Election bannerElection banner
Published:Updated:

டேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்சாட்டியங்கள்! #BiggBossTamil2

டேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்சாட்டியங்கள்! #BiggBossTamil2
டேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்சாட்டியங்கள்! #BiggBossTamil2

டேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்சாட்டியங்கள்! #BiggBossTamil2

‘ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கு” என்று ‘குருதிப்புனல்’ திரைப்படத்தில்  கமல் சொல்வார். எத்தனை பொறுமைசாலியும் ஒரு கட்டத்திற்குப் பின்னான நெருக்கடிக்குப் பின்பு மெல்ல மெல்ல மிருகமாக மாறத் துவங்குவான். பிக் பாஸ் வீ்ட்டிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. சும்மாவே ஆடும் மஹத், யாஷிகா தொடர்பான மனக்குழப்பத்தில் இருப்பதால் விளையாட்டு என்கிற பெயரில் மூர்க்கத்திற்குள் இறங்கிக் கொண்டிருக்கிறார்.

சர்வாதிகாரி டாஸ்க்கிற்கு பிறகு ஒன்பது கிரகங்களும் உச்சநிலைக்கு போயிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு மிக எளிதில் கட்டுக்கடங்காத கோபம் வருகிறது. ஆனானப்பட்ட பொறுமைசாலியான ரித்விகாவே, வைஷ்ணவியை நோக்கி கடுமையாக எரிந்து விழும் சம்பவமும் இன்று நடந்து விட்டது. 

நம்மால் கையாள முடியாத துயரம் மற்றும் கொடுமையாக இருந்தால் ‘எல்லாம் கடவுள் பார்த்திட்டிருக்கார், தண்டனை தருவார்’ என்று புலம்பிக் கொள்வோம் அல்லவா?. அது போல் இந்த வீட்டில், ‘எல்லாத்தையும் பிக்பாஸ் பார்த்திட்டிருக்கார். அவர் பார்த்துப்பார்” என்று போட்டியாளர்கள் பல முறை அனத்தும் அளவிற்கு பிக்பாஸ் கடவுளாகவே மாறி விட்டிருக்கிறார். 

‘இது எங்க போயி முடியப் போகுதோ?” என்கிற அளவிலான சம்பவங்கள் இன்று பிக்பாஸ் வீட்டில் நிகழ்நதன. விரிவாகப் பார்ப்போம்.

**

58-ம் நாள். காணமாற் போயிருந்த அணில் இன்று வந்தது மகிழ்ச்சி. ரஹ்மானின் துவக்க கால கட்டத்தில் உருவான, அட்டகாசமான துள்ளலிசைப் பாடல்களில் ஒன்றான ‘ஊர்வசி.. ஊர்வசி’ ஒலிபரப்பாகியது. இதைக் கேட்டு நீண்ட நாளாகி விட்டதால் எனக்கே உற்சாகம் பொத்துக் கொண்டு வரும் போது போட்டியாளர்களுக்கு வராதா என்ன? ‘ஆடாத மனமும் ஆடுமே’ என்பது போல் ஆடாதவர்கள் கூட இன்று உற்சாகமாக நடனமாடத் துவங்கி விட்டார்கள். பாட்டு முடிந்த பிறகும் ‘ஊ.. ஆ.. ‘என்று கத்தி மினி பிரபுதேவாவாக மாறிக் கொண்டிருந்தார் சென்றாயன். வாழ்க்கையில் மட்டுமல்ல, பிக்பாஸிலும் வெல்ல தேவையான பாலிஸி, ‘டேக் இட் ஈஸி பாலிஸி’.

“நேத்து நைட்டு உனக்கும் பாலாஜிக்கும் சண்டையா என்ன?” என்று காலையிலேயே கேட்டுக் கொண்டிருந்தார் சென்றாயன். சற்று சத்தமாக இருந்தாலே சண்டை என்கிற பதட்டம் அங்கு நிகழந்து கொண்டிருக்கிறது. ‘அதான்.. அந்த ‘தமிழ்’ மேட்டர் பத்தி பாலாஜி வந்து கேட்டுக்கிட்டு இருந்தார்” என்று பழைய சம்பவங்களை சொன்னார் டேனி. ‘இதெல்லாம் ஒரு சண்டையாடா.. அப்ப உண்மையான சண்டைக்கு என்ன மதிப்பு” என்று பிரபல ரவுடியான சென்றாயன். 

இந்த வார லக்ஸரி டாஸ்க்கிற்கான அறிவிப்பு வந்தது. ‘பொம்மலாட்டம்’ என்பது அதன் தலைப்பு. பொம்மைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் வழங்கப்படும். மாடலாக தரப்படும் பொம்மைக்கு ஈடான தரத்தில் பொம்மைகளை உருவாக்க வேண்டும். இதற்காக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்படுவார்கள். பொம்மைகளை எடுத்துக் கொண்டு போய் பிக்பாஸிடம் கொடுத்தால் அவர் பணம் தருவாராம். இறுதியில் எந்த அணி அதிக பணம் சம்பாதித்திருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுமாம். (ஆயிரமும் லட்சமுமாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை குடிசைத் தொழிலில் ஈடுபடுத்திய பிக்பாஸை நினைத்து ஒருவகையில் பெருமைப்படலாம்). போட்டியாளர்களை பொம்மைகளாக பிக்பாஸ் ஆட்டி வைப்பதற்கான குறியீடு இது. 

இதில் சில பேர் தங்களுக்கு தைக்கத் தெரியும் என்ற போது ‘பரவாயில்லையே’ என்று ஆச்சரியமாக இருந்தது. A அணியில், ஐஸ்வர்யா, டேனி, பாலாஜி, ரித்விகா, யாஷிகா இருப்பார்கள். B அணியில், மும்தாஜ், சென்றாயன், வைஷ்ணவி. மஹத், ஜனனி இருப்பார்கள். இதில் தயாரிக்கப்படும் பொம்மைகளை பரிசோதிக்கும் சூப்பர்வைசர்களாக பாலாஜியும் மும்தாஜூம் இருப்பார்கள். இதற்கான சீருடைகள் அவர்களுக்கு தரப்பட்டன. (இதிலெல்லாம் குறைச்சல் இல்ல!).

“யார் யாருக்கு தைக்கத் தெரியும் மற்றும் தெரியாது’ என்பதை வைத்து தன் அணியின் வியூகங்களை அமைத்தார் போர் தளபதி வைஷ்ணவி. சைரன் அடித்ததும் கன்வேயர் பெல்ட் வழியாக மூலப் பொருட்கள் வந்தன. அதுவரை சகஜமாக பேசிக் கொண்டிருந்த மஹத், திடீரென்று மூர்க்கனாக மாறி எதிரணி எடுக்க முடியாதவாறு நின்று கொண்டு  ஆவேசமாக பொருட்களை இழுத்துப் போட்டார். இவரளவிற்கான ஆவேசத்தை காட்ட ஐஸ்வர்யாவும் முயன்று கொண்டிருந்தார்.

ஒருவழியாக பொருட்கள் வந்ததும், ‘தக்காளி.. இது என்ன பெரிய விஷயமா.. உரிச்சர வேண்டியதுதான்’ என்று அணியுடன் உட்கார்ந்தார் மஹத். இரு அணிகளும் பரபரப்பாக பொம்மை தயாரிக்க ஆரம்பித்தன. இதனால் சத்தம் குறைந்தது. போட்டியை தற்காலிமாக நிறுத்துவதற்கான ஒலி வந்ததும் பொம்மைக்கு ரிப்பன் கட்டுவதற்கான ஆலோசனையை எதிரணியைச் சேர்ந்த வைஷ்ணவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. அவரும் வந்து சொல்லித்தர, ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஐஸ்வர்யா, ‘let me do it’ என்று எரிந்து விழுந்தது அபத்தம். கற்றுக் கொள்வதற்கு பொறுமை வேண்டும். உதவி செய்ய வந்தவர்களிடம் தன் பொறுமையின்மையைக் காட்டுவது முறையானதல்ல. இதைப் பற்றி தன் குழுவிடம் வைஷ்ணவி பிறகு பேசிக் கொண்டிருந்ததும் இன்னொரு வகையிலான அபத்தம். ‘விட்டுத் தள்ளு’ என்று போய்க் கொண்டே இருக்கலாம்.

முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட பொம்மைகள் பரிசோதனைக்கு வந்தன. பரஸ்பரம் கடுமையான காரணங்களைச் சொல்லி பொம்மைகளை நிராகரித்துக் கொண்டிருந்திருந்தார்கள். அது தொடர்பான வாக்கு வாதங்களும் பேரங்களும் நடந்தன. இறுதியில், பாலாஜி அணி செய்த 2 பொம்மைகளும் மும்தாஜ் அணி செய்த 8 பொம்மைகளும் தர பரிசோதனையில் தேர்வாகின. 

ஒரு பொம்மைக்கு பிக்பாஸ் கரன்ஸி ரூ.30 வீதம் கணக்கிட்டு மேஸ்திரிகளிடம் கூலியைத் தந்தார் பெரிய முதலாளியான பிக்பாஸ். நிராகரிக்கப்பட்ட பொம்மைகள், மீதமுள்ள மூலப் பொருட்கள் போன்றவற்றை திருப்பித் தந்து விட வேண்டும் என்கிற நிபந்தனையைப் போட்டார் முதலாளி. அப்போதுதானே அடுத்த ரவுண்டு மூலப் பொருட்களுக்காக அவர்கள் அடித்துக் கொள்வார்கள்? பிக்பாஸின் திருவிளையாடல்களை புரிந்து கொள்ள தனியான மூளை வேண்டும். அவரவர்களுக்கு தந்த பணத்தை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தார்கள். ‘நம்ம காச பத்திரமாக பாதுகாக்கணும். எதிரணியோட பணத்தை சுட்டுடலாம்’ என்று சிரித்தபடி சொன்னார் யாஷிகா. ஆனால் அவ்வாறு பிறகு செய்தது எதிரணிதான். 

மறுபடியும் மூலப்பொருட்கள் வருவதற்கான சைரன் ஒலித்தது. அதுவரை சிரித்து பேசியபடி யாஷிகாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்த மஹத், கராத்தே போட்டிக்காக தயாராகும் நபர் போல் கைகளை வைத்துக் கொண்டு ஆவேசமாக கன்வேயர் பெல்ட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். பொருட்கள் வரத் துவங்கியதும் ஆளாளுக்கு பாயத் துவங்கினார்கள். 

மஹத்திற்கும் டேனிக்கும் இடையே தள்ளுமுள்ளு துவங்கியது. இந்த ஆவேசத்தில் முதல் அடியை தந்தவர் மஹத். டேனிக்கு கோபம் வந்து ‘ஏண்டா அடிக்கற?” என்று மஹத்தைப் பிடித்து தள்ள, சண்டைக்கோழி மாதிரி முறைத்துக் கொண்டு வந்தார் மஹத். பேட்டை ரவுடியின் தோரணையோடு ‘ஒரேஅடில நாக்அவுட் பண்ணிடுவேன்’ என்று பந்தா காட்டினார். டேனியும் பதிலுக்குத் தள்ள நிலைமை மோசமாகி விடுமோ என்றிருந்தது. 

மறுபடியும் பொருட்களைக் கைப்பற்றத் துவங்கும் பணி நடந்தது., மும்தாஜின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஆவேசமாக பொருட்களைப் பறிக்கத் துவங்கினார் மஹத். அந்தப் பக்கம் ஐஸ்வர்யாவும் மஹத்தின் அராஜகத்திற்கு ஈடுகொடுத்தார். இது தொடர்பாக மும்தாஜிற்கும் பாலாஜிக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது. ‘உங்க ஆளுதான் தப்பு’ என்று பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். ஏறத்தாழ குழாயடிச் சண்டையேதான்.

பொருட்கள் வருவது நின்றதும் ‘யார் முதலில் தள்ளியது. அடித்தது?” என்கிற பஞ்சாயத்து ஆவேசமாக நடந்தது. ‘என் கைய பிடிச்சு அழுத்திட்டான். நான் அப்படித்தான் பண்ணுவேன்’ என்று வீம்புடன் பேசிக் கொண்டிருந்தார் மஹத். “வீடியோல போய் பாரு’ என்றார் டேனி. ‘நீதாண்டே முதல்ல அடிச்சே. பதிலுக்கு அவன் அடிச்சான்” என்றார் பாலாஜி. அவரது பலவீனமான குரல் எடுபடவில்லை. அதுவரை எதிரியாக இருந்தவர்கள், அணியில் இணைந்ததும் அந்த ஒற்றுமையைக் காட்டியது ஒருபக்கம் சிறப்பு. டேனிக்காக வாதாடிய பாலாஜியைப் பார்க்க நன்றாக இருந்தது. போலவே ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் ஓரணி காரணமாக இணைந்து கொண்டார்கள். 

மஹத்திற்கும் டேனிக்குமான பஞ்சாயத்து ஒருபக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் வேறொரு பஞ்சாயத்து நடந்தது. மஹத் ஆவேசமாக பொருட்களை இழுத்துக் கொண்டிருந்ததால் அவரது பக்கம் வந்த யாஷிகா, தன் பங்கிற்கு தானும் பொருட்களை இழுக்க, ஒரு கட்டத்தில் வைஷ்ணவி அவரை பின்னால் நின்று இழுத்து பிடித்துக் கொண்டார். இது குறித்து தன்னுடைய பலமான கண்டனங்களை தெரிவித்தார் ரித்விகா. (இந்தப் பொண்ணோட குரல் இப்பத்தாம்ப்பா வெளியே வருது!). ரித்விகா பற்ற வைத்த நெருப்பை எரிமலையாக்கினார் ஐஸ்வர்யா. ‘No physical violence’ என்பதை வெறித்தனமாக வைஷ்ணவியை நோக்கி கத்திக் கொண்டே இருந்தார். பழைய சர்வாதிகாரியை மறுபடியும் பார்த்தது போல் இருந்தது. இந்தக் களேபரத்தில் ‘ஜனனி’ என்கிற ஜீவன் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. 

பணத்தை அம்போவென்று விட்டு விட்டு பாலாஜி அணி வீட்டுக்குள் போய் விட ‘பணத்தை சுட்டுடலாமா?’ என்று மும்தாஜூம் மஹத்தும் சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘டாஸ்க் நிறுத்தினப்புறம் செய்யலாமான்னு தெரியல. கேட்டுக்கங்க’ என்று திருட்டிலும் ஒரு நியாயம் பார்த்தார் மஹத். ஒரு கட்டத்தில் சட்டென்று தீர்மானித்து எதிரணியின் பாதுகாப்பு பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து வந்து தங்கள் அணியின் பெட்டியில் வைத்துக் கொண்டார் மும்தாஜ்.

‘இது மனிதன், மனிதனைத் தின்னும் விளையாட்டு’ என்பதை பல முறை கூறியிருக்கிறேன். அந்த வகையில் பாதுகாப்பின்றி எதிரணியினர் விட்டுச் சென்ற பணத்தை, மும்தாஜ் எடுத்தது ஒருவகையில் சரியே. நம்முடைய அலட்சியங்களால்தான் திருடர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம் என்பது நடைமுறையிலும் உள்ளது. ஆனால், எதிரணி இப்படி அடித்துப்பிடித்து உழைத்து சேர்த்த சொற்ப பணத்தையும் திருடுவது சரியா என்று எனக்கு உறுத்திற்று. இப்படியான உறுத்தல்தான் ஒவ்வொருவருக்குமே தேவை. “நீங்க செஞ்சது தப்பில்ல’ என்றார் ஆலோசகர் ஜனனி. 

தான் செய்த காரியம் குறித்து சிரிப்பு தாங்காமல் சிரித்துக் கொண்டிருந்தார் மும்தாஜ். ‘இப்ப வேற லெவல்ல டென்ஷன் ஆகப் போறாங்க’ என்றார் மஹத். 

தரப்பரிசோதனை மறுபடியும் நடந்தது. அதே மாதிரியான வாக்குவாதங்கள். இம்முறை மும்தாஜின் அணி 7 பொம்மைகளையும், பாலாஜி அணி 4 பொம்மைகளையும் சம்பாதித்தது. பிக்பாஸ் தந்த கூலியை ரித்விகா பெட்டியில் வைக்கச் செல்லும் போது, பதட்டத்தை மறைத்துக் கொண்டு ஜாலியாக தாளம் போட்டுக் கொண்டிருந்தார் மஹத். பணத்தைக் காணாத ரித்விகா பரபரப்பாக மறுபடியும் செல்ல, ‘உங்களை யாரு விட்டுட்டு போகச் சொன்னது?” என்பதின் மூலம் தங்கள் அணியை தானே போட்டுக் கொடுத்தார். ‘உன்னை யாரு ஒத்துக்கச் சொன்னது?” என்றார் பிறகு வந்த மும்தாஜ். (பின்னே, அந்த வீட்டில வேற யாரு எடுப்பா? பிக்பாஸே வந்து எடுத்துக் கொள்ளுமளவிற்கு அவர் ஒன்றும் அத்தனை சீப்பானவர் இல்லை.)

தங்கள் அணியின் பணம் திருட்டுப் போனது குறித்து ரித்விகா டேனி உள்ளிட்டவர்களிடம் சொல்லும் காட்சி காண்பிக்கப்படவில்லை. “முதல்ல அவன்தான் மச்சான் குத்தினான். பொறாமைல இருக்கான் போல. யாஷிகா என் கிட்ட பேசிட்டு இருக்குல்ல. அந்தக் கோபம் போல” என்று சென்றாயனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் டேனி. பிறகுதான் பணம் திருட்டுப் போன விஷயம் தெரிய வந்திருக்கிறது. ‘எதுக்கு இந்தப் பிழைப்பு. அவங்கள அசிங்கப்படுத்தலாம்ணே. கீழ போட்டுட்டு எடுத்துக்கச் சொல்லலாம். இனி பிக்பாஸ் தர்ற பணத்தையும் பரிசா தந்துடலாம்’ என்றெல்லாம் தன் ஆதங்கத்தை கோபமாக மாற்றி பாலாஜியிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார் டேனி. 

பணப்பெட்டியின் அருகே தனியாக நின்று கொண்டிருந்த ரித்விகாவை ‘இந்தப் பக்கம் வந்துடு ரித்து’ என்று கலாய்த்துக் கொண்டிருந்தது எதிர்அணி. மற்றவர்களின் கிண்டல்களைக் கூட பொறுத்துக் கொண்ட ரித்விகா, வைஷ்ணவியின் கிண்டலை பொறுத்துக் கொள்ளாமல் ‘யூ ஷட் அப். இதைச் சொல்றதுக்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது’ என்று அமைதியாக ஆத்திரப்பட ‘இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?” என்று மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். தங்கள் அணியின் யாஷிகாவை வைஷ்ணவி பிடித்துக் கொண்டதுதான் ரித்விகாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கும் போல.

மஹத்தால் தன் மீது நிகழ்த்தப்பட்ட வசைகள், உடல்சார்ந்த வன்முறை போன்றவற்றைப் பற்றி பாலாஜியின் சாட்சியத்துடன் பிக்பாஸிடம் அதிகாரபூர்வமான புகாரை தந்து கொண்டிருந்தார் டேனி. “ஹீரோயிஸம் காட்டறதுக்கு இது இடம் இல்ல’ என்று பாலாஜி குறிப்பிட்டதையும் ஆமோதித்தார். ‘கொலைமிரட்டல்’ என்று ஜாலியாக சொன்னார் டேனி. ‘இது போல் முன்னர் உடல்வன்முறையில் ஈடுபட்ட பொன்னம்பலத்தை விடவும் அதிக தண்டனை தர வேண்டும். அப்போதுதான் இது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும்” என்பது போல் டேனியின் புகார் இருந்தது. ‘டாஸ்க் முடிஞ்சதும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்க வேண்டாமா?” என்பது பாலாஜியின் ஆதங்கமாக இருந்தது. 

‘பாலாஜி அணி இனி சும்மா இருக்காது” என்று எதிரணியினர் பதட்டத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘அவங்க அலட்சியமா வெச்சிட்டு போனதால்தான் பணத்தை எடுத்தோம். பிக்பாஸ் சொன்னா வெச்சிடப்போறோம்’ என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ். (பயப்படறியா. குமாரு?!).

ஆனால் கல்லுளி மங்கனான பிக்பாஸ், இந்த திருட்டுக்கெல்லாம் ஆட்சேபம் தெரிவித்தது போல் தெரியவில்லை. பாலாஜியையும் மும்தாஜையும் அழைத்து ‘நீங்கள் உங்கள் டாஸ்க்கை சரியாக செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று சொல்லி அடுத்த ஷிப்டிற்கான கூலியைக் கொடுத்தார். ‘பணத்தை பாதுகாப்பு பெட்டியில் வையுங்கள்’ என்று சொல்வதின் மூலம் அவரவர் பணத்திற்கான பொறுப்பு அந்தந்த அணியைச் சேர்ந்தது என்பதை மறைமுகமாக குறிப்பிட்டாரோ, என்னமோ. 

‘ஏன் ஒருத்தர் கூட அந்த இடத்துல இல்லாம வந்துட்டீங்க?” என்று தன் அணியிடம் பிறகு எரிந்து விழுந்தார் பாலாஜி. ‘பிக்பாஸூம் அதைத்தான் சொல்றார்” என்று பிக்பாஸ் சொன்னதை விடவும் காரம் கூட்டி எரிச்சலானார் பாலாஜி. ‘அவங்க பணத்தை நாம தூக்கிடலாம்’ என்று ஐடியாவைத் தந்தார் யாஷிகா. 

தங்கள் பணத்தை எடுத்துச் சென்ற மும்தாஜ் அணி, அதை பெட்டியின் உள்ளே சாதாரணமாக வைக்காமல், டேப் போட்டு பெட்டியின் மேற்பாகத்தில் ஒட்டி வைத்தது. திருடர் பாத்திரத்தில் மாறினாலே.. எத்தனை டெரரான ஐடியாக்கள் வந்து விடுகின்றன?!.

தங்கள் அணியின் பணத்தை பெட்டியில் வைக்காமல் மூலப்பொருட்களையும் சேர்த்து வீட்டிற்குள் எதிரணி கொண்டு வந்தது. இது குறித்த ஆட்சேபத்தை தெரிவித்தார் மும்தாஜ். ‘டீம்ல இருக்க மத்தவங்களையெல்லாம் விட்டுட்டு என் கிட்ட ஏன் சொல்றீங்க? இங்லீஷ்ல பேசாதீங்க. இதுக்காக மத்தவங்கதான் தண்ணில குதிக்கணும்” என்று மும்தாஜிடம் எரிந்து விழுந்தார் டேனி. 

“மஹத் ஏன் இப்படிப் பண்றான். மூஞ்சில அடிச்சிட்டான்னா.. என்ன பண்றது… நடிகர்களாகிய நமக்கு முகம்தான் முக்கியம். பத்திரமா பார்த்துக்கணும்” என்று மஹத்தின் ஆக்ரோஷம் பற்றி சென்றாயனிடம் பேசிக் கொண்டிருந்தார் டேனி. ‘மஹத் கோபத்தால் அடிக்கக்கூட செய்து விடுவாரோ” என்று பல நாட்களுக்கு முன்பே சென்றாயன் பயந்து கொண்டிருந்ததை இங்கு நினைவு கூரலாம். ‘இந்த டாஸ்க்ல இன்னா கிடைக்கப் போகுது. ஏன் இப்படி அடிச்சுக்கறாங்க” என்று தத்துவம் பேசினார் சென்றாயன். 

தன் அணியில் இருக்கும் ரித்விகாவிடம் சற்று இணக்கம் வந்து விட்டதால் ‘நான் செய்யறது எப்படி தெரியுது. சரியா.. தப்பா” என்பது போல்  தன்னுடைய கேம் பிளான் பற்றி அவரிடம்  விசாரித்துக் கொண்டிருந்தார் டேனி. பிக்பாஸ் வீட்டின் மதியூகிகளாக ஜனனியும் ரித்விகாவும் இருக்கிறார்கள். 

‘ஐ வாண்ட் மோர் எமோஷன்’ என்று எரியும் நெருப்பில் ஆயிலை ஊற்றினார் பிக்பாஸ். அடுத்த ரவுண்டில் பொம்மையின் விலையை ஏற்றியது மட்டுமல்லாமல், அதிக பொம்மைகளை வைத்திருக்கும் அணிக்கு ‘டபுள் மடங்கு’ விலை போனஸாக தரப்படும் என்று போட்டியாளர்களை ஆவேசப்படுத்தினார். மறுபடியும் அந்தக் காட்டுமிராண்டித்தனமான தள்ளுமுள்ளு நடந்தது. இம்முறை டேனி பின்னால் நிற்க, மஹத்திடம் ஐஸ்வர்யா மல்லுக்கட்டினார். 

எதிரணியிடம் அதிக பஞ்சு சேர்ந்ததால், அதைக் கைப்பற்ற முடிவு செய்தார் மஹத். ‘நம்ம கிட்ட நெறய பணம் இருக்கு. வேண்டாம்” என்று மும்தாஜ் பல முறை தடுத்தும் மஹத் எதிரணியின் இடத்திற்குச் சென்றார். தன்னைத் தடுத்த சென்றாயனையும் ‘ஏண்டா பயப்படறே” என்று தள்ளி விட்டார். பிறகு எதிரணியின் ஆட்சேபங்களை மீறி பொருளை கைப்பற்றி எடுத்து வந்தார். ‘அவங்க செய்யற பொம்மைகளையெல்லாம் ரிஜக்ட் செஞ்சிடுங்கண்ணே” என்று பாலாஜியிடம் மெளனமாக கோபப்பட்டுக் கொண்டிருந்தார் டேனி.

நீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். 

  • Bigg Boss Tamil Calendar
  • Mon
  • Tue
  • Wed
  • Thu
  • Fri
  • Sat
  • Sun

‘நான் டேனி மாதிரி ஆடிப் பார்க்கறேன். அப்பதான் அவனுக்கு தெரியும். அவன் என்னவெல்லாம் பண்றான். ஒரு ஜாலிக்குத்தான் பண்றேன்” என்று தன் ஆக்ரோஷத்திற்கான காரணத்தை பிறகு சென்றாயனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மஹத். “ஜனங்க கிட்ட இருந்து அவன் காசுல்லாம் திருடியிருக்கான் தெரியுமா?” என்று அவர் முன்னர் நடந்த டாஸ்க்கை குறிப்பிட்டது பொருத்தமான காரணம் இல்லை. ஏனெனில் டேனி அப்போது இருந்தது திருடர் அணியில். எனவே அதற்கான நியாயம் இருந்தது. 

டேனியின் பாணியை அவருக்கே சுட்டிக் காட்டும் வகையில் செய்ததாக மஹத் கூறினாலும் இன்று மஹத் செய்தது பல சமயங்களில் ஓவர். பஞ்சாயத்து நாளை அவர் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். (அதாவது இது தொடர்பான தலைப்பு எழுந்தால், மற்றும் அது எடிட் செய்யப்படாமல் இருந்தால்தான் நமக்கு தெரியும்).

இப்போது செய்யப்பட்ட பொம்மைகளுக்கான தரப்பரிசோதனை நடத்தப்பட்டது. அதே மாதிரியான வாக்குவாதங்கள். மும்தாஜ் அணியிலிருந்த பொம்மைகளை நிராகரிப்பதற்கான பல காரணங்களைச் சொன்னார் பாலாஜி. என்றாலும் அவர்களிடமிருந்து ஆறு பொம்மைகள் தேறி விட்டன. இதை பாலாஜியால் நிராகரிக்க முடியவில்லை. 

சமையல் அணியில் இருந்த சென்றாயனுக்கும் சுத்தம் செய்யும் அணியில் இருந்த பாலாஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னுடைய வழக்கமான பாணியில் சென்றாயனை நோக்கி வசையொன்றை பாலாஜி எறிய அதே வசையை சென்றாயனும் திருப்பி எறிந்தார். விளையாட்டு வினையான தருணம். சென்றாயன் உண்மையாகவே அவமானப்பட்டு கோபித்துக் கொண்டார். சென்றாயனை தொடர்ந்து சிறுமைப்படுத்துவதை பாலாஜி குறைத்துக் கொள்ளலாம். ‘சமையல் வேலையைப் பாரு. டைம் ஆகுது’ என்றார் டேனி. 

“வேணும்ன்ட்டே நம்ம பொம்மையை எல்லாம் காலி பண்ணிட்டாங்க பார்த்தீங்களா?” என்று பாலாஜியிடம் டேனி ஆத்திரப்பட்டார். மஹத் செய்த ஹீரோயிஸத்தை மக்கள் காறித் துப்புவார்கள் என்று பாலாஜி சொன்னதை டேனி வழிமொழிந்தார். 

பாலாஜி அணிக்கு 2 பொம்மைகளுக்கான கூலியையும் மும்தாஜ் அணிக்கு 6 பொம்மைகளுக்கான கூலியையும் தந்தார் பிக்பாஸ். போனஸ் பணமாக இருமடங்கு மும்தாஜ் அணிக்கு தரப்பட்டது. “இந்த ரோடு என்ன விலை கேளு… இந்த வீடு என்ன விலை கேளு.. நான் ஏதாவது வாங்கியே ஆகணும்” என்று அலப்பறை செய்யுமளவிற்கு மும்தாஜ் அணியிடம் பணம் குவிந்திருக்கிறது. 

‘நம்ம கிட்ட கலகம் உருவாக்கி சண்டையை மூட்டறதுதான் இந்த விளையாட்டு. இதில் நாம் நியாயமாக நடந்துப்போம். பிக்பாஸ் இதையெல்லாம் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்வார்” என்பது போல் தங்கள் அணியிடம் பேசிக் கொண்டிருந்தார் டேனி. “எதிரணியில் யாஷிகா இருந்தும் ஏன் அது தோற்கிறது.. யாஷிகா புத்திசாலியாச்சே.. இதற்கான காரணம் தெரியலையே. டப்பா மூளையை வெச்சு நானே எங்க டீமை செய்ய வைக்கும் போது” என்று யாஷிகாவிற்கு ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார் மஹத். 

“இதெல்லாம் ஒரு கம்பெனி.. சூப்பர் வைசர் வேற.. கம்பெனி லாஸ்ல போகுது இதுக்கு ரெண்டு லேபர் வேற” என்று கவுண்டமணி பாணியில் பாலாஜி செய்து கொண்டிருந்த காமெடியைக் கண்டு அனைவரும் சிரித்துக் கொண்டிருந்ததோடு இன்றைய நாள் முடிவடைந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு