Published:Updated:

மும்தாஜ் போல மஹத் 'பாடி டிரோல்' செய்தது சரியா?! பிக்பாஸ் பஞ்சாயத்து #BiggBossTamil2

மும்தாஜ் போல மஹத் 'பாடி டிரோல்' செய்தது சரியா?! பிக்பாஸ் பஞ்சாயத்து #BiggBossTamil2
News
மும்தாஜ் போல மஹத் 'பாடி டிரோல்' செய்தது சரியா?! பிக்பாஸ் பஞ்சாயத்து #BiggBossTamil2

மும்தாஜ் போல மஹத் 'பாடி டிரோல்' செய்தது சரியா?! பிக்பாஸ் பஞ்சாயத்து #BiggBossTamil2

பிக் பாஸ் வீடு மறுபடியும் ‘டல்’ மோடிற்கு போய் விட்டது. ‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டதால் வீட்டு மக்கள் சுற்றுலா பயணிகள் போல பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்  ‘வழக்காடு மன்றத்தில்’ சென்றாயன் கேட்ட ஒரு கேள்வி இன்றைய நாளின் முக்கியமான விஷயம்  மற்ற தலைப்புகளில் உளறிக் கொட்டினாலும் குறிப்பிட்ட தலைப்பில் அவர்  நன்கு பேசினார். 

“இந்த வீட்டில் சமையல், பாத்திரம் கழுவுதல் போன்றவற்றிற்கு மட்டும் மக்கள் ஆர்வமாக முன்வருகிறார்கள். ஆனால் கழிவறை கழுவும் வேலையை மட்டும் பெரும்பாலும் என் தலையில் கட்டிவிடுகிறார்கள். மும்தாஜ் சமையல் அணிக்குச் செல்லத்தான் ஆர்வம் காட்டுகிறார். அவர் ஒருமுறைகூட கழிவறை கழுவும் பணிக்கு வந்ததில்லை” என்று உரத்த குரலில் அவர் கேட்டது மிகச் சரியானது. 

பிக் பாஸ் வீட்டின் முதல் வாரத்திலேயே சென்றாயனுக்கும் டேனிக்கும் கழிவறை சுத்தம் செய்யும் பணி, அப்போதைய தலைவர் ஜனனியால் வழங்கப்பட்டது. (அவர்களாக இதற்கு முன்வரவில்லை. வீடியோவைப் பார்த்தால் தெரியும்). அவர்கள் இருவரும் இணைந்து யாஷிகாவை இணைத்துக்கொண்டனர். நட்பு கருதி அவரும் வந்தார். அதன் பிறகு பெரும்பாலான வாரங்களில் கழிவறை சுத்தம் டாஸ்க் என்றாலே சென்றாயனின் பெயர் தன்னாலேயே இடம் பெற்று விடும். இதன் பின்னால் உள்ள உளவியலையும் அப்போதே பார்த்தோம். தோற்றத்தில் எளியவர்களாக உள்ளவர்கள் இந்தந்த வேலைக்குத்தான் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்கிற மேட்டிமைத்தனமான முன்தீர்மானம்தான் அதற்குக் காரணம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த ‘வழக்காடு மன்றம்’ பகுதியில் சிறந்த பங்களிப்பாளராக வைஷ்ணவியையும் மோசமான போட்டியாளராக சென்றாயனையும் ஜனனி தேர்ந்தெடுத்தது மோசமான தீர்ப்பு என்றே தோன்றுகிறது. அவரது மேட்டிமைத்தனம் மறுபடியும் செயல்பட்டது என்றே சொல்ல வேண்டும். 

போலவே இன்னொரு துரதிர்ஷ்டமான சம்பவமும் நடந்தது. கூட்டல் தொகையில் வந்த பிரச்னையால் ‘லக்ஸரி பொருட்களை’ இந்த வாரம் இழக்கக்கூடிய ஆபத்தில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இதுவரை நடந்திராத பிரச்னை இது. 

53-ம் நாளின் இந்த நிகழ்வுகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். 

**

பிக்பாஸ் வீட்டின் காலைப் பாடல் வழக்கமான உற்சாகத்திற்கு மாறாக சோகமாக இருந்தது. இதற்கான காரணம் வெளிப்படை. மறைந்த தலைவர் திரு.மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துயரச்சாயல் அடங்கிய பாட்டை ஒலிபரப்பினார்கள். ‘பாகுபலி 2’ திரைப்படத்தில் இருந்து ‘வந்தாய் ஐயா..’ பாடல் ஒலித்தது. போட்டியாளர்கள் ஆங்காங்கே சோகமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். 

காலையிலேயே சும்மா இல்லாமல் ரித்விகாவிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டார், வைஷ்ணவி. “நீ மேக்கப் போடாமலே அழகாத்தான் இருக்கே. இனி மேக்கப் போடாதே’ என்று அறிவுரை வழங்கினார். கேட்கப்படாத அறிவுரைகளுக்கு எப்போதுமே மதிப்பிருக்காது. “மேக்கப் போடாம அழகா இருக்கேன்னு எனக்கே தெரியும். எனக்கு தன்னம்பிக்கை இருக்கு. நான் வீட்ல எப்படி இருக்கிறேனோ, அப்படித்தான் இங்கயும் இருக்கேன். அதை ஏன் நீங்க சொல்றீங்க?” என்று ரித்விகா கேட்க.. ‘தப்புதாம்மா’ என்று வாயை மூடிக்கொண்டார், வைஷ்ணவி. ‘அவளைத் தொடுவானேன், கவலைப்படுவானேன்’. 

வைஷ்ணவி ஒருபக்கம் வெள்ளந்தியான பெண். ஆனால் எதையாவது சொல்ல வேண்டுமே என்கிற தவிப்பில் ஏடாகூடமாக சொல்லி மாட்டிக்கொள்கிறார். ‘மேக்கப் போடலைன்னாலும் போட்டாலும் இந்த வீட்டில் அழகா இருக்கிற ஒரே நபர் யாருன்னு சொல்லுங்க?” என்று காலாட்டிக்கொண்டே கேட்டார், சென்றாயன். அவர்தானாம். பக்கத்தில் பாலாஜி இருந்திருக்க வேண்டும். 

மும்தாஜின் உடல்நலத்திற்கேற்ப வீட்டு மக்கள் பல பணிகளை அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்கள். இந்த வாரம் பாத்திரம் கழுவும் பணியில் இருக்கும் அவர், ‘இன்னின்ன வேளைகளில்தான் தன்னால் பணிபுரியும்’ என்று சொல்ல டேனி அதற்கேற்ப தன் நேரத்தை மாற்றிக்கொண்டார். 

ஆனால், இதில் பிறகு நிறைய குழப்பம் ஏற்பட்டது. காலையுணவு பாத்திரங்கள் என்றால் எவை, அவற்றை யார் கழுவுவது” என்று ஒவ்வொரு வேளைக்குமான பணியைப் பிரித்துக்கொள்வதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும் சுணக்கமும் குழப்பமும் இருந்தது. தம்முடைய பங்கை சிக்கனமாக அமைத்துக்கொள்வதில் மும்தாஜ் கவனமாக இருந்தார். டீ கப்களை பிடித்து கழுவுவதில் எனக்கு சிரமம் இருக்கிறது என்கிற காரணத்தைச் சொன்னார். பொன்னம்பலத்தை கூப்பிடுவதைவிட கூப்பிடாமலேயே இருக்கலாம் என்று பேசிவிட்டு பிறகு பாலாஜியும் டேனியும் தாங்களே அந்த வேலையை எடுத்துக்கொண்டனர். 

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள் நிச்சயம் புன்னகைத்திருப்பார்கள். வீட்டில் மலையளவு விழும் பாத்திரங்களை மூன்று வேளையும் கழுவும் அவர்கள், ‘இதற்கா இவர்கள் இப்படி அடித்துக்கொள்கிறார்கள்?’ என்று சிரித்திருக்கலாம். பாத்திரம் கழுவுவது என்பது பேச்சிலர்கள் எதிர்கொள்ளும் இமாலயப் பிரச்னை. 

இந்தப் பஞ்சாயத்து பிறகு வேறு வழியிலும் ‘தொடர்கதையாக’ தொடர்ந்து கொண்டிருந்தது. பிக் பாஸ் எடிட்டிங் குழுவில் பணியாற்றிய ஒருவரின் நேர்காணலை முன்பு பத்திரிகையில் வாசித்தேன். ஏறத்தாழ அறுபது கேமராக்களின் வழியாக கிடைக்கும் ஏராளமான ஃபுட்டேஜ்களில் இருந்து தேர்ந்தெடுத்து சில சம்பவங்களை அதன் தொடர்ச்சியுடன் ‘ஒரு கதையாக’ தொகுப்பது இதிலுள்ள சவால்” என்றார் அவர். உண்மை. இந்த வகையில் பிக் பாஸ் எடிட்டிங் டீமின் அசுர உழைப்பிற்கு மிகப் பெரிய வந்தனம். 

**
“இந்த வீட்டில் சிலருக்கு நாம் அதிக இடம் தந்துவிட்டோம். அவர்கள் நம் தலையில் அமர்ந்து டான்ஸ் ஆடிவிட்டார்கள். நமக்குத்தான் இறுதியில் கெட்ட பேர் கிடைக்கிறது” என்பது போல் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். யாஷிகா தன் முகத்தில் அமர்ந்த ஈயை துரத்தி விட அது நேராக அருகிலிருந்த மஹத்தின் புகைப்படத்தின் மீது சென்று அமர கேமரா அதை ஃபோகஸ் செய்தது. என்னவொரு symbolic shot!

‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கில் சிறப்பாக மற்றும் மோசமாக பங்களித்தவர்களைப் பற்றி ரித்விகாவை அறிவிக்கச் சொன்னார், பிக் பாஸ். சிறப்பான பங்களிப்பாளராக, சிவப்பு அணியில் இருந்து ஜனனியையும் நீல அணியிலிருந்து ஐஸ்வர்யாவையும் தேர்ந்தெடுத்தார், ரித்விகா. தன் பெயர் அறிவிக்கப்பட்டதை நம்ப முடியாமல் சந்தோஷப்பட்டார், ஐஸ்வர்யா. 

இதில் ஜனனி என்பது சரியான தேர்வு. சற்று மிகையாக இருந்தாலும், சென்றாயனைப் போலவே நடப்பது, பேசுவது, ஆர்வக்கோளாறாக இருப்பது என்று சென்றாயனை நன்றாகவே நகலெடுத்தார், ஜனனி. சமயங்களில் பதினாறு வயதினிலே ‘சப்பாணி’ பாத்திரம்தான் ஞாபகம் வந்தது. சிறிய வித்தியாசத்தில் யாஷிகா வெற்றி வாய்ப்பை இழந்தார். 

ஆனால் நீல அணியில் ஐஸ்வர்யா தேர்ந்தெடுக்கப்பட்டது சரியான தேர்வாக தெரியவில்லை. பாத்திரத்தின் தன்மையை சேதப்படுத்தாமல், மிகையாக செய்யாமல் இயல்பாக நடித்தவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரித்விகா நினைத்திருக்கலாம். இதற்காக பாலாஜியைப் போல் பெரிதும் நகலெடுக்க முயன்ற வைஷ்ணவியை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஜனனியாக நடித்த ஐஸ்வர்யா அவ்வப்போது காமிராவின் முன்னால் கண்ணை உருட்டிக் கொண்டு, மஹத்தாக நடித்த பொன்னம்பலத்தின் அருகில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தாரே தவிர பிரத்யேகமாக எதையும் சிறப்பாக செய்யவில்லை. ஒருவேளை, இந்த under play-தான் அவருக்கு பரிசு பெற்றுத்தந்ததோ என்னமோ. 

வெற்றி பெற்ற ஜனனியும் ஐஸ்வர்யாவும் அடுத்த வார தலைவர் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகிறார்கள். 

மோசமான போட்டியாளராக சிவப்பு அணியில் இருந்து பொன்னம்பலமும் (ஐ லவ் யூ போபோ) நீல அணியில் இருந்து டேனியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதற்கான தண்டனையாக, வரும் இரண்டு நாட்களுக்கும் இவர்களே மொத்தமாக சமைக்க வேண்டுமாம். (இது இவர்களுக்கான தண்டனையா, இல்லை மற்றவர்களுக்கா?!).

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ மாதிரி டாஸ்க் என்று வந்து விட்டால் டேனி கூடுதல் ஆர்வத்தையும் உழைப்பையும் தருவார். ஆர்வக்கோளாறில் குறுக்கு வழியையையும் சமயங்களில் அவர் முயல்வதுண்டு. இந்த டாஸ்க்கில் யாஷிகா பாத்திரத்தில் அவர் செய்தது பல சமயங்களில் காமெடியாக இருந்தது என்றாலும் நிச்சயம் ஓவர்ஆக்ட். சமயங்களில் கண்றாவியாகவும் இருந்தது. மட்டுமல்லாமல் அது யாஷிகாவின் அசலான பாத்திரம் இல்லை என்பதால் மோசமான பங்களிப்பாளராக டேனி தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். 

சிறிய வித்தியாசத்தில் ஏன் யாஷிகா தோற்றுப் போனார் என்கிற காரணத்தை பிறகு ரித்விகா விளக்கிக் கொண்டிருந்தார். ‘எந்தச் சந்தேகமாக இருந்தாலும் குடுகுடுவேன்று ஓடி வந்து நடுவரிடம் மூச்சு விடாமல் பேசுவது வைஷ்ணவியின் வழக்கம். இதை வைஷ்ணவியாக நடித்த யாஷிகா ஒருமுறை கூட செய்யவில்லை’ என்பது ரித்விகாவின் அவதானிப்பு.

“மோசமான போட்டியாளராக மஹத்தை தேர்ந்தெடுத்திருந்திருக்கலாம்’ என்பது மும்தாஜின் அபிப்ராயம். ‘உடம்பு சரியில்லை’ என்று பாதி நேரம் மஹத் தூங்கிக் கொண்டிருந்தாராம். பிறகு இதை பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘உடம்பைக் காட்டி’ மஹத்தை மோசமான போட்டியாளர் என்று நீங்கள் சொல்ல முடியாதில்லையா?” என்றார் பாலாஜி. ஒருபுறம், உடல் ஆரோக்கியம் என்றும் இதற்குப் பொருள் வருகிறது. மும்தாஜின் பாத்திரத்தில் மஹத் ‘உடம்பைக் காட்டிய’ என்றும் பொருள் வருகிறது. 

என்றாலும் மும்தாஜிற்கு நடுவரின் தீர்ப்பு ஓகேதானாம். இது நடுவருக்குமான சோதனைதான். அவர் எப்படி பாரபட்சமில்லாமல் நடந்து கொள்கிறாரா என்று பிக்பாஸ் சோதிப்பாராம். இப்படியாக தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார் மும்தாஜ். 

லக்ஸரி டாஸ்க்கிற்கான மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 2200 மதிப்பெண்களோடு நீல அணி செய்த சீக்ரெட் டாஸ்க்கிற்காக 500 மதிப்பெண்கள் இணைந்து 2700 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. என்றாலும் சிவப்பு அணி இவர்களின் சீக்ரெட் டாஸ்க்கை கண்டுபிடித்து விட்டதால் 200 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு 2500 மதிப்பெண்கள் நிகரமாக கிடைத்தது. (‘கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்டி’ தத்துவத்தை சிறப்பாக பின்பற்றுகிறார் பிக்பாஸ்). ‘கடவுள் இருக்கான் குமாரு” என்று சென்றாயனிடம் புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி.

தரப்பட்ட மதிப்பெண்களுக்கு மிகையாக பொருட்களை தேர்வு செய்தால் ஒட்டுமொத்த பொருட்களையும் இழக்க நேரிடும் என்பது பிக்பாஸ் விதி. இன்று பொருட்களின் மதிப்பை எழுதி அதன் கூட்டுத் தொகையை ஜனனி போட்டுக் கொண்டிருந்தார். ஆளுக்கு ஆள் பொருட்களை சொல்லி அதன் மதிப்பையும் சொல்லி கத்திக் கொண்டிருக்க, இறுதியில் தரப்பட்ட மதிப்பையும் விட அதிக பொருட்களை தேர்வு செய்த தவறை போட்டியாளர்கள் உணர்ந்தார்கள். மஹத் இதை முதலில் கண்டுபிடித்தார். 7 + 4 = 11 என்று மும்தாஜ் கத்தியதால் அப்படியே போட்டு விட்டேன் என்று ஜனனி சொல்லிக் கொண்டிருந்ததை “ஏன் என் பெயரையே சொல்லிட்டிருக்கே?” என்று பிறகு மும்தாஜ் கோபித்துக் கொண்டார். 

இதில் ஜனனியின் தவறு பெரிதாக இல்லை. அவசரத்திலும் பதட்டத்திலும் அவர் மற்றவர்கள் சொன்ன கூட்டுத்தொகையை அப்படியே போட்டு விட்டார். சற்று நிதானித்து சரி பார்த்திருக்கலாம். “உன் மேலதான் தப்பா?” என்று ஆளுக்கு ஆள் விசாரிக்க “ஆமாம்’ என்று பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டார் ஜனனி. பிக்பாஸ் கருணை காட்டுவாரா அல்லது விதிகளை கறாராக பின்பற்றுவாரா என்பது பிறகுதான் தெரியும். பாவம், அத்தனை பேரின் உழைப்பும் ஒரு சிறிய தவறால் பறி போகிறது. 

வாழைப்பழத்தால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சிறு பிள்ளைகள் போல் விளையாடிக் கொண்டிருந்தார்கள் பாலாஜியும் சென்றாயனும். உணவுப் பொருட்களை வீணாக்கக்கூடாது என்பது பிக்பாஸ் வீட்டின் விதியாற்றே. என்றாலும் இந்த நாடகம் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது. சிதறிய வாழைப்பழத் துணுக்குகளை பிறகு சென்றாயன் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். (நல்ல வேளை, வீட்டில் பலாப்பழம் இல்லை!).

ஒட்டுமொத்த வீட்டிற்கும் சமைக்க வேண்டும் என்கிற தண்டனை டேனிக்கும் பொன்னம்பலத்திற்கும் தரப்பட்டிருக்கிறது. எனவே பாத்திரம் கழுவும் பணியையும் இணைத்து செய்ய முடியாது என்பது டேனியின் தரப்பு. ஆனால் ‘அதையும் சேர்த்துதான் செய்ய வேண்டும், அதுதானே தண்டனை’ என்பது மும்தாஜ், வைஷ்ணவி, ஜனனி ஆகியோரின் வாதம். விதிப்படி பார்த்தால் இது சரிதான் என்றாலும் மனிதாபிமானப்படி பார்த்தால் சரியில்லை. மூன்று வேளை சமையல் பணியையும் கவனித்துக் கொண்டு பாத்திரம் கழுவுவதையும் அவர்களின் தலையில் போடுவது முறையானதல்ல. மும்தாஜின் உடல்நிலையைக் கருதி மற்றவர்கள் கூடுதல் சுமையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் போது, அந்தக் கருணையை மும்தாஜ் திருப்பிக் காட்டாமல் இருப்பது சரியல்ல. இந்த விஷயத்தை டேனியிடம் போட்டுக் கொடுத்த யாஷிகா (ஒரு தலைவராக அவர் இதைச் செய்வது சரியல்ல) பிறகு குழப்பத்துடன் பிக்பாஸின் ஆலோசனையைக் கேட்டுக் கொண்டிருந்தார். 

டேனியின் கிண்டலால் தன் மனம் தொடர்ந்து புண்படுவதைப் பற்றி கண்ணீருடன் பேசிக் கொண்டிருந்தார் வைஷ்ணவி. “என்னதான் கேம் பிளான் என்றாலும் அவர் காரெக்ட்ர் அஸாஸினேஷன் செய்யறது சரியில்லை’ என்பது அவருடைய வருத்தம். “நான் நெனச்சன்னா இந்த வீட்டில் இருக்கிற ஒவ்வொருத்தரையும் அஞ்சே நிமிஷத்துல பீஸ் பீஸாக்கிடுவேன்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். “உன் உள்மனசு ஸ்ட்ராங்கா இருந்ததுன்னா.. யாரும் உனக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியாது” என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார் மும்தாஜ். 

தன்னுடைய கிண்டலால் ஒருவரின் மனம் புண்படுகிறது என்றால் அதை நிறுத்துவதுதான் நியாயம். டேனி இதைச் செய்வது உண்மையென்றால் முறையானதல்ல.

“இந்த விளையாட்டை தெளிவான திட்டத்துடன் விளையாடும் டேனி அந்த அளவில் வெளிப்படையான நேர்மையுடன் இருக்கிறார். அதில் போலித்தனம் காட்டுவதில்லை’ என்று டேனிக்கு சான்றிதழ் வழங்கவும் வைஷ்ணவி தவறவில்லை. 

இந்த விஷயத்தைத்தான் நானும் பல முறை கூறிக் கொண்டிருக்கிறேன். டேனியின் அணுகுமுறைகளில் சிலபல தவறுகளும் குறுக்குவழிகளும் இருந்தாலும், இந்த ‘survival of the fittest’ விளையாட்டை சரியாகப் புரிந்து கொண்டு ஆடுபவர்களில் டேனி முதன்மையாக இருக்கிறார். இதற்காக சமயங்களில் மற்றவர்களைத் தள்ளி விட்டுத்தான் ஓட முடியும். இந்த விளையாட்டின் அராஜகத்தன்மை அப்படியிருக்கிறது. 

ஆனால் டேனிக்கு ஆதரவான வைஷ்ணவியின் அபிப்ராயத்தை, பாலாஜியும் மும்தாஜூம் ஒப்புக் கொள்ளவில்லை. டேனி மீது கோபமும் வருத்தமும் ஒருபுறம் இருந்தாலும் அவரின் நேர்மையான பக்கத்தை ஒப்புக் கொண்ட வைஷ்ணவியின் முதிர்ச்சி பாராட்டத்தக்கது. 

இந்த உரையாடல் நகரும் போக்கில் வைஷ்ணவி செய்த தவறொன்றை பாலாஜியும் மும்தாஜூம் அழுத்தமாக சுட்டிக் காட்டினர். மஹத் பெண் வேடம் போட உதவியவர்களுள் வைஷ்ணவியும் ஒருவர். “ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு பெண்ணுக்கு அவமதிப்பு நேர நீங்கள் உதவியிருக்கலாமா?” என்கிற மும்தாஜின் கேள்வி சரியானது. “மும்தாஜ் எப்போதாவது நிஜ வாழ்வில் அப்படி நடந்திருக்கிறாரா, இது அபாண்டமானது இல்லையா?” என்று பாலாஜி கேட்பதும் நியாயமானதே. கோக்குமாக்கான விதிகளைக் கொண்ட இந்த விளையாட்டில் முன்னேறுவது ஒருபக்கம் முக்கியம்தான் என்றாலும் சில தார்மீகமான எல்லைகளை மீறுவது அறமல்ல.

சமீபத்தில் மறைந்த திரு.கருணாநிதிக்கு அஞ்சலியையும் அவர் தொடர்பான தகவல்களையும் நினைவுகளையும் பகிரச் சொல்லி போட்டியாளர்களை பிக்பாஸ் கேட்டுக் கொண்டார். இதுவரை தாம் சந்தித்த தேர்தல்கள் எதிலும் தோல்வியே காணாதது முதல், நேரு முதல் மோடி வரை பல பிரதமர்களை பார்த்து விட்ட ராஜதந்திரியான அரசியல் பிதாமகரைப் பற்றிய நினைவுகளையும் நல்ல சொற்களையும் போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டார்கள். 

**

அடுத்த டாஸ்க் ‘வழக்காடு மன்றம்’. போட்டியாளர்களின் மனதில் உள்ள குப்பைகளை வெளியே கொட்டும் உத்திகளில் இதுவும் ஒன்று. தரப்பட்டிருக்கும் தலைப்பின் சார்பாக இரண்டு நபர்களும் எதிர்த்து இரண்டு நபர்களும் பேச வேண்டும். நடுவர் ஜனனி. இதிலும் சிறந்த மற்றும் மோசமான போட்டியாளர் உண்டு. 

‘பிக்பாஸ் வீட்டின் தலைவரின் முடிவுகள் எதைச் சார்ந்து இருக்க வேண்டும்? – பரிவு மற்றும் அக்கறையுடனா?’ அல்லது நேர்மை மற்றும் நியாயமாகவா? என்பது முதல் தலைப்பு. முன்னதின் சார்பாக பொன்னம்பலமும் டேனியும், பின்னதின் சார்பாக பாலாஜியும் ரித்விகாவும் பேசினார்கள். 

பரிவு மற்றும் அக்கறையின் சார்பில் பேசிய டேனி ‘டாஸ்க்கின் விதிமுறைகளைப் புரிந்து கொண்டு விளையாடுவது சென்றாயனின் வேலை என்றாலும் பரிவும் அக்கறையும் கொண்டு அதை அவருக்கு பொறுமையாக விளக்குவது ஒரு தலைவரின் பொறுப்பு’ என்பது போல பேசினார். 

இதை மறுத்துப் பேசிய ரித்விகா, ‘இப்போதைய தலைவர் யாஷிகாவை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். மும்தாஜின் உடல்நிலை குறித்து அவருக்கு பரிவும் அக்கறையும் இருந்தாலும். மும்தாஜ் தூங்கும் போது நியாயமாக சென்று எழுப்புவதுதான் சரியானது.” என்பது போல் ‘பசுபதி.. நேர்மைடா.. நியாயம்டா… ‘என்று நாட்டாமையாக மாறி ரித்விகா பேசினார். 

“கோட்பாடுகளுக்குள் அடங்குவதல்ல. தலைமைப் பொறுப்பு. அதனோடு பரிவும் அக்கறையும் இருந்தால்தான் செயல்கள் மேம்படும்” என்று டேனி பேசினார். ‘டேனி பேசியது நியாயமாகத் தெரிகிறது’ என்று அந்த அணியின் சார்பாக தீர்ப்பு வழங்கினார் நடுவர் ஜனனி. பேசுவதற்காக ஆர்வத்துடன் கைதூக்கி வந்திருந்த பொன்னம்பலம் ஐயா, ஒரத்தில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு ‘ஆமாமாம். அவர் சொல்றது சரிதான்’ என்று பின்தாளம் போட்டுக் கொண்டிருந்தார். 

‘அனைவருக்கும் உணவு இங்கு சமமாக கிடைக்கிறதா?’ என்பது அடுத்த தலைப்பு. இதற்கு பேச வந்த சென்றாயன் சேம் சைட் கோல் போட்டு உளறிக் கொட்டி பின்பு தம் தரப்புதான் சரி என்று அழுத்தமாகச் சொன்னார். உளறிக் கொண்டிருந்த சென்றாயனின் கையை சக பேச்சாளரான ஐஸ்வர்யா பிடித்திழுக்க.. ‘அட இரு புள்ள மாமன் பேசிட்டு வந்துடறேன்’ என்று அடம்பிடித்து பேசினார் செண்டு.  வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட ஜனனி ‘சமமாக உணவு கிடைப்பதில்லை’ என்கிற அணியின் சார்பில் தீர்ப்பளித்தார். இந்த தலைப்பின் மூலம் போட்டியாளர்களின் தனிப்பட்ட குறைகளும் வெளியே வந்தன. ‘தல நீ கலக்கு’ என்பது மாதிரி உற்சாகத்துடன் சென்றாயனுக்கு ஆதரவு தந்தார் மஹத். 

பிக்பாஸ் போட்டிக்கு வந்த நோக்கத்தை மறந்து பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆம் அல்லது இல்லை என்பது அடுத்த முக்கியமான தலைப்பு. 

‘வாழைப்பழத் தமிழில்’ பேசிய ஐஸ்வர்யா ‘விளையாட்டை மறந்து விட்டோம்’ என்பதை தன்னை முன்னுதாரணமாக கொண்டு பேசினார். ‘இங்க நெறைய பிரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க’ என்று முடித்த அவர் சொன்னதின் உள்ளடக்கம் என்ன என்பதே புரியவில்லை. இதற்கு பதிலான யாஷிகாவின் பிரதிவாதப் பேச்சும் புரியவில்லை. இது அவர்களுக்கு உள்ளான உள்தகராறு போல. 

“பைனல்ல வர்றதுக்குத்தான் இங்க எல்லோருமே வந்திருக்கோம். பிடிக்காமலலாம் இல்ல. ‘கிளம்புங்கப்பா’ ன்னு பிக்பாஸ் இப்ப சொன்னா எத்தனை பேர் உடனே பெட்டியைக் கட்டிக்கிட்டு கிளம்புவோம்? நேர்மையா சொல்லுங்க..” என்று நேர்மையாகப் பேசினார் டேனி. “நெறய பேர் இங்க மறந்துட்டாங்க. ஆனா டேனி மட்டும்தான் முதல்ல இருந்தே விளையாட்டு பற்றிய கான்ஷியஸோட விளையாடறார். ஆனா அவர் கூட இன்னிக்கு தூங்கிட்டார்’ என்று சந்தடி சாக்கில் டேனியை குத்திக் காட்டினார் மஹத். 

“அப்பப்ப சில பேர் மறந்துட்டாலும் நெறய பேர் ஃபோகஸோடதான் இருக்காங்க” என்று தீர்ப்பளித்தார் ஜனனி. 

அடுத்தது கட்டுரையின் துவக்கப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்த தலைப்பு. ‘கழிவறையை சுத்தம் ஏன் பலர் முன்வருவதில்லை?” என்பது உண்மையா, இல்லையா.

சென்றாயன் தன் வாதத்தை வலுவாக எடுத்துரைத்தார். மும்தாஜ் வருவதில்லை என்று இவர் சொன்ன போது, தனது ஸ்பெஷலான முகபாவத்தைக் காட்டினார் மும்தாஜ். “இல்லை.. இதற்கும் வருகிறார்கள்” என்பதை ‘கஸ்மால’ உதாரணங்களுடன் மறுத்தார் வைஷ்ணவி. ‘கக்கூஸ்ல ‘கல்லாப்பெட்டி’ (?!) இருந்தது உண்மைதான். ஆனா இவங்க க்ளீன் பண்ணாம ஏன் ரித்விகா கிட்ட சொன்னாங்க?” என்று சென்றாயன் வலுவான கேள்வியை முன்வைத்தவுடன் அதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தார் ரித்விகா.

“கழிவறை செய்யும் பணிக்கு வர்றாங்க.. ஆனா.. சும்மா கணக்கு காட்டறதுக்குத்தான் வர்றாங்களே.. தவிர.. உண்மையா செய்யறதில்லை’ என்கிற ஆதங்கத்தைப் பொதுவில் போட்டு உடைத்தார் சென்றாயன். “ஆனால் அது தலைப்பிற்கு தொடர்பில்லாதது. முன்வருகிறார்களா, இல்லையா என்பதுதான் தலைப்பு’ என்று கறாராக இருந்தார் நடுவர். ‘மற்றவர்கள் கணக்கிற்காக கழிவறையை கழுவுவதற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சென்றாயன் கழுவுதற்கும் வித்தியாசம் இருக்கிறதா, இல்லையா?” என்று பாலாஜி கேட்டவுடன் சென்றாயனுக்கு சார்பாக உற்சாகக் குரல்கள் எழுந்தன. “ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் முழுமையாகச் செய்கிறார்களா என்பது வேறொரு தலைப்பு’ என்றார் ஜனனி. 

இந்த விவாதத்தில் சிறந்த பங்களிப்பாளராக வைஷ்ணவியையும் மோசமான பங்களிப்பாளராக சென்றாயனையும் ஜனனி தேர்ந்தெடுத்தது பாரபட்சமான தீர்ப்பு. மற்ற விஷயங்களில் உளறிக் கொட்டினாலும் ‘கக்கூஸ்’ விஷயத்தில் பல சிக்சர்களை அடித்தார் சென்றாயன். போலவே சிறந்த பங்களிப்பு என்கிற முறையில் தன் தரப்பு வாதங்களை அருமையாக முன்வைத்த டேனியை தேர்ந்தெடுத்திருக்கலாம். 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘யாரு ஸ்பூனை கழுவுவது.. யார் ஸ்பூனின் அடிப்பாகத்தை கழுவுவது” என்கிற விவாதங்களுடன் மிச்சமுள்ள இன்றைய நாளை எப்படியாவது கழித்து விட்டால் நாளை பஞ்சாயத்து நாள். பார்ப்போம்.