Published:Updated:

`அம்புட்டு நல்லவரா பிக் பாஸ் நீங்க?!' - பிக் பாஸ் மிட்நைட், மார்னிங் மசாலா

தார்மிக் லீ

பிக் பாஸ் மிட்நைட் மற்றும் மார்னிங் மசாலா

`அம்புட்டு நல்லவரா பிக் பாஸ் நீங்க?!' - பிக் பாஸ் மிட்நைட், மார்னிங் மசாலா
`அம்புட்டு நல்லவரா பிக் பாஸ் நீங்க?!' - பிக் பாஸ் மிட்நைட், மார்னிங் மசாலா

`உன்னைப் போல் ஒருவன்' டாஸ்க் ஒரு வழியாக நேற்று முடிந்துவிட்டது. ஒருவரைப் போல் மற்றவர் இமிடேட் செய்ததில், அவர்களுக்கே அவரைப் பற்றிய சில விஷயங்கள் தெரிந்திருக்கும். அந்தளவுக்கு ஒரு சிலர் பின்னி பெடல் எடுத்தார்கள். பாலாஜியை வைஷ்ணவி உருவ ரீதியில் கிண்டல் செய்ததில் பெரிதாக அவர் மனம் புண்பட்டிருக்காது. ஆனால், மும்தாஜை மஹத், உருவ ரீதியில் கேலி செய்தது வரம்பு மீறிய செயல்தான். ஆனால் அதையும் ஸ்போர்டிவாக எடுத்துக்கொண்டார், மும்தாஜ். சரி, அந்த டாஸ்க்கைத் தொடர்ந்து பிக் பாஸ் மிட்நைட் மற்றும் அடுத்த நாள் மார்னிங் மசாலாவில் என்ன நடந்தது? 

மிட்நைட் மசாலா :

* டாஸ்க்கை முடித்திவிட்ட களைப்பில் போட்டியாளர்களில் பாதிப் பேர், நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தனர். 3 அடி நீச்சல் குளத்தில் முங்கு நீச்சல் போட்ட மஹத், எல்லோரையும் ஒரண்டை இழுத்துக்கொண்டிருந்தார். டேனியல், யாஷிகா, ஐஸ்வர்யா அண்டு கோ அவர்களின் பிரத்யேக, `பேபி பேபி' பாடலைப் பாடி மகிழ்ந்துகொண்டிருந்தனர். தொடர்ந்து பல கூத்தும் கும்மாலமும் நடந்துகொண்டிருந்தன. மஹத்தைத் தொடர்ந்து முங்கு நீச்சல் போட்ட சென்றாயன், `என்னைக் கண்டுபிடிங்க என்றபடி' தண்ணிக்கடியில் சென்றார். `சென்டுவைப் பிடிச்சிட்டேன்' என்றபடி அவரை அலேக்காக மஹத் தூக்க, `ஏண்டா காட்டு எருமை, நீ இப்படிதான் என்னைத் தூக்குவியா' என்றபடி மஹத்தை நக்கலாக ஒரு பார்வை பார்த்தார், சென்றாயன். 

* உள்ளே இருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஸ்விட்ச் போட்டதுபோல் புரணி பேசுகிறார்கள். அடுத்த நொடியே நட்பு ஏற்பட்டு கட்டிப்பிடித்துக் கொஞ்சியும் குழாவுகிறார்கள். பிரகாஷ் ராஜின், `பின்றியே டா' என்கிற வசனம்தான் ஒவ்வொருக்கும் பொருந்தும். இவர்களது சுபாவமே இதுதானா இல்லை, சினிமாவுக்கு வந்துவிட்டதால் இவர்களது சுபாவம் இப்படி மாறிவிட்டதா என்பது தெரியவில்லை. கூர்ந்து கவனித்தால் எலிமினேட் ஆன அனைவருக்கும் நடிப்புக்கும் தொடர்பில்லாதது தெரியவரும். தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு வகையில் நடிப்போடு தொடர்பில் இருப்பதையும் பார்க்கலாம். இதில் வைஷ்ணவி மட்டும்தான் விதிவிலக்கு. ஆர்.ஜே என்பதால் பேசியே தாக்குப்பிடிக்கிறார். உள்ளே இருக்கும் ஒவ்வொருவருக்கும் என்னதான் மன்னிக்கும் தன்மை இமய மலையைவிட உயரமாக இருந்தாலும், ஒரு சில அடிப்படை மனித உணர்வின் வெளிப்பாட்டை வான்டெடாகக் கட்டுப்படுத்துவது போல் தோன்றுகிறது. 50 நாளை கடந்தும், எல்லோரும் ஒரு சேஃப் ஜோனில் இருப்பதுபோல் தெரிகிறது.  

மார்னிங் மசாலா :

* நீண்ட நாள்களுக்குப் பிறகு எந்தவித களேபரங்களுமின்றி நிம்மதியாக உறங்கி எழுந்தனர், போட்டியாளர்கள். கிச்சன் ஏரியாவில் பாலாஜியும் சென்றாயனும் செல்லமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்புதான் சட்டையைப் பிடித்து, சண்டை போடாத குறையாக மல்லுக்கு நின்றார்கள். ஆனால், அது எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருவரும் டீ போட்டுக் குடித்துக்கொண்டிருந்தார்கள். தவிர, இருவரும் சில `ஏலியன்' லெவல் ஜோக்குகளையும் அடித்து சிரித்துக்கொண்டிருந்தனர். உதாரணத்துக்குச் சென்றாயன், பாலாஜிடயிடம் `நீ எல்லாம் திருந்தவே மாட்ட, உன்னைத் திருத்தவும் முடியாது' என்று சொல்ல, அதற்கு பாலாஜி, `திருத்துறக்கு நாங்க என்ன எக்ஸாம் பேப்பரா' என்று சொல்லியதும், ஆயிரம் மிஸ்டர் பீன்கள் சேர்ந்து காமெடி செய்ததுபோல் வெடித்துச் சிரித்தார், சென்றாயன். ஆல் தி பெஸ்ட் ப்ரோ!

* மும்தாஜுக்கு உடல் நிலை சரியில்லை போல! முகத்தில் சோர்வோடு சற்று தூங்கி விழுந்துகொண்டிருந்தார்.  சற்று நேரம் கழித்து மும்தாஜை கன்ஃபஷன் ரூமுக்கு அழைத்தார், பிக் பாஸ். போட்டியாளர்களுள் சிலர், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கறுப்புச் சட்டையணிந்து தங்களுடைய மரியாதை செலுத்தினர். கடந்த வருடம் பிக் பாஸ் சீசனில் வெளி உலகத்தில் நடந்த எந்தச் செய்தியையும் உள்ளே இருப்பவர்களிடம் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொன்னது போலவே மும்தாஜுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது போல! கன்ஃபஷன் அறையிலிருந்து வெளியே வந்தவர், மிகவும் சோர்வோடு `ப்ளீஸ் எனக்குக் கொஞ்சம் சுடு தண்ணி மட்டும் வெச்சுக் கொடுங்க' என்று பாவமாக டேனியலிடம் கேட்டார். ஆனால், சண்டையோ வாக்குவாதமோ ஏற்பட்டால், ப்ரூஸ் லீயாக மாறிவிடுகிறார், மும்தாஜ். எல்லோரும் இயல்பாக இருப்பதைப் பார்த்தால், பிக் பாஸ் இதுவரை எந்த டாஸ்க்கும் கொடுக்கவில்லை போல. அம்புட்டு நல்லவரா பிக் பாஸ் நீங்க. சட்டுபுட்டுனு ஒரு டாஸ்க்கைப் போட்டுவிடுங்க. மக்கள்லாம் வெயிட்டிங்!

ஆக இரண்டு மசாலாக்களிலும் மக்கள் ஹேப்பியாகவே உள்ளனர். இதைத் தொடர்ந்து மதியம் ஏதேனும் பிரச்னைகளோ, சண்டையோ ஏற்படலாம். இல்லை எதுவும் நடக்கவில்லை என்றால் பிக் பாஸே ஏதேனும் டாஸ்க் கொடுத்து 'எது பெருசுன்னு அடிச்சிக் காட்டு' என்ற ரேஞ்சில் சண்டை மூட்டிவிடலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!