக்பாஸ். நீல நிற உடையணிந்த டேனி அணியைக் கூப்பிட்டு ரகசிய டாஸ்க் தந்தார். அதன் படி எதிரணியைச் சேர்ந்தவர்களை அழ வைப்பது, பயப்பட வைப்பது, சிரிக்க வைப்பது, ‘வீட்டுக்குப் போறேன்’ என்று சொல்ல வைப்பது போன்று 5 எதிர்வினைகளைச் செய்ய வைக்க வேண்டும்.

அதன்படி இவர்கள் எதிரணியைப் பல்வேறு விதமாக வெறுப்பேற்றத் துவங்கினார்கள். பொன்னம்பலம்தான் இவர்களின் எளிய டார்க்கெட்டாக இருந்தது. தன்னிடமிருந்து கிளம்பும் கோபத்தை ‘மஹத்’தின் வழியாக வெளியேற்றினார் பொன்னம்பலம். இவர்களின் விநோதமான நடவடிக்கைகளை சிறிது நேரத்தில் மோப்பம் பிடித்த மும்தாஜ் ‘என்னமோ இருக்கு’ என்று கண்டுபிடித்து விட்டார். தாங்கள் மூன்று எதிர்வினைகளை செய்ய வைத்து விட்டோம் என்று கேமராவின் முன் கொஞ்சிக் கொஞ்சி சொன்னார் ஐஸ்வர்யா. 

இந்த சீஸனில் முதன்முறையாக ‘ஸ்மோக்கிங் ரூம்’ காட்டப்பட்ட வரலாற்றுச் சம்பவமும் நடந்தது. அதுவரை தாங்கள் முடித்து விட்ட எதிர்வினைகளைப் பற்றிச் சொல்லி, இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற உபதேசத்தை ஸ்மோக்கிங் ரூமில் சென்றாயனிடம் ரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார் டேனி. ‘புரியுதா.. புரியதா..’ என்று இவர் மிரட்ட ‘புரியுதடா’ என்று பரிதாபமாகத் தலையாட்டிக் கொண்டிருந்தார் சென்றாயன். 

‘பாலாஜியைச் செஞ்சு உட்றணும்.. கேவலப்படுத்தணும்’ என்று ஆவேசமாக இருந்தார் டேனி. எதிரணியைக் கெட்ட வார்த்தையில் திட்ட வைக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. பாலாஜிக்கு இருக்கும் வாயுக்கோளாறை வைத்து அவர் வைஷ்ணவியைக் கிண்டலடிக்க முயல, ‘அது தப்புடா’ என்று சரியாக எச்சரித்தார் மஹத்.

நீல அணி இன்னமும் இரண்டு எதிர்வினைகளை எதிர் அணியைச் செய்ய வைக்க வேண்டும். அதைச் செய்து முடிப்பார்களா என்பது நாளை தெரியும். இந்த டாஸ்க் ஒருவகையில் வில்லங்கமானதும் கூட. நகைச்சுவையாகக் கடந்தால் இயல்பாகப் போய் விடும். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனிப்பட்ட பழிவாங்கல்களை நிகழ்த்தினால் அதை மற்றவர்களும் ஆட்சேபித்தால் அது மேலதிகச் சிக்கல்களைக் கொண்டு வரும். என்னவாகிறது என்று பார்ப்போம்.