Published:Updated:

டியர் கமல்... அப்படி மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்! #BiggBossTamil2

சுரேஷ் கண்ணன்
டியர் கமல்... அப்படி மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்! #BiggBossTamil2
டியர் கமல்... அப்படி மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்! #BiggBossTamil2

வெள்ளிக்கிழமை எந்தவொரு திரைப்படம் வெளியானாலும், சம்பந்தப்பட்ட படத்தின் குழுவை இனி பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. அந்தளவிற்கு இந்த வீடு ‘பிரமோ இல்லம்’ ஆக மாறியிருக்கிறது. ஆனால் இந்த வாரம் வந்த நபர்கள் ஒரு கோணத்தில் பொருத்தமானவர்கள். அவர்களுக்கும் பிக்பாஸ் வீட்டிற்கும் ஒரு கடந்தகால உறவு இருக்கிறது. 

ஆம்! பிக்பாஸ் சீஸன் ஒன்றின் போட்டியாளர்களான ஹரீஷ் மற்றும் ‘நாக்அவுட்’ புகழ் ரைசா வந்திருந்தார்கள். ஹரீஷ் இயல்பாக இருக்க, ரைசா நடிகையாகி விட்ட தோரணையுடன் கெத்துடன் இருந்தார். பேப்பரில் செய்த ஒரு விநோதமான உடையை பசை போட்டு அவர் மேல் ஒட்டி அனுப்பியிருந்தார்கள். ‘இவர்களைப் போல நமக்கும் ஒரு லாட்டரி அடிக்குமா’ என்கிற ஏக்கத்தையும் நம்பிக்கையையும், இளம் போட்டியாளர்களுக்கு ஹரீஷ் – ரைஸா ஜோடி தந்திருக்கக்கூடும். 

அது என்னமோ தெரியவில்லை, சீஸன் ஒன்றில் கலந்து கொண்டவர்கள் இங்கு திரும்பும் போது முன்னாள் ஐஐடி மாணவர்கள் போல.. ‘நாங்கள்லாம் எப்படி இருந்தோம் தெரியுமா.. நீங்கள் என்ன செய்யறீங்கன்னா..” என்று உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். முதல் சீஸனிலும் ஏறத்தாழ இப்படித்தான் இருந்தது. என்னவொன்று, அவர்கள் ஆழமாக நம் மனதில் பதிந்ததைப் போல இரண்டாம் சீஸன் ஆசாமிகள் பதியவில்லை. இந்த விளையாட்டு தொடர்பான பல விநோதமான விதிகள் நமக்குப் பழகி விடுவதால்  அடுத்த சீஸனில் இது இன்னமும் குறையும் போலிருக்கிறது. ‘இது வீடு இல்ல கோயில்’ என்றெல்லாம் விடைபெறுவதற்கு முன் மிகையாக உணர்ச்சிவசப்பட்டார் ஹரீஷ்.  மக்களுக்கு பரிச்சயம் தரும் வகையில் ஹீரோவாக்கிய வீடு ஆயிற்றே!!

53-ம் நாளின் சம்பவங்கள் தொடர்கின்றன. ‘வழக்காடு மன்றம்’ பகுதியை முடித்த போட்டியாளர்கள் அது குறித்து தங்களின் உரையாடலை வெளியே தொடர்கிறார்கள். வீராவேசமாக சென்றாயன் பேசியதால் ‘இனி மேல் நீ தான் என் தல’ என்று உற்சாகமடைந்தார் மஹத். “கழிவறை சுத்தம் செய்யும் பணிக்கு மக்கள் தாமாக முன்வருகிறார்கள்’’ என்கிற புராணத்தை இன்னமும் பாடிக் கொண்டிருந்தார் ஜனனி. அது பொய் என்பது அவருக்கே தெரியும். பாலாஜியும் ரித்விகாவும் இதை அவருக்கு புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார்கள். ‘இது உண்மையா இருந்தாலும் ஆர்க்யூமெண்ட் செய்யற விஷயத்தைத்தான் நான் பார்க்க முடியும்” என்றார் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜனனி. 

ஐஸ்வர்யாவிற்கும் யாஷிகாவிற்கும் இடையே மறுபடியும் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது போல. இவர்கள் என்றல்ல, பிக்பாஸ் வீட்டில் பலரும் முந்தைய கணத்தில் சிரித்து பேசி விட்டு அடுத்த காட்சியிலேயே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இதில் எது உண்மை? 

அமீர்கான் நடித்திருக்கும் தொலைக்காட்சி விளம்பரம்தான் நினைவிற்கு வருகிறது. ‘உர்’ரென்று முறைத்து சண்டை போடும் நாயையும் பூனையையும் கைபேசியில் உள்ள தொழில்நுட்ப மாய்மாலத்தால் மழுப்பி, அவை சிநேகமாக இருப்பது போல் புகைப்படம் எடுப்பார் அமீர்கான். பிக்பாஸ் காமிராக்காரரும் நமக்கு அப்படித்தான் காட்டுகிறார் போல. 

இதைப் போல இன்னொரு விஷயமும் அடிக்கடி நடக்கிறது. நாயிடமும் பூனையிடமும் தனித்தனியாக ‘நல்ல பெயர்’ வாங்கும் அமீர்கானைப் போலவே, பிக்பாஸ் மக்களும் நபரைப் பொறுத்தவாறு பேசி ‘எல்லோருக்கும் நல்லவராக’ இருக்க முயல்கிறார்கள். 

எந்தவொரு சிறு விமர்சனத்தையும் தாங்க முடியாத பக்குவமின்மையோடு இருக்கிறார் ஐஸ்வர்யா. இவரை விடவும் குறைந்த வயதுள்ள யாஷிகா, (அப்படித்தான் சொல்கிறார்கள்) பல சமயங்களில் மன முதிர்ச்சியோடு நடக்கும் போது, ஐஸ்வர்யா குழந்தைத்தனமாக இருக்கிறார். ‘யாஷிகாவின் உதவியால்தான் ஐஸ்வர்யா இத்தனை தூரம் வந்திருக்கிறார் என்று டேனி சொல்லி விட்டாராம். வேறு சிலரும் இவரைப் பற்றி ‘insecurity’ என்று என்னென்னமோ கமெண்ட் அடிக்கிறார்களாம்’. இதை அவர் வைஷ்ணவியிடம் சொல்லிக் கொண்டிருக்க, மஹத்தும் வைஷ்ணவியும் சேர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘கடவுள் இருக்கான் ஐஸூ, கவலைப்படாதே’ என்றார் மஹத்தானந்தா.

‘வாரா வாரம் டாய்லெட் க்ளீனிங் கொடுத்தா கூட நான் செய்வேன். ஒரு பிரச்னையும் கிடையாது’ என்று ஜனனி சொல்லிக் கொண்டிருந்த பாவனையுடன் இன்றைய நாள் முடிவடைந்தது. 

**

54-ம் நாள். ‘கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம்’ என்கிற குத்துப்பாடலைப் போட்டு வீட்டை தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டார் பிக்பாஸ். 

“ஐஸ்வர்யாவிற்கு நான் எத்தனையோ விதங்களில் ஆதரவாக இருந்து விட்டேன். அவள் பாராட்டை அதிகம் எதிர்பார்க்கிறாள். எதிரிலிருக்கும் நபர் என்ன சொல்கிறார் என்பதை காதில் வாங்காமலேயே பேசத் துவங்கி விடுகிறாள்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் யாஷிகா. ‘ஆமாம்.. ஐஸ்வர்யா என்ற பெயரைச் சொன்னாலே.. அவ ரியாக்ட் செய்ய ஆரம்பிச்சடறா” என்கிற பழைய புராணத்தை மறுபடியும் பாடிக் கொண்டிருந்தார் ஜனனி. 

உன்னைப் போல் ஒருவன் டாஸ்க்கில் “Best performer’ –ன்ற விருதை என்கரேஜ் செய்வதற்காகவா ஐஸ்வர்யாவிற்கு தருவது? பிக்பாஸ் ஏற்கெனவே நிறைய விஷயங்களில் அவரை என்கரேஜ் செய்து விட்டார். உண்மையிலேயே சிறப்பாக செய்தவர்களுக்குத்தானே விருது தர வேண்டும்?’ என்ற விஷயத்தைப் பற்றி டேனியும் யாஷிகாவும் பேசிக் கொண்டிருந்தனர். ஆம், பிக்பாஸூம் ஐஸூவின் தீவிர ரசிகர் போலிருக்கிறது. அவர் இந்த வீட்டில் இருந்து சென்று விடாமலிருக்கவும், அவரைப் பிரிய மனமில்லாமலும் சில விஷயங்களைச் செய்கிறார் என்று தோன்றுகிறது. ஐஸ்வர்யாவிற்கு சில கதவுகள் எளிதாகத் திறக்கின்றன என்று தோன்றுகிறது. 

‘கூட்டுத் தொகையில் நேர்ந்த பிசிறால், இந்த வாரத்தின் லக்ஸரி பட்ஜெட்டை இழந்து விட்டோம்’ என்கிற தகவலை தலைவி யாஷிகா அறிவித்தார். ‘தானொரு தீவிர கல்லுளி மங்கன்’ என்ற செய்தியை இதன் மூலம் பிக்பாஸ் மறுபடியும் உறுதிப்படுத்தினார். “என்னாலதான் தப்பு. எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க” என்கிற பெருந்தன்மையை ஜனனி மறுபடியும் காட்டினார். ‘கணக்கில் புலியாக இருப்பதைக் காட்டினாலும் பதட்டமின்றி செயல்படுபவரே அந்தச் சமயத்தில் தேவையானவர்’ என்று பேசிக் கொண்டார்கள். இமாலய உழைப்பும் கூட ஒரு சிறிய தவறால் தலைகீழாகும் என்கிற செய்தி இதன் மூலம் கிடைக்கிறது. 

யாஷிகாவின் தலைவர் பொறுப்பு முடிவடைவதால் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம் இது. ஜனனியும் ஐஸ்வர்யாவும் இதற்கான தகுதியை ஏற்கெனவே பெற்று விட்டார்கள். எனவே அவர்கள் இருவருக்கும்தான் போட்டி. 

நீச்சல் குளத்தின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் பலகையின் மீது நின்று ஒரு விளையாட்டுக் கருவியின் மூலம் இருவரும் மோதிக் கொள்ள வேண்டும். ஒருவர் மற்றவரை நீச்சல் குளத்தில் தள்ளி விட வேண்டும். மூன்று சுற்றாக நடக்கும் இந்தப் போட்டியில் இரண்டு முறை வெற்றி பெறுபவர் தலைவர் ஆவார். 

உடல் பலத்தில் ஒப்பிடும் போது ஜனனியை விடவும் ஐஸ்வர்யா அதிக வலிமையானவர். மட்டுமல்லாமல், இப்போது கோபத்தில் வேறு இருக்கிறார். இந்த விஷயத்தில் ஜனனிக்கு நம்பிக்கையே இல்லை. எனவே ஐஸ்வர்யா எளிதாக வென்று தலைவி ஆனார். ஆக.. இரண்டாவது முறை தலைவியாகும் பொறுப்பை பெருமிதத்துடன் ஏற்கிறார் ஐஸூ.

‘இந்த முறை நல்ல தலைவராக இருப்பேன்’ என்கிற உறுதிமொழியைச் சொன்னார் ஐஸ்வர்யா. (அரசியல்வாதிகளும் ஒவ்வொருமுறையும் இதையேத்தாம்மா சொல்றாங்க!) அதை உறுதிப்படுத்தும்விதமாக, ‘உங்களுக்குப் பிடித்த அணியை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்கிற மெகா சலுகையை உடனே வழங்கினார். 

சமையல் டீமிற்காக உடனடியாக கர்ச்சீப் போட்டு இடம் பிடிக்க முயன்றார் மும்தாஜ். உலகமே கவிழ்ந்தாலும் ‘தனக்கான டீயை தான்தான் போடுவேன்’ என்கிற உறுதியில் இருக்கிறார் போல. இது தொடர்பாக ஏற்பட்ட குழப்பங்கள், பேரங்களுக்குப் பிறகு சமையலில் யாஷிகா, டேனி, சென்றாயன், (டேனியின் தண்டனைக்காலம் முடியவில்லை என்பதால்). பாத்திரம் கழுவுவதில் ரித்விகா, ஜனனி, மஹத், கழிவறை சுத்தத்தில் பாலாஜி, வைஷ்ணவி, பொன்னம்பலம் ஆகியோர் இருப்பார்கள். 

ஜனனி எளிதாக தோற்று விட்டதை, ‘குயிலைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு’ என்கிற பாடலைப் பாடி கிண்டலடித்துக் கொண்டிருந்தார் பொன்னம்பலம். 

**

‘பியார் பிரேமா காதல்’ (யார் இந்த பிரேமா?!) திரைப்படக் குழுவினர் ‘பிரமோ’விற்காக வீட்டிற்குள் வந்தார்கள். நாயகன் ஹரீஷ், நாயகி ரைசா, இயக்குநர் இலன் ஆகியோர் வந்தனர். வீட்டின் வடிவமைப்பு நிறைய விதங்களில் மாறியிருப்பதை வியந்தார் ரைசா. ‘டல்’லாக இருந்த மஹத்தை ‘சியர்அப் மேன்’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார் ஹரீஷ். விருந்தினர்களைப் பார்த்தவுடன் வழக்கம் போல் மிகையாக உற்சாகமானார் சென்றாயன். டீ போட்டு எடுத்து வந்து தந்தார்.

வீட்டின் மக்களை இன்னமும் குழப்புவதற்கான கேள்விகளுடன் இந்தக் குழுவை பிக்பாஸ் அனுப்பியிருந்தார் என்பது வெளிப்படை. டேனியும் மஹத்தும் ‘ரைசா’வை ப்ரபோஸ் செய்ய வேண்டும் என்பது முதல் விளையாட்டு. ‘ஆனா டச் பண்ணாதீங்க’ என்று இயக்குநர் எச்சரிக்க, ‘நீங்க ஏண்ணே டென்ஷன் ஆவறீங்க?” என்றார் மஹத். ‘அவர் யூ சர்ட்டிபிகேட் டைரக்டர்..அதான்” என்று டைமிங்காக சொன்னார் ஹரீஷ். (டிரைய்லரைப் பார்த்தா அப்படித் தெரியலையே?!).

மணிரத்னம் படத்தில் வரும் பாத்திரங்களைப் போல ரைசாவிடம் குசுகுசுவென்று ஏதோ சொன்னார் மஹத். கலைடாஸ்கோப் மாதிரி மாறும் ரைசாவின் முகபாவங்கள் ஏற்கெனவே உலகப் பிரசித்தி பெற்றது. “மேடம் மணி என்ன ஆச்சு.. இந்த டிரையின் எந்த பிளாட்பார்ம்ல வரும்” என்று எவரோ கேட்டதைப் போன்ற முகபாவத்துடன் இருந்தார் ரைசா.

அடுத்ததாக, டேனி காதலை தெரிவிக்க வேண்டும். வழியும் தலைமுடியும் தாடியுமாக இருக்கும் டேனியை குளோசப்பில் பார்க்கும் நமக்கே டெரராக இருக்கும் போது ரைசா அதிர்ந்து பின்வாங்கியதில் தவறில்லை. ‘பாலைவனத்தில் பூத்திருக்கும் பூ நீ” என்று கவிதைத்தனமாக துவங்கி ‘ஐம்பத்தைந்து நாள் உள்ளே இருந்து காய்ஞ்சு போயிருக்கேன்’ என்கிற உண்மை வரை ஏதோ சொல்லி காலில் விழுந்தார் டேனி. ‘ரெண்டு பேரையும் பிடிச்சிருக்கு. ஆனா ஹரீஷைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று மஹத்தையும் டேனியையும் ரிஜக்ட் செய்தார் ரைசா.

சென்றாயனுக்கும் ஒரு வாய்ப்பு தரப்பட்டது. ‘ரைசா.. உன்னை பார்த்தது முதல் ஆகிட்டேன் ஒரு சைஸா..’ என்று ஆரம்பித்து மனைவியிடம் அனுமதி வாங்கிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற பழைய ஜோக்கை சொல்லி முடித்தார். 

அடுத்தது, யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் ஹரீஷிடம் ப்ரபோஸ் செய்ய வேண்டும். ஒட்டிப்பிறந்த ரெட்டைக்குழந்தைகள் மாதிரி இருவரும் சேர்ந்து வந்து ஹரீஷிடம் என்னென்னமோ சொன்னார்கள். காதல் உணர்ச்சி வரவில்லை. எரிச்சல்தான் வந்திருக்கும். 

“இங்க ஏன் எல்லோரும் ரொம்ப இறுக்கமா இருக்கீங்க.. யார் கிட்டயுமே தனித்தன்மை இல்ல. முதல் சீஸன்ல பதினைஞ்சு பேரும் பதினைந்து விதமா இருந்தோம். டாஸ்க்ல சீரியஸா இருக்கணும். மத்த சமயத்துல ப்ரீயா இருக்கணும். உல்ட்டாவா இருக்கீங்க” என்று மஹத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஹரீஷ். கழிவறையைச் சுற்றிப் பார்க்கச் சென்ற ரைசா, ஆங்கிலத்தில் பேசி விட நீச்சல் குள தண்டனைக்கான சைரன் ஒலித்தது. (இது பிக்பாஸால் நடத்தப்பட்ட நாடகம் என்பது நன்றாகவே தெரிந்தது). தண்டனையை ஏற்க, நீ.. நான் என்று எல்லோரும் தயங்க, ரைசா ரசிகர் பேரவையின் தலைவரான பாலாஜி யாரும் சொல்லாமலே முதல் ஆளாக குளத்தில் இறங்கினார். “லேடீஸ்ல ரெண்டு பேரு போங்க’ என்று நியாயமான அபிப்ராயத்தைச் சொன்னார் ஹரீஷ். ‘நான் எப்பவும் ஸ்விம்மிங் ஃபூல்’ பக்கம் போக மாட்டேன்’ என்றார் மும்தாஜ். எனவே வேறு சில கோயிஞ்சாமிகளைத் தேடிப்பிடித்து குளத்தில் இறக்கிவிட்டார்கள். பெண்களின் சார்பில் ரித்விகா வந்தார்.

அடுத்த விளையாட்டு துவங்கியது. ‘YES’, ‘NO’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட அட்டைகள் வந்தன. போட்டியாளர் ஒருவரைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்படும். சம்பந்தப்பட்டவர் திரும்பி நிற்க வேண்டும். அந்தக் கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று எல்லோரும் பதில் அளிக்க வேண்டும். ‘நாமினேஷன் சமயத்தில் மட்டும் இந்த வீட்டில் நட்பு அதிகரிக்கிறதா?’ போன்ற வில்லங்கமான கேள்விகள் இருந்தன. இந்திய வாக்காளர்களைப் போலவே பிக்பாஸ் வீட்டு மக்களும் சில கேள்விகளுக்கு கலவையாக பதில் அளித்து குழப்பினார்கள். சில கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் வந்தன. பரீட்சையில் காப்பி அடிக்கும் மாணவர்கள் மாதிரி சிலர் பக்கத்து அட்டையைப் பார்த்து பிரதிபலித்தார்கள். 

‘யாஷிகா – மஹத்தின் நட்பு அதையும் மீறி புனிதமானதா?” என்கிற கேள்விக்கு யாஷிகா உட்பட அனைவரும் ‘ஆம்’ என்று பதில் அளிக்க, மஹத் ‘இல்லை’ என்கிற சிவப்பு பதிலுடன் திரும்பினார். அந்தக் கணத்தில் யாஷிகாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை வார்த்தையில் எழுத முடியாது. யாஷிகாவின் டெடரான எக்ஸ்பிரஷனை பார்த்த மஹத் ‘ஆம்’ என்று விளையாட்டாக மாற்றிக் கொண்டார். (வெளியே போனா தர்மஅடி விழப்போகுது!).

“முகத்திற்கு நேராகப் பேசுகிற துணிச்சல் ஆண்களுக்குத்தான் இருக்கிறது” என்கிற வாசகத்துக்கு ஆண்களே ‘இல்லை’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்டார்கள். ‘இந்த வீட்டில் மும்தாஜ் ஸ்பெஷல் டிரீட்மெண்ட் எதிர்பார்க்கிறார்’ என்கிற வாசகத்திற்கு பலர் ‘ஆம்’ என்றனர். ‘வைஷ்ணவிதான் இந்த சீஸனின் ஜூலியா?” என்கிற கேள்விக்கு எல்லோருமே “ஆம்’ என்று உற்சாகமாக பதில் அளிக்க, ‘ஜூலியா.. யாரது”? என்றார் வைஷ்ணவி. (இதுவும் ஒரு ஜூலித்தனமே!). ‘ஜனனி உண்மையிலேயே விஷபாட்டில்தானா’ என்கிற வாக்கியத்திற்கு பொன்னம்பலத்தைத் தவிர அனைவருமே உற்சாகமாக ஆமோதித்தனர். 

“நேர்மையாக விளையாடுவதை விட எப்படியாவது வின் பண்ணனும்-ன்ற நோக்கம்தான் டேனிக்கு அதிகம் இருக்கிறது” என்கிற வாசகத்திற்கு அனைவரும் ‘ஆம்’ என்றனர். வில்லங்கமான சிரிப்புடன் டேனியும் இதை ஒப்புக் கொண்டார். (இதுவும் ஒருவகை நேர்மையே!) 

‘இந்தக் கேள்விக்கெல்லாம் சீரியஸா யோசிக்காதீங்க.. அப்படி யோசிச்சாதான் பிரச்னையாகும். விளையாட்டா எடுத்துக்கங்க’ என்றார் ஹரீஷ். ‘இந்த நிகழ்ச்சியை பலர் பார்க்கிறார்கள். எனவே பெண்கள் தங்களின் உடை விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது’ என்றார் ரைசா. சீனியர்களின் அட்வைஸ். 

பிறகு திரைப்படத்தின் டிரைய்லர் ஒளிபரப்பானது. திரைப்படத்தில் வந்த ஒரு பாடலை அனைவரும் சேர்ந்து பாடினர். ‘பத்து படங்கள்ல நடிச்சு கிடைக்கிற புகழை இந்த பிக்பாஸ் வீடு தந்தது. எனவே இந்த வாய்ப்பை நீங்க சிறப்பா பயன்படுத்திக்கங்க’ என்று உபதேசம் செய்தார் ஹரீஷ். 

‘அப்ப.. நாங்க என்ன நடிக்கறோம்’ன்னு சொல்றீங்களா? என்று சந்தேகம் கேட்டார் சென்றாயன். “இல்ல டாஸ்க்ல சீரியஸா இருங்க. மத்த சமயங்கள்ல ஜாலியா இருங்க. ஒரு வேளையாவது ஒண்ணா உக்காந்து சாப்பிடுங்க” என்றார் ஹரீஷ். (சிநேகனும் இதையேதான் சொன்னார்). 

ஒவ்வொருவரிடமுள்ள குறைகளை ஹரீஷ் சுட்டிக் காட்டிய பிறகு அவர்கள் வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டதை பிக்பாஸ் நினைவுப்படுத்தினார். (கட்டளை என்றும் சொல்லலாம்). ‘தெய்வமே’ என்று ஹரீஷ் கண்கலங்க.. திரைப்படக்குழுவினர் விடை பெற்றார்கள்.

**

பிக்பாஸின் வழிகாட்டுதலில் திரைப்படக் குழு வீட்டின் போட்டியாளர்களை திறமையாக குட்டையைக் குழப்பி விட்டுச் சென்றது நன்றாக வேலை செய்தது. ‘ஏன் என்னை விஷபாட்டில்-ன்னு சொல்றாங்க” என்று ஆதங்கப்பட்டார் ஜனனி. பொன்னம்பலம் அதற்கு கொடுத்த விளக்கம் அவருக்கே புரிந்திருக்குமோ என்னமோ. 

“நான் என்ன ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்டா எதிர்பார்க்கிறேன்?” என்று தன் ஆரோக்கிய காரணங்களைச் சொல்லி மும்தாஜ் கோபப்பட்டார். சபையில் ‘ஆம்’ என்று சொன்ன மற்றவர்கள், இங்கு வந்து மழுப்பலாக பதில் சொன்னார்கள். ‘இன்னின்ன காரணங்களால்தான் சொன்னோம்” என்பதை முகத்திற்கு நேராக இயல்பான தொனியில் சொல்லலாம். 

“யார் யார் ரீ எண்ட்ரி அல்லது கெஸ்ட்டாக வருவார்கள்’ என்கிற உரையாடல் நிகழந்த போது அந்த உரையாடல்  கடந்த சீசன் ஜூலியிடம் போய் நின்றது. ‘அஞ்சு செகண்டுக்கு முன்னாடி நடந்த வீடியோவ போடுங்க’ என்று ஜூலி மறுபடி மறுபடி அனத்திக் கொண்டிருந்த வரலாற்றுச் சம்பவத்தின் பின்னணியை மும்தாஜ் விளக்க, ‘ஆக.. என்னை எல்லோரும் ஜூலின்னு சொல்லிட்டிங்க இல்லையா?” என்று ஆதங்கப்பட்டார் வைஷ்ணவி. “அப்படி சொல்ல முடியாது. நீ பொய் சொல்லலை. ஆனா ரெண்டு இடத்திலும் பேசி பிரச்னைகளை உருவாக்குகிறாய்” என்று சொன்னார் மும்தாஜ்.

‘என் கேர்ள் பிரெண்டைப் பத்தி பேச எந்த நாய்க்கும் தகுதி கிடையாதுன்னு மஹத் சொல்றார்” என்று ஆரம்பித்தார் மும்தாஜ். யாஷிகாவின் மனத்தவிப்பை புரிந்து கொண்டு இந்த உரையாடலை அவர் ஆரம்பித்தார் என்று புரிகிறது. வீட்டினுள் விளையாட்டாக பழகினாலும் மஹத் யாருக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார் என்பதை யாஷிகாவிற்கு உணர்த்த மும்தாஜ் விரும்புகிறார் என்பதை உணர முடிகிறது. 

மஹத் மீது தன் அதிக பாசம் காண்பிப்பதால் அவர் மீது தன்னிச்சையாக உருவாகியிருக்கும் காதலைப் பற்றி யாஷிகா வெளிப்படையாக சொன்னார். மஹத் ‘No’ என்கிற அட்டையை இன்று காட்டிய விஷயம் அவரைப் பாதித்திருக்கிறது போல. மஹத்திற்கு வெளியே ஒரு காதலி இருந்தாலும் அவர் மீது ஏற்படும் நேசத்தை தடுக்க முடியவில்லை என்பது அவருடைய உணர்வு.

பெண்கள் பொதுவாகவே அன்பிற்கு நிறைய ஏங்குகிறவர்கள். ஆண்களுக்கு அதை சரியாகத் தரத் தெரியாது என்பதுதான் பிரச்னை. எனவே தன்மீது விழும் ஈரத்தை உடனே உறிஞ்சிக் கொள்ளும் காய்ந்த மண் போல, எங்கு அன்பு கிடைத்தாலும் அதைப் பற்றிக்கொண்டு உதற முடியாமல் தவிக்கும் ஏராளமான பெண்களின் பிரதிநிதியாக யாஷிகா இருக்கிறார் என்பதை உணர முடிகிறது. 

‘ஒருத்தர் வாழ்க்கையில் ஒரு முறைதான் காதல்தான் மலரும்’ என்பதெல்லாம் விக்ரமன் திரைப்படங்களில் வரும் மிகையான பாவனை. யதார்த்தத்தில் அப்படியல்ல. அது ஆணோ, பெண்ணோ.. ஒரே சமயத்தில் கூட இருவரின் மீதும் காதல் தோன்றலாம். இது இயற்கையானது. கலாசார காவலர்கள் நிச்சயம் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சற்று நோண்டிப் பார்த்தால் இதை விடவும் பாசாங்குகளும் ஆபாசங்களும் அவற்றில் இருக்கும். நம் மனதில் ஆயிரம் விஷயங்கள் இயற்கையாகத் தோன்றினாலும் அதைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் நீதிகளையும் விதிமுறைகளையும் பின்பற்றுவதுதான் நாகரிக உலகத்திற்கு ஏற்புடைய விஷயம். 

‘மஹத் மீதும் தப்பு சொல்ல மாட்டேன். வெளியே ஒரு காதலி இருக்கா. அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’ன்னு அவன் வந்ததுல இருந்து சொல்றான். அவன் அன்பு உண்மையா இருக்கலாம். ஆனா நீ இடம் கொடுத்தாதான் எதுவும் நடக்கும். இது இனக்கவர்ச்சியாகவும் இருக்கலாம்’ என்று முதிர்ச்சியான முறையில் யாஷிகாவிற்கு உபதேசித்தார் மும்தாஜ். இது தொடர்பாக பிறகு மஹத்திடமும் பேசினார் மும்தாஜ்.

மும்தாஜ் தந்த உபதேசம் யாஷிகாவிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் நன்கு வேலை செய்தது. தங்களின் அத்தனை மனப்பிரச்னைகளையும் கழிவறையில் போட்டு விட்டு தண்ணீர் ஊற்றி விட்டு வெளியே வந்தனர். ஆனால் அது  அத்தனை எளிதான காரியமா என்ன?

தேவதாஸ் எபெக்ட்டில் மஹத் வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் காட்சியுடன்  இன்றைய நாள் முடிவடைந்தது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

இன்று ஆண்டவர் வரும் நாள். இந்த வாரத்தில் பெரிய சர்ச்சைகள் ஏதுமில்லை என்பதால் காரசாரமாக பஞ்சாயத்து பேசும் பெரிய அவசியம் ஏதும் அவருக்கில்லை. ‘எனக்கு கிடைத்த குருமார்களில் கலைஞர் மிக முக்கியமானவர். தமிழை எனக்கு அவர் அடையாளம் காட்டினார். தமிழிற்கு சில விஷயங்களை நான் அடையாளம் காட்டினேன்’ என்று துவங்கி விஸ்வரூபம் -2ன் சக்ஸஸ் மீ்ட்டிங்கை நிகழ்த்துவதில் அவர் நேரம் செலவழிக்கலாம். 

இந்த வாரம் வெளியேற்றப்படவிருக்கும் பலியாடு பட்டியல் பொன்னம்பலம், சென்றாயன், ஜனனி. அநேகமாக முதலாமவர் இன்று தேர்ந்தெடுக்கப்படலாம். அல்லது ‘நம்மவரால்’ காப்பாற்றவும் படலாம். பொருத்திருந்து பார்ப்போம்.