Election bannerElection banner
Published:Updated:

"நான்தான் தமிழன்..!" - சீமானுக்கு பிக்பாஸிலிருந்து டேனியின் சவால் #BiggBossTamil2

"நான்தான் தமிழன்..!" - சீமானுக்கு பிக்பாஸிலிருந்து டேனியின் சவால் #BiggBossTamil2
"நான்தான் தமிழன்..!" - சீமானுக்கு பிக்பாஸிலிருந்து டேனியின் சவால் #BiggBossTamil2

"நான்தான் தமிழன்..!" - சீமானுக்கு பிக்பாஸிலிருந்து டேனியின் சவால் #BiggBossTamil2

பிக் பாஸ் வீட்டில், நீண்ட நாட்களாக வலையில் இருந்து தப்பிக்கொண்டேயிருந்த விலாங்கு மீன் இன்று தூண்டிலில் வசமாக சிக்கிக்கொண்டது. ஆம். டேனி முதன்முறையாக எவிக்ஷன் பட்டியலில் வந்து இணைந்திருக்கிறார். எனவே மக்கள் கொலைவெறியுடன் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள் போலிருக்கிறது. விகடன் இணையதளம் நடத்தும் கருத்துக் கணிப்பில் இப்போதே அவரது கிராஃப் மேலே சென்று விட்டது. 

ஆனால் பலமான போட்டியாளரான டேனியை பிக் பாஸ் டீம் அத்தனை எளிதில் வெளியே அனுப்புமா அல்லது வழக்கம் போல தில்லாலங்கடி வேலை செய்து காப்பாற்றுமா என்பது வார இறுதியில் தெரியும். மாற்று பலியாடாக ரித்விகா தேர்ந்தெடுக்கப்படலாம். ‘நீதிடா... நேர்மைடா...’ எனும் ரித்விகா போன்ற நாட்டாமைகளுக்கு பிக் பாஸ் வீட்டில் இடமில்லை. ரித்விகா என்றதும்தான் ஞாபகம் வருகிறது. அம்பெய்து நாமினேஷன் நடத்தப்பட்ட இன்றைய போட்டியில் சென்றாயன் தனது தேர்வைச் செய்து முடித்தவுடன் ‘அவரா இதை முடிவெடுக்கலை. அவரே ஒரு அம்புதான்’ என்றொரு டைமிங்கான வசனத்தைச் சொன்னார், ரித்விகா. (சீரியல்காரங்களே. நோட் பண்ணுங்கப்பா!).

இன்று நாமினேஷன் தினம் என்பதால் அது சார்ந்த அரசியல் உச்சத்தில் இருந்தது. இரண்டு குழுக்களும் வீட்டின் பல்வேறு இடங்களில் அமர்ந்து ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார்கள். டிவி வால்யூமை உயர்த்தினாலும்கூட உபயோகமில்லை. அதிலும் இந்த பாலாஜி பேசுவதற்கெல்லாம் நிரந்தரமாகவே சப்-டைட்டில் போடலாம். 

“டேனியிடம் இருக்கும் தமிழ் வன்மை என்னிடம் இல்லாததால் அவருக்கு இணையாக என்னால் பேசமுடியவில்லை’ என்று வைஷ்ணவி சொன்னதை ‘என் மொழியைப் பற்றி தவறாகவே பேசியவர்களை தாய் தடுத்தாலும் விடமாட்டேன்’ என்றெல்லாம் ஆவேசமாக டேனி திரித்தது நிச்சயம் உள்நோக்கம் கொண்டது. மொழி பற்றி பேசி உணர்ச்சிவசப்பட வைத்தால் மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று அரசியல்வாதிகளைப் போலவே டேனியும் கணக்கு போட்டது அபத்தமானது. 'நீ மட்டுமா யா தமிழன்... நானும்தான் யா தமிழன்..!' என்ற வடிவேலு காமெடியின் வசனம்தான் நியாபகம் வருகிறது. 

**

56-ம் நாளின் சம்பவங்கள் தொடர்கின்றன. பொன்னம்பலத்தை வழியனுப்பி வைத்த கையோடு அவரை மறந்துவிட்ட மக்கள் தங்களின் சொந்தப் பிரச்னைகளில் இறங்கிவிட்டனர். யாஷிகா – மஹத் பிரச்னைக்கு மும்தாஜின் ஆலோசனைகள்தான் காரணம் என்றும், அவரிடம் போய் இதைக் கேட்கப் போகிறேன் என்றும்  ஐஸ்வர்யா கோபப்பட்டுக்கொண்டிருந்தார். ‘பேபி... பேபி...' என்று மும்தாஜ் பாசத்துடன் அழைத்ததையெல்லாம் மறந்துவிட்டது இந்த பேபி.  “மக்கள் ஆதரவை இழக்கணும்னா எனக்கு 2 நிமிஷம்கூட ஆகாது” என்று எதற்கோ சொல்லிக்கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. சர்வாதிகாரி டாஸ்க் காரணமாக மக்களால் அதிகமாக வெறுக்கப்படுபவர் என்கிற உண்மை அவர் வெளியே வந்த பிறகுதான் தெரியும்.

“மஹத்துதான் யாஷிகா கிட்ட ‘ஐ லவ்யூ..’ ன்னு இங்க நிறைய முறை சொல்லியிருக்கான். அவ பதிலுக்கு ஒருமுறைகூட சொன்னதில்லை. கமல் சார் முன்னாடிதான் சொன்னா. இதுதான் மஹத்தின் நேர்மையா?” என்று மும்தாஜ் ஒருபுறம் பேசிக்கொண்டிருந்தார். கிச்சனில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த மஹத் அப்படியே உடைந்து அழுது, பாத்திரத்தோடு பாத்திரமாகவே மாறிவிட்டார். டேனி வந்து ஆறுதல் சொன்னார். “வேட்டையாடப்பட்டவன் நான்தான். உனக்கென்ன? கில்ட்டியா ஃபீல் பண்றியா?” என்று விசாரித்தார். ‘இல்ல.. ரெண்டு பேரையும் ஹர்ட் பண்ணி நானும் குழம்பி... ஒண்ணும் புரியல’ என்று தேவதாஸ் மோடிற்கு பயணித்துக்கொண்டிருக்கிறார் மஹத். 

“உன் பிரச்னையையெல்லாம் நான் வெளியே போய் சரி செய்றேன்” என்று தனது நெருங்கிய தோழிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார், ஐஸ்வர்யா. 

இந்தப் பஞ்சயாயத்து இன்னமும் எத்தனை எபிஸோடுகளுக்கு ஓடப்போகிறதோ?

**

57-ம் நாள். தோட்டத்திலிருந்த அணில் எவிக்ஷனில் போய் விட்டதுபோல. ஒரு சிட்டுக்குருவியைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். இனி சிட்டுக்குருவியையெல்லாம் வீடியோவில் மட்டும்தான் பார்க்க முடியும் போல. ‘ஈசன்’ திரைப்படத்தில் இருந்து ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளுய்யா.’ என்கிற துள்ளலும் சோகமும் கலந்த பாடலை காலையில் போட்டார் பிக் பாஸ். 

வீட்டு மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வந்து சேர்ந்ததை முதன்முறையாக காட்டியது காமிரா. சில பிராண்ட்கள் குளோசப்பில் காட்டப்பட்டன. நாம் க்யூவில் நின்று ரேஷன் பொருட்களை வாங்கி வருவதற்குள் உயிர் போகிறது. ஆனால் பிக் பாஸ் மக்களுக்கு டோர் டெலிவரியாகவே வந்து விடுகிறது. 

காலில் எண்ணைய் தேய்த்துக்கொண்டிருந்த சென்றாயனைப் பார்த்து சற்று தூரத்தில் இருந்த டேனி ‘இப்ப அவனை கிச்சன் ஹெல்ப்பிற்கு கூப்பிடறேன். கைய கழுவாம அப்படியே வருவான் பாரு” என்று யாஷிகாவிடம் ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கையைக் கழுவி விட்டு வந்தார் சென்றாயன். கிடைத்த பல்பை மறைத்துக் கொண்டு ‘குட்பாய்’ என்று பாராட்டினார் டேனி. மும்தாஜின் ‘ஹைஜீன்’ பாதிப்பு டேனிக்கும் வந்து விட்டது போல. 

நாமினேஷன் தினம் என்பதால் அது குறித்த உரையாடல்கள் ஆரம்பமாகின. ‘யாரை நாமினேட் பண்ணப் போறீங்க?” என்று பாலாஜி கிசுகிசு குரலில் கேட்டதற்கு ‘இதை நாம டிஸ்கஸ் பண்ணக்கூடாதில்லையா.. மத்தவங்க பண்ணட்டும். நாம மாட்டிக்ககூடாது” என்று உஷாராக இருந்தார் மும்தாஜ். அவர் அப்படியெல்லாம் பயந்திருக்கத் தேவையேயில்லை. ஏனெனில் இதர போட்டியாளர்கள் எல்லாம் மிக வெளிப்படையாகவே தங்களின் டார்க்கெட்டுக்களைப் பற்றி அமுங்கிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். வடகறி, சாம்பார், ரசம் என்று சங்கேத பெயர்கள் அமர்க்களப்பட்டன. 

நாமினேஷன் பற்றிய அறிவிப்பு வந்தது. கார்டன் ஏரியாவில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் இருக்கும். எந்த இரண்டு பேரை நாமினேட் செய்கிறோமோ, தகுந்த காரணங்களுடன் அந்தந்த புகைப்படங்களின் மீது அம்பு எறிய வேண்டும். பிக்பாஸ் எப்போது நினைக்கிறாரோ அப்போது ஒருவரை கூப்பிடுவார். அதுவரை அவரவர்கள் வழக்கமான பணியில் ஈடுபடலாம். (வேறென்ன? புறம் பேசறதுதான்!). வீட்டின் தலைவி ஐஸ்வர்யா என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. 

வைஷ்ணவியை நிச்சயம் நாமினேட் செய்யணும் என்று டேனி குழு ஆவேசமாக ஆலோசித்துக் கொண்டிருந்தது. போலவே எதிரணியும் பல்வேறு தேர்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலை விடவும் சிக்கலானதாகவும் உக்கிரமானதாகவும் இருந்தது. 

“முதலில் யார் எய்வது.. யார் எய்வது அம்பை’ என்கிற பாடலைப் போல முதலில் அம்பு எய்ய வந்தவர் வைஷ்ணவி. சென்றாயனை தேர்வு செய்த இவர், “டாஸ்க் புரிஞ்சுக்க மாட்றார். ஏதாவது ஒண்ணு மைண்ட்ல பிக்ஸ் பண்ணிட்டார்னா மாத்த முடியறதில்லை. இவரோட எனக்கு ஒத்துப் போகலை” என்று சென்றாயனின் புகைப்படத்தை நோக்கி அம்பை ஆவேசமாக செலுத்தினார். அடுத்த சாய்ஸ் எளிதில் யூகிக்கக்கூடியது. டேனி. “இந்த வாரம் டாஸ்க் சரியா பண்ணலை. டாமினேட் பண்றாரு. ஹர்ட் பண்ணாரு’ என்று டேனியை தேர்வு செய்தார். 

பிறகு, ‘யாருன்னு முடிவு பண்ணிட்டியா?” என்று ஐஸ்வர்யாவை நோக்கி வைஷ்ணவி கேட்க, அவர் மழுப்பலாக பதில் தந்தார். ‘இந்த வைஷ்ணவி எல்லோர் கிட்டயும் போய் கன்வின்ஸ் பண்ணிட்டு இருக்கா. மாறவேயில்லை’ என்று எதிரணி ஆவேசப்பட்டுக் கொண்டிருந்தது. ‘அவ சொல்றா.. நான் தமிழ் மீடியம்னு ஆமாம் தமிழ் மீடியம்தான்.. என்ன இப்போ?” என்று கோபப்பட்டார் டேனி. 

அடுத்து நாமினேட் செய்ய வந்த யாஷிகா, முதல் வாய்ப்பாக வைஷ்ணவியின் மீது அம்பைக் குத்தினார். ‘இவங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைச்சும் மாறவேயில்ல. மத்தவங்க விஷயத்தை தெரிஞ்சுக்க ஆர்வம் காட்றாங்க’ என்பதாக அவரின் காரணம் இருந்தது. அடுத்தது ஜனனி. ‘நீங்க நல்லது பண்றேன்ட்டு ஒருத்தருக்கு அதிகம் கன்சர்ன் காண்பிக்காதீங்க. சிலருக்கு தப்பா தெரியலாம்’ என்று குறிப்பிட்டது மஹத்தைப் பற்றியதாக இருக்கலாம். ‘காரணம்னு சம்பந்தமில்லாத எதையோ ஒண்ணு சொல்றாங்க” என்று பிறகு ஜனனியிடம் சொல்லிக் கொண்டிருநதார் வைஷ்ணவி. 

அடுத்து வந்த ரித்விகாவும் வைஷ்ணவியை தேர்ந்தெடுத்தார். ‘மாறவில்லை’ என்கிற அதே புகார். ‘வெற்றி தோல்வியை சமமா எடுத்துக்கணும். உங்க கிட்ட அது இல்ல’ என்று சொல்லி அடுத்து இவர் தேர்ந்தெடுத்தது டேனி. அம்பு சரியாக டேனியின் மூக்கின் மீது பாய ‘அய்யோ.. ஸாரி..” என்று தனக்குள் சிரித்துக் கொண்டார்.

அடுத்ததாக வந்த மஹத், கமலைப் போல விளையாட முயன்றார். ‘யாஷிகா’ என்ற பெயரை முதலில் சொல்லி விட்டு, சற்று இடைவெளி விட்டு ‘சான்ஸே இல்ல’ என்று விளையாடினார். பிறகு இவர் தேர்ந்தெடுத்தது வைஷ்ணவி மற்றும் சென்றாயன். வைஷ்ணவியிடம் மாற்றம் தெரிகிறதாம். என்றாலும் இன்னமும் மேம்பட வேண்டுமாம். சென்றாயன் வெகுளி, நல்ல மனசு என்றாலும் டாஸ்க் புரிவதில்லையாம். (இதையே எத்தனை பேருய்யா சொல்லுவீங்க?!).

அடுத்து வந்த இண்டர்நேஷனல் மாடலான ஜனனி, முதலில் டேனியைத் தேர்ந்தெடுத்து விட்டு ‘கேமை ஸ்போர்டிவ்வா எடுத்துக்கலாம். போன முறை ‘best performer’ விருது வேற ஒருத்தருக்கு கொடுத்ததுக்கு கோச்சுக்கிட்டார். வலிமையான போட்டியாளர் என்பதும் ஒரு காரணம்” என்றார். அடுத்து வைஷ்ணவி. இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக்கலையாம். (இதையும் எத்தனை பேருதான் சொல்லுவீங்க?!).

அடுத்த வந்த பாலாஜி முதலில் தேர்ந்தெடுத்தது மஹத்தை. ‘எதுக்கு வந்தோம்னு தெரியாமயே இருக்கான். கேம்ல Focus பண்ணணும்” என்றார். . அடுத்து ஜனனியை தேர்ந்தெடுத்து அவர் சொன்ன காரணம் முக்கியமானது. ‘எல்லோர் கிட்டயும் அன்பா இருக்கறது முக்கியம். ஆனா, ஒருத்தர அவர் செஞ்ச தப்புக்காக திட்டிட்டு பிறகு மறுநிமிஷமே ‘ஸாரி’ கேட்கறது சரியல்ல. அவர் திருந்தத்தானே கண்டிக்கறீங்க. உடனே ஸாரி கேட்டா அது எப்படி நடக்கும்?” என்று சரியாக சுட்டிக் காட்டினார். பிறகு “குப்பையை ஏன் சரியாக் கொட்டலை?” என்று ஐஸ்வர்யாவிடம் விளையாட்டாக அம்பை வைத்து குத்தப் போனார் பாலாஜி.

குழப்பத்துடன் அல்லது அம்மாதிரியான பாவனையுடன் வந்த மும்தாஜ், முதலில் டேனியை தேர்ந்தெடுத்தார். “ஐஸ்வர்யா மற்றும் பொன்னம்பலம் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்னை அதிகமாவதற்கு டேனியின் தவறான புரிதல் காரணமாக இருந்தது’ என்பது இவர் சொன்ன காரணம். அடுத்து இவர் தேர்ந்தெடுத்தது சென்றாயன். ‘இப்ப எனக்கு வேற யார் கிட்டயும் பிரச்னையில்லை. சென்றாயன் கிட்ட இருக்கிற சின்ன பிரச்னை என்னன்னா.. ஒரு விஷயம் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. அதைச் சொன்னாலும் கோவம் வருது. கொஞ்சம் கவனமா கேட்டாலே போதும்’ என்ற காரணத்தை முன்வைத்தார். (இது சென்றயானுக்கு புரிந்திருக்குமா?!).

ஆளாளுக்கு அவரவர்களின் டார்க்கெட்டுகளை ரகசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். ‘ஜனனி இல்லைன்னா ரித்விகாவை’ டைரக்ட் நாமினேஷன் பண்ணுவேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. வைஷ்ணவியை ‘செத்த பாம்பு’ என்று வர்ணித்துக் கொண்டிருந்த டேனி, சிறிது நேரத்திற்குப் பிறகு ‘சொல்ல முடியாது. திடீர்னு அதுக்கு உயிர் வந்துடலாம். உடனே போட்டுடணும்’ என்று இளம் வயது அனுபவத்தை முன்னிட்டு சொன்னார்.

அடுத்து வந்த சென்றாயன், மஹத்தின் கோபத்தைச் சுட்டிக்காட்டி அவரை நாமினேட் செய்தார். தவறாக தீர்ப்பு சொன்ன ஜனனி அவரின் அடுத்த தேர்வாக இருந்தது. ‘சென்றாயன் தன்னால இதைப் பண்ணல. அவர் எய்யப்பட்ட அம்பு’ என்று ஜனனியும் ரித்விகாவும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

“யாருக்குப் போடலாம் சொல்லுங்க” என்று நண்பர்களிடம் முணுமுணுத்தபடி கடைசி நேரத்திலும் குழப்பமாக வந்தார் டேனி. இவர் முதலில் தேர்ந்தெடுத்தது ஜனனியை. ‘எது உண்மை.. எது பொய்-ன்னு தெரியாமல காதில் விழுந்ததையெல்லாம் நம்பறாங்க. (வெஜ் பிரைட் ரைஸ்?!) இவங்க எதுலயும் தைரியமா முடிவு எடுக்கணும்” என்று காரணம் சொன்ன டேனி, அடுத்து வைஷ்ணவியை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமேயில்லை. (பழிக்குப் பழி, புளிக்குப் புளி!) “அய்யகோ.. என் தமிழை அவமதித்து விட்டார்கள். என்னால் பொறுக்க முடியவில்லையே!” என்பது போல் இவரது நாடகம் அமைந்தது. 

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

நாமினேஷன் முடிவுகள் வந்தன. பட்டியலில் இடம் பெறுவோர் வைஷ்ணவி, சென்றாயன், ஜனனி, டேனி. ஐஸ்வர்யாவிற்கு இருந்த சிறப்பு சக்தியின் படி அவர் நேரடியாக தேர்ந்தெடுத்தது, ரித்விகா. ‘இவங்க கூட இன்னமும் என்னால ஒட்டவே முடியல. நானும் எவ்வளவோ டிரை பண்ணிட்டேன்.” என்ற காரணத்தைச் சொன்னார். 

அடுத்ததாக புகைப்படங்களுக்கான முடிவுகள் வந்தன. கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்த தன் புகைப்படங்களை நிதானமாக பார்த்த ஜனனி, டேனி அணியை சிறந்த குழுவாக தேர்ந்தெடுத்தார். அதிலும் டாப் ஆங்கிளில் டேனி எடுத்த புகைப்படத்தை தன் பிரத்யேக தேர்வாகவும் தேர்ந்தெடுத்தார். “டேனியை எனக்கு அவ்வளவு பிடிக்காததுதான். இருந்தாலும் அந்தச் சமயத்துல எனக்குப் பிடிச்சதைதானே சொல்ல முடியும்?” என்று பிறகு பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். வெற்றி பெற்ற அணிக்கு செல்போன் வடிவில் கேக் பரிசாக வந்தது. ‘உள்ள நெஜமான போன் இருக்கு’ என்கிற புரளியை எவரோ கிளப்பி விட்டார்கள். 

‘நான் மாறலை, மாறலை’ன்னு சொல்றதுக்கு நீ யாரு” ஏன் ஏதோதோ காரணங்களைச் சொல்றீங்க.. ‘உன்னைப் பிடிக்கலை’ன்னு சொல்லிட்டு போய்ட்டே இரு” …எனக்கு தமிழ்ல சரியா பேச வராதுன்னுதான் சொன்னேன். டேனி இதை அப்படியே டிவிஸ்ட் பண்ணிட்டான்’ என்றலெ்லாம் அன்றிரவு பாலாஜியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் வைஷ்ணவி. (இதை நாமினேஷன் சமயத்திலேயே டேனியிடம் சொல்லியிருக்கலாம்!).  ‘கமல் சாருக்கே மொட்டை கடிதாசி எழுதறக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு’ என்றெல்லாம் பேசினார்கள். வைஷ்ணவியின் ‘தமிழ் கமாண்ட்’ புகார் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதைப் பற்றி நள்ளிரவிற்கு மேல் டேனியிடம் பஞ்சாயத்திற்காக சென்றார் பாலாஜி.

“வைஷ்ணவி சொல்றது என்னான்னா.. அவர் அளவிற்கு என்னால் தமிழ் பேச முடியாது’ ன்னுதான் சொல்றா” என்று பாலாஜி தந்த விளக்கத்தை ‘தமிழ்ல பேசறது என் திறமை. அது ஒரு குத்தமா.. இவங்க கூட இங்லீஷ்லயே பேசிட்டு இருக்காங்க.. அதுக்காக நாங்க எத்தனையோ முறை ஸ்விம்மிங் ஃபூல்ல குதிச்சிருக்கோம். நீ யாரு என்னை அவமானப்படுத்தறதுக்கு..  மஹத்லாம் அவளை எவ்ளோ பேசியிருக்கான். “வாருங்கள் வைஷ்ணவி. போரிடலாம்’ன்ற மாதிரி நான் எத்தனை முறை தூய தமிழில் வைஷ்ணவியிடம் போய் பேசியிருக்கிறேன்.. சொல்லுங்க பார்க்கலாம்” என்று தன் தரப்பு விளக்கத்தை அளித்தார் டேனி. 

வரும் நாட்களில், இரண்டு குழுக்களாக பிரிந்திருக்கும் அணியில் எவை முந்தப் போகிறது என்று தெரியவில்லை. உண்மையான ஆட்டம் இனிதான் ஆரம்பம்.

'நான் தமிழன்... தமிழர்களை நீங்கள் இழிவுபடுத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது' என சீமானுக்கே டஃப் ஃபைட் கொடுத்த டேனியின் செயல்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களை கமென்டில் பதிவு செய்யுங்களேன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு